Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 14

மனம் உன்னாலே பூப்பூக்குதே 14

பூ 14

அடுத்து வந்த நான்கு நாட்களும் ஆருத்ரா எப்படி அந்த வீட்டில் நேரத்தை தள்ளினாள் என்றால் அது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருந்தது.

காலை எழுந்து குளிக்க எண்ணினால், அவள் துணிகள் இல்லை. கோகுலுக்கு புலனத்தில் செய்தி அனுப்ப, அவன் அரக்கப் பறக்க துணியுடன் அவளுக்கு ஒரு பேக்கெட் பிஸ்கட்டும் கொண்டு வந்து கொடுத்தான்.

அலுவலகம் கிளம்பி கீழே வந்தவள் வாசலில் நின்று மாமியாரை அழைத்தாள்.

“மாமி.. மாமி” என்று அவள் குரல்  கொடுக்க,

வெளியே வராமல் உள்ளிருந்தே பதில் தந்தார் சுபா.

“இன்னும் நான் சாமிக்கு விளக்கு கூட ஏத்தலை மா. நீ ஆபிஸ் போறதானா அப்படியே கிளம்பிக்கோ.” என்று கூறிவிட, அவள் வண்டியை எடுத்த நேரம் அங்கே வந்து சேர்ந்தார் ஆதிநாதன்.

“என்னம்மா சாப்பிடாம கிளம்பிட்ட?” என்று கேட்க, விரக்தியாக ஒரு புன்னகை சிந்தியவள்,

“டிபன் சாப்பிட்டு தான் ஆபிஸ் போவேன். நீங்க என்னோட பேசுறது பார்த்தா மாமி திட்டுவாங்க. நான் வரேன்” என்று கிளம்பி போயே விட்டாள்.

அவள் வண்டி சத்தம் கேட்டு கையில் லஞ்ச் பேக்குடன் வந்த கோகுல்,

“என்னப்பா சொல்லாம போயிட்டா?” என்று கேட்க,

“அவ உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு தான் போறா. நல்ல வேளை எனக்கு பெண் குழந்தை பிறக்கல. சாஸ்திரம் சம்பிரதாயம்ன்னு இப்படி சோறு கூட போடாம அனுப்பிட்டாளே. நினைக்கவே கஷ்டமா இருக்கு. அவ ஆபிஸ் தூரமா வேற இருக்கு. இல்லாட்டா நானே போய் இதை கொடுத்திடுவேன்.”  என்று அங்கலாய்ந்தார்.

“இவ்வளவு பேசுறல்லப்பா அம்மா கிட்ட சொல்லலாம் இல்லையா?” என்று கோகுல் ஆதங்கப்பட,

“நாள், கிழமை, சாஸ்திரம், தீட்டுன்னு அவ பேச ஆரம்பிச்சா யாரு டா அதை பொறுமையா கேட்கறது? அதுவும் இல்லாம திடீர்னு உன் அம்மாவுக்கு ஆருத்ரா மேல என்னவோ கோவம். சரி பொம்பளைங்க சமாசாரம் நாம தலையிட்டுக்க வேண்டாம்னு இருக்கேன். எனக்கே கடுப்பாச்சுன்னா கண்டிப்பா பேசிடுவேன். அதுவரை உன் ஆத்துக்காரியை நீ தான் டா பார்த்துக்கணும்.” என்று அவன் தோளில் தட்டிவிட்டல்லே சென்றார்.

அவசரமாக தானும் அலுவலகம் கிளம்பி, போகும் வழியில் ஆருத்ராவுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு தான் சென்றான் கோகுல்.

காலையில் அவன் கொடுத்த பிஸ்கெட், இப்போது கொண்டு வந்த உணவு என்று அவன் அவளுக்காக செய்யும் அனைத்தும் ஆருத்ரா மனதில் அவனை எண்ணும்போதெல்லாம் பூப்பூக்கச் செய்தது.

மாலை வீட்டிற்கு வந்தவள் கொல்லையில் உள்ள பைப்பில் டிபன் பாக்ஸை கழுவி பின் வாசல் படியில்  வைத்து விட்டு தான் மாடிக்குச் சென்றாள்.

கால்கள் குடைந்தன. இப்படியே நான்கு நாட்கள் கழிந்தது.

அதன் பின் வந்த நாட்களில் அவளும் யாரிடமும் அதிகம் பேசிக் கொள்ளாமல் சொன்ன வேலைகளை செய்துவிட்டு தங்கள் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

அதற்கு காரணம் மாமியார் காட்டும் அதிக முகத்திருப்பல்கள் கூடவே தனிமையில் கோகுல் அவளிடம் காட்டும் அன்பும் ஆசையும்.

நாட்கள் அதன்போக்கில் செல்லத் துவங்கியது. மாமியாருக்கும் மருமகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்படுவது போல சூழல் எழுந்தாலும் ஆருத்ரா அதை தவிர்த்து அங்கிருந்து விலகி, ஒதுங்கி இருக்கத் துவங்கினாள்.

ஆதி இதெல்லாம் கண்டும், பெண்கள் அவர்களே பேசித் தீர்க்கட்டும் என்று தள்ளி நின்று கொண்டார்.

கோகுல் இதை அதிகம் கவனிக்கவே இல்லை. காரணம் அவனது அலுவலகத்தில் புதிதாக வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் கணக்குகள் அவரது பங்குதாரர்களால் குளறுபடி செய்யபட்டு அவர் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டிருந்தார். அதனை சரியாக ஆராய்ந்து அறிக்கை அளித்தால் தான் அவரால் வழக்குத் தொடுக்க முடியும் என்ற நிலையில்  சீனியர் இவனிடம் அப்பொறுப்பை ஒப்படைக்க அவனுக்கு வீட்டிற்கு வந்தால் உண்டு, மனைவியுடன் சுகித்து, உறங்கி எழவே சரியாக இருந்தது.

அன்று அவர்கள் திருமணம் முடிந்து  வரும் முதல் பண்டிகை. அதிலும் தீர்க்க சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பு. முதல் நாள் இரவே சுபா தேவையான வேலைகளை கவனித்தபடி, மறுநாள் காலை நல்ல நேரம் பார்த்து நோன்பு சரடு கட்ட எல்லாம் ஆயத்தம் செய்தார்.

அன்று ஆருத்ராவின் அலுவலகத்தில் அவளுக்கு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது. ஆனால் நோன்பின் முக்கியத்துவம் அறிந்து, ராம்ஜி திட்டினாலும் பரவாயில்லை என்று அரைநாள் விடுப்பு வேண்டி மின்னஞ்சல் அனுப்பி விட்டாள்.

காலை நான்கு முப்பதுக்கே சமையலறையில் பாத்திரங்களின் சத்தம் கேட்டது.

எழுந்து செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் உடலின் அசதியும் சோர்வும் போட்டி போட்டு சற்று நேரம் தூங்கு, ஐந்து மணிக்கு போகலாம் என்று அவளை அமுக்க நினைத்தது.

முயன்று ஐந்துக்கு முன் எழுந்தவள் முகம் அலம்பி, பல் துலக்கி விட்டு சமையலறை செல்ல, மாமியார் மடிசாரில் சமையல் வேலையாக இருந்தார்.

கண்களை நன்றாக தேய்த்து விட்டுக் கொண்டு கண்டவள், அது உண்மை தான் என்று உணர்ந்து, உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றாள்.

“எவ்வளவு நேரம் அங்க நிக்கிறதா இருக்க?”  சுருக்கென்று வெளிவந்தது சுபாவின் கேள்வி.

“இல்ல மாமி நீங்க.. மடியா? நான் இன்னும் குளிக்கல. அதான் வரலாமா இல்ல போய் குளிச்சிட்டு…” என்று இழுத்தாள்.

“போ போய் குளிச்சு மடிசார் கட்டிண்டு வா.  இப்ப தான் சுவாமி இடம் சுத்தம் பண்ணி அம்பாளுக்கு அலங்காரம் பண்ணிட்டு வந்தேன்.  இனிமே தான் சமையல், அடை எல்லாம் பண்ணனும். போய் ஆச்சுன்னு ரெடியாகி வா.” என்றார்.

‘மடிசாரா?’ என்று விழித்தவள்,

“மாமி நான் ஆறுகஜம் கட்டிக்கிறேனே!” என்றது தான் தாமதம்,

“இந்த காலத்து பொண்களுக்கு கொஞ்சமானம் பெரியவா சொல்றாளேன்னு மரியாதை இருக்கோ? ஆபிஸ்க்கு தான் காலை இறுக்கிப் பிடிக்கிற லெகின்ஸ் மாட்டிண்டு போற,  செவ்வாய், வெள்ளிக்கிழமை கூட சொன்னா தான் புடவை கட்டிண்டு போற. இப்ப நாளும் கிழமையுமா ஒன்பது கஜம் கட்டச் சொன்னா, ஆறு கட்டுறேன், அது இதுன்னு” என்று அவர் குரலை உயர்த்திக் கொண்டே போனார்.

“மாமி எனக்கு கட்டத் தெரியாது, இவ்வளவு வேலைக்கு இடையில உங்களை கட்டிவிட சொல்லி கூப்பிட சங்கடமா இருந்தது. அதான் அப்படி கேட்டேன். இப்ப என்ன மடிசார் கட்டிக்கணும். அவ்வளவு தானே! வர்றேன் இருங்கோ” என்று விறுவிறுவென்று அறைக்கு சென்றுவிட்டாள்.

ஹீட்டர் போட்டு விட்டு கைபேசியை தேடி எடுத்து யூடியூபில் மடிசார் கட்டிக் காட்டும் வீடியோ ஒன்றை காணத் துவங்கினாள்.

அது அவர் சொல்லும்போது எளிமையாக இருந்தாலும் மடக்கி சொருகு, கீழ விட்டு எடு, பின்னே கச்சம் இறுக்கு என்று கேட்க கேட்க இதெல்லாம் நினைவில் நிற்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

தலைக்கு குளித்து துவலை கொண்டு துவட்டி, ஜாக்கெட் போட்டு, ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்து திருமண புடவையை எடுத்து அந்த வீடியோவை ஓட விட்டபடி, அவர் கூறிய முறையை அப்படியே பின் தொடர்ந்தாள்.

கச்சிதமாக வரவில்லை என்றாலும் அவளது உடலுக்கு அப்புடவை பாந்தமாக பொருந்தியது.

கால் தான் பாதி வரை நடக்கும்போது வெளியே தெரிய சங்கடமாக உணர்ந்தாள் ஆருத்ரா.

முட்டியளவு ஸ்கர்ட் போடும்போது வராத கூச்சம் காலை உரசும் புடவைக்கு இடையில் காற்று புகுந்து கூச்சம் கூட்டியது.

அவள் சமையலறை செல்ல, அங்கே மாமனார் மிக்ஸியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்தார்.

மருமகளைக் கண்டதும், “பலே பலே.. கார்த்தாலயே குளிச்சு மடிசார் கட்டிண்டு.. ஆரும்மா அருமை டா” என்று புகழ,

“நீங்க தான் மெச்சிக்கணும் உங்க நாட்டுப்பொண்ணை. இதுக்கு இவளோட எவ்வளவு போராட்டம்?” என்று தலையில் அடித்துக் கொண்டு விலகினார் சுபாஷிணி.

ஆருத்ரா தலை கவிழ்ந்து நிற்க,

“ஆரும்மா, அதெல்லாம் கண்டுக்காத டா. நீ செய்யற வேலையும் பூஜையும் பார்த்து மாமி உன்னை இன்னிக்கு கொஞ்சனும். சரியா?” என்று அவளை சமாதானம் செய்யும் பொருட்டு பேச, கண்களில் கண்ணீர் சேர்ந்தது அவளுக்கு.

“மாமி என்ன பண்ணட்டும்?” என்று அவரிடம் சென்று நின்றவளிடம்,

“போ மாடில முல்லைப் பூவும் அரளியும் பூத்திருக்கும். சுவாமிக்கு அர்ச்சனை பண்ணனும். எல்லாத்தையும் பறிச்சிண்டு வா” என்று அனுப்பினார்.

படி ஏறும்போதெல்லாம் அவளுக்கு கால் தடுக்கியது, அல்லது புடவை மேலே ஏறிக்கொண்டு சங்கடம் கூட்டியது.

‘இந்த பூவைப் பறிக்க மடிசார் தேவையா? பூஜைக்கு முன்னாடி கட்டிக்க சொன்னா போதாதா?’ மனதில் ஆதங்கம் கடலாய் ஆர்பரித்தது.

எட்டி எட்டி பூப்பறிக்க புதிதாய் வலது பக்க இடுப்பில் காற்றும் செடிகளின் கிளைகளும் மோத, அவஸ்தையாய் இருந்தது.

உச்சுக் கொட்டிக் கொண்டே பூக்களை பறிக்க முயன்றாள். ஆனால் சிறுவயதில் அன்னை சொன்னது நினைவில் வந்தது.

‘கடவுளுக்கு பூப்பறிக்கும் போது கூட அவரை நினைத்தே பறிக்க வேண்டும். அப்பொழுது தான் அது அவர் பாதத்தை சென்றடையும்’ என்று.

கண்களை மூடி அமைதியானவள் அவளுக்கு நன்றாகத் தெரிந்த சண்முக கவசத்தை முணுமுணுத்தாள்.

“அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…”

அதன் பின் உடையின் அசௌகர்யமோ,  இடையில் உரசிய செடி கொடிகளோ அவள் கவனத்தில் பதியவே இல்லை.

நேரம் செல்லச் செல்ல, கவசம் முடிவுக்கு வரும் நேரம்  அவள் இடையில் வெம்மையாய் கைகள் படர்ந்ததும் பூக்கூடையை தவற விட இருந்தவள் கடைசி நொடியில் சுதாரித்துத் பிடித்தாள்.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நின்றான் கோகுல கிருஷ்ணன்.

குளித்து உடலில் விபூதி பூசி வேற்று மார்பில் விபூதி வாசனையும் ஜவ்வாது வாசனையும் சேர்ந்து அவளை ஒரு நொடி திணற வைத்தது.

அவள் காதில் இருந்த தோடு அவன் பூணலில் மாட்டிக் கொண்டது.

“என்னப்பா இப்படி பண்றீங்க? இன்னிக்கு காரடையான் நோன்பு, மாமி ஏற்கனவே என் மேல கோபத்துல இருக்காங்க. நேரமாச்சு நான் போகணும். என்னை விடுங்க.” என்று சிணுங்கினாள்.

“ஏன் ருத்தும்மா என்னை விட்டு எழுந்து வந்த? காலைல எப்பவும் வாங்குற டர்ட்டி கிஸ் வாங்காம என் நாள் எப்படி நல்லா இருக்கும் சொல்லு?” என்று மொட்டை மாடியில் முல்லைப் பந்தலுக்கு பக்கத்தில் அவளோடு நெருங்கி நின்று அவன் சேட்டை செய்ய,

“பா.. போதும். ப்ளீஸ். இன்னிக்கு ரெண்டு பேரும் குளிச்சாச்சு. சோ நோ மோர் டர்ட்டி கிஸ். ஒன்லி பியூட்டி கிஸ்” என்று அவன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு தோடை லாவகமாக அவன் பூணலில் இருந்து பிரித்து எடுத்தாள். அவன் கைகளில் சிக்காமல் ஒரே ஓட்டமாக புடவையைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி மறைந்தாள்.

பூவை கொடுத்து விட்டு மாமியார் முகத்தை நோக்கினாள்.

அவரோ, “என் மூஞ்சில என்ன இருக்கு? போ போய் உப்படை தட்டி இட்லி பாத்திரத்தில் வை. நான் இந்த நூத்தி எட்டு படிச்சிட்டு வரேன்” என்று கூறிவிட்டார்.

‘உப்படையா? அப்படின்னா?’ என்று மனதிற்குள் புலம்பியவள், மெல்ல சமையலறைக்குள் நுழைந்தாள்.
இட்லி பாத்திரத்தில் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து விட்டு,

அடைக்கு மாவை எங்கே வைத்திருக்கிறார் என்று தேடலானாள். சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்தார் ஆதிநாதன்.

அவள் பாத்திரங்களில் துழாவிக் கொண்டிருக்கக் கண்டவர், “என்ன ஆரூ, என்ன தேடற?” என்று வர,

“ஏதோ உப்படை பண்ணனுமாம் மாமா? அதுக்கு மாவு எங்க இருக்கும்?” என்று விழிக்க,

“நீ சாப்பிட்டது இல்லையா டா?” என்று வாஞ்சையாக வினவினார்.

“சின்ன பிள்ளைல சாப்பிட்டு இருக்கலாம் மாமா. அம்மா அப்பா பேசியது, விளையாடியது, வெளியே போனது எல்லாம் தான் மனசுல சேமிச்சு வச்சிருக்கேன். அம்மா சமையல் பண்ணினது எல்லாம் நினைவுல இல்ல.” என்று திணறினாள்.

“இங்க வா” என்று அடுப்புக்கு பக்கத்தில் இருந்த இரண்டு பாத்திரங்களைத் திறந்து காட்டினார்.

“இதோ பார் இது தான் காராமணி போட்டு உப்பு காரம் சேர்த்த உப்படை, இது வேற, வெல்லம் சேர்த்து வெல்லடை.

இதை இப்படி எடுத்து, உருட்டி, அப்பறம் உள்ளங்கைல வச்சு அழுத்தினா வடை போல வரும். நடுவுல ஆள்காட்டி விரல் வச்சு ஒரு சின்ன குழி மாதிரி பண்ணிட்டு அப்படியே இட்லி தட்டில் வைக்கணும்.” என்று சொல்லிக் கொடுத்தார்.

“ஓ. தேங்க்ஸ் மாமா.”என்று புன்னகைத்த மருமகளை கண்டவர்,

“நீ நல்ல பொண்ணு தான். ஏனோ சுபா மனசுல உன் மேல ஒரு அபிப்பிராயம் விழுந்து போச்சு. அவளே அதை சரி பண்ணிப்பா. நீயும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ. தெரியாததை கேளு. இப்படி முழிச்சுண்டு நிக்கப் பிடாது.” என்று சிரித்தார்.

அவர் சொல்லிக் கொடுத்தது போலவே செய்து பார்த்து அது சரியாக வந்ததும் பெருமைப்பட்டுக் கொண்டாள்.

அதைக் கண்டு அவள் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினார் ஆதி.

அவள் இருந்த மாவில் எத்தனை செய்ய முடியுமோ செய்து ஆவியில் வேக வைத்து விட்டு, பத்து நிமிடத்திற்கு பின் அணைத்து விட்டாள்.

அதன் பின் சுபா வந்து வேலைகளை தொடர்ந்தவர் மருமகளை கண்டுகொள்ளவில்லை.

அவளும் அமைதியாக சுவாமி படங்களுக்கு பூ வைக்கச் சென்று விட்டாள்.

காலை அலுவலக நேரம் நெருங்கும் சமயத்தில் கோகுல் கிளம்பி ஹாலுக்கு வர,

“என்ன டா அவ்வளவு தூரம் சொல்லி இருக்கேன். இப்படி ரெடியாகி வந்தா என்னா அர்த்தம்?”  என்று கோபம் காட்டினார் சுபா.

“அம்மா ஆபிஸ்ல வேலை எக்கச்சக்கமா இருக்கு மா. சரடு தானே கட்டணும். நீயே கட்டி விடேன்.” என்று முழுக்கை சட்டைக்கு பட்டன் சரி செய்தபடி பேசினான்.

“மாசம் பதினொரு மணிக்கு தான் பொறக்கறது, மாசிலயே சரடு கட்டிண்டா நல்லது தான். இன்னொரு அரை மணி நேரம் இரு. நைவேத்யம் பண்ணிட்டு அப்பா எனக்கு சரடு கட்டினதும், நீ அவளுக்கு கட்டிட்டு கிளம்பு” என்று முடிவாய் கூறிவிட்டார்.

கடுப்புடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான்.

ஆருத்ரா அமைதியாக பூஜை அறைக்கு வெளியே அமர்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்தாள். அவளது தந்த நிற உடலில் அந்த அரக்கு நிறப் புடவை அத்தனை அழகாக இருக்க, கண்களால் அவளை கபளீகரம் செய்து கொண்டிருந்தான் கோகுல்.

சரியாக அதே நேரம் வெளியே வந்த சுபா, “ஏம்மா அடை தட்டி வச்சியே ஒத்தப் படையில் வர்ற மாதிரி தட்டி இருக்கப் பிடாதா?” என்று கேட்டு தட்டில் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தார்.

அதைப் பற்றி எதுவும் தெரியாத அவள் விழித்துக் கொண்டிருக்க, ஆதி அதை தூரத்தில் இருந்து கண்டு சிரித்தார்.

இருவரும் தத்தமது கணவன்மார்கள் திருக்கரங்களால் காரடையான் நோன்பு சரடை கட்டிக் கொண்டனர்.

“உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நான் செய்தேன்

ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்”

என்று சுபா வேண்டிக் கொள்ள, அவரைப் பார்த்து ஆருத்ராவும் அவ்வாறே வேண்டிக் கொண்டாள்.

“கவலையேபடாத ருத்தும்மா உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்று அவள் காதில் மென்மையாக கூறிய கோகுலைக் கண்டு புன்னகைத்தாள்.

கணவனை நமஸ்கரித்து மாமியார் மாமனார் பாதங்களில் பணிய, ஆதி அவள் உச்சியில் கை வைத்து வாழ்த்தினார்.

சுபாவோ, “சாயங்காலம் ஆத்துக்கு நம்ம சொந்தக்காரா சிலரெல்லாம் வருவா. வருஷா வருஷம் வர்றது வழக்கம்.  நேரத்துல ஆபிஸ்ல இருந்து ரெண்டு பேரும் வந்து சேருங்க.” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல,

கோகுல், “வேற வேலை இல்ல. இவங்க உட்கார்ந்து ஊர் புரளி பேச நான் ஆபிஸ் வேலையை விட்டுட்டு வரணுமா? யார் வரப் போறது? அந்த மங்களம் அத்தையும் இன்னும் நாலு மாமிகளும் தானே! போங்கப்பா” என்று ஆதியிடம் நொடித்தான்.

“டேய் இதெல்லாம் அவா சங்கதி. நமக்கேன்? அடை சாப்பிடலாம் எடு”என்று மகனை அவர் சுரண்ட,

வெண்ணெயை நடுவில் வைத்திருந்த உப்படை ஒன்றை எடுத்து தந்தையிடம் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை உண்ண ஆரம்பித்தான்.

“நன்னா இருக்கு பா. இஞ்சி தூக்கலா ஜம்முனு பஞ்சாட்டம் இருக்கு” என்று சிலாகித்த மகனிடம்,

“என் நாட்டுபொண்ணு பண்ணினதாக்கும். யாரு சொல்லிக் கொடுத்தது. ஐயா டா.. எங்க டிரெய்னிங் அப்படி” என்று சட்டை காலரை தூக்கி விட்டுக் கொள்ள,

பத்திரகாளி போல அங்கே வந்தார் சுபா.

“காலைல எழுந்து அடைக்கு மாவு பிசைஞ்சு, காராமணி வேகவச்சு, இஞ்சி துருவி, தாளிச்சு அடை மாவு செய்தது நான். ஆவில வேக வச்ச அவ உங்களுக்கு உசத்தியா போயிட்டாளா? அதையும் அவளுக்கா செய்யத் தெரியல. நீங்க தான் சொல்லிக் கொடுத்திருக்கேள்.இந்த லட்சணத்துல அவ பண்ணினாதா பெருமை வேற” என்று உரக்கப் பேச,

அப்பொழுது தான் கணவன் அவள் கையில் திணித்த அடையை வாயில் வைக்கச் சென்றவள் அப்படியே டைனிங் டேபிளில் இருந்த காலித் தட்டில் வைத்துவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.

கோகுல் அன்னையை அதிருப்தியாய் நோக்கி அங்கிருந்து சென்றான்.

ஆதியோ, “அவ சின்னப் பொண்ணு, இப்ப தான் இதெல்லாம் பார்த்து பழகறா. நம்மாத்துக்கும் புதுசு. அவளோட சின்னச் சின்ன செயல்களை பாராட்டினா தான் நம்ம வீடுன்னு அவளுக்கு ஒரு எண்ணம் வரும்.  அடையை நீயே செய்திருந்தா தான் என்ன இப்போ. அந்த குழந்தையை ஒரு வார்த்தை பாராட்டினா அதுக்கு ஏன் பாஞ்சிண்டு வர்ற? இதெல்லாம் நன்னா இல்ல சுபா. அவளுக்கு தெரியலன்னா கூட கத்துண்டு செய்யணும்னு ஆர்வம் இருக்கு. நீயே பேசிப் பேசி அந்த குழந்தையை வெறுத்துப் போக வைக்காத. அப்பறம் கோகுல் பேசறான், நான் திட்டினேன்னு அழுது புண்ணியமில்ல.₹ என்று பின்வாசல் பக்கம் சென்று விட்டார்.

கோகுல் அப்போதே அங்கிருந்து  நகர்ந்து, கிளம்பி ஆபீசுக்கு போயிருந்தான். அவன் முன்னே அவர் பேசி இருந்தால் சுபா அதற்கும் ஒரு மூச்சு கத்தி இருப்பார்.

அமைதியாக ஆரம்பித்த காரடையான் நோன்பு அதிருப்தியில் முடிவுக்கு வந்தது. விடுப்பு மதியம் வரை இருந்தாலும் பத்தரை மணிக்கு உடை மாற்றி வீட்டை விட்டு அலுவலகம் கிளம்பி விட்டாள் ஆருத்ரா.

14 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 14”

  1. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 14)

    அய்யோடாம்மா…! இந்தம்மா மனுஷியா இல்லை வேறெதாவதான்னு சந்தேகமே வந்துடறது. அதெப்படித்தான் பொண்ணே இல்லாத வீட்ல மருமகளா வந்தவளை தூக்கி வைச்சு கொண்டாடத் தோணாம… இப்படி நாக்குல விஷத்தை வைச்சிட்டு கக்குறாங்களோ தெரியலை..?
    இத்தனை தூரம் பேசுறவங்க பின்னாடி புரிஞ்சுக்கிட்டு நல்லவங்களா, தேனொழுகப்
    பேசினாலும்… இவங்க கிட்ட
    குழையத் தோணாது போலயிருக்கே… நெருங்கவும் பயமாயிருக்கு.

    தவிர, இந்தம்மா என்னைக்கோ ஒரு நாளைக்கு, ஆழித் தாண்டவமோ இல்லை ருத்ர தாண்டவமோ ஆடப் போறாங்கன்னு… நல்லாவே தெரியுது. அத்தோட, இந்தம்மா இருக்கிற திசைக்கு ஒரு பெரிய கும்பிடை போட்டுட்டு ஆருத்ரா நடையை கட்டப் போறாளோ..
    இல்லை மனசு விட்டுப் போறாளோ தெரியலையே..???
    😢😢😢
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    அய்யோ பாவம் ஆருத்ரா, இந்த சுபா மாமியிடம் நல்ல பேரு வாங்கறது ரொம்ப கஷ்டம். ஆண்கள் இருவரும் பட்டும் படாமலும் மாமியை கண்டிக்கிறார்கள் , சுபா எப்ப திருந்துமோ?? நாம் நம் உறவுகளை நோகடித்து விட்டு என்ன பூஜை என்ன வழிபாடு செய்து என்ன பயன்????
    போதும் பிரவீணாம்மா ஆரு பாவம் ….

  3. Kalidevi

    Intha mami Yen tha ippadi pesitu irukanglo onu onukum koraiya sollitu irukanga ippadi pesitu iruntha veruthu tha pogum

  4. Avatar

    Eththana poojai punaskkaaram panni ammanjallikku piraiyojanam ella…veettukku vaazha vantha ponna nallaa paaththukka thuppilla…ethula nonbu kayiru vera…yove iyerey antha kayira kazhuththula pottu thookkunga 😎😎😎😎

  5. Avatar

    பாவம் நோன்பு கொழக்கட்டைய வாய்ல வைக்க விடாம , என்ன ஜென்மமோ😡😡😡😡😡

  6. Avatar
    Anupama Ravichandran

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  7. Avatar

    ஆனாலும் அந்த அம்மா கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்காங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *