Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 2

வஞ்சிப்பதோரும் பேரவா! – 2

அத்தியாயம் 2

அலைபேசியில் ஒளிர்ந்து ‘பிரியம்வதா’ என்ற பெயரையே முழு நொடி கண் சிமிட்டாமல் பார்த்த ஹர்ஷவர்தன், ஒரு பெருமூச்சுடன் அழைப்பை ஏற்று, மௌனமாக இருக்க, மறுமுனையில் இருந்தவளிற்கோ சட்டென்று பேச தோன்றவில்லையோ என்னவோ, அவளும் அமைதியாக இருந்தாள்.

இரு நொடிகளுக்கு பின்னரே, சங்கடமான அமைதியை உணர்ந்தவள், சிறு செருமலுடன், “ஹலோ ஹர்ஷா, எப்படி இருக்கீங்க?” என்று சம்பிரதாயமாக பேச ஆரம்பித்தாள்.

“ஹ்ம்ம், நல்லா இருக்கேன்.” என்பது தான் ஹர்ஷவர்தனின் பதிலாக இருந்தது.

அவனின் பட்டும் படாத பேச்சு பிரியம்வதாவிற்கு அவஸ்தையை தந்தாலும், பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், “ஒர்க் ஜாஸ்தியா?” என்று அடுத்த கேள்வியை முன் வைத்தாள்.

அவனோ ஒரு பெருமூச்சுடன், “இந்த சம்பிரதாய பேச்செல்லாம் எதுக்கு வது? நேரடியா விஷயத்துக்கு வா.” என்றான்.

எரிச்சல் இல்லை என்றாலும், விருப்பம் இருந்ததாகவும் தெரியவில்லை அவன் குரலில்!

இங்கு பிரியம்வதாவோ, ஹர்ஷவர்தனை திருமணம் செய்து கொள்ளும் தன் முடிவு சரி தானா என்ற எண்ணத்திற்கே வந்து விட்டாள்!

அதன்பிறகு தான், தன் முடிவின் வேர்க்காரணத்தை மனதிற்குள் கொண்டு வந்தவளாக, அவன் பேச்சையும் அதிலுள்ள உணர்வுகளையும் கண்டு கொள்ளாத ‘ஜென்’ நிலைக்கு சென்றவளாக, “நம்ம கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் கூட இல்லை ஹர்ஷா. டிரெஸ் வாங்கணும், இன்விடேஷன் செலக்ட் பண்ணனும். நீங்க எப்போ ஃப்ரீன்னு சொன்னா, அதுக்கேத்த மாதிரி எல்லாம் பிளான் பண்ணலாம்.” என்றாள்.

“ப்ச், எல்லாம் என்னைக் கேட்டு தான் நடக்குதா?” என்று ஹர்ஷவர்தன் முணுமுணுக்க, அமைதியாக இருந்த பிரியம்வதாவிற்கே கோபம் வந்து விட்டது.

“எது உங்களை கேட்காம முடிவு பண்ணது ஹர்ஷா? ஒரு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம எங்கேஜ்மெண்ட்ல பேசுனது எல்லாம் மறந்து போச்சா? முதல்ல, நீங்க வேண்டாம்னு மறுத்தாலும், லாஸ்ட்ல எதுவும் சொல்லலையே. நான் சொன்னதைக் கேட்டு, ஒரு வருஷம் கேப்புக்கு அப்பறம் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்கன்னு தான நினைச்சேன்.” என்று படபடவென்று அவள் பேச, அதைக் கேட்டவனிற்கு தான் மூச்சு வாங்கியது.

ஆனாலும், அவன் மௌனம் சாதிக்க, “இப்போவும் அமைதியா தான் இருக்கப் போறீங்களா? வாயைத் திறந்து ஏதாவது பேசுங்க ஹர்ஷா. இந்த கல்யாணத்துல உங்களுக்கு சம்மதமா?” என்று இடைவெளி விட்டவள், அத்தனை நேரம் ஆக்ரோஷமாக பேசிய குரலை தணித்து, “சம்மதம் இல்லன்னாலும் சொல்லுங்க. ஏமாற்றம் எங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல.” என்றாள்.

அவள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அமைதியை தந்தவனால், அவள் உதிர்த்த ‘ஏமாற்றம்’ என்ற சொல்லை அத்தனை எளிதில் கடக்க முடியவில்லை.

அவனும் அதன் பிடியில் தானே தவித்துக் கொண்டிருக்கிறான். அதை, சக மனுஷிக்கு பரிசளிக்க வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ, “இந்த வீக்கெண்ட் ஊருக்கு வரேன்.” என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான்.

வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவந்த பின்னரும் மனதிலிருந்த தயக்கம் மறைந்த பாடில்லை.

ஒருத்தியின் பிரிவு தந்த தாக்கம், மற்றவளை காயப்படுத்தி விடுமோ என்ற கேள்வியின் பிடியில் சிக்கி, விடை தெரியாமல் வானத்தில் தேடிக் கொண்டிருந்தவனை சமீபித்தான் பிரஜன்.

நண்பனை உணர்ந்தாலும், திரும்பவில்லை ஹர்ஷவர்தன்.

“க்கும், பஸ் புக் பண்ணிட்டியா?” என்று பிரஜன் வினவ, சட்டென்று அவனை பார்த்து முறைத்த ஹர்ஷ்வர்தன், “இப்போ மட்டும் எதுக்கு வந்து பேசுற? உனக்கு என்னை விட அவ முக்கியமா போயிட்டால!” என்று சிறுப்பிள்ளையாய் கோபம் கொண்டான்.

அதில் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்ட பிரஜனோ, “பின்ன, உன் செயல்களால நொந்து போயிருக்க பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணாம, எருமை மாடு மேல மழை பெஞ்ச மாதிரி, எனக்கென்னன்னு இருக்க உனக்கா சப்போர்ட் பண்ண முடியும்!” என்றான்.

“ப்ச், ஏன்டா யாருமே என்னை புரிஞ்சுக்கவே மாட்டிங்குறீங்க?” என்று இயலாமையும் வருத்தமும் கலந்த குரலில் ஹர்ஷவர்தன் கேட்க, “நீ தான் டா யாரையும் புரிஞ்சுக்க மாட்டிங்குற!” என்ற பிரஜனோ, “இப்போ என்ன செய்யணும்னு நீ நினைக்குற? நீ இப்படியே தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருன்னு விட்டுடனுமா?” என்று வினவினான்.

“ம்ச், நான் அப்படியா சொன்னேன். எனக்கான ஸ்பேஸ் வேணும்னு தான் சொல்றேன்.” என்ற ஹர்ஷவர்தனின் குரலில் முன்பிருந்த அழுத்தம் இல்லை. அதுவே, கூறியது அந்த நிலைப்பாட்டில் உள்ள தயக்கத்தை!

“ஒரு வருஷம் போயிடுச்சு. சரி நீயே சொல்லு, இன்னும் எத்தனை வருஷ ஸ்பேஸ் வேணும்?” என்று பிரஜன் சரியாக கேட்க, கையாலாகாதனத்துடன் அவனை பார்த்தான் ஹர்ஷவர்தன்.

“உன் பார்வையே சொல்லுது, உன் தியரி எவ்ளோ வீக்னு. வருங்காலமா நினைச்சவங்க பாதியில விட்டுப் போனா, அவங்க நினைவுகள்ல இருந்து வெளிய வரது ரொம்ப கஷ்டம் தான். அதை நான் ஒத்துக்குறேன். அதுக்காக, தனிமைல தான் அவங்க தந்த நினைவுகளை மறப்பேன்னு சொன்னா, அது முட்டாள்தனம் ஹர்ஷா. உன் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேணும். அது இல்லாம, சும்மா கடனேன்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்தா, அதுல என்ன அர்த்தம் இருக்கு?” என்று நண்பனிற்கு புரிய வைக்க முயன்றான்.

பிரஜன் கூறுவதை எந்த குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக ஹர்ஷவர்தன் கேட்க, நண்பன் மாறி விடுவான் என்ற நம்பிக்கை பிறந்தது பிரஜனிற்கு.

“என்னை பொறுத்தவரை, பிரியா உனக்கு சரியான மேட்ச். உன்னை பத்தி அவளுக்கு நல்லா தெரியும். அவளும் உன் மனநிலையை யோசிச்சு தான், உன் வீட்டுல கன்வின்ஸ் பண்ணி கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளி வச்சுருக்கா. சொல்லப்போனா, உன் வீட்டாளுங்க கூட இவ்வளவு யோசிப்பாங்களான்னு தெரியல.” என்று கூறினான் பிரஜன்.

“ஹ்ம்ம், அது என்னவோ உண்மை தான்! ஆனா, ஏன் அவ இவ்ளோ செய்யணும்? வது ரொம்ப நல்ல பொண்ணு. அவ ஏன் என்னை மாதிரி ஒருத்தனுக்கு வாழ்க்கை குடுக்கணும்?” என்று ஏதோ நினைவில் பேசினான் ஹர்ஷவர்தன்.

“லூஸா டா நீ! அது என்ன ‘உன்னை மாதிரி’? நீ என்ன ஏலியனா, இல்ல வேம்பயர், வேர்உல்ஃப் மாதிரி மிதாலஜிக்கல் க்ரியேச்சரா? அதுவும் ‘வாழ்க்கை குடுக்குறாங்களாம்’ல! எப்போ இருந்து டா இந்த மாதிரி இன்ஃபிரியர் தாட்ஸ் வர ஆரம்பிச்சுது உனக்கு? எப்பவும் பாசிட்டிவ் வைப்ஸோட இருக்க என் பழைய ஹர்ஷா எங்க டா போனான்?” என்று வருந்திய குரலில் பிரஜன் வினவ, அதற்கு விரக்தி சிரிப்பு மட்டுமே ஹர்ஷவர்தனிடத்தில்!

“ப்ச், சிரிக்காத, சீரியஸா கேட்குறேன் ஹர்ஷா. இபப்டியே இருந்தா, டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ண கூட்டிட்டு போயிடுவேன் பார்த்துக்கோ.” என்று பிரஜன் எச்சரிக்க, “ஹே, இன்னும் அந்த ஸ்டேஜுக்கு எல்லாம் வரல டா.” என்று சாதாரணமாக கூறினான் ஹர்ஷவர்தன்.

“ம்ச், விட்டுட்டு போன மகராசி என்னவோ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா தான் இருக்கா. நீ தான் அந்த ஏமாத்துக்காரியை மறக்க முடியாம வாழ்க்கையை பாழாக்கிட்டு இருக்க.” என்று பிரஜன் கூற, அவனை முறைத்தான் ஹர்ஷவர்தன்.

“இப்போ எதுக்கு முறைக்குற? நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கான்னு உன் மனசாட்சியை கேளு.” என்று எரிச்சலாக கூறிய பிரஜன், “அவளை ஒன்னு சொன்னா போதும், வந்துடுவான் முறைச்சுக்கிட்டு!” என்றும் முணுமுணுத்தான்.

இதென்ன இன்று நேற்று நடப்பதா? அவள் விட்டு சென்றதில் இருந்தே நடப்பது தானே!

நண்பனின் வலியை சகிக்க முடியாமல், பிரஜன் அவளை திட்ட, அவளை திட்டுவதை தாங்க முடியாமல் ஹர்ஷவர்தன் அவனை முறைக்க!

கூடுதலாக முதல் முறை பிரஜன் அப்படி பேசியபோது, “அவளோட எதிர்பார்ப்பை நான் பூர்த்தி பண்ணலையோ என்னவோ. எங்கேயோ எனக்கு தெரியாம சறுக்கி இருக்கேன்.” என்று ஏதோ கூற வந்த ஹர்ஷவர்தன், பிரஜனின் கோப முகத்தை பார்த்து சொல்ல வந்ததை பாதியில் நிறுத்த, “எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணலன்னா, உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனோட போவாளா? அது கூட ஓரளவு ஒத்துக்கலாம். ஆனா, உன்னோட ரிலேஷன்ஷிப்ல இருந்தப்போவே, அவனோட பழகியிருக்கா – இதுக்கு என்ன சப்பைக்கட்டு கட்டப்போற?” என்று கோபமாக கேட்டான்.

அதற்கு ஹர்ஷவர்தன் ஏதோ கூற வர, “திரும்ப ஏதோ சொல்லி சமாளிக்காத ஹர்ஷா. புரிஞ்சுக்கோ மச்சான், நீ ஒவ்வொரு முறையும் அவளோட தப்பை நியாயப்படுத்த என்னென்னவோ பேசுறதை கேட்க, அசிங்கமா இருக்கு! ப்ச், அவளை பத்தின பேச்சு இன்னும் எதுக்கு? விட்டுத்தள்ளு அவளை. அவளோட பழக்கம் ஏற்பட்டு ரெண்டு வருஷம் இருக்குமா? அந்த ரெண்டு வருஷத்தை மறந்து, பழைய ஹர்ஷாவா திரும்பி வா டா.” என்றிருந்தான்.

பழைய நினைவுகளை எண்ணிப் பார்த்த ஹர்ஷவர்தனோ இப்போது மறந்தும் கூட அவளை பேச்சில் இழுக்கவில்லை.

“போனது போகட்டும். இனிமேலாவது அந்த பிரியா பொண்ணு கூட சண்டை போடாம சமாதானமா பேசு.” என்று பிரஜன் அறிவுரை கூற, “நான் சண்டை போட்டதை நீ பார்த்தியா?” என்றான் ஹர்ஷவர்தன்.

“பின்ன, நீ என்ன கொஞ்சிக்கிட்டா இருந்த? அந்த பொண்ணு கேட்குற கேள்விக்கு ரெண்டு வரி தாண்டி பதில் சொன்னா குறைஞ்சா போயிடுவ? பெரிய வள்ளுவர் இவரு!” என்று பிரஜன் கூற, “எனக்கு இப்படி தான் பேச வரும்.” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான் ஹர்ஷவர்தன்.

“ஹ்ம்ம், பிரியா தான் பாவம் போல.” என்று முணுமுணுத்த பிரஜனோ, நண்பனை பின்தொடர்ந்து சென்று, சற்று தீவிர குரலில், “பிரியாவும் அவ அப்பாவும் பாவம் ஹர்ஷா. அஞ்சு வருஷமாகியும் அவங்களோட ரணம் மாறாம அப்படியே தான் இருக்கு. அந்த குடும்பம் கொஞ்சமாச்சும் இயல்பு நிலைக்கு வரணும்னா, அது இந்த கல்யாணத்தால தான் முடியும்! இனி, எது பண்றதா இருந்தாலும், யோசிச்சு முடிவெடு.” என்று கூறிய பிரஜனை பார்த்த ஹர்ஷவர்தனின் மனமும் அதை ஆமோதிக்க, கிட்டத்தட்ட ஒரு வருடமாக செய்து வரும் தனிமை தவத்தை கலைக்க ஆயத்தமானான் அவன்.

*****

யஷு பேலஸ், ஹைதராபாத்…

பல கோடிகளை அனாயாசமாக விழுங்கியபடி உயர்ந்து எழுந்திருந்த யஷ்வந்த் ஷர்மாவின் மாளிகை!

இப்போது அந்த மாளிகையில் இருப்பது என்னவோ இரண்டே பேர் தான். யஷ்வந்தும் அவனின் காதல் மனைவி மௌனிகாவும் தான்.

மௌனிகா யஷ்வந்த்தை காதலிக்க முக்கிய காரணங்களுள் இந்த மாளிகையும் ஒன்று. ஆனால், இப்போதெல்லாம் இங்கு தனித்து விடப்படுவதில் ஏனோ அசௌகரியமாக உணர்ந்தாள்.

அதற்காக எந்நேரமும் தனிமையில் இருக்கிறாள் என்று பொருள் அல்ல. அவளின் கணவன் வேலைக்கு சென்ற பிறகு, அவளின் துணைக்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் நடுத்தர வயதுடைய பெண்மணியும், வெளி வேலைக்காக அப்பெண்ணின் கணவரும் வருவார்கள் தான்.

ஆயினும், அவள் தனிமையை உணர்வதற்கான காரணம், பேச்சு துணைக்கு என்று யாரும் இல்லாதது தான்!

அதன் காரணமாகவே கணவனுடன் தனிமையில் இருந்தபோது, “யஷு, நானும் உங்க கூட ஆஃபிஸ் வரேனே.” என்று கொஞ்சியபடி அவள் கேட்டிருக்க, அவனோ, “வந்து என்ன பண்ணுவ பேபி?” என்று கேலி செய்தான்.

அவன் சட்டை பொத்தானை திருகியபடி, “ம்ச், நீங்க ஒர்க் சொல்லி தந்தா, நானும் செய்வேன்ல. இங்கேயே இருந்து எனக்கு போரடிக்குது தெரியுமா?” என்று அவள் சிணுங்க, அவள் மூக்கோடு மூக்கை உரசிய கணவனோ, “என் பேபி வேலை செய்றதா? நோ வே, நீ இந்த பேலஸோட ராணி பேபி. நீ போய் வேலை செய்றதா? நீ ‘எனக்காக’ மட்டும் ‘வேலை’ செஞ்சா போதும்.” என்று அந்த இரு வார்த்தைகளில் மட்டும் அழுத்தம் கொடுத்து பேச, “ச்சீ…” என்று செல்ல சிணுங்களுடன் அவர்களின் பேச்சு வேறு திசையை நோக்கி பயணித்திருந்தது.

அன்று துவங்கி, அதைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், ஒன்று தவிர்த்து விடுவான், இல்லை பேச்சை திசை மாற்றி விடுவான்.

இது பற்றி, அவள் தன் அன்னையிடம் கூறியபோது கூட, “மாப்பிள்ளைக்கு உன்மேல எவ்ளோ அன்பு இருந்தா, இப்படி கையில வச்சு தாங்குவாறு?” என்று மாப்பிள்ளை புராணத்தை பாடினாரே தவிர, பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவில்லை.

காதலில் கிறங்கி, காமத்தில் திளைத்து, சுகபோகத்தில் மூழ்கி இருந்த முதல் ஆறு மாதங்கள் மௌனிகாவும் இப்படி தானே நினைத்திருந்தாள்.

ஆனால், இப்போதெல்லாம் ஏதோ ஒருவித அவஸ்தை! வெளியே சொல்ல தெரியாத சங்கடம், அவள் மனதை வியாபித்திருந்தது உண்மையே.

அதை அவள் கணவனிடம் சொன்னால், “ஸ்ட்ரெஸா இருக்கியா? ஸ்பா போ, பார்லர் போ. மசாஜ் எடுத்துக்கோ.” என்று சொன்னானே தவிர, அவள் கூற வருவதை செவி கொடுத்து கேட்கவில்லை. அதுவே அவன் மீது சிறிது ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

மேலும், நாட்கள் செல்ல செல்ல, ஏனோ இருவருக்கும் இடையே கண்ணிற்கு புலப்படாத திரை விழுந்து விட்டது போலவும், நாளாக நாளாக அதன் அடர்த்தி கூடிக் கொண்டே போவதையும் உணர்ந்து இருந்தாள் மௌனிகா.

இதோ, இப்போதெல்லாம் நான்கு வார்த்தை சேர்த்து பேசுவதே அபூர்வமாகிற்று. கேட்டால், வேலைப்பளூ என்ற காரணத்தை ரெடிமேடாக வைத்திருந்தான்.

தான் யோசிப்பது எல்லாம் அதிகப்படியோ, அனைவரின் வாழ்வும் இப்படி தான் செல்கிறதோ என்ற குழப்பத்துடனே, அமர்பவரை உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த நீள்சாய்விருக்கையில் மௌனிகா அமர்ந்திருக்க, அறையிலிருந்து கிளம்பி வந்தான் யஷ்வந்த்.

வரும்போதே, ஒட்டிப் பிறக்காத இளவல் போன்ற அவனின் அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு எதுவோ பேசியபடி தான் வந்தான்.

“… கஸ்டமர் ரெக்வஸ்டா? என்ன பண்ண சொல்ற விவேக்? பிராடக்ட் தான் இல்லையே!” என்று கோபமாக பேசியபடி மனைவியிடம் வந்தவன், சம்பிரதாயமாக அவளை அணைத்து, தலையசைத்து வேலைக்கு கிளம்பி விட்டான்.

“ப்ச், விவேக் இதை கூட ஹேண்டில் பண்ண தெரியாதா உனக்கு? ஒன்னு இல்லன்னா என்ன, இன்னொன்னை வச்சு கஸ்டமர் கேட்ட மாதிரி ரெடி பண்ண தெரியாதா? இவ்ளோ நாள் கூட இருந்துருக்க, இது கூட தெரியாதா?” என்று மறுமுனையில் இருந்தவனை திட்டியபடி செல்லும் கணவனை வெறித்து பார்த்தாள் மௌனிகா.

‘ஏன் என் உள்ளுணர்வு தப்பு பண்ணிட்டேனோன்னு சொல்லுது!’ என்ற சிந்தனையுடன் இருந்தவள் அறியவில்லை, அவள் வாழ்விற்கான போராட்டம் இனிதே துவங்கி விட்டது என்பதை!

தொடரும்…

10 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 2”

  1. Avatar

    Nice. Oru valiya marriage panna ready agitan. Ivan enna muttal ah. Vittu ponavuluku muttu koduthutu irukan. Mouni life prachanai ivan life ah bathikum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *