Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-15

ராஜாளியின் ராட்சசி-15

அத்தியாயம்-15

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  அர்னவ் தன் ராஜாளி பயணத்தை தாண்டி பாவனாவை தேடி என்றைக்கும் பூமியில் அலையவில்லை‌. உண்மையில் வானத்தில் பறக்காமல் அன்றைய நாள் கடந்தால் அவன் வாழ்வில் ஒன்று குறைந்தது போல எண்ணுபவன். அதற்காகவே தன் பைலட் வேலையில் முழ்கினான்.‌

   சந்தோஷிற்கு அர்னவ் சற்று அமைதியில் கழிவது பிடிக்காவிட்டாலும், அவனிடம் பழகுவதில் மாற்றமில்லாததால், நண்பனின் ஆழ்மனதில் பாவனா என்ற பெண்ணால் காதல் அழுத்தம் தர, மூச்சுவிட சிரமம் கொள்வதை அறியாதவனான்.

ஆனால் அதை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக, அன்றைய சூழல் அமைந்தது.

   ஒரு மில்லினியர் தனது இரண்டாவது ஹனிமூனுக்காக பிரைவேட் ஜெட்டை வாடகைக்கு எடுத்து, வந்திருக்க, அதில் கணவன் மனைவி தவிர்த்து முதல் குழந்தை ஐந்து வயதில் சுட்டி தனம் செய்திருந்தாள்.

  குழந்தைகள் என்றாலே அழகு தான். அதிலும் அந்த குழந்தை பெயர் பாவனா என்று அந்த தாய் அழைக்க, அர்னவ் குழந்தை இறங்கும் பொழுது, தலையை சட்டென் திரும்பி பார்த்தான்.

குழந்தையை நிறுத்தி, மண்டியிட்டு, விழிகளை அலசி, கன்னத்தில் முத்தமிட்டு, தலையை களைத்து, ஒரு புன்னகையை வீசினான்.

சந்தோஷ் அதை கூர்ந்து கவனிக்க, அர்னவோ தன் வெள்ளை உடையை தட்டிவிட்டு எழுந்தான்.‌
 
பாவனா என்ற பெயரில் நண்பன் செய்த செயல் மண்டையில் பதிவாக, “அர்னவ் உன்‌ மனசுல அந்த பொண்ணு இன்னுமா இருக்கா?” என்று ஆச்சரியமாய் கேட்டான்.

அர்னவோ, ‘இன்னுமா.. இருக்காளா? இனி எப்பவும் இருப்பா’ என்றவன் வெளியே சகஜமாக, “குழந்தை கியூட்டா இருந்தாடா.” என்று சமாளிக்க முயன்றான்.

  சந்தோஷோ “அப்படியா? ஆனா அந்த ‘கியூட்’ பாவனா என்றதும் தான் நீ குழந்தையை திரும்ப பார்த்த வேகத்துல கண்டுபிடிச்சிட்டேன். நீ அவளை இன்னும் மறக்கலை. அங்க கரோலின் ஆன்ட்டி, காசிநாத் அப்பா இரண்டு பேரும் உன் கல்யாணத்தை பத்தி பெரிய கனவெல்லாம் கண்டிருக்காங்க. நீ ஏன்டா காலதாமதம் செய்யற? இரு இப்பவே கரோலின் ஆன்ட்டிக்கு சொல்லறேன்.” என்று போனை துழாவினான்.

அர்னவ் தட்டி விட்டதில் போன் கீழே விழுந்து உடைந்திருந்தது.

  ”எவளோ ஒருத்தி, என் அப்பாவோட தாலி கட்டாம வாழறா. அவ என்னோட லைஃப் பற்றி உளவு பார்க்கவும், அவளிடம் என் வாழ்க்கையை பத்தி சொல்லணும்னு துடிக்கற.
   இங்க பாரு… மனைவி இழந்தவர் இன்னொரு கல்யாணம் செய்வதில் எந்த தப்பும் இல்லை. ஆனா ஒரு பொம்பளை கல்யாணமாகாம ஒருத்தன் கூட இருந்தா எனக்கு தப்பா தான் தோன்றும்.
  அப்படியிருக்க, என் லைஃப் பத்தி அவங்க டிசிஸன் எடுப்பது எனக்கு பிடிக்காது.
   எங்கப்பா… அவருக்குன்னு ஒரு குடும்பமா வாழறார்னு நான் விலகி நிற்கறேன். அதை தாண்டி, அவரோட என்னால இழைய முடியாது. அவருக்கு ஒரு பொண்ணு லேகா இருக்கா. அவளை மட்டும் கவனிச்சிக்க சொல்லு. என் வாழ்க்கை எனக்கு தெரியும். அதைமீறி ஏதாவது செய்து தொலைக்காத.” என்று உறுமினான்.‌

  சந்தோஷிற்கு அர்னவ் அவனது குடும்பத்தை விட்டு விலகி வந்து வாழ்வது நன்கறிவான். காசிநாத் மற்றும் கரோலின் தான் அடிக்கடி விசரிப்பார்கள். அர்னவாக தந்தையிடம் பேசுவது கிடையாது. அந்த குடும்பத்தில் நான் இல்லை. நான் தனி என்பது அர்னவ் மனதில் பதியப்பட்டது.

  சந்தோஷிற்கு காசிநாத்தை அறிந்தது கூட கடைசியாக டிரக் விஷயத்தில் அர்னவ் போலீஸில் கூறிட, சம்பந்தப்பட்ட முதலாளி வேலை விட்டு நீக்கவும், சதா சந்தோஷ் தன் குடும்பத்தை நினைத்து புலம்பி தள்ளினான்.
  ‘இப்ப தான் குழந்தை பிறந்தது டா. அவளும் வேலைக்கு போக முடியாது. இந்த நேரம் பார்த்து இப்படி வேலை விட்டு தூக்கிட்டானுங்களே’ என்று மனமொடிந்து‌ பேச, அர்னவ் தன்னால் தானே பணிநீக்கம் என்று தந்தையை காண நேரில் அழைத்து சென்று தற்காலிக வேலையை கேட்க, அவர் உதவிய சமயம் காசிநாத் கரேனோலின் பழக்கம்.
  அந்த பழக்கத்தில் அர்னவ் பற்றி நலம் விசாரிப்பார்கள். அதோடு அவனும் பேசுவான். அர்னவாக பேசுவது எல்லாமா குறிஞ்சிப்பூ பூக்கும் கதை தான்.
   கடைசியாக பாவனாவிற்காக பேசினான். சந்தோஷ் அந்த பெயரை உச்சரித்து ‘அர்னவ் மனதில் அந்த பெண் இருக்கா’ என்று கூறினால் கூட மகிழ்வார்கள்.
  
   ஆனால் உறவுகளிடம் பழகாதவனுக்கு என் லைஃப் எதுக்கு அவர்களிடம் தெரிவிக்கணும் என்ற கோபம் இருந்தது. சொல்லப்போனால் பாவனாவை கண்டால், அல்லது அவள் மீது தான் கொண்ட காதலை கூற முடியாத கோபம் இது.
  ஆள்மாற்றி கோபத்தை காட்டி, தன்‌மனதை சமன் செய்ய முனைகின்றான்.‌

  சந்தோஷிற்கு காசிநாத்திடமும் கரோலினிடம் நட்பு ரீதியான பேச்செல்லாம் அதிகமில்லை. அதனால் அவனுக்குமே எதை சொல்லலாம் எதை தவிர்க்கலாம் என்று திணறினான். நண்பனுக்கு பெர்சனல் கூற தவிர்க்கும் போது, அவனும் தான் என்னவென்று எண்ணுவது?

   இது நடந்து இரண்டு நாளில், பாவனாவின் தம்பி வினோத் பனிரெண்டாவது வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றான்.
 
  அதை அர்னவிடம் கூறி மகிழ எண்ணி, பாவனா அலைப்பேசியில் அழைத்தாள்.‌ இரண்டு மூன்று முறை அழைத்து எடுக்கப்படாமல் போனது.
  அர்னவ் பறப்பவன் எப்பொழுது கவனிப்பானோ என்று நினைக்கும் தருணம், அர்னவாக அழைத்தான்.

  “எதுக்கு கால் பண்ணிருந்த?” என்று மொட்டையாக கேட்டான்.‌ வெளியே ஆனந்தத்தை கட்டுப்படுத்தியபடி.
  ஆசையாக பேச எண்ணி அழைத்த பாவனாவிற்கு நறுக்கு தெறித்து விழும் வார்த்தையில், ஆனந்தம் வடிகால் போடப்பட்டது.
 
   ஆனாலும் காரணம் கூற வேண்டுமே. அழைத்து விட்டு மழுப்ப முடியுமா? எனக்கு உங்க குரலை கேட்க வேண்டும். காரணம் தேடி அலைந்தேன். தற்போது தம்பி வினோத் பிளஸ்டூ பரிட்சை ரிசல்ட் வரவும் அதை கூறும் விதமாக, அப்படியே உங்க குரல் கேட்க ஆசையென்றா கூற முடியும்?

“தம்பி பிளஸ்டூ மார்க் வந்துடுச்சு” என்றாள் அவளும்.

நொடியில் அர்னவ் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தாமல் மடை உடைந்து மனம் மாறியிருக்க வேண்டும்.
“வாவ்… என்ன மார்க் ஸ்கோர் பண்ணிருக்கான். என்ன கோர்ஸ் காலேஜில் எடுக்க போறானாம்?” என்று கேட்டான்.‌

“அவன்… 1011. ஆக்சுவலி… அவன் பைலட் ஆகணும்னு சொன்னான். அவனிடம் பேசறிங்களா?
   அதோட அம்மா வேற உங்களிடம் பேசணும்னு தினமும் சொல்லிட்டு இருக்காங்க” என்று கேட்டாள்.

  “பைலட்டா… ஏன்.. சூர் பேசறேன். உங்கம்மா எதுக்கு? ஏய்… என்ன சொல்லி வச்சியிருக்க?” என்றான்.‌

“பின்ன சொல்ல வேண்டாமா? அவங்க மெடிக்கல் செலவு எல்லாம் நீங்க தான் உதவுவதா சொல்லியிருக்கேன். எப்பவும், உதவி செய்தது ஒருத்தர், பெயர் வாங்குவது இன்னொருந்தர்னு இருக்க கூடாதே. நீங்க செய்த உதவிக்கு நீங்க தான் காரணமா சொல்லணும்.
அம்மா உங்களை நேர்ல பார்த்து பேசி நன்றியுரைக்கணும் சதா சொல்லிட்டே இருந்தாங்க. அப்பறம் தான் நீங்க பூமில கால் பதிப்பதே அபூர்வம். பைலட் வேலையில் இருக்கார். மனுஷனுக்கு பருந்தோடவும், பீனிக்ஸ் பறவையோடவும் போட்டி போட்டுட்டு பறக்கறது தான் கனவுனு சொல்ல, வினோத் நடுவுல வ்நதான்.

அப்பறம் பைலட் ஜாப் பத்தி அவனிடம் சொல்லவும், ட்ரை பண்ணலாம் போலயே அந்தண்ணாவிடம் பேசணும்னு கேட்டான்.” என்றான்.

“அண்ணாவா?” என்றதும், “அவனுக்கு… அவனை விட பெரிய ஆள் நீங்க என்பதால் அண்ணானு சொன்னான்” என்று அவசரமாய் கூற அர்னவ் சிரித்தான். எனக்கு அண்ணா இல்லை என்றது தானே பொருள் மறைந்துள்ளது.

“அ…அம்மா.. அம்மா பக்கத்துல வர்றாங்க. அம்மாவிடம் பேசறிங்களா?” கேட்க ‘கொடு” என்றதும் காவேரியிடம் நீட்டினாள்.

“வணக்கம் தம்பி. நீங்க தான் பாவனாவை, அவ பழைய முதலாளியிடமிருந்து அவ மானத்தை காப்பாற்றியதா சொன்னா. அப்பவே நன்றி சொல்லணும் போன் போடுடினு சொன்னேன். ‘நான் நன்றி சொல்லிட்டேன். அவர் உங்க உடல்நலத்தை கவனிச்சிக்க மருத்துவமனையில் சொல்லி வச்சியிருக்கார். முதல்ல அங்க வாங்க. அதுக்கும் சேர்த்து பிறகு நீங்க நன்றி சொல்லலாம்னு காலத்தை கடத்திட்டா.”

“அய்யோ அதெல்லாஅ பெரிய விஷயமில்லை அம்மா. என்னால உதவி செய்ய முடியுது‌ செஞ்சேன். அவ்ளோ தான்” என்றான்

“அதுக்கும் மனசு வரணுமே தம்பி. இப்ப தான் வினோத் மார்க் வாங்கவும், உங்களுக்கு கால் பண்ணி சொல்லணும்னு துள்ளி குதிச்சா.

உங்களை நேர்ல பார்த்து நன்றி சொல்லணும் நினைச்சேன் தம்பி. பாவனா தான் அவரெல்லாம் உடனே சந்திக்க முடியாது. அதுயிதுனு சொல்லிட்டா. முடிஞ்சா வீட்டுக்கு வாங்க. என் கையால சமைச்சி தரணும். இல்லைன்னா நீங்க உங்க வீட்டுக்கு எப்ப வந்து தங்குவிங்கன்னு சொல்லுங்க. அப்ப வந்து நேர்ல இனிப்பை தந்து பார்த்துட்டு போறோம். இங்க வினோத் கூட உங்களை பார்க்கணும்னு ஆளா பறக்கறான்.” என்று கூற, “வர்றேன் அம்மா. உங்க உடலை கவனிங்க” என்றான் அர்னவ்.

“அம்மா அம்மா… பேசிட்டு வச்சிடப்போறார். என்னிடம் தாங்க” என்று அவசரம் காட்டுவது மறுபக்கம் அர்னவுக்கு கேட்டது.

“தம்பி நீங்க பிஸியா இருப்பிங்க. உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணலை. இருங்க அவனிடமும் தந்துடறேன். பேசுங்க” என்று கை மாற, வினோத் “அண்ணா.. என் பெயர் வினோத். பாவனா அக்காவோட தம்பி. உங்களை பத்தி அக்கா நிறைய பேசுவா. சும்மா அர்னவ் அப்படி பிளைட் ஓட்டுவார். அர்னவ் பாரசூட்ல குண்டு உரசியதை கூட பொறுட்படுத்தாம ஓட்டினார்னு படத்துல வர்ற மாதிரி உங்களை ஹீரோ ரேஞ்ச்ல சொல்வா‌.
அப்பல்லாம் என்ன சைட் அடிச்சியானு கேலி செய்வேன். என் பிரெண்ட்ஸ்கிட்ட உங்களை பத்தி பேசினேன். அப்ப தான் சொன்னாங்க. ஏதோ டிரக்ஸ் பிரைவேட் பிளைட்ல கடத்த பார்த்தப்ப, அர்னவ் என்பவர் போலீஸிடம் மாட்ட வச்சிட்டாங்கன்னு நியூஸ்ல வந்ததை காட்டினாங்க. உங்களை அதுல பார்த்தேன். அதுல செமையா இருந்திங்க. டிரக்ஸ் பேக்கேஜ் இரண்டு தடியனுங்க, போலீஸ்னு இருந்தப்ப, வெள்ளை யூனிப்ஃபார்ம் போட்டு நெஞ்சு நிமிர்த்தி, மஸில் எல்லாம் கின்னுனு வச்சி, பச் செம ஹாண்ட்ஸமா இருந்தது. அப்ப தான் பைலடாகணும் என்ற ஆசை பிறந்தது.” என்று பேச பேச, பாவனா வினோத்தை சுரண்டி, “டேய் எந்த நியூஸ்? எதுல பார்த்த? அவர் போட்டோவை பார்த்தியா? எனக்கு காட்டுடா.” என்று பின்னால் கேட்டு இம்சித்தவளின் குரலே அர்னவிற்கு நெஞ்சில் இனித்தது.

ஏற்கனவே வினோத் சைட் அடிச்சியா என்று பாவனாவிடம் கேட்டிருக்க, அதற்கு அந்த ராட்சசி என்ன பதில் தந்திருப்பாளென்று சிந்தித்தான். இதில் அந்த நியூஸை பார்த்த பொழுது எடுத்த போட்டோவை காட்ட ஆர்வம் காட்டவும் அவளுக்கு என்னை பிடித்திருக்குமோ? ராட்சசி என்னை ரசித்திருப்பாளா? என்று சிந்தனை சுழன்றது.

வினோத் சொன்னது எல்லாம் ஒரு பக்கம் கேட்டுக்கொண்டான் அவ்வளவே.
“சும்மா சுரண்டாத. அம்மா போன்ல பப்லு அந்த நியூஸை அனுப்பினான். வேண்ணா போய் பாரு.” என்று அக்காவை விரட்டிவிட, அம்மா.. வினோத் பிரெண்ட் அனுப்பிய மெஸேஜ் எங்க?” என்று பாவனா அங்கிருந்து கேட்பதையும் காதில் வாங்கினான்

“அண்ணா.. அக்கா நிறைய டீட்டெய்ல் சொன்னா. எனக்கு நேர்ல உங்களை பார்த்து தெரிந்துக்கணும். உங்களை நேர்ல பார்க்க முடியாதா?” பச்… உங்களை எல்லாம் சட்டுனு பார்க்க முடியாதுனு அக்கா சொன்னா.” என்று வருத்தமாய் உரைத்திட, அர்னவோ, அமைதியானான்.‌

அடுத்த நிமிடமே, “ஏய் அப்படியெல்லாம் இல்லை வினோத். பைலட் என்றால் எந்நேரமும் பறந்துட்டே இருக்க முடியுமா? நானும் வீடு வாசல்னு வாழறவன் தான். அதோட எந்த ராஜாளியா இருந்தாலும் வீடுன்னு வந்து தான் இளைபாறும். உங்க அக்காவிடம் சொல்லு. நான் விரைவில் வந்து சந்திப்பேன்னு.” என்று மிடுக்காய் தோரணையாய் உதிர்த்து, “ஆஹ்… பாவனா இருக்காளா?” என்று குழைவாய் கேட்டான்.

எங்கே இந்த நிமிடம் மீண்டும் அவளிடம் பேச முடியாதென்று அவளிடம் பேசவே ஆசைப்பட்டான்.

“அக்காவிடமா… இருங்க” என்று கை மாறியது.

"ராட்சசி.. என்னை பத்தி என்ன சொல்லி வச்சியிருக்க? நான் வீட்டுக்கே வரமாட்டேன்னு." என்று அவனது ராட்சசி அவன் வாயிலிருந்து  கேட்க, பாவனா சிரிப்பது கேட்டது. அவளுக்கு தான் அத்தனை பிடித்தம் அவ்வழைப்பில்...

இருவரும் பேச காவேரி மகளை அடிக்கடி பார்த்து நகரவும், “ஓகே… நான் வைக்கட்டுமா? அம்மா என்னையே பார்க்கறாங்க” என்று கிசுகிசுப்பாய் கேட்டாள்.

அர்னவிற்கு ஏதோவொரு ஆனந்தம். காதலை அவளிடம் கூறவில்லை. ஆனால் இந்த வார்த்தை.. ‘அம்மா என்னையே பார்க்கறாங்க’ என்ற கிசுகிசுப்பு, தங்கள் காதலர்கள் போல காட்சியளிப்பதாக மிதந்தான்.‌

“சரி” என்று அணைத்துவிட்டு நிமிர, எதிரே சந்தோஷ் கையை கட்டி ‘இவன் காதலிப்பதை சொல்ல மாட்டானாம். நானா இவன் வீட்ல சொல்லட்டுமானு கேட்டா அதுக்கும் என்னை இரண்டு நாளைக்கு முன்ன கத்தினான். இப்ப அந்த பொண்ணு பேசவும் மூஞ்சைப்பாரு’ என்று பொறுமியபடி நண்பனை பார்த்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “ராஜாளியின் ராட்சசி-15”

  1. Kalidevi

    rendu per manasulaum love iruku atha intha santhosam apadi kural ketathume evlo santhosama irukatha ena athuvum namma rajali ku ekapatta happy sikiram veetuku varuvan ninaikiren apo avane pesa poran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *