Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்-5

மனமெனும் ஊஞ்சல்-5

அத்தியாயம்-5

   பூரானால் ஏற்பட்ட கடியுடன் காலையில் சமையலை செய்திருந்தாள் நைனிகா.

   அதே காபி மணம் நிரஞ்சனை எழுப்ப, சோம்பல் முறித்து ஜன்னல் பக்கம் பார்வையிட்டான்.
 
   கோழிகள் கிணற்று பக்கமிருந்த சோற்று பருக்கைகளை கொத்தி கிளறி உணவை விழுங்கியது.

  லேசான முறுவலோடு காலை கடனை செவ்வனே முடித்து வந்ததும் தந்தைக்கு எப்பொழுதும் போல குட்மார்னிங் அனுப்பினான்.

   இங்கு வந்ததிலிருந்து வீடியோ காலை தவிர்த்து விட்டான்.‌
  நார்மலாக பேசுவது கூட மதியம் வெளியே சென்றிருந்த சமயம் பேசினான்.‌

   ‘கோவாவை எங்களுக்கு காட்ட மாட்டியா டா’ என்று வீரராகவன் கேட்டதற்கு, உங்களுக்கு போன் பண்ணவே என்னால முடியலை. ஐ அம் பிஸி” என்றான்.

  “ஆமா ஆமா… கோவா ட்ரிப்ல உன்னோட வேலை பார்த்த ‘நிஷா’ வந்திருக்கா. உனக்கு எங்களிடம் போன் பண்ண நேரமிருக்குமா?” என்றது கேலி செய்ய அவனும் அதையே கூறி சமாளித்தான்.

   இங்கு வந்ததிலிருந்து அப்படி தான் சமாளிக்கின்றான்.

   கூடத்திற்கு வரவும் நைனிகா காபி தராமல் இருக்க, அடுப்படிக்குள் வந்தான்.

  “ஹாய்… கால் எப்படியிருக்கு? இப்ப வலி இல்லையே” என்று கேட்க, நைனிகா கண்கள் அவனை தாண்டி பின்னால் எட்டி பார்த்தது.
 
  இவனிடம் பேசியதற்கு திட்டு வாங்குவதை அறிந்துக் கொண்டதன் வெளிப்பாடு.

  “இப்ப பரவாயில்லை” என்று அடுப்பில் கவனம் செலுத்தினாள்.

  ”காபி கிடைக்குமா? இல்லை கடையில் போய் குடிச்சிக்கவா?” என்று இயல்பாய் கேட்டான்.

  “நீங்களும் ஏன் இப்படி பேசறிங்க. அடுப்பில் சூடுப்படுத்தறேன். ராஜப்பன் மாமா சொன்னார். காலையில் காபி டிபன், நைட் டின்னர் நீங்க இங்க சாப்பிடுவிங்கன்னு. இனி அதெல்லாம் சரியான நேரத்துக்கு இருக்கும். மதியம் சாப்பாடு வேண்டுமின்னா கூட கேளுங்க. கட்டி கொடுக்கிறேன்” என்றாள்.

   “பரவாயில்லை..‌. ஒரு வேளை வெளியவே சாப்பிட்டுக்கறேன்.” என்று சூடான காபியை வாங்கி நகர்ந்தான்.‌

   கலையரசி முன்னே வந்து ”தம்பி வயசு பிள்ளையிடம் என்ன பேச்சு?” என்று கேட்டுவிட, “அந்த பொண்ணு எனக்கு மாமன் பொண்ணு தானே? அப்படின்னா பேசலாம் அத்தை. பார்க்கறவங்க பார்வையை தான் மாத்திக்கணும். நான் இப்படி தான். இங்க இருக்கற மீதி நாட்கள் இப்படி தான் இருப்பேன்‌. அந்த பொண்ணை திட்டிட்டு இருக்காதிங்க. பூச்சி கடிச்சா கூட எட்டி பார்த்து என்னனு கேட்காத நீங்க. நான் பேசினா மட்டும் மூக்கு வேர்த்து வந்துடறிங்க. உங்களுக்கு என் மேல என்ன பயம்? நான் இங்க இருந்து பதினாறாவது நாள் என் வேலையை பார்த்ததுட்டு கிளம்பிடுவேன்” என்றான்.

இலக்கியா அண்ணியை போல நறுக்கு தெரிந்த பேச்சு என்றதிலேயே கலையரசி வாயடைத்து போனார்‌.

  ‘நின்று நிதானமா ஒரு வார்த்தை நல்லாயிருக்கியான்னு கேட்க வரலை. இதுல பேச்சு வேற’ என்று முனங்கியவன், தோசை ஊற்ற கூறி சாப்பிட்டு வெளியே புறப்பட்டான்.

     நைனிகாவை மதியம் முழுக்க ஆனந்தஜோதி திட்டி பார்த்து விட்டு சோர்ந்துவிட்டார்.

   ”இங்க இருக்கிறவங்களுக்கு வடிச்சி கொட்டறேன். அவ்ளோ தான் அத்தை. ஏதாவது பேசிட்டே இருக்காதிங்க” என்று கூறிவிட்டாள்.

   அன்றைய நாளில் ராஜப்பன்  நிரஞ்சனோடு இரவு சாப்பிட்டு, அவர் வீட்டுக்கு கிளம்பினார்.‌ பூரான் கடித்ததால் ராஜப்பன் நேற்று இருந்து நைனிகாவை கவனித்தார். இனியும் இங்கே இரவு உறங்க முடியுமா? அதுவும் இந்த கூட்டத்தில்‌… ?!

  நிரஞ்சனிடம் சொல்லிவிட்டு ராஜப்பன் செல்லவும் தந்தை வீரராகவனிடமும் ஷோபனாவிடமும் பேசி விட்டு உறங்கினான்.

  இப்படியே ஒருவாரம் கழிந்தது.

  இதில் மாற்றமின்றி மேலும் நாட்கள் கழிந்தது.
  அதாவது நிரஞ்சன் எழுந்து குளித்து வெளியே புறப்படும் தோரணையில் கூடத்திற்கு வந்தால் நைனிகா போடும் காபி பருகிவிட்டு ராஜப்பன் வாங்கிய பேப்பரை வாசித்துவிட்டு அடுத்த இருபது நிமிடத்தில் டிபன் என்ன செய்திருந்தாலும் வயிற்றுக்கு தள்ளிவிட்டு, காரை எடுத்து பக்கத்தில் சுற்றி பார்க்க கிளம்பிடுவான். அரை மணி நேரம் எட்டு திசையில் ஒவ்வொருயிடமாக சென்று சொந்த ஊரை ரசித்தான்.

   திரும்பி வந்து ராஜப்பனோடு சாப்பிட்டு பேசி அவர் சென்றதும் தந்தையுடன் பேசிவிட்டு உறங்குவான்.

   இது வழக்கமாய் நடைப்பெறும், நைனிகா எப்பவும் போல் கிணற்றுக்கடியில் சிறு ஒளியில் பாத்திரம் விளக்கினாள்.

   நிரஞ்சன் தோழர்களின் கோவா ட்ரீப் பற்றி கேட்டு பேசிக்கொண்டு இருந்தான்.

    இவனை எதிர்பார்த்து ஏமாந்ததாக கூறி வருந்தினார்கள். முக்கியமாக நிஷா முகமே களையிழந்து போனதாக வார்த்தைக்கு வார்த்தை கூறி இவனை சீண்டினார்கள்.

   நிரஞ்சன் பேசிக்கொண்டு இருக்கும் சமயம் கிணற்று பக்கம் நைனிகாவின் முனகல் சத்தம் கேட்டது.

   போன் பேசிய நிரஞ்சன் நிசப்தமாய் மாறி கிணற்றுப்பக்கம் செவியை கூர்த்தீட்டினான்.

   ஏதோ சரியாக தோன்றாமல் போகவும், “டேய் பிரபு நான் அப்பறம் பேசறேன்” என்று துண்டித்து விட்டு  பின்பக்கம் வந்து போனில் டார்ச்சை ஒளிர செய்து நாலாபக்கம் அடிக்க, நைனிகா வாயை பொத்திய, மாதவன் மாட்டினான்.‌

   “அவளை விடு” என்றான் நிரஞ்சன்.

   “இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்” என்றான்‌‌ மாதவன்.

‌மாதவனும் நிரஞ்சனுக்கும் ஒருவருட இடைவெளி வயது வித்தியாசம். நிரஞ்சன் பெரியவன். மாதவன் தான் சிறியவன்.

   “அவளை விடுன்னு சொன்னேன் மாதவன்” என்று அழுத்தமாய் கூற, நிரஞ்சன் வந்ததில் நைனிகா துள்ளல் அதிகரித்து அவளாக மாதவன் பிடி நழுவவும் ஓடிவந்தாள்.

   நிரஞ்சன் பின்னால் ஆனந்தஜோதி வரவும், நைனிகா அவரையும் ஏறிட்டு காண சகிக்காமல் நின்றாள்.

  “என்ன.. என்ன நடக்குது?” என்று மகனையும் நிரஞ்சனையும் வெறித்தார்.  

  நைனிகாவோ வாய் திறக்காமல் அழவும், “கேட்கறாங்கள்ல சொல்லேன். ஒரு வாரம் முன்ன சாதாரண பூரான் கடிச்சது. இப்ப அதை விட பெரிய விஷமுல்ல பாம்பு கொத்த பார்க்க வந்துச்சுன்னு” என்றதும் மாதவன் தலைக்கவிழ, நைனிகாவோ பேச முடியாது அறைக்கு ஓடினாள்.

   மாதவன் பெயரை உச்சரிக்காமல் ஓடவும் ஆனந்தஜோதிக்கு நிம்மதியானது.

     “டேய்… அங்க என்ன முழிக்கற, ஒரு தாலியை கட்டி அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சப் பிறகு பூச்சி  பொட்டு வராம பார்த்துக்கோ. இப்ப காவல் காத்தது போதும்” என்று கூப்பிட மாதவன் அன்னை பின்னால் சென்றான்.

நிரஞ்சனுக்கு நடப்பது எதுவும் பிடிக்காமல் அறைக்கு வந்தான். அவன் சிந்தனை எல்லாம் அம்மா வளர்த்த இந்த பெண்ணிற்கு இனி இங்கு பாதுகாப்பு இல்லை என்றது திடமாய் வெளிச்சமாக தெரிந்தது. 

    இந்த நேரம் கதவை தட்டி அவளுக்கு ஆறுதல் உரைக்கவும் மனம் முரண்டியது.
  ஆண்மகன் ஒருவன் இரவில் ஆறுதலுரைத்தாலும் தவறு என்று கதவை தாழிடாமல் திறந்து வைத்து படுத்தான்.

   அப்பொழுதும் மனமானது ராஜப்பன் அங்கிள் நைனிகாவுக்கு பூரான் கடித்த அன்று இங்கே தங்கினார். அதன்‌பின் அடுத்த நாள் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தானும் இன்னும் சில நாளில் சென்றாக வேண்டும். இந்த பெண்ணுக்கு யார்‌ காவல்? என்றதே மனதில் ஓடியது.

   ராஜப்பன் அங்கிளிடம் பேசி பார்ப்போம் என்றதும் ஓரளவு சமாதானம் ஆனது.

   அடுத்த நாள் பல் விளக்கி முடித்து இரவாடையுடன் நைனிகா முன் வந்து, “காபி” என்றான்.

அவன் முகம் காணாமல் தட்டில் வழங்கவும், “எங்கம்மா உன்னை சரியாவே வளர்க்கலை. ஒழுங்கா வளர்த்தா இப்படியா இருப்ப. அவனை நாலடி அடிச்சி, அவங்க அம்மாவிடம் சுட்டி காட்ட வேண்டாம்” என்று எகிறினான்.

  “இலக்கியா அத்தை என்னை ஒழுங்கா தான் வளர்த்தாங்க. அடிச்சதுக்கு தான்‌ அவன் என் சங்கை நெருக்கி வாயை பொத்தினான்.‌

   அந்த நேரம் ஆனந்தஜோதி அத்தையிடம் சொல்லிருந்தா என்ன நடந்திருக்கும்? அவங்க பையனுக்கு தான் ஆதரவா பேசுவாங்க. எனக்கா வக்காளத்து வாங்குவாங்க.
 
   இந்த வீட்ல நியாயம் தர்மம் பார்க்கறது இலக்கியா அத்தை மட்டும் தான். அதுக்கு பிறகு கதிர் பரவாயில்லை. மத்தவங்க எல்லாம் காரியவாதிங்க. அதுவும் ஆனந்தஜோதி அத்தை குடும்பம் எல்லாம் எரியற வீட்ல கட்டையை பிடுங்குற கூட்டம்.

  நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. உங்க அம்மா எப்படிப்பட்டவங்கன்னு உங்களுக்கே தெரியாது. எங்கத்தையை குறை சொல்ல வந்துட்டிங்க” என்று நெய்யால் செய்த கிச்சடியை பரிமாறினாள்.

   உங்க வேலையை நீங்க பாருங்க என்று சொல்லாமல் கூறியது. அதுவும் அம்மாவை சாதாரணமாக கூட விட்டுக்கொடுக்காமல் பதிலடி கொடுக்கின்றாளென்று வியந்தான்.
 
  அதன் பின் ராஜப்பனை தனியாக வெளியே சந்தித்து நைனிகாவிற்கு மாதவனால் நடந்த அசம்பாவிதத்தை எடுத்துரைத்தான்.

  ”அடப்பாவி… இப்படியா நடந்துக்கிட்டான். அதனால் தான் காலையில் அந்த பொண்ணு முகம் உம்முன்னு இருந்ததா.

  ஆளாளுக்கு முடிஞ்ச அளவு துன்புறுத்த ஆரம்பிச்சிட்டாங்க. இலக்கியா இருந்தவரை அந்த பொண்ணு மகாராணி தெரியுமா. இப்ப என்னடான்னா சித்தி அத்தைன்னு வந்து உசுரை வாங்குறாங்க. இவங்க இலக்கியாவை தகனம் செய்ததும் போயிருந்தா கூட சந்தோஷமா இருந்திருக்கும். இப்ப பதினாறு நாள் அவ கூடயிருக்கேன்னு ஆளாளுக்கு தலைவலியை தர்றாங்க.

  இங்க இருந்தா இந்த பிள்ளையோட உசுருக்கும் மானத்துக்கும் கேள்விக்குறி வந்துடும்.

  இங்க வேலைக்குன்னு அனுப்பினா கூட அந்த மாதவன் மோப்பம் பிடிச்சு வந்துடுவான்.‌

  சென்னையில் தான் வேலை வாங்கி ஹாஸ்டல்ல சேர்த்து விடணும் தம்பி. உங்களுக்கு ஏதாவது வேலை காலியிடம் இருந்தா சொல்லுங்க. பி.காம் முடிச்சிருக்கா.” என்று ராஜப்பன் கூறவும் சரியென்று கூறினான் நிரஞ்சன்.‌

   நிரஞ்சனுக்கு இங்கு வரும் போது கொள்ளி வைத்ததும் வேலையிருக்காது. அப்படியே காரில் கோவா கிளம்பலாமென்ற திட்டத்தோடு வந்தான். இப்படி பதினாறு நாள் தங்க வேண்டும் என்று ராஜப்பன் கோரிக்கை வைப்பாரென நினைக்கவில்லை. அதுக்கூட பரவாயில்லை என்று கடந்திடும் வேளை, நைனிகாவிற்காக சிந்திப்பானென்று எண்ணியதில்லை. பெரிய மாமன் மகள். அன்னையோடு இருக்கின்றாள் சின்ன அத்தை மாமா இல்லையென்றால், சித்தப்பா சித்தி  பார்த்துக் கொள்வார்கள் என்று  அல்லவா கண் மூடி நினைத்திருந்தான்.‌

   இன்னும் மூன்று நாளில் சென்னை கிளம்ப வேண்டும். அங்கு சென்றப்பின்‌ தன் தினசரி வேலைகள் ஆரம்பமாகும். இவர்களை பற்றி நினைக்க வாய்ப்பில்லை.

   நைனிகாவிற்கு ஹாஸ்டலும் வேலையும் மட்டும் பார்த்து தந்தால் என்ன? அன்னைக்கு பின் தான் அவளை பாதுகாத்து ஒரு வழியை ஏற்படுத்தினால் தவறா? என்று தோன்றியது.
 
   தனக்கு தெரிந்தவரிடம் பி.காம் படிப்பிற்கு ஏற்ற வேலை காலியாக இருந்தால் தெரிவிக்க கூறினான்.

    மற்றொரு பக்கம் மாதவன் செய்த காரியத்தை காரணம் காட்டி‌ ராஜப்பன் பாண்டியனிடம் கண்டனம் தெரிவித்தார்.

   பாண்டியனுக்கு மகன் செய்த இந்த செயல் தெரியாததால் அவமானமாக இருந்தது.

  மனைவியிடம் கூறி மகனை கண்டிக்க கூறிட, ‘அதெல்லாம் எனக்கு தெரியும். பொண்டாட்டி நினைப்பு வந்து நைனிகாவை கையைபிடிச்சி இழுத்துட்டான். வயசு பிள்ளையாச்சே. இதுக்கு தான் கல்யாணம் பண்ணிடலாம்னு சொன்னது” என்று கூறவும், பாண்டியனுக்கே அபத்தமாய் தோன்றியது.

  ராஜப்பனால் இளவரசனுக்கு செய்தி கசிந்தது. இனி நாத்தனார் வீட்டை அவதூறு பேச கிடைத்த வாய்ப்பாக நினைத்த கலையரசிக்கு  நைனிகா தங்கள் வீட்டின்‌ நிரந்தர வேலைக்காரியாக மாற்றிட சாத்தியம் அதிகமென்று நிம்மதியானாள்.

  கொஞ்ச காலம் கழித்து யாராவது தங்களுக்கு தேவையான அடிமை கிடைத்தால் அவனுக்கு கட்டி வைத்து நைனிகாவை நிரந்தர அடிமையாகவே வைத்து வேலை வாங்க திட்டம் தீட்டினார்.‌

   எல்லாத் திட்டமும் எல்லோரின் திட்டமும் பதினாறாவது நாளில் முடிவடைய வந்தது.

-தொடரும்.

12 thoughts on “மனமெனும் ஊஞ்சல்-5”

  1. Super sis nice epi 👌👍😍 Nainika super ah pesina amma va pathi Theriyala edhula pesuradhu🙄 athai valarpu summary poguma🤨 parpom enna nadakumo 🙄

    1. ஒரு வழியா கூட்டிட்டு போக முடிவு எடுத்துட்டானா சூப்பர்

  2. M. Sarathi Rio

    மனமெனும் ஊஞ்சல்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 5)

    ஐய்யய்யே…! என்னா உறவுகளோ….? இப்படியா பிணம் தின்னிகளா இருப்பாங்க…? சொந்த அண்ணன் பொண்ணுன்னு கூட பார்க்காம, அவளை இப்படி பிச்சி மேய பார்க்குறாங்களே…
    இதெல்லாம் அவங்களுக்கேத் தகுமா…? அது சரி, இந்த நைனிகாவுக்கு அப்பா அம்மா சொத்து ஏதும் இல்லையோ..?
    நல்ல வேளை, அந்த மட்டுக்கும் தப்பிச்சா. இல்லைன்னா அதுக்கும் சேர்த்து பெருசா ஆப்பு வைச்சிருப்பாங்க.

    நம்ம ஹீரோ என்ன செய்யப் போறான் தெரியலையே…?
    அம்மா அருமையும் தெரியலை,
    மாமன் பொண்ணு அருமையும் புரியலை. இவன் என்ன செய்யப் போறான்னு பார்க்கலாம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *