அத்தியாயம் 2
பிரபாகரன் உரைத்ததின் பெயரில், அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு தேநீர் குவளைகள் வந்து சேர்ந்தன.
“டீயைக் குடி!” என அவன் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து நீட்ட, “என்கிட்ட பத்து ரூபா தான இருக்கு?” என்றான் மகிழ்ந்தன்.
“இப்ப, உன்கிட்ட நான் காசு கேட்டேனா.?”
“அதுக்குனு சும்மா டீயைக் குடிக்க முடியுமா.?”
“இந்த டீ பத்து ரூபா தான். காசைக் கொடு!” என்று பிரபா அவனது சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொள்ள, சிரித்தபடி தேநீரை வாங்கி அருந்தினான் மகிழ்.
அறிமுகமாகி இரண்டு மணி நேரம் தான் ஆகி இருந்தது. அதற்கு உள்ளாகவே இருவருக்கு இடையிலும் நட்புறவு உருவாகி விட்டது. பிரபா, மகிழனை விட மூன்று வயது மூத்தவனாய் இருந்தான். ஆனால் அந்த வித்தியாசம் எல்லாம், அவர்களிற்குப் பெரியதாய்த் தோன்றிடவில்லை.
அதை எல்லாம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் அறிந்த பின்னர்த் தான், ஒன்றாய் தேநீர் அருந்தும் நிலைக்கு வந்திருந்தனர்.
“இங்கேயே ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க சார், செய்யிறேன். அம்மாக்கு அனுப்புற அளவுக்கு மட்டும், சம்பளம் கொடுத்தா போதும்!” என மகிழ் வினவ, “அதுசரி! வாங்குற சம்பளத்தை அம்மாக்கு அனுப்பிட்டா, உன்னோட தேவைக்கு என்ன செய்வ.?”
“என்ன பெரிய தேவை.? அதுக்குனு நைட் டைம்ல ஏதாவது சின்னதா ஒரு வேலை தேடிக்க வேண்டியது தான்.” என இயல்பாய் உரைத்தவனைப் பார்த்துப் புன்னகைத்த பிரபா, “நானே இங்க வேலைக்காரன் தான். ஏதோ கால் இல்லாதவன்னு கடையோட ஓனர், பரிதாபப்பட்டுச் சேர்த்துக்கிட்டாரு. உனக்கு, ரெக்கமண்ட் பண்ணுற அளவுக்குப் பெரிய ஆள் இல்லையேப்பா.”
“ம்ம்… அதுவும் சரிதான். நீங்களாவது பரவாயில்ல, என்கிட்ட இவ்வளவு தூரம் பொறுமையா பேசிப் பதில் சொல்லுறீங்க. மத்தவங்க எல்லாம், காதே கேட்காத மாதிரி இருந்துடுவாங்க.”
“வருத்தப்படாத, நிச்சயமா ஏதாவது வேலை கிடைக்கும்.”
“வருத்தம் எல்லாம் இல்ல சார்!”
“உண்மையா உழைக்கணும்னு நினைக்கிறவனுக்கு வேலை கிடைக்க மாட்டிது. ஆனா ஏமாத்துக்காரனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க. என்ன உலகம்னு பார்.?”
“எனக்கு உலகத்தைப் பத்தி எல்லாம் தெரியாது சார். நான், பக்கத்துல இருக்கிற மனுசங்களைப் பார்க்கிறவன். உங்களுக்குனு ஒரு வேலை, சம்பளம்னு காலே இல்லேனாலும் சொந்தக் காலுல நிக்கிறீங்க இல்ல? இதுக்கு மேலயா சந்தோஷம் வேணும்? இது, பெருமை தான சார்.? அதேமாதிரி எனக்கும் வேலை கிடைச்சிடும், நிறைய நம்பிக்கை இருக்கு.”
“அதுசரி!” எனப் பிரபா சிரிக்க, “நான், ஓரளவுக்கு நல்லா வண்டி ஓட்டுவேன் சார். ஆனா, என்ன லைசன்ஸ் வாங்குறதுக்கான வாய்ப்பு தான் அமையல.” என்றான் மகிழ்ந்தன்.
“சரி! எனக்குத் தெரிஞ்ச டிரைவருங்கக்கிட்ட சொல்லி வைக்கிறேன். நீயும், சீக்கிரமா லைசன்ஸ் வாங்குற வழியைப் பாரு!”
“அட! நீங்க வேற சார். காசு கேட்கிறாங்க. அதுக்கு, நான் எங்க போறதுனு தான் வந்துட்டேன்!” என்றிட, அனிச்சையாய் இருவருக்குமே சிரிப்பு வந்தது.
மகிழ்ந்தன் செய்யும் அளவிற்கு, அவ்விடத்தில் வேலை என்று எதுவும் இல்லை. அவ்வீதியைச் சுத்தம் செய்வது முதல், ஒவ்வொரு கடைக்கும் தண்ணீர் கொண்டு போய் வைப்பது வரை அனைத்திற்கும் ஆட்கள் உள்ளனர். கடைக்காரர்கள் ஒன்றிணைந்து, அதுபோன்ற வேலைகளிற்கு இரண்டு ஆட்களை அமர்த்தி இருந்தனர்.
அத்தோடு, மகிழ் எவரிற்கும் அறிமுகமற்ற புதிய நபர். ஆகையால், இவனின் மீது நம்பிக்கை உண்டாவதும் ஏற்றுக் கொள்வதும் அவ்வளவு எளிது இல்லை.
இந்நாட்டில் வாங்கும் ஊதியத்திற்கு உழைப்பை மட்டும் அல்லாது விசுவாசத்தையும் தர வேண்டும் முதலாளிகளுக்கு. ஆகையால் இங்கு, செய்யப்படும் வேலையின் ஒழுங்கு முறை மற்றும் திருப்தியைக் காட்டிலும் நம்பிக்கை தான் முதன்மை இடம் பெறுகிறது. அதனைப் பெறுவது என்பது அத்தனை எளிதல்ல என்பதே, நிதர்சனம்.
தான் வேலை செய்யும் கடையின் உரிமையாளரிடம், மகிழ்ந்தனை உடன் வைத்துக் கொள்வதற்கு மட்டும் அனுமதி பெற்றான் பிரபாகரன். வெளியில் தங்குவதற்குச் செலவு செய்யும் நிலையில் அவன் இல்லை. அதனால், புதியதாய் அறிமுகமான நண்பனுடனே இருந்து கொண்டான்.
பிரபாவிற்கு வேண்டிய உதவிகளைச் செய்ததில், உணவிற்கும் இருப்பிடத்திற்கும் பிரச்சனை இன்றி நாள்கள் ஓடியது. அதோடு சேர்த்து ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் கவனித்தான்.
சென்னையில் அவன் அறியாத இடமே இல்லை என்னும் அளவிற்கு, கடந்த எட்டு ஆண்டுகளில் சுற்றித் திரிந்திருந்தான். ஆகையால் முக்கிய இடங்கள், சாலைகள், அங்குக் கடைபிடிக்கப்படும் காவல்துறை நடவடிக்கைகள் என அனைத்தும் அத்துபடி.
ஆனால் உள்பகுதிகளைப் பற்றி, அதிகம் அறிந்திடாதவன். உதாரணமாய், முகவரியை வைத்து அப்பகுதிக்குச் சென்று விடுவான். எனினும், சரியான தெரு, வீட்டு எண் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் அதன் தளங்களைக் கண்டறிந்து லிஃப்ட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதில் அவனிற்குச் சிரமம் இருந்தது.
மெல்ல மெல்ல மனிதர்களுடனான பழக்க வழக்கங்களை அதிகரித்து, தனக்கான எல்லையையும் விரிவுபடுத்தும் முயற்சியில் இருந்தான் மகிழ்ந்தன். இதற்கிடையில் பிரபாவிற்கும் அவனிற்குமான உறவு மேலும் நெருக்கம் அடைந்து இருந்தது.
தனது ஊர், குடும்பச் சூழல், அன்னையின் நிலை, சிறுவயது பக்கத்து வீட்டுக் காதலி எனத் தன்னைப் பற்றி அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்.
பிரபா, தன்னைப் பற்றிப் பெரியதாய் எதையும் உரைக்க வில்லை. இவனும், அவனிடம் கொண்டிருந்த அன்பு மற்றும் நட்புறவின் காரணமாகக் கேட்காது இருந்து கொண்டான். எனினும், அவனிற்கும் தாய்த் தந்தையர், காதலி எனக் குடும்பமும் உறவுகளும் இருப்பதை மட்டும் அறிந்து இருந்தான்.
|||||
உயர்தர விழாக்கால விடுதி ஒன்று, வெளிப்பக்கம் வண்ண விளக்குகளின் ஒளியில் தேவலோகம் போல் காட்சி அளித்தது. விலை உயர்ந்த வாகனங்கள் ஒருபுறம், ஊசியில் கோர்த்துத் தொடுக்கப்பட்ட பூச்சரம் போல் வரிசையாய் நின்று இருந்தன.
நான்கு காவலாளிகள், வரும் விருந்தினர்களின் வாகனங்களைச் சரியான இடம் பார்த்து நிறுத்துவதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.
வெளிப்பக்கம் இசைக் கலைஞர்கள் தத்தமது கருவிகளை இசைத்து மேற்கத்திய இசையைச் சிதறவிட்டு, விருந்தினர்களின் செவியை ஈர்த்தனர். அரங்கின் வெளிப்புற அலங்காரம் கண்களைக் கவர்ந்து, உள்ளே அழைத்துச் சென்றது.
எங்குக் காணினும், சீருடை அணிந்த பணியாளர்கள். ஒருவர் உள்ளே நுழையும் பொழுதே, எதிர்கொண்டு வந்து விசாரித்து அழைத்துச் சென்று வசதியான இடத்தில் அமரவைத்தனர்.
விடிந்தால் திருமணம். நிச்சயதார்த்தம் இரண்டு ஆண்டுகளிற்கு முன்னரே முடிந்துவிட்டது. தற்போது வரவேற்பு விழா நடந்து கொண்டிருந்தது.
மணமகள் லவனிகா, அப்பகுதியின் பிரபலமான ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் அறையில் தயாராகிக் கொண்டிருக்க, துணையாய் பணிப்பெண் ஒருவள் அருகே நின்று இருந்தாள்.
“பானு.. லைன் கிடைச்சுதா.?” என வினவ, “இல்ல மேடம், நாட் ரீச்சபிள்னு வருது!” என்றாள் அவள்.
“எங்கதான் போவானோ இவன்? எப்ப கால் பண்ணாலும், ஒன்னு நாட் ரீச்சபிள். இல்லேனா பிஸி! எங்கேஜ்மெண்ட் ஆகி டூ இயர்ஸ் ஆகுது. இன்னும் நாங்க ஒன் ஹவர் கூட, சேர்ந்து டைம் ஸ்பென் பண்ணது இல்லனு சொன்னா, யாராவது நம்புவாங்களா? இவனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, நான் மொபைல்ல தான் குடும்பம் நடத்தணும் போல!” என லவனிகா அலுத்துக் கொள்ள, சிரித்தாள் பானு.
“என்ன சிரிப்பு.?”
“ஸாரி மேடம்.”
“உன்னோட ஸாரியை வச்சு, நான் என்ன செய்யிறது? நீயே வச்சுக்கோ!”
“கவலைப் படாதீங்க மேடம். அதான், கொஞ்ச நேரத்துல ரிசப்ஷன்ல சாரைப் பார்க்கப் போறீங்களே? அதுவரைக்கும் வெயிட் பண்ண முடியாதா.?”
“வெயிட் பண்ண முடியலனு, நான் எப்ப சொன்னேன்? நாளைக்கு நடக்கப் போற மேரேஜை நினைச்சா தான், கொஞ்சம் நர்வஸ்ஸா இருக்கு.”
பானு சிரிக்க, “இப்படிதான் இருக்குமா, மேரேஜுக்கு முன்னாடி!”
“என்ன மேடம், என்னைக் கேட்கிறீங்க.?”
“உனக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே?அதான் கேட்கிறேன்.”
சின்னதாய்ச் சிரித்தவள், “என்னோட கல்யாணம் நடந்தப்ப, பயம் மட்டும் தான் இருந்துச்சு!”
“ஏன்.?”
“லவ் மேரேஜ் மேடம். ரெண்டு பேரோட அம்மா அப்பாவுமே ஒத்துக்கல. ஓடிவந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அப்புறமும் கூட, பிரச்சனை தான். எங்க எங்களைப் பிரிச்சிடுவாங்களோனு பயந்து பயந்துதான் வாழ்ந்தோம்.” எனும் பொழுதே, பானுவின் கையில் இருந்த கைப்பேசி ஒருமுறை அதிர்ந்து அடங்கியது.
திரையில் வந்த பெயரைக் கண்டவள், “மேடம், சார் மெசேஜ் பண்ணி இருக்காரு!” என்று கொடுக்க, அவசரமாய் வாங்கிப் பார்த்தாள்.
“ஐம் வெயிட்டிங் ஃபார் யூ பேபி!” எனக் குறுஞ்செய்தி வந்திருந்தது, அவளின் வருங்காலக் கணவனிடம் இருந்து.
“மெசேஜ் பண்ணதுக்கு, கால் பண்ணி பேசி இருக்கலாம்ல? பேபியா? இப்படி எல்லாம் ஃப்லிங்க்ஸை கன்வே பண்ண தெரியுமா, இவனுக்கு?” எனத் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள, “மேடம் ஓவர். மிரர்ல பாருங்க!” என்றாள் அழகுக் கலை செய்யும் பெண்.
தனது பிம்பத்தை எதிர்புறம் இருந்த ஆள் உயரக் கண்ணாடியில் பார்த்தவள், “பர்ஃபெக்ட். தேங்க்யூ!” என்றுவிட்டுக் கிளம்ப, பானுவும் அப்பெண்ணும் உடன் நடந்தனர்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் சென்றடைய, விழா அரங்கம் அவளை வரவேற்க தயாராய் இருந்தது.
லவனிகாவின் அன்னையும் தந்தையும் அவளை உள்ளே அழைத்துச் செல்ல, மணமேடையில் நின்று இருந்தான் மணமகன்.
‘காத்திருக்கிறேன்!’ எனச் செய்தி அனுப்பியவனின் முகத்தில் அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அவனது தந்தையோடு, ஏதோ தீவிர விவாதத்தில் ஈடுபட்டு இருந்தான்.
அதற்குள் தொழில் முறையில் மிக முக்கியப் பிரமுகர் ஒருவர் வர, அவரை வரவேற்பதற்காகச் சென்றனர், லவனியின் பெற்றோர்.
வருங்காலத் துணைவனைப் பார்த்தபடி அடி எடுத்து நடந்தவளின் கவனத்தைக் கலைத்தது, எதிரே வந்து நின்றவனின் செயல்.
வலக்கரத்தை அவளின் முன் நீட்டி, “வெல்கம் பேபி!” என அழைத்தவனின் முகத்தில், மணமகனின் சாயல்.
அவனிற்கு ஒரு தம்பி இருப்பதை முன்னரே அறிவாள் தான். தற்போது அறிமுகம் தேவைப் படவில்லை.
“ஆர் யூ..?” எனக் கேள்வியாய் நிறுத்திட, “எஸ் பேபி!” என்று அவளின் சந்தேகத்தை உறுதி படுத்தினான்.
“அப்ப.. எனக்கு மெசேஜ் பண்ணது.?”
“அதுவும் நான்தான்!”
“இது என்ன விளையாட்டு?”
“நேத்து தான், யூஎஸ்ல இருந்து வந்தேன். உன்னைப் பார்க்கணும்னு அண்ணாக்கிட்ட கேட்டேன். இன்னைக்கு ஃபங்ஷன்லயே பார்த்துக்கோனு சொல்லிட்டான். எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது? அதான்..”
அவனது செயலிலும் அதை உரைத்த முறையிலும் புன்னகை அரும்பியது லவனிக்கு. எனினும் வருங்காலக் கணவனை எண்ணி, மனதில் ஏமாற்றம் பரவுவதை அவளால் தடுக்க இயலவில்லை.
அனிச்சையாய் மணப்பெண்ணின் கண்கள் அவளது நாயகனிடம் செல்ல, “அவன் இப்போதைக்கு, இந்தப்பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டான்!” என்றான் இளையவன்.
லவனிகா புரியாமல் பார்த்து, “ஏன், அப்படிச் சொல்லுறீங்க.?”
“அக்ரிமெண்டைப் பத்திப் பேச்சு போகுது.”
“என்ன அக்ரிமெண்ட்.?”
“என்ன பேபி, இப்படிக் கேட்கிற? உங்க மேரேஜ் அக்ரிமெண்ட்.”
அவள் திகைத்து, “வாட்.?”
“எஸ்! மேரேஜ் அக்ரிமெண்டுனு சொல்லுறதைக் காட்டிலும் பிசினஸ் அக்ரிமெண்டுனு சொன்னா, சரியா இருக்கும்.”
“பிஸினஸ் அக்ரிமெண்டா?”
“உன்னோட அப்பாவும் என்னோட அப்பாவும் சேர்ந்து, புதுப் பிஸினஸ் ஒன்னு ஆரம்பிக்கப் போறாங்க. அதுக்கான ஸுயூருட்டி தான் இந்த மேரேஜ்!”
அவனை அதிர்ச்சியாய்ப் பார்த்த லவனி, “வாட் யூ மீன்.?”
“ஷேர்ஸ் சம்பந்தமா பின்னாடி பிரச்சனை வந்துடக் கூடாதுல. சோ.? என்னோட அண்ணா தான், இந்த ஐடியா கொடுத்தான். ஏன், உனக்குத் தெரியாதா?”
ஈன்ற தந்தையே, தன்னைத் தொழிலிற்கான அடமானமாய்ப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை அறிந்து மனம் தவித்தது அவளிற்கு.
கண்களில் தானாய் நீர் பெருக்கெடுக்க, எதிரே இருந்தவனைப் பார்த்து முயன்று புன்னகைத்தாள்.
“பேபி, உனக்கு எதுவும் தெரியாதா? நான், தெரியும்னு நினைச்சேனே? ஸாரி. ஸாரி பேபி! டோண்ட் கிரை, ப்ளீஸ்…” என மணமகனின் தம்பி பதற்றத்துடன் உரைக்க,
“நான், ஒண்ணும் பிராப்பர்ட்டி இல்ல. பேப்பர்ல சைன் பண்ணி ஸுயூரிட்டியா பயன்படுத்துறதுக்கு. சொல்லிடுங்க உங்க அண்ணன்கிட்ட, இந்தக் கல்யாணம் நடக்காதுனு!” என்றவளின் கால்கள் பின்னோக்கி நகர்ந்தன.
நான்கைந்து அடிகளுக்குப் பின் சட்டென்று வாயிலின் புறம் திரும்பியவள், வேகமாய் வெளியேறிச் சென்றாள்.
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍
💛💛💛💛
Enna da nadakkuthu Inga 🙄🙄🙄🙄🙄🙄🙄
crt thana ponnu ena adamana porul ah avala business ku sign panna
அடப்பாவிங்களா, இப்படி நடக்கும் தான் அதுக்குன்னு அந்த பொன்னுகிட்ட ஒரு வார்த்தை சொல்லாம, கேக்காம இப்படியா பன்னுவாங்க!!??.. எங்க போக போறாளோ!!???..
Interesting🤔