அத்தியாயம் 8
நகரின் மிகபிரபலமான அந்த உயர்ரக நட்சத்திர விடுதியில் இருந்து வெளியே வந்தாள் லவனிகா. நினைவு, நிகழ்வில் இல்லை. வீட்டிற்குச் சென்று தந்தையை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்ற சிந்தனை.
நாம் தவறேதும் செய்யாத போதும், சூழல் சில நேரங்களில் நம்மை குற்றவாளி ஆக்கி அதற்கான தண்டனையை அனுபவிக்க வைத்துவிடும்.
தற்போது லவனி, அந்நிலையில் தான் இருந்தாள். தொழில் முறை ஒப்பந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர், அவளின் தந்தை. அதில் பிடித்தம் இல்லாமல் வெளியேறிய பெண்ணிற்கு, ஓடிச் சென்று விட்டாள் என்ற பட்டம். இன்னும் சுற்றமும் சூழலும் என்னென்ன பெயரை வழங்குமோ?
பொதுவாய் அவள் இதற்கெல்லாம் அஞ்சுபவள் இல்லை தான். எனினும் அதன் தாக்கத்தாலும் அதனால் உண்டாகும் விளைவுகளாலும் மனம் வலிக்கத்தானே செய்யும்.
பிரபாவின் கைப்பேசியில் இருந்து தனது நிறுவனத்தின் மேலாளரிடம் பேசியபடியே வெளியேறி நடந்தவளின் மீது எவனோ ஒருவன் வந்து மோதினான்.
அவனின் கரம், பாவையின் மார்பில் பட்டு மெல்ல கிழிறங்கி வயிற்றை வருடி அப்படியே பின்புற முதுகில் ஊர்ந்து இடதுபக்க இடையில் அழுத்தமாய் பதிந்தது.
இரு நொடி நிகழ்வு தான், ஆனால் அதை உயிர் பிரியும் வலியாய் உணர்ந்தாள்.
தேகம் முழுவதும் நடுங்கிட, விதிர்விதிர்த்துப் போனாள் லவனிகா. வெளிநாட்டில் பயின்று அந்நகரின் கலாச்சாரத்தை ஏற்று, மது அருந்துவதைக் கூட இயல்பான செயலாய் பழகி கொண்டவள் தான் என்ற பொழுதும், பிறந்த மண்ணின் பண்பாடும் தன்னை விட்டு விலகி விடாமல் உணர்வோடு பிணைத்து வைத்திருந்தாள் தற்போது வரையிலும்.
இதுவரை எந்த ஆடவனையும் நெருங்க விட்டது இல்லை. மதுபான விடுதிகளில் நடனமாடும் பொழுது கூட, தொடாமல் தொடரும் அணுகுமுறையே கடைபிடித்து வந்திருந்தாள்.
ஆனால் இன்று முகம் அறியாத எவனோ ஒருவன் பெண்மையின் அங்கங்களைத் தொட்டுணர்ந்து செல்ல, பாவைக்குள் இருந்த குரோதம் சட்டென்று விழித்துக் கொண்டது.
அவனின் முகத்தைக்கூட பார்க்காதவள் பளாரென கன்னத்தில் அறைந்துவிட்டு நகர, நடந்த நிகழ்வுகளைப் பார்த்திருந்த மகிழ்ந்தன் அதிவேகத்தில் அவளை நோக்கி ஓடி வந்தான்.
ஐந்தாம் நொடி லவனியின் எதிரே நின்றவன், “மேடம்.?”
அவனை வலியுடன் ஏறிட்டவள், “ஒன்னும் இல்ல!” என்றபடி வலிந்து புன்னகைத்தாள்.
“தப்பு மேடம்!”
“என்ன தப்பு.?” என வினவியவளின் குரல் கரகரத்தது. எச்சில் விழுங்கிய தொண்டையின் அசைவு, அழுகைக்கு தடுப்பு வேலி அமைத்தது. கலங்கி இருந்த கருவிழிகள், கண்ணீருக்கு அணைக்கட்டி இமை பெட்டகத்திற்குள் அங்கும் இங்குமாய் தள்ளாடி உருண்டது.
முதன்முதலான ஒரு அன்னியனின் தீண்டல் வேதனையைப் பரிசளித்து, வடுவாய் அவளுள் பதிந்தது.
லவனியின் முகத்தைப் பார்த்தே, மனதை புரிந்து கொண்டான் மகிழ்ந்தன். எனினும் நடந்த நிகழ்வை எட்ட நின்று பார்த்தவனால், பாவையின் உடல் உணர்ந்த வலியின் முழுமையை அறிய முடியாமல் போனது.
“என்ன தப்பு மகிழ்.? நானா.?”
‘ஆம்’ என்பதாய்த் தலை அசைத்தவன், “அவர் எந்த தப்பும் செய்யல மேடம். நீங்கதான் கவனிக்காம அவர்மேல மோதிட்டீங்க. உங்களைக் கீழவிழாம தாங்கிப் பிடிச்சாரு!”
மற்றவன் தவறு இழைத்தான் என்று எண்ணிய பொழுது கட்டுக்குள் இருந்த உணர்வு, தான்தான் அதைச் செய்தது எனத் தெரிந்ததும் நிலையற்று தவித்தது. அதன் பிரதிபலிப்பாய், சட்டென்று விழியோரம் நீர் இறங்கிவிட்டது அவளிற்கு.
அந்நொடியே அதைத் துடைத்துக் கொண்டு, “சரி, வா போகலாம்!” என நடந்தவளின் வழியை மறைத்தான் மகிழ்.
லவனி கேள்வியாய்ப் பார்க்க, “தப்பு பண்ணா, ஸாரி சொல்லணும் மேடம்! அப்படித்தான், நம்ம வளர்ப்புல சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஆயிரம் குற்றவாளி தப்பிச்சாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் பட்டுடக் கூடாதுங்கிறதுதான் நம்ம நாட்டு சட்டத்தோட அடிப்படை விதி. நியாயமும் அதுதான்.
இப்ப, நீங்க ஒரு நிரபராதிக்குத் தண்டனைக் கொடுத்துட்டு வந்திருக்கீங்க. சொல்லப்போனா, அவர் செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லி இருக்கணும். நன்றிக்கும் தண்டனைக்கும், மலைக்கும் ஆழ்கடலுக்குமான வித்தியாசம் மேடம்!”
இடவலமாய் தலை அசைத்தவள், “இல்ல, என்னால ஸாரி சொல்ல முடியாது.”
“ஏன்.?”
“அவனை அடிச்சிருக்கேன். எப்படிப் போய் முகத்தைப் பார்த்துப் பேசுறது?”
“இந்த கொஞ்ச நேர குற்ற உணர்ச்சியையே எதிர்கொள்ள முடியாம ஓட பார்க்கிறீங்க. கடைசி வரைக்கும் அதைச் சுமக்கப் போறீங்களா? நிஜமா, இந்த வாழ்க்கையை சந்தோஷமா வாழ முடியுமா உங்களால.?”
“இது ஒரு சின்ன விசயம். அவ்வளவு தூரத்துக்கு ஏன் அதை யோசிக்கிற.?”
“உங்களுக்கு ஆயிரம் ரூபாங்கிறது, ஹோட்டல்ல ஒருநேர சாப்பாடு. எனக்கு, ரெண்டு வாரத்துக்கான செலவு. அவருக்கு, அது எப்படியோ.? அவரை நீங்க அடிக்க மட்டும் செய்யல, அவமானப் படுத்தி இருக்கீங்க மேடம்!”
“மகிழ் ப்ளீஸ்..” என்றவளின் கையை யாரோ பற்றி இழுத்திட, அவளை மறைத்தபடி முன்னால் போய் நின்றான் மகிழ்ந்தன்.
அடுத்த நொடி அவனின் கன்னத்தில், மற்றொருவனின் ஐந்து விரல்களும் பதிந்திருந்தது.
லவனி அதிர்ந்து, “ஏய்..” என்றபடி ஓர் அடி எடுத்து வைக்க, “மேடம், ஒன்னும் இல்ல!” எனத் தடுத்து நிறுத்தினான்.
இருவருக்கும் எதிரே, கண்களில் சினத்துடன் நின்றிருந்தான் கீர்த்திவாசன்.
“இது, எனக்கும் அவளுக்குமான பிரச்சனை? நீ எதுக்கு இடையில வந்த?” என்று அடிக்குரலில் வினவிய புதியவனின் சொல்தொனி, இருவருக்கு உள்ளுமே மெலிதான கலவரத்தை உண்டாக்கியது. கேள்வி அவனை நோக்கிப் பாய்ந்தாலும், கண்கள் பாவையைக் குற்றம் சாட்டின.
“சார் ப்ளீஸ். மேடம் வேணும்னு உங்களை அடிக்கல. அது ஒரு சின்ன புரிதலின்மை தான்!” என மகிழ்ந்தன் சமாதானம் உரைக்க முயல, லவனிக்கு அவன் யார் என்று புரிந்து போயிற்று.
முழுமையாய் சவரம் செய்து பாலாடை நிறத்தில் இருந்த அவனின் இடது கன்னத்தில், அவளின் விரல் தடங்கள் மூன்று வரிகளாய் சிவந்து இருந்தது.
“நானே பேசுறேன்!” என லவனி முன்னால் வர, “இல்ல மேடம். என்னை அடிச்ச மாதிரி, உங்களை அடிச்சிட்டா.? அது வேணாம். நான், சாருக்குப் பதில் சொல்றேன்!” என்று பொறுப்பை தான் ஏற்றான் மகிழ்ந்தன்.
“நான் செஞ்ச தப்புக்கு, நீ ஏன் தண்டனை அனுபவிக்கணும்?”
“உங்களைப் பாதுகாப்பு செய்யிறதுக்குத் தான, எனக்குச் சம்பளம் தர்றீங்க?”
“செய்யிற ஒர்க்குக்குத்தான் சேலரி. இந்தமாதிரி அடி வாங்குறதுக்கு இல்ல.”
“பாடிகார்டோட வேலையே, இதுதான மேடம்.?” எனச் சிரித்தவனை லவனியோடு சேர்த்து கீர்த்தி வாசனும் வியப்பாய் நோக்கினான்.
அவனின் புறம் திரும்பிய மகிழ்ந்தன், “ஸாரி சார். மேடம், உங்களைத் தப்பா நினைச்சு அடிச்சிட்டாங்க. உங்களுக்கு அது மனசளவுல பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அதுக்காக, ஒரு பொண்ணைத் திருப்பி அடிக்கிறது நல்ல ஆண்மகனுக்கு அழகு இல்ல சார். என்னைக்குமே அடிக்கு அடிங்கிறது தீர்வு ஆகாது. ப்ளீஸ்..” என்றிட, “யார் நீ.?”என வினவினான்.
புரியாது விழித்தவன், “சார்.?”
“யார் நீனு கேட்டேன்.”
“பேரு மகிழ்ந்தன் சார். மேடமோட டிரைவர்.”
“எவ்வளவு வருஷமா இவக்கிட்ட ஒர்க் பண்ணுற.”
“ரெண்டு நாளா. ஒரு வேண்டுதல் சார், ப்ளீஸ் மரியாதையா பேசுங்க. முன்னபின்ன அறிமுகம் இல்லாத ஒரு பொண்ணை வா போனு ஒருமையில பேசுறது சரியில்ல.”
கீர்த்தி அவனை ஒருபார்வை பார்த்துவிட்டு லவனியின் புறம் திரும்ப, அவனை எதிர்கொள்ள தயாரானாள் பாவை.
“மகிழ், நீ போ!” எனத் தனக்கு அரண்போல் நின்றவனிடம் உரைக்க, “மேடம், உங்களை எப்படித் தனியா விட்டுட்டுப் போறது?”
“தனியாவா.? இதுவரைக்கும் என் லைஃப்ல எல்லாத்தையும் நான் தனியா தான் ஃபேஸ் பண்ணி இருக்கேன். இதையும் பார்த்துக்கிறேன். கார்க்கிட்ட போய் நில்லு!”
“ஆனா மேடம்?” என அவன் தயங்கிட, “திஸ் இஸ் மை ஆர்டர்!”
மறுத்து பேச இயலாது தலை அசைத்துவிட்டுச் சென்றான்.
கீர்த்தியின் புறம் திரும்பியவள், “ஐம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி மிஸ்டர். நான் மொபைல்ல பேசிட்டு வந்ததால, சரியா கவனிக்கல. நீங்கதான் என்மேல வந்து இடிச்சிட்டீங்கனு!” என உரைக்கும் பொழுதே அவனின் கைப்பட்ட இடங்கள் எல்லாம் நினைவு வர, கன்னத்தின் உட்பகுதியைப் பற்களால் கடித்துத் தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
பாவையின் முகத்தையே பார்த்து இருந்தவனால், அவளின் வலதுபக்க கன்னம் சற்று உள்ளடங்கி வெளிவருவதை நன்றாய் அறிய முடிந்தது. அதன் பிரதிபலிப்பு எதையும் முகத்தில் காட்டாமல் இறுக்கமாய் நின்று இருந்தான்.
அடுத்த நொடியே ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்ட லவனி, “தப்பா நினைச்சு, அடிச்சிட்டேன். மகிழ் என்ன நடந்துச்சுனு சொன்னதுக்குப் பின்னாடிதான், தப்பு யார்மேலனு புரிஞ்சிச்சு. ஸாரி கேட்கலாம்னு தான், வந்தேன். அதுக்குள்ள நீங்க அவனை அடிச்சிட்டீங்க! ரியல்லி வெரி ஸாரி!” என மன்னிப்பு வேண்டிட, ஏனோ சிரிப்புதான் வந்தது அவனிற்கு.
“நிஜமா, என்கிட்ட ஸாரி கேட்கத்தான் வந்தியா.?”
சற்று திணறலுடன், “ஆமா.” என்றிட, “ஓடிப்போக டிரை பண்ண மாதிரியில்ல இருந்துச்சு.? என வினவியவனின் முகத்தைத் திகைப்புடன் ஏறிட்டாள் லவனி.
நொடி இடைவெளி விட்டு, “உங்களுக்கு அப்படித் தோணினா, அதுக்கு நான் பொறுப்பில்ல. நான் ஸாரி சொல்லிட்டேன். நீங்க செஞ்ச தப்புக்கான பொறுப்பை யார் ஏத்துக்கிறது.?” என மீண்டும் தனது கோப நிலைக்கே வந்தாள்.
“நான் என்ன தப்பு செஞ்சேன்.?”
“என்னோட டிரைவரைக் காரணமே இல்லாம அடிச்சிருக்கீங்க மிஸ்டர்.”
“அது, உனக்கு விழ வேண்டியது. அவன் இடையில வந்து வாங்கிக்கிட்டான்.”
“அதான் அவன் வர்றான்னு தெரியிது இல்ல? அப்ப, உங்கக் கையைக் கண்ட்ரோல்ல வச்சிருக்கணுமா இல்லையா.?”
அவளை ஆழ்ந்து பார்த்தவன், ‘நான் தப்பு செஞ்ச மாதிரி, எவ்வளவு டிரிக்கியா பேசுறானு பாரு. செம கேடி!’ என மனதிற்குள் நினைக்க, “என்ன மிஸ்டர், பதிலைக் காணோம்.? சரியா, பேச வராதா? கை மட்டும் தான் உடனுக்குடனே பதில் சொல்லுமா.?” என்று வினவினாள் லவனி.
பாவையின் சொற்கள் அவனின் அகங்காரத்தை ஏகத்திற்கும் ஏற்றியது.
‘இவளை!’ எனப் பல்லைக் கடித்து தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்தவன் வாய் வழியாய் புஸ் என்று காற்றை வெளியேற்றிட, ஆடவனின் இரு கரங்களும் தானாய் பேண்ட் பாக்கெட்டிற்குள் சென்று நுழைந்து கொண்டன. இடதுகால் நிலையாய் நிற்க, வலதுகாலின் பின்பக்கம் மட்டும் தரையில் அழுந்தி இருந்தது. ஐவிரல்களும் நிலத்தை விட்டு சற்றே மேலேறி இடவலமாக காலை அசைத்துக் கொண்டிருந்தது.
உறுதியான மனநிலையில் இல்லாது அலைப்புறுவதை அவனின் உடல்மொழி சொல்ல, “என்ன செய்யணும் இப்ப.?” என்றான்.
“யூ சூட் சே ஸாரி டூ ஹிம்.”
“வாட்.? நான், அவன்கிட்ட ஸாரி சொல்லணுமா.?”
“எஸ்.”
“ஆர் யூ கிட்டிங்?”
“நோ! ஐம் வெரி சீரியஸ் மிஸ்டர்.”
“அப்ப, நீ என்னை அடிச்சது?”
“அதான் ஸாரி சொல்லிட்டேனே?”
“ஸாரி சொன்னா போதுமா.?”
“வேற என்ன செய்யணும்?”
“எனக்குனு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கு. நீ அடிச்சது, எந்த அளவுக்கு என்னை ஹர்ட் பண்ணி இருக்குனு தெரியுமா.? ஸாரினு ஈசியா சொல்லுற.?” எனக் கேட்டவனின் குரலில் அப்பட்டமாய் கோபம் மட்டுமே தெரிந்தது.
“உனக்கு மன்னிக்க இஷ்டம் இல்லேனா, விடு. நான் அதை எதிர்பாக்கவும் இல்ல. நம்ம பிரச்சனையைப் பின்னாடி பார்த்துக்கலாம். இதுல சம்பந்தமே இல்லாம, என்னோட டிரைவர் அஃபெக்ட் ஆகுறதை நான் விரும்பல. உனக்கு மட்டும் தான் செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கா? அவனுக்கு இல்லையா.? அதுனால அவன் ஹர்ட் ஆகி இருக்க மாட்டானா.?”
“திஸ் இஸ் த லிமிட், மிஸ்!”
“என்னோட லிமிட் எதுனு, நீ டிசைட் பண்ணாத என்ன? சே ஸாரி டூ ஹிம்!”
“ஐ வோண்ட்!”
“யூ டெஸ்ட் மை டெம்பர் டூ மச், மிஸ்டர்.”
அவன் கேலியாய் புன்னகைத்து பார்வையை வேறு புறம் திருப்பி, “வேணும்னா, அந்த அடியை நீ வாங்கிக்கோ, நான் அவன்கிட்ட ஸாரி சொல்லுறேன்!”
“இடியட்!” எனப் பல்லைக் கடித்தவள் அங்கிருந்து செல்ல, “நம்ம பிரச்சனையைப் பின்னாடி பார்த்துக்கலாமா.? லெட்ஸ், வெய்ட் அண்ட் வாட்ச்!” என்றபடி சட்டைப் பையில் இருந்த சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு நடந்தான்.
Yardaaa antha hero🥳🥳🥳 avalukku yetha pair ah thaa erukaan… Amaaaa avan thaaa pair ah avaluku😜😂
Interesting
Ivan antha mappilaiya vanthavana kila vila ponavala kapathuna athuku kai appadiya vaipan.