Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 11

வஞ்சிப்பதோரும் பேரவா! – 11

அத்தியாயம் 11

பிரியம்வதாவை அலுவலகத்தில் இறக்கி விட சென்ற ஹர்ஷவர்தன், நேராக அபிஜித்தை காண சென்றான்.

இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்துக் கொள்ள, காலை உணவை மௌனமாக முடித்ததும் தான் மௌனிகாவை பற்றி பேச ஆரம்பித்தனர்.

அதுவரை தன்னை அடக்கி வைத்திருந்த ஹர்ஷவர்தனோ, “என்னாச்சு அபி? அவ ஏதாவது சொன்னாளா?” என்று ஹர்ஷவர்தன் வினவ, உதட்டை பிதுங்கிய அபிஜித்தோ, “அவங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையாம். அவங்க ஹஸ்பண்ட் அவங்களை ரொம்ப நல்லா பார்த்துக்குறாராம்.” என்றான் எள்ளல் வழிந்த குரலில்.

“என்ன? அப்பறம் எதுக்கு எனக்கு கால் பண்ணி அப்படி பேசணும்?” என்று ஹர்ஷவர்தன் குழம்ப, அவனை அப்படியே விட மனமின்றி, “எனக்கென்னமோ, இந்த விஷயத்தை அப்படியே விடுறது தான் நல்லதுன்னு தோணுது ஹர்ஷா. என்ன இருந்தாலும், அவங்க மேரிட் கப்பில்ஸ். அண்ட் ஷீ இஸ் நாட் அ டாட்லர். அவங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா அவங்களே ஃபேஸ் பண்ணட்டும். நீ இன்வால்வ் ஆகாத.” என்று அறிவுரை கூறினான் அபிஜித்.

“ப்ச், நானா அவங்க குடும்பத்துக்குள்ள போனேன் அபி? நீயே இப்படி என்னை பேசுறது சங்கடமா இருக்கு டா.” என்று புலம்பிய ஹர்ஷவர்தன், “என்னத்துக்கு அவ என் கண்ணுல படனும்? என்னத்துக்கு கால் பண்ணி பயமா இருக்குன்னு புலம்பனும்?” என்று விரக்தியாக கூறினான்.

அவனை தோளோடு அணைத்துக் கொண்ட அபிஜித், “அவங்களுக்குள்ள சண்டையா இருக்கலாம் ஹர்ஷா. அதை ஃபேஸ் பண்ண தெரியாம, திடீர்னு உன்னை பார்த்ததும், உனக்கு கால் பண்ணியிருக்கலாம். அப்பறம் அவங்களே பேசி சண்டையை முடிச்சுருக்கலாம். எனக்கென்னவோ அந்த யஷ்வந்த் ரொம்ப பொஸஸிவ்னு தோணுது. அதனால வந்த சண்டைல, அவங்களே பேசி சமாதானம் ஆகியிருக்கலாம்.” என்று கூற, ஹர்ஷவர்தனும் அதில் சமாதானமானான்.

பின் அபிஜித்தே, “இதை விடு. உன் கல்யாண வாழ்க்கை எப்படி போகுதுன்னு சொல்லு.” என்று பேச்சை மாற்றி விட, ஹர்ஷவர்தனின் முகமோ குற்றவுணர்விக்கும் குழப்பத்திற்கும் இடையே நாட்டியம் ஆடியது.

“உன் மூஞ்சியை பார்த்தாலே சரியான சொதப்பல்னு தெரியுது.” என்று அபிஜித் அவனை கேலி செய்ய, “என் பொழப்பு சிரிப்பா போச்சுல உனக்கும் அந்த எருமைக்கும்.” என்று அங்கில்லாத பிரஜனையும் சேர்த்து திட்டினான்.

பின், அவனே பிரியம்வதாவை பற்றி அவனிற்கு இருக்கும் குழப்பங்களை கூற, “என்னதான் அவ பேசுனாலும், எதையோ மறைக்குறது போல இருக்கு அபி. திடீர்னு அவ முகம் டல்லாகிடுது. சின்ன வயசுல இப்படி இல்ல.” என்றான் யோசனையுடன்.

அவன் கூறுவதை கேட்ட அபிஜித்தோ, “அவங்க சிஸ்டர் இறந்துட்டாங்க தான. அதை பத்தி உனக்கு தெரியுமா? மேபி, அதுல அவங்க பாதிக்கப்பட்டுருக்கலாம்ல.” என்று கூற, “இருக்கலாம். அவ என்னை லவ் பண்ணான்னே மாமா சொன்னதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது.” என்றவனின் நினைவு, ஹைதராபாத்தில் அவர்களின் பெற்றோர் இருவரையும் குடிவைத்து சென்ற அன்று கணேஷ் பேசிய தருணத்திற்கு சென்றது.

*****

“தம்பி, கல்யாணம் முடிஞ்சு பொண்ணுங்களை அவங்க புகுந்த வீட்டுல விட்டுட்டு போற எல்லா பெத்தவங்களும் சொல்றது தான். என் பொண்ணை பார்த்துக்கோங்க தம்பி. இது உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல. என் பொண்ணு மேல இருக்க பாசத்துல சொல்றேன். உங்களுக்கு எப்படின்னு தெரியல. ஆனா, உங்களை கல்யாணம் பண்ணலன்னா, என் பொண்ணு யாரையும் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டா. அதான், இளங்கோ கேட்டதும் ஒத்துக்கிட்டேன். இதுக்கு மேல உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை பத்தி நான் பேசக் கூடாது. இனி எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி முடிவெடுங்க.” என்று கணேஷ் கூற, அவரின் ஐந்தாம் வாக்கியத்தில் திகைத்தவன் தான், அதன் பிறகு அவர் கூறியவற்றை கேட்கவில்லை. கேட்டிருந்தால், பின்னால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்திருப்பானோ!

ஹர்ஷவர்தனின் அதிர்ந்த முகத்தை பார்த்த கணேஷ், “உண்மை தான் தம்பி. பாப்பா, யாருக்கும் தெரியாம உங்க மேல காதலை வளர்த்து இருக்கா. ஒரு கட்டத்துல, அது நிறைவேறாதுன்னு தெரிஞ்சு, அவளுக்குள்ளேயே புதைச்சுக்கிட்டா போல. எப்பவும், என்கிட்ட எதையும் மறைக்காத என் பொண்ணு, இதை மறைச்சுட்டா. அவளோட காதல் தெரிய வந்தப்போ… அது நடக்காதுன்னு புரிஞ்சதுக்கு அப்பறம், நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல.” என்றார்.

*****

கணேஷ் கூறியதை யோசித்து பார்த்தவனிற்கு, அவரும் எதையோ கூறாமல் விட்டதை போல தோன்ற, அவரிடம் அதைப் பற்றி பேச வேண்டும் என்ற தன் முடிவை திடமாக்கிக் கொண்டான் ஹர்ஷவர்தன்.

அவனின் கவனத்தை வெற்றிகரமாக வேறு விஷயத்தில் திருப்பிய திருப்தியுடன், அவனிடமிருந்து விடைபெற்று சென்றான் அபிஜித்.

வீட்டிற்கு வந்தவுடன், தாமதிக்க விரும்பாமல் ஹர்ஷவர்தன் கணேஷிற்கு அழைப்பு விட, அவரோ பதறியபடி அழைப்பை ஏற்றார்.

அழைப்பை ஏற்று, ‘ஹலோ’ கூட சொல்லாமல், “என்ன தம்பி, இந்த நேரத்துல… ஏதாவது பிரச்சனையா?” என்று பதற்றம் நிறைந்த குரலில் அவர் கேட்க, அப்போது தான் நேரத்தை பார்க்காமல் அழைத்து விட்ட மடத்தனத்தை உணர்ந்தான் ஹர்ஷவர்தன்.

‘ப்ச், உன் வேலையையும் ஒழுங்கா பார்க்காம, அவரோட வேலையையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க!’ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன், ‘ஈவினிங் வதுவை வச்சுட்டு பேச முடியாது. இப்போவே பேசுறது தான் பெட்டர்!’ என்றும் யோசித்தவன், “மாமா, சாரி உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று சம்பிரதாயமாக கேட்டான்.

“அதெல்லாம் இல்ல தம்பி. நீங்க சொல்லுங்க என்ன விஷயம்?” என்று பதற்றம் குறையாமலேயே அவர் பேச, “வதுவை பத்தி பேசணும்… சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும் மாமா. அவ இருக்கும்போது பேச முடியாது. அதான்…” என்று இழுக்க, மகளை பற்றி அறிய விரும்பும் மருமகனை எண்ணி மகிழ்ந்தாலும், ஒரு ஓரத்தில் என்ன விஷயம் என்று பயம் இருக்கத்தான் செய்தது கணேஷிற்கு.

“கேளுங்க தம்பி. எனக்கு தெரிஞ்சதை நான் சொல்றேன்.” என்றார் கணேஷ்.

“வதுவோட அக்கா… இறந்தப்போ, அவ ரொம்ப சஃபரானாளா மாமா?” என்று தயக்கத்துடன் அவன் வினவ, அதைக் கேட்டு வேதனையில் முகம் சுருங்க, ஒரு நிமிடம் முழுதாக அமைதியை கடன் வாங்கி கொண்ட கணேஷ், தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“சின்ன வயசுல இருந்தே தாயா பிள்ளையா இருந்தவங்க தம்பி. திடீர்னு அவ போனதும், பிரியா ரொம்பவே உடைஞ்சு போயிட்டா. ஆனா, எதையும் வெளிப்படுத்தாம, உள்ளுக்குள்ளேயே அடக்கி வச்சு, எங்களை எல்லாம் பயமுறுத்திட்டா. அப்பறம் டாக்டர் குடுத்த ட்ரீட்மெண்டும், வள்ளியோட பேச்சும் தான் அவளை அதுலயிருந்து வெளி கொண்டு வந்துச்சு.” என்ற கணேஷ், “இதை வள்ளி உங்ககிட்ட சொல்லியிருப்பான்னு நினைச்சேன் தம்பி.” என்றவரின் குரல் இப்போது குற்றவுணர்விற்கு மாறியிருக்க, “நான் இதை உங்ககிட்ட கேட்டது, உங்களை பிளேம் பண்ண இல்ல மாமா.” என்று தெளிவாக கூறினான் ஹர்ஷவர்தன்.

பின்னர் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வுகளை, சுருக்கமாக கூற வேண்டியதை மட்டும் ஹர்ஷவர்தன் கூற, “ஆமா தம்பி, யாராவது இறந்து போன நியூசோ, தகவலோ அவளுக்கு தெரிய வந்தா, இப்படி தான் தனக்குள்ளேயே சுருங்கி போயிடுவா. கொஞ்ச நேரத்துல, அவளே அதுலயிருந்து இருந்து மீண்டும் வந்துடுவா.” என்ற கணேஷிற்கு இப்போதும் குற்றவுணர்வு குறையாமல் இருக்க, “இனிமே, நான் பார்த்துக்குறேன் மாமா.” என்றவனோ, தயக்கத்துடன், “பிரார்த்தனா பத்தி நான் அப்போவே விசாரிச்சுருக்கணும் மாமா. அவளுக்கு எப்படி… என்னாச்சு?” என்று சங்கடமாக வினவினான்.

அவன் சங்கடத்தை பொருட்படுத்தாத கணேஷோ ஒரு பெருமூச்சுடன், “முதல்ல கொலைன்னாங்க, அப்பறம் ரே… க்கும்… ரேப் பண்ணி கொலை செஞ்சுருக்காங்கன்னு சொன்னாங்க… அப்பறம் கேங் ரேப்புன்னு சொன்னாங்க…” என்னும் போதே அவரின் குரல் கரகரத்து விட்டது.

அதில் ஹர்ஷவர்தனின் குற்றவுணர்வு பெருக, அவன் அமைதியாக இருந்தான். மகளை காமுகர்களிடம் தொலைத்த அந்த தந்தைக்கு என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும். காலங்கள் ஓடினாலும், காயங்கள் மாறாதல்லவா!

“அக்காவும் தங்கச்சியும் டவுனுக்கு போயிட்டு வந்துட்டு இருந்தாங்க. பிரியாவோட கம்மல் கீழ விழுந்துடுச்சுன்னு அவ அதை தேடுறப்போ தனியா இருந்த தனாவை யாரோ கடத்திருக்காங்க. அதை பார்த்த பிரியா மயங்கி அங்கேயே விழுந்துட்டா போல. அவளுக்கு எதுவும், யாரையும் ஞாபகமும் இல்ல. ஏதோ வெளிச்சம் இல்லாத இடத்துல மயங்கி விழுந்ததால, அவ தப்பிச்சா இல்லன்னா…” என்றவரின் குரல் நடுங்க, ஹர்ஷவர்தனின் உடலும் தூக்கிப்போட்டது.

‘இல்லன்னா…’ என்று துடித்த மனதை கட்டுப்படுத்தியவனாக, கணேஷ் கூறியதை கவனிக்க ஆரம்பித்தான்.

“குற்றவாளிகளை கண்டுபிடிக்கலையா மாமா?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “பேருக்கு எங்ககிட்ட கம்ப்லைன்ட் எழுதி வாங்குனாங்க தம்பி. ஒரு மாசத்துக்கு அப்பறம் கண்டுக்கவே இல்ல. கேட்டா, பொண்ணுங்களை ராத்திரி நேரம் தனியா அனுப்புனது என் தப்புன்னு என்னையே குத்தம் சொன்னாங்க. இதுல, என் பொண்ணு யாரையோ நம்பி ஏமாந்துட்டா, ரெண்டாவது பொண்ணையாச்சும் ஒழுங்கா பார்த்துக்கோன்னு என்கிட்டேயே கேவலமா பேசுனாங்க. அதுக்கு மேல அவங்ககிட்ட போராட தெம்பில்ல தம்பி. போனவளை நினைச்சு, இருக்கவளை விட்டுட கூடாதே!” என்று கவலையுடன் கூறினார் கணேஷ்.

அவர் கூறியவற்றை கேட்ட ஹர்ஷவர்தனிற்கு இந்த சமூகம் மீது தான் கோபம் உண்டானது. குற்றவாளிகளை விடுத்து பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்கும் சமூகம் தானே இது!

அதற்காக வீதியில் இறங்கி புரட்சி செய்யவா முடியும்? எதார்த்தத்தில் அது சாத்தியமா? முதலில் வீறுகொண்டு ஏதாவது செய்தாலும், பணமுதலைகளின் பலம் ஒவ்வொரு செயலையும் முட்டுக்கட்டை போடும் போது, தோல்வியை தானே எளிதாக தொட்டு விட முடியும்!

இம்மாதிரி சூழ்நிலையில், சாதாரண மக்கள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். அது சம்பந்தப்பட்டவர்களை மனத்திற்குள்ளும், சமூக வெளிகளிலும் திட்டுவது. அதை தான் ஹர்ஷவர்தனும் செய்தான்.

அதனுடன், குறைந்தபட்சம் தன்னை சுற்றி இருப்பவர்களையாவது பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்தான்.

கணேஷ் ஏதோ கூற, தன் நினைவுகளிலிருந்து வெளி வந்த ஹர்ஷவர்தன், “இனி, வதுவை நான் நல்லா பார்த்துப்பேன் மாமா.” என்று அவருக்கு வாக்குறுதி அளிக்க, அப்போது அவனிற்கு தெரியவில்லை, அவனின் செயல்களே அவளை ஆபத்தை நோக்கி செலுத்தும் என்பதை!

ஒருபக்கம் கரம் அதன்போக்கில் வேலை செய்தாலும் மனமோ பிரியம்வதாவை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தது.

அவளின் செயல்கள் பலவற்றிற்கு கணேஷிடமிருந்து காரணம் தெரிய வந்தாலும், சில செயல்கள் மர்மமாக தான் இருந்தன. அதில் ஒன்று, அவன் தொடுகையை அவள் தவிர்ப்பது!

‘ஒருவேளை, அவளையும்…’ என்று அவன் நினைக்கும் போதே, அது செல்லும் பாதையை விரும்பாமல் அங்கேயே அதை நிறுத்தி, ‘எதுவா இருந்தாலும், அதுலயிருந்து அவளை வெளிக் கொண்டு வரணும்.’ என்று எண்ணிக் கொண்டான்.

அதன்படியே நாட்களும் நகர, இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல உறவு மலர்ந்தது. சிறு சிறு பேச்சுக்கள், சிறு சிறு சிரிப்புகள் என்று அழகாகவே நகர்ந்தன அவர்களின் நாட்கள்.

இதில், சிறு சண்டைகளும் அதன் பிறகான சமாதானங்களும் அடங்கும்!

இத்தனை நடந்தும், படுக்கை என்னவோ தனித்தனி தான்!

முதலில் முடிவெடுத்தது ஹர்ஷவர்தன் தான் என்றாலும், பிரியம்வதாவின் தவிர்ப்பினால் அம்முடிவை மாற்ற முயற்சிக்கவில்லை. அதற்கு அவசரமும் காட்டவில்லை.

அவனின் மாற்றத்தை அவள் உணர வேண்டும் என்று நினைத்தவன், சிலவற்றை உணர்வதை விட, வார்த்தைகளின் மூலம் உறுதிபடுத்துவதே சிறந்தது என்பதை மறந்து விட்டான். விளைவு !!!

மாதம் ஒன்று விரைவாக கடந்திருக்க, அன்றும் சண்டையிலேயே அவர்களின் பொழுது விடிந்தது.

“ஹர்ஷா, நேத்தே பாத்திரம் எல்லாம் கழுவி இருக்கலாம்ல. ப்ச், இப்போ பால் காய்ச்ச பாத்திரம் இல்ல.” என்று பிரியம்வதா சமையலறையிலிருந்து கத்த, “ஷப்பா, எதுக்கு இப்போ இவ்ளோ சத்தம்? நேத்து நைட்டு கால்ல இருந்தேன்ல. வேலை முடியவே ஒரு மணியாகிடுச்சு. அது உனக்கும் தெரியும். தெரிஞ்சுட்டே கேட்டா நான் என்ன செய்ய?” என்றவாறு அவள் கேட்ட பாத்திரத்தை கழுவி தந்தான்.

“ச்சு, எல்லாம் இந்த அத்தையால! வேலையெல்லாம் சரியா சொல்லி வளர்த்துருக்கணும்.” என்று பிரியம்வதா முணுமுணுக்க, பாத்திரத்தை கொடுக்க வந்தவன், “என்ன சொன்ன? சரியா கேட்கல.” என்று அருகில் வர, சட்டென்று ஒரு ஒதுக்கம் அவளிடம்.

அதில், அவனை விட அவள் முகம் தாம் சுருங்கிப் போனது.

ஒதுங்கி விடக்கூடாது என்று அவள் எத்தனையோ முயற்சித்தும், அவளின் உடல் அம்முடிவை ஏற்கவில்லையே!

அதை சமாளிக்க எண்ணி, “மேடம் கனவு காணாம சீக்கிரம் காஃபி போடுங்க. ஷாப்பிங் வேற போகணும்ல.” என்று பேச்சை மாற்றி, அவளை அந்நினைவுகளிலிருந்து வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்து விட்டான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், அந்த புகழ்பெற்ற பேரங்காடிக்குள் நுழைந்தனர் ஹர்ஷவர்தன் மற்றும் பிரியம்வதா ஜோடி.

அவர்களின் மகிழ்ச்சிக்கான ஆயுட்காலம் முடிந்ததை குறிக்கும் விதத்தில், அதே பேரங்காடிக்குள் நுழைந்தாள் மௌனிகா.

தொடரும்…

7 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *