இறுதி அத்தியாயம் மொத்தம் மூன்று பகுதிகள் – அடுத்த அடுத்த பகுதிக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அத்தியாயம் – 18 – 1
சத்யாவின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
சத்யா முதல் முதலில் ஹீரோயினுக்கு டப்பிங் பேசியது அவளின் பெற்றோருக்கும், சந்திரனுக்கும் மட்டுமே தெரியும். கூடப்பிறந்த அக்காவிடம் கூட சொல்லவில்லை. அதற்காக வாங்கிய சம்பளம் நிறைவாகவே இருந்தது. என்றாலும் உடனே அடுத்த வாய்ப்பு வந்தபோதும் சத்யா சம்மதிக்கவில்லை.
குழந்தை பெற்ற உடம்பு. அதை கவனிக்காமல் விட்டால், தன்னிடத்தில் பால் குடிக்கும் குழந்தைக்கும் உடல் நலம் கெட்டு விடும் என்ற கவலை சத்யாவிற்கு இருந்தது. அத்தோடு சந்திரன் இருப்பிடம் சென்று விட நேர்ந்தால், ஒப்புக் கொண்டதை முடிக்க முடியாமல் போய்விடும். இதை எல்லாம் உத்தேசித்து, வீட்டில் தான் அமைதியாக இருந்தாள்.
ஸ்ரீகீர்த்தி குப்புறப்படுத்து, நகர்ந்து, தவழ்ந்து, உட்கார்ந்து தற்போது பிடித்து நிற்க ஆரம்பித்து இருந்தாள். நாட்கள் அத்தனை வேகமாக நகர்ந்து இருந்து இருக்க, சத்யா, சந்திரன் இருவருக்கும் கடிதங்களும், அவ்வப்போது ஃபோன் பேச்சுக்களும் மட்டுமே துணையாக இருந்தது.
இந்நிலையில் ஸ்ரீகீர்த்தியின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு சந்திரன் வந்தான். அவனோடே சந்திரனின் ஊருக்குச் சென்றாள் சத்யா. குழந்தை பிறந்த பின்பு இப்போதுதான் ஊருக்கு வர, சொந்த பந்தங்கள் கேள்விகளால் திணறடித்தனர்.
அங்கிருந்த முக்கால்வாசிப் பேருக்கு காமாட்சியின் செயல்கள் தெரியும். என்றாலும் அதை அவரின் இயல்பு என்றவர்கள், சத்யா தான் பொறுத்துப் போயிருக்கக் வேண்டும் என்றனர். சத்யாவிற்கு இந்தப் பேச்சுக்கள் பிடிக்கவில்லை. சந்திரனும் அதை விரும்பவில்லை தான். இருவரும் அந்த வார்த்தைகளை மௌனமாய்க் கடந்தனர்.
காமாட்சியின் அடிப்படை குணம் முற்றிலும் மாறவில்லை. ஆனால் பேத்தியை நன்றாகவேக் கவனித்துக் கொண்டார். ஸ்ரீகீர்த்திக்கு பட்டு பாவாடை, காது தோடு, செயின் எல்லாமே பிறந்த நாளிற்கு வாங்கி வைத்தார். உறவுகளை அழைத்து விருந்து வைத்தது எதிலுமே குறைவில்லை.
ஆனால் எதிலும் சந்திரன், சத்யா இருவரிடமும் கலந்துக் கொள்ளவில்லை. உடை, விருந்து, அழைப்பு என எதிலும் இவர்கள் விருப்பங்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. நல்லவேளையாக இவர்களுக்கும் எடுத்து வைக்காமல் விட்டு வைத்தார்.
அந்த முறை குழந்தையின் பிறந்த நாள் விழா முடிந்து, மேலும் சில நாட்கள் சத்யாவோடு தங்கள் ஊரில் தங்கினான் சந்திரன். காமாட்சியோடு அவ்வப்போது சில வார்த்தைப் போர்கள் வெடித்தாலும், அதை பெரிதாக்காமல் விட்டாள் சத்யா.
இன்னுமே சத்யாவிற்கு வருத்தம் தான். வயிற்றுப் பிள்ளைக்காரியை அத்தனை வேதனையோடு அனுப்பினோம் என்ற எண்ணமே வரவில்லை காமாட்சிக்கு. குழந்தைப் பிறந்த பின்னும் கூட வீட்டிற்கு வா என்று மாமியார் அழைக்கவில்லை. ஆனாலும் இங்கே வந்து தானே நிற்கிறோம். இதுதானே பெண்களின் நிலை.
புருஷன் வீட்டினர் என்ன தப்பு செய்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்கக்கூடாது. அதே மனைவி வீட்டினர் கவனக் குறைவாக செய்தால் கூட தானும் செல்ல மாட்டோம். மனைவியையும் அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்ப மாட்டோம். கேட்டால் மானம் போச்சு. மரியாதை போச்சு எனக் கூவல். அதே மானம், மரியாதை எல்லாம் பெண்களுக்கும் தானே.
இந்த எண்ணம் எல்லாம் மனதோடு தான். நம் எண்ணங்கள் படி வாழ ஆரம்பித்தால், குடும்பம் என்ற அமைப்பு சிதறும். அதற்காகப் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.
என்ன ஒன்று இரண்டு தலைமுறை முன்னால் வாழ்ந்த பெண்களுக்கு இப்படி ஒரு எண்ணம் கூட வரவிடாமல் பார்த்து இருந்தது சமுதாயம். இப்போது அவை கேள்விகளாக வலம் வருகின்றது. இன்னும் முன்னேற்றம் வருவது காலத்தின் கைகளில் தான்.
சந்திரனின் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் நாள் நெருங்க, இருவருக்குமே குழப்பம். சத்யாவை இங்கே விட்டுச் செல்வதா அல்லது சென்னையில் விடுவதா என யோசித்தனர்.
ஆனால் காமாட்சி நேரடியாக எல்லோரும் இருக்கும்போது அந்த வீடு தன்னுடையது. என் பேச்சுக்கள் மட்டுமே இங்கே எடுபட வேண்டும். அதை ஏற்றுக் கொண்டால் இங்கே இருக்கட்டும். இல்லை அவரவர் வழி என்று விட்டார்.
எல்லோருக்குமே காமாட்சியின் அந்த பேச்சு அதிர்ச்சி தான். அதற்கு மேல் சந்திரன் யோசிக்கவில்லை. இரண்டு நாட்கள் முன்னதாகக் கிளம்பி, சென்னையில் சத்யாவைக் கொண்டு விட்டேக் கிளம்பினான்.
இன்னும் சந்திரன் விண்ணப்பித்தக் குடியிருப்பு வசதி கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரை சென்னையிலேயே சத்யா இருக்கட்டும் என்று விட்டான்.
எல்லைப் பிரச்சினை முடிவுற்று சந்திரன் ஆசுவாசமாகும் நேரம், அவனுக்கு ட்ரான்ஸ்பர் சமயமாக இருந்தது. இந்த முறை காஷ்மீர் பகுதியில் சந்திரனுக்குப் பணி மாற்றம் போட்டிருக்க, திகைத்து விட்டான். அந்த சமயம் மத்திய அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்க, காஷ்மீரில் மாற்றங்கள் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு அடிக்கடி கலவரங்கள் நடந்தவண்ணம் இருந்தது.
இந்த நேரத்தில் சந்திரனுக்குக் குடும்பத்தை தன்னோடு கூட்டிக் கொள்வது சரியாகப் படவில்லை. எனவே சத்யா குழந்தையோடு தங்கியிருந்தாள். அடுத்த இடமாற்றம் குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்குக் கிடையாது.
சத்யா டப்பிங் பேசிய படம் பெரிய வெற்றி பெற்றிருந்ததது. அந்த ஹீரோயின் தன்னுடைய அடுத்த அடுத்தப் படங்களுக்கு டப்பிங் பேச சத்யாவை அழைத்தார். சத்யாவிற்கும் ஒரு வருமானம் என்பதோடு, தான் விரும்பும் துறையில் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறோம் என்ற சந்தோஷம். இவற்றிற்காக மீண்டும் டப்பிங் செய்கிறேன் என்று சந்திரனிடம் கேட்டாள். ஸ்ரீகீர்த்தியும் வளர்ந்து வரவே, தற்போது சத்யாவிற்கு நேரமும் கிடைத்தது.
சத்யா மனநிலை மற்றும் அவள் சென்னையில் தங்கி இருக்க ஒரு காரணம் என்றாவது அவள் செல்லட்டும் என நினைத்துச் சம்மதித்தான் சந்திரன்.
கிட்டத்தட்ட கீர்த்தியின் மூன்று வயதில் ஆரம்பித்த சத்யாவின் பின்னணிக் குரல் பயணம் ஏழு வயது வரை அப்படியே நீடித்தது.
அந்த நான்கு வருடமும், வருடம் ஒரு முறை விடுமுறையில் மட்டுமே சந்திரன் வந்து சென்று கொண்டிருந்தான். அது பெரும்பாலும் கீர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இருக்குமாறு அமைத்துக் கொள்வான். மற்றபடி இருவரின் பிறந்தநாள், திருமண நாள் அனைத்துமே தொலைப்பேசி வாழ்த்து மற்றும் தபால்கள் மூலம் பரிசுகள் மட்டுமே.
வாழ்க்கை சோர்வாகச் செல்லுவதாகவே சத்யாவிற்கு எண்ணம். அதில் அவளுக்கு ஏற்படும் திருப்தி இந்த பின்னணிக் குரல் வேலை மட்டுமே.
நான்கு வருடமும் கீர்த்தியின் பிறந்தநாளை சொந்த ஊரில் கொண்டாடி விட்டு, சந்திரன் பணிக்குத் திரும்பும்போது, இவர்களும் சென்னை திரும்பினார்கள்.
இந்த நிலையில் சந்திரன் தம்பி சரவணன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பெண் வீட்டில் நெருக்குகிறார்கள் என்று கூறி, சந்திரன் விடுமுறை முடித்து திரும்பிய இரண்டு மாதத்தில் திருமணத் தேதி குறித்தார்கள்.
சத்யாவிற்கு கோபம். அப்படி என்ன அவசரம். சந்திரன் வரும் வரை பொறுத்து இருக்கலாமே. இன்னும் இரு மாதங்கள் தள்ளி வைத்து இருந்தால் கூட சந்திரன் ஒரு வாரம் விடுமுறை மட்டும் எடுத்துக் கூட வந்து சென்றிருக்க முடியும்.
நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை வீட்டு பொறுப்பு என்பதால், காமாட்சி எடுத்து நடத்தினார். பெரிய விழாவாகவே நடந்தது. மாமனார் அழைத்தத்தின் பேரில் சத்யா, அவள் அப்பா மற்றும் குழந்தையோடு கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீகீர்த்தியை தன்னோடு வைத்துக் கொண்டு எல்லா வேலையும் பெண்கள் மூலம் நடத்திக் கொண்டார் காமாட்சி. அவர்கள் இருவரும் சத்யாவை இணைத்துக் கொண்டனர். வருத்தம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நல்லபடியாக நிச்சயம் முடியவும் கிளம்பிவிட்டாள்.
திருமணத்திற்கு புடவை எடுக்க, மற்ற ஜவுளி எடுக்க என எல்லாவற்றிற்கும் காஞ்சிபுரம் தான் வந்திருந்தனர். காமாட்சிக்கு விருப்பமில்லாவிட்டாலும், பெண் வீட்டினரின் அழுத்தத்தில் தான் வந்திருந்தார். ஆனால் யாரும் சத்யாவையும் அங்கே வரச் சொல்லிக் கூப்பிடவில்லை. இவர்கள் வந்த விஷயமே குழந்தைக்கு பட்டு எடுக்க வேண்டும். அவளிடம் இல்லாத கலர் எது எனக் கேட்டு ஃபோன் செய்த போது தான் தெரியும்.
சத்யாவிற்கு அன்றைக்கு டப்பிங் வேலை இல்லை. வீட்டில் தான் இருந்தாள். முன்னமே சொல்லியிருந்தால் வேலை இருந்தாலும் விடுமுறை எடுத்து வந்திருப்பாள். தன்னிடம் வர முடியுமா என்று கேட்டக்கூட இல்லையே என்று வருத்தமாக இருந்தது.
அத்தோடு சத்யா பெற்றோரை அழைக்க அமுதாவும், அவள் கணவரும் தான் வந்திருந்தனர். அவர்களின் மகன் விவேக் உடன் வந்திருந்தான். சத்யாவை முன்னதாகவே வருமாறு அழைத்தாள் அமுதா. ஒரு வாரம் முன் செல்லலாம் என்று சத்யாவும் முடிவு செய்தாள்.
அப்படி இப்படி என்று சரவணனின் திருமண நாள் பக்கம் நெருங்குகையில் சத்யாவும் ஊருக்குச் சென்று விட்டாள். சந்திரன் வருவது கஷ்டம். அவனின் சார்பில் தான் சென்று தன்னால் முடிந்த பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே அவள் எண்ணம்.
அதன் படி நான்கு நாள் முன் பந்தக்கால் முகூர்த்ததின் போதே சென்று விட்டாள். காமாட்சி, சத்யா இருவரும் நேரடியாகப் பேசிக் கொள்ளாமல் வேலையும் செய்து கொண்டிருந்தனர்.
சரவணன் திருமணத்தின் முதல் நாள் இரவில் வந்து நின்றான் சந்திரன். மற்ற எல்லோருக்கும் தெரிந்து இருந்தது அவனின் வரவு. சத்யாவிடம் சொல்லவில்லை. கடைசி நேரத்தில் தான் விமானத்தில் திருச்சி வந்து அங்கிருந்து வந்திருந்தான்.
சத்யா திகைத்துப் பார்க்கும் போதே ஸ்ரீகீர்த்தி “டாடி, மம்மி நீங்க வருவீங்கன்னு சொல்லலை. சொல்லியிருந்தா சேம் சேம் கலர் டிரஸ் எடுத்துட்டு வந்திருப்பேன்லே” என்று கட்டிக் கொள்ளும் போது தான் மறந்து விட்டோமே என்று வருத்தப்பட்டான்.
உண்மையில் வரும் எண்ணம் அவனுக்கு இல்லைதான். சென்ற வாரம் முழுவதும் அவனின் அன்னை போனில் கூப்பிட்டிருக்க, அவரின் புலம்பல் தாங்காமல் கிளம்பியிருந்தான்.
சந்திரன் டிக்கெட் புக் செய்யும் நாளில் சத்யா அவனின் ஊருக்குச் சென்று விட, அதற்கு பின் தனிப்பட்டுப் பேச இருவருக்கும் இயலவில்லை. இவர்கள் திருமணத்தில் ஆரம்பித்து இதுதானே நடக்கின்றது. அதனால் சந்திரன் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஒரு நாள் என்றாலும் நேரில் பார்க்கப் போகிறோம் என உள்ளூர மகிழ்ச்சிதான்.
ஆனால் சத்யாவிற்கு தான் இந்த அதிர்ச்சியைச் சமாளிக்க முடியவில்லை. அவனுக்கு என்று திருமணத்திற்கு புது உடை கூட எடுக்கவில்லை. இங்கே அவனின் நல்ல உடை எல்லாம் இருக்கின்றது தான். ஆனால் மகள் சொன்னது போல ஒரே கலர் என்று எல்லாம் இருக்காதே என்று வலித்தது.
அத்தனையையும் அப்படியே உள்ளே தள்ளிய சத்யா, மற்றவர்களோடு இணைந்துக் கொண்டாள். மறுநாள் திருமணத்திற்கு என காமாட்சி தன் மகனுக்கு வேட்டி சட்டையும், சத்யாவிற்கு புடவையும் கொண்டு வந்து கொடுத்தார். தன் மகன் வரும்வரை அதை சத்யாவிடம் காட்டக் கூடவில்லை.
சத்யாவிற்கு காமாட்சிக் கொடுத்தப் புடவை கட்ட விரும்பவில்லை தான். ஆனால் அதற்கு ஒரு ஸீன் கிரியேட் செய்ய விரும்பாமல் கட்டிக் கொண்டாள். சந்திரன் அன்னையின் செயலை யூகித்து விட்டான். அவனுக்கு மூத்தப் பையனாகத் தன் பொறுப்பில் சரியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஒரு பெருமூச்சோடு சத்யாவோடு அவனும் தயாரானான்.
சரவணன் திருமணம் எல்லாம் இருவர் மனதிலும் பதியவில்லை. சந்திரன் மனதில் சரவணன் வேலை மற்றும் திருமணம் முடியும் வரை தன்னுடைய பொறுப்பு. அதற்கு பின் அவர்கள் பாடு என்பதே. இனிமேல் தன் குடும்பம் மட்டும் பார்த்தால் போதுமே எனும் நிம்மதி.
அன்றைக்கு திருமணம், விருந்து எல்லாம் முடியவே மதியம் மூன்று மணி கிட்டே ஆகியிருந்தது. சந்திரன் திருச்சி சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை அங்கிருந்து டெல்லி, அங்கிருந்து ஜம்மு ஃப்ளைட் என புக் செய்திருந்தான். மொத்தம் மூன்று நாட்கள் மட்டும் விடுமுறை எடுத்து வந்திருந்தான். அதனால் உடனே கிளம்பியும் விட்டான். அவன் இருக்கும் வரை கீர்த்தி அவனிடத்தில் மட்டுமே இருக்க, அந்த ஒரு திருப்தியோடு சென்றான்.
சத்யா யாரிடமும் அதிகம் பேசிக் கொள்ளாமல், இரண்டு நாட்களில் தானும் கிளம்பி விட்டாள். சத்யாவின் கோபம் சில நாட்கள் நீடித்து இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக போனில் பேசி சமாதானம் செய்தான்.
ஏதோ ஒரு வழியாக வாழ்க்கைப் போய்க் கொண்டிருந்த போது தான் சத்யா ஒரு வரலாற்று திரைப்பட நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தாள். அந்த படம் தேசிய அளவில் பேசப்பட எண்ணற்ற விருதுகளைக் குவித்தது. அதில் பின்னணி பேசிய சத்யாவிற்கும் விருது என அறிவித்து இருந்தது.
சத்யாவிற்கு சொல்லப்படும் முன் செய்திகளில் வெளியாக, அதை முதலில் கண்டது காமாட்சியாக இருந்தார். அது சத்யாவின் வாழ்வில் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது.
சத்யாவிற்கு விருது கிடைத்து இருக்கும் சந்தோஷத்தைக் கூட காமாட்சி அனுபவிக்க விடவில்லை. அமுதா, அகிலா மற்றும் தன் கணவரோடு நேராகக் கிளம்பி சத்யாவின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அன்றைய நாள் முழுதும் சண்டை போட்டார். எப்படி சினிமாவில் வேலை செய்யலாம் என அத்தனை சண்டை. ஒரு கட்டத்தில் சத்யாவின் அப்பா உங்கள் மகனின் அனுமதியோடு தான் செய்கிறாள் என்று கூற அதிர்ந்து நின்று விட்டார்கள்.
அமுதா, அகிலா இருவரும் இந்த விஷயத்தில் அன்னையின் பக்கம் தான். தன் அன்னை வேண்டாம் என்று சொன்னதை சத்யா செய்திருக்கிறாளே என்ற கோபம், வருத்தம் இரண்டுமே இருந்தது. அதில் தன் அண்ணனும் சம்மதித்து இருக்கிறான் என்றதும் சத்யா தன் கைக்குள் அண்ணனைக் கொண்டு வந்துவிட்டாள் என்று தோன்றி விட்டது. எனவே அவர்களும் சத்யாவின் கடும் கோபத்தில் இருந்தனர்.
சத்யாவின் தந்தை சந்திரனுக்கு ஃபோன் செய்து நடப்பதைக் கூறியிருக்க, சந்திரன் அவன் தந்தையின் போனில் எல்லோரையும் அழைத்துக் கொண்டு கிளம்பும்படி கூறினான்.
எல்லோர் எதிரிலும் சத்யா இனிமேல் தங்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்று கட்டளையிட்டார். அத்தோடு அடுத்த முறை சந்திரன் வரும்போது குழந்தை மட்டுமே அவனோடு வரவேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பினார் காமாட்சி.
லோகநாதன் எந்தப் பக்கமும் பேசமுடியவில்லை. காமாட்சியின் புலி வருது பயமே, இன்றைக்கு அந்த புலியை வீட்டிற்குள் வரவைத்து விட்டது என்று நினைத்துக் கொண்டார்.
சந்திரனிடம் லோகநாதன் தனியாகப் பேசியதில், சத்யா நிலைமையும் அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. கணவன் இராணுவத்தில், அவள் தன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொள்ளவே இந்த வேலை செய்கிறாள். இதைச் சந்திரன் கூறிய போது சரிதானே என நினைத்தார்.
சத்யா விருது வாங்கியதில் சந்திரனுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், வீட்டினரின் பேச்சுக்களைக் கேட்டு வருந்தினான். அதனால் வெளிப்படையான மகிழ்ச்சியை சத்யாவிடம் காட்டிக் கொள்ளவில்லை.
சத்யா விருது வாங்கும் விழாவிற்கு சந்திரனை அழைக்க, அவனால் வரமுடியவில்லை. சத்யாவிற்கு மிகுந்த வருத்தம் அதில். தன் குடும்பத்திற்கு என்றால் விமானம் மூலம் கூட வந்து விடுகிறான். தனக்கு அதில் பாதி வழி தான். டெல்லியில் விழா. ஒருநாள் விடுமுறை போட்டாலும் போதும். ஆனால் வரவில்லை என்றதில் வேதனை ஆகியது. அதோடு அவர்கள் உறவில் சிறு விரிசலும் விழுந்தது.
தினமும் பேசிக் கொள்ளும் நேரம் குறைந்தது. சத்யாவின் விருது நிகழ்ச்சிக்குப் பிறகு அவளின் தோற்றத்தைக் கண்ட சில இயக்குநர்கள் அவளை நடிக்க அழைத்தனர். முதலில் மறுத்த சத்யா, கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறினாள். தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஒப்புக் கொண்டாள். அதுவும் அவள் மிகவும் மதிப்பு வைத்திருந்த மனோகர் சர் அழைக்கவும் சம்மதித்து இருந்தாள்.
அதைச் சந்திரனிடம் கூற, சந்திரன் மிகவும் மறுத்தான். சத்யா இந்தமுறை பிடிவாதம் பிடிக்க, சந்திரனுக்கு வெறுத்து விட்டது. சட்டென்று ஃபோன் வைத்து விட்டான்.
சத்யாவின் பெற்றவர்கள் கூட மறுத்தனர். ஆனால் சத்யாவிற்கு திருமணத்திற்கு மறுநாள் காமாட்சி செய்ததில் ஆரம்பித்து தற்போது வரை தன்னை நடத்திய விதத்தில் இந்தப் பிடிவாதம் தலை தூக்கி இருந்தது.
காமாட்சியின் தன்னலம் மற்றும் பிடிவாதம் ஒரு விதமான மனநோய் என்றால், சத்யாவிற்கு அதை எதிர்க்கும் மனநிலை வந்ததும் மனநோய் தான்.
ஆனால் சத்யா மட்டும் நடிப்பதாக இருந்ததை கீர்த்தியையும் நடிக்க வைக்கும் முடிவை நோக்கித் தள்ளிச் சென்றதும் காமாட்சி தான்.
அத்தியாயம் 18 – இரண்டாம் பகுதிக்கான லிங்க்
https://praveenathangarajnovels.com/மெய்யெனக்-கொள்வாய்-18-2/
காமாட்சி மாதிரி ஆட்களுக்கு தண்டனை இல்லயா
இவளோட இந்த முடிவுக்கு காரணமே காமாட்சி தான்,
காமாட்சி அம்மாவ ஒரு வகையில் சேத்துக்கலாம் நான் இப்படித்தான் சொல்லிட்டாங்க ஆனா சந்திரன் தங்கைகளை எதுல சேக்க சத்தியாவோட நிலைமை புரியாம சண்டை போடுறாங்க. சின்ன சின்ன விஷயங்கள் தான் பெரியதாய் பாதிக்கும் அதுதான் கோபமும் சந்திரனும் வந்திருக்கலாம் வராதனால் பிரச்சனை பெருசாக போகுது கணவனுக்காக குழந்தைக்காகன்னு பெண்கள் எதையெல்லாம் சகிச்கிட்டு இருக்க வேண்டி இருக்கு அதை அருமையா சொல்லி இருந்திங்க கீர்த்தியும் நடிக்க வந்ததுக்கு காமாட்சி அம்மா தான் காரணம் சொல்லிட்டிங்க இந்த அம்மா இன்னும் என்ன பண்ணி வச்சதோ ததெரியலையே
Paiyan life nalla irukanumnu ninaikama intha kamatchi amma eppadi la pesi avala athula nadikira vara poga vachitanga ipo keerthi pathi etho pesi aduthu ava athaium pana pora sathya
Pengalin problem e idhuthaan. Avargal thanaku pidithalum sila vishayangalai seyya mudivathu illai.
Chandran avaluku support panni rukalaam. Than ammavidam solli puriya vaikalam. Ok sonna avani kamatchi ethuvum sollavillai,Sathya vai mattum kutram sollalaama?
Sathya vin pidivaadhamum idharku kaaranam.
கதையோட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் சொல்லும் விதம் லாஜிக் கொஞ்சம் கூட இடறாமல் ஒரு போன் கால் லேர்ந்து எல்லாமே மிகச் சரியாக நீங்கள் கோர்க்கும் விதம் எனக்கு ரொம்ப வியப்ப இருக்கு. எனக்கு இவ்வளவு எல்லாம் யோசிச்சு எழுத தெரியாது. அதுவும் பொதுவாக குடும்ப கதைகள்லே இவ்ளோ டீடைல்ஸ் எல்லாம் என்னாலே எழுதவே முடியாது. அருமை. ரொம்ப நல்ல எபி
Super😍😍