அத்தியாயம்-14
இன்று புகுந்த வீட்டிற்கு வந்து மகளை சேர்த்திட கமலகண்ணன், மாலதி, வினோதினி வந்தனர்.
விக்ரமோ தனது வீட்டிற்கு வந்ததும் அவன் தனி ராஜாங்கமாக ஓவராக ஆடினான்.
ரவிபிரகாஷ் தான் தோழனான சம்பந்தியை கவனித்தார். ராதிகா கையால் சமைத்த உணவை அவ்வீட்டினர் சாப்பிட்டனர்.
“நாளைக்கே போகணுமாடா? இரண்டு நாள் இங்க இருக்கலாமே?” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு கேட்டார் மாலதி.
“உங்க புருஷனா அங்க ஆபிஸ் வச்சி நடத்தறார்.” என்றதும் மாலதி கமலகண்ணன், ரவியை பார்வையிட்டனர்.
“ஆமா… நான் ஆபிஸ் வச்சா, உன்னை ஏன்டா அதுல வேலைக்கு வைக்க போறேன்” என்றார் அவரும். மாலதிக்கு லேசாக இது தினமும் நடக்கும் பஞ்சாயத்து என்று அமைதியானார்.
தந்தை பேசியதை செவிமடுக்காமல், “அம்மா பத்து லட்சம் கொடுங்க… நான் பிசினஸ் பண்ணிட்டு இங்கயே இருக்கேன்.” என்றதும், “ஏன்டா இப்படி ஒரு அமௌண்ட் கேட்டுட்டா நான் வாயை மூடிப்பேன்னு தானே பேசற. தெரியும் டா. உங்கப்பா வாயை அடைக்க நீ என்ன பேசுவனும் தெரியும். என் வாயை அடைக்க என்ன பேசுவனும் தெரியும். ஏதோ… ஒத்த பிள்ளையை பெத்துட்டு எங்களோடவே இருக்க மாட்டியானு ஏங்கிட்டு இருக்கேன்.
நீ என்னடான்னா, உங்கப்பாவோட மல்லுக்கட்டிட்டு என்னை அம்போனா விடற. நீ சாப்பிட்டியா? என்ன பண்ணற? ஏது பண்ணற. வீட்டுக்கு எப்ப வருவனு வாசலிலேயே இருப்பேன். சனி ஞாயிறு ஆனா நீ என்னை பார்க்க வந்துடுவனு நினைப்பேன். எங்க… மாசத்துக்கு ஒருமுறை வந்து தலைகாட்டவே மூக்கால அழற. இதுல.. இனி குடும்பஸ்தனா வேற மாறிட்ட. கொஞ்சம் பொறுப்பா மாறுடா.
நீ எவளோ ஒருத்திய காதலிச்சது தெரிந்தும், இந்த குடும்பம், அவங்க பொண்ணை, உன்னை நம்பி கட்டி வச்சியிருக்காங்க. இந்த பொண்ணும் உன்னை நம்பி தான் வருது. என் வளர்ப்புல குறை வைக்காம பார்த்துக்கோடா” என்று கூறவும் விக்ரமோ கையை உதறி தன் பேச்சை, செய்கையை, சிரிப்பை தொலைத்து எழுந்துவிட்டான்.
கமல கண்ணன் மாலதி இருவருமே ராதிகா பேசியதற்கு தடையாக பேசாமல் இருந்தனர்.
பெண்ணை பெற்றவராக ராதிகாவின் அறிவுரை விக்ரமிற்கு தேவையென்று எண்ணினார்கள்.
வினோதினியோ அக்கா ஹரிணி அருகே நின்றவள் விக்ரமை அடிக்கண்ணால் பார்வையிட்டாள்.
விக்ரமோ கதவை அடைத்தவன் இருக்குமிடம் தெரியாமல் இருந்தான். இங்கிருந்து கிளம்பும் வரை பேசாமல் செல்வது உசிதமென முடிவெடுத்தான்.
ஹரிணி தான் பிறந்த வீட்டில் பேக் செய்த பொருட்களோடு, புகுந்த வீட்டில் கொடுக்கும் சிலவற்றையும் பேக்கிங் செய்தாள்.
“அங்க போய்… எல்லாம் நீயே பார்த்திப்பியா? ஏதாவதுனா உடனே போன் பண்ணு. அப்பா எப்பவும் ஆதரவுக்கு வந்துடுவார். அதோட புகுந்த வீட்டில் அடிக்கடி பேசி பழகு. அப்ப தான் மாப்பிள்ளை ஏதாவது பிரச்சனை செய்தாலும் உடனே உன் மாமனாரும் உனக்கு சப்போர்டுக்கு வந்துடுவார்.” என்று பேச ஹரிணி சமர்த்தாக தலையாட்டினாள்.
ஆளாளுக்கு அறிவுரை என்ற பெயரில் காதில் ரத்தம் வராத அளவிற்கு பேசிபேசி ஹரிணியை களைப்படைய வைத்தனர்.
அறிவுரை சொல்ல வேண்டியவனின் காதில் ‘குத்துபாடல்’ ப்ளூடூத் மூலமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
வீட்டிலேயே சாப்பிட்டு முடிக்க, ஏழு மணிக்கு ஏசி வண்டி, அதுவும் ஸ்லீப்பர் கோச்சில் புக் செய்து அவ்விடத்தில் காத்திருந்தனர்.
சென்னையில் உள்ள சர்வா டிராவல்ஸ் திருப்பூரில் உள்ள ஆட்களையும் ஏற்றிக் கொண்டு வருவதற்கு வண்டி நின்றது.
ஹரிணி அவள் தங்கை வினோதினி, மாலதி கமலகண்ணன் என்று ஆனந்த கண்ணீரை வடித்திட, ரவிபிரகாஷோ “டேய் அதெல்லாம் அவன் பத்திரமா பார்த்துப்பான் கமலகண்ணா.” என்று நண்பனை தேற்றினான்.
ராதிகாவோ “எதுனாலும் பேசி புரிந்துக்கோங்க. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க” என்று வண்டியில் லக்கேஜை ஏற்றினார்கள்.
விக்ரம் வரும் பொழுதே ஒரு பேக்-பேக் மட்டுமே எடுத்து வந்திட, ஹரிணி பெட்டிகள் தான் இரண்டு சூட்கேஸ் இருந்தது.
தாய் தந்தை மாமனார் மாமியாரிடம் தங்கையிடம் விடைப்பெற்றாள்.
அதுவரை விக்ரம் அஜயிடம் கதையளந்தான். “மச்சான்.. பார்த்துடா. என்னயிருந்தாலும் தங்கச்சி சின்ன பொண்ணுடா. அங்கிளிடம் பேசற மாதிரி பிஹேவ் பண்ணாத” என்று கூற, “உங்க அங்கிள் என் காதலை பிரிஞ்சி சங்கு ஊதி புதைச்சிட்டு, அவர் பிரெண்டோட பொண்ணை கட்டி வைச்சிருக்கார். இதெல்லாம் சும்மா விடலாமா? அதோட அந்த பொண்ணு எல்லாம் சின்ன பொண்ணு இல்லை. நான் பேசியதுக்கு அர்த்தம் தெரிந்தவ. பொண்ணு பார்க்க போனப்ப, காபி தட்டை பின்னாடி வச்சி என்னை போடானு வெளியே விரட்டற அளவு பெரிய பொண்ணு தான்” என்று மார்க்கமாய் பேசி நண்பனிடம், ”ஜாக்கிரதைடா.. நான் வர்ற வரை திருப்பூரை பார்த்துக்கோ” என்றவன் பொதுவாக டாட்டா காட்டினான்.
ஸ்லிப்பர் கோச் வசதிக்கொண்ட ஏசி பஸ்ஸோ, இவர்கள் டிக்கெட்டை வாங்கி சரிபார்த்து, அவர்களுக்கான இடத்தை காட்டினார் நடத்துனர்.
ஹரிணிக்கு இதெல்லாம் முதல் முறை. இந்த இடைப்பட்ட நாளில் அவள் கொஞ்ச நாள் பழக்கப்பட்டவனோடு ஒரே அறையில் தங்கியிருக்கின்றாள்.
அவனும் இவளும் ஒரே மெத்தையில் படுத்திருக்கின்றனர். ஆனாலும், இந்த இயல்பான நெருக்கம் இருவர்களுக்கு வருவது கடினமென்பது இருவர் முகம் பார்த்தே உரைத்திடலாம்.
அதோடு இதெல்லாம் புதிய அனுபவமே. ஒரு பேருந்தில் ஸ்லீப்பர் கோச்சில் தனக்கு தாலி மட்டும் கட்டியவனோடு பயணிப்பது. இவனோடு பேசி சமரசம் ஆகவில்லை. முதலில் இவனோடு பேசவே தனக்கு உடன்பாடில்லை. இந்த விதி இவனோடு கோர்த்து வைத்ததில் ஹரிணிக்கு பெருத்த ஏமாற்றமே.
ஹரிணி ஒரமாய் செல்ல, விக்ரமோ போனில் அஜயிடம் பேசியபடி சாட் செய்தபடி வந்தான்.
ஹரிணியும் அவளும் தங்கையிடம் போனிலேயே பேசிக்கொண்டே விக்ரமிற்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
அன்னை மாலதியிடம் “அம்மா… அப்பாவோட ஹாஸ்பிடல் போயிட்டு, ஒரு ஜென்ரல் செக்கப் செய்துடு. அதோட மெடிக்கல் ரிப்போர்ட் எனக்கு அனுப்பிடு. மறக்காதம்மா… நான் வினோதினியிடம் அடிக்கடி கேட்பேன்.” என்று இருபது நிமிடம் கதையளந்தவள், எதார்த்தமாக திரும்ப அங்கே விக்ரம் இல்லை.
“அம்மா… நான்அங்க போனதும் கால் பண்ணறேன்” என்று அணைத்தவள் அவ்விடத்திலிருந்து எழுந்து, கதவை திறந்து வெளியே நடத்துனர் அருகே வந்தாள். அங்கே நடத்துனர் டிரைவர் மட்டுமிருக்க, படிக்கட்டில் விக்ரம் சிகரெட் பிடித்து புகையை இழத்து விட்டான்.
“என்னம்மா வேண்டும்” என்று டிக்கெட் பரிசோதித்தவர் கேட்க, விக்ரமை கண்டு “ஒன்னுமில்லை அண்ணா. இவரை காணோம்னு வந்தேன்” என்று விக்ரமை சுட்டி காட்டினாள்.
விக்ரமோ பஸ்ஸின் உள்ளே ஸ்மோக் செய்ய கூடாதென, இங்கு வந்து டிரைவரோடு சிகரெட்டை இழுத்தது.
ஹரிணி வந்ததும் புகையை மிச்சம் இல்லாமல் இழுத்து விட்டு சிகரெட் துண்டை தூரயெறிந்து ஹரிணியை தாண்டி படுக்குமிடம் வந்தான்.
ஹரிணியோ “கருமம் கருமம் இந்த நேரம் சிகரெட் வேற என்னென்ன கெட்டப்பழக்கம் இன்னும் வச்சியிருக்கானோ” என்று படுக்க வந்தாள்.
விக்ரம் தலைக்கு இரண்டு கையை முட்டு கொடுத்தடி, இமை மூடிக்கொண்டான்.
ஹரிணியும் படுத்துக் கொள்ள இருட்டில், பேருந்து ஓடுவது இயக்கத்தில் தெரிந்தது.
புதிதான இடத்தில் உறக்கம் வருவது சந்தேகம். அதுவும் ஓடும் பேருந்தில், தற்போது மனப்பொருத்தம் இல்லாமல் கணவன் மனைவியென்று உறங்குவது சாத்தியமேயில்லை.
ஆனால் கண்களை திறந்துக்கொண்டு இருட்டை வேடிக்கை பார்ப்பதற்கு பதிலாக உறங்க வேண்டிய கட்டாயம். கண்ணை மூடியவளுக்கு இதுவும் ரயில் தாலாட்டு போல உறக்கத்தை தந்தது.
இரவு எட்டு முப்பதுக்கு பேருந்து கிளம்பியிருக்க, காலை ஐந்துக்குள் சென்னை வந்து சேர்ந்தது. எட்டு மணி நேரம் உறக்கத்தில் கடந்திருக்க, தன்னோடு ஒருத்தி வருவதை பொருட்ப்படுத்தாது, ‘உபர்’ புக் செய்து ஏறினான்.
ஏதோ பெட்டிகளை மட்டும் டிக்கியில் வைத்து முடித்தான்.
ஒரு வாரம் மழை பொழிந்து, சென்னை லேசான இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் ஐந்து மணிக்கு சில்லென்ற காற்று வீசியது. இதில் காரிலும் ஏசி என்றதில், ஹரிணி அன்னைக்கு போனை போட ஆரம்பித்தாள்.
“அம்மா.. சென்னைக்கு வந்துட்டேன். கார்ல போயிட்டு இருக்கேன்” என்றார். இங்கே திருப்பூரில் மாலதி விழித்துவிட்டதால் போனை எடுத்து விசாரித்து கொண்டார். வீட்டுக்கு போனதும் கால் பண்ணு. கூடவே வந்து விடணும்னு இருந்தோம், உங்க மாமனார் தான் அவங்களா பேசி பழகட்டும்னு அப்பாவிடம் சொல்லிட்டார்.
உன் தங்கைக்கும் பரீட்சை என்பதால விட்டுட்டேன்.” என்றார்.
“பரவாயில்லைம்மா… நீ அப்பாவை தங்கையை நல்லா பார்த்துக்கோங்க. வைக்கறேன்” என்று போனை துண்டித்தாள்.
விக்ரம் ஓட்டுனரிடம் என்ன பேசி தொலைத்தானோ, விக்ரமும் டிரைவரும் சிரித்திருந்தனர்.
இறங்குமிடம் வரவும், பணத்தை தந்துவிட்டு, புன்னகையோடு விடைப்பெற்றான் டிரைவரும்.
பெட்டியை எடுத்தபடி, மூன்று அடுக்குமாடி கட்டிடம் பக்கம்
படியில் நடந்தான் விக்ரம்.
ஹரிணியும் ஒரு பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு படியில் தடுமாறினாள்.
விக்ரம் வேகமாக மாடியேறி மூன்றாவது மாடியில் தனது வீட்டுக்கு முன் பெட்டியை வைத்துவிட்டு இறங்கி வந்தான். ஹரிணி முதல் மாடியையே இப்பொழுது தான் தாண்டி பெட்டியை வைத்துவிட்டு, நிமிர, “வாய் மட்டும் எட்டு ஊருக்கு இருக்கும்” என்றவன் அவளிடமிருந்து பெட்டியை வாங்கி மேலே விறுவிறுவென நடந்தான்.
ஹரிணிக்கோ பிடிக்காத ஒருவன் நித்தமும் முனங்கும் விதமாக நடந்தால், அதுவும் முதல் முறை வாழ அடியெடுத்து வைக்கும் நேரமும் முனங்கினால் மனம் காயப்பட்டதாக கண்ணீர் வடிந்தது. வாழப்போகும் வீட்டில் கண்ணீரோடு நுழைவதை தவிர்க்க, இயல்பாக இருக்க போராடி கண்ணீரை வரவிடாமல், சென்றாள்.
மூன்றாவது மாடிக்கு வரும் நேரம், விக்ரம் ஒரு வீட்டின் கதவில் சாவியை நுழைத்திருந்தான்.
ஹரிணி சுற்றி பார்வையிட்டாள். இங்கு நான்கு வீடு இருந்தது. அதில் ஒன்று தங்களுடையது என்றதும் விக்ரமை காண, அவனோ கதவை திறந்து பெட்டியை உள்ளே தள்ளினான்.
ஹரிணியும் வீட்டினுள் வந்திட, கதவை சாற்றி பூட்டினான்.
‘கதவு திறந்திருக்கட்டுமே’ என்று கூற நினைத்தாள், ஆனால் இவனிடம் பேச கூட மனமில்லை. பிறகு வேண்டுமென்றே ஆடுவான்.
கண்களை எல்லா இடத்திலும் படர விட்டாள். கிச்சன், ஹால் சிங்கிள் ரூம் வித் அட்டாச் பாத்ரூம், ஒரு குட்டி பால்கனி என்று ஏற்கனவே ரவிபிரகாஷ் தெரிவித்திருந்தார். ஏன் சில புகைப்படம் மூலமாக காட்டவும் செய்தார். இன்று அந்த இடத்தில் தான் நேரில் நிற்கின்றாள்.
மெதுவாக செருப்பை கழட்டி அங்கிருந்த செப்பல் ஸ்டாண்டில் வைத்துவிட்டு, கையை அலம்ப, கிச்சன் பக்கம் சென்றாள். சிங்கில் கை அலம்பிவிட்டு, முகத்தில் நீரை வைத்து கழுவினாள். அங்கிருந்த அக்குவாவில் நீரருந்த யோசித்தாள். நான்கு நாள் இருந்த தண்ணீர் என்பதால் அதை திறந்துவிட்டு முற்றிலும் வீணானதும், மீண்டும் தண்ணிர் பிடித்தாள்.
கிச்சனில் குடத்தில் தண்ணீரை பிடித்து வைக்க குடத்தை தேடினாள்.
பொதுவாக மாலதி குடிக்கின்றோமோ இல்லையோ சமையல் அறை என்றால் ஒரு பானை குடத்தில் நீர் இருக்க வேண்டும். இது அவர் கூறிய அறிவுரை என்பதால் அங்கிருந்த சிறு குடத்தை கழுவி அதில் நீரை பிடித்து வைத்தாள்.
டம்பளரை கழுவிவிட்டு, ஒரு டம்ளர் நீரை எடுத்து குடித்து, பின்னர் தட்டு போட்டு மூடி, அதில் மேலே டம்ளரை வைத்தவள்.
வந்ததும் வராம கிச்சன்ல என்னத்த உருட்டறா, என்று விக்ரம் எட்டி பார்க்க, தண்ணீர் பிடித்து வைத்தவளை கண்டு பேசாமல் அகன்றான்.
ஏற்கனவே அவன் அன்னையும் கிச்சன்ல ஒரு குடத்துல தண்ணி பிடிச்சு வைக்கறது நல்லதுக்குடா.’ என்று சொல்லியிருக்க, விக்ரமோ ‘ஆமா இந்த குடம் தட்டு டம்ளர் வேற கழுவணும்’ என்று சலித்து அன்னை சென்றதும் அலமாரியில் வைத்தவன். அதனால் ஏதாவது சாஸ்திரம் என்று சொல்லியிருப்பார்களென கடந்தான்.
ஹாலுக்கு வந்தவள் அதே இடத்தில் கொண்டு வந்த இரண்டு பெட்டியும் இருக்க, அதனை ஓரமாக வைத்தாள்.
அறையில் விக்ரம் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பதை கவனித்தவள், நேரத்தையும் கவனித்தாள்.
ஐந்து இருபது என்பதால் கொஞ்ச நேரம் தூங்கலாமென அங்கிருந்த சோபாவில் காலை மடக்கி கையை தலைக்கு முட்டு கொடுத்து சுடிதார் ஷாலை மேலே நன்றாக விரித்து படுத்து இமை மூடினாள்.
சனியனை தூக்கி பனியனில் போடுவதாக கூறுவார்களே… அப்படி தான்
விக்ரமை மணந்து வந்தாயிற்று.
அதென்னவோ பேருந்தில் விட்ட தூக்கம் இங்கே தொடர்ந்தது.
-தொடரும்.
