Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 10

வஞ்சிப்பதோரும் பேரவா! – 10

அத்தியாயம் 10

மௌனிகாவினால் இத்தனை நாட்கள், ஹர்ஷவர்தனின் உறக்கம் பறிபோனது என்னவோ உண்மை தான். ஆனால், இப்போதைய அவளின் அலைபேசி அழைப்பும், அவள் குரலிலிருந்த பதற்றமும், அழைப்பு துண்டிக்கப்பட்ட விதமும், அவன் உறக்கத்தை பறித்ததோடு அல்லாமல், அவனை மொத்தமாக உலுக்கியிருந்தது.

அவன் அலைபேசியை பார்த்தபடி உறைந்திருக்க, அவனை நிகழ்விற்கு அழைத்து வந்தது அவன் அலைபேசி ஒலி.

இப்போது அழைத்தது மௌனிகா அல்ல, அபி!

சொல்ல தெரியாத உணர்வுடன் தன்னிச்சையாக ஹர்ஷவர்தன் அழைப்பை ஏற்றிருக்க, “ஹலோ, ஏன்டா கொஞ்சமாச்சும் கல்யாணமானவன் மாதிரி பிஹேவ் பண்றியா! நைட் பத்து மணிக்கு எனக்கு கால் பண்ணா, உன் ஒய்ஃப் என்ன நினைப்பாங்க?” என்று எதிரிலிருப்பவன் பேசுவதற்கு கூட அவகாசம் கொடுக்காமல் படபடவென்று பேசினான் அபி என்கிற அபிஜித் மகாதேவ்.

மற்ற வேளையாக இருந்திருந்தால், பதிலுக்கு பதில் பேசியிருப்பானோ என்னவோ, சற்று முன் நடந்த நிகழ்வுகள் ஹர்ஷவர்தனை அத்தனை எளிதில் பதில் பேச விடவில்லை.

அவன் அமைதியாக இருப்பதை உணர்ந்த அபிஜித்திற்கு, சூழல் சரியில்லை என்பது புரிந்தது. காவல்காரன் அல்லவா, அந்த அனுபவம் அவனிற்கு உதவ, மெல்ல ஹர்ஷவர்தனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

“ஹர்ஷா, என்னாச்சு? கால் பண்ணிட்டு எதுக்கு அமைதியா இருக்க?” என்று அபிஜித் வினவ, அப்போதும் ஹர்ஷவர்தன் உறைநிலையிலிருந்து உருகவில்லை.

அபிஜித்தே அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் அழைக்க, அந்த சத்தத்தில் தான் நிகழ்விற்கு வந்தான் ஹர்ஷவர்தன்.

அபிஜித்தின் அழைப்பை ஏற்றாலும், மனம் மௌனிகாவின் அழைப்பை மீண்டும் ஒருமுறை ஓட்டிப் பார்க்க, “ஹர்ஷா, என்ன தான் ஆச்சு? எதையாவது சொன்னா தான தெரியும்!” என்று அபிஜித் கோபத்துடன் கூற, அவன் நினைவு அப்போது தான் மூளையை எட்டியது போல, “அபி மௌனிகாக்கு ஏதோ ஆபத்துன்னு நினைக்கிறேன்.” என்று தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் கூறினான்.

‘மௌனிகா’ என்ற பெயர் பரிச்சயம் தான் என்றாலும், ஹர்ஷவர்தனிடமிருந்து முழுதாக தகவல் சேகரிக்க வேண்டும் என்பதால், “ரிலாக்ஸ் ஹர்ஷா. என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு.” என்று பொறுமையாக பேசினான் அபிஜித்.

அன்றைய தினம் நடந்ததை கூறி முடித்த ஹர்ஷவர்தன், “என்னை மீட் பண்ண அன்னைக்கே, இப்படி ஒரு கால்… அதுவும் அவ பேசினதை வச்சு பார்த்தா, ஷீ வாஸ் சோ அஃப்ரைட். அந்த யஷ்வந்த் பத்தி தான் ஏதோ சொல்ல வந்தா. ஆனா, அதுக்குள்ள கால் கட்டாகிடுச்சு. லாஸ்ட்டா அவ பதட்டத்தை வச்சு பார்க்கும்போது, அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு மட்டும் தெளிவா தெரியுது.” என்றான்.

“சோ, உன் எக்ஸுக்கு பிராப்ளம்னு இந்த நடுராத்திரி புலம்பிட்டு இருக்க ரைட்?” என்று கோபம் பொதிந்த குரலில் கேட்டாலும், அதற்கு பதில் எதிர்பார்க்காதவனாக, “அவங்க டீடெயில்ஸ் இருந்தா சொல்லு, நான் பார்த்துக்குறேன். அண்ட், நீ இதுல தேவையில்லாம இன்வால்வ் ஆக வேண்டாம்.” என்றான் அபிஜித்.

“யஷ்வந்த் கொடுத்த கார்ட் இருக்கு. உனக்கு வாட்சப் பண்றேன். அப்பறம் அவங்க அவுட்டர்ல இருக்க ஒண்டர்பிளேஸ் ரிசார்ட்ல தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ரெண்டு நாள் அங்க தான்னு யஷ்வந்த் சொன்னான்.” என்ற ஹர்ஷவர்தன், “நானும் வரேன்டா அபி.” என்று கூற, “லூஸா நீ! இப்போ தான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு, அது ஞாபகம் இருக்கா? உன் எக்ஸை பார்த்ததும்…” என்று ஏதோ சொல்ல வந்த அபிஜித் அதை அப்படியே நிறுத்திவிட்டு, “இந்த ராத்திரி நேரத்துல என்னை பேச வைக்காத. நாளைக்கு மார்னிங் விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன்.” என்றான் பல்லிடுக்கில் கோபத்தை கட்டுப்படுத்தியவனாக.

“ப்ச், நீ சொல்ல வந்த மாதிரி எல்லாம் நான் யோசிக்க கூட இல்லை அபி. நீயே புரிஞ்சுக்கலைன்னா எப்படி?” என்று சோர்வுடன் கூறிய ஹர்ஷ்வர்தன், “நமக்கு தெரிஞ்சவங்களுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு ஒரு பதட்டம் வரும்ல அது தான். அது கூட தப்புன்னு சொன்னா எப்படி?” என்றான்.

அதை அபிஜித் மட்டுமல்ல, தண்ணீர் குடிக்க வந்த பிரியம்வதாவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

“சரி சரி போதும் உன் விளக்கம். விட்டுட்டு போனவளுக்கு கூட பாவம் பார்க்குற அக்மார்க் ஹீரோ தான் நீ! ஆனா, இதுல நீ இன்வால்வ் ஆகுறது நல்லா இருக்காது ஹர்ஷா. கொஞ்சமாச்சும் உன் ஒய்ஃப் பத்தி யோசிச்சு பாரு. என்னன்னு சொல்லிட்டு வருவ? என் முன்னாள் காதலிக்கு ஆபத்துன்னா? அது அவங்களுக்கு எவ்ளோ ஹர்ட்டிங்கா இருக்கும்னு யோசிச்சு பார்த்தியா?” என்று சரமாரியாக கேள்விகளை அபிஜித் அடுக்க, அதற்கு பதில் தான் இல்லை ஹர்ஷ்வர்தனிடம்.

அவன் மௌனத்தை குறித்துக் கொண்ட அபிஜித்தோ, “உறுதியில்லாத விஷயத்துக்கு எதுக்கு நம்ம மண்டையை போட்டு குழப்பிக்கணும்? முதல்ல, நாளைக்கு நான் போய் பார்த்துட்டு சொல்றேன். அப்பறம் பேசிக்கலாம்.” என்றான் அபிஜித்.

அபிஜித் கேட்ட கேள்விகளின் உபயத்தால், தான் போக வேண்டும் என்ற எண்ணத்தை ஹர்ஷவர்தன் மாற்றிக் கொண்டாலும், மௌனிகாவிற்கு ஆபத்து என்பதை உணர்ந்தும் காலதாமதம் செய்ய வேண்டாம் என்று எண்ணியவனாக, “இன்னைக்கே போக முடியாதா?” என்று கேட்க, “டேய் மணியை பார்த்தியா? பதினொன்னு! இந்த நடுராத்திரில பேய் மாதிரி நீ புலம்பிட்டு இருக்குறது பத்தாதுன்னு, என்னையும் அவங்க ரூம் கதவை தட்ட சொல்றியா?” என்று சொல்வதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே என்ற கோபத்தில் காவல் நிலையம் என்றும் பார்க்காமல் கத்தி விட்டான் அபிஜித்.

அதில், பாதி உறக்கத்தில் இருந்த இரு காவலர்கள் என்னவோ என்று பதறி நேராக அமர, அவர்களை முறைத்துக் கொண்டே குரலை தணித்து, “புரிஞ்சுக்கோ ஹர்ஷா. இந்த நேரத்துல விசாரிக்கிறது சரியா இருக்காது.” என்றான்.

அரை மனதாக ஒப்புக்கொண்ட ஹர்ஷவர்தனும் அழைப்பை துண்டித்து, நீள்சாய்விருக்கையிலேயே கண்மூடி சாய்ந்து கொண்டான்.

அவனையே படுக்கையறை வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்த பிரியம்வதாவின் மனதிற்குள் முனுக்கென்று வலித்தாலும், ஹர்ஷவர்தன் கூறியது போல மௌனிகாவிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்றும் மனிதாபிமானத்தில் தான் கணவன் பதற்றம் கொள்கிறான் என்றும் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

இதில், அவள் மனதில் உதித்த சந்தேகம் மனதிற்குள்ளே தேங்கி விட்டதை மறந்து தான் போனாள் பிரியம்வதா. இதன் விளைவுகள் பெரிதாகவும் இருக்கலாம்!

*****

என்னதான், ஹர்ஷவர்தனிடம் காலையில் சென்று பார்ப்பதாக கூறினாலும், அபிஜித்திற்குள் இருந்த காவலன், அவனை அப்போதே சென்று பார்க்குமாறு உந்தி தள்ளியது.

அதனாலேயே வீட்டிற்கு செல்லும்முன், ஹர்ஷவர்தன் கூறிய அந்த உல்லாச விடுதிக்கு வாகனத்தை செலுத்தினான்.

அங்கு வரவேற்பில் இருந்த பணியாளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு யஷ்வந்த்தை பற்றி விசாரிக்க, எதிரிலிருந்தவனோ, “சார், என்னாச்சு ஏதாவது பிரச்சனையா?” என்று பதறினான்.

அவன் உடல்மொழியை கவனித்துக் கொண்டே, “நோ ஜஸ்ட் அ விசிட். நோ பிராப்ளம். நான் காலைல வந்து பார்த்துக்குறேன்.” என்று அபிஜித் அந்த விடுதியை சுற்றி பார்த்துக் கொண்டே கிளம்ப எத்தனிக்க, “சார், யஷ்வந்த் சார் மதியமே செக்கவுட் பண்ணிட்டு போயிட்டாரு.” என்றான் அந்த பணியாள்.

“ஓஹ், என்ன ரீசன்னு தெரியுமா?” என்று யோசனையுடன் அபிஜித் வினவ, “அது தெரியல சார். நாளைக்கு வரைக்கும் ரூம் புக் பண்ணி இருந்தாரு. ஆனா, இன்னைக்கு மதியம் திடீர்னு செக்கவுட் பண்ணிட்டாரு.” என்றான் அவன்.

“ஓகே நான் வீட்டுக்கே போய் விசாரிச்சுக்குறேன்.” என்று கூறிவிட்டு அபிஜித் கிளம்பி விட்டான்.

ஏதோ சரியில்லை என்று மனம் கூறினாலும், இந்த நேரத்தில் யஷ்வந்த்தின் வீட்டிற்கு செல்வது சரியில்லை என்பதை உணர்ந்து தன் வீட்டை நோக்கி பயணப்பட்டான் அபிஜித்.

அன்றைய இரவு நேரம், ஹர்ஷவர்தனிற்கும் சரி, அபிஜித்திற்கும் சரி, மிக மெதுவாகவே கழிந்தது.

*****

அடுத்த நாள் காலை அதே நீள்சாய்விருக்கையில் அமர்ந்து அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷவர்தனை  பார்த்தபடியே தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் பிரியம்வதா.

ஆனால், அவனோ ஏதோ தியானத்தில் இருப்பவனை போல், கவனத்தை எங்கும் சிதற விடாமல் இருக்க, அவன் மனைவி தான் உள்ளுக்குள் மறுகினாள்.

ஒருபுறம் சாம்பாருக்கு தாளித்துக் கொண்டே, அவனையும் மனதிற்குள் தாளித்துக் கொண்டு தான் இருந்தாள்.

இதோ அதோவென, நேரமும் எட்டரையை தொட்டிருக்க, அப்போதும் அங்கிருந்து நகராதவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே அவன் முன் வந்து நின்றவள், “க்கும், ஹர்ஷா, நான் கிளம்பிட்டேன். சாப்பாடு ஹாட்பாக்ஸ்ல இருக்கு. மதியத்துக்கு சூட வச்சுக்கோங்க.” என்று ஒப்பிப்பதை போல சொல்லியவள் அங்கிருந்து நகர முயல, அப்போது தான் அவளின் நினைவே வந்தது ஹர்ஷவர்தனிற்கு.

முதல் நாள் அன்னை கூறியதும் ஞாபகம் வர, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவனோ, “வது, எப்படி போவ?” என்று கேட்டு வைக்க, ‘ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட!’ என்பதை போல பார்த்தவள், “கேப்” என்று ஒற்றை வார்த்தையை பதிலாக தந்தாள்.

அவளின் பார்வையும் ஒற்றை வார்த்தை பதிலும் ஹர்ஷவர்தனின் மனதில் குற்றவுணர்வை உண்டாக்க, முதல் நாள் இரவு அபிஜித் கேட்ட கேள்விகளும் மனக்கண்ணில் வந்து போக, தன்னையே நொந்து கொண்டவன், அதை சரி செய்ய வேண்டி, “வெயிட் வது. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். நானே டிராப் பண்றேன்.” என்று வேகமாக அறைக்குள் சென்று மறைந்தான்.

பிரியம்வதாவும் பிகு செய்யாமல், முன்னர் அவன் அமர்ந்திருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்து அவனிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

அவளின் காத்திருப்பு கைசேரும் நாள் வருவதற்குள் பல வித இன்னல்களிற்கு ஆளாக போகிறாள் என்று தெரியாமல் சட்டென்று பூத்த மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பாவை.

*****

காலை எட்டு மணிக்கெல்லாம் யஷ்வந்த் வீட்டை நோக்கி கிளம்பியிருந்தான் அபிஜித். கதிரவன் தன் மெல்லொளியை பூமியின் மீது படரவிட, அது அபிஜித்தின் வதனத்தில் பட, அதற்கு எதிர்வினையாக சிறு முக சுளிப்பை மட்டுமே காண முடிந்தது அவனிடம். அதுவும் தன்னிச்சை செயல் மட்டுமே!

அவன் மூளையோ எதை பற்றியோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தது. அதே யோசனையுடன் அவன் சென்று சேர வேண்டிய இடத்தையும் அடைந்திருந்தான்.

உள்ளே செல்வதற்காக வாயில் காவலாளியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு காத்திருந்த வேளையில், அந்த மாளிகையை சுற்றி பார்வையிட்டான். அந்த காவலனின் மூளை ஒவ்வொன்றையும் கவனமாக குறித்துக் கொண்டது.

அப்போது அவனின் கவனத்தை தடை செய்யும் விதமாக, “சார், நீங்க உள்ள போங்க.” என்று ஹிந்தியில் வாயில் காவலாளி சொல்லவும், அபிஜித்தும் மெல்ல உள்ளே நுழைந்தான்.

வாயிலிருந்து மாளிகை இருக்கும் இடத்தை வாகனத்தில் அடையவே முழுதாக ஒருநிமிடம் கடந்திருந்தது!

அபிஜித் அந்த மாளிகைக்குள் நுழைந்து, கூடத்தை அடைய, அதே நேரம் யஷ்வந்த் மாடியிலிருந்து தடதடவென்று இறங்கி வந்தான்.

“ஹலோ சார், நேத்தே என்னை தேடி ரிசார்ட்டுக்கு போயிருந்தீங்க போல. அங்க இருந்து கால் வந்துச்சு.” என்றவாறே வந்த யஷ்வந்த், அபிஜித்திடம் கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

முதல் கேள்விக்கு பதில் சொல்லாதவன், “ஹலோ, ஐ’ம் அபிஜித் மகாதேவ், ஏசிபி.” என்று அபிஜித் கூற, அதற்கு தெரியாத பாவனையை முகத்தில் படரவிட்டு, “ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ சார்?” என்றான் யஷ்வந்த்.

“மௌனிகா இருக்காங்களா? அவங்களை பார்க்க தான் வந்தேன்.” என்று அபிஜித் கூற, புருவ சுழிப்புடன், “நீங்க…” என்று யஷ்வந்த் இழுக்க, “காமன் ஃபிரெண்டு. உங்க கல்யாணத்துக்கு வரல. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.” என்றான் அபிஜித்.

அவனையே ஆராய்ச்சியாக பார்த்த யஷ்வந்த்தோ, “ஓஹ், ஃபிரெண்டா? நேத்துலயிருந்தே அவ ஃபிரெண்ட்ஸ் ஒவ்வொருத்தரையா பார்த்துட்டு இருக்கோம்.” என்று சிரித்தபடி கூறினாலும், அதில் மறைமுகமான எள்ளல் இருப்பதையும் அபிஜித் கவனித்தான் தான்.

“அட அப்படியா? கோ-இன்சிடன்ஸ் போல.” என்று அபிஜித்தும் அதற்கு ஒத்து ஊதிவிட்டு, கடிகாரத்தை பார்த்து தனக்கு நேரமாவதை போல பிம்பத்தை உருவாக்க, “ஒஹ் சாரி, உங்களை காக்க வச்சதுக்கு. மௌனி ரொம்ப டையர்ட்டா தூங்கிட்டு இருந்தா. ஜஸ்ட் அ மினிட்.” என்றவன், தானே அறைக்கு சென்று அவளை அழைத்து வந்தான்.

மௌனிகாவின் வதனம் சோர்வில் முக்குளித்து கிடக்க, யஷ்வந்த் மீது சாய்ந்து கொண்டே மெல்ல நடந்து வந்தாள்.

அந்த இடைவெளியிலேயே அவளை மொத்தமாக ஆராய்ந்த அபிஜித், புறக்காயங்கள் எதுவுமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டான்.

அதற்குள் அவளை சமீபித்திருந்த மௌனிகா யாரென்று பார்க்க, உடனே சூழ்நிலையை கையிலெடுத்துக் கொண்டவன், “ஹே மௌனிகா, உன் மொபைலுக்கு என்னாச்சு? எத்தனை முறை கால் பண்றது? என்னாச்சோன்னு பதறி போய், நேத்து நைட் ரிசார்டுக்கு போய்… ப்ச், உன் கல்யாணத்துக்கு வரலன்னு கோபம் இருக்க வேண்டியது தான். அதுக்காக இப்படியா?” என்று சரளமாக பேசி, அவளிற்கு மட்டும் தெரியும் வகையில் பாவனைகளை காட்ட, முதலில் அதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க, அதே சமயம் யஷ்வந்த்தோ, “பேபிடால், மிஸ்டர். அபிஜித் பத்தி நீ எதுவும் என்கிட்ட சொல்லவே இல்ல. பாரேன் உனக்கு ஏசிபி ஃபிரெண்டு எல்லாம் இருக்காங்க.” என்றான்.

அவன் கூற்றில் இருந்தது பெருமிதமா இல்லை கேலியா என்று சட்டென்று பிரித்தறிய முடியவில்லை இருவராலும்.

மௌனிகா இருக்கும் சூழலை கிரகித்து கொண்டிருக்க, யஷ்வந்த்தே மீண்டும், “அவளோட மொபைல் நேத்து நைட்டு கீழ விழுந்து உடைஞ்சுருச்சு சார். இன்னைக்கு தான் ரிப்பேருக்கு கொடுக்கணும். நீங்க இனிமே, என்னை கான்டேக்ட் பண்ணுங்க சார்.” என்று அவன் தனிப்பட்ட அலைபேசி எண்ணை அபிஜித்திடம் கொடுத்தான்.

அதில், ‘மௌனிகாவை தனியாக தொடர்பு கொள்ள கூடாது’ என்ற எச்சரிக்கை அப்பட்டமாகவே தெரிந்தது.

அதை கண்டு கொள்ளாத அபிஜித்தோ, “எப்படி மொபைல் உடைஞ்சது?” என்று மௌனிகாவிடம் கேட்க, அதற்கு பதிலாக, “மேடம், நேத்து நைட்டு இருட்டுல எதையோ பார்த்து பயந்து கீழ விழுந்துட்டாங்க. நல்லவேளை, இவளுக்கு எந்த அடியும் இல்ல. இவளோட அடியையும் அந்த மொபைல் வாங்கிடுச்சு போல.” என்று கைவளைவில் இருந்த மனைவியை பார்த்துக் கொண்டே கூறினான் யஷ்வந்த்.

“என்ன சார், என் ஃபிரெண்டை பேசவே விட மாட்டிங்குறீங்க?” என்று அபிஜித் கேலியாக கூறுவது போல கூற, “ஓஹ் சாரி சாரி, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. உங்களுக்கு குடிக்க கொண்டு வரேன்.” என்ற யஷ்வந்த் கவனமாக மௌனிகாவை நீள்சாய்விருக்கையில் அமர வைத்துவிட்டு, “காஃபி ஆர் டீ?” என்று அபிஜித்திடம் கேட்க, “பிளாக் காஃபி பிளீஸ்.” என்றான் அபிஜித்.

யஷ்வந்த் அந்த இடத்தை விட்டு நகரவும், கிடைத்த தனிமையை பயன்படுத்திக் கொண்டு, “மிசஸ். மௌனிகா, உங்களுக்கு ஏதாவது ஆபத்துன்னு நீங்க ஃபீல் பண்றீங்களா?” என்று அபிஜித் வினவ, மௌனிகாவோ குனிந்த தலை நிமிராமல், ‘இல்லை’ என்று தலையை மட்டும் அசைத்தாள்.

“ப்ச், என்னை பார்த்து, வாயை திறந்து சொல்லுங்க. உங்க ஹஸ்பண்ட்டால உங்களுக்கு எதுவும் ஆபத்தா? அவரு உங்களை மிரட்டினாரா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க.” என்று மெல்லிய குரலில் அபிஜித் கேட்க, “நோ, அப்படியெல்லாம் எதுவும் இல்ல. அவரு என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறாரு.” என்று மெல்லிய குரலில் சோர்வுடன் கூறினாள் மௌனிகா.

அத்தனை நேரம் யஷ்வந்த் சென்ற திசையில் பார்வையை பதித்தபடி அபிஜித் விசாரித்திருக்க, மௌனிகாவின் பதிலில் அவளை திரும்பி ஆழ்ந்து பார்த்தவன், “அப்பறம் எதுக்கு நைட்டு நேரத்துல ஹர்ஷாக்கு கால் பண்ணீங்க?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க, “தெரியாம கால் பண்ணிட்டேன் போதுமா!” என்று மௌனிகாவும் பதற்றமாக பேசினாள்.

அதே சமயம், இருவருக்குமான பானத்துடன் யஷ்வந்த் வந்துவிட, அவர்களின் பேச்சுவார்த்தையும் முடிவிற்கு வந்தது.

அதன் பிறகு சிறிது நேரம் யஷ்வந்த்துடன் பேசிய அபிஜித் கிளம்ப எத்தனிக்க, “அடிக்கடி வாங்க அபிஜித். உங்களை மாதிரி ஃபிரெண்ட்ஸை பார்க்கும்போது என் பேபிடாலோட ஃபேஸே ஜொலிக்குது.” என்று யஷ்வந்த் கூற, அவனிற்கு ஒரு தலையசைப்பை வழங்கிவிட்டு வெளியேறினான் அபிஜித்.

யஷ்வந்த் மாளிகையிலிருந்து வெளியேறிய அபிஜித்தின் மனமோ, மௌனிகாவுடனான உரையாடலை எண்ணிப் பார்த்தது.

என்னதான் அவள் ‘ஆபத்து இல்லை’ என்று கூறினாலும், அவளின் உடல்மொழி வேறு கதை கூறியது. இருப்பினும், உறுதியாக தெரியாத எதையும் இப்போதைக்கு ஹர்ஷவர்தனிடம் கூற வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டான் அபிஜித்.

*****

சொன்னதை போலவே ஐந்து நிமிடங்களில் வேகவேகமாக தயாராகி வந்த ஹர்ஷவர்தன், மனைவியை அழைக்க, பிரியம்வதாவும் எட்டிப் பார்த்த சந்தோஷத்துடன், அவனுடன் கிளம்பினாள்.

கீழே வந்தவர்கள் கண்டது, லாவண்யாவின் இறுதி ஊர்வலத்தை தான்.

அதைக் கண்ட பிரியம்வதா, அத்தனை நேரமிருந்த மகிழ்ச்சி வடிய, அவ்விடத்தை துக்கமும் பதற்றமும் ஆட்கொண்டு விட, ஹர்ஷவர்தனின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்டு, குனிந்த தலை நிமிராமல் நடந்தாள்.

அவளின் செய்கைகளை பார்த்த ஹர்ஷவர்தனோ, இதைப் பற்றி கணேஷிடம் பேச வேண்டும் என்று எண்ணியபடி, அவளை அரவணைத்தபடி அவளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்.

தொடரும்…

9 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *