Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-3

ராஜாளியின் ராட்சசி-3

அத்தியாயம்-3

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

ஒருவழியாக மாலத்தீவில் விமானம், புழுதி பறக்கும் காற்றை கிழித்து தரையிறங்கியது‌. விமானத்தின்  சப்தம் காதை கிழித்தது.
   ஒருவழியாக மாலத்தீவில் ஜீவன் இறங்கவும் அவனுடனே பாவனா இறங்கினாள்.

  அர்னவ் நடந்து சென்ற இருவரையும் பார்வையிட்டு, தன் பைலட் தொப்பியை கழட்டி வேடிக்கை பார்த்தான்.

  அங்கே வணீக ரீதியாக ஜீவன் செல்வது புரிந்தாலும், விமானத்திற்குள் எத்தனை விதமாக பாவனாவை தீண்ட முயன்றான். தனியாக நிச்சயம் தீண்டாமல் திரும்ப மாட்டான் என்ற கசப்பு புரிய, அருவருப்பாக முகத்தை வைத்தான்.
   பாவனா அவள் யாரோ ஒரு பெண். சொல்லப் போனால் இஷ்டப்பட்டு கூட ஜீவனோடு வந்திருக்கலாம். யார் யாரோடு சென்றால் தனக்கென்ன? என்ற ரீதியில் நண்பனோடு பேசி சிரிக்க முயன்றான்.
 
  மாலத்தீவில் இதற்கு முன்னும் இரண்டு மூன்று முறை இதே போல வணீக ரீதியாக வந்திருந்தனர். அதனால் ஏற்கனவே அறிந்திருந்த இடத்திற்கு நடந்தார்கள். இதோடு ஜீவன் புறப்பட கூறும் நேரத்திற்கு காத்திருக்க வேண்டியது என்பதால் சந்தோஷும் நண்பனோடு பேசியபடி கிளம்பினான்.

  இங்கே ஜீவனோ “பாவனா மீட்டிங் முடியவும் டின்னர் இருக்கு அதுக்கு பிறகு நைட் பார்ட்டி இருக்கு‌. இதோட நாளை காலையில் கிளம்பணும். அதனால் அதற்கேற்ற வகையில் உடையை தேர்ந்தெடு. கொஞ்ச நேரத்துல டிரஸ் எல்லாம் ரூமுக்கு வரும்” என்று தெரிவித்தான்.

  “சார் நான் கொண்டு வந்திருக்கேனே?” என்று கூற, “இது என்ன சாதாரண மீட்டிங்கா. அதற்கெல்லாம் இப்ப போட்டிருக்கற கவுன் செட்டாகாது. நான் அனுப்ப செல்லியிருக்கேன். அதுல ஒன்னை ட்ரை பண்ணு” என்று உத்தரவிட்டான்.

  பாவனா மறுக்க முடியாமல் “ஓகே சார்” என்று கூறினாள். அலுவலக ரீதியாக மீட்டிங் என்பதில் மட்டுமே முட்டிவரை உள்ள கவுனை அணிவதற்கே பாவனா புதிதாக வாங்கினாள்.
  இந்த உடையே வேண்டாமென்று ஜீவன் கூறவும், அமைதியாக வரப்போகின்ற உடை தனக்கு களங்கமில்லாமல் இருக்க வேண்டுமென்று வேண்டினாள்.

   குளித்து முடித்து ஓவர்கோட் போல அணிந்து காத்திருக்க, கதவு தட்டி பணிப்பெண் உடைகளை கொண்டுவந்தாள். தள்ளும் விசையில் உள்ள ரேக்கில் புத்தாடைகள் வரிசையாக தொங்கவிடப்பட்டு காட்சிக்கு வைத்துவிட்டு, பணிப்பெண் செல்லவும், மெதுவாக ரேக்கை திறந்தாள்.

கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் பாதிக்கு மேல் உடலை மறக்கும் டீசண்ட் ஆடையும் அங்கே இருந்தது. சிலது தான் படுகவர்ச்சியாக இருந்தது. எல்லாவற்றையும் அணிந்து பார்த்து புகைப்படம் எடுத்தால் என்ன? என்ற ஆர்வம் கிளம்ப, தான் கிளம்ப வேண்டிய நேரத்தை அலாரமாக வைத்து, உடைகளை அணிந்து மகிழ்ந்தாள். போனில் புகைப்படமாக எடுத்து தள்ளினாள்‌. இங்கே யாரும் தெரியாது எப்படி பொழுதுபோகுமென்று நினைத்தவளுக்கு விளையாட்டுத்தனமாய் பொழுது கழிவதாக தோன்றியது.
 
  கவர்ச்சியான உடைகளை கூட அணிந்து பார்த்து மகிழ்ந்தவளுக்கு சிரிப்பு வந்தது.

   நேரம் போகவும், அலுவலக மீட்டிங் என்று அலாரம் அறிவுறுத்த, மடமடவென அலுவலக மீட்டிங்கிற்கு என்று எடுத்த ஆடையை அணிய துவங்கினாள்.

     உடலை கவ்விக்கொள்ளும் உடையென்றாலும்  ஆங்கிலப்படத்தில் வரும் நாயகிகள் அணியும்‌ முட்டி வரை நேவி ஐய்லைட் டிரஸ் ஒன்றை தேர்ந்தெடுத்தாள்.
  
  அந்த உடையிலேயே சிறு கைப்பையும் இலவச இணைப்பாக இருக்க, அதை தன் கையில் மாட்டி கண்ணாடியில் அழகு பார்த்தாள்‌.

கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, நெஞ்சில் கைவைத்து பயந்திட, “பாவனா.. ரெடியா?” என்று கேட்ட ஜீவனின் குரலில் நிம்மதியானாள்.

“ரெடி சார்” என்று கதவை திறந்தாள்.

  “வாவ் கார்ஜியஸ் பியூட்டி” என்று வியந்தான்.
 
  விமானத்தில் பறக்கும் போது கூட முட்டிக்கு கீழ் வரல கவுன் அணிந்திருந்தாள். இந்த உடையோ முட்டிக்கு மேலேறி, தொடையும் தெரிந்தது. ஆனால் இது சற்று பார்வையிட, அழகான பி.ஏ வாக அவளை காட்டியது.

  “தேங்க்யூ சார்” என்றவள் லேசாக தயங்கி நகற்பது புரிந்தது.

“போலாமா?” என்று கேட்க தலையாட்டி கூடவே வந்தாள்.

  “பைல்” என்று கேட்க, “எல்லாமே தரவா செக் பண்ணிட்டேன் சார். ஒப்பந்தம் முடிந்தா சைன் மட்டும் தான் பேலன்ஸ்” என்று ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டினாள்.

  அவள் நெருங்கி வந்து சுட்டிக்காட்ட, லோ-நெக் சற்று இறுக்கி பிடித்த ஆடையுடன் கவர்ச்சியாக காட்டியது.

  ஜீவன் தன்னை துளையிடுவதை தாமதமாக உணர்ந்த பாவனா தள்ளி நின்றாள்.

  அலுவலக ரீதியாக ஒப்பந்தமேற்பட்ட இடத்திற்கு வந்து சேர, அங்கே இருக்கையில் அமர்ந்தார்கள். ஆளாளுக்கு தங்கள் ஒப்பந்த ரீதியாக பேசி முடிக்க, தன் பார்வையில் சாதாரணமாய் காட்டி அங்கிருந்தவர்களை ஆராய்ந்தாள். இவளை போல வந்த பி.ஏ பெண்மணிகள் பெரும்பாலும் ஏதோ காதலிப் போல குழைந்து முதலாளி அருகருகே அமர்வதை பார்த்து வாயை பிளந்தாள்.
ஜீவன் வணிக ரீதியாக பதிலை பேசி கையெழுத்து வாங்கியிருந்தான்.
  அந்த நேரம் ஜீவனை பற்றிய கணிப்பில் ‘ராஜதந்திரம் தான் முதலாளி’. அவருக்கு லாபமிட்டும் விதமாக பேசி கையெழுத்து வாங்கிட்டாரே.’ என்று ஆச்சரியமடைந்தாள்.

  ஆளாளுக்கு வெற்றி களிப்பில் மதுவை நாட, அனைவருமே உயரக மதுவை ருசித்தனர்.
  பாவனாவுக்கு ‘நாம வித்தியாசமா வந்து சேர்ந்துட்டோம் போல’ என்று கையில் வைத்துக் கொண்டு குடிக்காமல் தயங்கினாள்.

  “ஏய்… ரெட் ஓயின் தான் குடி” என்று ஜீவன் உந்த, “இல்லை சார்.. சில விஷயம் என்னால பண்ணவே முடியாது. எல்லாரும் அந்த நேரம் கையில எடுக்கவும் எடுத்துட்டேன்.” என்று தயங்கினாள்‌.

  “என்ன நீ இப்படியிருக்க?” என்று என்று தோளில் கையை போட்டான். “இட்ஸ் ஓகே… இதுவும் நல்லதுக்கு தான்” என்றான்.

     உணவகத்துக்கு அழைத்து வந்திருக்க, விதவிதமான கடல்வாழ் உணவை ருசித்தாள்.

   ஜீவனுக்கு அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்களை எண்ணி பார்த்து மதுவை அருந்தினான்.

  லேசாக பாவனாவிடம் வந்து ”நாம ரூமுக்கு போகலாமா?” என்று வந்தான்.
 
   ‘இந்த இடத்துலயே இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கணும் பிள்ளையாரப்பா.’ என்று மனதில் புலம்பியவளுக்கு ஜீவன் கேட்டதும், ரூமுக்கு என்றதும் ‘அப்பாடி ரூமுக்கு போய் தூங்கலாம்’ என்று சந்தோஷப்பட்டாள்.

  ஜீவன் தள்ளாடி பாவனா மீது கை போட்டு நடந்து வர, ‘அச்சோ ஓவரா குடிச்சிட்டார் போல. ரூம் வரை கை போட்டுக்கிட்டும். அவர் ரூம்ல விட்டுட்டு ஓடி வந்துடுவோம்’ என்று உதவியாக நினைத்து நடந்து வந்தாள். ஜீவனோ கையிலிருந்த பாட்டிலை மொத்தமாய் சரித்து ருசித்து நடந்தான்.

     அறைக்கு வந்து விடும் போது, ஜீவன் அவளையும் அறைக்குள் இழுக்க, ‘சார் என் ரூம் அங்க” என்று பதறினாள்.

“ஏய்.. பாவனா.. கம்மான்” என்று இழுக்க, திருதிருவென விழித்தாள்.

“சார்… அது என்று முழித்து திகைத்து கதவை கதவை பார்வையிட, மெத்தையருகே வந்தவன் தொப்பென்று மெத்தையில் விழுந்தான்.

கையிலிருந்த பாட்டில் மெத்தையில் பட்டு மதுவும் வழிந்தது.
  “அச்சோ… பெட்டு போச்சு. இதுக்கு வேற அபராதம் இருக்குமோ? அதுக்கும் சார் பார்த்துப்பார்.” என்று ஜீவனை சரியாக படுக்க வைத்துவிட்டு பாட்டிலை தள்ளி ஒழுங்காக வைத்து நிம்மதியாக கதவை திறந்து வெளிவந்து தனதறைக்கு நடந்தாள்.

   பால்கனி வந்து தூரத்தில் இருந்த கடலை ரசித்தாள். விடாமல் துரத்தி வந்த அலையை கண்டு பார்வையிட, வெள்ளை நுரைகள் அவ்விருட்டில் பளிச்சிட்டது.
  கடலுக்கு மேலே வெண்ணிலா வேறு அழகாய் களங்கமின்றி காட்சியளித்தது.
  இன்று ஜீவன் ஸ்டடியாக இருந்தால் இந்த அலையை போல தானும் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்பட்டிருப்போம் என்பதை அறிமாசது போனாள். அப்படி மட்டும் நிகழ்ந்திருந்தால் இந்த நிலவு போல களங்கமின்றி இருக்க மாட்டாள். ஜீவனால் கற்பை இழந்து களங்கடிக்க பட்டிருப்பாள்.

  இதெல்லாம் இன்று நிகழாதது அவளது அதிர்ஷ்டம்.

தூரத்தில் கடலை ஒட்டிய டெண்டில் நெருப்பை மூட்டி கையில் சந்தோஷ் குளிர் காய்ந்தவன், ”அர்னவ்.. அந்த பொண்ணு தனியா பால்கனில நிற்குதுடா. நாம பார்த்தப்ப அந்த ஜீவனை தோள்ல சாய்ச்சி கூட்டிட்டு போனா. மட்டையாயிட்டான் போல டா. இந்த பொண்ணு பால்கனிக்கு வந்துடுச்சு.” என்று  பைனா கூலரில் பார்த்து கூற, அர்னவ் பைனாகூலரை பிடுங்கி சந்தோஷ் பார்த்த திசையில் பார்வையிட, பாவனா அங்கிருந்த பூச்செடியை நுகர்ந்து பார்த்தாள். ஏதோவொரு சுகந்த மணம் வீசியிருக்க வேண்டும். பாவனா அதில் லயித்து இமைமூடி சுவாசத்தை உள்வாங்குவதை கண்டான்.

அர்னவ் இமைமூடி, “அவனோட ரூம் வெஸ்ட் பக்கமாச்சே… இவ இங்க இருக்கான்னா…? அவனை ரூம்ல விட்டுட்டு, இவ ரூமுக்கு வந்திருக்கணும்.” என்று யூகித்தவனாக கூறினான்.

  “பார்டா… ஃப்யூ செகண்ட் அந்தபக்கம் பார்த்த, இந்தளவு அக்கியூரெண்டா திசையெல்லாம் சொல்லற” என்றான்.
 
அர்னவோ பைனாகூலரை இறக்கி, “திசை பார்த்து தான் இந்த பைலட் விமானத்தை இயக்குறது. திசையெல்லாம் கரக்ட்டா சொல்லாம இருக்க முடியுமா?” என்று கூற சந்தோஷிற்கு அந்த பதில் சரியாக இருந்தது.

  “சும்மாவா…. இந்த விஷயத்தில நீ ஒரு ராஜாளிடா.” என்று தட்டிக்கொடுத்து குளிருக்கு இதமாக மதுவை தள்ளினான்.

  அர்னவோ மீண்டும் பைனாகூலரை எடுத்து பாவனாவை பார்வையிட, அவளோ கொட்டாவி விட்டு அறைக்குள் செல்வதை கண்டான்‌.
அர்னவ் உதட்டில் புன்னகை மிளிர, பைனாகூலரை இறக்கி, கடலை பார்த்து மேகத்தை வெறித்தான்.

    எத்தனையோ பயணத்தை பார்த்தவன் அர்னவ். அதுவும் ஜீவன் போன்ற பணமுதலைகள் ஏதாவது ஒரு பொண்ணை அழைத்து வந்து சுகத்தை அனுபவிப்பதை எல்லாம் தன் பைலட் அனுபவத்தில் நிறைய பார்த்துவிட்டான். ஏன் வயது முதிர்ந்த தொழிலதிபர் கூட, சின்ன பெண்களை அழைத்து வந்து லூட்டி அடிக்கும் கர்மத்தை எல்லாம் பார்த்து பெரிதாக அபிப்ராயம் கொண்டதில்லை‌.
 
  இந்த பெண் கோல்ஃப் மைதானத்தில் கேப்பிலிருந்து இறங்கி விழித்து விழித்து நடந்து வந்ததிலிருந்து, அவளது ஐடியை எடுத்து காட்டி உள்ளே வந்தது முதல் விமானத்தை பார்த்து, அவள் வாய் பிளந்து, ஆச்சரியப்பட்டது, ஜீவனுடன் செல்ஃபி எடுத்தது, எல்லாமே ஏதோ அவனுக்குள் வித்தியாசமாய் இருந்தது.
   ஒரு வேளை நீண்ட நாட்களுக்கு பின், அதாவது கல்லூரி காலத்திற்கு பின் ஒரு பெண்ணை ரசித்தான்.
 
   தன் பைலட் அனுபவத்தில் அவன் ரசிக்க தவறிய விஷயம்.
   அதனாலோ என்னவோ பாவனாவை ஜீவன் நெருங்க எரிச்சலாக உணர்ந்தான்.
   அதைமீறி இந்த நிமிடம் இந்த கடலலை, வானம், நிலவு நட்சத்திரம் என்று கவிதைகளாக காட்சியை ரசித்தவன் பெண்ணவள் நின்றிருந்த கோலத்தையும் ரசித்தான்.
  ஜீவன் மட்டையாகி காரிடரில் நடந்து சென்ற போது அழைத்து போனாள். நேராக ரூமில் கதவடைத்து இத்யாதி வேலையில் மூழ்கியிருப்பாளென எண்ணினான். அவளோ தனியாக விண்மீனை ரசிக்க லேசான மரியாதை பிறந்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

5 thoughts on “ராஜாளியின் ராட்சசி-3”

  1. நல்ல வேலை தப்பிச்சிட்டால் சூப்பர் சிஸ் கதை அழகாக நகர்கிறது அடுத்த பகுதிக்கு மிக மிக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் 😊👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *