அத்தியாயம் 9
அருகில் அமர்ந்து இருந்தவளை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி வாகனத்தை இயக்கினான் மகிழ்ந்தன்.
அதை உணர்ந்த லவனி, “என்ன மேன், சைட் அடிக்கிறியா.?” என்றிட, “ஒருமாதிரி மன அழுத்தத்துல இருக்குறது போல தோணுச்சு. அதான் பார்த்தேன்!” என உரைத்தவனின் முகத்தில் சிரிப்பு குடி கொண்டிருந்தது.
“பிரஸர், டிப்பிரஸ்டு ரெண்டுமே இருக்குதான். அதுக்காக, அதைப் பத்தியே யோசிக்கிற ஆள் இல்ல நான்.”
“நல்லது மேடம்.”
“அப்படியே ரைட்ல கட் பண்ணு!” என்று வழி உரைக்க, “இங்க தான், உங்க வீடு இருக்கா மேடம்.?”
“என்னோட அப்பா வீடு!”
“அப்ப, அது உங்களோடதும் தான.?”
அவன் பக்கம் திரும்பியவள், “என் அப்பாவோடது, எப்படி என்னோடது ஆகும்.?”
“பெத்தவங்க சம்பாதிக்கிறதே பிள்ளைகளுக்காக தான.?”
“என்னோட அப்பா, அதுல விதிவிலக்கு!”
அவன் குழப்பத்துடன் பார்க்க, “நான் இங்க இல்ல. சோ, இது என்வீடு இல்ல. தனியா வேற வீட்டுல இருக்கேன். நான் தங்கி இருக்கிறது தான என்னோடது.? என்ன புரிஞ்சிச்சா.?”
“லாஜிக் கரெக்ட் தான்! புரிஞ்சிடுச்சு.”
“குட்பாய்!” என அவள் இடக்கரத்தால் அவனின் வலது கன்னத்தில் தட்டிக் கொடுக்க, “நாய் எதுவும் வளர்க்குறீங்களா மேடம்.?”
“ஏன் மேன் கேட்குற?”
“இல்ல, வசதியானவங்க எல்லாம் நாய் வளர்ப்பாங்கனு கேள்வி பட்டிருக்கேன். அதை இப்படித்தான் தட்டிக் கொடுப்பாங்களாம். அதான்!”
“அடப்பாவி! என்னைப் பார்த்தா எப்படித் தெரியிது.?”
“என்னை மாதிரி சாதாரண ஆளுக்கிட்ட உங்களை மாதிரி ஒருத்தர் இப்படி லேசா பழகினா, அப்படித்தான் நினைக்கத் தோணும். ஓனரோட மனசுபடியே நடந்துக்குற பெட்!”
மெலிதாய்ப் புன்னகைத்தவள், “முதல் விஷயம், நான் எந்த பெட்டும் வளர்க்கல. அதுக்கு எனக்கு நேரமும் இல்ல. இண்ட்ரெஸ்ட்டும் இல்ல. செகண்ட், உன்னை வெறும் டிரைவராவோ சர்வண்டாவோ நினைக்கல நான். ஒரு ஃப்ரெண்ட் மாதிரி, நீ எனக்கு. அண்டர்ஸ்டேண்ட்.?”
அவன், “ம்ம்..” எனத் தலை அசைத்த பொழுது, ஜெயசேகரின் இல்லத்தை அடைந்து இருந்தனர்.
வாயிலில் இருந்த காவலாளி யார் என விசாரிக்க, தன்பக்கம் இருந்த கண்ணாடியைக் கீழிறக்கி, கதவைத் திறக்கும்படி உத்தரவிட்டாள் லவனி.
பரபரவென ஓடிச் சென்று இரும்புக் கதவைத் திறந்து வழிவிட்டவன், கூடுதலாய் இண்டர்காமில் அழைப்பு விடுத்து உள்ளே இருப்போருக்கு அவளின் வருகையைத் தெரியப்படுத்தினான்.
கீழே இறங்கியவள், “நான் வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது. எங்கேயாவது போகணும்னா போயிட்டு வா.” என்றுரைத்து சிறிய மாளிகை போன்றதான அந்த வீட்டின் வாயிலை நோக்கிச் செல்ல, “மேடம், ஒருவேள நான் போயிட்டு வர லேட் ஆகிடுச்சுனா.?” என வினவி அவளை நிறுத்தினான் மகிழ்.
திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவள், “நோ பிராப்ளம். நீ வர்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணுறேன்.” என்றுவிட்டு உள்ளே செல்ல, “நமக்காக, ஏதோ ஒரு தருணத்துல, ஏதாவது ஒரு காரணத்துக்காக கொஞ்ச நேரம் யாரோ ஒருத்தர் காத்திருக்கிறதை விட என்ன பெரிய வாழ்க்கை கிடைச்சிடப் போகுது.?” எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அடுத்த நாற்பது நிமிட பயணத்தில் பிரபாகரின் எதிரே நின்றிருந்தான்.
“வாடா நல்லவனே! நேத்து இராத்திரி போனவன், இப்பதான் வந்து சேர்ந்திருக்க. எதுவும் பிரச்சனை இல்லையே.?”
“அதெல்லாம் இல்ல சார்.”
“நான் கூட பார்ல நடந்த கலாட்டாவுல, உனக்குச் சிக்கல் ஆகிடுச்சோனு நினைச்சிட்டேன்.”
“அப்படி எதுவும் நடக்கல. இப்ப வரைக்கும் உங்களை மாதிரி நல்லவங்க புண்ணியத்துல, ரொம்ப நல்லாவே இருக்கேன்.”
“அதுசரி! டிரைவர் வேலை என்னாச்சு.?”
“வேலைக்கு நடுவுலதான் உங்களைப் பார்க்க வந்தேன்.”
“என்ன சம்பளம், எவ்வளவு நேரம் வேலைனு எல்லாம் பேசிட்டியா?” என்றபடி அவன் வந்த வாகனத்தை எட்டிப் பார்த்தான் பிரபா.
“இல்ல சார். இன்னும் எதுவும் பேசல!” எனப் பதில் உரைத்து முடித்த நொடி, “டேய்! இது அந்த பாரோட மேனேஜர் வண்டி ஆச்சே? அவர்கிட்டயா வேலை பார்க்கிற.?” என்று கேட்டவனின் குரலில் பதற்றம் தொற்றி இருந்தது.
“வண்டி அவரோடது தான். ஆனா, நான் வேலைப் பார்க்கிறது அவர்கிட்ட இல்ல.”
“இது என்ன மாப்பிள்ள அவருதான். ஆனா, போட்டிருக்க சட்டை என்னோடதுங்கிற மாதிரி சொல்லுற.
மகிழ் சிரிக்க, “ஏற்கனவே பார்ல பிரச்சனை செஞ்சிருக்க. மேனேஜரோட வண்டியை வேற ஓட்டிட்டு இருக்க. எதுலயும் போய் சிக்கிடாதடா!”
“அப்படி எல்லாம் நான் சிக்கிட மாட்டேன். மீறி ஏதாவது நடந்துச்சுனா, பார்த்துக்கலாம் சார்.”
“அவ்வளவு தைரியமாடா உனக்கு.?”
“மடியில கனம் இல்ல சார், அப்புறம் எதுக்குப் பயம்?”
“நல்லா பேசு!”
புன்னகைத்து தலை அசைத்தவன், “சார், என்னை ஓனர் அவங்கக்கூடவே இருக்கச் சொல்லி இருக்காங்க. இராத்திரி நேரத்துலயும் அவங்களுக்கு வண்டி ஓட்டுற மாதிரி வரலாம். அதுனால, நான் அங்கேயே தங்கிக்கவா?”
“அதை ஏண்டா என்கிட்ட கேட்கிற.?”
“என்ன இருந்தாலும், கடந்த மூனு மாசமா படுக்க இடம் கொடுத்து பார்த்துக்கிட்டது நீங்கதான.?”
“அது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல. உனக்கு எது சௌகர்யமோ அதைச் செய். என்னைப் பத்தி யோசிக்காத. நீ போக வேண்டியது பார்க்க வேண்டியதுனு நிறைய இருக்கு மகிழ்ந்தா. ஆனா, நான் அப்படி இல்ல. நடமாட முடியாத காலோட, இந்த வாழ்க்கையை யாருக்கும் தொந்தரவு கொடுக்காம வாழ்ந்து முடிச்சாலே போதும் எனக்கு.”
“நீங்க சொல்லுற விசயம் சரிதான். ஆனா, அதைச் சொன்ன தொனி தான் சரியா இல்ல.”
பிரபா சிரித்து, “என்ன சரியில்ல.?”
“யாருக்கும் தொந்தரவு தராம வாழணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய இலட்சியம். அதைப் பெருமையா இல்ல சொல்லணும்? ஏன் இப்படிச் சங்கடத்தோட பேசுறீங்க.?”
“உன்னால மட்டும் தாண்டா, இப்படி எல்லாம் யோசிக்க முடியும். தனிமை எவ்வளவு வலினு தெரியுமா மகிழ்.?”
“அது எவ்வளவு அழகுனு தேடுங்க சார். இந்த வலி எல்லாம் காணாம போயிடும்.”
“தேடுவோம்!” என அவனிற்குப் பதிலளிக்கும் விதமாய் பிரபா தன்னுள்ளும் நம்பிக்கையை விதைக்க முயல, “உங்க ஃபோனை தான், நேத்து இருந்து உபயோகிச்சுக்கிட்டு இருக்கோம். என்னோடதுல காசு போட்டுட்டு, நான் நாளைக்குக் கொண்டு வந்து தர்றேன் சார். இப்போதைக்கு, இங்க இருக்குற என்னோட துணியை மட்டும் நான் எடுத்துக்கிறேன். நேரம் கிடைக்கும் போது இல்லாட்டினா, இடையில ஏதாவது ஒரு நாள் லீவு போட்டுட்டு உங்களைப் பார்க்க வர்றேன் சார்.
ஒருவேளை நான் வராட்டினா, எதுவும் சங்கடப்பட்டுக்காதீங்க. எப்பவும் உங்களை நான் மறக்க மாட்டேன். என்னோட நினைப்புலயும் நல்லதுலயும் ஒவ்வொரு சந்தோஷத்துலயும் நீங்க கட்டாயம் இருப்பீங்க!”
“இது ரொம்ப பெரிய வார்த்தை மகிழ்ந்தா. நீ பார்க்க வரணும்னு எல்லாம் இல்ல. ரெண்டு இல்ல மூனு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு ஃபோன் போடு போதும். சும்மா ஒரு நாலு வார்த்தை. எனக்கு அதுவே சந்தோஷம் தான்!”
“நான் தான் ஃபோன் போடணுமா? ஏன், நீங்க போட மாட்டீங்களா சார்.?”
“சரி, நானே கால் பண்ணுறேன். கவனமா இரு. வேலையைத் திருப்தியா செய். உடம்பையும் பார்த்துக்கோ!” என விடைக் கொடுக்க, ஓர் ஆசுவாச மூச்சை வெளிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் மகிழ்ந்தன்.
நாம் வாழும் வாழ்வு எவரேனும் ஒருவருக்கு, ஏதோ ஒரு வகையில் துளியேனும் பயனை நல்கினால், அதைக்கடந்து வேறென்ன பெரும்பேறு கிடைத்துவிட போகிறது.
அவ்வகையில் இத்தனை நாள்கள் மகிழ்ந்தனிற்கு தன்னால் இயன்றதை செய்து துணை இருந்ததை எண்ணி, இதுவரையிலான தன் இயலாமையின் மீதான தாழ்வு மனப்பான்மையை தூர விலக்கினான் பிரபா.
இவ்இருவரின் சந்திப்பு, ஒருவனிற்கு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான உந்துதலைத் தந்தது என்றால் மற்றவனிற்கு புதிய மனிதர்களை அறிமுகம் செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் சென்றது.
|||||
அமைதியான வீடே வரவேற்றது லவனியை. இது எப்போதுமான நிகழ்வு என்பதால், கூடத்தில் வரிசையாய் போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் போய் அமர்ந்தாள்.
பணியாளர்கள் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்க, ஒருவர் வந்து அவளிற்கு அருந்த நீரைக் கொடுத்துவிட்டுச் சென்றார். தாகம் தான் என்ற பொழுதும், அதை அருந்துவதற்கு மனமில்லை.
அமைதியான சூழலில் உண்டான சிறு சலனத்துடன், ஜெயசேகரின் இரண்டாம் மனைவி வாசுகி மாடிப்படிகளில் இருந்து கீழ் இறங்கி வந்தார்.
இதுநாள் வரை இருவரும் பெரிதாய் எதுவும் பேசிக் கொண்டது இல்லை, ஒருசில முக்கிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்து. எப்பொழுதுமே இவளுக்கு அவரும், அவருக்கு இவளும் மூன்றாம் மனிதர் தான்.
பந்த பாசமும் கிடையாது, அதேபோல் பழி பாவமும் கிடையாது. நீ யாரோ நான் யாரோ என்பது தான் அவர்களின் நிலைப்பாடு.
திருமணத்திற்கான ஏற்பாடுகளில் புடவைத் தேர்ந்தெடுப்பு முதல் மணமக்களாய் தனித்த இல்லத்தில் குடியேறுவது வரை அனைத்துத் திட்டமிடல்களையும் லவனி, தனக்குத்தானே தான் செய்து கொண்டாள். விபரம் அறிந்த வயதில் இருந்து தனிமையில் தன்னை ஆளாக்கிக் கொள்ள பழகியவள், இன்று வரையிலுமே அப்படிதான் தான் இருக்கிறாள்.
“எங்க போன?” என வினவிய வாசுகியின் குரலில் பதற்றம், கோபம் என எவ்வித உணர்வும் வெளிப்படவில்லை. சாதாரண ஒரு வினாவாய் இருந்தது, அந்த இரு சொற்கள்.
“இந்தக் கல்யாணம் செட் ஆகாதுனு தோணுச்சு. அதான் போயிட்டேன்.”
“அதை நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல? இப்பப்பாரு எவ்வளவு பெரிய அவமானம் உங்க அப்பாக்கு.? எத்தனை விஐபி வந்திருந்தாங்க தெரியுமா? அவங்களை எல்லாம் சமாதானம் செஞ்சு அனுப்புறதுக்கு, எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டு இருப்பாருனு, உனக்கு எந்த கவலையும் இல்ல. அப்படித்தான.?”
மறுத்துத் தலை அசைத்தவள், “மேரேஜ் ஹாலுக்கு வர்ற வரைக்கும், எனக்குமே அந்தமாதிரி ஒரு எண்ணம் இல்ல. லைஃப் பார்ட்னர் மேல லவ் இல்லனாலும் பரவாயில்ல, டிரஸ்ட்டாவது இருக்கணும்ல.?” என இரு புருவங்களையும் மேலே தூக்கி அவரின் பதிலிற்காக நோக்கியவள், தந்தையைப் பற்றியும் திருமண நிகழ்வுகள் குறித்தும் பேசுவதை அதிகவனமாய் தவிர்த்தாள்.
சின்னதாய்ச் சிரித்த வாசுகி, “லவ்வா.? அதுனால என்ன யூஸ்.? அதுக்காகவா போன.?”
“எங்க ரெண்டு பேருக்கும் இடையில டிரஸ்ட் இல்ல. அதான் போனேன்.”
“எதை வச்சு அப்படிச் சொல்லுற.?”
“இருந்திருந்தா, இது ஒரு பிஸினஸ் மேரேஜ்னு முன்னாடியே என்கிட்டச் சொல்லி இருப்பாரே?”
“சொல்லி என்னாகப் போகுது.?”
“ஓ.. ம்ம்.. சொல்லி என்னாக போகுது?” எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள், “நான், இன்னொரு வாசுகியா வாழ விரும்பல!” என்று அதற்கான பதிலை எதிரே இருந்தவரிடம் உரைத்தாள்.
அவரிற்குச் சட்டென்று சினம் துளிர்த்துவிட, “மைண்ட் யுவர் வேர்ட்ஸ் லவனி!”
“நான், மைண்ட் பண்ணிதான் பேசுறேன். இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைமா, நீங்க இவ்வளவு கோபமாவும் லௌடாவும் பேசிக் கேட்கிறேன் ஆன்ட்டி!”
வாசு எதுவும் உரைக்காமல் அவளைப் பார்வையால் எரிக்க, “பேப்பர்ஸ்ல மட்டும் சைன் பண்ணுற லீகல் வொய்ஃபா இருக்க நான் விரும்பல. செக்ஸும் பேபியும் என்ன, இந்த பிஸினஸ் அக்ரிமெண்ட்டோட எக்ஸ்ட்ரா பெனிஃபிட்டா.? இதுல எனக்கு எந்த பிராஃபிட்டும் கிடைக்கிற மாதிரி தெரியலயே? சொல்லப் போனா, லாஸஸ் அதிகம். என்னை, என்னோட உடம்பை, என் சுயத்தை, வெர்ஜினிட்டியை இழந்து அதோட லேபர் பெயினையும் அனுபவிக்கணும். அதுக்கு நான் தயாரா இல்ல.”
“ஓ.. அதுக்காக கடைசி வரைக்கும் தனியாவே இருக்கப் போறியா.?”
“நான் எப்ப அப்படிச் சொன்னேன்? எனக்குச் சூட் ஆகுற மாதிரி ஒருத்தரைப் பார்க்கும் போது, ஐ வில் டெஃபணெட்லி கெட் மேரிட்.”
“அப்ப மட்டும் நீ முன்னாடி சொன்ன லாஸஸ் எதுவும் இருக்காதா.?”
“ஸுயரா இருக்கும்! பட், என் லைஃப் பார்ட்னர்கிட்ட இருந்து ரிட்டர்ன்னா ஓரளவுக்காவது கன்சர்ன் கிடைக்கும். தட்ஸ் வாட் ஐ வாண்ட்! எல்லாத்தையும் கிளியரா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். உங்க பிஸினஸ் ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லிடுங்க. ஐம் லீவிங்!” என்றவள் இருக்கையில் இருந்து எழ, வேக எட்டுகளில் உள்ளே நுழைந்தார் ஜெயசேகர். அவரின் பின்னோடு, வாசுகியின் மகனான திலீப்பும் வந்தான்.
💛💛💛💛💛
Super epi pa interesting ah pogudhu story 👌👍😍
Interesting😍
🧡🧡🧡
Super ena tha business women ah irunthalum oru husband kitta normal ah ethir pakurathu thana ithu atha tha ava kekura mrg ena business ah itha kodutha panikirenu solla life atha eppadi la pesuranga paru