அத்தியாயம்-5
“மிருது…மிருது? என்று சஹானா உலுக்க அவளோ நன்றாக உறக்கத்திலிருந்தாள்.
“அவங்க இன்னும் தூக்கத்துல தான் உடலை முறுக்கிட்டு இருக்காங்க. இன்னும் டூ ஹவர்ஸ்ல எழுந்திட வாய்ப்புண்டு.” என்று வேதாந்த் உரைத்திடவும் சாக்ஷி சஹானா இருவரும் பார்த்து கொண்டார்கள்.
“எழுந்ததும் கத்தினா நீங்க முழிக்காதிங்க. கிட்னாப் பண்ணியதால க்ரீன் க்ரீனா திட்டலாம்” என்று மென்பனி முன்னெச்சரிக்கையாக உரைத்தாள்.
“நல்லப்பொண்ணுனு சொன்னிங்க பச்சையா பேசுமா?” என்று ஆதேஷ் ஆர்வமானான்.
அம்ரிஷோ “ஆதேஷ் ஷட் அப்” என்று அடக்கினான்.
பெண்கள் முறைக்க, ஆதேஷின் நட்புகளும் அதே போல முறைக்கவும் “நான் தூங்கறேன் டா” என்று சாய்ந்து ஐ-மாஸ்க் போட்டுக் கொண்டு சாய்ந்தான்.
அதோடு காரில் பாடலை மட்டும் இசைக்கவிட்டு, அமைதியாக பயணத்தை மேற்கொண்டனர்.
இடையில் கொடைக்கானல் மலையேற்ற பாதைக்கு முன்னரே காலை உணவை முடித்திட ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினார்கள்.
ஆண்களில் அம்ரிஷும், பெண்களில் மிருதுளாவும் தவிர்த்து ஏனையோர் இறங்கி சென்று ஒரு உயர்தர ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்தனர்.
முதலில் ஆர்டர் தந்த உணவை அம்ரிஷிடம் கொண்டு வந்து கொடுத்திட அவன் பூட்டிய காரிலேயே தனியாக சாப்பிட்டான்.
மிருதுளா கண்விழித்தால் சாப்பிட தயாராய் அவளுக்கும் பார்சல் கொடுத்து விட்டனர்.
மூன்று ஜோடிகளும் ஏசி அறையில் ஆளாளுக்கு தேவையானதை வாங்கி சுவைத்தபடி கிசுகிசுத்தார்கள்.
மென்பனி தமிழ் ஆர்மி என்றதால் அவனின் பணிகளை பற்றி துருவி கேட்டாள்.
“ஏங்க… நீங்க கதை எழுதினா வாசகர்கள் படிக்கணுமா வேண்டாமா? ஆர்மி பத்தி தெரிந்து எழுதினா யார் படிப்பா? இரத்தமும், சதையும், போரும், துப்பாக்கி சூடு, கட்டுக்கோப்பான வாழ்க்கை, குளிர்ல மழையில பனிச்சரிவுல இதோ இந்த மாதிரி ருசியான உணவுக்கு ஏங்கி, இதெல்லாம் விட யாருக்கு வாழறோம்னு ரோபோ மாதிரி ஒரு கதை எழுதினா அது டாக்குமெண்ட்ரியா போயிடும்.
நானாவது பரவாயில்லை… தனியா தனிமையை தேசத்துக்கு உயிரை கொடுத்துட்டு நிம்மதியா இருப்பேன்.
அவனவன் குழந்தை குடும்பம் அப்பா அம்மானு உறவுகளை நினைச்சி ஏங்கிட்டு, எந்த நேரம் எப்ப உயிர் போகும்னு வாழணும்.
இதுல உங்களை மாதிரி கதை எழுதறவங்களுக்கு சுவாரசியம் தர்ற மாதிரி காதலோ, காவியமோ சுத்தமா எங்க லைப்ல இருக்காது. உப்பு சப்பில்லாத லைப். கதை எழுதி புக் போட்டா யாரு வாங்கறது? ஆன்லைன்ல எழுதினாலும் ஒரு விமர்சனமும் தேறாது.
இதோ இவனை பத்தி எழுதுங்க. டாக்டர் வேதாந்த். நர்ஸ், ஹாஸ்பிடல்ல சந்திக்கற லேடி டாக்டர்ஸ் ஏன் வர்ற பேஷண்ட்ஸ் கூட இவனை சைட் அடிக்கிறாங்க. லாட் ஆப் லவ் சீன்ஸ், இன்ட்ரஸ்டிங் சீன்ஸ் இருக்கும்” என்று தமிழ் வேதாந்தை கோர்த்து விட்டான்.
மென்பனியோ தமிழின் வார்த்தையை உள்வாங்கியவளுக்கு ஒன்று புரிந்தது. அவனுக்காக துடிக்க நட்புகள் இருந்தாலும் அவன் கைகளை பிணைத்து காதலில் திளைக்க தனக்கே தனக்காக, தன்னை மட்டும் உலகமென வாழும் ஒரு உறவுக்கு ஏங்குகின்றானென புரிந்தது. அதன் காரணமாக “ஆர்மி லைப்ல லவ் இருக்காது, சுவாரசியம் இருக்காதுனு யார் சொன்னா? காதலிச்சு கல்யாணம் பண்ணி பாருங்க.
புயல், மழை, பனிச்சரிவு உப்புசப்பில்லாத சாப்பாடு எதுனாலும் ஒரு மாயவுலகத்துல இருப்பிங்க. தனியா வாழுவிங்க. ரத்தம் சதையுமா போர்ல இருந்தா கூட உங்க மனசுல உங்களுக்கான ஒருத்திக்காக ஜெயிக்கணும், வாழணும் ஆசை வரும். அந்த ஆசை வந்துட்டா லைப் இன்ட்ரஸ்டிங்கா காதலோடு பயணிக்கும்” என்று விவரித்தாள்.
“நல்லா சொல்லுங்க… பிரெண்ட்ஸ் நாங்கபல முறை சொல்லிட்டோம்.
மேரேஜ் பண்ணுடானா தலை தெறிக்க ஓடறான். லேடிஸ் சொன்னா வேல்யூ இருக்குதானு பார்ப்போம்.” என்று முதல் முறை பெண்கள் பேச்சுக்கு ஆதரவாக கொஞ்சம் போல முடித்திருந்தான் ஆதேஷ்.
இங்கே இவர்கள் பேச்சு நட்பாய் தொடர, அங்கே அம்ரிஷ் கால் நீட்டி கர்ச்சீபை ஹாண்ட் டவலாக மாற்றி ஸ்பூனால் மினி இட்லி நெய் சாம்பார் என்று பிளாஸ்டிக் பௌவுலில் ஸ்பூனால் சாப்பிட்டு கொண்டிருந்தான்.
பின்னால் மிருதுளா தன்னிரு கைகளால் தலையை தாங்கி மெதுவாய் எழுந்தாள்.
கண்கள் இன்னமும் மசமசவென எதிரே தெரியே, கண்ணை இரண்டு மூன்று முறை படபடத்து நிதானமாய் திறந்தாள்.
ஏதோவொரு காரில் இருப்பதை உணர்ந்தவள் முன்னால் ஒருவன் சாப்பிட்டு கொண்டிருக்க, தன்னை யாரோ கர்ச்சீப்பால் முகத்தை மூடி மயக்கப்படுத்தியது நினைவு வரவும், “ஹெல்ப்..ஹெல்ப்” என்று கத்திக்கொண்டு கார் கதவை திறக்க முயன்றாள்.
ஏற்கனவே காருக்குள் யார் இருந்தாலும் வெளியே தெரியாது. ஆனாலும் கதவு சரியாக பூட்டாமல் பட்டென திறந்து யாரேனும் பார்த்திடக்கூடாதென்று லாக் செய்திருந்தான்.
அதனால் மிருதுளா படபடத்தாலும் கதவு திறக்காமல் போனது.
அம்ரிஷ் நொடியில் அதிர்ந்தவன் மடியிலிருந்த உணவை கார் சீட்டில் வைத்துவிட்டு பெண்ணவளின் பட்டு போன்ற வாயை தன் கைகளால் மூடினான்.
“ஹே… லுக்.. மிருதுளா.. இங்க யாரும் உன்னை கிட்னாப் பண்ணலை. உன் பிரெண்ட்ஸ் தான் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தாங்க.
பேர் கூட சாக்ஷி, மென்பனி, அண்ட்.. சஹானா..” என்று கூற விடுபட போராடி திமிரியவள் பட்டாம்பூச்சியாக கண்களை படபடவென அடித்து எதிரே தன் வாயை பொத்தியவனை அளவிட்டாள்.
மிருதுளா அமைதியாக இருக்கவும், “இங்க பாரு… என் பிரெண்ட்ஸோட உன் பிரெண்ட்ஸ் சாப்பிட போயிருக்காங்க. என்னால பப்ளிக் ஹோட்டல்ல போக முடியாது. சோ கார்லயே இருக்கேன். நீ மயக்கத்துல இருந்ததால நீயும் இங்க இருக்க, மத்தபடி எதுனாலும் உன் பிரெண்ட்ஸ் வந்துடுவாங்க அவங்களிடம் கேளு. எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க” என்றதும் மிருதுளாவோ பேச்சற்று திகைத்து இருந்தாள்.
“நான்.. நான் கையை எடுத்தா கத்தக்கூடாது” என்றதும் மாட்டேன் என்று தலையசைத்தாள் மிருதுளா.
மெதுவாக அவள் வாயிலிருந்து கையை அகற்றினான். “நீ…நீங்க… ஆக்டர் அம்ரிஷ் தானே?” என்றாள்.
நிதானமாக மூச்சு விட்டு “ஆமா.” என்று மட்டும் பதில் அளித்துவிட்டு அவள் சாப்பிட ஒரு பார்சலை தந்தான்.
பிளாஸ்டிக் பாக்ஸில் இவனுக்கு வைத்திருந்தது போலவே மினி இட்லி நெய்சாம்பார் என்று இருந்தது. நீண்ட நேரமாக சாம்பாரில் ஊறியது.
இங்கப்பாரு ரொம்ப ஆச்சரியமோ அதிர்ச்சியோ வேண்டாம். நார்மலா இரு.” என்று அவன் சலிப்படைந்து முகம் காட்டி கூறவும் மிருதுளாவுக்கு ஒரு மாதிரி ஆனது. ‘பெரிய இவன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டு தலையாட்டினாள்.
ஸ்பூனால் உணவை விழுங்க ஆரம்பித்து காரிலிருந்தபடி ஹோட்டலை கவனித்தாள்.
மேலே கண்ணாடி டோர் கொண்ட ஹோட்டல் என்றதால் தோழிகள் மூவரின் தலைகள் தென்பட்டது.
அதனால் அச்சமின்றி இருந்தாள். ஆனாலும் ஒரு நடிகனோடு எவ்வாறு பயணத்தில் இணைந்தோமென்று அறிந்திட பேராவல் வந்தது.
அம்ரிஷ் அவனாக மிருதுளாவிடம் பேச்சை ஆரம்பிக்கவில்லை.
மிருதுளாவோ, ஒரு பிரபல நடிகனின் காரில் தான் எப்படி?
வீட்டில் சாக முடிவெடுத்து கோழையாக சாகவும் முடியாமல் தவித்து சேலையெல்லாம் பேனில் தொங்க விடாடு கிறுக்குத்தனம் செய்து, கடைசியில் அழுதழுது சித்தி சொல்லிய வரனையே மணந்து எக்கேடோ வாழ்க்கையை வாழ்ந்து தொலைவோமென இருந்தவளை யாரோ முகமூடி அணிந்து மயக்கப்படுத்தினார்கள்.
அதன் பின் கண் விழித்தாள் இங்கே இருக்கின்றாள், தோழிகள் இருப்பதால் இது அவர்கள் வேலையென்றும் புரிப்பட்டது.
நேற்றிரவு சாப்பிடாமல் பசியில் இருந்தவள் உணவை மிச்சம் வைக்காமல் விழுங்கினாள்.
அம்ரிஷும் உணவை விழுங்கிவிட்டு நீரை அருந்தி, முகமூடி அணிந்திட, அவன் முகம் பார்த்த மிருதுளாவோ பேச அஞ்சினாள்.
ஆடி அசைந்து மூன்று ஜோடிகளும் தனி தனியாக ஆண்கள் குழு, பெண்கள் குழுவென்று நடையிட்டு காரை அடைந்தனர்.
“ஹேய்… மிருது முழிச்சிட்டியா? இட்லி சாப்பிடுடி” என்று சஹானா மகிழ்ச்சியாய் கூறினாள்.
“எருமைகளா.. என்னை ஏன் கிட்னாப் பண்ணிட்டு வந்திங்க? இது எந்த ஏரியா? எங்க சித்தி என்னை காணோம்னு தேடி அலைய போறாங்க. அவங்க இப்ப போலீஸ்ல கம்பிளைன் பண்ணிருப்பாங்க.
நான் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கறேன்னு முடிவெடுத்துட்டேனே. பிறகு ஏன் புதுபிரச்சனையை க்ரியேட் பண்ணி வச்சிருக்கிங்க?” என்று அழுதாள்.
“வாயை மூடு. இரண்டாதாரமா அந்த கிழவனை கல்யாணம் பண்ணிப்பியா? முகறகட்டை… இந்த லட்சணத்துல மேடம் பேன்ல சேலை வச்சி தூக்குலாம் செட் பண்ணிருக்கிங்க. அப்படி சாகணும்னு நினைச்சி தானே லெட்டர்லாம் எழுதி வச்ச, நீ ஆல்ரெடி செத்துட்ட, இனி நீ புதுசா எங்களால் மறுபிறவி எடுத்தாச்சு. நாங்க சொல்லறதை கேளு. நாங்க சொல்லறப்படி நட.
நாம எல்லாம் கொடைக்கானல் போறோம். டென் டேஸ் சஹானாவோட ஆன்ட்டி வீட்ல தங்கறோம். பிறகு என்ன பண்ணலாம்னு பொறுமையா முடிவெடுக்கலாம். அதுக்குள்ள லூசு மாதிரி அழுது சீன் க்ரியேட் பண்ணி சொதப்பாத.” என்று சாக்ஷி அதட்டவும் மிருதுளா மெதுவாக சிந்திக்க ஆரம்பித்தாள்.
இதற்கு இடைப்பட்ட கணத்தில் அம்ரிஷ் வேதாந்த் காதில் “மச்சி அந்த மிருதுளா என் பேஸை பார்த்துட்டா. ஆக்டர் அம்ரிஷ்னு தெரிந்துடுச்சு. மத்த பொண்ணுங்களிடம் சொல்லறதுக்குள்ள கொடைக்கானல் மலை மேல ஏறி, அவங்க இறங்க வேண்டிய இடத்துல விட்டுடலாம்.” என்று கூறவும் வேதாந்தோ அதுவும் சரியென்று உரைத்தான்.
“கேர்ள்ஸ்… இங்கயிருந்து பேசறது சேப் கிடையாது. கொடைக்கானல் போக டூஹவர்ஸ் இருக்கும். உங்களை உங்க இடத்துல விட்டுட்டு நாங்க கிளம்பறோம். நீங்க அப்பறம் தனியா டிஸ்கஸ் பண்ணிக்கோங்க. இப்ப ஏறுங்க” என்று அமர்த்தலாக பேச்சை மாற்ற முயன்றான் வேதாந்த்.
மென்பனியும் “போகறப்ப பேசிட்டே போகலாம்.” என்று அவரவர் இடம் வந்து அமர்ந்தார்கள்.
தமிழ் வண்டியோட்ட, ஆதேஷ் முன்னே அமர வேதாந்த் அம்ரிஷ் மற்றும் சாக்ஷி நடுவிலிருக்க, பின்னாடி மென்பனி, சஹானா, மற்றும் மயக்கத்திலிருந்து விடுபட்ட மிருதுளா என்று அமர்ந்திருந்தார்கள்.
வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் போக சிறந்த வழியாக அமைந்தது. அப்படியிருந்தும் மிருதுளாவிற்கு சிறு அச்சம் இதயத்தில் தாக்கியது.
“மென்பனி… நாம உன் கார்ல வந்திருந்தாலும் இந்தளவு சேப்பா வண்டியை செலுத்தியிருப்போமானு டவுட் தான்” என்று சாக்ஷி பாதையின் வளைவு நெளிவுகளை கண்டு நிதர்சனத்தை உணர்த்தினாள்.
“அதெல்லாம் நானும் டிரைவ் பண்ணுவேன்.” என்று சாக்ஷியிடம் உரைத்துவிட்டு, “சார்… என்னோட காரை உங்க பி.ஏ. எடுத்துட்டு போயிருப்பாரா?” என்று ஐயத்தை கேட்டாள்.
அம்ரிஷோ உடனடியாக போனை இயக்கி ஸ்பீக்கரில் போட்டு அவன் பி.ஏ.விற்கு அழைத்தான்.
“சம்பத்… நான் ஷேர் பண்ணின லொகேஷன்ல இருந்த காரை எடுத்துட்டு போயாச்சா?” என்று அதிகாரமாக கேட்டான் அம்ரிஷ்.
சம்பத் என்பவனோ, “ஆமா சார் கூடவே கார் மெக்கானிக்கை கூட்டிட்டு வந்து டயரை மாத்திட்டு நம்ம கேரேஜ்ல காரை கொண்டு வந்து வச்சாச்சு. டிரைவர் மெய்யப்பன் வந்துட்டார்னா கொடைக்கானலுக்கு பெட்ரோல் டாங்க் பில் பண்ணிட்டு அங்க வந்துடுவார் சார்.” என்று பவ்யமாக உரைத்தான்.
அம்ரிஷோ போதுமா என்பது போல மென்பனியை ஏறிட, “சார்… இஷா மேடம் மார்னிங் எட்டுக்கு அனவுன்ஸ் பண்ணிடப் போறாங்களாம். அப்படி நியூஸ் கொடுத்துட்டா அடுத்து உங்களை தான்…” என்று சம்பத் ஏதோ பேசவரும் முன், அம்ரிஷ் ஸ்பீக்கரிலிருந்து மியூட் போட்டு காதில் வைத்தான்.
“சார் ஷூட்டிங் போயிருக்கார் அவ்ளோ தான். எங்க ஏதுனு கேட்டா நோ கமெண்ட்ஸ் சொல்லிடுங்க” என்று மெதுவாக கூறிவிட்டு அணைத்தான்.
வேதாந்த் அம்ரிஷ் கையை ஆறுதலாக தீண்டினான்.
அம்ரிஷோ கைகடிகாரத்தை பார்த்தான். மணி ஏழானது.
மிருதுளாவோ அடிக்கடி அம்ரிஷை தான் எட்டி பார்த்தாள்.
தோழிகளுக்கு அவன் ஆக்டர் அம்ரிஷ் என்று அறியாதது மிருதுளாவுக்கு தெரியாதே.
ஏதோ தன் தோழிகளும் அம்ரிஷ் பற்றி தெரிந்திருக்கும் என்று எண்ணியிருந்தாள்.
சஹானாவிடம் “இவர் கார்ல எப்படி? என்று கிசுகிசுக்க ஆரம்பித்தாள். சஹானாவோ அவள் சரியாக கேட்காமல் ஆண்கள் காரில் எப்படி வந்தோமென கேட்கின்றாளென்று தவறாக அர்த்தம் செய்து கொண்டாள்.
“மென்பனி கார்ல சாக்ஷி கிட்னாப் பண்ணி உன்னை கூட்டிட்டு வந்தோம். சென்னை க்ராஸ் ஆகறப்பவே பஞ்சர் ஆகிடுச்சு. எல்லாம் முன்னாடி இருக்கறவன் தான் நம்ம காரை இடிக்கிறாப்ள ஓட்டிட்டு வந்தான். அதனால தான் அதுக்கு தண்டனையா மென்பனி காரை அங்க நிறுத்திட்டு இந்த கார்ல வந்தோம்.
மென்பனி கார் இனி தான் கொடைக்கானலுக்கு கொண்டு வர்றாங்க. நல்லது… இரண்டு வேலை படட்டும்.” என்று சஹானா அவள் பாட்டிற்கு பேசி முடித்தாள்.
மிருதுளாவுக்கு அப்பொழுது கூட இவர் கார்ல ஏறியும் அமைதியா இருக்கோம். ஒரு வேளை டீசன்ஸி மெயின்டெயின் பண்ணறாளுங்களா?’ என்று அவளும் அமைதிக்காத்தாள்.
அம்ரிஷ் மிருதுளா பேசவும் ஓட்டு கேட்டவன் தன் பெயரை அவள் விளிக்காமல் பேச சஹானா பேச எதிலும் நடிகன் என்று வராததால் நிம்மதியடைந்தான்.
மிருதுளா மட்டும் வளைவு நெளிவு பாதையில் கண்ணை மூடி சஹானா மடியிலேயே படுத்துக் கொண்டாள்.
சஹானாவோ சாப்பிட்டதெல்லாம் வாமிட் எடுத்திடுவோமா? என்ற திகிலோடு இருந்தாள்.
நான்கு அழகான வாலிபர்கள் முன் வாந்தியை எடுத்தால் அது வேறு வாழ்நாள் முழுக்க கண்ணில் வந்து செல்லும் என்று புளிப்பு மிட்டாய் ஒன்றை வாயில் அதக்கினாள்.
மென்பனியோ வழிநெடுக பரந்துவிரிந்த இயற்கை பேரழகை கண்டு ரசித்தாள்.
பாதையின் வளைவு நெளிவுகளில் கார் செல்லும் நேரம் சாக்ஷி தோளும், வேதாந்த் தோளோடு உரசியது. அவளுமே அவனை உரசக்கூடாதென்று தள்ளி தள்ளி செல்ல, மாறாக பாதையின் திருப்பத்தில் அவன் தோளில் எதச்சையமாக உரசியது.
“இட்ஸ் ஓகே… போற பாதை இப்படி தான். நாம வேண்டுமின்னே இடிச்சிக்கறது இல்லையே” என்றதும் தான் அவனும் திருப்பத்தில் தோளோடு உரசுவதை உணர்ந்தாள்.
ஏதோவொரு உணர்வு சங்கடமாய் தருவிக்க, தலையாட்டிக் கொண்டாள்.
மலைகளின் இளவரசி கொடைக்கானல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற போர்ட் பக்கம் நுழைந்தனர்.
தமிழ் வண்டியை செலுத்தியவாறு, “மென்பனி… எங்க இறக்கி விடணும்னு சொன்னா முதல்ல அங்க கொண்டு போய் விட்டுடுவோம்” என்று கேட்கவும் மென்பனியோ சட்டென யார் தன்னை அழைத்தது என்று திகைத்து அது தமிழ் என்றதும், “சஹானா… சஹானா.. உன்னோட ஆன்ட்டி வீட்டு அட்ரஸ் சொல்லு” என்று உசுப்பினாள்.
சஹானாவோ வாட்சப்லில் இருந்த லொகேஷனை காட்டவும் ஆதேஷ் அந்த போனை வாங்கி காரின் முன் பக்கம் போன் தாங்கி நிற்க வைத்திருக்கும் இடத்தில் வைத்தான்.
தமிழ் அந்த பாதை காட்டும் திசைக்கு வண்டியை செலுத்தினான்.
இருபது நிமிஷத்துல அங்க ரீச் ஆகிடுவோம். அதுக்கு பிறகு சந்திக்க முடியாது. உங்களோட பயணம் செய்தது புது அனுபவம்” என்று தமிழ் பேசவும் சாக்ஷியுமே ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
மென்பனியோ “நீங்க எங்க தங்குவிங்கனு சொல்லுங்க. நாங்க ரிலாக்ஸா ஒரு நாள் வந்து பார்க்கறோம். நீங்க இங்க எத்தனை நாள் தங்குவிங்க? எங்க கார் இந்த வீட்ல கொண்டு வந்து விட்டுடுவிங்க தானே?” என்று மென்பனி கேட்க வேதாந்த் அம்ரிஷை பார்க்க, தமிழோ “தெரியலை அநேகமா டென் டேஸுக்கு மேல இருப்போம். உங்க கார் உங்கவீட்ல கொண்டு வந்துவிட சொல்லிடறேன் டோண்ட் வோர்ரி.” என்று கூறினான்.
நம்பர் ஷேர் பண்ணலாமா வேண்டாமா? என்று குழப்பத்தில் இருக்க அவ்விடம் வந்தது.
“கேர்ள்ஸ்… கொஞ்சம் முன்ன பாருங்க” என்றான் தமிழ்.
சஹானா உடனடியாக, “என்னப்பா அத்தை வீட்ல போலீஸ் வண்டி இருக்கு?” என்று கூற, வண்டியை தமிழ் அப்பொழுதே தூரமா நிறுத்தினான். என்ன பிரச்சனை என்று தெரியலையே?” என்று பெண்கள் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
-தொடரும்.
Super