Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 8

வஞ்சிப்பதோரும் பேரவா! – 8

அத்தியாயம் 8

முன்னொரு காலத்தில் (!!!) அதாவது ஓருயிர் ஈருடலாக காதலிலும் காமத்திலும் திளைத்திருந்த சமயத்தில், யஷ்வந்த் எப்போதும் அழைத்து வரும் உல்லாச விடுதி தான் அது.

ஊரிலிருந்து சற்று தொலைவில், எவ்வித தொல்லைகளும் இல்லாமல், சில ஏக்கர்களை விழுங்கியபடி பிரம்மாண்டமாகவும், அதே சமயம் அமைதியாகவும் உயர்ந்து நின்றது அந்த விடுதி.

வழக்கமாக இருக்கும் உற்சாகம் இல்லாமல், வழக்கமில்லாத பயத்துடன் உள்ளே நுழைந்தாள் மௌனிகா.

அங்கு வேலை செய்யும் சிப்பந்தியோ யஷ்வந்த்திற்கு வணக்கம் வைத்து விட்டு செல்ல, எப்போதும் நடக்கும் நிகழ்வு தான் என்றாலும், ஏனோ சந்தேக கண்ணுடனே பார்க்க தோன்றியது மௌனிகாவிற்கு.

நான்காவது மாடியிலுள்ள அறைக்கான திறப்பை கையில் சுற்றியபடி சீட்டியடித்த யஷ்வந்த், மின்தூக்கியினுள் சென்றதும், மௌனிகாவை சிறை பிடிக்க, எப்போதும் வெட்கத்துடன் அவனிற்கு ஒத்துழைப்பு கொடுப்பவளோ, இப்போது பதற்றத்துடன் அவனை விட்டு விலக முயன்றாள்.

அவளின் செய்கைகளை எல்லாம் கவனித்து வந்த யஷ்வந்த்தோ, புருவம் சுருக்கி, “உனக்கு என்னதான் ஆச்சு மௌனிகா?” என்று முதல் முறையாக அவளின் பெயரைக் கொண்டு அழைத்தான்.

அது மட்டுமா முதல் முறை?

அவள் மீது அவன் கொண்ட கோபமும் முதல் முறை தானே!

அவன் குரலிலிருந்த அழுத்தமும், அவன் முகம் காட்டிய கோபமும், அவனைப் பற்றி மனம் கொண்ட கற்பனையும், இவை அனைத்தும் மௌனிகாவை குழப்ப, அழும் நிலைக்கு சென்று விட்டாள் பாவை.

அவளின் விழிகள் நீரை வெளியேற்ற தயாராக இருக்க, அதைக் கண்ட கணவனோ, “ஷிட், என்ன பேபி இது? எதுக்கு இந்த அழுகை? ப்ச், நீ ஏதோ டென்ஷன்ல இருக்க போல.” என்று அவளை லேசாக அணைத்தபடி அவனே காரணம் கூற, அவன் அணைப்பிற்குள் அடங்கியவளிற்கோ, அவனை எப்படி எதிர்கொள்வது என்ற பயம் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.

அவனை எதிர்ப்பதா? இல்லை, அவனிடம் அடங்குவதா? அவனை எதிர்த்து என்ன செய்வது? முதலில், அவனை எதிர்க்க தான் முடியுமா?

இப்படி பல கேள்விகள் அவளின் மூளைக்குள் நிமிடத்தில் உற்பத்தியாக, மற்ற கேள்விகளை விட்டுவிட்டு, இறுதி கேள்விக்கு மட்டும், ‘இல்லை’ என்ற பதில் உடனே கிடைத்தது.

உபயம், லாவண்யாவின் தற்கொலை!

என்னதான், அதற்கான காரணம் யஷ்வந்த் என்று உறுதியாக தெரியா விட்டாலும், அதில் ஏதோ ஒரு மூலையில் கணவனின் பங்கும் இருப்பதாக அவளின் மூளை அடித்துக் கூறியதே!

அது கொடுத்த பயத்தில், வேறு மார்க்கம் அறியாதவளாக முடிவெடுத்து விட்டாள், அவனிடம் தற்சமயம் அடங்கியே இருப்பதென்று!

விளைவு, உணர்வுகளை தொலைத்த கூடல்!

இதில் ஆச்சரியம் என்னவென்றால், யஷ்வந்த் அவளின் நிலையை உணர்ந்து கொள்ளாததே!

உண்மையாகவே உணர்ந்து கொள்ள தவறினானா இல்லை அவளின் நிலையை பற்றிய கவலையே அவனிற்கு இல்லையா என்ற கேள்விக்கான பதில் அறியாதவளாக, களைப்பில் உறங்கிய கணவனை விட்டு விலகினாள்.

போர்வையை சுற்றி உடலை மறைத்தவள், அப்படியே சாய்ந்து அமர்ந்து இருட்டை வெறிக்க ஆரம்பித்தாள். அவளின் எதிர்காலமும் அந்த அறையை போல வெளிச்சமின்றி தடுமாற ஆரம்பித்தது.

*****

அதிகாலை வெளிச்சம், ஜன்னலை மூடியிருந்த திரைசீலையையும் தாண்டி கோடாக அந்த அறைக்குள் நுழைய, அதனால் முதலில் பாதிக்கப்பட்டவன் ஜன்னல் அருகே படுத்திருந்த ஹர்ஷவர்தன் தான்.

மெல்ல சோம்பல் முறித்து, கண்களை திறந்தவன் கண்டது, உறக்கத்தில் கூட ஏதோ சிந்தனையில் புருவம் சுருங்க படுத்திருக்கும் பிரியம்வதாவை தான்.

அதில் அவன் உள்ளம் வருத்தம் கொள்ள, ‘அப்படி என்னதான் யோசிக்கிறான்னு வெளிய சொன்னா தான!’ என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டான்.

இதற்கிடையே அவனின் கவலையை தற்காலிகமாக மறந்து தான் போனான் போலும்!

அதே யோசனையுடன், அவளின் உறக்கம் பாதிக்காத வகையில் திரைசீலையை இழுத்து மூடியவன், முதல் நாள் போல காலை வேளைகளை முடித்துவிட்டு, தேநீருடன் கூடத்தில் அமர்ந்து விட்டான்.

அப்போது தான் பிரஜனின் ஞாபகம் வந்தது ஹர்ஷவர்தனிற்கு.

முதல் நாள் இரவு பிரஜன் அழைத்திருக்க, ஹர்ஷவர்தனிற்கு தான் மனைவியை சமாதானப்படுத்தும் வேலை இருந்ததே. மேலும், அவளைப் பற்றிய சிந்தனையில் நண்பனையும் மறந்து போனான்.

இப்போது அவன் அழைத்தது நினைவிற்கு வர, நேரத்தை பார்க்காமல் உடனே அழைத்தும் விட்டான்.

சில நொடிகளிற்கு பின்னரே அவனின் அழைப்பு மறுமுனையில் ஏற்கப்பட்டது.

“அடேய் நல்லவனே, உனக்கு டைம் பார்க்கவே தெரியாதா? எப்போ பார்த்தாலும் ஏன் டா நடுராத்திரி கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுற?” என்று பிரஜனின் குரல் கரகரப்பாக கேட்க, நேரம் பார்க்காமல் அழைத்ததை அப்போது தான் உணர்ந்தாலும், அதிக வெளிக்காட்டிக் கொள்ளாத ஹர்ஷவர்தனோ, “மணி என்ன ஆகுது, நீ இன்னும் தூங்கிட்டு இருக்க? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் குடும்பஸ்தனான உனக்கு இருக்கலாம். ஒய் மீ மேன்?” என்று பிரஜன் வம்பு வளர்த்தான்.

என்னதான் கலாட்டாவாக பேசினாலும், மனதிற்குள் ஹர்ஷவர்தனின் மாற்றத்தை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது பிரஜனிற்கு. பின்னே, ஒரு வருடமாக நண்பனை பழைய நிலைக்கு கொண்டு வர பாடுபட்டவன் அல்லவா?

அந்த தவத்திற்கான பலனாக, தன்னுடன் கேலி பேசும் ஹர்ஷவர்தனை எண்ணி மனம் நிறைந்து போனது.

பின், வழக்கமான நலவிசாரிப்புகள் முடிய, “என்ன மேன், கல்யாண வாழ்க்கை எப்படி போகுது?” என்று பிரஜன் வினவ, “ஹ்ம்ம், சப்டைட்டில் இல்லாம வேற லாங்குவேஜ் படம் பார்க்குற மாதிரி இருக்கு.” என்று முந்தைய தின அனுபவத்தை வைத்து கூறினான் ஹர்ஷவர்தன்.

‘படம் பார்க்குறதே நல்ல முன்னேற்றம் தான!’ என்று நினைத்த பிரஜனோ கதை கேட்க தயாராக, ஹர்ஷவர்தனும் பிரியம்வதாவை பற்றி அவன் அறிந்ததை பகிர்ந்து கொண்டான்.

அனைத்தையும் கூறி முடித்தவன், “என்னன்னு முழுசா தெரியலன்னாலும், அவ அந்த நியூஸ் கேட்டு ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கான்னு மட்டும் புரியுது பிரஜன்.” என்றான் ஹர்ஷவர்தன்.

“மேபி அவங்க அக்காவோட டெத்னால இருக்கும் ஹர்ஷா. இப்போவே எதையும் கேட்காத. கொஞ்சம் ஆறப்போட்டு மெதுவா கேளு ஹர்ஷா. தெரியாத ஊரு, உன்னோட தனியா இருக்காள… இந்த புது சூழல் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் தரலாம்.” என்ற பிரஜன், “வீட்டுக்குள்ளேயே இருந்தா அவளால அதுலயிருந்து வெளிவர முடியாது டா. வெளிய எங்கேயாவது கூட்டிட்டு போ. என்றும் அறிவுரை கூறி அழைப்பை துண்டித்தான்.

நண்பன் கூறியதை அசைபோட்டபடியே, தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, அதில் மீண்டும் ஒரு கொலை பற்றிய செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.

மூன்று மாதங்களிற்கு முன், உடல் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக கண்டெடுக்கப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த சுரேஷின் வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜுவின் வாக்குமூலம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு ஓடிக் கொண்டிருக்கும்போதே, ‘எதுக்கு வம்பு? என்று நினைத்தவன், படுக்கையறையை பார்த்தபடி தொலைக்காட்சியை அணைத்து விட்டான்.

சிறிது நேரத்தில் எழுந்து வந்த பிரியம்வதாவின் வதனத்தில் முந்தின நாளிற்கான சோர்வு லேசாக தெரிந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே திரிந்தாள்.

அவள் ஏதாவது சொல்வாளா என்று பொறுத்து பார்த்து சலித்த ஹர்ஷவர்தனோ, “வது, ரெண்டு நாளா வெளிய போகாம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறது ஒரு மாதிரி இருக்கு. சும்மா ஒரு லாங் டிரைவ் போலாமா?” என்று கேட்க, பிரியம்வதாவோ வியப்பில் விழிகளை விரித்தாள்.

பின்னே, திருமணத்திற்கு சம்மதம் சொல்லாமல் இழுத்தடித்தவனிடம் இருந்து, திருமணம் முடிந்த இரு வாரங்களில் இத்தகைய மாற்றத்தை அவள் அல்ல, அவனே எதிர்பார்த்திருக்க மாட்டானே!

அவள் கவலையை புரிந்து, தன் கஷ்ட காலத்தை அவன் மறந்திருக்க, அவன் ஏமாற்றத்தை எண்ணி, அவள் தயங்க, அங்கு அவர்கள் அறியாமலேயே தம்பதியருக்கு இடையேயான புரிந்துணர்வு அழகாக மலர்ந்தது.

அவன் வினாவில் முதலில் வியந்தாலும், பின்னர் அவளும் மனதில் தோன்றிய மகிழ்வுடன் அவனுடன் கிளம்ப ஆயத்தமானாள்.

இலக்கின்றி மௌனமாக ஒரு மகிழுந்து பயணம்!

இருவரையுமே ஒருவித புறஅமைதி ஆட்கொண்டிருந்தாலும், மனமோ கட்டுப்பாடின்றி, மற்றவரை பற்றிய சிந்தனைகளில் மூழ்கி இருந்தது.

‘லாங் டிரைவ்’ என்ற பெயருக்கு பொருத்தமாக, அவர்களின் வீட்டிலிருந்து மிக நீண்ட தூரத்தை கடந்திருந்தனர். முக்கிய நகரத்தை தாண்டி பல கிலோமீட்டர் வெளியே வந்திருந்தனர் என்பது, ஜனசந்தடி இல்லாமல், அவ்வபோது கடந்து செல்லும் ஒன்றிரண்டு வாகனத்திலேயே தெரிந்தது.

அத்தனை நேர மௌன விரதத்தை கலைத்த ஹர்ஷவர்தன், “வீட்டுக்கு போலாமா வது?” என்று வினவ, அவளோ சற்று தள்ளி இருந்த கோவிலை பார்த்தபடி, “அந்த கோவிலுக்கு போயிட்டு போலாமா?” என்று மறு கேள்வி கேட்டாள்.

இரண்டு நிமிட தொலைவில் இருக்கும் கோவில் தானே, மிஞ்சிப் போனால் பத்து நிமிடங்கள் ஆகும், அதில் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என்று எண்ணி ஹர்ஷவர்தனும் வாகனத்தை அந்த கோவில் நோக்கி செலுத்தினான்.

இந்த பயணம், அவன் வாழ்வில் மிக முக்கிய பங்காற்ற போகிறது என்றும், அடுத்து வரும் சில நாட்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக போகிறான் என்றும் அவன் அறியவில்லை!  

*****

காலை கதிரவனின் கிரணங்கள், அந்த பெரிய கண்ணாடி ஜன்னலை தாண்டி அறையையே வெளிச்சமாக காட்ட, வெற்று மார்புடன் எதையோ தேடியவனை தான் முதலில் கண்டாள், குளியலறையிலிருந்து வெளிவந்த மௌனிகா.

அந்த சத்தத்தில் அவளை நோக்கி திரும்பிய யஷ்வந்த்தோ, “என்ன பேபி, அதுக்குள்ள குளிச்சுட்ட? எழுப்பி இருந்தா, ரெண்டு பேரும் சேர்ந்தே குளிச்சுருக்கலாமே!” என்று கண்களில் முற்றுப்பெறாத உறக்கத்துடனும் மோகத்துடனும் அவன் கூற, மௌனிகாவோ வெகு கவனத்துடன், “யஷு நீங்க ரொம்ப மோசம்.” என்று முந்தைய நாட்களில் சொல்வதை போல கூறி ‘நடிக்க’ ஆரம்பித்தாள்.

அவளை அணைக்க வந்தவனை அணையிட்டு தடுத்தவள், “நான் குளிச்சுட்டேன் யஷு. நீங்களும் போய் குளிச்சுட்டு வாங்களேன். பக்கத்துல ஏதாவது கோவில் இருந்தா போயிட்டு வரலாம்.” என்று முடிந்த வரை அவன் கண்களை காணாமல் கூறி முடித்தாள்.

அதில், “எது கோவிலா?” என்று ஒருவித ஒவ்வாமையுடன் யஷ்வந்த் வினவ, “ஆமா யஷு, இன்னைக்கு அம்மாவோட பேர்த் டே. அதான் அவங்களுக்கு விஷ் பண்ணிட்டு கோவிலுக்கு போயிட்டு வரலாம் யஷு.”என்றவள், அப்போதும் அவன் பார்வை சம்மதத்தை வழங்காமல் இருக்க, “பிளீஸ் பிளீஸ் யஷு…” என்று கெஞ்சி கொஞ்சி அவனை சம்மதிக்க வைத்து விட்டாள்.

ஒருவழியாக அவன் குளியலறைக்குள் செல்ல, அத்தனை நேரம் அவனை சம்மதிக்க வைக்க போராடியவளோ சோர்வுடன் படுக்கையில் அமர்ந்து விட்டாள்.

ஆனாலும், தன் திட்டம் வெற்றிபெற்றதை எண்ணி சிறு சந்தோஷம் அவள் முகத்தில் மின்னி மறைந்தது.

பின்னே, அறைக்குள்ளே இருந்தால், அவன் வேலை என்னவாக இருக்கும் என்பதை நன்கு அறிந்தவளாகிற்றே. அதை தடுக்க வேண்டி தானே, இந்த உடனடி கோவில் முடிவு!

‘போற வழில எப்படியாச்சும் ஏதாவது சொல்லி, பகல் பொழுதை ஓட்டிடனும்.’ என்று எண்ணியவள் அறிந்தே இருந்தால், இரவை அவளால் என்ன முயன்றும் தடுக்க முடியாது என்பதை.

ஒரு பெருமூச்சுடன், அவள் அடுத்த வேலைகளை பார்க்க துவங்கியவளின் மனமோ, ‘இனி இப்படியே தான் வாழ்க்கை போகுமோ?’ என்ற கேள்வியை கேட்க, அதற்கான பதில் இப்போது அவளிடம் இல்லை!

இருவரும் அறையை விட்டு வெளியே வர, அவர்களை தாண்டி சென்ற பணியாளோ, அதை வியப்புடன் பார்த்தபடியே செல்ல, மௌனிகாவிற்கு ஒரு மாதிரி இருந்தது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத யஷ்வந்த்தோ, முகத்தை தூக்கி வைத்தபடியே வாகனத்தை கிளப்பியவன், அருகில் அமர்ந்திருந்தவளிடம், “எங்க போகணும்?” என்றான்.

மௌனிகாவோ, “பக்கத்துல இருக்க ஏதாவது ஒரு கோவிலுக்கு போலாம்.” என்றிருந்தாள். இந்த ஒதுக்குபுறத்தில் எல்லாம் கோவில் இருக்காது என்ற எண்ணத்தில் இருந்தாளோ என்னவோ!

*****

சிறு கோவில் என்றாலும் நன்றாகவே பராமறிக்கப்பட்டு இருக்க, கருவறையில் கடவுளை தரிசித்து விட்டு, பிரகாரத்தை சுற்றி வந்தனர் ஹர்ஷவர்தனும் பிரியம்வதாவும்.

சரியாக அவர்கள் முன்பகுதியை அடையும் நேரத்தில், உள்ளே நுழைந்தனர், யஷ்வந்த் மற்றும் மௌனிகா.

முதலில் மௌனிகாவை பார்த்த ஹர்ஷவர்தன் திகைத்து நின்றுவிட, தன்னுடன் வராமல் நின்று விட்ட கணவனை ஏறிட்டு பார்த்து, அவன் அதிர்ச்சியை உள்வாங்கி குழப்பமடைந்தாள் பிரியம்வதா.

இடைப்பட்ட நேரத்தில், மௌனிகாவும் ஹர்ஷவர்தனை பார்த்து அதிர்ச்சியில் இருந்தாள். ஆனால், அவன் அளவு அதிர்ச்சி இல்லை போலும். சில நாட்களாகவே, பல அதிர்ச்சிகளை கண்டிருந்ததாலோ, இல்லை இந்த சில நாட்களாக அவ்வபோது அவளின் குற்றமும், அதனால் பாதிக்கப்பட்டவனும் நினைவுக்கு வந்ததாலோ என்னவோ, மிகப்பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை.

தன்னை பிடிவாதம் பிடித்து கோவிலிற்கு அழைத்து வந்த காதல் மனைவி பிரகாரத்திலேயே தேங்கி விட, அவளை முறைக்க முயன்ற யஷ்வந்த்தோ, அவள் பார்வை சென்ற இடத்தை புருவம் சுருங்க பார்த்தான்.

அடுத்த நொடியே அங்கிருந்த சூழல் தெளிவாகி விட்டது யஷ்வந்த்திற்கு.

அதே சமயம், ஹர்ஷவர்தனின் பார்வையும், அதில் சில நாட்களாக இல்லாத கவலையுமே பிரியம்வதாவிற்கு வந்தது யார் என்பதை உணர்த்தி இருந்தது.

சங்கடமான அந்த சூழலில் முதலில் மௌனத்தை கலைத்தது யஷ்வந்த் தான்.

“பேபி, என்ன இங்கேயே நின்னுட்ட?” என்று அவளருகே வந்து உசுப்பிய யஷ்வந்த், அப்போது தான் மற்ற இருவரையும் பார்ப்பது போன்று, “ஹே, இவரை எங்கேயோ பார்த்துருக்கேனே!” என்று யோசிப்பவனை போல கூறி, சிறு இடைவெளி விட்டு, “ஹ்ம்ம், பெங்களூரு ஆஃபிஸ்ல… உனக்கு தெரிஞ்சவரா பேபி?” என்றான்.

அதில் நிகழ்விற்கு வந்த மௌனிகாவோ சிறுத்து விட்ட குரலில், “ம்ம்ம்…” என்று மட்டும் கூறி குனிந்து கொண்டாள்.

“அட, அப்பறம் ஏன் இந்த ஷாக்?” என்று மனைவியை பார்த்து கூறிய யஷ்வந்த்தோ, “ஹலோ… ஐ’ம் யஷ்வந்த். இந்த பேபிடாலோட ஹஸ்பண்ட்.” என்று ஒரு கையை ஹர்ஷவர்தனின் புறம் நீட்டியவன், மறு கையால் மௌனிகாவை பக்கவாட்டாக அணைத்துக் கொண்டான்.

அதில் சுயமடைந்த ஹர்ஷவர்தனிற்கு பார்வையை எதிரிலிருந்தவர்கள் புறம் திருப்ப சிரமமாக இருந்தாலும், தன் மௌனம் அங்கு நிலவும் சங்கடத்தை மேலும் அதிகரிக்கலாம் என்ற எண்ணத்தில், நீண்டிருந்த யஷ்வந்த்தின் கரத்தை பற்றி குலுக்கியவன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“சாரி, உங்களை எங்க கல்யாணத்துல பார்த்த ஞாபகம் இல்ல. அதான் பேரு சட்டுன்னு தெரியல. எனிவேஸ், நைஸ் மீட்டிங் யூ. நீங்க இங்க தான் இருக்கீங்களா? இவங்க உங்க ஒய்ஃபா?” என்று சரளமாக பேச ஆரம்பித்து விட்டாள் யஷ்வந்த்.

அத்தனை நேரம் மௌனிகாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து விட்ட பிரியம்வதாவோ, யஷ்வந்த்தின் கேள்வியில், கணவனின் கரத்தோடு தன் கரத்தை கோர்த்து கொண்டு, அவனருகே ஒட்டி நின்று கொண்டாள்.

ஹர்ஷவர்தனோ என்ன பேசுவது என்று தெரியாமல், தன் வேலையை பற்றி ஒற்றை வரியில் கூறி அமைதியாகி விட, “அட என்ன, கலீக்ஸ் ரெண்டு பேரும் இவ்ளோ அமைதியா இருக்கீங்க? ஒருவேளை தனியா பேசுனா தான் கம்ஃபர்டபிளா இருக்குமோ?” என்றான் யஷ்வந்த்.

அதைக் கேட்ட மற்ற மூவரும் ஒவ்வொரு விதமான திகைப்புடன் யஷ்வந்த்தை பார்த்தனர்.

மௌனிகாவிற்கு, கணவனைப் பற்றிய தன் சந்தேகம் தெரிந்து விட்டதோ என்ற அதிர்ச்சி!

ஹர்ஷவர்தனிற்கு, தங்களின் முன்னாள் காதல் கதை யஷ்வந்த்திற்கு தெரிந்திருக்குமோ என்ற பதற்றம்!

பிரியம்வதாவிற்கு, ஒரு வாரமாக சிரமப்பட்டு பழையவற்றை மறந்திருந்த கணவனிற்கு, இந்த சந்திப்பினால் மீண்டும் மன உளைச்சல் உண்டாகி விடுமோ என்ற பயம்!

ஒவ்வொருவரின் முகபாவமும் அவர்களின் மனவோட்டத்தை எடுத்துக்கூற, “சில் கைஸ்! எதுக்கு இவ்ளோ டென்ஷன்? ரிலாக்ஸ்.” என்ற யஷ்வந்த், அவர்களை நிதானத்தை அடைய விடாமல், “ஹர்ஷா, வொய் டோன்ட் யூ போத் ஜாயின் அஸ் ஃபார் தி லன்ச்? இங்க பக்கத்துல இருக்க ரிசார்ட்ல தான் நாங்க இருக்கோம். ஒரு கெட்-டுகெதர் மாதிரி இருக்கும். என் பேபியும் கொஞ்ச நாளா ஒருவித பதட்டத்துலயே இருக்கா. ஃபிரெண்ட்ஸோட இருந்தா ரிலாக்ஸா இருக்கும்ல.” என்று அடுத்த குண்டை சத்தமின்றி இறக்கினான்.

பாவம், அன்றைய தினம் யஷ்வந்த் என்ன கூறினாலும், அதற்கு திகைப்பையே பதிலாக கொடுக்க வேண்டும் என்பது ஹர்ஷவர்தனின் தலைவிதி போலும்!

மௌனிகா தான் பேச்சு செல்லும் அபாயகரமான வழியை அடைக்க, “யஷு, அவங்களுக்கு வேற பிளான் இருக்கலாம்.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

ஆனால், யஷ்வந்த் பிடிவாதமாக இருக்க, ஹர்ஷவர்தனிற்கும் அந்த சமயத்தில் மூளை வேலை செய்யாமல் போக, இறுதியில் யஷ்வந்த்தின் திட்டம் நிறைவேறியது!

இதில், பிரியம்வதாவின் நிலை தான் பரிதாபம்!

அவள் கோவில் வந்ததே, ஹர்ஷவர்தனின் மன மாற்றத்தை உணர்ந்து, அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவே!

‘வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல’, கோவிலில் ஏற்பட்ட இந்த சந்திப்பு, ஹர்ஷவர்தனின் நினைவுகளை மீண்டும் தூண்டிவிட, உள்ளுக்குள் சோர்ந்து போய், தன்னைத்தானே திட்டியும் கொண்டாள் பிரியம்வதா.

அதே நிலையில் இருந்தது மற்றொருத்தி மௌனிகா!

மற்ற மூவரின் எண்ணவோட்டத்தை அறியாத யஷ்வந்த்தோ, ஹர்ஷவர்தன் – பிரியம்வதா தம்பதியரையும் தங்களுடனேயே விடுதிக்கு அழைத்து வந்து விட்டான்.

இரு ஜோடிகளும் எதிரெதிராக அமர்ந்திருக்க, தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து விட்டு அமைதியாக இருந்தனர்.

அப்போது யஷ்வந்த்திற்கு அழைப்பு வர, “நீங்க பேசிட்டு இருங்க.” என்றவாறு தள்ளி சென்று அழைப்பை ஏற்றான்.

அதே சமயம், பிரியம்வதாவின் மனமோ குழப்ப நதியில் மிதந்து கொண்டிருந்தது.

‘ரெண்டு பேரையும் தனியா பேச விடனுமா? கூடாதா?’ என்பதே அவளின் இப்போதைய குழப்பம்!

ஒரு மனம், ‘என்னதான் இருந்தாலும், அவங்களுக்குள்ள பேசிக்க, தெளிவு படுத்திக்க சில விஷயங்கள் இருக்கும்ல. உன் முன்னாடி எப்படி பேசுவாங்க?’ என்று கூற, மறு மனமோ, ‘இவ்ளோ நல்லவளா இருந்து என்ன சாதிக்க போற? இந்த சூழல்ல நல்லவளா இருக்குறதை விட சமார்த்தியமா வாழ்க்கையை காப்பாத்திக்குறவளா இருக்குறது தான் பெட்டர்!’ என்று கூறியது.

சில நொடி போராட்டத்திற்கு பின்னர், முதல் மனமே வெற்றி பெற, “நான் ரெஸ்ட்ரூம் யூஸ் பண்ணிட்டு வந்துடுறேன்.” என்று ஹர்ஷவர்தனிடம் மென்குரலில் கூறிவிட்டு இருவருக்கும் தனிமை தனது அங்கிருந்து சென்றாள் பிரியம்வதா.

அவள் விலகிய சில நிமிடங்கள் கூட அமைதி மட்டுமே இருவரிடமும்.

பின் என்ன நினைத்தானோ, ஹர்ஷவர்தனே மௌனத்தை கலைத்து, “எப்படி இருக்க மௌனிகா?” என்று வினவ, அவன் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த மௌனிகாவின் விழிகளோ லேசாக கலங்கி இருந்தன.

அந்த விழிவழி பரிமாற்றத்திலேயே, தான் அனுபவிக்கும் அனைத்தையும் அவனிற்கு கடத்தி விட எண்ணினாளோ என்னவோ, நொடிகள் கடந்தும், அவனை நோக்கிய அவளின் பார்வையை விலக்கவில்லை. அவளின் பார்வை கூட அங்கொருத்தியின் சிந்தையை தாறுமாறாக தடுமாற செய்வதை மௌனிகா உணரவில்லையோ என்னவோ!

தொடரும்…

9 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 8”

  1. Kalidevi

    Ithu thevaiya ethuku elunthu poitu anga irunthu pathu kasta padanum un life ah pathukama ethuku intha velai . Avatha harsha love ah purinjikama pona la venum nalla but ithula etho oru suspense iruku athu veliya varanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *