Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1

அக்டோபர் மாதத்தின் மத்தியில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது.  

ஏதோ புயல் உருவாகி இருப்பதாகவும் இரண்டு நாட்களில் கரை கடந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறிய அறிக்கையை செய்திகளில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். 

இன்று சாயங்காலம் ஆரம்பித்த மழை சோர் என்று இன்னும் பெய்து கொண்டு இருந்தது. கூவம் ஆற்றின் கரையில் அமைந்திருந்த சேரியில் ஒரு குடிசையில் இயற்கை உபாதையால் உறக்கம் களைந்து எழுந்தான் கதிர் எனும் பத்து வயது சிறுவன். 

அவர்களது ஓலை குடிசை ஒழுகாமல் இருப்பதற்காக அங்கங்கு சொருகி வைத்திருந்த ஃபிளக்ஸ்சில், மழை நீர் பட்டு மழையின் சத்தம் இன்னும் இரைச்சலாக குடிசைக்குள் அதிகம் கேட்டது. 

மழைச் சத்தத்தை விட ஏதோ சில விசித்திரமான சத்தமும் கலந்து கேட்க, அதில் பயந்த கதிர் அருகில் உறங்கிக் கொண்டிருந்த தன் அக்காவிடம் நெருங்கி படுத்தான். 

பயத்தில் அவன் உடல் நடுங்குவதை உணர்ந்த அவனது பதிமூன்று வயது அக்கா, தன் தம்பியின் காதுகளை மூடியவாறு, தன்னுடன் அணைத்து படுக்க வைத்துக் கொண்டாள். 

தன் அக்காவின் அணைப்பிலேயே அப்படியே உறங்கி விட்டான் கதிர். 

சிறிது நேரத்திற்கெல்லாம் மழை சத்தம் கொஞ்சம் குறைந்தது.  “ச்சே” என்று சலித்தவாறு தன் மனைவியை காலால் மிதித்து தள்ளிவிட்டு பீடியை எடுத்து பற்ற வைத்து, புகைத்த வாறு குடிசையை விட்டு வெளியேறினான் முனியன். 

அவன் வெளியேறியதும் தாயின் விசும்பல் சத்தம் கேட்டது. தினமும் இப்படித்தான் தந்தை தாயை மிதித்துவிட்டு சென்றுவிடுவார். அவர்களது அம்மா ராணியும் அழுது கொண்டே இருப்பார். 

தாயின் அழுகை சத்தத்தத்தை கேட்டபடியே உறங்கி விட்டாள் மாதவி. 

ராணி வீட்டு வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றிக் கொண்டு இருக்கும் ஒரு சாதாரண பெண்மணி. 

அவரது அம்மா அவரை படிக்க வைக்க முடியாமல் வயதுக்கு வந்து இரண்டு மூன்று வருடங்களிலேயே முனியனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். 

திருமணம் முடித்த நாளிலிருந்து ராணி கொடுமையை மட்டும் அனுபவித்து வருகிறார். கல்யாணம் முடிந்து அடுத்த வருடத்திலேயே மாதவி பிறந்து விட, மூன்று வருடம் கழித்து கதிரும் பிறந்து விட்டான். 

ராணியின் அம்மா இருக்கும் வரைக்கும் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பாட்டிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவரும்  வீட்டு வேலை  செய்து கடைசி வரை உழைத்துக் கொண்டுதான் இருந்தார். 

அவர் சாகும் வரையில் மகள் படும் கஷ்டத்தை பார்த்து, “தெரியாமல் உனக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வைத்து, உன் வாழ்க்கையை கெடுத்து விட்டேன்” என்று தினமும் ராணியை இடம் சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் இருந்தார். 

ராணியின் கணவன் முனியன் ஒரு மொடா குடிகாரன். குடிப்பதற்கு காசு வேண்டும் என்பதற்கு எந்த வேலையையும் செய்ய தயாராக இருப்பான். அவன் கையில் காசு வந்த அடுத்த நொடியே சாராயக்கடையில் தான் போய் நிற்பான். குடித்துவிட்டு வந்து அமைதியாக இருக்கும் வழக்கமும் அவனுக்கு கிடையாது.

எப்பொழுதும் வீட்டிற்கு வந்ததும் சண்டைதான். மனைவி மக்களையும் மட்டுமல்லாது மாமியாரையும் சேர்த்து தேவையில்லாமலும், கேவலமாகவும் ஏதாவது பேசிக் கொண்டு தான் இருப்பான். 

இரவு ஆகிவிட்டால் மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்த ஆரம்பித்து விடுவான். தினமும் அடி உதை. இதுதான் ராணிக்கு கிடைக்கும் பரிசு. சரியான உணவு இல்லாததாலும் முனியனின் கொடுமையினாலும் சீக்கிரமாகவே ராணி மிகவும் பலகீனமாகி விட்டார்.  மனைவியால் தனக்கு முழுமையாக சுகம் கொடுக்க முடியவில்லை என்று வெளியேவும் செல்ல ஆரம்பித்து விட்டான். 

குடி அடி உதை என்று அவனது கொடுமையை அனுபவித்த ராணியால், வேறு பெண்களை அவன் நாடுவது ஏற்றுக்கொள்ள முடியாமல், ஆரம்பத்தில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள். அதற்கு மசிபவனா அவன். அவளை இன்னும் கேவலமாக பேசி, நேரம் காலம் தெரியாமல் அவளை நாடி, கொடுமை படுத்த ஆரம்பித்தான். அவனின் சித்திரவதைக்கு பயந்து பின்னாளில் அவன் எக்கேடும் கெடட்டும் என்று அமைதியாகிவிட்டார். 

நாட்கள் கடக்க அவன் பழக்கவழக்கங்களிலும் நிறைய மாற்றங்கள் வந்தது. உலகில் இருக்கும் அனைத்து கெட்ட பழக்கங்களையும் கற்றுக் கொண்டான். 

அதன் பிறகு அவனைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் எதுவும் நல்லதாகவே இல்லை ராணிக்கும் அவரின் அம்மாவிற்கும். அவனின் தீய பழக்கங்களை கண்டு மாதவியைக் கூட அவனின் அருகில் விட பயந்தார்கள். 

அந்தக் கவலையிலேயே ராணியின் அம்மா இறந்து விட, ராணி ராணியால் குடும்பத்தை பராமரிக்க முடியாமல், அவளின் அம்மா பார்த்த வீட்டு வேலைகளை இவர் பார்க்க ஆரம்பித்து விட்டார். அன்றிலிருந்து இன்று வரை பிள்ளைகளின் சாப்பாட்டிற்காகவும் கணவனின் குடி செலவிற்காகவும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார் ராணி. 

நேற்று இரவும் தன் மனைவியிடம் கிடைத்த சுகம் போதாததால் அவளை திட்டி விட்டு இரவில் சென்றவன் தான் இன்னும் வரவில்லை. 

மழை பெய்தால் என்ன வெயில் அடித்தால் என்ன வீட்டு வேலை செய்ய ராணி சென்றே ஆக வேண்டிய கட்டாயம். காலையிலேயே எழுந்து பிள்ளைகளுக்கு சாப்பாடு கட்டுவதற்காக சோறு ஆக்கி வைத்து விட்டு காய்கறிகள் எதுவும் இல்லாததால் ரசம் மட்டும் செய்தார். 

அதற்குள் கொஞ்சம் விடியத் தொடங்க வெளியே ஜன நடமாட்டம் தொடங்கியது. இன்றும் மழை இருக்கும் ஆதலால் பள்ளிக்கூடம் லீவு விட்டிருப்பதாக, டீ கடைக்குச் சென்று வந்த எதிர்வீட்டு தாத்தா ராணியிடம் தெரிவித்தார். 

பிள்ளைகளும் இந்த மழை நேரத்தில் பள்ளிக்குச் சென்று கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்திருந்த ராணி எதிர்வீட்டு பாட்டியிடம், “அப்படி என்றால் பிள்ளைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் மா இந்த மனுஷன் நைட்டு போனவரு இன்னும் வரலை” என்று சொல்லிவிட்டு காப்பி போட்டு குடித்து விட்டு செல்லலாம் என்று கடுங்காப்பி போட்டுக் கொண்டிருந்தார். 

உறங்கிக் கொண்டிருந்த மாதவிக்கு காபியின் நறுமணம் மூக்கை துளைத்தது. அதில் மெதுவாக கண்விழித்து எழுந்த மாதவிக்கு தன் மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் இருந்தது. 

அவளின் தம்பி கதிர் தான் அவள் மேல் காலை போட்டு  தூங்கிக் கொண்டிருந்தான். அவன் காலை தள்ளி கீழே வைக்க அவள் பாவாடை முழுவதும் ஈரமாக இருந்தது. 

அவளோ உடனே முகத்தை சுழித்து, “பாருங்கள் அம்மா இவன் என் பாவாடை முழுவதையும் ஈரம் ஆக்கி விட்டான்”  என்று சினுங்கிக் கொண்டு எழுந்தாள். 

ராணியும் கோவமாக வந்து அவன் முதுகில் இரண்டு தட்டு தட்டி, “ஏன்டா எவ்வளவு பெரிய பையனா வளந்துட்ட, இன்னும் படுக்கையில ஒன்னுக்கு போறியே” என்று திட்டிக்கொண்டே அவனை இழுத்துச் சென்று குளிக்க வைத்தார். 

பிள்ளைகள் இருவரும் வழக்கமாக பள்ளி செல்ல கிளம்புவது போல் குளித்து தயாராகி வந்தனர். 

அவர்கள் குடிப்பதற்கு கடும் காப்பியை கொடுத்துவிட்டு, “மதியத்துக்கு சோறாக்கி ரசம் வைத்திருக்கிறேன். நேரத்துக்கு சாப்பிடுங்க. இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவாம். அதனால வெளியே போய் விளையாடாதீங்க. ரோடு எல்லாம் குண்டும் குழியுமா, சகதியுமா கிடக்கு. பேசாம வீட்டுக்குள்ளேயே இருந்து படிங்க. நான் வேலைக்கு போயிட்டு சீக்கிரம் வாரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிக் கொண்டு இருந்தார்.

“அம்மா.. உனக்குத்தான் உடம்பு முடியலையே! இன்னைக்கு நீ வீட்டிலிருந்து ஓய்வு எடுமா. நான் வேணா நீ வீட்டு வேலை செய்யும் வீட்டிற்கு போய் வேலை செய்துவிட்டு வருகிறேன்” என்றாள் மாதவி தன் தாயின் பணி சுமையை குறைக்கும் பொருட்டு. 

உடனே பதறிய ராணி, இந்த வீட்டு வேலை செய்யும் பொழப்பெல்லாம் என்னுடனேயே போகட்டும். நீயும் தம்பியும் நல்லா படிச்சு பெரிய உத்தியோகத்துக்கு போகணும். கை நிறைய, மதிப்பா சம்பாதிக்கணும்” என்று மகளைப் பார்த்துச் சொல்லி, கதிரின் நாடியை பிடித்து, “என் ராசா, பெரிய போலீஸ் அதிகாரியா வந்து இந்த சேரியில நடக்கிற குத்தம் குறைய எல்லாத்தையும் தண்டிச்சி, சரி கொடுக்கணும். செய்வியா ராசா?” என்று அவனிடம்  கேட்டார். 

அவனும் உடனே “நான் பெரியவன் ஆனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவேன்மா. அந்தாளு  குடிச்சுட்டு வந்து உன்ன அடிச்சாருன்னா ,லத்தியாலயே அவரை முட்டிக்கு முட்டி தட்டி ஜெயில்ல போட்டு விடுவேன்” என்றான் வீரா வசனமாக. 

“என் ராசா” என்று அவனை திருஷ்டி வைத்து கன்னம் ஒடித்தார். தன் மகளைப் பார்த்து, “பார்த்தாயா! நமக்கு கதிரு பெரிய போலீஸ் அதிகாரியா வருவானாம். நீ எதுக்கு படிக்கப் போற?” என்று கேட்டபடியே அவளுக்கு தலைவாரி விட்டார். 

“நான் டாக்டருக்கு படிக்கப் போறேன் அம்மா” என்று அவளும் பெருமையாக கூறினாள். 

“ஆமா தங்கம். நீ டாக்டருக்கு படிச்சு, நம்ம சேரி ல இருக்கிற மக்களுக்கு நோய் வராமல் பாத்துக்கணும். ஏழை எளிய மக்களுக்கு இலவசமா மருத்துவம் செய்யணும். அது மட்டுமல்லாமல் சேரினாலே இப்படி கலீஜியா தான் இருக்கும் அப்படிங்கிற எண்ணத்தை மாத்தி, நம்ம ஜனத்தையும் இடத்தையும் எப்போதும் சுத்தமா வச்சிக்க செய்யணும். 

அதுக்கு நிறைய சம்பாதிக்கணும். நிறைய சம்பாதிக்கணும்னா பெரிய பெரிய உத்தியோகத்துக்கு போகனும். அதுக்கு நல்லா படிக்கணும்” என்று தன் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டு இருவருக்கும் தலைவாரி பவுடர் பூசி அலங்கரித்தார். 

“அதான் நீ தினமும் சொல்லுறியேமா. நாங்க நல்லா தான் படிப்போம். பாரு போலீஸ் ஆகவும் டாக்டர் ஆகவும் வந்து காமிக்கிறோம். அப்பதான் உனக்கு தெரியும்” என்றான் கதிர். 

மாதவியோ “என்னம்மா? என்னமோ இனிமே எங்களை பார்க்கவே மாட்டேன் என்பது போல், இன்றைக்கு ரொம்ப அட்வைஸ் பண்ற. நாங்க நல்லா படிப்போம். இன்னைக்கு எங்கு வெளியே சென்று விளையாடாமல் பத்திரமா இருப்போம். எங்கள பத்தி யோசிக்காம தைரியமா வேலைக்கு போயிட்டு வா” என்றாள். 

“சரி.. ரெண்டு பேரும் வீட்டிலேயே பத்திரமா இருந்து படிங்க. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று சொல்லி பிள்ளைகளை கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டு வேலைக்கு சென்றார் ராணி. 

விளையாட்டாய் மாதவி சொன்ன வார்த்தை, இன்று நிஜமாகவே மாறப்போவதை அறியாத பிள்ளைகளும் ராணியும் அவரவர் வேலையை கவனிக்க தொடங்கினர். 

ராணிக்கு ஏனோ இன்று மனது தன் பிள்ளைகளை மீண்டும் பார்ப்போமா என்ற சந்தேகம் இருந்தது போல. திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஆயிரம் பத்திரம் சொல்லி வேலைக்கு சென்றார். 

ராணி வெளியே சென்றதும் அக்காளும் தம்பியும் தங்களின் எதிர்காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். 

நேரம் கடக்க “சரி கதிர். நாம் படிக்கலாம் வா” என்று தம்பியையும் அருகில் உட்கார வைத்து படிக்க ஆரம்பித்தாள் மாதவி. 

தொடரும்… 

அருள்மொழி மணவாளன்…

16 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *