Skip to content
Home » மஞ்சணத்தி மலரே-1

மஞ்சணத்தி மலரே-1

அத்தியாயம்-1

        விழிப்பு தட்டியவளுக்கு தலை பாரமாக இருந்தது. இமைகளை இறுக மூடி திறக்க முயன்றாள். கண்கள்  கட்டப்பட்டு இருப்பதை உணரவே சில நொடிகள் தேவைப்பட்டன அவளுக்கு.  கத்த வேண்டுமென தோன்றியது.  வாய்  தெரி ஒட்டு நாடா கொண்டு  ஒட்டப்பட்டிருக்க, அடிவயிறு உள்வாங்கி மூச்சுக்காற்று வெளிவந்தது தான் மிச்சம். கைகள் முதுகுக்கு பின், கட்டப்பட்டு கால்களும் கட்டப்பட்ட நிலையில்,  இடதுப்பக்க முகம்  மெத்தையில் அழுந்தி கிடப்பதை  உணர்ந்தவளுக்கு பயமேகங்கள் சூழத் தொடங்கின. இதயமோ  பலமாய் அ(இ)டித்திட வியர்வைத்துளிகள் மேனியில் அரும்ப ஆரம்பித்தன.

       மதியம் நடந்த சம்பவத்திற்கு நினைவு சென்றது.  அரசுப்பேருந்திலிருந்து இறங்கியவள், தனது வீடு நோக்கி செல்லும் குறுகியச்சாலையில் நடக்கலானாள். நகரப்பகுதியிலிருந்து சற்று தள்ளியுள்ள பகுதியது. இப்போது  தான் வளர்ந்து வருகிறது. கிட்டதட்ட அந்த மண்சாலையில் ஒரு கிலோமீட்டர் நடந்தால் தான் அவளது வீட்டை  அடைய முடியும்.
 
         காலையில்  நடந்து வந்தால் கல்லூரி செல்ல தாமதமாகுமென இல்லத்திலிருந்து மிதிவண்டியில் கிளம்புபவள், அந்த சாலையில் முதலாவதாக அமைந்த  வீட்டில் வண்டியை நிறுத்தி விட்டு, பிரதானசாலை வந்து பேருந்து  ஏறுவாள். மாலையில் மிதிவண்டி எடுத்துக் கொண்டு இல்லம்  திரும்புவாள். பெண்ணவளுக்காக இந்த உதவியை விருப்பத்துடனே செய்தனர் அந்த இல்லத்தினர்.

       பொதுவாக சற்று ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிப்பவர்களிடையே இதுமாதிரியான உதவிகள்  சகஜமே. மிதிவண்டி நிறுத்தியுள்ள வீட்டை அடைய இன்னும்  இருபதடிகள் உள்ள நிலையில் அவளுக்கு முன் ஒரு மகிழுந்து வந்து நின்றது. அதை கவனியாது கடந்து சென்றவளை “ஹலோ சிஸ்டர்” என்ற  குரல் நிற்க வைத்தது.

       யாரென திரும்பி பார்த்த நொடிக்கும் குறைவான நேரத்தில் யாரோ அவளது முகத்தில் கைகுட்டையை வைத்து அழுத்தி,  மகிழுந்தில் தள்ளியது வரை நினைவில் பதிந்திருக்க, அதன் பிறகு நடந்தவைகள் அறியாது தவித்தாள்.

       தான் கடத்தப்பட்டதை முழுவதும் அறிந்தவளுக்கு நடுக்கங்கள் தோன்றியது. விலாசம் கேட்டு வந்து நிகழ்ந்த  பல கடத்தல்கள்  சினிமா,  செய்தித்தாள்கள் மூலம் அறிந்தவைகள் நினைவில் வந்து இம்சித்தது.
   
       சென்ற மாதம் இவ்வாறு தான் மகிழுந்தி்ல் வந்தவன்  கண்ணாடியை இறக்கிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த தனது தோழியிடம்  விலாசம் கேட்க,  அவளும் நின்று பதிலளித்திட, வந்தவனோ தான் சுயஇன்பம் கொள்வதை பெண்ணவளுக்கு  காட்டி தனது வக்கிரத்தை நிறைவேற்றி கொள்ள, அதை தாமதமாக உணர்ந்தவள் பயந்து அழுது  அங்கிருந்து தப்பித்து வந்ததை, மறுநாள் தன்னிடம் கூறி அழுததும், அவளை திட்டியே தைரியம் அளித்ததும் மனக்கண்ணில் விரிந்தது. இன்று தைரியம் என்ற சொல்லை கூட அறியாத நிலையில் தான் கிடப்பதை உணர அவளின் அச்சங்கள் தடுத்தது.

        அடுக்கடுக்காய் பல நிகழ்வுகள் தோன்றி பயஅரக்கன் கழுத்தை நெரித்தான். அச்சமே ஆளை தின்றுவிடும் என்பது போல, ஒருகட்டத்தில் மூர்ச்சையாகிப் போனாள்.

        கதிரவன் மேற்கே தனது அஸ்தமனத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மாலைவேளையில் சலிக்காது பத்தாவது  முறையாக மகளுக்கு அழைப்பு விடுக்க, கைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவே பதில் வந்தது. இம்முறையும். எரிச்சலுடன் கைபேசியை சாய்விருக்கையில் எறிந்துவிட்டு வெளியே வந்தார். சரிபாதியானவன் மகிழுந்தை துடைத்து கொண்டிருந்தான் ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு.

           “அப்பாவும் பொண்ணும் ஏதாவது ப்ளான் பண்றிங்களா..” என திடீரென கத்தல் வர, அவரோ புரியாது மனைவியை விழித்தார்.

     “நேத்து நைட் பர்த்டேக்கு சேரி எடுத்துகோ டி சொன்னதும் ரெண்டு பேரும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுனப்பவே டவுட் வந்திருக்கனும்… உங்களே நம்புனதுக்கு…,” என புலம்பலை தொடர்ந்தார் அந்த இல்லத்தின் அரசி  வித்யா.

        “வொய் டென்சன்?? இப்ப என்ன இன்னைக்கி இல்லன்னா  கம்மிங் சண்டே  போகலாம் விது…,” என மனைவியை சமாதானம் செய்தார் ராகவன்.

    “அங்கிட்டு மூணு நாள் தான் இருக்கு… ப்ளவுஸ் ஸ்டிச் பண்றவ சொதப்பிடுவா…  அப்றம் ப்ளவுஸ் சரியில்லேன்னு உங்க பொண்ணு சேரி கட்டாம, நீங்க எடுத்து கொடுத்த ட்ரஸ் போட்டுகிட்டு போயிடுவா…, இதுக்கு தான் மார்னிங் லீவ் போட சொன்னேன்…, கேட்டாளா??? இம்பார்ட்டண்ட் க்ளாஸ் இருக்கு முடிச்சிட்டு ஆப்டர்நூன் வரதா சொன்னா.. ஆப்டர்நூன் மேலே கால் பண்ணா புட்பால் பிராக்டிஸ் இருக்கு மா…  ஒன் ஹவர்ல  முடிஞ்சதும் வந்துடுறேன் தப்பிக்கிறா… அப்றம் கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சியிருக்கு அந்த கழுதே… எல்லாம் ப்ளான் பண்ணி…,” மீண்டும் புலம்பலை தொடர, ராகவனுக்கு பொறுமை என்பது காற்றில் கரைந்துவிட்டது.

       “அடியேய்!! நிறுத்துறியா…  சும்மா சும்மா கால் பண்ணி  சின்ன புள்ளய  டார்ச்சர் பண்ணா ஸ்விட்ச்ஆஃப் தான் பண்ணுவா…,” என மகளுக்கு ஆதரவாக பேசியவர், தான் செய்ய முடியாததை மகள் செய்துவிட்டாள் என பெருமை பேசி மனைவியை மேலும் வெறுப்பேத்தினார்.

      “யாரு சின்னப்புள்ளே… உங்க பொண்ணா!… சேரி கட்டி அவளும் நானும் ஒன்னா நின்னா புதுசா பாக்கிறவங்க அவளே என்னோட அக்கானு நெனைப்பாங்க.. அப்பிடி வளந்து நிக்குறா…” என்றவர், கணவன் தன் பேச்சை செவிமடுக்காது மகிழுந்து துடைப்பதில் கண்ணாய் இருக்க, கோபம் சுர்ரென்று சிரமேற, கணவனின் கையிலிருந்த துண்டை பிடுங்கி  வீசியெறிந்தார்.

       “அதான் போறதில்லேன்னு முடிவாயிடுச்சே…. இன்னும் என்ன இந்த தகரடப்பாவே தொடைச்சிகிட்டு…” என கணவருடன் அவரது வண்டியின் மானத்தையும் சேதப்படுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் வித்யா.

       மனைவியை பின்தொடர்ந்த ராகவன், இல்லம் நுழைந்ததும் அவரது வலக்கரம் பிடித்து இழுத்து  தன் மார்பு மோதி நிற்க வைத்தார்.

        “நல்லாயிருக்கு உன் நியாயம்… உன்னே சின்ன பொண்ணா காட்டிக்க என் பொண்ணு சேரி கட்டனுமா… இதே விட பெட்டர்  ஜடியா சொல்லட்டுமா.. பேசாம நீ ஜீன்ஸ், குர்தி போட்டுக்க.. செம்மஅஅஅ டக்கராஆஆஆஆ இருப்பேஎஏஏஏ…,” என கண்ணடித்து சொல்ல, பெண்ணவள் வதனம் வெட்கத்தில் செங்காந்தளாய்  பூத்து, பின் அக்னிமலராய்  உருமாறி நின்றது. தன்னவன் காலை ஓங்கி மிதித்துவிட்டு படுக்கையறை நுழைந்துக் கொண்டார் வித்யா வழக்கம் போல.

        முகத்தில் தெளிக்கப்பட்ட நீரால் நெற்றி சுருக்கி விழிகள் திறக்க  முயன்று தோற்று தெளிந்தவள், தான் கட்டிலில்  அமர வைக்கப்பட்டதை உணரும் முன்பே சுள்ளென்று வலி எடுத்தது.  ஸ்ஸ்அஅம்மாஆஆஆ… என குரல் வேகமாய் ஒலித்தது செலோ டேப் அகற்றப்பட்டதால்.

        “ய்ய்ஆஆஆ…” என பேச முயன்றவளின் வாயில் நீர் ஊற்றப்பட்டது விசையோடு. குடிக்க முடியாது மூச்சு திணறி இருமி அவள் துப்பியதில்   பாதி நீர் மெத்தையை நனைக்க, பாதி அவளது கழுத்திற்கு கீழே பயணித்தது. நீர் ஊற்றப்படுவது நிறுத்தப்பட, இருமலுடன் மூச்சு விட சிரமப்பட்டு திணறினாள்.
         
      வக்கிர சிரிப்பொலிகள் அறையில் எதிரொலிக்க, சட்டென மெத்தையில் சரிந்து உடலை  நத்தை போல குறுக்கி கொண்டாள்.
        
        சிரிப்பொலிகள் நின்று  “அப்றம் வந்து கவனிச்சிக்கலாம் டா…” என ஒருவனின் குரலைத் தொடர்ந்து, ஆட்கள் நடந்து செல்லும்  காலடி ஓசைகளும், கதவு சாத்தப்படும் அரவமும்  கேட்டது.  உடலை மேலும் சுருக்கிக் கொண்டு, அன்னையின்  கருப்பை  மட்டுமே இப்போது  தனக்கு பாதுகாப்பு  என்பது போல கிடந்தாள்.

       ஏற்கனவே வியர்வை பிசுபிசுப்பில் ஆடை உடலோடு ஒட்டியிருக்க,  கடத்தியவர்கள் ஊற்றிய நீரால் தனது மேலாடை… இதற்கு மேல் நினைக்கவே அவளுக்கு உடலும் மனமும் கூசியது. அழுது கரைந்தாள். ஒருநிலையில் அழவும் தெம்பின்றி சோர்ந்தவளுக்கு தந்தையின் மடி தேவைப்பட்டது.

      ‘அப்பா!! எனக்கு என்ன நடந்தாலும் சரி உயிரோட உங்கிட்டே வந்திடனும்ப்பா… இல்லே என் விதி இன்னையோட முடியப் போகுதுன்னா கடைசி மூச்சு உன் மடியிலே தான் போகனும்ப்பா… ப்பா… நான் பேசுறது கேட்குதாப்பா…,’ என மனதோடு தந்தையுடன் பேசினாள்.

     மகள் வரவில்லையென இன்னும் சண்டையிட்டு கொண்டிருக்கும் ராகவன் வித்யா தம்பதியரின் மூத்த மகள் தான் மான்சி. கல்லூரியில்  மூன்றாமாண்டு இளங்கலை அடியெடுத்து வைத்து இரண்டு மாதங்கள் தானாகிறது. அடுத்த வாரம் இருபதாவது பிறந்ததாளை கொண்டாடப் போகும் பைங்கிளி.    தம்பி கவின் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். அழகான அன்பான பூந்தோட்டம் இவர்களது குடும்பம்.  
     
     மனைவியுடன் வார்த்தை யுத்தம் புரிந்துக் கொண்டிருந்த ராகவனுக்கு திடீரென  நிற்காது  தொடர் இருமல்கள் வந்து கொண்டேயிருந்தது. என்னவென காரணம் புரியவில்லை இருவருக்கும். வித்யா பதறிப் போய் சொம்பில் தண்ணீர் பிடித்து வந்து கொடுக்க, அதே நேரம் வெளியே இருந்து மான்சிம்மா மான்சிம்மா என பழகிய  குரல் அழைத்தது.

      ராகவனை நீர் அருந்த  சொல்லிவிட்டு வித்யா வெளியே வந்தார். இதே தெருவில் நான்கைந்து காலிமனைகள் தள்ளி வீடு கட்டியுள்ள நடராஜன் என்பவர் வந்திருந்தார்.

      அவரை உள்ளே வரவேற்றார் வித்யா. “பாப்பா  வந்துட்டாளா மா..,” எனக் கேட்டவாறு செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைந்தார். இல்லையென வித்யா சொல்ல, அவருக்குள் சிறுநெருடல் தோன்றியது.

       பேச்சு சத்தம் கேட்டு நெஞ்சை தடவியவாறு ராகவன்  அறையிலிருந்து வர, சற்றே நிம்மதி கொண்டார் வந்தவர்.

      “தம்பி!! நீங்க வீட்ல தான் இருக்கிங்களா…ஜாப்க்கு போகலயா…,” என விசாரித்தார் ராகவனின் இரண்டு சக்கர வாகனம்   வெளியே நிற்பதை கூட கவனிக்காமல்.

       “ஈவினிங் நாலுமணிக்கு போக வேண்டிய பர்சேஸ்க்கு உங்க தங்கச்சி  மார்னிங் பத்து மணியிலே இருந்து  எப்போ வருவீங்க எப்போ வருவீங்கன்னு கால் பண்ணி நச்சரிச்சா… அதான் லீவ் போட்டுட்டு வந்துட்டேன்…,” என நேரங்காலம் தெரியாது வழக்கம் போல அமைதியாய் இருந்த மனையாளை வம்புக்கிழுத்த ராகவன், அப்போது தான் வந்தவர் முகம் கவனிக்க, அது ஏதோ உணர்த்த, கேலியை நிறுத்தி என்னவென விசாரித்தார்.

     “பதட்டப்படாதீங்க தம்பி…. நம்ம காலனி  முதல் வீதியிலே   பாப்பா காலேஜ் பேக் மாதிரியே ஒன்னு அலங்கோலமா கெடக்குது…. அதான்  விசாரிச்சிட்டு போக வந்தேன்…” என வந்தவர்  முடிக்கும் முன்பே ராகவன் தனது இருசக்கரவாகனத்தை நெருங்கியிருந்தார்.

      வந்தவரும் தொற்றிக் கொள்ள, இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். புத்தகப்பை அருமைமகளுடையது தான் என  வாகனத்திலிருந்து இறங்கும் முன்பே   தெரிந்து கொண்டார் ராகவன். கலங்கிய  கண்களும் நீரை கொட்டிவிட்டன.

         அடித்து பிடித்து ஓடிச் சென்று சாலை ஓரத்திலிருந்த பையை எடுத்து வேகமாய் துடித்துக் கொண்டிருந்த இதயத்திற்கு ஆதரவாய்  நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். வந்தவர் தோள் தட்டி ஆறுதலுரைத்தது எதுவும் அவரது செவிகளை தாண்டவில்லை. 

        கண்களோ நாலாப்பக்கமும் சுழன்றன வேறு ஏதாவது மகளுடைய பொருட்கள் தென்படுகிறதா என.

         சாலை பள்ளத்தில் அவளது கைபேசி கிடக்க, ஓடிச் சென்று எடுத்து, உயிர்பித்து  ஆராய்ந்தார்.  இன்றைய நாள் மதியம் மனைவி விடுத்த அழைப்புகளின் எண்ணிக்கையை காட்டி சிரித்தது கைபேசி. ( அன்னைக்கு ஆனந்தஅதிர்ச்சி கொடுக்க நினைத்து மதியம் பயிற்சி இருப்பதாக  பொய்யுரைத்து  கிளம்பியவள் ஆபத்தில் மாட்டிக் கொண்டாள்.)
           
      அதற்குள் இல்லத்தில் இருக்க மனம் வராது   பதறியடித்து வித்யா ஓடி வந்திருந்தார். மாலைப் பொழுது என்பதால் ஒருசிலர் கோலம் போட,  நடைப்பயிற்சிக்கு என வெளியே வந்தவர்கள், ராகவன் வித்யா இருந்த கோலம் கண்டு அங்கு வந்து என்ன ஏதுவென விசாரித்தனர் தகவல் சொன்னவரிடம்.

         சாலை என்றும் பாராது மடங்கி அமர்ந்து கதறித் துடித்த வித்யாவை  சுற்றியிருந்த பெண்கள் தூக்கி நிறுத்தினர். ஒரு கட்டத்தில் அழுது பயனில்லை என்பதை உணர்ந்தவரோ  கணவனை தான் வெறித்து கொண்டிருந்தார். ஆளுக்கொரு யோசனையை சொன்னார்கள்.

       தன்னை பிடித்து கொண்டிருந்தவர்களை விலக்கி விட்டு கணவரிடம் வந்தார் வித்யா.

        “என்னங்க தடக்குது…. எங்கிட்டே எதே மறைக்கிறிங்க… சொல்லுங்க…,” என ஆவேசமாய் கேட்டும்  கண்ணீர் மட்டும் விடையாக கிடைத்தது.

       “நான் தான் நச்சல்கேஸ்… உங்க பொண்ணு எதையும் எங்கிட்டே சொல்ல மாட்டா… ஆனா உங்ககிட்டே… சொல்லுங்க…. எப்பவும் மான்சி சொல்றதே எங்கிட்டே சொல்லுற நீங்க ரீசண்ட் டேஸா எதுவும் சொல்லாம மறைக்கிறீங்க… சொல்லுங்க…,” என  வியர்வையில் நனைந்திருந்த அவரது சட்டையை பிடித்து உலுக்கினார்.

        “எதுவும் இல்லே மா…” என்றவருக்கு சிலநொடிகளுக்கு பிறகே மகள் சொன்னது நினைவு வந்து அப்படியும் இருக்குமோ என சந்தேகம் கொண்டார். மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா என வாதம் நடத்தி, இறுதியில் துணிந்து,

      “நம்ம பொண்ணு பின்னாடி யாரோ ஒருத்தன் லவ் பண்றதா சொல்லி டார்ச்சர்…” என முழுதாக முடிக்கும் முன்பே, வித்யா கணவரின் கன்னத்தில் பலமாய் அறைந்திருந்தார்.

        வீட்டிற்குள்  ஆயிரம் நடந்தாலும் துளியளவும் வீட்டுவிடயங்களை வெளியே கசிய விடாது குடும்பம்  நடத்தும் வித்யா தான் இன்று கணவனின் மரியாதை  பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை. தலை தூக்கி சுற்றி  நின்றிருந்தவர்களை பார்த்தார் ராகவன். கிஞ்சித்தும் அவமானமாக கருதவில்லை தந்தைமனம்.  அந்த நிலையிலும் மனைவியின் நிலையை  எண்ணியே  மருகியது  கணவனின் மனம்.

       “அவளே சமாளிச்சிக்குறதா சொன்னாஆஆஆ…,” என்ற சமாளிப்பும்  பாதியில் நின்றது மறுகன்னத்தில் மனைவியவள் விடுத்த அறையில். முந்தானையை  எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, ராகவன் கீழே போட்டிருந்த ஸ்கூட்டியை சிரமப்பட்டு தூக்கினார். உதவிக்கு வந்தவர்களையும்  வேண்டாமென தடுத்து மறுத்துவிட்டார் தாயவர்.

        வித்யா  வண்டியில் ஏறி அமர, அவரது பின்னால் தொங்கிய முகத்துடன் வந்தமர்ந்தார் ராகவன்.  அடுத்தநொடி  சாலை நோக்கி வாகனம் பறக்க, கூடியிருந்தவர்கள்  இருவர் மூவரென குழுக்களாக பிரிந்து  மான்சியை பற்றி பேசியவாறு கலைந்தனர்.

To be continue….

-Yazhini

9 thoughts on “மஞ்சணத்தி மலரே-1”

  1. Aarambamae bayangarama irukku enaku maansi ya thaandi avanga amma vidhya va tan pudichiruku…. Indha time la um bayapadama maansi ya theda kelambura thnichal super super❤️❤️….

    Super ah irukku sis…. Waiting for next ud….

  2. ஆரம்பமே.. அதிரடியாய் இருக்கு…
    Superb…..and interesting sis….😊👌🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *