Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

அத்தியாயம்-24

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     “வாம்மா… சரவணா.. பாரதிடா” என்று விமலா கூற, அவனோ ‘நீயும் நானும் பேசியதை எல்லாம் கேட்டு நிற்கறா. இந்த அனிதாவாவது சொல்லக்கூடாது’ என்று பாரதியை பார்த்தான்.
  பாரதியை விட பாரதியின் அன்னை மணிமேகலை வேறு வந்திருக்க, அவர்களோ அதிர்ச்சியில் நின்றியிருந்தனர்.

“என்ன ஆன்ட்டி… ஏதோ சத்தமா இருக்கு. வெளியே ஸ்பீக்கர் இல்லைன்னா நீங்க பேசியது அப்படியே கேட்கும். என்ன பேசிட்டு இருந்திங்க” என்று பழத்தை தந்தாள்.
அவள் சமாளிப்பாக பேச, சரவணனோ ‘சாமர்த்தியசாலி தான்’ என்று நினைத்தான்.

“ஒன்னுமில்லைடா.. இன்னா குழம்பு வைக்கனு கேட்டேன். உட்காரு” என்று கவலையாக உரைத்தார்.
  மகன் தான் பாரதியை காதலிக்கவில்லையே. நட்பு ரீதியாக பணம் தந்ததாக அல்லவா கூறிவிட்டான்.
  அதற்காக வரவேற்காமல் இருக்க முடியுமா. பாரதி தந்த பணம் என்ன நூறு ரூபாயா?

  “இவங்க யாரு?” என்று மணிமேகலையை கேட்க, “அம்மா ஆன்ட்டி. இந்த பக்கமா வந்தோம். அப்படியே உங்க வீட்டை பார்க்கலையில்லையா. அதான்… உங்களை சந்திச்சு பேசிட்டு போகலாம்னு அம்மாவையும் கூட்டிட்டு வந்தேன். அம்மா… சரவணனோட அம்மா தங்கச்சி.” என்று அறிமுகப்டுத்த மணிமேகலை தட்டுதடுமாறி தன்னை சமாளித்து புன்னதைத்தார்.
  “ஹேய் அனிதா படிப்பு எப்படி போகுது? இப்ப மிட்டர்ம் டெஸ்ட் வந்திருக்குமே? எப்படி செய்த?” என்று கேட்க, ‘நான் நல்லா செய்யறேன இல்லையோ, இந்தக்கா அம்மா அண்ணா பேசியதை கேட்டு எப்படி ஆக்ட் கொடுக்கு’ என்று பார்வையிட, “என்னாச்சு?” என்று பாரதி கேட்க “டெஸ்ட்ல எல்லாம ஏழாவது ரேங்க் அக்கா” என்றாள். 

  “ஏன் மோசமா படிக்கற. லாஸ்ட் டைம் ஐந்தாவது ரேங்க்ல? நீ இப்ப மூனாவது வந்திருப்பனு நினைச்சேன்” என்று சீரியஸாக கேட்டாள்.
   “இல்லைக்கா… மார்க் பத்து பதினைந்து வித்தியாசத்துல தான் பின்னால வந்துயிருக்கேன்.” என்றாள்.

  “ஓ… இந்தா.. இது உனக்கு” என்று நீட்ட, புதுதுணி இருந்தது.

அனிதா எதற்கென்று பார்வையிட, “நாளை மறுநாள் உனக்கு பெர்த்டேல. இந்தக்காவோட சின்ன கிஃப்ட்” என்றாள். முன்பு அனிதாவோடு இருந்த பொழுது பேசிய நாட்களில் அனிதா உரைத்தது. நினைவில் வைத்து துணி வாங்கி வந்திருக்க, அனிதாவுக்குள் கண்ணீர் எட்டி பார்த்தது.

   தன்னை தன் வீட்டை நல்லவிதமாக பார்த்துக்கொள்ளும் அண்ணியை யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் பாரதி தன் அண்ணனை காதலிக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில் இந்த அன்பு எப்படி எடுத்துக்கொள்ள?

   பாரதியோ, “வாங்கிக்கோ.. உன் பெர்த்டே அப்ப தரணும்னு இருந்தேன். ஆனா அப்ப ஒர்க் அதிகமா இருக்கும். வரமுடியுமோ இல்லையோ. இப்பவே தந்துட்டா ஆல்டர் பண்ணி போடுவ.” என்றதும் அனிதா பாரதியை கட்டிப்பிடித்தாள்.
பாரதி அனிதாவை தட்டிக் கொடுத்து, அதற்குள் சரவணன் சுதாரித்து டீ போட சொல்ல தண்ணி தந்து நீட்டினான்.

மணிமேகலை இரண்டு மடக்கு தொண்டையில் நனைத்து வீட்டை அளவிட்டார்.  

  நடுத்தர வர்க்கத்தின் வீடு எப்படி இருக்குமோ அத்தனை விஷயமும் இருந்தது. இதில் விமலா வேறு சண்டைக்கு தயாராக செல்வது போல சேலையை தூக்கி சொருகி, பாத்திரம் விளக்கும் தோரணையில் இருக்க, மணிமேகலை பார்க்கவும் சேலையை இறக்கி விட்டு அசட்டுதனமாய் சிரித்தார்.

   சரவணன் டீ போட்டு வந்து நீட்ட, மணிமேகலை கடமைக்கு சிரித்து எடுத்து கொண்டார்.

   மணிமேகலை சாதாரணமாக ஏதாவது பேசியிருப்பார். ஆனால் மகளையும் சரவணனையும் பற்றி கேட்டதும் பேச்சுவரவில்லை.

  விமலாவுக்குமே மகன் காதலிக்கவில்லை என்று விவாதம் செய்திருக்க, என்னவென்று பேசுவார். ஆனால் பணம் தந்தவள் பாரதி தானே. அதனால் “இந்த மாற்றம் எல்லாமே நீ தந்த பணம் தான். நீ கிட்டதட்ட என் குலசாமி மாதிரி” என்று கையை பிடித்து நா தழுதழுக்க உரைத்ததும் மணிமேகலைக்கு மகள் ஏதோ பணம் தந்து உதவியதாக புரிந்துவிட்டது.

“ஆன்ட்டி… ஒவ்வொருத்தருக்கு யாராவது ஒருத்தர் கடவுளா முன்ன வந்து நிற்பாங்க. அதெல்லாம் முருகனோட திருவிளையாடல்.” என்றாள்.

சரவணனுக்கோ ‘இவ இதுக்கு முன்ன முருகன்னு… கடவுள்னு.. ஏதோ… என்னை சொன்னாளே.’ என்று யோசித்தான். அவன் அறிவுக்கு சிலது மறந்து போயிருந்தது. ஆனால் இரண்டாவது முறை பாரதியை ரோட்டில் நடந்து சென்ற நாளில் தன்னை வைத்து தன் பெயரை வைத்து ஏதோ முருகன் என்று உரைத்தது நினைவு வர, அசட்டையாய் அவளை காண, அவளோ இவ்வளவு நேரம் அவனை கண்டு சுவாதீனமாக பார்வையை மாற்றினாள்.

  “ஆன்ட்டி… அனிதாவுக்கு டிரஸ் எடுக்க போகும் போது, அப்படியே அம்மாவுக்கும் சேலை எடுத்தேன். ஆஃபர் போட்டிருந்தாங்க. கெட் ஒன் பை ஒன். நான் சேரி கட்டறதில்லை. பட் இது உங்களுக்கு நல்லாயிருக்கும்னு நினைச்சேன்” என்று நீட்டினாள்.

“எனக்கு எதுக்கும்மா இதெல்லாம்” என்று மறுக்க, “இல்லைங்க… இந்த கலர் என்னிடம் இருக்கு. அங்க இருந்ததில் இந்த சேலை நல்லாயிருந்தது. பாரதி இதையே எடுத்துட்டா” என்று மணிமேகலை கூறவும், வாங்கிக் கொண்டார்.

விமலாவுக்கு யாராவது கொடுத்தால் வாங்க மறுத்து பழக்கமில்லை. எப்பொழுதும் யாராவது தந்துவிட்டால் கைநீட்டி மறுக்காமல் வாங்கி பழகியவர் என்பதால் வேறு எதையும் யோசிக்கவில்லை.

  சரவணன் கூட பாரதி செய்கைக்கு எந்த விளக்கமும் அறியாது நின்றான். ஏதாவது கேட்டால் நீ செய்த உதவியை விடவா? என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

“பாரதி… சாப்பாடு அடுப்புல வச்சிட்டு வர்றேன். சாப்பிட்டு தான் போகணும்” என்று விமலா எழவும், “பாரதி வீட்ல சாதம் ஆக்கிட்டேன். வேண்டாம்னு சொல்லுடி” என்றார் மணிமேகலை‌.

  பாரதியும் “ஆன்ட்டி அம்மா வீட்ல சமைச்சிட்டாங்க. நான் இன்னொர் நாள் வந்து சாப்பிடறேன். இப்ப கிளம்பறேன் ஆன்ட்டி” என்று கூறவும் விமலா சரவணனை ஏறிட அவனோ அதே மௌனத்தில் ஆழ்ந்தவனாக நின்றான்.

“அனிதா… நல்லா படி… ஆஹ்… நல்ல மார்க் வாங்கினா என் சார்புல ஒரு பரிசு வரும்.” என்றவள் சரவணனை கண்டு “வர்றேன் சரவணன். வர்றேன் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
 
  மணிமேகலையும் வணக்கம் வைத்து மகளுடன் நடையிட்டார்.
 
  வீட்டுக்கு செல்லும் வழியில் மணிமேகலை ஏதேதோ யோசித்திருக்க, பாரதியும் சிந்தித்தபடி வந்தாள்.
 
  சரவணனும் எந்த சலமுமின்றி வேலைக்கு வெளியேறியிருந்தான்.‌

  வீட்டுக்கு வந்த மணிமேகலை அடுப்பில் அரிசி கழுவி அடுப்பில் வைக்க, “ஏம்மா.. அங்க சமைச்சிட்டனு சொன்ன?” என்று பாரதி கேட்கவும், “பின்ன என்ன சொல்லறது. அங்க எல்லாம் எப்படி சாப்பிட?” என்று கேட்டதும் பாரதிக்கு சுருக்கென்றது.

“நான் அவங்க கொடுத்ததை எல்லாம் சாப்பிட்டு இருக்கேன்மா.” என்றாள்.

“தெரியுது.. அதுக்கு தான்.. அந்தம்மா அவங்க பையனோட உன்னை சம்மந்தப்படுத்தி பேசறாங்களே.” என்று கோபமாய் உரைத்தார்.

“அவங்க அம்மா பேசியதை கேட்டிங்களே… அதுக்கு பதிலா அவர் காதலிக்கலைன்னு சொன்னாரே அது கேட்கலையா?” என்று கூறவும், “நீ எதுக்குடி அந்த பையனுக்கு பணத்தை கொடுத்த? எவ்ளோ பணத்தை தந்து ஏமாந்து நிற்கற? ஏன் திருப்பி கேட்க மாட்டேனு அந்த பையன் சொல்லணும். முதல்ல அதுக்கு பதில் சொல்லு.” என்று அடுப்பை பற்ற வைத்து கேட்டார்.

பாரதி அமைதியாக நின்றவள், “என்னை குப்பைத்தொட்டில ரஞ்சித் போட்டான்னு சொன்னேன்ல… அப்ப என்னை அங்க முதல்ல பார்த்து என்னை உடனடியா ஹாஸ்பிடல்ல சேர்த்தது சரவணன் தான்.
  நீங்க அப்ப அவனை கவனிச்சிருக்க மாட்டிங்க.
  நான் இரண்டாவதா வீட்டை விட்டு வெளியே நடந்து போனப்ப, ரோட்ல என்னை மறந்து நான் என்ன பண்ணனு நடந்துட்டு இருந்தப்ப, அவன் வண்டில இடிக்க போய் தான் சரவணனை மறுபடியும் பார்த்தேன்.‌

நான் தங்கியிருந்தேன்ல, ஒரு ஏரியாவுல… அந்த வீடு பார்த்து கொடுத்து உதவியதும், பக்கத்து வீட்ல இருந்ததும் சரவணன் தான்.” என்றவள் சரவணனின், அனிதா, விமலா, ஆனந்தராஜ், கமலக்கா என்று வரிசையாக அவர்களிடம் பழகிய அனுபவத்தை சூழ்நிலையை விவரித்தாள்.
  “ரஞ்சித் கூட அவனா உங்களை பார்க்க வந்தான்னு நினைக்கறிங்களா. இல்லை… அவனை அவன் வீட்ல போய் திட்டிட்டு வந்தேன்” என்று அன்று நடந்த நிகழ்வையும் விவரித்தாள்.

மணிமேகலைக்கு மகள் கூறியதில் ஒன்று மட்டும் விளங்கியது.
சரவணன் இக்கட்டான சூழ்நிலையில் துணை நின்றுயிருக்கின்றான். அதோடு மகளே சில சூழ்நிலைகளில் அவனிடம் உதவி கேட்டு நின்றுயிருக்கின்றாள்.
   இந்த இரண்டு காரணத்தினால் தான் சரவணனுக்கு பணத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எவ்வளவு தந்தாளோ? அதை இந்நேரம் கேட்பது அநாகரிகமான செயல் என்று மட்டும் புரிய, அவனை காதலிக்கின்றாயா என்று அந்த கேள்வியை கேட்க முடியவில்லை.
  ஏற்கனவே பிரஷாந்த் ரஞ்சித் என்று கேட்டு பாரதி மனதை நோடித்தது போதும். இந்த உதவி செய்த பையனையும் இணைத்து கேட்டு காயப்படுத்த வேண்டாம் என்று எண்ணினார்.
  பாரதிக்கும் அன்னை அடுத்து இந்த கேள்வியை கேட்காமல் தவிர்த்தால் நல்லதென்று நினைத்தாள்.
   குக்கர் சப்தமிட, “தட்டு தண்ணி எடுத்து வை. குழம்பு காலையில் வச்சது இருக்கு சாப்பிடுவோம். அப்பறம் உங்கப்பாவிடம் இதை பத்தி நான் பேசப்போறதில்லை. நீயும் தவிர்த்திடு. தேவையில்லா அவரை குழப்பி, மறுபடியும் கல்யாணம்னு பேச்சு வந்துடும். உன்னை மனவுளைச்சலுக்கு மீண்டும் தள்ள நான் விரும்பலை.” என்றார்.

மகளை ஓரளவு புரிந்துக்கொண்ட தாயாக.
   பாரதி அன்னையை கட்டிக்கொண்டு, “தேங்க்யூ மா” என்றாள்.
  
  அதன்பின் காலம் வெகு வேகமாக ஓடியது. பாரதி, மணிமேகலை, சௌந்திரராஜன் என்று பழைய மனநிலையில் வீடு நிம்மதியடைந்தது. சிலர் மட்டும் பொண்ணு பார்க்க வந்துவிட்டு நின்றதால் மீண்டும் ஏதேனும் வரன் அமையவில்லையா? ஏன் பொண்ணு பார்த்து சென்றது நின்றது என்று கேள்வி எழுப்பினார்கள்.
   “எங்கப்பக்கம் ஜோசியர் அந்த வரன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.” என்று முடித்து கொண்டார். பிரஷாந்த் பாரதியை பற்றி வெளியே பரப்பிவிடவில்லை. அந்தளவு அவன் மனம் நல்லவனாக நடந்துக் கொண்டான்.
  பாரதி மணக்க ஒப்புதல் அளித்தால் நிச்சயம் அவன் மணந்திருப்பான். ஏன் அவளை காயப்படுத்தாமல் வாழவும் செய்வான். ஆனால் பாரதிக்கு தான் ஏதோ தடுமாற்றம். பிரஷாந்தை மணந்தால் தனக்கு தான் மறக்க நினைத்தவை காலம் முழுக்க தோன்றும். அதோடு பிரஷாந்த் தியாகத்தை நினைவில் வைத்து, இவளது இயல்பை தொலைக்க நேரும் என்ற காரணம்.

ரஞ்சித்தை அவள் மறந்தே போனாள். அவனுமே அவளை கண்டு அவளது பழைய போன் முதல் கொண்டு தந்துவிட்டு சென்றான்.‌ அந்த போனில் தான் அரை போதையில் அவளுடன் இருந்ததை எடுத்து தொலைத்து அழித்து சுத்தமாக தந்திருந்தான்.

  அதன்பின் ஒருமுறை அவனை எதர்ச்சயமாக பணியிடத்தில் சாப்பிட சென்ற ஹோட்டலில் கூட பார்த்தாள். அவனாக வந்து பேசினான். அப்பொழுது கூட மன்னிப்பை கேட்டு நின்றான்.
பாரதி “மன்னிப்பா… அது உனக்கு இல்லை. சட்டத்து மூலமா உனக்கான தண்டனை கொடுக்க முடியலையேனு நான் இப்பவும் பீல் பண்ணறேன் ரஞ்சித்.” என்று அவனை கடந்து வந்தாள்.

  ரஞ்சித்திற்கு அம்மா ஒரு பக்கம் முகம் திருப்பி கொண்டு தன்னிடம் பழகுகின்றார். தங்கையோ தன்னிடம் பழகுவதேயில்லை. முன்பு எல்லாம் தன் அறையில் படம் பார்த்து தன் கணிப்பொறியில் விளையாடி, தனக்கு அதுவேண்டும் இது வேண்டுமென சண்டையிட்டு பணத்தை கரைப்பாள். இவனது போனை எடுத்து அமேசானில் ஆன்லைன் ஷாப்பிங் செய்து குறும்பு செய்தாள். இன்று எதிரே சென்றால் கதவை அடைத்து கொள்கின்றாள். ஏதேனும் பிறந்த நாள் பரிசு என்று நீட்டினாலும் கூட வாங்கவில்லை. இவன் அறைக்கு சரவணன் பாரதி பேசி சென்ற பிறகு வரவேயில்லை. அதெல்லாம் மனதை வதைத்தது.

   போதாத குறைக்கு அவள் தோழிகள் வீட்டுக்கு வருவார்கள் போவார்கள். இவன் எதிரே அவன் அன்னை “உன் பிரெண்ட்ஸ்ங்க வரலை” என்று கேட்க, “இல்லைம்மா.. இங்க வரவேண்டாம்னு சொல்லிட்டேன். அவங்களிடம் அண்ணா ஏதாவது தப்பா நடந்தா அப்பறம் என் பெயர் கெட்டுடும்” என்று இவன் இருக்கும் பொழுது கூறிட, ரஞ்சித் துடித்து போனான்.
 
   மனகட்டுப்பாடின்றி சுய ஒழுக்கத்தை பேணாதவனுக்கு  அவன் தவறு அடிக்கடி சுட்டிக்காட்டும் விதமாக தான் சுவாஸ்திகாவின் சாட்டை அடி பேச்சால் கிடைத்தது.


   இங்கு நம் சரவணன் தங்கை அனிதாவின் முன் நின்று வழிமறைத்தான். “எக்ஸாம்கு போகணும் அண்ண. வழியை விடு” என்று பறந்தவளிடம் அந்த பரிசை நீட்டினான்.

  “என்னது.?” என்று கேட்க, “பிரிச்சு பாரு” என்றான்.

தன் பிறந்த நாளிற்கு கூட பரிசை தராத அண்ணன், பரீட்சை எழுத போகும் சமயம் வழிமறைத்து பரிசை தர, நேரத்தை பார்த்து அவசரமாய் பிரித்தாள்.

அதில் பார்க்கர் பேனா தங்க முலாம் பூசிய வண்ணத்தில் மிளிர்ந்தது.

  “அண்ணா… மறுபடியும் பார்க்கர் பேனாவா? முன்னவே தந்தியே. ஓ… ரீபிள் காலி ஆகி நான் அதுல சாதா ரீபிள் போட்டதால வாங்கினியா?” என்று கேட்க மறுத்தான்.

  “முன்ன கொடுத்த பார்க்கர் பேனா நான் வாங்கியதில்லை. அது பாரதியோடையது. இது தான் உங்கண்ணா சம்பாரிச்சு அவனா வாங்கியது” என்று கொடுத்தான்.

ஏற்கனவே இந்த சந்தேகம் அனிதாவுக்கு இருக்க, அதனால் அண்ணன் சொன்ன உண்மை புரிய “நினைச்சேன்” என்று வாங்கிக் கொண்டாள்.

  “தேங்க்ஸ் அண்ணா… நிச்சயம்.. உனக்காகவாது, பாரதி அக்காவுக்காகவும் நம்ம அம்மாவுக்காகவும் நல்ல மார்க் எடுப்பேன். இது முழு ஆண்டுக்கு முந்திய பரீட்சை. இதுல வர்ற மார்க்கை வச்சே முழு ஆண்டுல எந்தளவு வரும்னு என்னால சொல்ல முடியும்.” என்று சந்தோஷமாக பரீட்சை எழுத புறப்பட்டாள்.

பாரதியிடம் இதை தெரிவிப்பாளா? என்று சரவணன் யோசிக்க, “அண்ணா ஈவினிங் வந்ததும் பாரதி அக்காவுக்கு போன் பண்ணி எங்கண்ணா அவரோட உழைப்பில் அவரா பார்க்கர் பேனா வாங்கி தந்துட்டார்னு சொல்வேன்.” என்று கத்தி செல்ல சரவணன் புன்னகை விரிந்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

8 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 24)

    அட ராமா ! இப்படி ஒட்டுமொத்த குடும்பமே வாயை விட்டு
    சூப்பர் ட்ராமா பண்ணிட்டிருக்காங்களே…!
    ஆனா, இவங்க உண்மையிலயே லவ் பண்ணால் என்ன பண்ணுவாங்கன்னு, என்ன நடக்கும்ன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!