அத்தியாயம்-11
வீட்டுக்கு வந்து விளக்கேற்றும் நேரமெல்லாம், விக்ரம் ஹரிணியை அடிக்கடி புரியாத பார்வையை பார்த்தான்.
புகுந்த வீட்டில் மிரட்சியோடு வீட்டை அளவிட்டாள். விக்ரம் ஏதோ ப்ரீயாக அமர்நதுக் கொள்ள, ராதிகா ஹரிணி கைப்பிடித்து நிறைய பேசினார்.
“என் பையன்… ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு வளர்த்தோம். இப்படி எவளையோ காதலிச்சு, அவளுக்காக தற்கொலை பண்ண போய், உசுரோட திரும்பி வந்திருப்பதே இப்ப தான் தெரியும். அவனால உன்னை உடனே ஏற்க முடியுமானு தெரியலை ஹரிணி. ஆனா நீ தான் அவன் மனசை மாத்தணும். காதலிச்சு விட்டுட்டு போனவளை மறக்க வச்சி, உன்னை காதலிக்க வைக்கணும். அவன் உன்னை ஏதோ திட்டியதா சொன்னியே… அதை எனக்காக மறந்துஞு… மன்னிச்சிடு.” என்று மன்றாடினார்.
“அய்யோ அத்தை… பேஸிக்கலி உங்க பையன் ரக்கட்டா தெரிந்தாலும் இலகிய மனசு. இல்லைன்னா தற்கொலை வரை போவாரா? அவர் பேசியதை மறக்க முடியுமா தெரியலை. ஆனா அவரா பேசி மன்னிப்பு கேட்டா நான் மறந்துடுவேன் போதுமா” என்றாள்.
விக்ரம் எல்லாம் மன்னிப்பு கேட்பானா? என்று ராதிகா அதிர்ந்தாலும், சாந்தி முகூர்த்தில் ஏதாவது மாயம் நிகழலாம் என்று விட்டுவிட்டார்.
அதன்பிறகு சாந்தி முகூர்த்தமென்று ஹரிணி வீட்டுக்கு கிளம்பினார்கள். இம்முறை அஜய் மட்டும் கூட வந்து விட்டுவிட்டு செல்வதாக பேச்சு. ரவிபிரகாஷோ கமலகண்ணனிடம் “ஏதாவது வம்பு வளர்த்தா உடனே போன் பண்ணுடா” என்று கூறிவிட்டார். இந்தளவு தனக்காக அமைதிகாப்பவன் இவர்களிடம் வம்பு வளர்ப்பது குறைவு. இனி மருமகள் பார்த்துக்கொள்வாள். அவளிடம் தான் எல்லாம் பேசிவிட்டாயிற்றே. அவர்கள் தலை மறையவும் ஹரிணியிடம் ஏளனமாய் முகம் காட்டினான்.
அங்கிருந்ததில் வினோதினி வேறு அக்கா புருஷனிடம் முகம் திருப்ப, விக்ரமிற்கு அவளிடம் வம்பு வளர்க்க ஆசையிருந்தது.
அஜய் வேறு இல்லாததால் அவனுக்கு பொழுது போகவில்லை.
தன்னை கண்டிக்க தாய் தந்தையர் வேறு இல்லை. என்னயிருந்தாலும் மாமனார் வீட்டில் மாப்பிள்ளை ராஜாங்கம் என்று தெளிவாகியிருக்க வினோதினியிடம், “ஓய்… உங்கக்கா இங்க எந்த காலேஜில படிச்சா?” என்றான்.
அவளோ இவனுக்கு மேலாக, “எங்கக்கா எந்த காலேஜ் படிச்சிருந்தா இப்ப என்ன? நீங்க அந்த காலேஜில ஜாயின் பண்ண போறிங்களா?” என்று வெடுக்கென கேட்டாள்.
“ஆமா புளிமூட்டை.. அங்க போய் உங்கக்கா படிக்கறப்ப நானும் படிக்கலாம்னு தான்” என்று பதிலுரைக்க, “எங்கக்கா ஆர்ட்ஸ் காலேஜ். நீங்க இஞ்சினியரிங் காலேஜ். லூசு தனமா பேசாதிங்க” என்றாள்.
கமலகண்ணன் பேசுவதை கேட்டவராக பதறியபடி, “ஏங் கழுதை அக்கா புருஷன் மாமானு மரியாதை இல்லை.” என்று அதட்ட, விக்ரமோ பல்லை துருத்தி ‘மாட்டினியா?’ என்பது போல கேட்டான்.
வினோதினியோ கோபமாய் அக்காவை காண சென்றாள். அங்கு ஏற்கனவே மாலதி பூவைத்தபடி, “அவர் என்ன பேசினாரோ முதல்ல வேண்டாம்னு சொன்ன. பிறகு என்னத்த கண்டியோ, கல்யாணத்துக்கு சம்மதிச்ச. மாப்பிள்ளை என்னடான்னு தங்க மோதிரத்தை நெருப்புல போட்டார். ஏன்டி யாரையாவது காதலிச்சிருப்பாரா?” என்று கேட்க ஹரிணி கமுக்கமாய் நின்றாள். அவளுக்கு விக்ரம் ‘ஃபக் யூ’ என்ற வார்த்தையையே அன்னையிடம் கூற முடியவில்லை. இதில் அந்த வீடியோ காணொளியையும் தந்தை எந்த நோயுக்கு மாத்திரை சாப்பிடுகின்றார் என்று தெரியவில்லை. கேட்டால் அதெல்லாம் உயிருக்கு ஆபத்தில்லை. மருந்து எடுத்துக்கிட்டா போதும். நீ கல்யாணத்தை பண்ணிட்டா நான் சந்தோஷப்படுவேன்’ என்ற வார்த்தையால் தான் இந்த நிலை. இதில் விக்ரம் ஒரு பெண்ணை காதலித்ததை ஆமென்று ஏற்பதா?! அன்னை யூகத்திலேயே இருக்கட்டும். தற்பொழுது “அவங்க அப்பா தந்த மோதிரம் பிடிக்கலைன்னு அப்படி செய்தார். அவர் அப்பாவுக்கும் அவருக்கும் இந்த கல்யாணத்தால் ஒரு மோதல் இருக்கு” என்று கூறி தப்பித்து இருந்தாள்.
“ஏன்டி எது சொன்னாலும் யோசனைக்கு ஓடிடற. தலைவாறும் போது சொன்னது நினைவிருக்கா?” என்று வினோதினி இருப்பதால் நாசூக்காய் கேட்டார்.
“அம்மா…” என்று அலுத்துக்கொண்டு ”இருக்கு” என்றாள் மெட்டையாக.
“சின்ன கழுதை… வெளியே போகலாம்ல” என்று அதட்டினார். பெரிய மகளிடம் முதலிரவு அறிவுரையை அள்ளி வழங்க இயலாத குறைக்கு கத்த, “அங்க அந்த மாமா இருக்கு. அதை பார்த்தா கோபம் கோபமா வருது.” என்றாள்.
“இவ ஒருத்தி” என்று சலித்து, ஹரிணியிடம், “பால் எடுத்துட்டு போ” என்று கடிகாரத்தை பார்த்தார். மணி ஒன்பது இருபது காட்டியது.
ஹரிணி தயக்கமாய் பெற்று நடந்தாள். மாடியில் முதலிரவுக்கென்று தனி அறை ஒதுக்கியிருக்க, விக்ரமோ மாமானார் மாடிக்கு செல்ல கூறியதால் இங்கு வந்து, போனில் விளையாடிக்கொண்டு கால் மேல் கால் வைத்து, மெத்தையில் படுத்திருந்தான்.
ஹரிணி அடக்கமான சேலையில் அப்சராஸாக நுழைந்தவள் பாலை அங்கே வைத்து, விக்ரமை பார்வையிட, அவனோ காலை இறக்கி திரும்பி படுத்துக்கொண்டு போனில் விளையாட்டை தொடர்ந்தான்.
ஹரிணியும் கீழே பாயை விரித்து போர்வை போர்த்திக் கொண்டாள்.
இங்கே விக்ரமிற்கு ‘அப்பாடா’ என்ற உணர்வு.
ஹரிணியோ ‘அப்பாவுக்கு என்ன தான் பிரச்சனைனு கூட சொல்ல மாட்டேங்கறார். ஆனா பயமாயிருக்கு. கல்யாணம் செய்துக்கோ சொல்லறேன்னு சொன்னாரே. நாளைக்கு கேட்கணும். அப்படியே டாக்டரை பார்க்க அழைச்சிட்டு போகணும்’ என்று எண்ண, அவள் உறங்காமல் விழிக்க, அவள் மறுபுறம் திரும்பவும் தலைக்கு மேலே மெத்தையிலிருந்தபடி, “ஹாய்… என்ன யோசிக்கற” என்றான்.
“அய்யோ ஆண்டவா” என்று பதறி எழுந்து அமர்ந்தாள்.
இப்படியா ஒருத்தன் பயமுறுத்துவது?
“ஏன் ஏன் பயப்படற? மெத்தை அலங்காரம், தனிமை, தாலி செண்டிமெண்ட்” என்றவன் எதார்த்தமான குரலிலும், கிசுகிசுப்பான குரலில், “பஸ்ட்நைட் ரூம் வேற, ஏதாவது பயமா இருக்கா? இல்லை… ஏதாவது நடக்கணும்னு எதிர்பார்க்கறியா?” என்று காலை நீட்டி அமர்ந்து அங்கிருந்த ஆப்பிளை கடித்தபடி வம்பு வளர்க்கவே கேட்டான்.
“எனக்கென்ன பயம்?” என்று ஹரிணி திணற, “ஓ… பயமில்லை… அப்ப இங்க நான் உன்னை என்ன பண்ணினாலும் பயப்பட மாட்ட?” என்று நெற்றி சுருக்கி கேட்டான்.
ஹரிணியோ “எனக்கு உங்களை பிடிக்கலை. ஏதோ அப்பாவுக்காக கல்யாணம் பண்ணிருக்கேன். அப்பறம் எப்படி நான் எதிர்பார்ப்பேன். அதோட… நீங்க ஒரு லவ் பெயிலியர். உங்களுக்கும் எனக்கும் மோதல் இருக்கு. என்னிடம் கல்யாணத்தையே மறுக்க சொல்லி கெஞ்சினிங்க. என்னை மனைவியாவே எப்படி?” என்று விழுவிழுந்து சிரித்தாள்.
விக்ரமிற்கு அவள் சிரிப்பு சினத்தை கூட்டவும், “ஒரு பொண்ணோட பிஸிக்கலா இருக்கணும்னு ஒருத்தன் நினைச்சிட்டா, அது பிடிக்காத பொண்ணாவோ, ஏன் பகையாளியா ஐ மீன் உன் பாஷையில் முட்டல் மோதல் இருந்தாலும். லவ் பெயிலியரா இருந்தாலும் நோ பிராப்ளம் டியர். ஒரு ஆம்பளைக்கு தேவை ஒரு பொண்ணோட உடம்பு தான். எனக்கு பெனிபிட் தானே. அப்ரோச் பண்ணட்டுமா?” என்று கேட்டதும், ஹரிணி அமர்ந்தபடி பின்னால் நகர்ந்து சுவருடன் ஐக்கியமாக, “டோண்ட் வொர்ரி எனக்கு அந்த ஐடியா இல்லை. யூ பில் பீ ப்ரீ” என்று பெரியமனதாய் கூறி கையில் வைத்திருந்த திராட்சை ஒன்றை அவள் மீதே எறிந்து, “குட்நைட் வொய்ப்” என்று மெத்தை தனக்கு மட்டும் சொந்தமென்று படுத்துக் கொண்டான்.
‘இவன் பழுதா பாம்பா’ என்று ஒன்றும் விளங்காமல் முகத்தில் அரும்பிய வேர்வை துளியை துடைத்து, பயந்தபடி உறங்க முயன்றாள்.
எப்பொழுது உறங்கி வழிந்து கண்ணயர்ந்தாளென்று அவள் அறியாதது.
அடுத்த நாள் விக்ரம் கண் திறக்கும் நேரம், மாடியில் துணியை காயப்போட்டபடி ஹரிணி நின்றியிருந்தாள்.
ஜன்னலை திறந்திருக்க, அந்த காற்றில் தன் தூக்கம் கலைந்து, அவளை வேறு பார்க்கும் விதமாக போனதால் குப்புறப்படுத்துக் கொண்டான்.
இமை மூடிக்கொண்டவனால் இந்த அறையையும் நேற்றைய நாளையும் நினைத்தான்.
திருமணம் என்பது மணப்புரிபவர்களுக்கு எத்தனை விதமான கனவை சுமந்து மகிழ்ச்சியை தருவிக்கும். தனக்கு மகிழ்ச்சியாக அமைந்ததா? என்று யோசிக்க, கொஞ்சம் திமிராக தான் பேசி அவளை வாயடைத்தது. மற்றபடி வருத்தமில்லாமல் கடந்தது என்று தேற்றிக் கொண்டான்.
‘இந்த பொண்ணுக்கு என்னென்ன ஆசை கனவு இருந்திருக்கும். இவ என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்க கூடாது. சம்மதிச்சது மட்டுமில்லாம என் கையால தாலி கட்டிக்கிட்டா. அப்ப நான் அப்படி பேசினதுல என் தப்பில்லை’ என்று சமாதானம் செய்தவன் அருகே, “தூங்கற மாதிரி நடிச்சது போதும். எந்திரிக்கறியா?” என்று முகத்தை மறுபக்கம் திருப்பிகேட்டாள்.
மெதுவாக தலையை சிலுப்பி, “நான் ஒன்னும் நடிக்கலை. இப்ப தான் எழுந்தேன். ஏன் எக்ஸ்ட்ரா கொஞ்ச நேரம் தூங்கக்கூடாதா?” என்றான்.
“யாராவது மேல வர்றதுக்குள்ள பெட்டை நீட் பண்ணி துவைக்கணும். நீ பண்ணுவியா?” என்றதும் எரிந்து எழுந்தான்.
முதலிரவுக்கென்று தயார்படுத்திய பூக்கள் எல்லாம் ஒரு கவரில் போட்டு மூட்டைக் கட்டினாள். அவ்வறையையும் சுத்தப்படுத்திவிட்டு, “காபியா டீயா?” என்றாள்.
“பொண்ணுபார்க்க வர்றப்ப எதை தராம பின்னாடி போய் கிச்சன்ல வச்சியோ.. அது வேணும்” என்றான்.
“அது அப்பவே சிங்ல ஊத்தியாச்சு இப்பவரை வச்சியிருந்தா கெட்டுப்போயிருக்காது.” என்று கூற, “வாவ் வாட் எ ஜோக். ஏய்.. அன்னிக்கு என்ன ப்ரிப்பேர் பண்ணினிங்களோ அதெல்லாம் எனக்கு வரணும்” என்றான்.
முனங்கிக் கொண்டே ஹரிணி சென்றதும், ‘ஒரு மாப்பிள்ளை… காபியை கூட அவனா கேட்க வேண்டியதா இருக்கே.’ என்று கைகளை முறுக்கி குளித்து வந்தான்.
மெத்தையருகே இருந்த மேஜையில் காபி சூடாக இருந்தது.
ஹரிணி அங்கு எங்குமில்லை என்றதும் பொழுது போகாமல் அஜய்க்கு அழைத்தான்.
அவனோ இவன் அழைப்பான் என்று போனை சைலண்டில் போட்டுவிட்டு படுத்திருந்தான்.
விக்ரம் திருமணத்தில் அஜய் தான் அதிகம் டென்ஷனோடு நின்றிருந்தான். தற்கொலை செய்ய முயன்றவனை ஆற்றிலிருந்து இழுத்து வருவதற்குள் அஜய் உயிரும் பதறியது.
நண்பன் காதல் தோல்வியில் மரணத்தை நாடி திரும்பி வந்திட, ரவிபிரகாஷும் அவனை கொஞ்ச நாளைக்கு இங்க வந்தா கூடவே இருந்து பார்த்துக்கோடா” என்று கூறியிருந்தார். சென்னையில் இருந்த நேரம் ரவிபிரகாஷ் உயிரை கையில் பிடித்து கொண்டு துடிப்பார்.
அஜயிடம், “அங்க சென்னையில் அவ நினைப்பு வரமாட்டேங்குதுடா. இங்க தான் லவ் பண்ணினவளோட கைப்பிடிச்சு ஊர் சுத்தினேன்ல. அதே நினைப்பு” என்று கூட கூறியிருந்தான்.
அஜய் நிம்மதியாக உறங்க, “இவன் வேற போனை எடுக்காம” என்று முனங்கி நிமிர, “கீழே உன்னை எங்கப்பா அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.” என்றாள்.
“உன்னையா? என்ன ஒருமையில பேசற? புருஷன் மா புருஷன். வாங்க போங்க ஏங்க என்னங்கன்னு பேசு.. இல்லை உங்கப்பா எதிரே கோபத்தில நான் பாட்டுக்கு வெளியேறுவேன். உங்கப்பா நெஞ்சை பிடிச்சு சரிந்திட போறார்” என்று பேசவும், “இங்க பாரு… என்கிட்ட பேசறதா இருந்தா ஒழுங்கா பேசு. நேத்தும் இன்னிக்கும் வம்புக்குன்னே பேசற. எங்கப்பா உயிரோட விளையாடின. நான் உன்னை கொன்றுடுவேன்.” என்று கத்தவும் விக்ரமோ, ”அப்போ உன்னோட விளையாடலாமா?” என்று கேட்டு நிற்க, ஹரிணிக்கு நேற்று போல உதறியது.
“என்ன நடுங்குது… இந்த மார்னிங் கூட வேர்க்குது. சும்மா… மரியாதை இல்லாம பேசறது நீ தான். நீ முதல்ல வம்பு வளர்க்காம இருக்க பாரு. அவன் இவன்னு சொன்னதுக்கே பல்லை பேத்திருப்பேன். இதுல உன்னையாம் உன்னை.” என்று கூற, தந்தை கீழேயிருக்க ஹரிணி ‘இவன் பேசிய பேச்சுக்கு நான் பேசிய வாயை தச்சியிருக்கணும். இவனுக்கு எல்லாம் சேவகம் செய்யறேன். அப்பா இருக்காரேனு பார்க்கறேன்.’ என்ற ரீதியில் முறைத்தபடி படியில் நடந்தாள்.
விக்ரமோ ‘அந்த பயம் இருக்கனும்’ என்ற ரீதியில் நடந்து வந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi 👌😍❤️ vikram konjam over ah than pandran pa paavam harini avanga appa kaga ellathaiyum poruthutu pora🙄🧐🥺