அத்தியாயம் – 2
நடிகை ஸ்ரீகீர்த்தி தன் வீட்டிலிருந்து வெளியே வர, தற்போதும் நிருபர்களுக்கு ஆச்சரியம் தான். வீட்டில் அணியும் சுடிதார் ஒன்றை அணிந்து ஒப்பனை ஏதுமின்றி ஊடகங்களைச் சந்திக்க வந்திருந்தாள். கருணாகரன் தோற்றத்தில் ஆடம்பரம் இல்லாவிட்டாலும், உடல்மொழியில் தனக்கு மிஞ்சி யார் என்ற எண்ணம் நன்றாகவே வெளிப்பட்டது.
இங்கு ஸ்ரீகீர்த்தி தோற்றத்தில் நம் வீட்டுப் பெண் போல் பாந்தமாக இருந்தாள். அணிந்திருந்த சுடிதார் கூட அதிக விலை கிடையாது. அதே சமயம் மட்டரக துணியும் இல்லை. அவளின் படிப்பே காஸ்ட்யூம் டிசைனர் தான். அதனால் தனக்குப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிந்து இருந்தாள். அவளின் கதாப்பாத்திரத் தேர்வோடு, அவளின் ஆடை அணிகலன்களும் கூட டிரெண்ட் ஆகியது தான் கீர்த்தியின் புகழுக்கு முக்கியக் காரணம்.
ஸ்ரீகீர்த்தியின் பின்னே இரு பவுன்சர்ஸ் வந்தனர். ஸ்ரீகீர்த்தி முன்னே வந்ததும் பளிச்சென்ற புன்னகையோடு “எல்லாருக்கும் வணக்கம், நீங்க எல்லோரும் வந்த விஷயம் பற்றி நான் தெரிஞ்சிக்கலாமா?” எனக் கேட்டாள்.
நிருபர்கள் அனைவருக்கும் கீர்த்தியின் முகம் கண்டு நேரடியாக சட்டென்று கேட்க முடியவில்லை. அந்த பெண் நிருபர் மட்டும் எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு,
“இன்னிக்கு காலையில் ப்ரொடியூசர் கருணாகரன் பேட்டி கொடுத்து இருந்தார். அதில் மீ டூ பற்றி அவருக்கு எதிரா நீங்க பேசினக் கருத்துகள் பற்றி சொல்லும்போது, சில விஷயங்கள் சொன்னார். அதைப் பற்றி உங்கக் கிட்டேயும் விஷயங்கள தெளிவுப்படுத்தலாம்னு வந்துருக்கோம்” என்றார்.
“ஓ. நான் முதலில் ஒரு விஷயம் தெளிவுபடுத்திடறேன். அன்னிக்கு அந்த ப்ரொடியூசர் கவுன்சில் மீட்டிங் நான் சென்றது தற்செயல் தான். நான் இப்போ நடிச்சுட்டு இருக்கிற படத்தோட தயாரிப்பாளர் சின்ன டிஸ்கஷனுக்காக வரச்சொல்லியிருந்தார். அங்கே என்னைப் பார்த்ததும் நானும் மீட்டிங்கிற்கு வந்தேன்னு நினைச்சு செக்யூரிட்டி என்னை உள்ளே அனுமதித்தார். எனக்கு அங்கே என்ன பேசப் போறாங்கன்னு எல்லாம் தெரியாது. உள்ளே சென்ற பிறகு எல்லார் கவனமும் என் பக்கம் திரும்பவும், கிளம்பிடலாம்னு நினைச்சேன். அப்போ தான் நீங்க குறிப்பிடற தயாரிப்பாளர் நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றிப் பேசினார். என்னாலே கேட்டுட்டு சும்மா இருக்க முடியலை. அதான் என் எண்ணங்களை அங்கே எடுத்துச் சொன்னேன். மே பி அது எனக்கான இடமா இல்லாம இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணா அங்கே என் கருத்தைப் பதிவு பண்ணுவது அவசியம்னு தோனிச்சு. அதைத் தான் செய்தேன். அதற்கு கருணாகரன் சர்க்கு ஏன் இவ்ளோ கோபம் வரணும்னு புரியலை. அதோட எனக்கு இன்னும் ஒரு விஷயமும் புரியலை. அந்த நிகழ்ச்சிக்கு பிரஸ் அழைக்கப்படவே இல்லை. அப்போ அங்க நடந்த கருத்து மோதல் எப்படி வெளியிலே வந்ததுனு யோசனை வருது.” என்று முடித்தாள்.
மீண்டும் பெண் நிருபர் “மீடியாக்கு எல்லா இடத்திலும் காது இருக்கு மேம். இப்போ நீங்க சொன்னது எல்லாம் அன்னிக்கு நடந்த விஷயங்கள் தான். ஆனால் இன்னிக்கு குடும்பத்தினரே கூட அட்ஜஸ்ட்மெண்ட்க்கு தயாரா இருக்காங்கன்னு உங்களை மென்ஷன் பண்ணிச் சொல்லிருக்கார். அதற்கு உங்க பதில் என்ன? “ என்றார்.
இப்போது கீர்த்தி “கருணாகரன் சர் சொல்றதில் எந்த உண்மையும் இல்லை. என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். பட வாய்ப்புகளுக்காக நானோ என்னைச் சேர்ந்த வேறு யாருமோ அட்ஜஸ்ட் செய்ய வேண்டியத் தேவையில்லை. என்னுடைய திறமைக்கு கிடைத்த வாய்ப்புகள் தான் நான் தேர்வு செய்கிறேன். அதனால் அவர் சொல்றதைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. பொதுவாகச் சொல்லணும்னா, ஆண்களை விட பெண்களுக்குத் தான் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி அவங்க திறமையை மறைச்சு, ஒரு பொம்மை மாதிரி நடத்துறாங்க. இதை யாராலும் மறுக்க முடியாது” என்றாள்.
வேறு ஒரு நிரூபர் “கருணாகரன் சர் அவர்கிட்டே இருக்கிறதா சொல்ற ஆதாரத்தை வெளியிட்டா அப்போ உங்க பதில்?” எனக் கேட்டார்.
“முதலில் ஆதாரம்னு ஒண்ணு இருந்தா அதை வெளியிடட்டும். அப்புறம் அதற்கு பதில் சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்” என்று பதில் கூறிய ஸ்ரீகீர்த்தி எல்லோரையும் பார்த்து “நன்றி. வணக்கம்” என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
ஸ்ரீகீர்த்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தப் பின் தன் அன்னையிடம் பேசி விட்டு நேராக ஷூட்டிங் சென்றாள். அன்றைக்கு அவள் நடிக்கும் திரைப்படக் காட்சிகளும் பெண்களை மையப்படுத்திக் குறிப்பாக பாலியல் துன்புறுத்தல் சம்பந்தபட்டக் காட்சி. நடிப்புதான் என்றாலும் கனமான மனத்தோடு தான் நடித்தாள். சில நேரங்களில் வெறுத்தும் தான் போய்விடுகிறது.
அந்தப் படப்பிடிப்பு முடிந்து அடுத்து டப்பிங் தியேட்டர் சென்றாள் ஸ்ரீகீர்த்தி. மக்கள் மனதில் இடம் பிடித்தத்தில் அவளின் குரலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அவள் நடிக்கும் காட்சிகளில் முகபாவனைக்கேற்றவாறு கீர்த்தியின் குரலிலும் ஏற்ற இறக்கங்களும், பாவனைகளும் இருக்கும். ஒரு சில பாடல்கள் கூட பின்னணி பாடியிருக்கிறாள். பாடப் பிடிக்கும் என்றாலும், அதில் அத்தனை தூரம் கவனம் செலுத்தவில்லை. மேலும் கீர்த்திக்கு இதற்கே நேரமும் சரியாக இருந்தது.
நள்ளிரவைத் தாண்டி தன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகீர்த்தி. கடந்த சில நாட்களாக ஏனோ சலிப்பாகவே இருந்தது கீர்த்திக்கு. இத்தனைக்கும் அவ்வப்போது நடிப்பிற்கு சிறு இடைவேளை விடுவாள். எங்காவது மலைப்பிரதேசம் சென்று அன்னையோடு ஓய்வு எடுத்துக் கொள்ளுவாள்.
எப்போதும் ஒப்பனையும், காமிரா முன்னும் நடிப்பது போய் தனக்குள்ளும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறோமோ என்று சந்தேகம் வந்தது கீர்த்திக்கு. காரில் ஓய்வெடுத்தப்படி ஃபோன் பார்க்க, அன்றைய தேதியைக் காண்பிக்கவும் சிறு சந்தோஷம் வந்தது. சட்டென்று ஒரு நம்பர் டயல் செய்ய, எதிர்முனையில் எடுக்கப்பட்டதும் பதட்டமான ஆண் குரல் கேட்டது.
“ஹலோ, ஸ்ரீ மா, என்னாச்சுடா? எதுவும் பிரச்சினையா?”
“ஹாப்பி பர்த்டே பா” என கீர்த்தி கூறவும், “ஓ” என்று மட்டும் பதில் கொடுத்தார் அவளின் தந்தை.
“ஏன்பா? நான் விஷ் பண்ணினது உங்களுக்குப் பிடிக்கலையா?”
“சே. சே என்னடா. ரொம்ப தாங்க்ஸ் குட்டிமா. உன் ஃபோன் எதிர்பார்க்கலையா. அதுதான் சரியாப் பதில் சொல்லலை”
“ஏன்? நான் தான் எப்பவும் உங்க பர்த்டேக்குப் பேசுவேனே?”
“ஆமா. ஆனால் இந்த டைம்லே பேசினது இல்லையா அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.”
அப்போதுதான் நேரத்தைக் கவனித்த கீர்த்தி, “சாரிபா. நானும் டைம் பார்க்கலை” என்றாள் கீர்த்தி.
“அதை விடு. நீ இன்னும் தூங்கலையா?” என்றார் கீர்த்தியின் தந்தை.
“அது” என்று லேசாகத் தயங்கிவிட்டு “இன்னிக்கு டப்பிங் வேலை இருந்தது. அதான் லேட். இப்போதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்” என்றாள்.
“ம்ச். எத்தனை தடவை சொல்றது ஸ்ரீ. இவ்ளோ நேரம் எல்லாம் வேலைப் பார்க்காதே. சேஃப்டி கிடையாது. உனக்கும் புரியாது. உங்கம்மாவுக்கும் அறிவு கிடையாது.” என்று படபடத்தார்.
தந்தையைப் பற்றித் தெரிந்தும், தான் செய்த செயலால் தாயைப் பேச்சு வாங்க விட்டோமே என்று வருந்தினாள் ஸ்ரீகீர்த்தி.
தந்தையை டைவேர்ட் செய்யும் விதமாக, “பா, நாளைக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா?” என்று கேட்டாள்.
“சூர்டா. நீ கேட்டு நான் வேணாம் சொல்லுவேனா? ஆனால் உன் அம்மாகிட்டே சொல்லிட்டியா? அப்புறம் டப்பிங் இருக்கு, ஷூட்டிங் இருக்குன்னு சொல்லிடப் போறா” என்றார் கீர்த்தியின் தந்தை.
“வழக்கமா இந்த நாளில் உங்க கூட கொஞ்ச நேரம் இருப்பேன்னு அவங்களுக்குத் தெரியும்பா”
“நாளைக்குத் தான் அந்த நாள்ன்னு உங்கம்மாவுக்குத் தெரியுமா என்ன?” என்று சிறு நக்கலோடு கீர்த்தியின் தந்தை கேட்க, “அவங்களைத் தவிர வேறே யாருக்கும நினைவு இருக்க முடியாதுபா” என்று அழுத்தத்துடன் பதிலுரைத்தாள் கீர்த்தி.
கீர்த்தியின் பதிலில் சிறிது நேரம் அமைதியாகக் கழிய, “சாரிபா, உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். குட்நைட் பா “ என்றாள் கீர்த்தி.
“அப்படி எல்லாம் இல்லைடா. உன்னைத் தவிர யாரும் எனக்கு இல்லை. நீ எப்போ வேணும்னாலும் கூப்பிடு. அதோட இனிமேல் இப்படி நேரம் கழிச்சு வேலை எல்லாம் ஒத்துக்காத. உன் அம்மா சொன்னாலும் முடியாது சொல்லிடு” என்றார் கீர்த்தியின் தந்தை.
“நான் பார்த்துக்கறேன்பா. நாளைக்கு ஈசிஆர்லே இருக்கிற நம்ம கெஸ்ட்ஹவுஸ் வந்துடுங்க. அங்கே நாம உங்க பர்த்டே கொண்டாடலாம்.” என்றாள் கீர்த்தி.
“அது உன்னோட கெஸ்ட் ஹவுஸ் குட்டிமா. ஆனால் உனக்காக நான் வருவேன். உனக்கு என்ன வேணும்ணு சொல்லு. நான் வரும்போது வாங்கிட்டு வரேன்” என்றார்.
“பா, பர்த்டே உங்களுக்குத் தான். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க”
“உன்னைப் பார்க்கிறதும், உன் கூட இருக்கிறதுமே எனக்குப் போதும்டா செல்லம்.”
“ஓகே. ஓகே . நாளைக்குப் பார்க்கலாம். பை” என்று கீர்த்தி வைக்கவும், அவளின் இல்லம் வரவும் சரியாக இருந்தது.
கீர்த்தி காரிலிருந்து இறங்கி உள்ளே செல்லும்போதே ஹாலில் அவளின் அன்னை அமர்ந்து இருப்பதைக் கண்டாள். அவர் அருகில் செல்லும்போது அன்னையின் கண்களில் கண்ணீரை உணர்ந்து, அவரை ஆறுதலாக அணைத்தாள்.
“என்னம்மா?” எனக் கீர்த்தி கேட்கவும், “ஒண்ணுமில்லைடா. சும்மா பழசை நினைச்சுட்டு இருந்தேன். சூடா பால் குடிக்கறியா? டப்பிங் பேசி தொண்டை கட்டியிருக்குமே” எனக் கேட்டார் அவள் அன்னை.
“வேணாம்மா. அப்போவே வெந்நீர் குடிச்சுட்டேன். மா நாளைக்கு என்னோட புரோகிராம் என்ன?”
“நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் வெளியில் புரோகிராம் இல்லை, காலையில் திருப்பதி தேவஸ்தானம் கோவில் போயிட்டு, வழக்கமா நாம போற ஆசிரமம் போகிறோம். சாயந்திரம் உன்னோட புரோகிராம் உன் இஷ்டம் தான்” என்றார்.
‘தாங்க்ஸ்மா. நான் ஈவினிங் நம்ம கெஸ்ட் ஹவுஸ் போறேன்.” என்றவள் சற்றுத் தயங்கி “அப்பாவ அங்கே வரச் சொல்லிருக்கேன். “ எனக் கூறினாள் கீர்த்தி.
அதைப் பற்றி எதுவும் கூறாமல் “எப்போப் பேசின?” என்று மட்டும் கேட்டார் கீர்த்தியின் அன்னை.
“இப்போ வர வழியில் தான்”
“மணி என்ன? இந்த நேரத்தில் அவரை எழுப்பி இருக்க?”
“ம். நானும் மணி பார்க்கலை. என்னவோ தேதி பார்த்ததும் சட்டுன்னு டயல் பண்ணிட்டேன்”
“சரி. இனிமேல் பார்த்துக்கோ. போய் படு” என்று கூறிவிட்டு எழுந்தார்.
“குட்நைட்“ எனக் கீர்த்தி கூறவும் தலையசைத்தார்.
முதல் நாள் சூட்டிங், டப்பிங் எல்லாம் முடித்துவிட்டு நள்ளிரவுக்கு மேல் படுத்தாலும் அதிகாலையில் எழுந்து விட்டாள் ஸ்ரீகீர்த்தி. அவள் தந்தை ஏற்படுத்திய பழக்கம். அவளுக்கே அந்த நாள் உற்சாகமாக செல்லுவதாகத் தோன்றும் என்பதால் பெரும்பாலும் அதைக் கடைப்பிடிப்பாள் கீர்த்தி. எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் மற்றும் சில யோகா, உடற்பயிற்சி முடித்து விட்டு குளித்துத் தயாராகி வந்தாள் கீர்த்தி. அதே நேரத்தில் அவள் அன்னையும் தயாராகி வந்தார்.
காலையில் சத்து மாவு கஞ்சி மட்டும் குடித்து விட்டு கீர்த்தி, அவள் அன்னை இருவரும் கோவிலுக்குச் செல்லத் தயாராகினர். கார் நகரத்தை விட்டு வெளியே செல்லவும், கீர்த்தி யோசனையோடு தன் தாயைப் பார்த்தாள்.
கீர்த்தியின் பார்வைக்குப் பதிலாக “இன்னிக்கு புரட்டாசி சனிக்கிழமை. தேவஸ்தானம் கோவில் கூட்டமா இருக்கும். நிறையப் பிரபலங்களும் வருவாங்க. அதனால மீடியா ஆட்களும் அங்கெங்கே இருப்பாங்க. காலையில் தான் நியாபகம் வந்துது. அதான் பிளான் மாத்திட்டேன்.” என்றார் சத்யவதி.
கீர்த்தி நடிகை என்பதால் அனாவசிய கூட்டங்கள் சேராமல் தடுக்க அதிகாலையிலேயே சென்று விடுவார்கள். குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தான் இருவரும் கோவிலுக்குச் செல்வதும் வழக்கம். அப்படிச் செல்லும் நாட்கள் திருவிழா நாட்களாக இருந்தால், அதிகம் கூட்டம் சேராத கோவிலுக்குச் சென்று விடுவார்கள்.
அன்றைக்கும் காஞ்சிபுரம் செல்லும் வழியில் இருந்த அதிகம் அறியப்படாத ஒரு பெருமாள் கோவிலுக்குச் சென்றனர். செல்லும் வழியில் இருவரும் அதிகம் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் எப்போதும் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் அதிகம் இருந்தது இல்லை. சத்யவதி தன் பார்வையிலேயே கீர்த்தியைக் கையாளுவார். கீர்த்தியின் இளம் பருவம் முழுதும் அவளின் தாயைச் சுற்றியே அதிகம் இருந்தது. அதனாலோ என்னவோ அவரின் பார்வையே அவளுக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்துவிடும் .
கோவிலுக்குச் சென்று அபிஷேகம் எல்லாம் முடிந்த பின், அர்ச்சனைக்குக் கேட்க, அவளின் அன்னை “சந்திரன் , அஸ்தம் நட்சத்திரம் , கன்னி ராசி” எனக் கூறவும், அர்ச்சகர் கீர்த்தியைப் பார்த்தார். அவள் தலையசைக்கவும், அர்ச்சனை செய்யச் சென்று விட்டார் அர்ச்சகர். இதுவும் வழக்கமாக நடப்பது தான். பெண்கள் இருவர் மட்டுமாக வந்து, ஒரு ஆணின் பெயரில் அர்ச்சனை என்றவுடன் மனிதர்களுக்கே உள்ள இயல்பான குறுகுறுப்பில் யார் அவர் என்பது போல இருவரையும் பார்ப்பார்கள். அதிலும் ஸ்ரீகீர்த்தி நடிகை வேறு. எதுவும் கிசுகிசு கிடைக்காதா என்ற ஆவல் அதிகம் இருக்கும். அவளுடைய தந்தையின் பெயர் சந்திரன் என்பது வெளி உலகிற்கு தெரியாது. அம்மா, மகள் இருவரிடமும் அதற்கு மேல் ஒரு வார்த்தை வாங்க இயலாது.
கோவில் பூஜைகள் முடித்து இருவரும் வழக்கமாகச் செல்லும் ஆசிரமம் சென்றனர். அங்கே குழந்தைகள், முதியோர், உடல், மன நலமில்லாதவர் எனப் பல்வேறு பிரிவினரும் தங்கியிருந்தனர். அவர்களுக்கு அன்றைய நாள் முழுதும் ஆகும் உணவுக்கானத் தொகையைக் கட்டியிருந்தார் சத்யவதி. அதற்காக அவர்கள் கையால் இனிப்பு எடுத்துக் கொடுத்து என்று எல்லாம் கிடையாது. ஒவ்வொரு பிரிவு மக்களுடனும் சிறிது நேரம் செலவழித்தார்கள் கீர்த்தியும் அவள் அன்னையும். கீர்த்தியும்,
அன்றைய பகல் பொழுது வரை அங்கே செலவழித்தப் பிறகு இருவரும் வீடு திரும்ப, வீட்டு வாயிலில் பத்திரிகையாளர்கள் நின்று இருந்தனர். இவர்கள் காரைக் கண்டதும், அவர்கள் சுற்றி வளைக்க முயல, அதற்குள் கீர்த்தி வீட்டு வாட்ச்மேன் மற்றும் பாதுகாவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
கீர்த்தி அங்கே இறங்க முயல, பாதுகாவலர்களில் ஒருவன் கார் ஜன்னல் தட்டி “மேம், நீங்க இங்கே இறங்க வேண்டாம். நாங்க காம்பவுண்ட்க்குள்ளே யாரையும் நுழைய விடாமப் பார்த்துக்கறோம். நீங்களும், பெரிய மேமும் நேரா போர்டிக்கோவில் காரை நிறுத்திட்டு, வீட்டுக்கு உள்ளே போயிடுங்க. ஒரு ஒன் ஹவர் கழிச்சு நீங்க மீட் பண்ணுவீங்கன்னு இவங்களுக்குச் சொல்லிடறேன். அண்ட் நீங்க பேசித் தான் ஆக வேண்டிய சிட்சுவேஷன் இப்போ. உங்க மேனேஜர் ஆபீஸ் ரூமில் வெயிட் பண்ணறார்” என்றான்.
கீர்த்தி, சத்யவதி என்ன விஷயம் என்று புரியாமல் பார்த்தனர். மீடியா மக்களின் ஆர்வமும், அவசரமும் பார்க்கையில் ஏதோ பெரிய விஷயம் என்று உணர்ந்து கொண்டனர். செக்யூரிட்டி சொல்படி நேராக டிரைவர் போர்டிகோவில் நிறுத்த, இருவரும் இறங்கும் போதே எங்கிருந்தோ காமிரா பிளாஷ் அடித்தது. கீர்த்திக்கு இது சகஜம் தான் என்றாலும், வீடு வரை வந்தது இல்லை. போகிற, வருகிற இடங்களில் தவிர்க்க முடியாது. இன்று நடப்பது கீர்த்திக்கு சரியாகப் படவில்லை.
சத்யவதியோடு கீர்த்தி வீட்டினுள் வரும்போதே மேனேஜர் மற்றும் வேலையாட்கள் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர்.
மேனேஜர் மட்டும் அருகில் வந்து நிற்க, சத்யவதி “என்ன விஷயம் செல்வா சர்? ஏன் எல்லோரும் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க?” எனக் கேட்டார்.
அதே சமயத்தில் கீர்த்தியின் ஃபோன் அடிக்க , அந்த ரிங்டோன் வைத்தே தந்தை அழைப்பதை உணர்ந்தாள். இந்த நேரத்தில் அழைக்க மாட்டாரே என்று எண்ணியபடி எடுத்துப் பேச, கீர்த்தியின் முகம் மாறியது.
மேனேஜர் அவரின் போனில் ஒரு வீடியோ ஓட விட்டு சத்யவதிக்குக் காட்ட, பார்த்து இருந்த சத்யவதி அப்படியே சட்டென்று சோபாவில் அமர்ந்தார்.
“தயாரிப்பாளர் கருணாகரன் மற்றும் நடிகை ஸ்ரீகீர்த்தி மோதலில் திடுக்கிடும் திருப்பமாக ஆடியோ டேப் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது” என செய்திச் சேனல்களில் நியூஸ் ஸ்கோரோலிங்க் பகுதியில் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை வந்தது.
கீர்த்தி தன் அன்னை அருகே அமர்ந்து தொலைக்காட்சியும் ஆன் செய்தாள். செய்திச் சேனல் ஒன்றில்
“நடிகை ஸ்ரீகீர்த்தியின் தாய் தயாரிப்பாளர் ஒருவரிடம் போனில் பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. தன் மகளுக்கு கதாநாயகி வாய்ப்புக் கொடுக்கும் பட்சத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் தயார் எனப் பேசியிருக்கிறார். ஸ்ரீகீர்த்தியின் அன்னையும் ஒரு நாடக நடிகை என்பது நேயர்கள் அறிவார்கள். உண்மை அறியும் சோதனை மூலம் இது நடிகையின் அன்னை குரல் என்பதும் சரிப்பார்க்கப்பட்டுள்ளது. இதோ அவரின் உரையாடல்
‘கதாநாயகி வாய்ப்பு என்பது எத்தனைப் பெரிது என்பது இந்தத் துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். வருடக்கணக்கில் முயற்சி செய்பவர்கள் எத்தனையோ பேர் இருக்க, என் பெண்ணிற்கு அந்த வாய்ப்புத் தேடி வரும்போது அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது எனக்கும் தெரியும். ஆனால் இப்போதுதான் பிளஸ் டூ எழுதியிருக்கிறாள். இன்னும் பதினெட்டு வயது பூர்த்தியாகவில்லை. இந்த நேரத்தில் உங்களின் எண்ணப்படி அவளால் செயல்படமுடியாது. அதனால் அவளுக்குப் பதிலாக நான் நீங்கள் சொன்னதைச் செய்கிறேன். இந்த வாய்ப்பை மட்டும் அவளுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்று ஆடியோ முடிந்தது.
மீண்டும் செய்தியாளரின் குரலில் “நீங்கள் கேட்ட உரையாடலை வெளியிட்டவர் தயாரிப்பாளர் கருணாகரன், ‘மீ டூ என்பதே சுத்தப் பொய். தங்கள் காரியங்கள் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நன்றாக வளர்ந்ததும் இருக்கிற அத்தனை ஆண்கள் மேலும் புகார் கொடுக்கறாங்க. இதனால் எத்தனை பேர் குடும்பத்தில் பிரச்சினைகள் வருது? இதற்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். மீ டூ புகார் கொடுக்கிறவங்க முறைப்படி சங்கத்தின் மூலம் கொடுக்கணும். சங்கத்தோட அனுமதி இல்லாமல் எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது. புகார் கொடுக்கும்போது ஆதாரம் இருக்கணும். இதை எல்லாம் நடைமுறைப்படுத்தத் தான் எங்க சங்கத்தில் பேசினோம். அதற்கும் குறிப்பட்ட நடிகை எங்களையேத் தவறாகப் பேசினதில் தான் இந்த ஆதாரத்தை வெளியிட வேண்டியாகி விட்டது. அதிலும் அந்த நடிகை ஆதாரம் இருந்தால் கொடுக்கட்டும் என்று பேசியதில் தான் நேரடியாக ஊடகங்களுக்குக் கொடுத்து விட்டேன். இனிமேல் எல்லாப் புகார்களும் சங்க விதிகளின்படி செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’
இவ்வாறு தெரிவித்தார். இதற்கு நடிகையின் தரப்புப் பதில் என்னவென்று அறிய நமது நிருபர்கள் அவரின் வீட்டின் அருகில் காத்திருக்கிறார்கள். விரைவில் தெரியவரும் என்று நம்புகிறோம்.” என்று முடித்தார் செய்தி அறிவிப்பாளர்.
இத்தோடு கீர்த்தியின் அன்னை பற்றியச் செய்திகள் முடிந்து அடுத்த செய்திகளுக்குச் சென்றது.
கீர்த்திக்கும் அந்தக் குரல் தன் அன்னையுடையது தான் என்று தெரிந்தது. ஆனால் கருணாகரன் சொன்ன நோக்கத்தில் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல என அவளுக்கு நன்றாகத் தெரியும்.
ஏன் இப்படி என்று யோசனையோடு ஸ்ரீகீர்த்தி சத்யவதியின் முகம் பார்த்தாள். எதற்கும் கலங்காத அன்னையின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டு அங்கிருந்த வேலைக்காரர்களை உள்ளேப் போகச் சொன்னாள்.
-தொடரும்-
enakku sri keerthithaan again and again attract panraanga. avangalai pathina descriptions, avanga nadavadikkaigal ellam romba azhaga present panreenga. beautiful writing. viru ivurnnu nagaruthu.
Thanks vathsala. neenga keertthi mele admire agradhai parkumbodhu very happy. thanks again for your beautiful comment
Story fast a poghuthu.
Keerthi character nalla iruku. Aval appa, amma divorced a?
Karunagaran release panna audio val problem varuma?
Keerthi mother enna solla poranga?
Thanks priya. Keerthi pidichadhu very happy. Enna nadkudhu nu adutha episode le therinjikonga.
Good going ma 👍👍👍👍
Thanks sister.
Interesting👍👍
Thank you so much sister
INTERESTING keerthi amma ethukaga apadi pesinanga atha intha mari problem ku use panranganu thonuthu . papom keerti pathila ena va irukum ena sola pora nu aarvama iruku
Thank you so much sister. Unga comments padichu very happy. thanks again
Interesting
thank you so much sister
கீர்த்தி சூப்பர். அந்த கருணாகரன் எதுக்கு இவள டார்கெட் பண்றார்? ஏதாவது முன்விரோதமா?
நன்றி. நன்றி. கருணாகரன் விஷயம் அடுத்த எபிசோட்லே பார்க்கலாம். நன்றி மா .