Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 17

வஞ்சிப்பதோரும் பேரவா! – 17

அத்தியாயம் 17

சரியாக பதினொரு மணியளவில், ஹர்ஷவர்தன் மடிக்கணினி முன் அமர்ந்து அவனின் வேலையில் ஆழ்ந்திருக்க, படபடவென்று கதவு தட்டப்பட, அதே நேரத்தில் அழைப்பு மணியும் விடாமல் அடிக்கப்பட, ‘ஏன் இப்படி?’ என்ற குழப்பத்துடனே கதவை திறந்தான் ஹர்ஷவர்தன்.

வெளியே பதற்றத்துடன் நின்றிருந்த அபிஜித்தை பார்த்தவன், “என்னடா இவ்ளோ டென்ஷனோட இருக்க?” என்று வினவ, “இடியட்! மொபைல்னு ஒன்னை எதுக்கு வச்சுருக்க? எத்தனை முறை கால் பண்றது? உனக்கு என்னாச்சோன்னு பதட்டத்துல ஓடி வந்தா, கூலா கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்று ஹர்ஷவர்தனை திட்டியவாறே உள்ளே நுழைந்தான் அபிஜித்.

அப்போது தான் ஹர்ஷவர்தனிற்கு, அவன் கீழே போட்டு உடைத்த அலைபேசியின் நினைவு எழுந்தது.

“அது… மொபைல் கீழ விழுந்துடுச்சு டா.” என்று ஹர்ஷவர்தன் கூற, அவனை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே, “சரி, உன் மொபைல் கீழ விழுந்துடுச்சு. பிரியா மொபைலுக்கு என்னாச்சு? ஏன்டா குடும்பமே காலை அட்டெண்ட் பண்ண மாட்டோம்னு முடிவெடுத்துருக்கீங்களா என்ன?” என்று வினவினான் அபிஜித்.

“ஹ்ம்ம், அவ என் காலையே அட்டெண்ட் பண்ணாம, பிளாக் லிஸ்ட்ல போட்டு வச்சுருக்கா.” என்று ஹர்ஷவர்தன் வாயை விட்டுவிட, என்னவாகிற்று என்று தோண்டி துருவி கேட்ட பின்பே விட்டான் அபிஜித்.

“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? இந்த மாதிரி நேரத்துல அவளை தனியா அனுப்பியிருக்க?” என்று அபிஜித் அதற்கும் திட்ட, “டேய், அவ என்ன என்கிட்ட சொல்லிட்டா போனா? இதோ, இந்த பிட்டு பேப்பர்ல எழுதி வச்சுட்டு போயிட்டாங்க மேடம். நானே செம கடுப்புல இருக்கேன். நீ வேற!” என்று ஹர்ஷவர்தனும் கத்தினான்.

“என்ன தான் டா பிரச்சனை உங்களுக்குள்ள?” என்று அபிஜித் வினவ, நடந்ததை அவன் பார்வையிலிருந்து கூறிய ஹர்ஷவர்தன், “இதுல என் தப்பு இருக்கு, ஒத்துக்குறேன். அதுக்காக, நான் மட்டுமே தப்பா அபி? ஒரு காலத்துல பழகுனவளுக்கு ஆபத்துன்னு வரப்போ, சும்மா பார்த்துட்டு இருக்க முடியல. ஹெல்ப் பண்ணனும்னு தோணுச்சு. இது தப்பா? சீரியஸா எனக்கு புரியல அபி!” என்று விரக்தியுடன் பேசினான் ஹர்ஷவர்தன்.

“நீ ஹெல்ப் பண்றதெல்லாம் தப்பில்ல ஹர்ஷா. ஆனா, அதை உன் ஒய்ஃபுக்கு தெரியாம செய்யுறது தான் தப்பு. ஒருவேளை, இது பிரியாக்கு தெரிஞ்சு, அவளே ஹெல்ப் பண்ண சொல்லியிருந்தா, இந்தளவுக்கு பிரச்சனை வந்துருக்குமான்னு யோசி. சப்போஸ், அவ வேண்டாம்னு சொல்லியிருந்தாலும், அவளுக்கு தான் நீ பிரயாரிட்டி குடுக்கணும். ஏன்னா, அவ உன்னோட ஒய்ஃப்! எங்க உன் மனசை தொட்டு சொல்லு, நீ இதை பிரியா கிட்ட யிருந்து மறைச்சதுக்கு காரணம், அவளோட பாஸ்ட்ல நடந்த விஷயத்துனால மட்டும் தானா?” என்று அபிஜித் சரியான கேள்வியை கேட்க, ஹர்ஷவர்தனின் மனம் இல்லை என்று உடனே பதிலளித்தது.

“இல்ல, அதுக்கு உண்மையான காரணம், எங்க இதை பிரியா கிட்ட சொன்னா, மௌனிகாவை மீட் பண்ண விட மாட்டாளோங்கிற பயம் தான். இதனால தான் நீ கான்ஷியஸா இல்லாம, இப்படி ஒரு முடிவெடுத்துருக்க.” என்று சரியான காரணத்தை அபிஜித் கூற, அதை ஹர்ஷவர்தனின் மனமும் ஏற்றுக் கொண்டது.

அதனுடன், முன்தினம் இரவு அவன் பேசியவை இப்போது அதிகப்படியாக தெரிய, மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று சிந்திக்க ஆரம்பித்தான் ஹர்ஷவர்தன்.

அவன் யோசனை நல்வழியில் செல்வதை உணர்ந்த அபிஜித்திற்கும் சற்று நிம்மதியாக இருக்க, “உன் மாமனார் வீட்டுக்கு போய், அவ கால்ல விழுந்தாவது கூட்டிட்டு வா மேன். போ…” என்று சிரித்தபடி அபிஜித் கூற, அதில் சற்று லேசான மனதுடன், “ஹ்ம்ம், அப்படி தான் சமாதானப்படுத்தணும் போல. ஆனா, இப்போ இல்ல. இந்த கேஸ் முடியட்டும். அதுவரை, வது அங்க இருக்குறது தான் சேஃப்.” என்று தீவிரமாக கூறினான் ஹர்ஷவர்தன்.

‘மீண்டுமா?’ என்பது போல அபிஜித் பார்க்க, “தெரிஞ்சோ தெரியாமலயோ, நான் இதுக்குள்ள வந்துட்டேன் அபி. லெட்ஸ் ஃபினிஷ் திஸ் ஒன்ஸ் ஃபார் ஆல். அதுவரை, என்னால நிம்மதியா இருக்க முடியும்னு தோணல அபி.” என்று தீர்க்கமாக உரைத்தான் ஹர்ஷவர்தன்.

‘என்னமோ பண்ணி தொலை!’ என்ற மனநிலைக்கு வந்த அபிஜித்தோ, “டைரில ஒரு க்ளூ கிடைச்சது ஹர்ஷா. அதை சொல்ல தான் உனக்கு கால் பண்ணேன்.” என்று அபிஜித் கூறியதும் பரபரப்பானான் ஹர்ஷவர்தன்.

“என்ன க்ளூ அபி?” என்று ஹர்ஷவர்தன் ஆர்வத்துடன் வினவ, அந்த குறிப்பேட்டின் ஒரு பக்கத்தை விரித்து காண்பித்த அபிஜித்தோ, “இங்க ஒரு பேஜை கிழிச்சுருக்காங்க ஹர்ஷா. ஆனா, அந்த பக்கத்துல எழுதுனதோட பிரின்ட்ஸ் அடுத்த பக்கத்துல விழுந்துருக்குறதை அவங்க கவனிக்கல போல.” என்று அதையும் சுட்டிக் காட்டினான்.

முதல் பக்கத்தில் உள்ள எழுத்துகள் லேசாக அடுத்த பக்கத்திலும் அதன் அச்சை பதித்திருக்க, அதை நன்றாக காட்ட வேண்டி எழுதுகோல் கொண்டு அந்த இடத்தை தீட்டியிருக்க, அவை ஹர்ஷவர்தனிற்கும் தெரிந்தது.

இவ்ளோ அசிங்கத்துக்கும் அக்கிரமத்துக்கும் காரணமானவனோட நான் இத்தனை நாள் வாழ்ந்துருக்கேன்னு நினைக்கும் போது அருவருப்பா இருக்கு. எஸ், என் ஹஸ்பண்ட் தான் அந்த கேவலமான வெப்சைட்டோட அட்மின் அண்ட் டெவலப்பர். இதுக்குன்னே, வேலைக்கு சிலரை வச்சுருக்கான் அந்த இடியட்! ச்சீ, அவனோட இந்த முகத்தை தெரிஞ்சுக்காம முட்டாள் மாதிரி அவனை சுத்திட்டு இருந்துருக்கேன். என்னை விட முட்டாள் இந்த உலகத்துல இருந்துருக்க முடியாது.

ஒருவேளை, என்னையும் அவன் தப்பா… அதுக்கும் வாய்ப்பிருக்கு! அவனெல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல. அவன் கிட்ட எங்க உணர்வுகளை எல்லாம் எதிர்பார்க்க? அவனை பொறுத்தவரை, மத்த எல்லாருமே சதை பிண்டம் தான். அதை அவனோட இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்க அவனோட பணமும், அதிகாரமும் உதவியா இருக்கு.

இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ? முடியுறதுக்குள்ள எத்தனை பேரோட உயிரைக் காவு வாங்கப் போகுதோ? இப்போ விஷயம் தெரிஞ்ச என்னை கூட கொலை செஞ்சு, அதை பெரிய விஷயமா அதே வெப்சைட்ல போட்டா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல!

இப்படி எழுதி இருந்தாள் மௌனிகா.

அதைக் கண்ட ஹர்ஷவர்தனோ அபிஜித்தை திடுக்கிட்டு பார்க்க, “அந்த எக்ஸ்ட்ரீமுக்கு போயிருக்க மாட்டான்னு நம்புவோம் ஹர்ஷா.” என்ற அபிஜித்தின் மனமோ, ‘மௌனிகா இறந்த மாதிரி எந்த வீடியோவும் இல்ல.’ என்று சொல்லிக் கொண்டது. ஆனாலும், அவனிற்கு முழு நம்பிக்கை இல்லை தான்.

பெரிய பெரிய குற்றங்களையே சர்வசாதாரணமாக செய்யும் யஷ்வந்த்திற்கு மனைவியை கொல்வதெல்லாம் எம்மாத்திரம்?

இருப்பினும், எதிர்மறையாக எதையும் நினைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஹர்ஷவர்தனிடம் அவ்வாறு கூறினான் அபிஜித்.

“சோ, இதுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வச்சது அந்த ராஸ்கல் தான்.” என்று ஹர்ஷவர்தன் பல்லைக் கடிக்க, “ஹ்ம்ம், ஆரம்பிச்சது என்னவோ அவன் தான்! ஆனா, அது இவ்ளோ தூரம் வளர்ந்து நிக்கிறதுக்கு காரணம், நம்மள சுத்தி இருக்காங்களே அவங்க தான்!” என்றான் அபிஜித்.

“இதை நிறுத்தணும்னா, முதல்ல வேரை வெட்டனும் அபி. அதை எப்படி செய்யப் போறோம்னு யோசிக்கணும்.” என்று ஹர்ஷவர்தன் யோசனையுடன் கூற, “ஹ்ம்ம், எவ்ளோ பெரிய ஜீனியஸா இருந்தாலும், ஏதோ ஒரு இடத்துல அவங்களும் சறுக்கி இருப்பாங்களே. அந்த வீக்னெஸை கண்டு பிடிக்கணும்னா, அதுக்கு அவங்க ஹிஸ்டரி ரொம்ப முக்கியம்! உனக்கு தான் தெரியுமே, அவன் சர்மா குடும்பத்தோட வளர்ப்பு பிள்ளைன்னு. ஆறு வயசுல தான் இங்க வந்துருக்கான். சோ, அதுக்கு முன்னாடி எங்க இருந்தான், என்ன பண்ணான், அவன் ஃபேமிலி பேக்கிரவுண்ட் என்னன்னு எல்லாமே தெரிஞ்சுக்கணும்.” என்றான் அபிஜித்.

“அதுக்கு முன்னாடி எங்க இருந்தான்னு எப்படி கண்டு பிடிக்கிறது?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “யஷ்வந்த்தோட அப்பா சந்தீப் சர்மாவோட பி.ஏ கிட்ட தான் தகவலை சேகரிச்சேன். யஷ்வந்த்தை தத்தெடுத்த அனாதை ஆசிரமத்தோட அட்ரஸ் குடுத்துருக்காரு. அங்க போய் மீதியை விசாரிப்போம். அவன் ஏன் இப்படி இருக்காங்கிறதுக்கான க்ளூ கிடைக்கலாம்.” என்றான் அபிஜித்.

“நானும் வரேன்.” என்று உடன் கிளம்பிய ஹர்ஷவர்தனை, ‘சொன்னாலும் கேட்க மாட்ட.’ என்பதை போல பார்த்த அபிஜித்தும் அவனுடன் கிளம்பி விட்டான்.

*****

அபிஜித்தின் வாகனம் அந்த அனாதை ஆசிரம வாசலில் நின்றது. சற்று நிறம் மங்கிப் போய் இருந்தாலும், பல குழந்தைகளின் வாசஸ்தலமாக உயர்ந்து நின்றது அந்த ஆசிரமம்.

மதிய நேரம் என்பதால் பரபரப்பில்லாமல் இருந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் அபிஜித்தும் ஹர்ஷவர்தனும்.

ஆசிரமத்தினுள்ளே நுழைந்ததும், அலுவலக அறைக்குள் இருந்த மத்திய வயதுடையவர் இருவரையும் நோக்கி வந்தபடி, “யாரு? என்ன வேணும்?” என்று வினவ, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அபிஜித், அவர் தான் அந்த ஆசிரம பொறுப்பாளர் என்பதை அறிந்து கொண்டான்.

“சார், இந்த ஆசிரமத்துல இருந்து கிட்டத்தட்ட இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தத்துக் கொடுக்கப்பட்ட ஒருத்தரை பத்தி விசாரிக்கணும்.” என்று அபிஜித் கூற, “சார், நான் இங்க வேலைக்கு சேர்ந்தே பதினைஞ்சு வருஷம் தான் ஆகுது. இங்க சேர்ந்தவங்க, தத்துக் கொடுக்கப்பட்டவங்க எல்லாரையும் ரிஜிஸ்டர்ல நோட் பண்ணுவோம். நீங்க சொன்ன வருஷத்துக்கான ரிஜிஸ்டர் இருக்கான்னு தெரியல. நான் பார்த்துட்டு வரேன் சார். நீங்க இங்க வெயிட் பண்ணுங்க.” என்றவர் உள்ளே சென்று விட்டார்.

“25 இயர்ஸா ரிஜிஸ்டர் மெயின்டெயின் பண்ணுவாங்களா என்ன?” என்று அவநம்பிக்கையுடன் ஹர்ஷவர்தன் வினவ, “ஹ்ம்ம், கஷ்டம் தான். பட் கிடைச்சா நம்ம லக்!” என்றான் அபிஜித்.

அவர்களை மேலும் சில நேரம் காத்திருக்க வைத்து விட்டே வந்தார் அந்த ஆசிரம பொறுப்பாளர்.

“இதோ சார், நீங்க கேட்ட வருஷத்துக்கான ரிஜிஸ்டர்.” என்று அந்த பொறுப்பாளர் நீட்ட, அதை வாங்கி பார்க்கலானான் அபிஜித்.

ஹர்ஷவர்தனோ, “இவ்ளோ வருஷமா ரிஜிஸ்டர்ட் மெயின்டெயின் பண்றீங்களா?” என்று ஆர்வமாக கேட்க, “இந்த ஆசிரமம் ஆரம்பிச்சப்போ, ரிஜிஸ்டர் எல்லாம் அவ்ளோவா மெயின்டெயின் பண்ணலையாம் சார். ஆனா, இடையில நிறைய குளறுபடி போல. இங்கயிருந்து குழந்தைகளை தத்தெடுத்துட்டு போனவங்க, கொஞ்ச வருஷத்துக்கு அப்பறம் வந்து திரும்பவும் விடன்னு இருந்துருக்காங்க. சிலர், கணவன் – மனைவின்னு பொய்யா நடிச்சு குழந்தைகளை தத்தெடுத்துட்டு போய், வித்துட்டாங்கன்னு ஒரு கேஸ் வேற வந்துச்சு. அதுக்கப்பறம் தான் ரிஜிஸ்டரை ஸ்ட்ரிக்ட்டா மெயின்டெயின் பண்ண ஆரம்பிச்சாங்க. இதெல்லாம் எனக்கு முன்னாடி வேலை பார்த்தவர் சொன்னது.” என்றார் அவர்.

அதற்குள் அபிஜித் யஷ்வந்த்தின் விபரங்களை தேடி எடுத்து விட, ஹர்ஷவர்தனும் அதை பார்வையிட்டான்.

அவன் பெயர் யஷ்வந்த் என்பதும், ஐந்து வயதில் அவனே இந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

யஷ்வந்த்தை பற்றி பெரிதாக தகவல் கிடைக்காததில் சோர்ந்து போன ஹர்ஷவர்தன் அந்த பொறுப்பாளரிடம், “உங்களுக்கு முன்னாடி வேலை செஞ்சவர் இங்க எத்தனை வருஷமா வேலை செஞ்சாருன்னு தெரியுமா? அவரை நாங்க பார்க்க முடியுமா?” என்று வினவினான்.

“அவரு இந்த ஆசிரமம் ஆரம்பிச்சதுல இருந்தே இங்க தான் வேலை செஞ்சாரு சார். ஆனா, அவரு இறந்து அஞ்சு வருஷமாகுதே.” என்றவரோ சிறிது யோசித்தபடி, “அவரோட பொண்ணு கூட இங்க தான் வேலை செஞ்சாங்க சார். கல்யாணமானதுக்கு அப்பறம் வேற வேலைக்கு போயிட்டாங்க. அவங்களை கேட்டா, உங்களுக்கு இன்னும் தகவல் கிடைக்கலாம்.” என்றவர், யாருக்கோ அழைத்து அந்த பெண்ணின் விலாசத்தையும் வாங்கி கொடுத்தார்.

அதை பெற்றுக் கொண்டவர்கள் அவர்களின் தேடுதலின் அடுத்தக்கட்ட பயணமாக, அந்த பெண், யாஸ்மினின் வீட்டை நோக்கி சென்றனர்.

ஏற்கனவே தகவல் சொல்லியிருந்ததால், யாஸ்மின் இருவரையும் வரவேற்று அவர்கள் தேடி வந்தவனை பற்றி அவருக்கு தெரிந்ததை கூற ஆரம்பித்தார்.

“இந்த பையன் அவனா தான் வந்து ஆசிரமத்துல சேர்த்துக்க சொன்னான் சார். அவன் வந்தப்போ, உடம்பெல்லாம் பல காயங்கள் இருந்ததை பார்த்து என் அப்பா தான் பரிதாபப்பட்டு எந்த தகவலையும் விசாரிக்காம உடனே சேர்த்துக்கிட்டாரு. அதுக்கப்பறம் பேச்சு குடுத்தப்போ தான் அவனைப் பத்தி பல விஷயங்கள் தெரிய வந்துச்சு.” என்றவர் சிறு இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்.

“அவன் அம்மா ஒரு பிராஷ்டிட்யூட். அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ரெட் லைட் ஏரியால தானாம். சின்ன வயசுல இருந்தே, அவனுக்கு அவங்க அம்மாவை பிடிக்காதாம். காரணம், அவங்க எப்போவும் அவனை திட்டிட்டே இருப்பாங்களாம். அதோட, அங்க வரவங்க சிலர், அவனை அடிச்சு கொடுமை படுத்துவாங்களாம். அதனால தான், அந்த இடத்துல இருந்து தப்பிச்சு வந்ததா, மத்த பசங்க கிட்ட சொல்லியிருந்தான். அதைக் கேட்டதும், இந்த சின்ன வயசுலயே எவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சுருக்கான்னு நினைச்சு, எனக்கும் என் அப்பாவுக்கும் இன்னும் கஷ்டமா போச்சு. அதனால தான் என்னவோ, அவனை சந்தீப் சார் குடும்பம் தத்தெடுக்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தான் தெரிய வந்துச்சு அவனோட உண்மையான முகம் என்னன்னு.” என்றவர் ஒரு பெருமூச்சை விட, அத்தனை நேரம் அவர் சொல்வதை இடையிடாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மற்ற இருவருமே பரபரப்பாயினர்.

“அவன் அந்த ரெட் லைட் ஏரியால இருந்து சும்மா தப்பிச்சு வரல. அவனோட அம்மாவையும் கூட இருந்த சிலரையும் கொடூரமா கொலை செஞ்சுட்டு தான் தப்பிச்சு வந்துருக்கான். அவன் உடம்புல இருந்த காயங்கள் கூட அதனால உண்டானது தானாம். ஆசிரமத்துல அவனோட இருந்த பையன் ஒருத்தன் சமீபத்துல அப்பாவை பார்க்க வந்தப்போ தான் இதை சொன்னான். அதைக் கேட்டு அப்பாவுக்கும் எனக்கும் பயங்கர ஷாக். இந்த விஷயத்தை சந்தீப் சாருக்கிட்ட சொல்லலாம்னு அப்பா ரெண்டு முறை அங்க போனாரு. ஆனாலும், சாரை பார்க்க முடியல. அதுக்கப்பறம், அவரு இறந்த நியூஸ் கிடைச்சு, இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாதுன்னு அப்பாவும் விட்டுட்டாரு.” என்று யாஸ்மின் கூறி முடித்தார்.

“இதை ஏன் போலீஸ் கிட்ட சொல்லல?” என்று அபிஜித் காவலனாக கேள்வி கேட்க, “உறுதியா தெரியாததை எப்படி சொல்றது சார்…” என்று இழுத்த யாஸ்மினோ, “உண்மையை சொல்லணும்னா, அப்பாக்கு அப்போ வயசு எண்பதை நெருங்கி இருந்துச்சு. தள்ளாடுற அவரு கேஸ்னு அலைய முடியுமா? என கணவருக்கு இதுல இன்வால்வ் ஆகுறது பிடிக்காது. அவரை மீறியும் நான் எதுவும் செய்ய முடியாது. இப்போ கூட, இதை உங்க கிட்ட சொல்றது அவருக்கு தெரியாது.” என்று சாதாரண குடும்பஸ்திரியின் மனநிலையில் அவர் கூறினார்.

அப்போதும் அபிஜித் அதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க, “அவன் செஞ்ச கொலைகளை கேட்டதுக்கே பயம் பிடிச்சு ஆட்டுச்சு சார். நீங்களே யோசிச்சு பாருங்க, ஒருவேளை இதனால அவன் எங்களை கொல்ல வந்தா என்ன பண்றது? எனக்கு என் குடும்பம் தான் முதல்ல சார்.” என்று யாஸ்மின் கூறினார்.

அதற்கு மேல் அதை பற்றி தொங்க வேண்டாம் என்று அபிஜித்திற்கு கண்களால் சைகை செய்த ஹர்ஷவர்தன், “யஷ்வந்த்தை அதுக்கப்பறம் நேர்ல பார்த்தீங்களா?” என்று  வினவ, “நான் பார்க்கல சார். ஆனா, சந்தீப் சாரை பார்க்க போனப்போ அப்பா பார்த்ததாவும், அவன் அப்பாவை கண்டுக்கவே இல்லன்னும் சொல்லி வருத்தப்பட்டாரு.” என்றார் யாஸ்மின்.

“இந்த சந்திப்பு நடந்ததுக்கு அப்பறம் தான் சந்தீப் சாரோட இறந்த நியூஸ் வந்துச்சா?” என்று எதையோ கண்டு பிடித்ததை போல ஹர்ஷவர்தன் வினவ, அவன் கூற வருவது புரிந்தது போல அபிஜித் அமைதியாக  கவனித்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அந்த சந்தேகம் யாஸ்மினிற்கு இல்லை போலும். அவர் சாதாரணமாக, “ஆமா சார்.” என்று கூற, அபிஜித்தோ எதையோ சிந்தித்தபடி, “மிசஸ். யாஸ்மின், இஃப் யூ டோன்ட் மைண்ட், உங்க அப்பா எப்படி இறந்தாருன்னு சொல்ல முடியுமா?” என்று வினவ, சட்டென்று அவன் அப்படி கேட்டதும் என்னவோ ஏதோ என்று பயந்த யாஸ்மினோ, “ஹார்ட் அட்டாக் சார். ஏன் என்னாச்சு?” என்றார்.

“ஓஹ், ஒன்னுமில்ல. ஜஸ்ட் கேட்டேன்.” என்றதோடு முடித்துக் கொண்டான் அவன்.

அதற்கு மேல் யாஸ்மினிடம் கேட்க எதுவும் இல்லாததால், இருவரும் அவருக்கு நன்றியை உரைத்து விட்டு கிளம்பினர்.

செல்லும் வழியில் யோசனையுடன் இருந்த அபிஜித்தை பார்த்த ஹர்ஷவர்தனோ, “சந்தீப் அண்ட் யாஸ்மினோட அப்பா டெத்ல யஷ்வந்த்தோட பங்கு இருக்கலாமோ அபி?” என்று கேட்க, “சந்தீப்போட டெத்ல கண்டிப்பா இருக்கு. ஆனா, யாஸ்மின் அப்பா டெத்ல சந்தேகம் தான்!” என்றான் அபிஜித்.

ஒரு பெருமூச்சுடன், “சோ, யஷ்வந்த்தோட இந்த வக்கிர புத்திக்கு, அவனோட சைல்ட்ஹுட் தான் காரணமா?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “ம்ம்ம் இருக்கலாம் ஹர்ஷா. நிறைய சீரியல் கில்லர்ஸ் கேஸஸ்ல, இப்படிப்பட்ட காரணங்கள் தான் மோடிவ்வா இருந்துருக்கு. இங்க யஷ்வந்த் விஷயத்துலயும், அதே காரணமா இருக்கலாம்.” என்றான் அபிஜித்.

“அபி, இப்போ தான் மௌனிகாவோட டைரி ஆதாரமா இருக்கே. இதை வச்சு அந்த யஷ்வந்த்தை பிடிக்க முடியாதா?” என்று ஹர்ஷவர்தன் சந்தேகத்துடன் கேட்க, “இல்ல ஹர்ஷா. இந்த டைரி எல்லாம் ஸ்ட்ராங் எவிடன்ஸ் இல்ல. கோர்ட்ல ஒரு ஹியரிங்குக்கு கூட நிக்காது. அதோட, இதை வச்சு மௌனிகாவை கடத்துனதே நீதான்னு திசை திருப்ப கூட வாய்ப்பிருக்கு. நமக்கு வேற ஏதாவது சாலிட் எவிடன்ஸ் வேணும்.” என்றான் அபிஜித்.

அப்போது அபிஜித்திற்கு அலைபேசி அழைப்பு வர, அதை ஏற்று பேசிவிட்டு வைத்தவனோ ஹர்ஷவர்தனிடம், “ஒரு குட் நியூஸ், ரெண்டு பேட் நியூஸ்.” என்றவன், “குட் நியூஸ், கமிஷனர் பொண்ணு கேஸ்ல கைதானவனுங்களை விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சதுல அந்த நாலு பேரை சொல்லியிருக்காங்க.” என்றான்.

“சூப்பர் டா அபி. அப்போ அவனுங்களை வச்சு யஷ்வந்த்தை பிடிச்சுடலாம்ல.” என்று ஹர்ஷவர்தன் கூற, “அவ்ளோ ஈஸி இல்ல ஹர்ஷா. இப்போ அந்த நாலு பேரும் அப்ஸ்காண்ட். இது தான் முதல் பேட் நியூஸ்.” என்றான் அபிஜித்.

“ஓஹ், அப்போ ரெண்டாவது பேட் நியூஸ்?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “அந்த வெப்சைட்…” என்று அபிஜித் சொல்வதற்குள் இடைவெட்டிய ஹர்ஷவர்தனோ, “ஷட்டவுன்னா?” என்று படபடத்தான்.

“இல்ல ஹர்ஷா, இன்னும் ஷட்டவுன் ஆகலை. ஆனா, நம்மளால ஆக்சஸ் பண்ண முடியாதபடி செக்யூரிட்டி இன்க்ரீஸ் பண்ணியிருக்கான். அதை பிரீச் பண்ண நம்ம சைட்ல இருக்க டெக்னிகல் டீம் வேலை பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, எவ்ளோ நேரம் எடுக்கும்னு சொல்ல முடியாதாம்.” என்றான் அபிஜித்.

“உஃப், இப்போ என்ன பண்ண?” என்று ஹர்ஷவர்தன் சோர்வுடன் கூற, “ஏதாவது வழி கிடைக்கும் ஹர்ஷா.” என்றான் அபிஜித் நம்பிக்கையுடன்.

*****

“யூஸ்லெஸ் இடியட்ஸ்! உங்க கேர்லெஸ்நெஸால இன்னைக்கு அந்த *****க்கு பயந்து என் வெப்சைட் மேல கைவைக்கிற மாதிரி ஆகிடுச்சு. எத்தனை எத்தனை வி.ஐ.பி இருந்து என்ன பிரயோஜனம்? எனக்கே தண்ணி காட்டிட்டான் *****. எல்லாம் உங்க முட்டாள் தனத்துனால தான்.” என்று அலைபேசியில் யாரையோ திட்டினான் யஷ்வந்த்.

மறுமுனையில் இருந்தவனோ கைகளை பிசைந்து கொண்டு, “சார், அவங்க நாலு பேரும் சேஃப் ஹவுஸ் கேட்குறாங்க.” என்று வார்த்தைகளை மென்று விழுங்கியவாறு கூற, “** பண்ணி கூத்தடிச்சது பத்தாதுன்னு சேஃப்டி வேற கேட்குறானுங்களா? என் முன்னாடி வந்தானுங்க, நானே கொன்னுடுவேன்னு சொல்லு. எத்தனை முறை சொன்னேன், இப்போ எதுவும் வேண்டாம்னு. அப்படியே பண்ணி தொலைச்சாலும், எவிடன்ஸ் இல்லாம பண்ண முடியாதா? வீடியோல செல்ஃப் எக்ஸ்பிளனேஷன் ஒன்னு தான் கேடு! இப்போ வரை அந்த ரெண்டு பேருக்கும் எதுவும் பெருசா கிடைக்கல. அதுவரை நம்ம தப்பிச்சோம். இதுல, ‘என்ன நடந்தாலும், நாங்க இருக்கோம்’னு நாக்கை தொங்க போட்டுட்டு வரவனுங்க எல்லாம், இப்போ ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி தப்பிக்க பார்க்குறானுங்க. ஹ்ம்ம், எனக்குன்னு நேரம் வராமையா போயிடும்… அப்போ நானும் பார்த்துக்குறேன்…” என்று கறுவினான் யஷ்வந்த்.

அதற்கு என்ன மறுமொழி கூறுவது என்று தெரியாமல் திகைத்தவனோ, “சார், இப்போ அவங்களுக்கு என்ன பதில் சொல்ல?” என்று திக்கித் திணறி கேட்க, “எல்லாத்தையும் நானே சொல்லணுமா இடியட்! அந்த நாலு பேரையும் அவங்க கிட்ட மாட்டிக்காம எங்கயாச்சும் போக சொல்லு. தப்பித் தவறி மாட்டிக்கிட்டாங்க, அப்பறம் சாவை தவிர வேறு வழியே இல்லன்னு சொல்லிடு.” என்று கர்ஜித்தவாறு அழைப்பை துண்டித்தவன், அவனின் பிரேத்யேக அறைக்குள் இருந்த மற்றொரு ரகசிய அறைக்குள் சென்றான்.

அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சோர்வுடன் தலை குனிந்து இருந்தவளை நெருங்கியவன், “ஷ், எவ்ளோ தடங்கல் பேபி? கவலைப்படாத, எல்லாத்தையும் சீக்கிரம் முடிச்சு வச்சுட்டு உன்னை கவனிச்சுக்குறேன். நான் தான கவனிச்சுக்கணும்!” என்று சைக்கோத்தனமாக சிரித்தான்.

தொடரும்…

7 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *