Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – 14

மெய்யெனக் கொள்வாய் – 14

அத்தியாயம் – 14

கீர்த்தி, சத்யா, வக்கீல் குணசேகரன் மூவரும் சிறிது நேரம் காத்திருந்த பின் பிரபஞ்சன் அறையின் உள்ளே அழைக்கப்பட்டார்கள். கீர்த்தி அப்போதும் தன் நண்பன் அனுப்பிய மெசேஜ் படித்துக் கொண்டே உள்ளே வந்தாள்.

பிரபஞ்சன் அதை கவனித்துக் கொண்டாலும், குணசேகரனைக் கண்டதும் எழுந்து நின்றான்.

“வணக்கம் சர். உங்களை சேம்பர்லே பார்த்திருக்கிறேன். இப்போதான் நேரடியா சந்திக்க முடிந்தது. ரொம்ப சந்தோஷம்“ என்று வரவேற்றான்.

குணசேகரன் “வணக்கம் மிஸ்டர் பிரபஞ்சன். உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்து முடித்து குறுகிய காலத்தில் நல்ல பேர் எடுத்து இருக்கீங்க. நிறைய வெற்றிகளும் கிடைத்து இருக்கிறது. வாழ்த்துகள்.” என்று கூறினார்.

“எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் மற்றும் வழிநடத்தல் தான் காரணம். நீங்க என்னைத் தேடி இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க. என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கலாமா? முதலில் உட்கார்ந்து பேசலாம்” என்றான் பிரபஞ்சன்.

“சூர். இவங்க சத்யவதி. ஸ்ரீகீர்த்தி. ரெண்டு பேரும் நடிகைகள்.” என குணசேகரன் கூறும்  போதே, “ஓ. இப்போ ரெண்டு நாளா மீடியா டாக் இவங்க தான் இல்லையா.” என்றான்.

பின் “வெல்கம் மேடம். நீங்களும் முதலில் உட்காருங்க. தென் பேசலாம்” என்றான்.

குணசேகரன் பேசும்போது மொபைலில் இருந்து நிமிர்ந்த கீர்த்திக்கு பிரபஞ்சன் பார்த்ததும் ஓ என நினைத்தாள். குணசேகரன் அறிமுகப்படுத்துகிறார் எனவும் அவரின் வயதை ஒட்டி அல்லது அவருக்கு அடுத்த செட் வக்கீலாக இருப்பார் என்று நினைத்தாள். இத்தனை இளம் வயதில் எதிர்பார்க்கவில்லை.

பிரபஞ்சன் வயத்தைப் பற்றி கீர்த்திக்கு ஒன்றுமில்லை தான். ஆனால் குணசேகரன் போல மத்திம வயதைத் தொட்டவர்கள் கீர்த்தியின் திட்டத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தன் வயதை ஒத்தவர்கள் என்றால் இவரிடம் பேசிப் பார்க்கலாமே என்ற எண்ணம் அவளுக்கு.

பிரபஞ்சன் அறிமுகத்தின் போது கீர்த்தியை ஒரு பார்வை பார்த்தான். பின் குணசேகரனிடம் திரும்பி விட்டான்.

“சொல்லுங்க சர்.” என்றான்.

“மிஸ்டர் பிரபஞ்சன்“ என குணசேகரன் ஆரம்பிக்க, “ஜஸ்ட் பிரபஞ்சன் போதும் சர்” என்றான்.

“ஓகே. பிரபஞ்சன், மிஸ்ஸ் சத்யவதிக்கு நான் தான் லீகல் கன்ஸல்டண்ட். அவங்க ப்ராப்பர்டி இஷ்யுஸ் எல்லாம் நான் தான் பார்த்துக்கிறேன். இந்த ஒன் வீக்கா நடக்கிற விஷயங்கள் நீங்க மீடியாலே கேள்விப்பட்டு இருப்பீங்க. சத்யவதி பேசினதா வெளியிட்ட ஆடியோ ஃபேக். ஆனா அவங்க டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால் அவங்க தனி தனியா பேசின சில விஷயங்களைக் கோர்த்து இந்த ஆடியோ வந்திருக்கு. இதை நாம லீகலா மூவ் பண்ண முடியுமா? சைபர் க்ரைம் லா அப்பளிகபிள் ஆகுமா? அதான் உங்க கிட்டே கலந்துக்கலாம்ன்னு வந்தோம்”

“ஓ. இதிலே நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க சர்?” என்று பிரபஞ்சன் கேட்டான்.  

“என்ன செய்யணும்னு எங்களைக் கேட்டா? அதைச் சொல்லவேண்டியது நீங்க தானே சர்?” என கீர்த்தி பட்டென்று கேட்டாள்.  

பிரபஞ்சன் “மேடம் இது பெர்சனல் இஷ்யு. சட்டப்படி சந்திப்பதா அல்லது அவுட் ஆஃப் தி கோர்ட் பேச்சுவார்த்தை நடத்தனுமா.? எதை எதிர்பார்த்து இங்கே வந்துருக்கீங்கனு தெரியணும் இல்லையா?“  எனக் கேட்டான்.

இப்போதும் கீர்த்தி “அவுட் ஆஃப் தி கோர்ட் பேசறதுக்கு இங்கே ஏன் வரணும்? அதுவும் கருணாகரன் சொன்னது உண்மை என்று ஒத்துக் கொள்வதும் ஒன்று தானே?“ என படப்படத்தாள். 

சத்யா “கீர்த்தி” அதட்ட,  பிரபஞ்சன் நிதானமாக “அவுட் ஆஃப் தி கோர்ட்னா பணிந்து போறது மட்டுமில்லை மேடம். தட்டி தூக்கறது கூட பண்ணலாம்.” என்றான்.

கீர்த்தி சுவாரசியத்துடன் பார்க்க, சத்யாவோ பதறிப் போய் பார்த்தார்.

“இல்லை சர். வேண்டாம். அப்படி நான் நினைச்சு இருந்தால் எப்போவோ அதைச் செய்திருக்க முடியும். சிலருக்கு பாவம் பார்த்து இன்றைக்கு பெரிதாக வளர்ந்திருக்கிறது. இதில் கீர்த்தி எதிர்காலமும் அடங்கியிருக்கு. அதனால் சட்டப்படியே என்ன பண்ணலாம்னு சொல்லுங்க” என்றார் சத்யா.

கீர்த்தி “ம்ச்” என உச்சுக் கொட்ட, அதைக் கவனித்தான் பிரபஞ்சன்.

“ம். உங்க பொண்ணுக்கு அந்த வழி அத்தனை விருப்பமில்லை போலிருக்கே” எனக் கேட்டான்.

“கீர்த்தி அப்படித் தான் சொல்லுவா. உடம்பில தெம்பு இருக்கும்போது எதையும் பார்த்துக்கலாம்னு தோணும். வலு குறையும் போது பேசமா இருந்திருக்கலாம்னு யோசிக்க வைக்கும். நீங்க உங்க ஐடியா என்னவோ சொல்லுங்க” என்றார் சத்யா.

“ம். ஆனால் உங்க பெண்ணும் சட்டப்படி வழக்கு நடத்த ஒத்துழைப்பு கொடுக்கணும். அதனால் நீங்க தனியா டிஸ்கஸ் பண்ணிட்டுக் கூட சொல்லுங்க”  என்றான் பிரபஞ்சன்.

“கீர்த்தி கேஸ் சம்பந்தமா எல்லா ஒத்துழைப்பும் கொடுப்பா. ஆனால் இதுக்கு கேஸ் கொடுக்க முடியுமா சர்?” என்றார் சத்யா.

“கருணாகரன் மேலேயே கேஸ் கொடுக்கலாம். அதுக்கு நீங்க என்ன நடந்ததுவோ அதை அப்படியே சொல்லணும். சில பெர்சனல் விஷயங்கள் கேக்க மாட்டேன். ஆனால் நடந்த இடம், தேதி, சூழ்நிலை, யார் யார் இருந்தாங்க. இதில் எல்லாம் எதுவும் விடுபடக் கூடாது.” என்றான் பிரபஞ்சன்.

கீர்த்திக்கு உள்ளூர சந்தேகம் வந்தது. ஒருவேளை இவரும் கருணாகரன் பக்கம் சாய்ந்து விட்டால், தன் அன்னையின் பக்கம் இன்னும் வீக் ஆகி விடுமே என்று சிந்தித்தாள்.

சற்று யோசித்து “அம்மா, இந்த விவரங்கள் நாளைக்கு அப்பா கூட வந்து நீங்க பேசுங்களேன். இப்போ கேஸ் கொடுக்க முடியும்னு சொல்றார் இல்லையா. அது எப்படின்னு மட்டும் கேட்டுக்கலாம்” என்றாள்.

பிரபஞ்சன் சிறு யோசனையோடு கீர்த்தியைப் பார்த்தான். பின் சத்யாவிடம் “மேடம், எவிடெண்ஸ் ஆக்ட் படி எந்த ஒரு சாட்சியமும் பொது வெளியில் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியில்லாமல் வெளியிட சட்டம் அனுமதிப்பதில்லை. அந்த விஷயத்தில் தனி மனித உரிமை மீறல் சட்டம் உங்களைப் பாதுகாக்கும். அடுத்து கருணாகரன் ப்ரொடியூசர் கவுன்சிலில் கொடுத்த புகார் என்ன என்று தெரியவேண்டும். இந்த மீ டூ புகார் தவிர வேறு எதுவும் புகார் இருந்து அதை மென்ஷன் செய்து நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்களா? இல்லையென்றால் நாம் கவுன்சிலுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பலாம்” என்றான்.

சத்யா “எனக்கு அப்படி ஒன்றும் நோட்டீஸ் வரவில்லையே. மீ டூ என்ற வகையில் தான் புகார் வந்திருக்கிறது. அதற்கு விளக்கம் அளித்தப் பின்தான் நடிக்க முடியும். அதற்கு சில சட்டம் சொல்லும் வார்த்தைகள் மற்றும் பிரிவுகளை சொல்லியிருந்தார்கள். அவ்வளவு தான்“ என்றார்.

“இதையே ஆரம்பமாகக் கொள்ளலாம். எனக்கு நாளை வரும்போது அந்த நோட்டீஸ் காப்பி எடுத்து வாருங்கள். நீங்கள் நடிகர் சங்கத்தில் இருந்தால் அந்த அடையாள அட்டை, தனி மனித அடையாள அட்டை எல்லாம் கொண்டு வாருங்கள். நாம் முதலில் ப்ரொடியூசர் கவுன்சிலுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி வைக்கலாம். அதற்கு வரும் பதிலைப் பொறுத்து அடுத்த ஸ்டெப் யோசிக்கலாம்” என்றான் பிரபஞ்சன்.

வக்கீல் குணசேகரன், சத்யா இருவரும் அதைப் பற்றி சில விவரங்கள் கேட்டுக் கொண்டனர். பின் மறுநாள் எப்போது சந்திப்பது என நேரம் குறித்துக் கொண்டு கிளம்பினர். கீர்த்தியும் முகத்தில் எதுவும் காட்டாமல், அவர்கள் பேச்சிலும் தலையிடாமல் விடை பெற்றாள்.  

பிரபஞ்சன் பேச்சில் சத்யாவிற்கு நம்பிக்கை வந்திருந்தது. கீர்த்திக்கோ இந்த தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் ஹைதர் கால பழக்கத்தை எப்போதுதான் விடுவார்களோ என்றிருந்தது. அதே சமயம் பிரபஞ்சன் அணுகும் முறையும் வித்தியாசமானதாகத் தான் தோன்றியது.

பின் தன் பெற்றோர் அவர்கள் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கட்டும். நம் திட்டத்தை இவர்கள் அறியாமல் நாம் செயல்படுத்துவோம் என்று தனக்குள் உறுதி கொண்டாள்.

பிரபஞ்சன் பெரிதாக படங்கள் பார்ப்பது இல்லைதான். ஆனாலும் போஸ்டர்கள் கண்ணில் படும் தானே. அதை வைத்து ஸ்ரீகீர்த்தி நடிக்கும் படங்கள் பற்றியும் தெரிந்தது.  

அப்படிப் பார்த்ததில் இன்னொஸெண்ட் என்று குழந்தைத் தனமான கதாபாத்திரங்களோ, இல்லை அதீத கவர்ச்சி போன்ற கதைகளோ நடிப்பது இல்லை என அறிந்து வைத்திருந்தான். கதையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தேர்ந்தெடுத்து நடிப்பதும் தெரிந்தது.

எந்த வகையிலும் தவறாக போர்ட்ரைட் ஆகிவிடக் கூடாது என்பதில் கீர்த்தி மிகக் கவனமாகவே இருந்தாள். அதே சமயம் கருணாகரன் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தது அவள் தைரியத்தையும் காட்டியது.

அந்த தைரியத்தில் கீர்த்தி ஏதோ தனியே செய்யவும் உத்தேசித்து இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டான் பிரபஞ்சன்.

முதல் சிட்டிங்கில் எந்த கிளையண்ட்டும் பெரிதாக பேசி விட மாட்டார்கள். அவர்களுக்கு வக்கீலின் மேல் நம்பிக்கை வரவேண்டும். அதனால் தான் எந்த ஒரு வழக்கும் ஒரே தடவையில் முடிவது இல்லை. சத்யவதி கூறியதில் இன்னும் பல விவரங்கள் தெரிய வேண்டும்.  

பிரபஞ்சன் மனதில் மறுநாள் கீர்த்தி வருவது சந்தேகம் தான் என்று நினைத்துக் கொண்டான். ஒரு விதத்தில் நல்லது தான். சத்யவதியைத் தடையில்லாமல் பேச வைத்துவிடலாம் என்று எண்ணினான்.

கீர்த்தி தன் நண்பனோடு பேசியதில் அத்வைத்தைச் சந்திக்க அன்றே வாய்ப்புக் கிடைத்தது. தன் அன்னையிடம் என்ன சொல்லலாம் என்று யோசித்தாள். இதுவரை பொய் சொல்லிப் பழக்கமில்லை. அதற்கு தேவை இருக்கவும் இல்லை.

பின் தன் நண்பன் ஒளிப்பதிவாளாரை சந்திக்கச் செல்வதாகக் கூறினாள். உண்மையில் அவரோடு அத்வைத்தை அழைத்துவரத் தான் கூறியிருந்தாள்.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூவரும் சந்தித்தனர். கீர்த்தி ஷால் ஒன்றை கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டு, முகத்தை மறைக்கும் பெரிய கண்ணாடியும் அணிந்துக் கொண்டாள். டைட் பிட் உடை இல்லாமல், லூசாக அணிந்ததில் உடல் சற்று பருமனாகத் தெரிய, சட்டென்று அடையாளம் தெரியவில்லை.

கீர்த்தி முன்னதாகச் சென்று காத்திருந்தாள். சற்று நேரம் கழித்து கீர்த்தியின் நண்பன் அத்வைத்தோடு வந்தான்.

நான்கு பேர் அமரும் இருக்கையின் உள்பக்கத்தில் அத்வைத் அமர கூறியவள், தன் நண்பனை வெளிப்பக்கம் அமருமாறு கூறினாள். க்யூப் டைப் இருக்கைகள் என்பதால் எட்டிப் பார்த்தால் மட்டுமே உள்ளே இருப்பவரைக் காண முடியும். அந்த இடத்தில் அது நாகரீகமற்ற செயல் என்பதால் அப்படி யாரும் முயல்வது இல்லை.

ஏற்கனவே அத்வைத், கீர்த்தி இருவருக்கும் அறிமுகம் உண்டு என்பதால், பேரர் வந்து சென்றவுடன் நேரடியாகவே பேச்சை ஆரம்பித்தாள் கீர்த்தி.

“அத்வைத் சர், கொஞ்ச நாளா உங்க அப்பாவிற்கும், எனக்கும் நடுவில் இருக்கும் பிரச்சினை பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்”

“தெரியும் கீர்த்தி மேடம்.” என்று மட்டும் அத்வைத் கூற, கீர்த்தி “அந்த ஆடியோ அதில் உண்மை இல்லை” என்றாள்.

“அதுவும் தெரியும் மேடம்” எனவும் அத்வைத்தை ஆச்சரியமாக கீர்த்தி பார்த்தாள்.

பின் “எனக்கு அந்த உண்மையை உங்கள் அப்பாவின் மூலமாகவே வெளியில் வர வைக்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி தேவை. உங்களால் முடியுமா?” என்று கேட்டாள்.

அத்வைத் பெருமூச்சு விட்டு “செய்கிறேன்” என்றான்.

அவன் சட்டென்று ஒத்துக் கொள்வதை கீர்த்தி நம்பாமல் பார்க்க “என்னை வளர்த்தது முழுக்க என் தாத்தா, பாட்டி தான். தாத்தா மூலம் உங்கள் அம்மா பற்றி முன்பே எனக்குத் தெரியும். நான் டைரக்ஷன் படிப்பைத் தேர்ந்தெடுத்த போது சில விஷயங்கள் சொன்னார். வாழ்க்கையில் வெற்றி பெற ஒழுக்கம் மட்டுமே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதும் அதில் ஒன்று.  அதை என் தந்தை ஃபாலோ பண்ணுவதில்லை என்றும் என்னிடம் சொன்னார். நான் அவரை மாதிரி இருக்கக்கூடாது என்பது அவரின் கட்டளை. அதை முடிந்த வரை ஃபாலோ பண்ணுகிறேன். அதனால் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்கிறேன்” என்றான் அத்வைத் .

“ரொம்ப தாங்க்ஸ் அத்வைத். என் திட்டப்படி நடந்தால் நான் நடிக்கும் கடைசிப் படம் உங்களின் டைரக்ஷன் தான். உங்கள் உதவிக்கு என்னால் முடிந்த கைமாறு” என்றாள் கீர்த்தி.

“நன்றியை எதிர்பார்த்து நான் செய்யவில்லை கீர்த்தி. பரிகாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதற்காக நீங்கள் என் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது” என்றான் அத்வைத்.

“அது உங்கள் பெருந்தன்மை. என்னால் முடிந்ததை நான் கட்டாயம் செய்வேன்” என்றாள் கீர்த்தி.

“அது இருக்கட்டும். உங்கள் திட்டம் என்ன?” எனக் கேட்டான் அத்வைத்.

கீர்த்தி திட்டத்தை விவரிக்க, விவரிக்க அத்வைத் கண்களில் ஆச்சரியம் தோன்றினாலும், சந்தேகமும் இருந்தது.

“இது வெற்றி பெறும் என்று நம்புகிறீர்களா?” என்றான் அத்வைத் .

“உண்மை என்றும் வெல்லும் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்கிறேன்.” என்றாள் கீர்த்தி.

“சரி, உங்கள் திட்டத்தை எப்படி செயல் படுத்தவது?”

“இரண்டு நாட்கள் போகட்டும். நாம் இருவரும் இதே ஹோட்டலில் தனியாக சந்திக்கலாம். அதை மீடியாவில் வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு” என்று நண்பனிடத்தில் கூறினாள்.

“ஓகே.” என அத்வைத் கூறவும், இருவரும் தங்கள் தொலைப் பேசி எண்களை பரிமாறிக் கொண்டனர்.

பின் கீர்த்தி “நான் முதலில் சென்று விடுகிறேன். கால் மணி நேரம் கழித்து நீங்கள் இருவரும் கிளம்புங்கள்.” என்றாள்.

கீர்த்தி கிளம்பி ஹோட்டல் லாபி வரவும், பிரபஞ்சனும் தன் கிளையண்ட் ஒருவரோடு அதே இடத்திற்கு வந்தான். மொபைல் ஃபோன் குனிந்து பார்த்துக் கொண்டே கீர்த்தி வந்தாள். அந்த போஸ் தனக்குத் தெரிந்தவர் போல இருக்கிறது என்று பிரபஞ்சன் கூர்ந்து கவனிக்க, கீர்த்தி என்று தெரிந்தது.

என்றாலும் அருகில் செல்லவில்லை. அது கீர்த்தியின் ப்ரைவசி பாதிக்கும் என்று நினைத்தான். ரெஸ்டாரன்ட் உள்ளே செல்ல, சரியாக கீர்த்தியின் நண்பனும், அத்வைத் இருவரும் வெளியே வந்தனர். இரண்டையும் இணைத்துப் பார்த்தவனுக்கு ஏதோ புரிந்தது.

பிரபஞ்சன் கீர்த்தியின் ஆக்ஷன் என்னவாக இருக்கும் என்று தனக்குள் சிந்தித்தவன், சிறு புன்னகை செய்தான்.

-தொடரும் –

8 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – 14”

  1. Avatar

    Story viruviruppa iruku.
    Society, ippo nallavanga thaan avangalai prove panna vendiya nilaiyil iruku.
    Prabanjan, good lawyer. Keerthi idea workout aaguma?
    Karunagaran thappai advaidh sari seivaana?

  2. Kalidevi

    keerthi ku karunakaran paiyan help panna vanthu irukan nallathu panuvana avan paiyanuku therinji iruku ithu unmai illanu
    atha keerthi nirubichi antha karnakaran adikanum athu tha crt ah irukum ithuku lawer prabanjan seruvara papom

  3. Avatar

    கதை ஆக்ஷன் பார்ட் க்கு வந்தாச்சு. வேகம் எடுக்குது. பிரபஞ்சன் சட்டுன்னு மனசிலே நிக்கறார். அத்வைத் இவங்க கூட வர சொல்ற ரீசனும் சரியா இருக்கு. நல்ல விறுவிறுன்னு இருந்ததது இந்த அத்தியாயம்.

  4. Avatar

    கதை விறுவிறுப்பாக போகுது. கருணாகரன் பையன் நல்லவன் தான் போல, கீர்த்திக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்றான், பிரபஞ்சன் இவளோட ப்ளான் யூகிச்சிட்டானோ?

  5. Avatar

    கதை வேகமா போக ஆரம்பிக்குது இளங்கன்று பயம் அறியாது அப்படிங்கிற மாதிரி கீர்த்தி இருக்கா கீர்த்தி செய்ய போற விஷயம் சக்ஸஸ் ஆகுமா இல்லகருணாகரனீடம் மாட்டிப்பாளா பிரபஞ்சன் கீர்த்தி செய்ய போற செயலை கெஸ் பண்ணிட்டானோ

  6. Avatar

    கதையின் நகர்வு திரில்லிங். .. அடுத்து என்னவாக இருக்கும்னு யோசிக்க வைக்குது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *