Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 14

வஞ்சிப்பதோரும் பேரவா! – 14

அத்தியாயம் 14

இரவு நேர பேச்சுக்களினாலும், கேள்விப்பட்ட தகவல்களினாலும் உறக்கத்தை தொலைத்திருந்த ஹர்ஷவர்தன், அதிகாலையில் தான் தூங்கியிருந்தான்.

மீண்டும் அவன் நீள்சாய்விருக்கையில் மஞ்சம் கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன பிரியம்வதா அவனிடம் சொல்லிக் கொள்ளாமலேயே பணிக்கு சென்று விட்டாள்.

அப்போதும் அவன் கண் விழிக்க வில்லை. அலைபேசியின் தொடர் வைப்ரேஷன் சத்தம் கூட அவன் உறக்கத்தை கலைக்க முயன்று தோல்வி கண்டிருக்க, சற்று முன்னர் பல முறை அழைத்த நபரிடமிருந்து செய்தி வர, தொடர்ந்து காதருகே கேட்ட சத்தம், ஹர்ஷவர்தனை லேசாக அசைய செய்ய, அவன் படுத்திருப்பது நீள்சாய்விருக்கை என்பதை மறந்தவனாக உருண்டு கீழே விழுந்திருந்தான்.

அதில் அவன் அலைபேசியும் அவனுடனே கீழே விழுக, “ப்ச்…” என்று சோம்பலாக கூறியவாறே எழுந்து அமர்ந்தான்.

அவனிற்கு முன்னிருந்த மேஜையில், பிரியம்வதா பணிக்கு கிளம்பி விட்டதாக துண்டு தாளில் எழுதியிருக்க, வேகமாக அலைபேசியில் அவளை அழைக்க முயன்று தோற்று போனான்.

அவள் தான் அவனை ‘பிளாக்’ செய்து விட்டாளே.

அதில் சலித்துக் கொண்டவன், புலனத்தில் செய்தி அனுப்ப எண்ணி அதை திறக்க, மௌனிகாவிடமிருந்து செய்தி வந்திருப்பதை பார்த்தான்.

மேலும், அவளிடமிருந்து பல தவறிய அழைப்புகள் வந்திருக்க, என்னவோ என்று பதறியபடி அவளின் செய்தியை பார்த்தான்.

‘ஹர்ஷா, சாரி ஃபார் டிஸ்டர்ப்பிங் யூ. இட்ஸ் அர்ஜெண்ட்!’ என்ற செய்தியை மௌனிகா அனுப்பியிருக்க, உடனே அவளிற்கு அழைத்து விட்டான்.

அழைப்பு சென்று கொண்டிருக்க, சில நொடிகளில் மௌனிகாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, பதற்றம் கூடிப் போனது ஹர்ஷவர்தனிற்கு.

உடனே, அபிஜித்திற்கு அழைத்து விஷயத்தை கூற, அவனிற்குமே தவறாக ஏதாவது நடந்திருக்குமோ என்ற யோசனை தான்.

“ஹர்ஷா பதட்டப்படாத. முதல்ல, நான் யஷ்வந்த் வீட்டுக்கு போய் என்னன்னு பார்க்குறேன். நீ அவசரப்பட்டு எதுவும் செய்யாத.” என்று எச்சரித்து விட்டு, ‘யஷு பேலஸை’ நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்தான் அபிஜித்.

அவன் அந்த மாளிகையை அடைந்த அதே நேரம், அம்மாளிகையிலிருந்த அனைவரும் பரபரப்பாக காணப்பட்டனர்.

அதற்கு காரணமான யஷ்வந்த்தோ நடுகூடத்தின் மொத்த பரப்பளவையும் அளப்பவனை போல அங்குமிங்கும் நடந்தபடி, அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

உள்ளே நுழைந்த அபிஜித்திடம் தலையசைத்த யஷ்வந்த், அவனின் உரையாடலை முடித்துக் கொண்டு, அபிஜித் நோக்கி வந்தவன் கேள்வியாக அவனை பார்க்க, அதற்கு விடையாக, “ஹாய் யஷ்வந்த், என் எங்கேஜ்மெண்டுக்கு மௌனிகாவை இன்வைட் பண்ணலாம்னு வந்தேன்.” என்றான் அபிஜித் சுற்றிலும் பார்வையிட்டபடி.

“ஒஹ், வாங்க அபிஜித்.” என்று வரவேற்ற யஷ்வந்த்தின் குரல் சுரத்தின்றி ஒலிக்க, “எனி பிராப்ளம் யஷ்வந்த்?” என்றான் அபிஜித்.

“ஹ்ம்ம், மார்னிங் அம்மாவை பார்க்க போறேன்னு ஏர்-போர்ட் போன மௌனிகாவை காணோம் அபிஜித். அத்தை கால் பண்ணி, இன்னும் அவ அங்க வரலன்னு சொன்னப்போ தான் விஷயமே தெரிய வந்துச்சு. அதான், நம்பகமான ஒருத்தர் கிட்ட ஃபிளைட் டீடெயில்ஸ் கேட்டதுல, அவ இன்னைக்கு ஃபிளைட் போர்ட் பண்ணவே இல்லன்னு சொல்லிட்டாரு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.” என்று கூறியவாறு தளர்ந்து அமர்ந்து விட்டான் யஷ்வந்த்.

முன்தினம், யஷ்வந்த்தை பற்றி தெரிய வந்திருக்கா விட்டால், அபிஜித்தே கூட அவனை நம்பியிருப்பானோ என்னவோ! அப்படி இருந்தது அவனின் ஒவ்வொரு அசைவுகளும், பாவனைகளும்!

அவனை உற்று பார்த்தபடி, “நீங்க கூட போகலையா யஷ்வந்த்?” என்று அபிஜித் வினவ, “ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு அபிஜித். அதை முடிச்சுட்டு, ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம்னு எவ்ளோவோ சொன்னேன். எங்க கேட்டா? இப்போவே கிளம்பி போகணும்னு பிடிவாதம்! அத்தை கூட திட்டிட்டாங்க. அதுல அவ அப்செட்டாக, அதை பார்க்க முடியாம தான், அவளை தனியா அனுப்புனேன். ஆனா, அவளை தனியா அனுப்பி இருக்கக் கூடாதுன்னு மூளை இப்போ சொல்லுது!” என்றான் யஷ்வந்த் விரக்தியாக.

“ஓஹ், ஃபிளைட் ஏத்தி விடக் கூட போகலையா?” என்ற அபிஜித், அதற்கான பதிலை எதிர்பார்க்காமல், “இங்க இருக்க சர்வண்ட்ஸை நான் விசாரிக்கலாமா?” என்று காவலனாக தன் பணியை பார்க்க ஆரம்பித்தான்.

அதற்கு சம்மதித்த யஷ்வந்த் ஒரு ஓரமாக அமர்ந்து விட்டான்.

அபிஜித், காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி, அவன் உதவிக்காக ஆட்களை வரவழைத்துக் கொண்டவன், யஷ்வந்த் வீட்டில் பணிபுரிபவர்களை விசாரிக்க ஆரம்பித்தான்.

அதில் சிலர், காலையில் சம்பவம் நடந்த போது வீட்டில் இல்லை என்று கூறிவிட, மற்றவர்களோ, யஷ்வந்த் கூறியதை தான் அவர்களின் கண்ணோட்டத்தில் கூறினர்.

“அவங்க ரெண்டு பேருக்குள்ள நடந்த பேச்சுவார்த்தை உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?” என்று அதற்கும் சந்தேகம் கொண்டு அபிஜித் வினவ, “சார், ஹால்ல நடந்த சண்டை. நாங்க கண்டுக்காம இருக்கணும்னு நினைச்சாலும், காதுல விழுந்ததை தடுக்க முடியல.” என்றார் ஒருவர் தெலுங்கில்.

“ஓஹ், அப்போ சண்டை நடந்துச்சா?” என்று அபிஜித் துருவ ஆரம்பிக்க, “அப்படி தான் சார் தெரிஞ்சுது. என் வீட்டுக்கு நான் எப்போ வேணும்னாலும் போவேன்னு அம்மா கோபமா பேசுனாங்க. ஐயா, அவங்களை சமாதானப்படுத்துற மாதிரி பேசுனாரு சார்.” என்றார் அவர்.

மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேறு எந்த முக்கிய தகவல்களும் கிடைக்கவில்லை.

அவர்களை பொறுத்தவரை, மௌனிகா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்து சண்டை பிடிக்க, அவளை சமாதானப்படுத்த வேண்டி, யஷ்வந்த் அவளை தனியாக அனுப்பி வைத்தான் என்பதே. அதையே தான் அங்கு வேலை செய்பவர்கள் இருவரும், மௌனிகாவை விமான நிலையம் அழைத்துச் சென்ற வாகன ஓட்டுநரும் கூறினர்.

கூடுதலாக, அந்த வாகன ஓட்டுநரோ, “மேடம் ஏர்-போர்டுக்கு வெளியவே நிறுத்த சொல்லிட்டாங்க சார். அவங்களுக்கு ஏர்-போர்ட் மால்ல ஏதோ பர்சேஸ் செய்யணும்னு சொன்னாங்க. உள்ளயும் என்னை வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க.” என்றார். அதற்கு யஷ்வந்த்திடம் திட்டும் வாங்கிக் கொண்டார்.

ஆனால், அபிஜித்திற்கு அது உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை.

காவலர் ஒருவரிடம், விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதி, விமான நிலையத்திற்குள் இருக்கும் பேரங்காடி ஆகியவற்றின் சிசிடிவி காட்சிகளை வேண்டுமாறு கட்டளையிட்ட அபிஜித், “யஷ்வந்த், வீட்டை சுத்தி சிசிடிவி இருக்குல. அதை செக் பண்ணலாமா?” என்று அபிஜித் வினவ, “ஓஹ் ஷுயர்! இன்னும் என்மேல இருக்க சந்தேகம் தீரலையா அபிஜித்?” என்று கேட்டுக் கொண்டே, தன் பணியாளிடம் சைகை செய்தான் யஷ்வந்த்.

“போலீஸ்னா எல்லாரையும் தான் சந்தேகப்படனும் யஷ்வந்த். இதுல, ஒய்ஃவ் மிஸ்ஸிங் கேஸ்ல எல்லாம், மோஸ்ட்லி அவங்க ஹஸ்பண்ட்ஸ் தான் குற்றவாளியா இருக்காங்க.” என்று யஷ்வந்தின் கண்களை பார்த்தபடி தீவிரமான குரலில் கூறினான் அபிஜித்.

“ம்ம்ம், ஒத்துக்குறேன், நீங்க போலீஸ் தான்.” என்ற யஷ்வந்த்தின் குரலில் இருந்தது அப்பட்டமான கேலியே!

அதைக் கண்டு கொண்ட அபிஜித்திற்கு கோபம் மனதிற்குள் கனன்றாலும், அதை அடக்கியபடி, சிசிடிவி காட்சிகளை பார்வையிட ஆரம்பித்தான்.

அதிலும் பெரிதாக சந்தேகம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. மற்றவர்களின் வாக்குமூலத்தை போல தான் அதிலும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அவற்றை புருவ சுழிப்புடன் பார்த்த அபிஜித்தோ, “இந்த சிசிடிவி காப்பி எனக்கு வேணும்.” என்று யஷ்வந்த்திடம் கேட்டு வாங்கிக் கொண்டவன், “நீங்க ஸ்டேஷன் வந்து கம்ப்லைன்ட் ஃபைல் பண்ணிடுங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர, செல்லும் அவனையே தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான் யஷ்வந்த்.

*****

காவல் நிலையம்…

“என்ன சொல்ற அபி? மௌனிகாவை காணோமா?” என்று ஹர்ஷவர்தன் பதற, “ரிலாக்ஸ் ஹர்ஷா.” என்று அவனை அமைதி படுத்திய அபிஜித்தோ, யஷ்வந்த் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினான்.

“இதெல்லாம் உண்மைனு நம்புறியா அபி?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “நோ ஹர்ஷா. ஆனா, எவிடன்ஸ் எல்லாம் பக்காவா க்ரியேட் பண்ணி வச்சுருக்கான். சிசிடிவி வீடியோ, வேலைக்காரங்களோட சாட்சின்னு எல்லாமே பக்காவா இருக்கு. நமக்கு இருக்க ஒரே ஹோப், ஏர்-போர்ட் சிசிடிவி ஃபூட்டேஜ் தான்.” என்றான் அபிஜித்.

அப்போது அபிஜித்தின் அறைக்கு வந்த காவலர் ஒருவர், “சார், அந்த டிரைவர் டிராப் பண்ணதா சொல்ற இடம் ஒரு பிளாக்ஸ்பாட். எந்த சிசிடிவிலயும் வராத இடம்.” என்று மடிக்கணினியை அபிஜித்தின் புறம் திருப்பினார்.

அதை பார்த்த அபிஜித்தோ, “பெர்ஃபெக்ட்லி எக்சிக்யூடட்! இந்த பெர்ஃபெக்ஷன் நமக்கு வேணும்னா சந்தேகத்தை உறுதி படுத்தலாம். ஆனா, கோர்ட்டுக்கு தேவை எவிடன்ஸ். அது அவன்கிட்ட பக்காவா இருக்கு!” என்றான் விரக்தியாக.

“இப்போ என்ன பண்ண போற அபி?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “நேர்ல போய் தான் விசாரிக்கணும் ஹர்ஷா. அது எவ்ளோ தூரம் ஒர்க்கவுட் ஆகும்னு தெரியல. ஆனாலும் டிரை பண்ணுவோம்.” என்ற அபிஜித்தோ, விசாரணைக்கு கிளம்பியவாறே, “ஹர்ஷா, நீ இதுல தலையிடாத. பி கேர்ஃபுல்.” என்று அவனை அறிந்ததால் அறிவுரை கூறிவிட்டே சென்றான்.

ஹர்ஷவர்தனும் அபிஜித்தின் பேச்சை மதித்து, தன் அலுவலக வேலையில் ஈடுபட, அவன் மனமோ முரண்டியது.

மிகுந்த சிரமத்துடன் மாலை வரை காத்திருந்த ஹர்ஷவர்தனிற்கு, அபிஜித்திடமிருந்து எவ்வித நேர்மறையான தகவல்களும் வராதிருக்க, அவனே கிளம்பி விட்டான்.

அப்போது தான் அலுவலகத்திலிருந்து வந்த பிரியம்வதா அவனிடம் கேள்வி கேட்பதற்குள் சென்று விட, அதுவும் அவளின் கோபத்துடன் சேர்ந்து கொண்டது.

*****

யஷு பேலஸ்…

யஷ்வந்த் வீட்டில் இல்லை என்பதை அவனுடைய வாகனம் இல்லாததை வைத்தே கண்டு கொண்டான் ஹர்ஷவர்தன்.

ஆறரை மணிக்கே இருட்ட துவங்கி விட, அது யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் உள்ளே நுழைய ஹர்ஷவர்தனிற்கு வசதியாக இருந்தது. மேலும், அன்றைய நாள் நிகழ்வுகளை பற்றி புரளி பேச சில பணியாளர்கள் ஒரே இடத்தில் கூடி விட, அதுவும் அவனிற்கு சாதகமாகிப் போனது.

அந்த மாளிகையின் பின்புறம் வந்தவன், அடுத்து எங்கு சென்று, எதை தேட என்று தெரியாமல் விழிக்க, அதிக நேரம் இல்லாததால் ஏதாவது ஒரு அறைக்கு செல்ல முயன்றான்.

செங்குத்தாக சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த குழாய் மூலம் சிறிது தூரம் மேலே வந்தவன், பக்கவாட்டாக குதித்து ஒரு அறையின் பால்கனியை அடைந்திருந்தான்.

அன்றைய நாள் ஹர்ஷவர்தனிற்கு சிறப்பாக இருந்தது போலும். ஏனெனில், அவன் நுழைந்தது யஷ்வந்த் மற்றும் மௌனிகாவின் படுக்கையறை.

விசாலமாக இருந்த அந்த அறையின் மத்தியில் வீற்றிருந்த இருவரின் திருமண புகைப்படமே அதை கூறியது.

ஒருநொடி அந்த புகைப்படத்தை வெறித்து பார்த்து ஹர்ஷவர்தனோ, பின்னர் வேகவேகமாக ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தான்.

அப்போது அவன் கரத்தில் தட்டுப்பட்டது மௌனிகாவின் குறிப்பேடு! அவளின் தலையணை உறைக்குள் மறைந்திருந்தது அந்த குறிப்பேடு.

தன் கைகளிலிருந்த குறிப்பேட்டின் பக்கங்களை மெதுவாக திருப்பிய ஹர்ஷவர்தனின் கரம், சில பக்கங்களில் காய்ந்து கிடந்த அவளின் கண்ணீர் துளிகளை வேதனையுடன் தடவிப் பார்க்க, அவன் விழிகளோ அதிலிருந்த சில வரிகளைக் கண்டு கோபத்தில் சிவக்க, அவன் உதடுகளோ சில பல கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தன.

ச்சீ, இவன் இவ்ளோ கேவலமானவனா? எத்தனை பேரை என்னென்ன பண்ணியிருக்கான். இவனை போயா நான் காதலிச்சு கல்யாணம் செஞ்சேன்? இதுல, கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாம, அவன் வீரபிரதாபங்களை எல்லாம் யாரோ ஒருத்தன் கிட்ட ஃபோன்ல சொல்லிட்டு இருக்கான்! எனக்கு இவன் மேல சந்தேகம் வந்தது கூட அவனுக்கு தெரிஞ்சுருக்கு. இனி, நான் இங்க இருக்குறது சேஃப் இல்ல. ஏதாவது சாக்கு சொல்லி முதல்ல இங்கயிருந்து கிளம்பணு. கண்டிப்பா, அம்மா கிட்ட போக முடியாது. அவங்க மாப்பிள்ளை புராணம் சொல்லியே என்னை டென்ஷன் படுத்துவாங்க. யாருக்கு தெரியும், விஷயம் தெரிஞ்துக்கு அப்பறம் கூட, இவனுக்கு கூஜா தூக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.

சோ, இப்போ எனக்கு இருக்க ஒரே ஆதரவு ஹர்ஷா தான். நான் அவனை ஏமாத்தியும் கூட, எனக்காக அவன் சப்போர்ட்டிவ்வா இருக்கான்னு நினைக்கும் போது ரொம்ப குற்றவுணர்வா இருக்கு. ஒவ்வொரு முறையும் அவனை பார்க்கும் போதெல்லாம் என்னை என்னாலேயே மன்னிக்க முடியல. முதல்ல, அவனை இதுக்குள்ள இழுக்க கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா, என்னால தனியா சமாளிக்க முடியும்னு தோணல. அதுக்காக அவன் வாழ்க்கையை பாழாக்கனுங்கிற எண்ணமும் இல்ல.

இன்னும் கொஞ்ச நாள் மட்டும் என்னை பொறுத்துக்கோ ஹர்ஷா. இந்த பிரச்சனை முடிஞ்சதும், உன் கண்ணுல படாம போயிடுவேன்.


இறுதி வரிகளை கண்ட ஹர்ஷவர்தனின் மனம் வேதனையில் சுருங்க, அவன் மூளையோ, அதற்கு மேலிருந்த வரிகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.

‘என்னதான் வீட்டை விட்டு போற முடிவுல இருந்தாலும், அவ என்னை தேடி தான் வந்துருக்கணும். வீட்டை விட்டு வரவ, அவளோட டைரியை மட்டும் ஏன் இங்கேயே விடணும்?’ என்று அவன் மூளை கேட்ட கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

ஆனால், மௌனிகா காணாமல் போனதற்கு கண்டிப்பாக யஷ்வந்த் தான் காரணம் என்பதை உறுதியாக நம்பினான் ஹர்ஷவர்தன். அது தான், மௌனிகா யஷ்வந்த்தை பற்றி அறிந்து கொண்டதை அவன் தெரிந்து கொண்டான் என்று குறிப்பேட்டில் குறிப்பிட்டிருந்தாளே!


இனி, நேரத்தை கடத்தக் கூடாது என்று எண்ணியவன், அபிஜித்திற்கு அழைத்தவாறு, அந்த மாளிகையிலிருந்து வந்த வழியே வெளியேற முயற்சித்தான்.


“ஹலோ அபி, நம்ம நினைச்சது சரி தான். மௌனிகா காணாம போனதுக்கு அந்த பா**** தான் காரணம். அதுக்கு ஆதாரமா மௌனிகாவோட டைரியை கண்டு பிடிச்சுட்டேன்.” என்று ஹர்ஷவர்தன் கூற, “வாட்? நீ இப்போ எங்க இருக்க ஹர்ஷா? நீ அவன் இடத்துல இருக்கன்னு மட்டும் சொல்லிடாத.” என்று பதற்றமாக வினவினான் அபிஜித் .


“சாரி அபி.” என்று ஹர்ஷவர்தன் கூறும் போதே அவன் எங்கிருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட அபிஜித்தோ, “இடியட்! இதுல இன்வால்வ் ஆகாதன்னு, நான் அவ்ளோ சொல்லியும் கேட்காம அங்க போயிருக்க! இது நாளைக்கே உனக்கு எதிரா திரும்பலாம் ஹர்ஷா. ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டிங்குற?” என்று அபிஜித் கூற, சரியாக அதே சமயம் ஹர்ஷவர்தனிற்கான வலை அந்த மாளிகையின் கீழ் தளத்தில் விரிக்கப்பட்டது.


மௌனிகாவின் அறை பால்கனியிலிருந்து சற்று கீழே நீட்டியிருந்த விதானத்தில் குதித்த ஹர்ஷவர்தன், பக்கவாட்டிலிருந்த குழாய் மூலம் கீழே இறங்கினான்.


இவை அனைத்தும் அவன் அபிஜித்துடன் செவிப்பொறி மூலம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்திருந்தது.

ஆனால், இருவரும் எதிர்பார்க்காததோ, சரியாக ஹர்ஷவர்தன் கீழ் தளத்தில் கால் வைத்த சமயம், அவனை நோக்கி வந்தனர் இரு காவலர்கள் மற்றும் யஷ்வந்த்.


கோபமும் பதற்றமும் நிறைந்த குரலில், “சார், நான் தான் சொன்னேன்ல, என் ஒய்ஃப் இவனோட தான் போயிருப்பா. இதோ, இவனும் திருட்டுத்தனமா அவ ரூம்ல இருந்து வரான். இவனை விசாரிச்சா, அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சுடும் சார்.” என்று தெலுங்கில் கூறினான் யஷ்வந்த்.

அவன் அடுக்கிய குற்றச்சாட்டை அரைகுறை தெலுங்கு அறிவினால் புரிந்து கொண்ட ஹர்ஷவர்தனோ, ஒருநொடி திகைத்து, பின் நிதானத்துடன், “வாட் தி **!” என்று கத்த, அந்த காவலர்களோ, “மிசஸ். மௌனிகா யஷ்வந்த் காணாம போன வழக்குல உங்களை விசாரிக்கணும் மிஸ்டர். ஹர்ஷவர்தன். சோ, ஸ்டேஷன் போலாம் வாங்க.” என்று கையோடு அவனை அழைத்துச் சென்றனர்.

அங்கு நடப்பதை அலைபேசி வழியே கேட்ட அபிஜித்தோ, “இது மாதிரி நடக்கும்னு தான் அப்போவே கேர்ஃபுல்லா இருக்க சொன்னேன்!” என்று முணுமுணுத்தபடி கிளம்ப ஆயத்தமானான்.

தொடரும்…

14 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 14”

  1. Kalidevi

    Evlo mosamanavana iruka yashwanth ippadi avala engeyo neeye kadathitu ipo hadsha mela pali podura abi intha reason ku tha involve agatha sonan ketiya ipo matikitta paru avasaram unaku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *