Skip to content
Home » மகிழ்ந்திரு-4

மகிழ்ந்திரு-4

அத்தியாயம் 4

மதுபான விடுதியின் பொறுப்பாளரும் மேலாளரும், காவல் துறை துணை ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

“அதான், உங்களுக்கான கமிஷனை மாச மாசம் கரெக்டா கொடுத்திடுறோமே? அப்புறம் என்ன சார், விசாரணைனு வந்து நிக்கிறீங்க?”

“நீங்க கொடுக்கிற கமிஷன், இங்க நடக்குற இல்லீகலான விசயங்களைக் கண்டுக்காம இருக்கிறதுக்கு மட்டும் தான். அதுக்காக, வந்த கம்பிளைண்டை நாங்க அலட்சியப்படுத்த முடியாது. அந்த வீடியோ வெளிய போச்சுனா, என்ன ஆகும்னு தெரியாதா உங்களுக்கு?”

இருவரும் திடுக்கிட்டு, “எந்த வீடியோ?”

தனது கைப்பேசியை எடுத்து, பிரபாகரன் தனக்கு அனுப்பிப் புகார் அளித்த காணொளிகளை இயக்கினார் காவல் அதிகாரி.

அதில் மகிழ்ந்தனின் முகத்தைத் தவிர்த்து, அங்கு நடந்த அனைத்தும் குரலோடு பதிவாகி இருந்தது. காணொளி தெளிவாக இல்லை எனினும், பேசுவது ஓரளவிற்கு நன்றாகவே கேட்டது. அதனால் அந்தச் சூழலை, அனைவராலுமே அனுமானிக்க இயலும்.

இவன் நண்பனிற்கு வீடியோ கால் செய்திருக்க, அவன் அதை அப்படியே சிறிது சிறிதாய் திரைப் பதிவு செய்து, பல வீடியோக்களாய் காவல் துறைக்கு அனுப்பி விட்டான்.

அப்பகுதியில் ரோந்து பணியில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் இருந்து கட்டளை வந்து சேர, மதுபான விடுதியைச் சோதனை செய்ய வேண்டிய நிலை உருவானது.

விடுதியின் பொறுப்பாளர், “இப்ப, என்ன சார் செய்யிறது?”

“நான், அந்தப் பையன்கிட்ட பேசி அனுப்பிடுறேன். நீங்க யாரும் இதுல தலையிடாம இருந்தா போதும்!”

“அப்ப,‌ இந்த வீடியோ.?”

“அது, ஃப்ராங்க் பண்ணுறதுக்காக யூடியூபர்ஸ் எடுத்த வீடியோனு சொல்லிக்கலாம்.”

“ஓகே சார்!‌” என்றிட, காவலர் நேராய் மகிழ்ந்தனிடம் பேசுவதற்காக வந்தார்.

“சரிப்பா, நீ கிளம்பு! இனி, நாங்க பார்த்துக்கிறோம்!” என உரைக்க, “என்ன சார், இப்படிச் சாதாரணமா சொல்லுறீங்க? எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு? இவங்களை எல்லாம் அரெஸ்ட் பண்ணாம, என்னைப் போகச் சொல்லுறீங்க.?”

“இது, உனக்குத்தான் பெரிய விசயம். தினம் பல கிரிமினல்ஸைப் பார்க்கிற எனக்கு, பழகிப் போன ஒன்னு. பப்ளிக் மாதிரி போலீஸ்காரனும் எமோசன் ஆனா, எப்படி ஒவ்வொரு கேஸையும் டீல் பண்ண முடியும்?

உன்னோட நல்லதுக்குத்தான் சொல்லுறேன். பெரிய பெரிய ஆளுங்க வந்து போற இடம். இதெல்லாம், என்னை மாதிரி ஆளுங்களுக்குத் தெரியாதுனு நினைக்கிறியா?‌ எல்லாருக்கும் எல்லாமும் தெரியும். இருந்தாலும் தெரியாத மாதிரியே இருப்பாங்க. பணம், அதிகாரம், ஆளுங்க எல்லாம் அவங்க பக்கம்.

பெரிய இடத்தோட மோதுனா, பாதிப்பு நமக்குத்தான். உனக்குனு குடும்பம், சொந்த பந்தம் எல்லாம் இருப்பாங்க இல்ல. அவங்க, நாளைக்கு நிம்மதியா இருக்க ‌வேண்டாமா.?” என மறைமுகமாய் அவனது‌ உணர்வுகளோடு இணைந்த உறவுகளைத் தாக்க, தவித்துப் போனான் மகிழ்.

தனக்கு உதவி செய்த பிரபா, அவனது முதலாளி, உயிராய் நேசிக்கும் அன்னை, ஊரில் உள்ள சுற்றத்தார் என எவரையும் இதில் சிக்க வைக்க அவன் விரும்பவில்லை. நடுத்தர மற்றும் அதற்கும் கீழான பொருளாதாரத்தில் இருக்கும் மக்களின் நிலை இதுதான் ‌என உணர்ந்து கொண்டதால், அரைமனதுடன் தலை அசைத்தான்.

“சரி சார், நான் போயிடுறேன். இந்தப் பொண்ணு?” என நடந்த நிகழ்வினால் மயக்கம் அடைந்திருந்த பெண்ணைக் காட்ட, “நான், வீட்டுல விட்டுடுறேன்.” என்றார் காவலர்.

“இல்ல சார், திரும்பவும் எப்படி இங்கேயே விட்டுட்டுப் போறது? அந்தக் குடிகாரனுங்களும் இங்கதான் இருக்காங்க. நீங்களும் கூட, நேர்மையான ஆளா‌ நடந்துக்கல.‌ உலகத்துல, எந்தெந்த பொண்ணுக்கோ எது எதுவோ நடக்குது. அதை எல்லாம் என்னால ‌ஒன்னும் செய்ய முடியாது. இங்க நடந்ததைக் கண்ணால பார்த்துட்டேன். இந்தப் பொண்ணை மட்டுமாது பாதுகாப்பா, அவங்க குடும்பத்துக்கிட்ட கொடுத்திடலாமே? ப்ளீஸ் சார்..” என்றவனைக் கண்டு வியப்பு மேலிட்டது, அந்தக் காவலருக்கு.

எந்த மனிதனுக்கு உள்ளும் சிறிதளவு நல்லவன், நிச்சயமாய் இருக்கத்தான் செய்கிறான். அப்படிக் காவல் அதிகாரிக்குள் இருந்த நற்சிந்தனை கொண்டவன், மகிழ்ந்தனின் வெகுளித் தனத்தை வெகுவாய் ரசித்தான்.

“சரி!” என அவனது விருப்பத்திற்குச் சம்மதம் அளித்திட, கீழே கிடந்த அப்பெண்ணின் கைப்பையில் இருந்து கைப்பேசியை எடுத்தான். அதிலிருந்து, அவனே அவளது குடும்பத்தாருக்கு அழைத்து விபரத்தை உரைத்திட, வழிமாறிப் போன தங்களின் மகளை வயிற்றெரிச்சலுடன் திட்டியபடியே அழைத்துச் சென்றனர், அவர்கள்.

நடந்த அனைத்தையும் வெளிவாயில் காவலாளிக்கு என்று ஒதுக்கப்பட்ட சிறிய அறையில் அமர்ந்து, பார்த்துக் கொண்டிருந்தாள் லவனிகா.

இரண்டு மணி நேரங்களிற்கு முன்னர்..

உட்சென்ற மதுவின் போதை அவளைச் சுயமிழக்க வைத்திட, விடுதிக்கு உள்ளேயே மயங்கி சரிந்தாள் லவனிகா. விடுதியின் மேலாளர் தான், முகத்தில் நீரைத் தெளித்து அவளை எழுப்பி விட்டார்.

அதற்கு மேலும் அங்கிருந்து, இன்னும் மதுவை விழுங்கி தனது நிலையை மோசமாக்கிக் கொள்ள விரும்பாது, மேலாளரின் உதவியுடன் வெளியே வந்தாள்.

அவ்வப்போது வந்து செல்பவள் என்பதால், பெரியதாய் அறிமுகத்திற்கு அவசியம் இருக்கவில்லை. எனினும், இதுநாள் வரை மயங்கி விழும் அளவிற்கு லவனிகா மது அருந்தியது இல்லை என்பதால், தானாக வந்து உதவினார் அவர்.

“சார், டேக்ஸி மட்டும் ஒன்னு அரேஞ்ச் பண்ணித் தர முடியுமா?‌ நான் சொல்லுற இடத்துல சேஃப்டியா டிராப் பண்ணணும்!” எனச் ‘சேஃப்டி’ என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் தந்து கேட்டிட, வெளியாட்களின் மீது நம்பிக்கைக் கொள்ளாது, தனது வண்டியிலேயே அனுப்பி வைக்க முடிவெடுத்தார்.

அதன் பின்னர்த் தான், பிரபா பணிபுரியும் கடையின் உரிமையாளருக்கு அழைத்து, வேலை செய்யக் கொடுத்திருந்த தனது காரை உடனடியாய்க் கேட்டார்‌.

சிறிது எலுமிச்சை சாறு அருந்தி தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்த லவனி, வெளியே வந்து வாகனத்திற்காகக் காத்திருக்கத் துவங்கினாள். மேலாளர் உரைத்ததின் பெயரில், வெளிப்பகுதியின் காவலாளி தனக்காகத் தரப்பட்டிருந்த இடத்தில் மறைவாக அவளை அமர வைத்தான்.

அங்கிருந்து தான், மகிழ்ந்தன் விடுதிக்கு வந்த நொடியில் இருந்து நடந்த நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அப்பெண்ணிற்கு உதவிடவும் நினைத்தாள். ஆனால் உள்ளே சென்றிருந்த மது, அவளை அதற்கு அனுமதிக்கவில்லை. அத்தோடு கையில் கைப்பேசி இல்லாததால், துணிந்து எதைச் செய்யும் நிலையிலும் அவள் இல்லை.

ஒருவழியாய் பிரச்சனை ஓய்ந்து, அனைவரும் அவ்விடத்தில் இருந்து கிளம்ப, லவனியிடம் வந்தான் மேலாளர்.

“மேம், என்னோட கார் வந்திடுச்சு.‌ அதுலயே உங்களை டிராப் பண்ணச் சொல்லவா.?” என வினவ, “இல்ல, வேணாம். நானே டிரைவ் பண்ணிக்கிறேன்!” என்றாள்.

“பட் மேம், யூ ஹேவ் பீன் டிரங்கிங்!”

“ஐ க்நோ. ஐ வில் மேனேஜ்.”

அவன் தயக்கத்துடன் பார்க்க, மெலிதாய்ப் புன்னகைத்தவள், “உங்க நம்பர் கொடுங்க‌. நான், ரீச் ஆகிட்டு கால் பண்ணுறேன்.‌ யூ டோண்ட் ஒர்ரி. உங்க காரை பத்திரமா உங்கக்கிட்டயே கொடுத்திடுவேன். அன்ஃபார்சூனட்லி ஏதாவது ஆச்சுனா, புதுக் காரே வாங்கித் தந்திடுறேன். ஓகே.?” என்றவள், வாகனத்தின் சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

ஆள் அரவமற்று இருந்தது சாலை. அதில் ஒருவன் மட்டும், நிதானமாய்க் கால்களை எட்டு வைத்து நடந்து கொண்டிருந்தான்.

வாகனத்தை மெதுவாய் இயக்கி வந்த லவனிக்கு, அது யார் என ஊகிக்க அரை நிமிடமே போதுமானதாய் இருந்தது. சற்றே வேகத்தைக் கூட்டி அவனருகே கொண்டு நிறுத்தியவள், பக்கக் கண்ணாடியைக் கீழ் இறக்க, திகைத்துப் பார்த்தான் மகிழ்ந்தன்.

“ஹலோ மிஸ்டர்..” என அவள் அழைக்க, திருதிருவென விழித்தவன், “என்னையா?”

“எஸ் மேன், உன்னைத்தான்! இங்கதான், வேற யாரும் இல்லையே?”

“எதுக்குக் கூப்பிட்டீங்க மேடம்.?”

“என்ன ஒர்க் பண்ணுற நீ?”

“ஒரு வேலை பார்த்தா, சொல்லலாம். நான், கிடைக்கிற வேலை எல்லாம் செய்வேன் மேடம்.”

“கார் டிரைவ் பண்ண தெரியும்ல.?”

“ம்ம்..”

“சரி வா, இந்தக் காரை ஓட்டு!”

“ஹான்.. என்ன.?” எனப் புரியாமல் பார்த்தவன், “இது, பாரோட மேனேஜர் கார் ஆச்சே?‌ அப்ப, நீங்க அவரோட‌?”

“ஓவர் கொஸ்டின் உடம்புக்கு ஆகாது!”

“ஹோ.? சரி, கேட்கல. பார்ல இருந்து தான் வர்றீங்களா.?”

“கேட்கலனு சொல்லிட்டுத் திரும்பவும் கேட்கிற.?”

“அது..”‌ என்று இடக்கையின் நடுவிரலால் பின்னந்தலையில் சொரிந்து கொண்டவன், “ஸாரி, சில நேரம் நான் இப்படித்தான்.”

அவளிற்குச் சிரிப்பு வர, “வந்து, காரை ஸ்டார்ட் பண்ணுறியா.?”

“யார், என்னனு தெரியாம எப்படிங்க உங்களுக்கு வண்டி ஓட்டுறது? நீங்க பாட்டுக்கு, என்னை ஏதாவது பிரச்சனையில மாட்டி விட்டுட்டீங்கனா.?”

“என்னைப் பார்த்தா, பிரச்சனையில மாட்டி விடுற ஆள் மாதிரி தெரியிதா உனக்கு.?”

“டீசண்டா இருக்கிறவனைத் தான் முதல்ல நம்பக்கூடாது. கிடைக்கிற கேப்ல திருடுறவனுங்களை விட, கார்ப்பரேட் திருடர்கள் அதிகம் இந்த நாட்டுல.”

அவனை வியப்புடன் நோக்கியவள், “என்ன தெரியணும், உனக்கு.?

“இப்பதான் ஒரு வம்புல மாட்டி, வெளிய வந்திருக்கேன். நான், ஒரு சாதாரண ஆளு. ரிஸ்க் எடுக்கத் தயாரா இல்லங்க. அதுனால, நான் பாட்டுக்கு இப்படியே நடந்து போறேன். நீங்க, அப்படியே காரை ஓட்டிட்டுப் போங்க.”

“யாரு, நீ சாதாரண ஆளா.? எவ்வளவு பெரிய விசயம் செஞ்சிருக்க.”

“அட, போங்க மேடம்.”

“நான் அங்கதான் இருந்தேன். நடந்த எல்லாத்தையும் பார்த்தேன்‌. அதுக்கு அப்புறம் தான், உன்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கேன்.”

“நல்ல மனசு மேடம், உங்களுக்கு. நடந்ததை வேடிக்கைப் பார்த்துட்டு இருந்திருக்கீங்களே? அந்தப் பொண்ணுக்கு உதவி செய்யணும்னு தோணலேல?”

மெலிதாய்ச் சிரித்தவள், “நானும் டிரிங்க் பண்ணி இருக்கேன். எனக்கே, அந்த மேனேஜர் தான் ஹெல்ப் பண்ணாரு. அவர்கிட்டயே ஒரு டிரைவரை அரேஞ்ச் பண்ண சொல்லலாம்னு நினைச்சேன். பட், உன்னைப் பார்த்த பின்னாடி அதுக்கு அவசியம் இல்லனு வந்துட்டேன்.”

குழப்பத்துடன் பார்த்தவன், “ஏன்?”

“எனக்குச் சேஃப்டி முக்கியம். சோ.?”

“சேஃப்டி பத்திப் பேசுறவங்க, இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வரலாமா மேடம்.?”

அவள் எவ்வித பிரதிபலிப்பையும் முகத்தில் காட்டாது அவனையே பார்த்திருக்க, கார் கதவைத் திறந்தான் மகிழ்ந்தன்.

லவனி, ‘என்ன?’ என்பது போல் நோக்கிட, “டிரைவ் பண்ணுறவங்க, டிரைவர் சீட்ல தான்‌ உட்காரணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. உங்களுக்கு எப்படி?”

அனிச்சையாய் அவளின் இதழ்களில் புன்னகை மலர,‌ அருகில் இருந்த இருக்கையில் நகர்ந்து அமர்ந்தாள்.

உள்ளே ஓட்டுநரின் இடத்தில் அமர்ந்து வாகனத்தை இயக்கிய மகிழ், “எங்க போகணும் மேடம்?”

“அப்படியே போ, சொல்லுறேன்!” என்றவள், சற்றே பின் பக்கமாய்ச் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

அந்த நெடுஞ்சாலையின் முடிவுவரை ஓட்டிச் சென்ற‌வன், “மேடம்..?” என்றபடி லவனியின் புறம் திரும்ப, உறங்கிப் போனதன் அடையாளமாய்ச் சீரான இடைவெளியில் மூச்சு வெளிவந்தது அவளிடம் இருந்து.

6 thoughts on “மகிழ்ந்திரு-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *