Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

அத்தியாயம்-2

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சரவணன் தன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் பொழுது, அங்கே “இந்தா உன் அண்ணா வந்துட்டான் பாரு” என்ற பக்கத்து வீட்டு பெண்ணின் குரலில் பதற்றமிருந்தது.

அனிதா வேகமாக வந்து, “அம்மாவுக்கு மூஞ்சு திணறுது உடனடியாக ஆஸ்பிடல்ல கூட்டிட்டு போகணும்” என்றாள்.
 
அனிதாவிடம் காட்டுவதற்காக கையிலிருந்த பணத்தை நீட்டியவன், “நீ கேட்ட பேனா” என்ற வார்த்தையுடன் தங்கை பேசியதில் மீதி வார்த்தையை விழுங்கிவிட்டான்.

  அனிதாவுக்கு அப்படியிருந்தும் அண்ணன் சொல்ல வந்தது புரிந்தது. கையில் காட்சியளித்த பணத்தொகையில் ‘பேனா வாங்கலாமா?’ என்று கேட்க நினைத்தான்.

“ஆட்டோ வந்துடுச்சு.” என்று அண்ணனை உலுக்க, சரவணன் திரும்பி பார்த்தான்.
  பக்கத்து வீட்டு அண்ணன் தாமுவின் ஆட்டோ.
  உடனடியாக அழைத்து செல்ல, அன்னையை தூக்கினான்.‌ விமலாவின் உடல் தூக்கி போட்டு அச்சுறுத்த, சரவணனுக்கு உடல் நடுங்கியது.

  தற்போது தான் தந்தையை இழந்த காரணத்தால், இந்த அச்சம் ஒட்டுண்ணியாக ஒட்டியிருக்கலாம்.

   அரசு மருத்துவமனை வந்து ஆட்டோ நின்றதும், ஆட்டோவிற்கு பணத்தை நீட்ட, “இன்னா சரவணா.. துட்டெல்லாம் நீட்டற. நம்ம ஆட்டோ பிரசவத்துக்கு மட்டுமில்லை. நம்மள மாதிரி ஜனத்துக்கு அவசரம்னாலும் துட்டு வாங்கறதில்லை. போய் அம்மாவை கவனி.” என்று தட்டி கொடுத்து அனுப்ப, சரவணனுக்கு சூழ்நிலைகள் தன்னை மனதை இலகுவாக மாற்றுவதை உணர துவங்கினான்.‌
   “தேங்க்ஸ் அண்ணா” என்று கூறி கட்டிப்பிடித்து அன்னையை அழைத்து செல்ல, உடனடியாக மருத்துவமனையில் டாக்டர் பார்க்க, அவர்களோ இன்னமும் வரவில்லை. ஒரளவு டாக்டர் வரும் நேரமே.

  நர்ஸ் தான் என்ன ஏதென்று விமலாவை ஆராயத்துவங்கினார்.

  “இந்தம்மாவுக்கு இங்க ஆஸ்பத்திரி கார்ட் இருக்கா?” என்று கேட்டதும், அனிதாவோ “இருக்குக்கா இதுக்கு முன்ன போட்டிருக்கோம்” என்று எடுத்துக்காட்ட, ‘கார்ட் எதுவும் இல்லையென்று சரவணன் கூற வந்து அமைதியானான்.
அன்னைக்கு எந்தனை நாள் இந்த பிரச்சனையோ? அனிதாவிற்கு தெரிகின்றது. தனக்கு தெரியவில்லை என்ற வருத்தத்துடன் நின்றான்.

  அதற்குள் டாக்டர் வரவும் முதல் பேஷண்டாக விமலாவை ஆராய்ந்து மருந்து மாத்திரை என்று தரவும் சரவணனுக்கு அச்சத்தில் வியர்த்தது.

  மாலை வரை இருந்துவிட்டு போக கூறவும் அனிதாவோ “நான் ஆல்ரெடி ஸ்கூலுக்கு லீவு போட்டாச்சு. நான் பார்த்துக்கறேன் அண்ணா. நீ வேலைக்கு போ” என்றாள் அனிதா.

சரவணனுக்கு அன்னை உடல்நிலை பரவாயில்லை என்றதும், நிம்மதியானான்.
தங்கை கூடவேயிருக்க செல்லலாமா வேண்டாமா என்று யோசித்தான்.
  இது யோசிக்க வேண்டிய நேரமா? கையில் இருப்பது 200 ரூபாய். சரவணன் மதியத்திற்கு மேலாக தினகூலி வேலைக்கு செல்கின்றான். வேலைக்கு போனால் தான் காசு.
 
  அன்னையிடம் அதனால் சொல்லிவிட்டு கிளம்ப பார்த்தான்.

  “அண்ணா.. காசு இருக்கா? மதியம் இங்கயே சாப்பாடு வாங்கிடுவேன். முப்பது ரூபா தானாம். அம்மாவுக்கும் எனக்கும் வாங்கணும். வர்ற அவசரத்துல உண்டியல்ல காசு கூட எடுக்கலை.” என்றாள்.

  சரவணன் தன் சட்டை பையிலிருந்து, காலையில் அந்த கார்காரன் தந்த பணத்தை எடுத்தவன், “உன் பரீட்சை வர்றதுக்குள்ள நீ கேட்ட பேனா வாங்கணும்னு ஒவ்வொரு முறையும் நினைக்கறேன். ஆனா ஒவ்வொரு முறையும் காசு செலவாகுது. பரவாயில்லை… முதல்ல வாயுக்கும் வயுத்துக்கும் பார்ப்போம். எப்படியும் உன் பரீட்சை வர்றதுக்குள்ள வாங்கிடுவேன்.” என்று நூறு ரூபாய் தாளை நீட்டினான்.

” அண்ணா… எனக்கு அந்த பேனா எல்லாம் வேண்டாம். பொழப்பை பாரு.” என்றாள் அனிதா.

  “இல்லை அனிதா… அவனவன் குடும்பத்துக்காக பெரிய பெரிய கனவெல்லாம் கண்டு, வீட்டுக்காக உழைக்கறான். நான் எல்லாம் இப்ப தான் குடும்பம் என்று இருப்பதையே திரும்பி பார்த்திருக்கேன். நான் மட்டும் கொஞ்சம் முன்னாடி பொறுப்பா இருந்திருந்தா அப்பா நம்மளை விட்டு போயிருக்க மாட்டார். நம்மளுக்கு இந்த நிலைமையும் இருந்திருக்காது.
   இப்ப நம்ம அம்மாவையும் நான் அம்போனு விடமாட்டேன். உன்னை காலேஜி படிக்க வைக்கணும். முதல்ல அதுக்கு அந்த 150 ரூவா பேனாவை வாங்கணும். உன்னை படிக்க வச்சி ஆளாக்கினா கூட எனக்கு போதும். அப்பாவுக்கு நான் செய்யற கடமை. இல்லைனு வையு. அந்த கொள்ளி போட்டதுக்கு அர்த்தமேயில்லை. என்ன அம்மா தான் என்னை இன்னமும் நம்ப மாட்டேங்குது. பேச மாட்டேங்குது. அம்மாவை நல்லா பார்த்துக்கோ.” என்று காசை கொடுத்துவிட்டு சென்றான்.

   விமலாவோ அயர்சியில் இருந்தாலும் மகன் பேசுவதை கேட்க நேர்ந்தது.
சரவணன் முன்பு இத்தனை பொறுப்பாக இருந்தாலும் தாலி பாக்கியம் அவ்வளவு தான்‌. தன்னை நம்பி பிறந்த மகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும். சரவணனுக்கு பொறுப்பான பொண்ணை கட்டிவைக்க வேண்டும் இது தான் பேராசை கொண்ட தாயுள்ளத்தின் எண்ணம் அந்த நிலையிலும் உதித்தது.

   அனிதா நூறு ரூவாயை அன்னையின் சுருக்கு பையில் திணித்து கொண்டாள்.


இடம்:  காபி கஃபே
நேரம்: பொழுது சாய்ந்த வேளை

எதிரே இருந்த அழகிய இளைஞன் பிரஷாந்தை, வெட்கத்துடன் ஏறிட்டாள் பாரதி.

  பிரஷாந்த் தொண்டையை செருமி, “சோ.. பைனலி தனியா மீட் பண்ணியாச்சு. எங்க வீட்ல அன்னைக்கு குடும்பமா வந்து பொண்ணு பார்த்துட்டு வீட்டுக்கு வந்து, உன்னை ரொம்ப புகழ்ந்தாங்க. அன்னைக்கு வரமுடியலை. அதோட எனக்கு இந்த கூட்டத்தில் உன்னை பார்க்கறதுல விருப்பமில்லை. அதனால் தான் தனியா மீட் பண்ண கேட்டது.
  வெல்… வீட்ல ஏதாவது கேள்வி கேட்டாங்களா? இப்படி பேசணும், அப்படி நடந்துக்கோனு அட்வைஸ் செய்து அனுப்பினாங்களா?” என்று கேட்டதற்கு முத்துபல்வரிசை தெரிய “கொஞ்சமா அட்வைஸ் நடந்தது.” என்று மறைக்காமல் கூறினாள்.

  “ம்ம்ம்.‌.. நிஜமா அன்னைக்கு வேண்டுமின்னு  வரக்கூடாதுனு இல்லை. அன்னைக்கு பார்த்து நிறைய கமீட்மெண்ட். முதல்ல சொல்லியிருந்தாலாவது பொண்ணு பார்க்க பர்மிஷன் தந்திருப்பாங்க. நான் தான் மேலிடத்தில் யாரிடமும் சொல்லலை. அதான் பிராப்ளமே. மாப்பிள்ளைக்கு கல்யாணத்துல இஸ்டமில்லைன்னு இரண்டு மூன்று தடவை மாத்தி மாத்தி வேற விதமா உங்க வீட்ல கேட்டதா, அம்மா ரொம்ப பீல் பண்ணினாங்க. அதான் அப்படின்னா நேர்ல மீட் பண்ணி பொண்ணுக்கூட பேசறேன்னு குண்டை தூக்கி போட்டேன்.

  ரியலி இப்படி தனியா மீட் பண்ணவும் சந்தோஷமா இருக்கு. ஒரு வித்தியாசமான மெம்மரிஸா நம்ம மேரேஜ் லைஃப்ல இருக்கும் இல்லையா?” என்றதும் அவனுக்கு தன்னை பிடித்திருப்பதை ‘நம்ம மேரேஜ் லைஃப்’ என்ற வார்த்தையால் அறிந்தவளுக்கு தலையாட்டி புன்னகையை மறைத்தாள்.

  “அழகா சிரிக்கற பாரதி. ஒரே.. ஒரு செல்ஃபி எடுத்துப்போமா? முதல் மீட்டிங் என்பதால்… ஆப்டர் சம்டேஸ் கழிச்சு பார்த்தா நல்லாயிருக்கும்.” என்றதும் சம்மதமாய் தலையாட்டினாள்.

   பிரஷாந்த் பாரதி பக்கமாய் வந்து நின்று தங்கள் அமர்ந்திருந்த இடத்தை கவர் செய்தவாறு ஒரு செல்ஃபி எடுத்தான்.‌

  “ஸ்டேடஸ் போட்டு இன்னிக்கே பிடிச்சிருப்பதை வெளிப்படுத்த கை பரபரனு இருக்கு. ஆனா அம்மா திட்டுவாங்க. அதோட இது நாம சேர்ந்து எடுத்த முதல் பிக். மத்தவங்க பார்க்க வைக்க மாட்டேன். சம்திங் ஸ்பெஷல்.” என்று கவிதையாக பேசியவனை கண்டு வெட்கமும் திருமண ஆசையும் பாரதிக்கு அதிகமானது.

   “பாரதி.. உனக்கு கவிதை எழுத தெரியுமா?” என்று கேட்க, இல்லை என்று அவசரமாய் மறுத்தாள்.

  “பச்.. கண்களே கதை பேசுது. யாராவது கேட்டிருக்கணுமே. உன் பெயருக்கு கவிதை எழுத வருமானு ” என்று பேசியவனிடம், “பாரதி அப்பா அம்மா ஜாதகத்துல வர்ற எழுத்தால வச்சாங்க. மத்தபடி கவிதை கதையெல்லாம் எழுத வராது. ஏன்… புக் படிக்கற பழக்கம் கூட எனக்கில்லை.” என்றாள்.

  “அட பாரதின்னு வச்சிட்டு இப்படி பேசற. எனிவே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கூறி மணக்க ஆர்வமாய் இருப்பதையும் மனதார தெரிவித்தான். அவளுமே மலர்ந்த முகமாய் ஆமோதிப்பாய் அடக்கமாய் நின்று கேட்டுக்கொண்டாள்.
  
  நேரம் நகரவும், பாரதியின் தாய் மணிமேகலை அழைத்துவிட்டு, பிரஷாந்தை சந்தித்து பேசினியா?  கிளம்பிட்டியா? என்று கேட்டு அதட்ட, நேரம் அதிகமாவதை தெரிவித்து “குயிக்கா வந்துடறேன் மா” என்று கூறி அணைத்தாள்.
 
  “வீட்லயிருந்து அம்மா கால் பண்ணறாங்க. கல்யாணத்துக்கு முன்ன இப்படி சந்திப்பதால் கொஞ்சம் பயப்படறாங்க.” என்று கூற, பிரஷாந்தோ “சாரி பாரதி.. ஆபிஸ் முடிந்து சந்திக்கலாம்னு வரச்சொன்னேன். லேட்டு தான். நீ கிளம்பு. இனி சாட் பண்ணி நிறைய பேசலாம்” என்று வாக்கு தந்து பில் பே செய்துவிட்டு எழுந்தான். அவள் எண் தான் அவனுக்கு தெரிந்து விட்டதே‌!

  இருவேறு பக்கமாய் சாலை வந்ததும் பிரஷாந்த் பைக்கில் வேறு திசையில் செல்ல, பாரதியும் மெட்ரோ ரயிலில் ஏற நடந்தாள்.
    பாரதி மெட்ரோ ரயிலில் ஏறியபின்னும், பிரஷாந்த் பேசியதை தன்னை ஆராய்ந்து ரசித்ததை எண்ணி கன்னங்கள் சிவக்க தனியாக சிரித்தாள்.

  வீட்டில் நேற்றே பொண்ணு பிடித்ததை பிரஷாந்த் தாய் தந்தையர் தெரிவித்தாயிற்று. மூன்று மாதத்தில் நேராக திருமணம் வைக்கலாமென்ற வரை பேச்சு சென்றது.
  பிரஷாந்த் பேசவும் பழகவும் நல்லவிதமாக தோன்ற, அதை போனில் அன்னையிடம் தெரிவித்தபடி, மெட்ரோவிலிருந்து இறங்கி நடந்தாள்.
  
    என்ன தான் மெட்ரோ வந்துவிட்டாலும், பாரதி வீட்டுக்கு சற்று நடந்து செல்ல வேண்டிய தூரம் உண்டு.
  நடந்துக்கொண்டே சென்றிடும் வேகத்தில் தன் பின்னால் வந்தவனை மறந்து தொலைத்தாள்.

  திடுகிட்டு பாரதி முன்னால் வந்தவன், “என்ன பாரதி… நீ ஸ்கூல் படிக்கறதுலயிருந்து உன் பின்னால வர்றேன். என்னை கண்டுக்காம, நேத்து பொண்ணு பார்த்துட்டு போனவனை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டியாமே. என்ன எதுக்கு வேண்டாம்னு சொன்ன?” என்று ரஞ்சித் வந்து வழிமறைத்தான்.

ரஞ்சித் பாரதியின் பள்ளிக் காலத்திலிருந்து காதலிப்பதாக கூறி பின்னால் அலைபவன்.

   அவள் முன்பிலிருந்தே மறுத்து கூறிவிட்டாள். ஆனால் பின்னால் தொடர்வதை நிறுத்தவில்லை அவன்.
   பாரதியை பொறுத்தவரை தன்னை பெற்றவருக்கு தான் யாரோடு வாழ வேண்டுமென்ற ஆசை இருக்க, அவர் விருப்பத்தை பூர்த்தி செய்ய நினைப்பவள்.
   காதல் என்று வந்த ரஞ்சித்தை உதாசினப்படுத்தி விட்டாள். எப்பொழுதும், பாரதி கடந்து சொல்லும் பொழுது பின்னால் வந்து பாடிகார்ட் வேலையை தவறாமல் செய்வான். ஒருமுறை சொல்லிவிட்டு அலுத்துக் கொண்டாள். வீட்டில் தெரியப்படுத்தினால் கூடுதல் தலைவலி, அதோடு நின்று நிதானமாக ரஞ்சித்தும் இன்று போல பேசியதெல்லாம் கிடையாது. அதனால் அது சைட் அடிக்கின்றான் என்ற வகையில் எடுத்துக் கொண்டாள்.

  “இங்கபாரு… நான் உன்னை விரும்பவேயில்லை. தேவையில்லாம என் பின்னால் அலைந்தது நீ தான். ஒரு பொண்ணு அவ அப்பா அம்மா பார்க்கறவனை தான் கல்யாணம் செய்வா. நான் அப்படிப்பட்டவ. லூசு மாதிரி பின்னால் வந்து, இப்ப வழிமறைக்கற. நகர்ந்து போ.” என்று முகம் சுளித்தாள்.

  ரஞ்சித்தோ, “ஓஹோ அம்மா அப்பா பார்க்கறவனை தான் கல்யாணம் செய்வியா? உன்னை கற்பழிச்சாலும் இதே பல்லவி பாடுவியா? இல்லை என்னையே கல்யாணம் செய்துக்கோனு என் கால்ல விழுவியா பார்த்துடறேன்” என்று குண்டுகட்டாக அவளை அள்ளிக்கொண்டான்.

  நொடியில் தன் வாயை பொத்தி தூக்கியவனை, அடிக்கும் முன் மயக்கமாக, ரஞ்சித் தோளிலேயே கைப்பையை இறுக பிடித்து போனை தவறவிட்டு சரிந்தாள்.

  அவசர அவசரமாக அவன் வந்த காரில், அவளை போட்டுவிட்டு, காரை எடுத்தான் ரஞ்சித்.

-தொடரும்.
_பிரவீணா தங்கராஜ்.
  

5 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 2)

    அச்சோ…! தங்கச்சியோட பார்கர் பென்னுக்காக சேர்த்த காசு,
    ம்.. கடைசியில அம்மாவோட உடல் நிலைக்குத்தான் செலவழிக்கணும் போல.
    ஆனாலும், இந்த கீழ்த்தர மக்களோட சின்ன சின்ன ஆசைகள், கனவுகள் நிறைவேத்திக்க கூட பெரும்பாடு தான் பட வேண்டியதாயிருக்கு.

    அட.. ப்ரஷாந்த் & பாரதி..பேர் பொருத்தமே அழகா இருக்குதே.

    அய்யய்யோ ! நடுவில ரஞ்சித் யாரு ? அப்படின்னா பாரதியோட கதை அவ்வளவு தானா ? இல்லை சரவணன் வந்து காப்பாத்திடுவானா..?
    ச்சே… எப்படியிருந்தாலும் இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு சேப்டியே இல்லப்பா.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    ivanungale papanga pinnala varuvanga love panren solvanga udane nama pidichi iruku sollidanum pidikala sollita ipadi ethathu paniuvanga epo than ponnunga nimmathiya iruka viduvanglo therila

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *