அத்தியாயம்-10
அத்தனை சுலபமானதாக இருக்குமென்று விக்ரமிற்கு தெரியவில்லை. ஆனால் மடத்தனமான விஷயத்தை செய்தபடி விஷயத்தை சுலபமானதாக மாற்ற முயன்றான். ஆனால் எஞ்சியது வலியும் வேதனையும் உள்ள நினைவுகள் மட்டுமே. அதுவும் தாலி கட்டிய மஞ்சள்கயிற்றின் ஈரம் கூட தன் கரத்திலிருந்து அகலாது பழைய காதலியை நினைக்கவும் மனம் கூசியது.
அதனால் ஹரிணியை கண்டு விரைப்பாக நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்தான்.
ஒரு பாறை தன் அருகே அமர வைத்திருக்கும் தோரணையில் விக்ரம் இருக்க, ஹரிணியோ எல்லாவிதமான ஆர்ப்பாட்டத்திற்கும் லேசான புன்னகையும், அமைதியுமாய் தான் அமர்ந்திருந்தாள்.
இதுவரை விக்ரம் திட்டியது மட்டும் தான் மண்டைக்குள் உருத்தியபடி, அவன் மீது கோபத்தை குறைக்காமல் நிறுத்தியது. இன்று ஓமக்குண்டத்தில் தங்க மோதிரத்தை கழட்டி நெருப்பில் போடவும், ஏதோவொரு எண்ணம் அவளை நிலைக்கொள்ளாது சுழற்றி அடித்தது.
ராதிகா கூட மகன் காதலித்து தோல்வி அடைந்ததாக உலறி கூறியதும், ‘ஆமா இவன் வாயை வச்சிட்டு ஏதாவது பேசியிருப்பான். அவ பிரேக்கப் பண்ணிருப்பா’ என்று நினைக்க, இன்று வலியோடு அதை கழட்டிவிட்டு பெருமூச்சை வெளியிட்டவனுக்குள் காதல் எந்தளவு வேரூன்றியிருக்கும், அவன் மனமும் சராசரி மணமக்களாக அடியெடுத்து வைக்கவில்லை என்று புரிய விக்ரமை கண்டாள்.
அவனோ ஐயரை கண்டு, “இப்ப இதுவொன்னு தான் குறைச்சல்” என்று கத்த, “மாப்பிள்ளையாண்டான் என்ன சொல்லறார்” என்று கேட்க, அஜயோ “ஒன்னுமில்லை நீங்க மத்த விஷயத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் இவனிடம் பேசறேன்.” என்றான். சுற்றியிருந்தவர்களில் விக்ரம் கோபத்தை கண்டு எதற்கும் தள்ளி இருந்துக்கொள்ள நினைத்தார்கள்.
விக்ரம் காதில், “டேய்… ஆஸ்யூஸ்வெல் குடத்துல மோதிரத்தை போட்டு தேடணும்.
உனக்கு தேட இஷ்டமில்லைன்னா விடு. அந்த பொண்ணு ஹரிணி கையை விட்டு துழாவி எடுத்து கொடுக்கட்டும். நீ ஆக்டிங் மட்டும் கொடு” என்றான்.
“நான் ஏன்டா அவளை வின் பண்ண வைக்கணும்?” என்று விக்ரம் கேட்க, அஜய் அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்து, ”முடியலைடா… ஏன்டா… என் கல்யாணத்துக்கு கூட இந்தளவு கஷ்டப்பட மாட்டேன். வச்சி செய்யறியே” என்றதும் ஹரிணி சிரித்தாள்
விக்ரமோ “முகறகட்டை.. போய் ஜோடியா போட்டோ எடுக்கணும்னு சொன்ன. அதை எடு. இங்க நான் பார்த்துக்கறேன்” என்று அனுப்பி வைத்தான். பெரியவர்கள் சிலரே அங்குயிருந்தனர்
மற்றவர்கள் சாப்பிட சென்றியிருக்க வினோதினி கூட அருகேயில்லை.
ஐயரோ குடத்தில் பூக்கள் போட்டு மோதிரத்தை காட்டி அதில் போட்டு ‘இப்ப நீங்க இரண்டு பேரில் யார் எடுக்கேள்னு பார்ப்போம்” என்று பார்வையிட, சுற்றியுள்ளவர்கள் ‘ஹரிணி ஹரிணி ஹரிணி’ என்று கூச்சலிட, ‘விக்ரம் விக்ரம் விக்ரம்’ என்று இரண்டு பக்கமாய் கத்த ஆரம்பித்தனர்.
அஜய் நாசூக்காய் அவன் மணக்க போகும் பெண்ணோடு ஜோடியாக நின்று போட்டோ எடுத்தான். ஏதோ அவனுக்கு திருமணம் போல நான்கைந்து ஸ்டில் வேறு எடுக்கப்பட்டது.
இங்கு குடத்தில் கையை விட்ட ஹரிணியின் கையை தடுத்தவாறு விக்ரம் குடத்தினுள் ஒரு போராட்டம் நிகழ்த்தினான்.
ஒவ்வொரு முறையும் ஹரிணி மோதிரம் எடுத்து கையை வெளியே எடுக்க முயல விக்ரமோ அதை பறித்து மீண்டும் மீண்டும் குடத்திற்குள்ளே போட்டான்.
”ஒன்னு மோதிரத்தை எடுக்க விடணும். இல்லை… நீயாவது எடுத்துட்டு ஆட்டத்தை முடிக்கணும். எதுக்கு அதுலயே போடற?” என்று விக்ரம் செவிமடலில் கிசுகிசுப்பாய் மெதுவாக யாரின் செவிக்கும் எட்டாத விதமாக கேட்டாள்.
”ஒரு பொண்ணுக்கிட்ட தோற்கறது எனக்கு பிடிக்காது. அதனால உன் வெற்றியை தடுக்கறேன். ஆப்ட்ரால் ஒரு பொண்ணுகிட்ட போட்டி போட்டு ஜெயிச்சதா சொல்லவும் ஷேமா இருக்கு. அதனால் திரும்ப குடுத்திலேயே போடறேன்.” என்று கூறவும் ஹரிணி கைகள் விக்ரம் பிடியில் சிக்கிக்கொண்டு விடுபட தவித்தது.
இதில் உஷ்ண காற்று உரச விக்ரம் பேச்சில் கடுப்படைந்த ஹரிணியோ, “உன்னை பார்த்தா அப்படி தெரிலை. ஏதோ என் கை பிடிக்க ஏங்கற மாதிரி இருக்கு. இப்படியே பண்ணினா இந்த நேரம் அதிகரிக்கும்.” என்று அலட்சியமாக கூற இம்முறை ஹரிணி கையை விடுவித்தான். அவளோ அவசரமாய் மோதிரத்தை எடுத்தாள்.
‘அவள் மோதிரம் எடுத்துவிட்டால் நீ தோற்றுப்போவாய்’ என்று விக்ரம் மூளை எடுத்துரைக்க அவசரமாய் அவளது கையை தட்டி மோதிரம் விழ, அதை எடுத்து கையை குடத்திலிருந்து உருவ முயன்றான். ஹரிணியோ மோதிரத்தை அவன் தன் கையை தட்டி எடுக்கவும் கோபத்தில் அவசரம் காட்ட நகம் கீறிவிட்டது.
மோதிரத்தை காட்டி, கன்னத்தின் பக்கம் உள்கதுப்பை காட்டி, ‘என்னை ஜெயிக்க எல்லாம் விடமாட்டேன்” என்றான் விக்ரம்.
அதன்பின் தோங்காய் உருட்ட கூற, அஜயிடம் ”என்னடா இது? தேங்காயை அவ மண்டையில போட்டு உடைக்க சொல்லு செய்யறேன். தரையில உருட்டணுமா?” என்று கடுப்படைய, “அப்பளம் தருவாங்க மச்சான். அதை ஹரிணி தலையில் வச்சி அடிக்கலாம். இப்ப தேங்காயை உருட்டு. ஆல்ரெடி குடத்துல இருந்த மோதிரத்தை நீ எடுத்ததையே என்னால தாங்க முடியலை. நான் ஜீரணிச்சிட்டு வர்றேன்.” என்று பழச்சாறு பக்கம் கையை காட்டினான்.
உண்மை தான் மோதிரம் எடுக்கும் விளையாட்டில் ஏதோ ஆர்வமாய் பங்கு பெற்றவனாக விக்ரம் காட்டிக் கொண்டது அவனுக்கே ஆச்சரியம்.
ஒரு மோதிரம் தன்னை இழுத்து பிடித்து திருமணத்தை தடைப்படுத்திருக்கின்றது. அதை கழட்டி அக்னியில் போட்டதும் நிலைமை சீரானதை எங்கணம் அறிவான்.
தேங்காயை உருட்டி, “போதும்யா. சட்னிக்கு எடுத்து வையுங்க’ என்று சலித்து எழவும், விக்ரமின் செய்கையை பார்த்து சிலர் கழண்டுகொண்டார்கள்.
“அப்பளத்தை அடிச்சிட்டு போங்கோ.’ என்றதும், நின்றவன் ஹரிணியை பார்வையிட்டான்.
அவளோ இன்னமும் கோபமாக தான் இருந்தாள். அப்பளத்தை தலையில் வைத்து தட்டக் கூற, அவசரமாய் அவன் தலையில் அடிக்க தூள் தூளானது. விக்ரமோ கரம் வைத்து அவனும் அவ்வாறே செய்ய, தலையில் குத்தியிருந்த க்ளிப் அவன் கையை பதம் பார்த்தது.
இம்முறையும் விக்ரம் தான் வலியில் சுணங்கியது.
ஹரிணியோ நமுட்டு சிரிப்பை உதிர்க்க, “இந்த பால் பழம் குடிச்சிடட்டும்” என்று கூற பிடிக்காமல் திரும்பினாள். தனிமை தந்து அருகேயிருந்தவரை விரட்டி அறைக்கு அழைத்து சென்றனர்.
விக்ரம் எச்சி செய்து தான் குடிப்பதை ஹரிணியால் கற்பனையில் கூட ஏற்க முடியாது.
மாலதியிடம் மறுக்க, அவரோ மாப்பிள்ளையையும் அவளையும் காண, அவள் அவசரமாய் மறுக்கவும், “கொண்டுவாங்க அத்தை” என்றான்.
விக்ரமாக அத்தை என்ற வார்த்தை உதிர்க்க, அவர் சென்று பால் பழம் எடுத்துவர சென்றார்.
“என்னால உன் எச்சியை சாப்பிட முடியாது.” என்றாள் விக்ரமின் திட்டம் உணர்ந்தவளாக. அங்கு யாருமில்லாததால் வார்த்தை எகிறியது.
“முடியாதுன்னா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க கூடாது. கடைசில என் கையால நான் லவ் பண்ணின பொண்ணு எனக்கு போட்ட மோதிரத்தை கழட்ட வச்சிட்டல்ல?” என்றதும், அஜயோ அதிர்ந்தான்.
இந்த பொண்ணுக்கு இவன் காதலிச்சது தெரியாது. இப்படி பேசறானே என்று முழித்தான்.
“விக்ரம் லவ் பத்தி எல்லாம் ஏன் பேசற. அந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாது.” என்றான் அஜய்.
“என்ன தெரியாது. அதெல்லாம் தெரியும்… இல்லைன்னா நான் ரிங் கழட்டி நெருப்புல போடறேன். ரியாக்ஷனே இல்லாம இருப்பாளா? அப்பா இவளிடம் என்னை பத்தி சொல்லிருக்கார். அதான் தற்கொலை வரை போயிருக்கான்னு இவளுக்கு என் மேல சிம்பதி.. இல்லைன்னா நான் பேசின பேச்சுக்கு அதை மறந்து இருப்பாளா?” என்று கோபமானான்.
“இங்க பாருங்க… மாமா எதுவும் என்கிட்ட ஷேர் பண்ணலை. உங்கம்மா தான் பூவைச்சி விட வர்றப்ப ஒரு நாள் லூஸ்டாக்ல சொன்னாங்க.
அதுகூட நான் உங்களை கல்யாணம் பண்ண சம்மதிச்சதும், அடுத்த நாள் ‘என்னையே ஏன் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கட்டாயம்னு மாமாவிடம் அன்னிக்கு கேட்டிருக்காங்க. மாமா தான் நீங்க காதலிச்சதை சொன்னாங்களாம். ஆனா அத்தை காதலிச்சதா மட்டும் தான் சொன்னாங்க. நீங்க தற்கொலை வரை போனது எல்லாம் இப்ப நீங்க உங்க வாயால சொன்னது தான் கேள்விப்படறேன்.
அத்தையும் நீங்களும் லூஸ்டாக் விடற இந்த குணத்துல ஒன்னுப்போல” என்றாள்.
அந்த நேரம் ரவிப்பிரகாஷோ மகன் மருமகள் தேடி வந்துவிட்டார்.
“என்னடா… அஜய் என்ன நடக்கு?” என்று வரவும், விக்ரமோ கோபமாக “நான் காதலிச்சு தற்கொலை செய்ய போனது வரை, யாரிடமெல்லாம் டமாரம் அடிச்சிருக்கிங்க?” என்றான்.
ரவிபிரகாஷ் மருமகளை காண, “அத்தை அன்னிக்கு என்னிடம் உலறிட்டாங்க மாமா. ஆனா தற்கொலை வரை போனது உங்கப்பையன் தான் இப்ப உலறினார். அதுக்காக கல்யாணம் நிறுத்த மறுபடியும் சொல்ல முடியுமா? சம்மதம்னு வார்த்தை சொன்ன பிறகு மாத்தி மாத்தி பேசக்கூடாதே. லவ் பெயிலியர் தானே” என்றாள் அசால்டாக.
ரவிபிரகாஷோ நிம்மதியடைந்தவராக “என் பிரெண்ட் கமலகண்ணனிடம் சொன்னேன் டா. இப்ப என்ன? உண்மை தானே? நாளைப்பின்ன ஒரு வார்த்தை சொல்லலையேனு அவன் என்னை கேட்கவா? பொண்ணு கொடுக்கறவனிடம் மறைச்சா அது தப்பு. அதனால உண்மையை சொன்னேன்.
உங்கம்மா தான் சதா ஹரிணியை பிடிக்கலைன்னு புலம்பினா. என் பையனை மட்டுமரியாதை இல்லாம சபையில பேசறா. இப்பவே இப்படின்னா கல்யாணம் ஆனப்பிறவு எப்படி பேசுவாளோனா புலம்பினா. எனக்கு நீ இப்ப விட்டா கல்யாணம் செய்யவே மாட்டியோனு பயம் வந்தது. அதான் உங்க அம்மாவிடம் நீ செய்த வீரதீர செயலை சொன்னேன். மறுப்பேதும் இல்லாம ஹரிணியை மருமகளா ஏத்துக்கிட்டா. அவ ஹரிணியிடம் உலறியிருக்கா. என்மருமக சுத்த தங்கம். புரிஞ்சு நடந்துக்கிட்டா.
நீ தான் சும்மா ஏதாவது கத்தற. எவனாவது அத்தனை பேர் பார்க்கறப்ப தங்க மோதிரத்தை நெருப்புல போடுவானாடா? கழட்டணும்னு முடிவு பண்ணினா வீட்ல கழட்டி வைக்க வேண்டியது தானே. தங்கம் விற்கற விலையில் நெருப்புல போடுற” என்று பாயவும், “இப்ப என்ன… அதை தான் எடுத்துட்டிங்களே.” என்று அவனும் பாய்ந்தான்.
“மாமா நிதானமா இருங்க. எங்கப்பா பயந்துடப் போறார்.” என்று கூறியதும், விக்ரமோ எந்த விஷயமானாலும அவள் தந்தை உடல்நலத்தில் அவள் கண்ணும் கருந்துமாய் நின்றதில், தன் தந்தைக்கும் உடல்நலம் சுகமில்லாது சென்றிடக்கூடாதென நிதானித்தான்.
கதவு தட்டவும், ரவிபிரகாஷ் திறக்க, அங்கே ராதிகா வந்திருந்தார்.
“பால் பழம் கொடுக்க வந்தேன். என்னாச்சு?” என்று ராதிகா பதற, “ஒன்னுமில்லை.” என்று ரவிபிரகாஷ் செல்ல முற்பட்டார். “அஜய் கூடவேயிருடா.” என்று மகன் முகம் பார்த்து இனி காதல் விவகாரம் பற்றி திருமண தம்பதியர் இருவர் முடிவெடுத்துக் கொள்வாரென அஜயிடம் அருகே இருக்க அமர்த்தி விட்டு சென்றார்.
அஜயோ தலையாட்டி சம்மதித்தான்.
பாலை எடுத்து குடிக்க வாயெடுத்தவன், திருஷ்டி சுற்றும் பொழுது பட்டும் படாமலும் காரி உமிழும் செய்கை போல செய்ய ஆயத்தமாக, அஜயோ அதை அவசரமாய் வாங்கி “தங்கச்சி நீ குடிச்சிட்டு கொடும்மா” என்று கொடுத்திட, எங்கே விட்டால் விக்ரம் நிஜமாகவே எச்சி துப்பி தந்திடுவானோ என்று பயந்து அவசரமாய் பாதி வாய் வைத்து குடித்து அத்தையிடம் கொடுத்தாள்.
“விக்ரம் இந்தாடா” என்று ராதிகா தர, “தப்பிக்க வைக்கிற” என்று அஜயை பார்த்தே பாலை குடித்தான்.
அடுத்து பழத்தை உறித்து தர, விக்ரம் வாங்கி சுவைத்தான். ஐஸ்க்ரீம் போல வாழைப்பழத்தை எச்சி வைக்க, ஹரிணியோ ‘யாக்’ என்று அவஸ்தைக்குள்ளாக, அவனோ அதை அவளிடம் தர வந்து அவனாகவே விழுங்கினான்.
“தப்பிச்சு போய் தொலை” என்று கூறியவன், “அம்மா… நான் ஒரு காலத்துல லவ் பண்ணினேன். அதுக்காக இப்ப லவ் பெயிலியர்னு யாரிடமாவது உலறி வைக்காத. மத்தவங்க பார்க்கற பாவமான பார்வையை பார்த்தா இரிட்டேட்டா இருக்கு. புரிதா” என்றதும் மருமகளை கண்டு சம்மதமாய் தலையாட்டினார்.
அதற்குள் மாலதி மூச்சு வாங்க வந்து சேர்ந்தார். “அக்கா கூடவே இருக்கணும்.” என்று வினோதினிக்கு அறிவுரை வழங்க, “அம்மா நான் இங்க இருக்க மாட்டேன்” என்று நழுவுவதில் குறியாக இருந்தாள்.
“ஏன்டி அவளுக்கு கூடபிறந்தவ நீ தானே. வேற யாரு பக்கத்துல நிற்பா.” என்று அதட்டவும், வினோதினி அக்கா பக்கம் நின்றாள். அம்மா சென்றதும் ஓடிவிடும் முடிவில் இருந்தாள்.
மாலதி ராதிகா “விக்ரம் சீக்கிரம் வாடா. சாப்பிட போன கூட்டம் போட்டோ எடுக்க வந்துடுவாங்க” என்று கூறிவிட்டும் சென்றார்.
பெரியவர்கள் சென்றதும் அறைக்குள் தம்பதிகளோடு அஜய் வினோதினியும் இருக்க, வினோதினி திருட்டு முழியோடு ஒடுவதில் நழுவ, அவளது ஜடையை பிடித்து “ஏய் நில்லு. ஆரத்தி எடுக்கறப்ப ஏதோ பேயுக்கு ஆரத்தி எடுக்கறாப்ள எடுத்த. என்ன விஷயம்” என்றான்.
“எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை. அக்காவிடம் உங்களை கட்டிக்க வேண்டாம்னு அப்பாகிட்ட சொல்ல சொன்னா அவ கேட்கலை” என்றாள். ஜடையை அவனிடமிருந்து பெற போராடவும் செய்தாள்.
“கட்டிக்க… வேண்டாம்னு…. நீ… சொன்னியா? உனக்கு என்ன கெடுதல் பண்ணினேன். என்ன அதுப்பு.’ என்று யோசிக்க, “இங்க பாருங்க… எங்க வீட்டுக்கு வந்து எங்கக்கா கழுத்தை நெறிச்சிங்களே… கழுத்துல ரத்தம் கட்டிடுச்சு. இதுல உங்க நகம்பட்டு அக்கா சதை கிழிஞ்சி வடு மாதிரி ஆகிடுச்சு” என்று காட்டினாள்.
சற்று நேரத்திற்கு முன் சங்கு போன்ற கழுத்தில் மறுபுறம் என்ன வடு?’ என்று எண்ணினான். அதற்கு தான் காரணமா? என்று முழிக்க, ஹரிணியும் அமைதியாக வேடிக்கை காணவும், “ஏய்.. இங்க பாரு என் கையை… உங்கக்கா விளையாட்டுல மோதிரம் தரலைன்னு கிழிச்சிருக்க. அப்படி பார்த்தா நான் என் லைஃப்காக உங்க அக்காவை லைட்டா கழுத்தை பிடிக்கறச்ச கீறியிருக்கும்.” என்று சமாளித்தான்.
அவனுக்கு தெரியாதா அன்று காட்டானாக அல்லவா ஹரிணி கழுத்தை நெறித்தது.
“என்ன சொன்னாலும் எனக்கு உங்களை பிடிக்கலை” என்று கோபமாக, “பார்டா… பிடிக்கலைன்னா போடி. நான் ஒன்னும் உனக்கு தாலி கட்டலை. உங்க அக்காவுக்கு தான் தாலி கட்டறேன். நீ மச்சினிச்சி மட்டும் தான்” என்று வாயாட, அஜயோ “ஏன்டா அது சின்னபிள்ளைடா. அதுகிட்ட போய்.. எம்மா வினோதினி நீ போ.. உங்கக்கா மாமா தனியா இருந்தே அடிச்சிக்கட்டும்” என்று அனுப்பினான்.
விக்ரம் நண்பனை முறைத்து போட்டோ எடுக்க வந்தார்கள்.
முட்டி மோதி போட்டோவுக்கு நின்று சாவகாசமாக சாப்பிட வந்தார்கள்.
ஹரிணியை எல்லாம் கழட்டி விட்டு விக்ரமோடு சாப்பிட அமர்ந்தாள். ஹரிணி தந்தை சேர்ந்தே இருப்பதை விரும்ப இவன் பக்கம் அவளாக தான் வந்தாள். அதுக்கு கூட கேவலமாக ஒரு லுக்கை விட்டுவிட்டு சாப்பாட்டை பிடி பிடித்தான்.
ஹரிணிக்கோ ஒவ்வொரு விள்ளையாக சாப்பிட, மனதில் கலக்கம் கூடியது.
தந்தை கமலகண்ணன் வந்தவரை வரவேற்று சந்தோஷமாய் நடமாட, இனி வரும் காலத்திலும் விக்ரமோடு சண்டையிட்டால் அது சரிவராது. அவனோடு தனியாக இருக்கும் போது நிதானமாக பேச வேண்டும். அவனது முதல் காதல் பற்றி கேட்க வேண்டும். அவனாக முதல் சந்திப்பில், அவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் கூடுதலாக மனம் சாந்தமடையும். அந்த மாற்றம் வந்துவிட்டால் கூட கணவன் மனைவியாக வாழ்வது சாத்தியம் தான். ஆனால் இவன் எந்த ரகம் என்று எடைப்போட முடியவில்லை.
தான் பொண்ணு பார்க்க நின்றதும் கல்யாணத்தை மறுத்து கூறினான். நான் சம்மதித்தால் மணப்பதாக நகைத்தான். ஆனால் நானே மணக்க சம்மதிக்கவும் கோபமானான்.
என்னை கல்யாணத்தை நிறுத்த கூறி சிலிர்த்துக் கொண்டு வந்தான். ஆனால் விஷயம் தெரியவும் அமைதிக்கு அவார்ட் தருவது போல மாறி நிற்கின்றான்.
இதில் கையில் அவன் காதலி அணிவித்த மோதிரத்தை பலபேர் கூடியிருக்க கழட்டி அக்னியில் போடும் அளவிற்கு காதலியை மனதில் இருந்து அகற்றி, தங்கையை மச்சினிச்சி என்கின்றான். அப்படியென்றால் தன்னை அவன்
ஏற்க முடிவு செய்துவிட்டானா? என்று ஆச்சரியமாய் பார்வையிட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Wow super. Vikram we cant predict. Ur mind. Harini keep patience. U will have good result. Very intresting sis.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 vikram enna dhan manasula nenachitu erukan🙄 hari nu manasu maari vaazha thayar ayita evan enna pannuvaano parpom 🧐🤔