Skip to content
Home » மொழி அறியா காதல் – அத்தியாயம் 4

மொழி அறியா காதல் – அத்தியாயம் 4

தன் மீது விழுந்து இருந்தவளை கஷ்டப்பட்டு விலக்கி விட்டு அவசரமாக தன் கைப்பேசியைத் தேடினான் நவீன்.

இன்னுமே நடுக்கத்துடன் மூச்சு வாங்க நின்றிருந்த அமாயா நவீனிடம் மன்னிப்பு கேட்க வாய் திறக்க, அதற்குள் நவீன் அவளைப் பார்த்து கோபத்தில் கத்திய கத்தலில் இவ்வளவு நேரமும் இருந்த நடுக்கமும் அசௌகரியமும் நீங்கி நவீனை முறைத்துக் கொண்டு நின்றாள் அமாயா.

“பார்த்து வாரல்லயா? கண் என்ன பிடரிலயா இருக்கு? வடிவா ஒரு ஆம்பளை பிள்ளை ஒன்ட பார்த்தா போதுமே. ஒடனே வந்து மேல்ல விழ வேண்டியது. எனக்கு என்டே எங்கிருந்து தான் வாரோ? ப்ச்… ஃபோன வேற காணம்.” என நவீன் அமாயாவை இஷ்டத்துக்கு திட்டி விட்டு கஷ்டப்பட்டு சன நெரிசலுக்கு நடுவே தன் கைப்பேசியைத் தேடி எடுத்தான்.

நவீன் முரளியின் எண்ணை அழுத்தும் போதே அவனின் கரத்தில் இருந்த கைப்பேசியைப் பறித்தெடுத்த அமாயா, “என்ன மிஸ்டர் ரொம்ப ஓவரா பண்ணுற? நான் ஒங்கட மேல்ல வந்து விழுந்தேனா? எங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்ல தானே. அது என்ன வடிவா இருக்குற பையன்? நீங்க வடிவா இருக்குறா இல்லையா என்று நாங்க தான் சொல்லணும். நீங்களே பறை அடிச்சி சொல்லிக்கப்படாது. ஆள் மட்டும் ஆறடிக்கு வளர்ந்தா காணுமா? அறிவும் வளரணும். மஹ ஜராவ கட்டக். (சரியான அழுக்கு வாய்)” எனப் பதிலுக்கு நவீனை நன்றாக வறுத்தெடுத்தவள் நவீன் அதிர்ந்து நிற்கும் போதே அவனின் கரத்தில் கைப்பேசியைத் திணித்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

அமாயாவின் செயலில் ஒரு நொடி அதிர்ந்து நின்றிருந்த நவீன் அவள் இறுதியில் சிங்களத்தில் கூறிச் சென்றதன் அர்த்தம் தெரியாது, “ஏய் வாயாடி. என்ன சொன்ன இப்ப?” என அமாயா சென்ற திசையைப் பார்த்துக் கத்தினான்.

“அப்பா… என்ன வாய்? பொம்பளைப் பிள்ளைன்னா ரொம்ப அமைதியான பிள்ளைங்கள தான் பாத்து இருக்கேன். இது சரியான பஜாரி. இந்தப் பிள்ளைய கலியாணம் கட்டுறவன் ரொம்பப் பாவம். ஆ… கடைசியா என்ன சொல்லிட்டுப் போனா? சிங்களத்துல ஏதோ கதைச்சாளே. நிச்சயமா எனக்கு தான் ஏசி இருப்பா. ப்ச்… இந்த முரளி எங்குட்டு நிக்கிறானோ?” என்றவாறு முரளிக்கு அழைப்பு விடுத்தான் நவீன்.

இவர்கள் ஒரு பக்கம் இருக்க, மேடைக்கு அருகில் இன்னுமே கலவரமாகக் காணப்பட்டது.

“எல்லாரும் அமைதியா இருங்க. லைட் கணுவுக்கு மேல ஏறி நிக்கிறவங்க எல்லாரும் எறங்குங்க. யாரும் அதுல ஏற வாணம். அது விழுந்தா ஒங்கட மேல்ல தான் விழும். ஒங்கட நல்லதுக்கு தான் சொல்றோம். தயவு செஞ்சி எறங்குங்க. ஏன்டா நீங்க ஒத்தர் ரெண்டு பேர் செய்ற வேலையால வந்திருக்குற எல்லாரும் பாதிக்கப்படுற. பின்னுக்கு நிக்கிறவங்களும் சரியா கொன்சர்ட்ட பாக்க ஏலா. இதால என்ன சரி பிரச்சினை வந்தா கொன்சர்ட்ட தொடந்து செய்ய ஏலா. நிப்பாட்டவாகும். ஒங்கட சந்தோஷத்துக்கு தான் இந்த கொன்சர்ட்ட செஞ்சிட்டு இருக்கோம். தயவு செஞ்சு எல்லாரும் பின்னுக்கு போங்க. அந்த கேட்ட தாண்டி வர வாணம்.” என உயர் காவல் அதிகாரி மேடையில் ஏறி கேட்டுக் கொண்டார்.

வந்திருந்த பிரபலங்களும் மக்களிடம் வேண்டுதல் வைக்க, இருந்தும் கலவரம் மட்டுப்பட மறுத்தது.

வேறு வழியின்றி இசை நிகழ்ச்சியை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தி வைத்தனர்.

அடிதடியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஒரு சிலர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அன்று இரவு அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் இது தான் தலைப்புச் செய்தியாக இருந்தது.

நவீன் கூறியும் மகன் பசியில் வருவானோ என அவனுக்காக வீட்டில் காத்திருந்த மேகலையும் தொலைக்காட்சியில் இச் செய்தியைக் கண்டு துணுக்குற்றார்.

உடனே நவீனுக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டார் மேகலை.

ஒருவாறு தேடிப் பிடித்து முரளியைக் கண்டு பிடித்த நவீன் அவனிடம் சென்று நின்றான்.

“எங்க டா போன? பெய்ட்டு மிச்சம் நேரம் ஆகிட்டு. இவ்வளவு நேரமாவா கோல் பேசின? அம்மா கிட்ட பேசிட்டு வாரேன் எண்டு போன. அம்மா கிட்ட இவ்வளவு நேரம் பேசுறா? உண்மைய சொல்லு. ஒன்ட ஆள் கூட தானே பேசிட்டு வார.” எனக் கிண்டலடித்தான் முரளி.

“அடப் போடா நீ ஒத்தன். ஒரு வாயாடி கிட்ட மாட்டிண்டேன். அதான் லேட். சரி அதை உடு. என்னடா இப்படி கொழப்பமா இருக்குது? இன்டெக்கி கொன்சர்ட் பாத்த மாதிரி தான். பேசாம ஊட்டுக்கு போவமா? சரியான டயர்டா வேற இருக்குது.” என்றான் நவீன் சலிப்பாக.

“அடேய் என்னடா? இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து பாத்துட்டு போவம். வெகேஷன் முடிஞ்சி திரும்ப வேலைக்கு போனதுக்கு பொறகு இதெல்லாம் பாக்க ஏலா டா.” என்றான் முரளி கெஞ்சலாக.

“ப்ச்… சரி என்னவோ செய். ஆனா கொஞ்சம் நேரம் தான் நான் இருப்பேன் நீ வார என்டா வா. இல்லாட்டி நான் தனியா பெய்த்துடுவேன்.” என்றான் நவீன் பதிலுக்கு.

ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு காவலையும் கடுமையாக்கினர் காவல் துறையினர்.

முரளி இசை நிகழ்ச்சியை விட வந்திருந்த நடிகைகளில் ஆர்வமாக கவனம் பதித்திருக்க, நவீனுக்கோ ஒரு கட்டத்தில் அலுப்பாக இருந்தது.

கைப்பேசியையாவது நோண்டலாம் என்ற எண்ணத்தில் காற்சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டவனுக்கு அதனுள் அவனது தேசிய அடையாள அட்டையும் கடவுச்சீட்டும் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிர்ச்சியில் சட்டென எழுந்து நின்றவனை முரளி குழப்பமாக நோக்க, “டேய் ஏன்ட ஐடியும் பாஸ்போர்ட்டும் இல்ல டா.” என்றான் நவீன் பதட்டமாக.

“என்னடா சொல்ற? நல்லா தேடிப் பாரு. அது எப்பிடி இல்லாமப் போற?” என்றான் முரளி.

“நல்லா பாத்துட்டேன் டா. எங்கயும் இல்ல. பொக்கட்ல தான் போட்டு இருந்தேன். எப்பிடி இல்லாமப் போன எண்டு விளங்குதில்ல.” என்ற நவீனின் நெஞ்செல்லாம் படபடப்பாக இருந்தது.

கடவுச்சீட்டு இல்லாவிட்டால் மீண்டும் அவனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடியாது.

புதிய கடவுச்சீட்டு எடுப்பதாக இருந்தாலும் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

போதாக்குறைக்கு அவனது தேசிய அடையாள அட்டையைக் கூட தொலைத்து விட்டான்.

அது இருந்தாலாவது ஏதாவது செய்திருப்பான்.

தற்போதைய இலங்கையின் நிலைமையில் இவை எதுவுமே இலகுவான காரியம் அல்ல.

“டேய் நீ டென்ஷன் ஆகாதே. இங்க எங்க சரி தான் விழுந்து இருக்கும். வா பெயிட்டு பொலிஸ் கிட்ட சொல்லுவம்.” என்ற முரளி நவீனை அழைத்துக் கொண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த ஒரு காவலரிடம் சென்றான்.

அதே நேரம் நவீனின் பேச்சில் இன்னுமே எரிச்சல் குறையாமல் நின்றிருந்த அமாயாவுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.

ஆனால் சௌந்தர்யாவின் கட்டாயத்தால் நின்றிருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவளின் பொறுமை எல்லை கடக்க, “அடி எனக்கு இதுக்கு மேல ஏலா டி. நீ இருந்து பாத்துட்டு வா. நான் போறேன். எனக்கு சரியான தலையிடியா இருக்கு.” என அமாயா கூறவும், “சரி இரு நானும் வாரேன். நான் மட்டும் தனியா இருந்து என்ன செய்ய? ஏன்ட அப்பாவும் நீ இருக்குறதால தான் எனக்கு பர்மிஷன் தந்த. நான் மட்டும் தனியா இருந்தா பிரம்பாலயே நல்லா அடிப்பாரு. எனக்கும் போதும் ஆகிட்டு. வா போவம்.” என்ற சௌந்தர்யா அமாயாவுடன் வெளியேறினாள்.

நவீனும் முரளியும் சென்று காவலரிடம் விஷயத்தை சொல்ல, “கொஞ்சம் இருங்க.” என்றவர் அவ் வழியாக வந்த அமாயாவை அழைத்தார்.

குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்த அமாயா அங்கு நவீனைக் கண்டதும் அவனைப் பார்வையாலேயே சுட்டெரித்தாள்.

நவீனும் பதிலுக்கு அமாயாவைப் பார்வையாலேயே சுட்டெரிக்க, காவலரின் குரலில் இருவரும் தன்னிலை அடைந்தனர்.

“அமாயா கண்ணு… இந்தப் பிள்ளைங்கள ஒங்கட அப்பா கிட்ட கூட்டிட்டுப் போம்மா. சேர் ஸ்டேஜுக்கு கிட்ட இருக்குற ஹட்ல நிக்கிறாரு. இந்தப் பிள்ளையோட ஐடியையும் பாஸ்போர்ட்டையும் இல்லாம போயிடுச்சாம். ஒருக்கா நடந்த குழப்பத்துல எங்க சரி விழுந்து இருக்கும். பாவம் ரொம்ப டென்ஷனா இருக்காரு.” என்றார் அந்தக் காவலர்.

‘ஓம் ஓம்… ரொம்பத் தான் பாவம். இந்த முகரைக்கட்டைக்கு தேவ தான். என்னவெல்லாம் என்ன கதைச்சான்.’ என மனதினுள் நவீனை அர்ச்சித்த அமாயா வெளியே சம்மதமாகத் தலையாட்டினாள்.

“இந்தப் பிள்ளை கூட போங்க தம்பி. இவளோட அப்பா தான் பெரிய பொலிஸ் ஒஃபீஸர். அவர் கிட்ட பெயிட்டு சொன்னா ஏதாவது வழி செஞ்சி தருவார்.” என அவர்களை அனுப்பி வைத்தார்.

“வாங்க பேரழகன் சேர்…” என நடிகர் சூர்யாவின் ஒரு படக் கதாப்பாத்திரத்தின் எண்ணத்தில் நக்கலுடன் அழைத்த அமாயாவைக் கண்டுகொண்ட நவீன் வேறு வழியின்றி அவளுடன் சென்றான்.

இருவருமே மனதினுள் ஒருவரையொருவர் அர்ச்சித்த வண்ணம் ராஜபக்‌ஷவிடம் சென்றனர்.

“அப்பச்சி… திஸ்ஸ மாமா மெயாவ ஒயா லங்கட்ட எக்கங் யன்ன கிவ்வா. (அப்பா… திஸ்ஸ மாமா இவர உன்க கிட்ட கூட்டிட்டு போக சொன்னார்.)” என்றாள் அமாயா.

‘ஓ… இவள் சிங்களமா? ப்ச்… எனக்கென்ன?’ என மனதில் எண்ணிய நவீன் ராஜபக்‌ஷவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, “என் ஐடியையும் பாஸ்போட்டையும் ஒருக்கா கொழப்பத்துல மிஸ் பண்ணிட்டேன் சேர். ரெண்டுமே எனக்கு ரொம்ப முக்கியம். எப்பிடி சரி தேடி தாங்க சேர்.” என்றான்.

“இங்க எங்கயாவது தான் விழுந்து இருக்கும் தம்பி. நான் ஒரு அறிவித்தல் குடுக்குறேன். யாருக்கு சரி கெடச்சா இங்க கொண்டு வந்து தரும். அப்பிடி இல்லாட்டி நீங்க நாளைக்கு பொலிஸுக்கு வந்து ஒரு கம்ப்ளைன் தரவாகும். இப்ப ஒஙட நம்பர தந்துட்டு போங்க.” என்றார் ராஜபக்‌ஷ.

“ரொம்ப நன்றி சேர். இது தான் என் நம்பர். நான் நாளைக்கு வந்து கம்ப்ளைன் தரேன்.” என நவீன் கூறவும், “சரி தம்பி. ஒங்கட ஐடியும் பாஸ்போட்டும் கெடச்சா நான் ஒங்களுக்கு தெரியப்படுத்துறேன்.” என்றார் ராஜபக்‌ஷ.

அங்கிருந்து நால்வரும் வெளியேறி வர, நவீன் தன்னிடம் நன்றி கூறுவான் என எதிர்பார்த்த அமாயாவின் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக அவளைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாது முரளியுடன் கிளம்பினான் நவீன்.

அவன் சென்ற திக்கை அதிர்ச்சியுடன் நோக்கிய அமாயாவை சௌந்தர்யா அமாயாவைப் போட்டு உலுக்கினாள்.

“என்னடி?” எனக் கேட்ட தோழியிடம், “எவ்வளவு திமிர் புடிச்சவன் எண்டு பாரு டி. ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு சரி போகல்ல டி.” எனக் கோபமாகக் கூறிய தோழியை பைத்தியமா என்பது போல பார்த்தாள் சௌந்தர்யா.

“ஒனக்கு என்ன விசரா? அவர் எதுக்கு ஒனக்கு தேங்க்ஸ் சொல்லணும்? ஒன்ட அப்பா கிட்ட கூட்டிட்டுப் போறது எல்லாம் ஒரு ஹெல்ப்பா? அந்தப் பொடியனே ஐடிய இல்லாமாக்கிட்டு டென்ஷன்ல இருக்கு.” என்ற சௌந்தர்யாவிடம் ஏதோ கூற வந்த அமாயா பின் என்ன நினைத்தாலோ, “சரி உடு. நல்லா டைம் பெயிட்டு. வா போவம்.” என்று விட்டு கிளம்பினாள்.

2 thoughts on “மொழி அறியா காதல் – அத்தியாயம் 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *