Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 13

மனம் உன்னாலே பூப்பூக்குதே 13

பூ 13

நான்கு மணிக்கு நடை திறந்ததும் கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே சென்று ரங்கனை தரிசித்தாள். நெஞ்சில் அலைகடல் போல ஆர்ப்பரித்த பல கேள்விகள், குழப்பங்கள் எல்லாம் பாறையாய் மனதில் அழுத்தி இருந்தவை அவன் பாதாரவிந்ததில் நீரில் இட்ட கற்கண்டாய் கரைந்து அவளின் மனதுக்கு இனிமை வழங்கியது.

மெல்ல கோவிலில் இருந்து வெளியே கடைகளை வேடிக்கை பார்த்தபடி வந்தாள். வீட்டின் திண்ணையில் கோகுல் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்க, அவனை புறக்கணித்துச் சென்ற தன் மடமையை எண்ணி நொந்து கொண்டு அவனிடம் ஓடினாள்.

அவளைக் கண்டதும் அவன் முகமெல்லாம் மலர, “என்ன ருத்தும்மா போன? ரொம்ப நேரமாச்சு.”என்று ஏக்கமாய் கேட்க,

“உங்களை தனியா விட்டுட்டேன்ல. சாரிப்பா.” என்று கையிலிருந்த விபூதியை அவன் நெற்றியில் வைக்க,

“ஆத்துக்காரர் தான் ஆம்படையாளுக்கு வச்சு விடணும். இதென்ன டி கூத்து?” என்று நிலைப்படியில் நின்றபடி அவளை சாடினார் சந்தானலஷ்மி.

“ஒன்னு நிலைக்கு வெளில வந்து பேசு, இல்ல உள்ள நின்னுண்டு பேசு. நீ ஏன் நிலைல நின்னுண்டு பேசற? ரூல்ஸ் எல்லாம் அடுத்தவாளுக்கு தானா? நீ ஒன்னும் ஃபாலோ பண்ண மாட்டியா பாட்டி?” வெடுக்கென்று கேட்டு விட்டாள்.

தான் சொல்லி வளர்ந்தவள், தனக்கே சொல்லுவதா என்ற கோபம் வந்துவிட, நல்லது சொன்னா கேட்கணும். இப்படி விதண்டாவாதம் பேசிண்டு அலையாதே. என்று கோபத்துடன் உள்ளே சென்றுவிட்டார்.

“என்னாச்சு உனக்கு? ஏன் பாட்டி கிட்ட இப்படி பேசிண்டு இருக்க?” என்று அவளையே அவன் உற்று நோக்க,

“நாம நைட் பஸ்சுக்கு ஊருக்கு போகலாமா? என் ஆபிஸை நான் காரணம் காட்டிக்கிறேன். என்னால இங்க இருக்க முடியல.” என்று அவன் தோளில் சாயச் சென்றவள் அதற்கு ஒரு பாடு திட்டு விழும் என்று அப்படியே விலகி தன் அறைக்கு சென்றாள்.

பத்து நிமிடத்தில் பாட்டியின் குரல் ஓங்கி ஒலித்தது. என்னவென்று ஆருத்ரா வெளியே வர,

“என்னப்பா இப்படி சொல்ற? ரெண்டு நாளாவது இருக்க வேண்டாமா? சனிக்கிழமையை வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். இப்ப இப்படி சொன்னா நான் என்ன பண்ணட்டும்? ஆசையா உங்களை கோவிலுக்கு அழைச்சிண்டு போகணும்ன்னு இருந்தேன்.” என்று வருந்த அவரைப் பார்க்கவே கோகுலுக்கு பாவமாக இருந்தது.

ஆனால் மனையாள் ‘வேண்டாம் கிளம்பிவிடுவோம்’ என்று கூறிவிட அவனும் தான் என்ன செய்வான்?

“பாட்டி நாங்க எங்க போறோம்? இங்க உள்ள சென்னை தானே! அடுத்த வாரமே ஒருநாள் கூட லீவு கிடைச்சா நாங்க வந்துட்டு போறோம். சரியா? செல்ல பாட்டி” என்று அவர் கன்னம் கிள்ள, அவருக்கு வெட்கமாகிப் போனது.

“சரிப்பா சரி. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா தான் எனக்கு நிம்மதி. அவளை நான் எதானம் சொல்லிண்டே இருக்கறது போல தோணும். ஆனா அவளை கொஞ்சி பேசி சிரிச்சா ரெண்டு நிமிஷத்துல அவா அம்மா அப்பா நினைவு வந்துடும். அழுதுடுவா. அதை பார்க்க நேக்கு திராணி இல்ல.

அப்பறம் அவ சின்னப் பொண்ணு, தெரியாத தப்பு பண்ணினா கோச்சுக்காதேங்கோ. அவளுக்கு எங்க எப்படி இருக்கணும்னு தெரியல. நீங்க கொஞ்சம் பார்த்து நடந்துண்டா அவ கெட்ட பேர் வாங்காம தப்பிப்பா. இப்ப ஆசையா தான் இருக்கும். ஆனா ஊர் அவளைத் தான் தப்பா பேசும். புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.” என்று அவர் இழுக்க,

“புரியறது பாட்டி” என்று சிரித்தான் கோகுல்.

பாட்டி பேசியதெல்லாம் அவள் காதிலும் விழுந்தது. ஆனால் என்ன காரணம் சொன்னாலும் ‘என்னை விலக்கி, என்னை வாட்டி எனக்கு எந்த நல்லதும் நீங்கள் செய்ய வேண்டாம். நான் எதிர்பார்த்தது அன்பு மட்டுமே! அதைக் கொடுக்க நீங்கள் மறைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் காரணங்கள் எனக்கு ஏற்கவும் இயலவில்லை’ என்று மனதை இறுக்கிக் கொண்டாள்.

கிளம்பும் நேரம் பாட்டியிடம் வந்தவள், “நீ என்ன கூட்டிண்டு வந்து படிக்க வைக்கலன்னா நான் என்ன ஆகி இருப்பேன்னு என்னால யோசிக்க கூட முடியல பாட்டி. அந்த நன்றி எனக்கு எப்பவும் உண்டு. ஆனா என்னை நீ ஒரெட்டு தள்ளி நிறுத்தி வளர்ததுதுக்கு என்ன காரணம் சொன்னாலும் என்னால அதை ஒத்துக்க முடியல. பாட்டின்னு உன் மேல உள்ள அன்பு எப்பவும் குறையாது. அடுத்தவா சொல்றதுக்கெல்லாம் நாம வாழ்க்கையை மாற்றி வாழ முடியாது. நாம நமக்காக வாழணும் பாட்டி. நான் போயிட்டு வரேன். நீ உடம்பை ஜாக்கிரதையா கவனிச்சுக்கோ. மருந்து சாப்பிடு.” என்று மென்மையாக அணைத்து விடுவிக்க, வந்தபோது திட்டியது போல அவளை விலக்காமல்,

“நீங்கள்லாம் இந்தக் காலம் டி. ஊர் என்ன சொல்லும்ன்னு யோசிக்காதவா. நாங்க அப்படி வளராலட்டிம்மா. ஒருத்தர் ஒரு சொல் சொல்லிட்டா தாங்காது. ஆம்பளை இல்லாத வீட்டுல கன்னிப் பொண்ணை வச்சு காபந்து பண்ண முடியாதுன்னு தான் ஹாஸ்டல்ல விட்டேன். திடீர்னு பெரியவளா உன்னை ஹாஸ்டல்ல சேர்த்தா என்னைத் தேடுவியே, அப்ப இன்னும் வலிக்கும் அதான் சின்னதுல இருந்தே உன்னை ஹாஸ்டல்ல விட்டேன்.

நெருங்கிப் பிரியறது கொடுமை டி கோந்த. அதை ஏற்கனவே உன் அப்பா அம்மாட்ட நீ அனுபவிச்ச, நான் எத்தனை நாளோ, என்னோடயும் அன்பா இருந்து இழந்து நீ உடைஞ்சு போகப் பிடாதுன்னு தான் டி கண்ணு உன்னை தள்ளியே வச்சிருந்தேன். உன் மேல பாசம் இல்லாம இல்ல. நான் போனாலும் உன்னால சமாளிக்க முடியனும். அதுக்கு தான்.

மதியம் திட்டிடேன்னு கஷ்டப்படாத. நான் சொன்னா உனக்கு வலி குறைவு. வேற யாரும் உன்னை அந்த வார்த்தை பேசிட்டா தாங்க முடியாது. என் மேல கோவம் இருந்தாலும் இனி வெளி இடங்களில் நீ கவனமா இருப்ப. யாரும் நாக்கு மேல பல்லு போட்டு ஒரு வார்த்தை உன்னை சொல்லிட முடியாதுல்ல.” என்று கண்ணீரை துடைக்க,

“பாட்டி” என்று கதறி அவர் தோளில் முகம் புதைத்து அழுதாள்.

அவர் சொல்வதெல்லாம் நிதர்சனம். ஆனால் தனக்கு அன்பு வேண்டி இருந்ததே! அது கிடைக்கவில்லையே! இன்று அது உரிமைப்பட்டவனிடம் இருந்து கிடைக்கும் போதும் முட்டுக்கட்டை போடுவது போன்ற பேச்சைக் கேட்க அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை.

விடைபெற்று பஸ்ஸில் ஏறும் வரை அவளும் கோகுல கிருஷ்ணனும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.

“நீ தான் ருத்தும்மா பாட்டியை தப்பா நினைச்சுட்ட. அவங்க உன் மேல பிரியமா இருக்காங்க” என்று அவன் வாய் திறக்க,

“மனசுக்குள்ள வச்சுக்கிட்டா எனக்கு எப்படி தெரியும்? என்கிட்ட மனசை திறந்து பார்க்கும் கண்ணாடி எல்லாம் இல்லை.” என்று சுருக்கென்று பதிலுரைத்தாள்.

“என்ன டா கோவமா?” என்று கேட்க பதில் சொல்லாது அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவனும் அதன் பின் எதுவும் பேசவில்லை. இருவரும் மௌனமாகவே அந்த பயணத்தைத்  தொடர்ந்தனர்.

காலை தாம்பரத்தில் இறங்கி மடிப்பாக்கம் செல்ல ஆட்டோ ஏறியதும்,

“நான் வீட்டுக்கு போனதும் ஆபிஸ் கிளம்பிடுவேன் கிருஷ். அடுத்த வாரம் எங்க புது பிராஜெக்ட் நெக்ஸ்ட் ஸ்டேஜ் வருது. இனி எங்க டீம் தான் டெஸ்டிங் வரை அதை கொண்டு போகணும். கொஞ்சம் பிரஷர் அதிகமா இருக்கும். சில நேரம் நைட் வீட்லயும் வேலை செய்யறது போல இருக்கும்.” என்று அவனுக்கு விளக்க,

“அதெல்லாம் பார்த்துக்கலாம் டா.” என்று தோள் சுற்றி கை போட்டு தன்னோடு வைத்துக் கொள்ள, அவன் மார்பில் தலை சாய்த்தவளுக்கு ஆறுதலாக இருந்தது.

வீட்டிற்கு வந்ததும், மாமனார் வாசலில் நிற்க, மரியாதையாக நமஸ்கரித்து. உள்ளே செல்ல எத்தனித்தாள்.

“எங்க உன் பாட்டி சீரெல்லாம் கொடுத்து விடலையா?” என்று ஹால் வாசலில் நின்றபடி சுபா வினவ,

முகத்தில் சிரிப்பை ஒட்ட வைத்து, “திடீர்னு கிளம்பிட்டோம் மாமி, அவாளுக்கு அதுக்கு நாங்க நேரத்தை கொடுக்கலையே! அடுத்த முறை வாங்கிண்டு வரேன்” என்று கூறி தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.

வாசலில் வைத்து அன்னை அப்படிக் கேட்டதில் அதிருப்தி அடைந்த கோகுல், “பாட்டி கொடுத்து விட்டு தான் இந்த வீடு நிறையணுமா? வந்ததும் வராததுமா என்னம்மா கேள்வி இது? என்று அன்னையின் முகத்தைப் பார்க்க,

அவரோ “அதெல்லாம் சாஸ்திரம் டா. எல்லாத்துக்கும் அவளுக்கு சப்போர்ட் பண்ணின்டு வராத.” என்று உள்ளே சென்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி வெளியே வந்தவள் பொதுவாக சொல்லிக் கொண்டு அலுவலகம் கிளம்பிச் சென்றாள்.

புதிய பிராஜெக்ட் ஆரம்பித்ததும் விடுப்பு எடுத்ததால் ராம்ஜி அவளிடம் சற்று முகம் காட்டினான்.

“உனக்கு கல்யாணம்ன்னு நீ சொல்லும்போதே நான் தெளிவா சொன்னேனா இல்லையா ஆருத்ரா, சும்மா சும்மா லீவ் கேட்கக் கூடாதுன்னு. டெவலப்பர் வேலைக்கு வரணும்னு நெனச்சா போதாது. அதுக்கு டெடிகேட்டடா வேலை பார்க்கணும்.” என்று அவளது கியூபிகிலில் வந்து சொல்லிவிட்டு செல்ல எத்தனிக்க, கேத்தி கடுப்புடன் எழுந்து வந்தாள்.

“அவ பதினஞ்சு நாள் லீவை கேன்சல் பண்ணின்னப்போ இனிச்சது, இப்ப ஒரு நாள் லீவ் போட்டதும் கசக்குதா ஜி உனக்கு?” என்று கைகட்டி தோழிக்காக அவனிடம் மல்லுக்கு நின்றாள்.

உடனே நித்தினும் தன் தோழிக்காக வந்தான். “இவ்வளவு பேசுற நீங்க அப்படியே கிளைன்ட் கிட்ட இருந்து வந்த அபிஷியல் மெயில் பத்தியும் சொல்லலாமே ராம்ஜி?

அவளோட வொர்க் டெடிகேஷன் என்னனு கிளைன்ட் வரைக்கும் தெரியும். அவ லீவ் எடுத்தது பிடிக்கலன்னா உங்க ரூம்ல கூப்பிட்டு பேசுங்க. அதென்ன ஃப்ளோர்ல எல்லார் முன்னாடியும் கத்துறீங்க?” என்று பாய்ந்தான்.

மீரா நிலைமையை சமாளிக்கும் பொருட்டு,

“ஏய் எல்லாம் விடுங்க. இது செலபிரேட் பண்ண வேண்டிய டைம். கிளைன்ட் ஆருத்ரா வொர்க் பண்ணின மாடியூல் மட்டும் அவன் எதிர்பார்த்த பீச்சர்ஸ் விட அதிகமாவும் உதவியாவும் இருக்கு, அதே போல நான் கேட்டதுக்கும் மேல செய்ய முடிஞ்சா, இந்த பிராஜெக்ட் முழுக்க இம்புரோவைஸ் பண்ணிக் கொடுங்கன்னு கேட்ருக்கான். இப்படி பாராட்டினா அதை கொண்டாட வேண்டாமா? இப்படியா சின்னப்பிள்ளை போல அடிச்சுக்கறது?” என்று சூடாக மாற இருந்த சூழ்நிலையை நீர்த்துப் போகச் செய்தாள்.

“கிளைன்ட் அப்படி கேட்டது பெருசு இல்ல மீரா, அதை நாம செய்ய இவ இங்க ஆபிஸ்ல இருக்கணும். கொடுத்த வேலையை செஞ்சிருந்தா இந்த தலைவலி இல்ல. கூட வேலை செஞ்சு எல்லாரையும் மாட்டி விட்டுட்டு இவ லீவ்ல போயிட்டா யாரு அவனுக்கு பதில் சொல்றது?” என்று காய்ந்த ராம்ஜி,

“போய் எல்லாம் வேலையை பாருங்க” என்று விலகிச் சென்றான்.

“அவனை விட்டுட்டு கிளைன்ட் உன்னை பாராட்டினதுல வந்த காண்டு டி இது” என்று கேத்தி போகும் ராம்ஜியை முறைத்துக் கொண்டு கூறினாள்.

“டீம் முழுக்க மாடியூல் எழுதிட்டு இனி இவகிட்ட ஒருதடவை காட்டி கேட்கணும், அவனோட வேல்யூ குறையுதே! அப்ப எரிச்சல் இருக்க தானே செய்யும்!” என்று நித்தினும் இணைந்து கொண்டான்.

“போதும் விடுங்க. நாம பார்க்காத பாலிடிக்ஸா? புத்தி உள்ளவன் மேல வந்தா, மேல இருக்குற மந்தமான ஆட்களுக்கு வர்ற கோபம் தான். சாதாரண விஷயமா நாம இதை கடக்கணும். சும்மா அவனை நோண்டி சண்டை போட்டு, அவனை பூதக் கண்ணாடி வச்சு நம்ம வேலையை மானிட்டர் பண்ண வைக்காதிங்க. அப்பறம் நிம்மதியா தண்ணி கூட குடிக்க விட மாட்டான்” என்று அனைவரையும் சமாதானம் செய்தாள் மீரா.

மூவரும் மாறி மாறி அவளுக்காக பேசிக் கொண்டிருக்க, யாருக்கு வந்த விருந்தோ என்று தன் மானிட்டரில் தெரியும் ஸ்கிரீன்சேவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

“என்ன டி ஆச்சு? உன் பாட்டி எப்பவும் போல சம்பிரதாய வேப்பிலை அடிச்சாங்களா? உன் ஆள் என்ன சொன்னார்? ஏன் இப்படி இருக்க?” என்று கேத்தி அவளை உலுக்கினாள்.

“ம்ம்” என்று நினைவுக்கு வந்தவள்,

“எல்லாம் ஓகே தான். வேலையை பார்க்கலாம்” என்று கவனத்தை திருப்பியதும், அவளை தொந்தரவு செய்யாது அவரவர் வேலையைத் தொடர்ந்தனர்.

மதிய உணவை கேன்டீனில் வாங்கி உண்ணும் போது, “என்ன டி இன்னிக்கு உன் ஆள் லஞ்ச் பேகை தூக்கிட்டு வரலையா?” என்று கேத்தி கேலி செய்ய,

அவளோ கோகுலகிருஷ்ணன் நினைவில் வெட்கப் பூக்களை உதிர்த்தாள்.

“பாரு டா நம்ம ஆருவுக்கு வெக்கமெல்லாம் வருது” என்று அவள் இடையில் விரலால் கிச்சுக் கிச்சு மூட்டிய கேத்தி முதுகில் இரண்டு அடிகளை பரிசாக வழங்கியவள்,

“அவரும் லீவ் முடிஞ்சு ஆபிஸ் போயிருக்கார்ல வேலை அதிகமா இருக்கும்.” என்று தன் செல்போனில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று எடுத்துப் பார்த்தாள்.

காலையில் அவனிடமிருந்து ஒரு இதய வடிவ எமோஜி மட்டும் வந்திருந்தது.

சின்ன சிரிப்புடன் ‘சாப்பிட்டாச்சா கிருஷ்?’ என்று தகவல் அனுப்பிவிட்டு பின் வேலையைப் பார்க்க கிளம்பி விட்டாள்.

நான்கு மணி அளவில் வயிற்றில் சுரீர் என்று வலி எடுக்க, சிரமத்துடன் எழுந்து ரெஸ்ட்ரூம் சென்றவள் மாத சுழற்சி நாளை கணக்கு வைக்காத தன்னையே திட்டிக் கொண்டு தேவையானவற்றை செய்து வெளியே வந்தாள்.

உடலில் அத்தனை அசதி. படுத்தால் போதும் என்ற எண்ணம் அவளை டேபிளில் தலை சாய்க்க வைத்திருக்க, கழுகு போல காத்திருந்த ராம்ஜி அங்கே வந்து சேர்ந்தான்.

“என்ன பண்ற ஆருத்ரா?” என்று பின்னால் வர,

நண்பர்கள் கூடுவதற்கு முன் தன் சிஸ்டமில் இருந்த பைல்களை அவனுக்கு மெயில் அனுப்பிய பக்கத்தை திறந்து,

“இன்னிக்கு வொர்க் ஓவர் ராம். ஐம் சோ டயர்ட். ஐம் லீவிங்” என்று அதையும் ஒரு மெயிலாக அனுப்பிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டாள்.

கேத்தியும் மீராவும் தங்கள் வேலையை முடிக்கவில்லை அதனால் அவள் பின்னே செல்ல முடியாத தங்கள் நிலையை நொந்தபடி இருக்க,

வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள் ஆருத்ரா.

வழியில் ஏதேதோ எண்ணங்கள் குடை விரித்தாலும், இந்த நேரத்தில் யோசிப்பது சரியல்ல, கோபம் மிகுந்து வரும் இந்த நாட்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

எப்பொழுதும் வரும் நேரத்துக்கு முன்பாகவே வந்தவளை வராண்டாவில் இருந்த சேரில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த ஆதிநாதன் வரவேற்றார்.

“வாம்மா. என்ன வேலை சீக்கிரம் முடிஞ்சுதா?” என்றதும்,

அசௌகரியம் காரணமாக இயல்பாக சிரிக்க முடியாமல் திணறியவள்,

“ஆமா மாமா.” என்று உள்ளே செல்ல முயன்றாள்.

“உட்காரு மா. மாமி அவளுக்கு காபி கொண்டு வர போயிருக்கா. உனக்கும் பூஸ்ட் கலந்து கொண்டு வர சொல்றேன்.” என்று அன்புடன் கூற,

“இல்ல மாமா. ரொம்ப தலைவலி. அதான் சீக்கிரம் வந்தேன். கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்.” என்று நகர,

“ஆமா ஆறு மணிக்குள்ள தூங்கி எழுந்துடு, இல்லன்னா வீட்ல கச்சேரி தான்” என்று உள்ளே பார்வையை வைத்தபடி கூறிவிட்டு சிரித்தார்.

பதிலுக்கு மெல்லிய புன்னகையை உதிர்த்த ஆருத்ரா அறைக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டாள்.

படுக்கை வா வா என்று அழைக்க,

இந்த வீட்டின் சாஸ்திர சம்பிரதாயம் என்னவோ என்று தெரியாமல் சில நிமிடம் விழித்தவள், உடல் வலி பொறுக்க முடியாமல், கட்டிலை தவிர்த்து, கப்போர்ட் ஓரத்தில் இருந்த பாயை விரித்து, தான் வைத்துக் கொள்ளும் தலையணை தலைக்கும், கோகுலின் தலையணையை காலுக்கும் வைத்து படுத்து விட்டாள்.

மாலை ஆறு பத்துக்கு வண்டியை போர்ட்டிகோவில் நிறுத்தி விட்டு எப்பொழுதும் தாயிடம் பூவைக் கொடுக்கும் கோகுல், இன்று அதை மறந்தவனாக மனைவியின் வண்டி நிற்பதைக் கண்டு நேராக அறைக்கு சென்றான்.

இதனை டைனிங் டேபிளில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சுபாவுக்கு சொல்லத் தெரியாத கோபம்.

உள்ளே நுழைந்தவன் மனைவி உறங்கும் நிலை கண்டு திடுக்கிட்டவனாக, அவளின் அருகில் அமர்ந்து அவள் முகத்தில் பறந்து கொண்டிருந்த முடிக் கற்றைகளை ஒதுக்கினான்.

“ருத்துமா.. என்ன டா இப்படி படுத்திருக்க?” என்று அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட,

பயந்து படாரென எழுந்து அமர்ந்தாள் ஆருத்ரா.

“என்ன பயம்? நான் தான் மா” என்று அவள் வலக்கையை பற்றி ஆறுதலாக கோகுல் உரைக்க,

“நான்… நான்… தூரம்… இங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியல. ஒரே வயித்துவலி வேற. அதான் படுத்திருந்தேன். எப்ப தூங்கினேன் தெரியல.” என்று அவசரமாக பதில் கூறினாள்.

“பீரியட்ஸ் தானே! அதுக்கு ஏன் பயப்படுற டா? ஒன்னும் இல்ல. நீ படுத்து தூங்கு. அம்மா கேட்டா நான் சொல்லிக்கிறேன். இந்த நேரம் மாத்திரை எதுவும் போடுவியா?” என்று கேட்க,

‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“குட். நான் சூடா குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன். ஹீட்டர் போடுறேன். குளிக்கணும்ன்னா குளிச்சிட்டு படு. சரியா?” என்று குழந்தைக்கு சொல்லுவது போல சொல்லி அவளை படுக்க வைத்து தலையை வருடினான்.

அவளும் பயம் நீங்கி மெல்ல கண்ணை மூடிக் கொள்ள, தான் கொண்டு வந்த மலர்களின் வாசம் அவளுக்கு தலைவலி ஏற்படுத்தி விடப் போகிறது என்று அவசரமாக அதனை வெளியே கொண்டு வரும்போது அன்னை எதிரே நிற்பதைக் கண்டு புன்னகைத்தான்.

“என்ன டா நேரா ரூமுக்கு போயிட்ட? காபி குடிக்கலையா? இல்ல உனக்கும் காபி பிடிக்காம போயிடுத்தா?” என்று கேட்டார் சுபாஷிணி.

அவர் கையில் பூ இருந்த கவரைக் கொடுத்தவன், “எனக்கு காபி வேணும். தா, தாராளமா குடிக்கிறேன். அதுக்கு முன்ன, அவளுக்கு சூடா ஏதானம் வேணும். ” என்று இயல்பாக அன்னையிடம் கூறினான்.

“ஏன் மகாராணி வெளில வந்து கேட்டு வாங்கி குடிக்க மாட்டாங்களா?” என்று நக்கலாக வினவிய அன்னையிடம் பொறுமையாக,

‘அவளுக்கு பீரியட்ஸ் மா. வலி அதிகமா இருக்கும் போல. படுத்துண்டு இருக்கா. சூடா கொடுத்தா இதம்மா இருக்கும்” என்று அவன் கூறியது தான் தாமதம்.

“ச்சே. என்ன பொண்ணு இவ? ஆத்துல இல்லன்னா முதல்ல எங்கிட்டன்னா வந்து சொல்லணும்? இப்படி கமுக்கமா ரூமுக்குள்ள உக்காண்டு உன்னை அனுப்பினாளா? வெளில வரச் சொல்லு டா.” என்று கோபத்துடன் குரலை ஏற்றினார்.

மனைவியின் குரல் கேட்டு ஆதியும் வெளியே வர,

மெல்ல அறை வாயிலுக்கு வந்து நிலையில் சாய்ந்து நின்றாள் ஆருத்ரா.

“பின்னாடி உள்ள ரூமுக்கு போயிடு. நாலு நாள் அங்க தான் இருக்கணும். சாப்பாடு நேரத்துக்கு நான் கொடுத்துடறேன். புருஷாளை பார்த்து பேசப்பிடாது. இதெல்லாம் உன் பாட்டி சொல்லித் தரலையா?” என்று கோபத்துடன் பேசிக்கொண்டே போனார்.

(புருஷா-ன்னா பொதுவா ஆண்கள்)

“பின்னாடி ரூமா? அம்மா அது பழைய சமான் எல்லாம் இருக்கற ரூம். ஒரே தூசியும் தும்புமா இருக்கு. அங்க எப்படி இருப்பா? அவபாட்டுக்கு எங்க ரூம்லயே ஓரமா இருக்கட்டும்.” என்று கோகுல் நடுவில் வர,

“இங்க பாரு டா. இந்த ஆத்துக்குன்னு சில சம்பிரதாயம் எல்லாம் இருக்கு. உங்கப்பா சாளக்கிராமம் வச்சு பூஜை பண்றார். நான் அம்பாளுக்கு அரிசி கலசம் வச்சு மாசமானா முதல் வெள்ளிக்கிழமை பொங்கல் வைக்கிறேன். சாரதாம்பாள் இருக்கா. இப்படி வீடெல்லாம் தெய்வ கடாட்சமா இருக்குறச்ச தீட்டை நடுவீட்ல வச்சுப்பேன்னு சொல்றதெல்லாம் நன்னா இல்ல.” என்று சீறினார்.

ஆருத்ரா கணவனை அருகே வரும்படி விழி அசைவில் அழைக்க,சுபா முறைத்தார்.

“நான் அங்கேயே இருக்கேன் கிருஷ். மாமி கிட்ட சண்டை போடாதீங்க” என்று மெல்லிய குரலில் அவள் கூறினாலும் அது ஆதிக்கு தெளிவாக கேட்டது.

மனம் பொறுக்க முடியாமல் கோகுலகிருஷ்ணன் , “இல்ல ருத்து அங்க ஒழிச்சு சரி பண்ணவே ரெண்டு நாள் ஆகும். பல்லியும் பூச்சியும் இருக்கும்.” என்று தவித்தான்.

ஆதிநாதன் சட்டென்று உள்ளே புகுந்து,
“எதுக்கு பின்னாடி ரூமுக்கு போகணும்? மாடில ஜிம் வைக்கணும்ன்னு ஒதுக்கின ரூம் சும்மா தானே இருக்கு. அதை சுத்தம் பண்ண ரெண்டு நிமிஷம் தான் ஆகும்.” என்று மருமகளை பார்க்க,

அவள் நன்றியோடு மாமனாரை நோக்கினாள்.

“சும்மா சும்மா என்னால மாடியேற முடியாது” என்று சுபா தவிர்க்க முயல,

“நானோ கோகுலோ படிக்கட்டு முடிவுல நீ தர்றதை வச்சிட்டு வர்றோம் சுபா. இது ஒன்னும் பழைய காலம் இல்ல. நீயும் ரொம்ப சாஸ்திரம் பார்க்காம அந்த குழந்தையோட வலியையும் பாரு” என்று கண்டிப்புடன் கூறியதும் சுபா அமைதியானார்.

அடுத்த நிமிடம் கையில் துடைப்பத்துடன் மாடிப்படிகளில் ஏறிய மகனை ஆதி மெச்சுதலாக நோக்க, ‘என் புள்ளையை எப்படி கைக்குள்ள போட்டு வச்சிருக்கா பாரு’ என்று பொருமினார் சுபாஷிணி.

16 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 13”

  1. Avatar

    Aaru avanga room la thoongum pothu yae bala ezhupum pothu andha alavuku bayandha ithula indha amma andha store room.la paduka solluraga mamiyar mamiyar than ennaikum even adi avar mela room la stay pannikatum nu sonnathuku kooda madi vera mudiyatham enna kadhai ithu but gokul avar sonna next second clean panna ponathu happy pa aana atha yum ivanga thapu ah than nenaikira ithae gokul suba ku seiyutha pasam aana aaru ku seiyutha mayaki vachi iruku ah enna kodumai da

  2. Kalidevi

    Yen mami ippadi pothuva iruka mamiyar mari panringa atha porumaiyavathu sollalam la .ithu ellam ponnukum varathu thane antha time rest edukanumnu solli utkaravachatha ippadi unga ishtathuku athu ithu solli mathi kasta paduthuringa. But gokul nalla support ah irukan ruthuma ku

  3. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 13)

    என்னத்தான் உடம்பு முழுக்க எண்ணையை தடவிட்டு மண்ணுல புரண்டு எழுந்தாலும், உடம்புல ஒட்டற மண்ணுத்தான் ஒட்டும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது மாதிரி தான் இந்த ஆருவோட மாமியார். அவங்களும் ஒரு பொம்பளைத்தானங்கிறதையே மறந்துட்டு, இந்த மாதிரி நேரத்துல அனுசரணையா இல்லாக்காட்டியும், உபத்திரவமா இல்லாம இருந்திருக்கலாம். ஆனா, எங்கே…? வாயும் சுத்தம் இல்லை, எண்ணமும் சுத்தம் இல்லை. வீட்டுல அம்பாளுக்கு பூஜை பண்றேன், சாரதாம்பாளுக்கு பூஜை பண்றேன்னு லிஸ்ட் பெருசா சொல்றாங்களே… வீட்டுக்கு வந்த மருமகளை மட்டும் ஏன் வாயில் போட்டு மெல்லுறாங்கன்னு தெரியலை. இந்த மாதிரி விஷயத்துல எலடலாம், ஓரளவுக்கு ஆம்பிளைக்க அனுசரிச்சு போனாலும், இந்த பொம்பளைங்க தான்ப்பா ஒரேயடியா முகத்தை காட்டுதுங்க. பொம்பிளைக்கு பொம்பிளையே எதிரின்னு சொல்றது தான் உண்மை, வேற யாரும் புதுசா எதிரிங்க வெளியே இருந்து வரத்தேவையில்லை.

    இந்த அத்தியாயத்தை படிக்கிறச்ச, அப்படியே நினைவுகள் பின்னோக்கி போய் என் வாழ்க்கையில நடந்ததெல்லாம் பொங்கி புரண்டு வந்துடுச்சு.

    எனக்கென்னவோ, இந்த வீட்ல ஆருத்ரா ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாதுன்னுத் தான் தோணுது. பேசாம, ஆருவும் கிருஷ்ஷூம் வெளியே போது தான் பெஸ்ட்.
    😪😪😪
    CRVS (or) CRVS 2797

  4. Avatar

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌👌👌

  5. Priyarajan

    Maamiyaare ellarum ipti thana….. So sad…maama purijikitare 👌👌👌👌 spr going waiting for nxt epi😍😍😍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  6. Avatar
    Anupama Ravichandran

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *