அத்தியாயம்-8
காஞ்சனாவோ “தெரிந்த பொண்ணா ஆத்ரேயா?” என்று கேட்டார்.
“அம்மா… ஒரு ஸ்டூடண்ட் நானும் மிதுனாவும் பேசியதை வீடியோ எடுத்து அதை காட்டி தான் என் மேல் இருந்த பழி களைந்ததுன்னு சொன்னேனே. அந்த வீடியோ எடுத்தது இந்த பொண்ணு தான். பிரணவி என்னோட ஸ்டூடண்ட்” என்றான்.
பாலமுருகனுக்கு அப்பொழுதே ஏதோ உறுத்த, “அந்த பொண்ணு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி செகண்ட் இயர்னு சொன்னியே.” என்று கேட்டார்.
“ஆமாப்பா” என்றவன் பெயர் ஜாதகம் எல்லாம் பார்த்தான்.
படிப்பு கோடிட்டு இருந்தது. அதாவது படிக்கின்றாளென்று.
“இவ ஜாதகம் எப்படி? இவளுக்கு எதுக்கு கல்யாணம்?” என்று குழம்ப, “அதனால என்னய்யா கல்யாணம் பண்ணிட்டு படிக்க போறா” என்று காஞ்சனா கூறினார்.
”அம்மா… யாரை கல்யாணம் பண்ணப்போறா? நான் இவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இவ என் ஸ்டூடண்ட்.” என்று மறுத்தான்.
“இங்க பாரு ஆத்ரேயா ஏதாவது சொல்லி என்னை வருத்தாத. கொஞ்ச நேரத்துக்கு முன்ன யாரை கைகாட்டினாலும் தாலி கட்டறேன்னு சொன்ன. இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லற. எனக்கு தெரியாது இன்னும் இரண்டு மாசத்துல உன் கல்யாணம் நடக்கணும்” என்று பிடிவாதம் பிடித்தார்.
“பாருங்கப்பா அம்மாவை அவ என் ஸ்டூடண்ட. உங்களுக்கு என்னத்த புரியவைக்க” என்று நொடித்து கொண்டான்.
“மாப்பிள்ளை இப்ப என்ன சொல்ல வர்ற? உன் ஸ்டூடண்ட்டா இருந்தா என்ன?” என்று வினய் கேட்க, ஆத்ரேயனோ “மாமா ஒரு புரப்பஸர் எப்படி அவனோட ஸ்டூடண்டையே கல்யாணம் பண்ணறது? அசிங்கம் மாமா” என்றான்.
சங்கவியோ “அம்மா… இவன் இந்த பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிட்டு தனியா திருச்செந்தூர் பக்கமிருக்கற காலேஜ்ல வேலைக்கு சேர்ந்துட்டு தனியா வாழ முடிவெடுக்கறான். இப்ப விட்டிங்க அவ்ளோ தான்.” என்று காதில் கிசுகிசுத்தாள்.
“சரிடா… அந்த பொண்ணை முதல்ல பார்க்க போகலாம். உன்னை எப்பேற்பட்ட பழியிலயிருந்து காப்பாத்தியிருக்கா அதுக்கு நன்றி சொல்லிட்டு வருவோம்.” என்றதும் சம்மதமாய் தலையாட்டினான்.
காஞ்சனாவோ மைந்தனை விட்டு தள்ளி வந்து, கணவர் பாலமுருகனிடம் “இன்னிக்கு பொண்ணு பார்க்க வரலாமானு தரகரிடம் கேளுங்க” என்றார்.
“என்னடி அவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லறான். நீ பொண்ணு பார்க்க போகலாம்னு ஆரம்பிக்கற.
இதுல படிக்கிற பொண்ணுக்கு எதுக்கு கல்யாணம்னு தெரியலை.” என புலம்பினார்.
“ஏங்க எனக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு. என் பையனுக்கு கெட்டப் பெயர் வராம காத்தவ இந்த பொண்ணு.நம்ம வீட்டு குலதெய்வத்துக்கு சமம்ங்க. எனக்கென்னவோ இது முடிவாகும்னு மனசுல உறுதியா தோணுது.” என்றார்.
பாலமுருகனுமே மனைவிக்கு தோன்றுவது போல ஒரு உணர்வு மனதில் வந்து செல்ல, சம்மதிப்பாக தரகருக்கு போனை செய்தார்.
இது போல நான்கு மணிக்கு பெண் பார்க்க வருவதாக உரைத்தார்.
அவரும் பிரணவி பெற்றவரிடம் தெரிவிக்க ஜெகநாதனோ மாப்பிள்ளை யார் என்னவென்று கேட்காமல், நாலு மணிக்கு பிரணவியை பொண்ணு பார்க்க வர்றாங்க” என்று கூறினார்.
அமலாவோ கண்ணீரை துடைத்து பிரணவி முன் வந்தார்.
பிரணவியும் ஒரு வாரம் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தடைப்பட்டு கிடக்கின்றாள்.
ஆத்ரேயனுக்காக கல்லூரி முதல்வரிடம் வீடியோவை காட்டி, மிதுனாவின் திட்டத்தை எட்டி மிதித்து ஆத்ரேயனை காப்பாற்றி, மிதுனாவை வசமாக போலீஸில் மாட்டிவிட்டு, கல்லூரியில் அவப்பெயரை விதைத்தது பிரணவியாக மிதுனாவின் எண்ணம்.
ஆத்ரேயனை அடையமுடியாது வெறி, கோபம் பிரணவியின் வீடு தேடி வந்து மிரட்ட ஆரம்பித்தாள்.
மிதுனாவின் தந்தை செல்வம் கொண்டவர். அதனால் துணைக்கு அந்த ஏரியா பொறுக்கி பசங்களை அழைத்து கொண்டு பிரணவி வீட்டிற்கு வந்து அவள் முடியை கொத்தாக பிடித்து ஆட்டி, “உனக்கு என்ன தைரியம். அவனை பொம்பள பொறுக்கின்னு அவப்பெயர் கொடுக்க, என்னவெல்லாம் நடிச்சேன். கடைசில நோகாம ஒரு வீடியோ காட்டி எனக்கு பேக் ஃபயர் பண்ணிட்டல உன்னை என்று அவளை தள்ளி விட்டாள்.
சோஃபாவில் இடித்து எழும் போது ஜெகநாதன் வந்தார்.
“உன் பொண்ணால என் கனவு தரைமட்டமா போயிடுச்சு. இனி அவளை காலேஜ்ல பார்த்தேன். அப்பறம் இவனுங்களை வச்சி நாசம் பண்ணிடுவேன்” என்று எச்சரிக்கை கொடுத்தாள்.
அமலாவோ பயந்து மகளை தனக்கு பின்னால் இழுத்துக் கொள்ள, “பாப்பா… சும்மா மிரட்ட கூப்பிட்டியா? இல்லை முத்தம் கொடுத்து பயமுறுத்தவா?” என்று வந்தவன் பிரணவியிடம் முத்தம் கொடுக்க துடியாக துடித்தான்.
பிரணவியோ தந்தைக்கு பின் மறைந்து கொள்ள, ”இவளை ஏதாவது செய்து என்ன பிரோஜனம்.அவனை செய்யணும்.” என்று புலம்பினாள்.
அவளுக்கு ஆத்ரேயனிடம் தன்னை இழக்க தயாராய் இருந்தும் தள்ளி விட்டு சென்றானே. அந்த ஆண் திமிர்தனம் அது தான் அவளை ஆட்சி செய்தது. பிரணவி எல்லாம் வருத்திட காரணம் போதவில்லை. எப்படியும் பிரணவி வீடியோ காட்டவில்லை என்றால் கூட ஆத்ரேயன் தன்னை தள்ளி விட்டது அவமானம் அல்லவா?
ஆத்ரேயன் மீது காட்டாத கோபத்தை பிரணவியிடம் காட்ட, ஜெகநாதனுக்கோ மிதுனாவோடு வந்த நபர்களை கண்டு திகிலடைந்தார்.
மகள் மீது அவர்களின் பார்வை அச்சுருத்தவும் மகளை தான் பாதுகாத்தார்.
ஏன் வந்தார்கள்? எதுக்கு வந்தார்கள்? என்ன பிரச்சனை? மகளே ஏன் வதைத்தாள்? அந்த பெண் யார்?” என்று ஜெகநாதன் மிதுனா சென்றதும் கேட்டார்.
பிரணவி முழுவதும் சொல்லி முடிக்க, பாட்டி பவானியோ, ”பொம்பளையாடி அவ. அவளிடம் உனக்கென்ன பிரச்சனை. ஜெகநாதா இவ படிச்சி கிழிச்சது போதும். இவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து அவன் கையில் பிடிச்சி கொடு.” என்று கட்டளையிட்டார்.
என்ன தான் மகள் தவறே செய்யவில்லை என்றாலும் மிதுனாவுடன் வந்த இருவரை எண்ணி கலங்கியவராய் நின்றார்.
இதற்கு முன் மகளுக்கு படிப்பு முடிந்தப்பின் திருமணம் என்று எண்ணிய ஜெகநாதனோ ”அன்னை பவானி கூறியதும் வரன் தேட ஆரம்பித்தார்.
பிரணவி என்ன சொல்லியும் மறுத்துவிட்டார்.
அழுதழுது கரைத்தவளிடம் “இன்னிக்கு ஈவினிங் உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க” என்று கூறவும் சம்மதமாய் நின்றாள் பிரணவி.
அவளுக்கு தான் இந்த இடைப்பட்ட நாளில் தந்தை எங்கும் செல்ல அனுமதி தரவில்லை. வெளியே சென்றால் அந்த பொறுக்கிகள் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்ற அச்சம். வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தாள்.
படித்து என்ன செய்வது? திருமணம் முடித்திடும் திடமான முடிவில் ஜெகநாதன் இருந்தார்.
தரகரிடம் சொல்லி வைத்திருக்க, இப்படி ஆத்ரேயனின் வீட்டில் பிரணவி ஜாதகமும் புகைப்படமும் சேர வேண்டியதென்பது விதி போல.
இதுவரை தந்தை தாயிடம் எதிர்த்து பேசாமல் ஒழுங்காய் வளர்க்கப்பட்டாள்.
எந்தயெந்த விஷயத்திற்கு அடம் பிடிக்கலாம். எதற்கு கோபப்படலாமென பிரணவி அறிவாள். தந்தையின் பயம் புரிந்தவளாக தற்போது அவர் விருப்பத்தில் விட்டுவிட்டு பொண்ணு பார்க்கும் வைபவத்திற்கு தயாரானாள்.
சந்தோஷமாக தயாராகவில்லை, படிப்பு பாதியில் அழிவது யாருக்கு சந்தோஷம் கொடுக்கும்.
சொல்லப்போனால் பிரணவி வீட்டில் பாட்டி பவானியை தவிர அமலா ஜெகநாதன் கூட ஆனந்தப்படவில்லை.
ஒருவேளை மாப்பிள்ளையாக வரப்போகின்றவனை பிடித்துவிட்டாள் மகிழ்ச்சி அடையலாம்.
இங்கு ஆத்ரேயன் வீட்டில் பொண்ணு பார்க்க போவதாக உரைக்காமல் பிரணவியிடம் நன்றி கூறி ஏன் இந்த அவசர கல்யாணம் என்று கேட்பதற்கு ஆத்ரேயன் கிளம்பினான்.
சங்கவியோ, “அம்மா… நீங்களும் அப்பாவும் போங்க. நானும் அவரும் பின்னாடி வர்றோம். இல்லைனா இவன் எங்கயும் வரமாட்டான்.” என்றாள்.
“கொஞ்சம் பயமாயிருக்கு டி.” என்று தண்ணீரை குடித்து முடிக்க, சங்கவி கர்ச்சீப்பை நீட்டியபடி, “அவனோட ஸ்டூடண்ட் முன்னாடி உங்களை திட்டமாட்டான். தைரியமா இருங்கம்மா” என்றாள்.
காரில் தந்தை தாயுடன் செல்ஃப் டிரைவிங் ஒட்டியபடி பிரணவி வீட்டிற்கு வந்தான்.
“அம்மா தேங்க் பண்ணிட்டு கொஞ்ச நேரத்துல வந்துடலாம். என்னால என் ஸ்டூடண்டுக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது.” என்று கூறினான்.
பாலமுருகனோ மனைவியை பார்த்து திரும்பினார்.
இது சரி வருமா என்று.
தரகர் கொடுத்த அட்ரஸ் சரியா என்று கேட்டு காரை நிறுத்தினான்.
தரகரை வேண்டாமென்று தவிர்த்து விட்டனர். தரகர் ஏன் எதற்கு என்று கேட்க, ‘முடிவானா கமிஷன் இரட்டிப்பாக தருவதாக கூறவும் ஜெகநாதனிடம் நான் ஊர்ல இல்லை. நீங்க பையன் குடும்பத்துல பேசுங்க. நல்ல மனுஷங்க” என்று முடித்துக் கொண்டார்.
மதியம் பொண்ணு பார்க்க வருவதாக கூறியிருக்க, மாப்பிள்ளை பற்றி கூட எந்த தகவலும் அறியாமல் கல்லாய் வீற்றிருந்தார்.
அமலா வந்து “இப்படி அவசர அவசரமா கல்யாணம் தேவையா?” என்று கேட்டதற்கு, “எம்பிள்ளைய என் கண் எதிர்ல பார்வையால கற்பழிக்கறாங்க அமலா. பெத்த அப்பன் நான் கையாளாத தனத்தோட நிற்கறேன். என் பொண்ணுக்கு நான் பாதுகாப்பு இல்லாத பட்சத்துல ஒருத்தன் துணை வேண்டும் அமலா” என்று கண்ணீர் துளிகளை உகுக்க, பிரணவிக்கு அக்கனம் யார் மாப்பிள்ளையாக வந்தாலும் பிடிக்குதோ இல்லையோ தந்தைக்காக மணக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
வாசலில் கார் சத்தம் கேட்டதும், மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வந்துட்டாங்க” என்று ஜெகநாதன் கிளம்ப அமலா மகளை காண சென்றார். பாட்டி பவானியோ ஹாலில் மூத்தோர் என்ற மரியாதைக்கு உட்கார்ந்து இருந்தார்கள்.
ஜெகநாதன் வாங்க வாங்க” என்று வரவேற்றார்.
“தரகர் வரலை ஏதோ வெளியூர்ல இருப்பதா சொன்னார்” என்று உள்ளே அழைக்க, “கடவுளே நான் பொண்ணு பார்க்க வந்ததா அவங்க அப்பா நினைச்சிட்டு இருக்கார். அப்பா அவரிடம் என்னத்த சொல்ல?” என்று வீட்டுக்குள் வந்தான்.
“சார் நீங்க உட்காருங்க.” என்று பாலமுருகன் கூறினார்.
“அமலா” என்றதும் இதோ வர்றேங்க” என்று வரவேற்றார்.
மிக்சர் ஸ்வீட் காபி என்று தயார் நிலையில் இருக்க கொண்டு வந்து வைத்தார்.
“அய்யோ.. அங்கிள்… நான் பொண்ணு பார்க்க வரலை.” என்று ஆத்ரேயன் ஆரம்பிக்க, ஜெகநாதன் விழித்தார்.
“இல்லைங்க பொண்ணு பார்க்க தான் வந்தோம்” என்று காஞ்சனா கூறவும், “அம்மா” என்று கூப்பிட, “நீங்க பொண்ணை அழைச்சிட்டு வாங்க. நாங்க நிறைய பேசணும்” என்றுரைத்தார்.
ஜெகநாதனோ குழப்பமாய் வீற்றிருக்க, பாட்டி பவானியோ, நீங்க தரகர் ருத்ரமூர்த்தி சொன்ன குடும்பம் தானே?” என்று கேட்டார்.
“ஆமாங்கம்மா” என்றார் பாலமுருகன்.
அதை கேட்ட அமலா மகளை அழைக்க சென்றார்.
“என் பேர் பாலமுருகன். இவ என் மனைவி காஞ்சனா. பையன் ஆத்ரேயன் புரப்பஸரா இருக்கார்.
சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல கெமிஸ்ட்ரி புரப்பஸரா இருந்தான். இப்ப அங்க வேலை வேண்டாம்னு எழுதி தந்திருக்கறார்.” என்று அறிமுகமாக ஜெகநாதனுக்கு லேசான சந்தேகம் விழுந்தது.
“சார்.” என்று அதிர்ச்சியோடு பிரணவி வர, “இங்க என்ன நடக்கு? அம்மா பொண்ணு பார்க்க வந்திங்களா? என்னப்பா இது பிரணவிக்கு நன்றி சொல்லிட்டு உங்களை அவளுக்கு அறிமுகப்படுத்த வந்தேன்.” என்று கதறாத குறையாக கூறினான்.
“சார்… இவங்களை விடுங்க. பிரணவி நான் வுமனேஸர் என்ற பட்டத்துலயிருந்து தப்பிச்சது உன்னால தான். அதுக்கு அம்மா அப்பா நன்றி சொல்ல தான் வந்தாங்க.” என்று கூற, “அப்படியே பொண்ணு பார்க்க வந்ததை சொல்லிட்டுடா” என்று சங்கவி வந்து ஜெகநாதனிடம் வணக்கம் வைத்து, “மாப்பிள்ளைக்கு அக்கா சார். இது என் கணவர். பொண்ணு பார்க்க மூன்று பேர் வரக்கூடாது. அதனால ஐந்து பேர் வந்துயிருக்கோம்.” என்றதும் பிரணவி குழம்பினாள்.
ஜெகநாதனோ “நீங்க பொண்ணு பார்க்க வந்திங்களா? இல்லை என்மக செய்த காரியத்துக்கு நன்றி சொல்ல வந்திங்களா?” என்று பரிதவிப்பாய் கேட்டார். ஏனெனில் முதல் வரனே மகளுக்கு உவப்பானதாக அமையாவிட்டால் இனி அடுத்த முயற்சி எப்படி எடுப்பாரென்ற கலக்கம்.
“சார் பொண்ணு பார்க்க வந்தோம்” என்று சங்கவியும். ”நன்றி சொல்ல வந்தோம்” என்று ஆத்ரேயனும் இருவரும் கூறினார்கள்.
பிரணவியை கண்டு “முதல்ல ஏன் நிற்கற உட்காரு” என்று சங்கவி அருகே அமர்த்தி கொள்ள, ஆத்ரேயனோ குழம்பிய பிரணவியின் பெற்றோரிடம் “சார் நான் தெளிவா எக்ஸ்பிளைன் பண்ணுறேன்.
காலேஜ்ல என்ன மிதுனானு ஒருத்தி லவ் பண்ணினா
நான் புரப்பஸர் அவ ஸ்டுடண்ட் என்ற காரணத்தால் நான் ஒதுங்கி போனேன். ஆனா அவ விடாம துரத்தி, டார்ச்சர் பண்ணிட்டா. ரீசண்டா கெமிஸ்ட்ரி லேப்ல வச்சி என்னை கட்டி பிடிச்சி மத்தவங்களிடம் வுமனேஸரா காட்டா பார்த்தா. பட் அங்க பிரணவி போன்ல மிதுனா பேசியதை வீடியோ எடுத்து காலேஜ் ப்ரின்சிபாலிடம் காட்டி என் மேல விழுந்த பழியை நீங்கிடுச்சு. ஆனா கொஞ்ச நேரத்துல கலவரப்படுத்தியதால என்னால அங்க வேலை பார்க்க முடியாதுன்னு வேற வேலை திருச்செந்தூர்ல தேடிக்கிட்டேன்.
அங்க தனியா அனுப்ப வேண்டாம்னு அம்மா ஒரே பிடிவாதம். எனக்கு கல்யாணம் செய்து அனுப்பினா சந்தோஷம்னு புலம்ப கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லிட்டேன். யாரை வேண்டுமென்றாலும் கல்யாணம் செய்துக்கறேனு சொன்னதும் அம்மா அப்பா தரகரிடம் சொல்லி பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.
வீட்ல பிரணவி ஜாதகம் எனக்கு பொருந்தியிருக்கும் போல. அதனால் தான் போட்டோ கேட்டாங்க. நான் இன்னிக்கு போட்டோ பார்த்தும் அம்மாவிடம் இந்த பொண்ணு தான் என் மேல் விழுந்த பழியை நீக்கியதுன்னு சொன்னேன்.
ஏன் பிரணவிக்கு இப்ப கல்யாணம் பண்ணறாங்க. என்ன விஷயம்னு கேட்டுட்டு அதோட நன்றி சொல்ல தான் வந்தேன்.
மத்தபடி பொண்ணு பார்க்க வரலை சார்.
பட் என் பேரண்ட்ஸ் என் அக்கா மாமா வேண்டுமின்னே உங்களிடம் பொண்ணு பார்க்க வர்றதா சொல்லியிருகாங்கன்னு நினைக்கிறேன்.
சத்தியமா நான் இப்படி ஒரு தாட்ஸ்ல வரலை. பிரணவி நல்லா படிப்பா சார். ஏன் சார் படிப்பை கட் பண்ணறிங்க? என்ன அவசரம் கல்யாணத்துக்கு. படிப்பு முடிய கல்யாணம் பண்ணுங்க” என்று முழு மூச்சாக உரைத்தான்.
“ஏன்டா இப்படி?” என்று சங்கவியும், “எனக்கு பிரணவியை பிடிச்சிருக்கு. நன்றி சொல்லிட்டு நம்ம வீட்டு மருமகளா தட்டு மாத்தலாம்டா” என்று காஞ்சனா கூறவும்”அம்மா” என்று அதட்டினான் ஆத்ரேயன்.
ஜெகநாதனோ சோகமாய் இருந்தவர், “நீங்க நன்றி சொல்ல வீடு தேடி வந்ததுக்கு நன்றி சார். இப்ப நாங்க செய்த உதவிக்கு நன்றியை எதிர்பார்க்கலை.
என்மகளுக்கு கல்யாணம் முக்கியம்.
காரணம்…..
நீங்க சொன்னிங்களே மிதுனா அந்த பொண்ணு வீடு தேடி வந்துச்சு.…” என்று மிதுனா வந்ததும் கூட இரு பொறுக்கி பசங்களும் பிரணவியை கண்ட அருவருப்பு பார்வைகளும், பேச்சும் கூறி குலுங்கி அழுதார்.
ஆத்ரேயனோ “பாவம் பொண்ணாச்சேன்னு கம்பிளைன் பண்ணலை. என்னிடம் இனி திமிரா இருக்க முடியாதுன்னு பிரணவியை மிரட்டியிருக்கா. நீங்க போலீஸ்ல கம்பிளைன் பண்ணுங்க சார்” என்று ஆத்ரேயன் மொழிந்தான்.
“எங்களுக்கு அந்தளவு தைரியம் இல்லை சார். என் பொண்ணை ஒரு நல்லவனுக்கு கல்யாணம் காட்டிக்கொடுக்கணும். அவ்ளோ தான். படிப்பு வேலை நாளைய சமுதாயத்தை நான் யோசிக்கலை. இப்ப என் பொண்ணு சேப்டியா இருக்கணும்.” என்று முடித்தார்.
“இதென்ன சார் கொடுமை. நீங்க தைரியமா பேஸ் பண்ணலாம். செகண்ட் இயர் எக்ஸாம் வருது. ப்ராக்டில் எல்லாம் போகுது. இந்த நேரம் இப்படி சொல்லறிங்க” என்று ஆத்ரேயன் கூற, ஜெகநாதனோ “நீங்க கல்யாணம் பண்ணப் போறிங்களா? அப்படின்னா சொல்லுங்க. தைரியமா என்மகளை காலேஜிக்கு அனுப்பறேன். நீங்க மறுத்தா வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி தருவேன். என்ன அவங்க படிக்க எல்லாம் வைக்க மாட்டாங்க” என்று மறுத்து எழுந்தார்.
பவானியோ “ஏன்பா படிப்பு முடிச்சி என்ன பண்ணப்போறா? எப்படியும் கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போகப்போறவ” என்றதும் ஆத்ரேயன் அதிர்ந்தான்.
“அப்ப பிரணவிக்கு என்னால் தான் பிரச்சனை?” என்று கேட்க ஜெகநாதன் தலை கவிழ்ந்தார்.
-தொடரும்.
அருமையான பதிவு
Super😍😍😍😍😍😍😍
👌👌👌👌💕💕💕💖💖
Super sis nice epi 👍👌😍 pranavi marriage eppdi dhan midivacha interesting 🥰
💜💜💜💜💜💜💜🫰🫰🫰🫰