அத்தியாயம் – 5
திருமணத்திற்கு முதல் நாள் காலை வீட்டில் சில பல சடங்குகள் முடிந்திருக்க, மதிய உணவு வெளியில் சொல்லிருக்கவே, எல்லோருமே ஓய்வாக அமர்ந்து இருந்தனர். அந்த நேரம் தான் சந்திரன் சத்யாவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.
நாளை இந்நேரம் சத்யா தன் மனைவி என்ற எண்ணம் அவனின் இதழ்களில் புன்னகையைக் கொடுத்தது. திருமணம், வாழ்க்கைத் துணை என்பது எல்லாம் சந்திரன் மனதில் பெரிதாக இருந்தது கிடையாது. வீட்டிற்கு மூத்தவன், அத்தோடு இராணுவக் கட்டுப்பாடு என்று அவனின் எண்ணங்கள் அதிகம் அந்த திசை சென்றது கிடையாது. எப்போதாவது யாராவது திருமணம் என்று கூறும் போது. தனக்கும் தன் வீட்டில் திருமணம் செய்து வைப்பார்கள். யாரோ, என்னவோ எல்லாரையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் போதும். இத்தனை தான் அவனின் சிந்தனைகள்.
சத்யாவின் போட்டோ பார்த்தப் பின் அவனின் கனவுகளில் சற்று முன்னேற்றம். அவளின் தோற்றம், படிப்பு இவை எல்லாம் தன் வருங்கால சந்ததிக்கு வரும்போது நிறைவான குடும்ப வாழ்க்கை அமையும். இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் அதிகம் இருந்தது.
இப்போது தான் தனக்கென குடும்பம், தாம்பத்யம் இவை எல்லாம் தான் எப்படி கையாளப் போகிறோமோ என லேசான பயம் வந்தது. இரத்த உறவுகளை அனுசரிப்பதோ, கையாள்வதோ பெரிது இல்லை. ஆனால் முழுக்க புது உறவு அத்தோடு மற்ற உறவுகளை விட உரிமையுள்ள பந்தம் வரப்போகிறது. எதிர்காலமே இனி தன் மனைவியச் சுற்றித் தான் எனும்போது அந்த உறவை ஆத்மார்த்தமாக கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இருவருக்குள்ளும் புரிதல் அவசியம்.
இந்த எண்ணங்கள் எல்லாம் மனதில் உலா வரும்போது தான் சத்யாவிற்கு தன்னை பிடித்து இருக்கிறதா என்ற தெளிவு தேவையாக இருந்தது. அதற்கு இதுவாடா நேரம் என்று சந்திரனின் மனமே அவனைக் கேலி செய்தது. இருந்தும் ஏதோ ஒரு நம்பிக்கை தன்னைப் போல சத்யாவிற்கும் பிடித்தம் இருக்கும். இல்லாவிட்டாலும் பிடிக்க வைத்து விடலாம் என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டான்.
திட்டமிட்டபடி மதிய உணவிற்குப் பின் ஒரே பேருந்தில் சென்னை புறப்பட்ட மாப்பிள்ளை வீட்டவர்கள் மாலை ஆறு மணி அளவில் மண்டபத்திற்கு சென்றனர். அதன் பின் வேகமாக நிச்சயதார்த்தம் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தது. நிச்சயப்பட்டு கொடுத்து சத்யாவை அனுப்பி வைத்து விட்டு பின் சந்திரனுக்கும் அதே போல சடங்குகள் நடைபெற்றது.
மணமக்கள் ஆடைகள் மாற்றிவிட்டு ஒன்று போல மேடைக்கு வர, அப்போது தான் இருவரும் நேரில் பார்த்துக் கொண்டனர். இருவரும் அருகருகே நிற்க வைக்கப்பட்டு, நிச்சய மோதிரம் எல்லாம் மாற்றிய பின் வரவேற்பு ஆரம்பித்து விட்டது. அதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசமுடியவில்லை.
இவர்கள் திருமணம் நடந்த காலக் கட்டங்களில்தான் திருமணத்திற்கு முதல்நாள் வரவேற்பு பிரபலமாக ஆரம்பித்து இருந்தது. திருமண மண்டப செலவுகளைக் குறைக்கவும், உறவினர்கள் தங்கும் வசதி உள்ளிட்டக் காரணங்களால் அந்த பழக்கம் நடுத்தர வர்க்கத்திற்கு வசதியாக இருந்தது. தெற்கு தமிழகப் பக்கங்களில் அந்த அளவு பிரபலமில்லை என்றாலும் சென்னை போன்ற பெருநகரங்களில் திருமண வீட்டினருக்கு அது வரமாகவே பார்க்கப்பட்டது. அதை விட வார நாட்களில் வேலைக்குச் செல்பவர்கள் இந்த மாலை வரவேற்பில் கலந்துக் கொண்டுவிட்டு, காலை வேலைக்குச் சென்றுவிடலாம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அவர்களுக்குத் தான்.
ஒருபக்கம் பாட்டுக் கச்சேரி நடக்க, இன்னொரு பக்கம் விருந்தினர்கள் வரிசையில் நின்றி பரிசு கொடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் டைனிங்ஹால் உள்ளே இலை போடப்பட்டு, முதலிலே தொடுகறிகள் அனைத்தும் பரிமாறப்பட்டு இருந்தது. விருந்தினர்கள் இலையில் அமரவும், சாதம் போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
சந்திரன் உறவினர்கள் எல்லோரும் இவற்றை எல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் இது மிகவும் புதுமை. சில பெரியவர்கள் முகம் சுழித்தாலும், சிறியவர்களுக்குக் கொண்டாட்டமே.
அன்றைய வரவேற்பிற்கு முக்கிய விருந்தினர்களாக சத்யவதியின் நாடகக் குழுவினர் வந்திருந்தனர். ஆரம்பத்தில் எல்லோருமே மேடை நாடகத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தனர். தனியார் தொலைக்காட்சியின் வரவால் அவர்களில் பல பேர் அதிலும் நடிக்க ஆரம்பித்திருந்தனர்.
ஊர் பக்கங்களில் டிவி நாடக மோகம் அதிகரித்திருக்க, அந்த நடிகர்களை எல்லாம் நேரில் பார்க்கையில் சந்திரன் உறவினர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அதே சமயம் இவங்க எல்லாம் பொண்ணுக்கு வேண்டியவங்களா? எப்படி என்ற ஆராய்ச்சி செய்ய, சத்யவதி நாடகத்தில் நடிக்கும் விஷயம் தெரிய வந்தது. இப்போது உறவினர்கள் பலர் என்ன இப்படி வேஷம் போடற பொண்ண உன் பையனுக்குப் பேசியிருக்கியே என்று சந்திரன் பெற்றோரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து இருந்தனர்.
இந்தப் பேச்சில் சந்திரன் பெற்றோர்களுக்கு முகம் சுருங்க ஆரம்பித்து, உள்ளுக்குள் கோபம் ஏறியது. சந்திரனுக்கு நாடகம், நடிகர் என்று எல்லாம் தெரியவில்லை என்றாலும் ஓரளவு பிரபலமானவர்கள் என்பது அவர்களின் செயல்களில் தெரிந்துக் கொண்டான். இவர்கள் எல்லாம் சத்யாவிற்கு எப்படி பழக்கம் என யோசனை ஓடியது. ஏனெனில் பெரும்பாலும் வந்தவர்களை அவளின் பெற்றோர்களுக்குமே அப்போது தான் அறிமுகப்படுத்தி வைத்தாள் சத்யா. ஆனால் யாரின் பார்வையும், பேச்சும் கெடுதலாக இல்லை என்பது சந்திரனுக்கு ஓரளவு ஆறுதலே.
ஒருவழியாக ரிசப்ஷன் முடிய மணி பதினொன்றைத் தொட்டது. இரு பக்க உறவினர்கள் விருந்து முடித்து உறங்கச் சென்று இருந்தனர். வீட்டு மனிதர்கள் மட்டுமே சாப்பிட அமர, அங்கே எதுவும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் களைப்பாக இருக்க, காலையிலும் சீக்கிரம் எழுந்துக் கொள்ள வேண்டுமே என்பதால் அத்தோடு மணமக்கள் மற்றும் வீட்டினரும் ஓய்வு எடுக்கச் சென்று விட்டனர்.
விருந்தினர்களை அறிமுகப்படுத்த மட்டுமே சந்திரன், சத்யா இருவரும் பேசினர். அதற்கு மேல் தனிப்பட்டுப் பேச நேரமுமில்லை. சூழ்நிலையும் சரியில்லை.
வரவேற்பு முடிந்து சந்திரன் மணமகன் அறைக்கு வரும்போது அவன் பெற்றோர் மற்றும் முக்கியமான சில உறவினர்களும் அங்கே பேசிக் கொண்டிருந்தனர். அனைவரின் முகமும் இறுக்கமாக இருக்க, தன் அன்னையிடம்தான் சந்திரன் விசாரித்தான்..
“மா, எதுவும் பிரச்சினையா? எல்லோரும் ரொம்ப சீரியசா பேசிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டான் சந்திரன்.
அவன் அன்னை “இந்த கல்யாணம் நடக்கணுமானு நம்ம நெருங்கின சொந்தக்காரங்க கேக்கறாங்க?“ என்றார்.
“ஏன்? காலையில் கல்யாணம் வச்சுக்கிட்டு இது என்ன பேச்சு?”
“அது வந்து, அந்தப் பொண்ணு“ என்று சந்தரனின் அன்னை பேச ஆரம்பிக்க, “அம்மா, அவ பேர் சத்யா. யாரோ மாதிரி என்ன பேச்சு?” என்று கேட்கவும்,
“அதான்பா இன்னிக்கு வந்த விருந்தாளிங்க எல்லாம் சத்யாக்கு வேண்டப்பட்டவங்க. அத்தனை பேரும் ஏதோ டிவி, சினிமான்னு நடிக்கிறவங்க. அந்த மாதிரி பொண்ணு நம்ம குடும்பத்துக்குச் சரி வருமான்னு கேக்கறாங்க?” என்றார்
“சத்யாக்கு விருந்தாளிங்க தானே. சத்யா நடிக்கல இல்ல. பின்ன ஏன் பேசறாங்க ?”
மற்றவர்கள் சந்தரனின் அன்னையின் முகம் பார்க்க, அவரோ சிறு தயக்கத்துடன்
“சத்யாவும் நடிக்கிற பொண்ணு தான்பா. ஆனால் டிவிலே இல்லை. ஏதோ நாடகக் குழுவில் இருக்கிறதா அவ அம்மா, அப்பா சொன்னாங்க“ என்றார்.
“ஓ.“ என்ற சந்திரன் “இது உங்களுக்கு இப்போதான் தெரியுமா?” எனக் கேட்டான்.
இந்தப் பேச்சுக்கள் எல்லாம் சந்திரன் அவன் அன்னையிடம் மட்டுமே வைத்துக் கொண்டான். மற்றவர்கள் அமைதியாகத் தான் நின்று இருந்தனர்.
“இல்லை. பேச்சு வார்த்தையின் போதே சொன்னாங்க.”
“அப்போ இன்னிக்கு ஏன் அதைப் பத்தி என்ன பேச்சு?”
“அது அவங்க கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க எல்லாம் மாட்டான்னு சொன்னாங்க. அதனால் நானும், அப்பாவும் அதைப் பெரிசுபடுத்தலை”
“பிறகு என்ன? கல்யாணம் நாளைக்குத் தானே. அதைப் பத்தி இப்போ என்ன கவலை?”
“அது இல்லை. இனிமேல் நடிக்கப் போறது இல்லைன்னு சொல்லிட்டு, இன்னிக்கு நாடகக்காரங்கள கூப்பிடனுமான்னு நம்ம பக்கம் பெரியவங்க எல்லாம் பேசறாங்க.”
“கல்யாணம் நடத்தறது சத்யா வீட்டில் தான். யாரைக் கூப்பிடனும்னு அவங்க தான் முடிவு பண்ணனும். இனிமேல் நடக்கப் போற ஒரு விஷயத்துக்கு, இதுவரை பழகியவங்களைக் கூப்பிடாம இருப்பாங்களா? “
அப்போது உறவினரில் பெரியப்பா முறையில் உள்ளவர் “அப்படி இல்லை சந்திரா. இந்த மாதிரி பழக்கம் எல்லாம் நாளைப் பின்னே நம்ம பக்கத்துக்கு சரியா வராது. அதையும் யோசிக்கணும் இல்ல” என்றார்.
“நம்ம பக்கம் வந்ததுக்கு அப்புறம் நாம தான் யாரைக் கூப்பிடறதுன்னு முடிவு பண்ணப் போறோம். அதோட அப்போவும் ரொம்ப வேண்டியவங்களா இருந்தா சத்யா பக்கமும் நாம கூப்பிட்டுத் தான் ஆகணும்” என்றான் சந்திரன்.
“உறவு முறையக் கூப்பிடமா இருக்கப் போறோமா என்ன? அதுக்காக நாடகக்காரங்களக் கூப்பிடனும்னு சொன்னா, நம்ம வீட்டில் இருக்கிற பொண்டு, பிள்ளைக கெட்டுப் போயிடக் கூடாது இல்ல“ எனவும், சந்திரனுக்குக் கோபம் வந்தது.
சற்று உரத்தக் குரலில், “என்னன்னு பேசறீங்க பெரியப்பா? என் பொண்டாட்டியா வரப்போறவளத் தப்பா பேசுற மாதிரி இல்ல இருக்கு?” என்றான் சந்திரன்.
“அட அப்படி இல்லை தம்பி. அந்தப் பொண்ணு அதான் உன் வருங்காலப் பொண்டாட்டி மெட்ராஸ்லே பிறந்து, வளர்ந்த பொண்ணு. அதுக்கு இது எல்லாம் சரியாப்படும் . அதோட நெளிவு சுளிவாப் பழகவும் தெரிஞ்சுருக்கும். நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கு அது தெரியாது. இது பாட்டுக்கு வீட்டுக்குக் கூப்பிடறதுன்னு பழக்கம் வச்சுக்கிட்டா, யாருக்கு அவஸ்தை சொல்லு” என்றார் அந்த பெரியப்பா.
“அப்போ நீங்க எனக்குப் பொண்ணு பார்க்கப் போகும் போது இதை எல்லாம் சொல்லிருக்கணும். மெட்ராஸ் பொண்ணு சரிப்பட்டு வராதுன்னு. “
“அட அதைத்தான் உங்கம்மா கிட்டே சொல்லிட்டு இருக்கேன்” எனவும், இன்னும் கோபம் ஏறியது.
“இன்னிக்கு வந்தவங்க யாரையும் பார்த்தா தப்பாத் தோணலை. சொல்லப்போனா அவங்க நேரா டீசண்ட்டா எங்களை வாழ்த்திட்டு, அவங்க வேலையப் பார்க்கப் போயிட்டாங்க. நம்ம சொந்தக்காரங்க தான், அவங்க பக்கம் போய் நின்னு, கையக் கொடுக்கிறதும், போட்டோ எடுக்கிறதுமா இருந்துச்சுக. நாம கண் கொண்டு பார்க்கிறது தான் எல்லாம் பெரியப்பா” என்றான்.
“என்னவோ எனக்கு சரியாப் படலை. பின்னாடி ஏதும் பிரச்சினைனா , நாங்க தலையிட்டுக்க மாட்டோம். இப்போவே சொல்லிட்டேன்“ என, சந்திரன் மனதிற்கு என்னவோ போல ஆகியது.
இவர்கள் குடும்பத்திற்கு அவர் தான் பெரியவர். சற்றுப் பழமைவாதி என்றாலும் நியாயமானவர். குடும்பப் பஞ்சயாத்துக்கள் எல்லாம் இவர் தலையிட்டால் சரியாகி விடும் என்பதோடு, அவரின் சொல்லுக்கு மறுத்தும் யாரும் கூறியது கிடையாது. அவரின் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை எனவும், மனது கலவரம் கொண்டது.
பின் சற்றுக் கலக்கத்தோடு “பெரியப்பா, என்ன வார்த்தை இது? நானே எங்கியோ வேலையில் இருக்கேன். உங்களை எல்லாம் நம்பிதானே குடும்பத்தை இங்கே விட்டுட்டு அங்கே நிம்மதியா வேலைப் பார்க்கிறேன். நாளைக்கு என் பொண்டாட்டியும் உங்க பொறுப்பு தானே. நீங்களே இப்படிச் சொல்லலாமா?” எனக் கேட்கவும், அவருக்கும் மனசு உருகி விட்டது.
“ஐயா சந்திரா, நானும் இப்படி சட்டுன்னு சொல்லிருக்கக் கூடாது. அவங்க பழக்க வழக்கம் வேறே. நம்முது வேறே. நாளைப் பின்னே அந்தப் பொண்ண பழிச்சு யாரும் பேசிறக் கூடாதுன்னு தான் பயந்து வருதுயா. இன்னைக்கு இளிச்சிட்டுப் பேசற நம்ம உறவுக் கூட்டமே, நாளைக்கு சட்டுன்னு அந்தப்பிள்ளய ஒரு சொல்லு சொல்லிடக் கூடாது. அது ரொம்பப் பெரிய பாவம். அதை உத்தேசித்துத் தான், என் வாயில் அந்த வார்த்தை வந்துது. ஆனா நீ சொன்ன மாதிரி இது காலம் கடந்த யோசனை. இனிமேல்பட்டு பேசிப் பிரயோஜனம் இல்லை. எல்லோரும் போய்ப் படுங்க. நாளைக்கு விடியலில் கல்யாணம் நல்லபடியா முடிச்சிட்டு ஊரப் பாக்கப் போகணும். நம்ம குலசாமி ஆசீர்வாதத்தில எல்லாம் நல்லபடியாவே நடக்கும். சந்திரா நீயும் படுத்து சீக்கிரம் எந்திரிக்கப் பாரு” என்று கூறவே எல்லோரும் கலைந்தனர்.
சந்திரனும் படுக்கச் சென்றாலும், பெரியவர் கூறியது பற்றியே அவனின் சிந்தனை ஓடியது. சத்யா அவர்கள் குழுவினரை அறிமுகப்படுத்தும் போது கண்களில் மிகுந்த ஆர்வம் தெரிந்தது. அந்த ஆர்வமே அவளுக்கு இந்த வேலை மிகவும் பிடித்தம் என்பதைப் பறைசாற்றியது. ஆனால் அதைத் தாண்டி அவளிடத்தில் தவறாக எதுவும் தோன்றவில்லை.
யாரிடத்திலும் எல்லை மீறிப் பேசியது போல இல்லை. எல்லோருமே அவளைப் பேர் சொல்லி அழைத்தாலும், அதிலும் மரியாதை தெரிந்தது. ஆனால் வீட்டில் இத்தனைப் பேச்சிற்கு பிறகு மீண்டும் அவளை நடிக்க அனுப்புவது எல்லாம் கஷ்டம் தான். இதைப் பற்றி சத்யா என்ன மனதில் நினைத்து இருக்கிறாளோ என்று குழப்பமாக இருந்தது.
திருமணக் கனவுகள் காண வேண்டிய நேரத்தில், இப்படி குழப்பமான மனநிலையில் இருந்தால் எப்படி நம் வாழ்க்கைப் போகும் என்ற பயம் மெலிதாக வந்தது. இதை எல்லாம் தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் நாளைத் திருமணம் என்பது யாருக்குப் பாதகமாக முடியும் என்ற பயம் வந்தது. இவை எல்லாம் மனதிற்குள் ஓடினாலும், இந்தத் திருமணம் நிற்பதை மட்டும் அவன் மனம் விரும்பவில்லை. தனிப்பட்டு ஒரு வார்த்தைக் கூட இது வரை பேசாதிருந்த போதும், தன் வாழ்க்கை முழுதும் சத்யா என்ற எண்ணத்தில் சந்திரனுக்கு எந்த தேக்கமும் இல்லை.
இந்தக் குழப்பங்கள் எல்லாம் சந்திரனின் வீட்டினருக்கு மட்டுமே தான். சத்யா வீட்டில் எல்லோரும் சந்தோஷமாகவே திருமணத்தை எதிர்பார்த்து இருந்தனர். அதனால் மறுநாள் காலை எல்லோருக்கும் நாதஸ்வர வித்வான் வாசித்த பூபாளத்தோடு பரப்பரப்பாகத் தொடங்கியது.
சந்திரனின் வீட்டினரும் அதற்கு பிறகு வேறு எந்த முகச்சிணுக்கமும் காட்டாமல் நல்லபடியாகவே தயாராக ஆரம்பித்தனர். சந்திரன் அவர்கள் உறவுகளுக்கு முன்மாதிரி. இராணுவத்தில் பணியாற்றுவது ஒரு மரியாதை என்றால், தலைமகனாகக் குடும்பத்தினரை முன்னேற்றியது கண்டும் பெரியவர்கள் சந்திரனை உதாரணமாகக் காட்டுவார்கள். அதனால் அவனின் திருமணம் என்பது அவர்களுக்குக் கொண்டாட்டமே.
மேளங்கள் முழங்க, பெரியவர்கள் எல்லோரின் வாழ்த்தோடும் தங்கள் வழக்கப்படி திருமாங்கல்யம் அணிவித்து சத்யாவை தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் சந்திரன். இந்த நிமிடம் முதல் சந்திரனை வாழ்நாள் முழுதும் தன் நெஞ்சில் தாங்கத் தயாராகிக் கொண்டாள் சத்யா. இன்பத்திலும் , துன்பத்திலும் இணைபிரியாது வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தனக்குள் சபதமெடுத்தாள் சத்யா.
நீங்கள் என்ன முடிவெடுத்தாலும், நான் நினைப்பது தான் நடக்கும் என்று சிரித்துக் கொண்டது விதி.
சந்திரன் சத்யாவிற்கு திருமாங்கல்யம் சூட்டும் போது மணமக்கள் இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டது. அதில் தெரிந்த மகிழ்ச்சியும், ஆர்வமும் தங்கள் இணையைக் குறித்தான எந்த சங்கடமும் இருவருக்கும் இல்லை என்பதை இருவருமே உணர்ந்துக் கொண்டிருந்தார்கள். இந்த உணர்தலே இருவருக்கும் போதுமானதாக இருக்க, மேற்கொண்டு சபையின் நடுவில் தனிப்பட்டுப் பேச இருவருமே முயற்சிக்கவில்லை. உறவினர்கள் சொல்வதைச் செய்துக் கொண்டு இருந்தனர்.
சந்திரன் , சத்யா திருமணம் நல்ல முறையில் நடந்து முடிய, மதிய விருந்துக்குப் பின் சந்திரன் வீட்டிற்கு புறப்படத் தயாராகினர் மணமக்கள். சந்திரன் உறவுகளில் ஒரு சிலர் மட்டும் முகூர்த்தம் முடிந்தவுடன் புறப்பட்டு, மாப்பிள்ளை இல்லத்தில் மணமக்களை வரவேற்க ஏதுவாக தயார் செய்தனர்.
மணமக்களோடு சந்திரனின் உறவுகளும், சத்யாவின் அக்கா, அத்தான் அவர்களின் மகன் மற்றும் அவளின் மாமா, அத்தை என சிலர் மட்டும் சென்றனர். மறுநாள் அத்தனை நல்ல நாளாக இல்லாததால் அன்றைக்கே சத்யா புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் எனப் பேசியிருந்தனர். மாலைக்குள் வீட்டிற்கு சென்று விட முயற்சி செய்ததால், திருமணம் முடிந்த பின்னும் இருவருக்கும் பேசிக் கொள்ள நேரம் அமையவில்லை.
-தொடரும் –
nice moving story . next ena nadaka pothu pakalam
மிக்க நன்றி சிஸ்டர். உங்கள் கமெண்ட் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
Chandran thelivaaga before marriage e pesi irukalam . Avargal vaazhkai prachanai than. Paavam.
சந்திரன் தெளிவாகப் பேசினாலும் அது அப்படியே நடக்கும் எனக் கூற முடியாதே. கருத்துக்களுக்கு மிக்க நன்றி பிரியா
அந்தக்காலம் என்று இல்லை. இப்போதும் கூட பெண்கள் இது போன்ற துறைகளில் இருக்கும் போது இதே போன்ற பிரச்னைகளைத்தான் சந்திக்கிறார்கள். நீங்க முந்தைய அத்தியாயதோல் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. பெண்கள்தான் அக்னி பரிக்ஷை செய்ய வேண்டும். சந்திரன் கேரக்டர் அவங்க பெரியப்பா கேரக்டர் எல்லாமே ரொம்ப அழகா செதுக்கி இருக்கீங்க, இதுதான் யதார்த்தம். தெளிவான அத்தியாயம்.
உண்மை தான். அக்னி பரிக்ஷை எப்போதும் பெண்களுக்குத் தான். பெரியப்பா கேரக்டர் பற்றி சொன்னது ரொம்ப மகிழ்ச்சி. யதார்த்தம் இந்த வார்த்தை மிக்க மகிழ்ச்சி தருகிறது. நன்றி. நன்றி வத்சலா.
Good going ma 👍👍👍👍
தொடர்ந்து உற்சாகபடுத்துகிறீர்கள். மிக்க நன்றி சிஸ்டர்.
கல்யாணம் முடிஞ்சாச்சு, இன்னும் பேச சந்தர்ப்பம் வாய்க்கலியே
ஆமாம். எப்போ தான் பேசுவாங்கன்னு பார்க்கலாம். மிக்க நன்றி மா.
Very interesting
Super😍😍 interesting😍😍
Thanks ma
Thanks Sister