Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)

வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)


அத்தியாயம்…15

எதிர்பார்க்காத சம்பவம் நடந்தால் பேச்சே வராது, திகைத்து நிற்கத்  தான் தோணும். அறிவு வேலை செய்யாது. ஸ்தமித்த நிலை அடைவோம். ராஜு அப்படித்தான் நின்றார் ஒரு கணம்….

மாலை நேரம். வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி வீட்டில் இல்லை. மயங்கி சரிந்திருந்த விவேக்கை கண்டு திடுக்கிட்டு போன ராஜு….நண்பனை தூக்கி நிறுத்த பலமில்லாமல் தவித்து கோரமாக அடித் தொண்டையில் சத்தம் போட்டார். பின் முடிந்தவரை வேகமாக அறைக்கு வந்து ஃபோன் எடுத்து பக்கத்து வீட்டுப் குமாரை கூப்பிட்டார்.

“ஹலோ….குமார்…. “

“சொல்லுங்க அங்கிள்….”

“சீக்கிரம் இங்க வரமுடியுமா.? விவேக் மயங்கி விழுந்திட்டான். பேச்சு மூச்சு இல்லே….” சொல்லிவிட்டு உடைந்து அழுதார்.

“கவலைப்படாதீங்க அங்கிள். இப்பவே வரேன்.”

விவேக்கும் ராஜூவும் அடைக்கடி வெளியில் பார்த்து பேசுவான் குமார். இளம் வக்கீல். உதவி செய்யும் மனப்பான்மை உடையவன். கல்யாணமாகி ஒரு குழந்தை உண்டு. அவன் மனைவி ரேக்காவிடம்  சொல்லிக் கொண்டு விரைந்து விவேக் வீட்டுக்கு வந்தான்.

ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ண, பத்தே நிமிடத்தில் வந்து நின்றது. ஆஸ்பத்திரியை அடைந்து டீரெட்மெண்டுக்கு அவரை அனுப்புவது வரை குமார் எடுத்து செய்தான்.

“கவலைப்படாதீங்க அங்கிள். அவருக்கு ஒண்ணும் ஆகாது.” என்று ராஜூவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

“என்னை கவனிக்கிறேன் பேர்வழி என்று அவன் தன்னை கவனிக்காமல் விட்டுவிட்டான் போலிருக்கே….”

தவித்துப் போனான் ராஜகோபால்.

டாக்டர் வெளியே வந்தார்.

“சொல்லுங்க டாக்டர். “ஹவ் இஸ் ஹீ.?” என்று ஆவலுடன் கேட்டார் ராஜு. கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

“பிளட் டெஸ்ட் ஸ்கேன் எல்லாம் எடுத்திருக்கு. ரிசல்ட் வந்ததும் சொல்றேன். அவருக்கு மையில்ட்  ஹார்ட் அட்டாக். இப்போதைக்கு அது தான் சொல்ல முடியும். வேற என்ன பாதிப்பு இருக்குன்னு டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு தான் சொல்ல முடியும்.” என்றார்.  

ராஜகோபால் ஆடிப் போய்விட்டார். குற்ற உணர்வில் தவித்தார். தன்னை கவனிக்கப் போய் தானே ஸ்ட்ரெஸ் அதிகமாகி இப்படி ஆகிவிட்டது. என்னால் எல்லோருக்கும் துன்பம் தான். அவர் சந்தியாவுக்கு ஃபோன் செய்தார். நிலமையை சொல்லி..

“உடனே புறப்பட்டு வா. என்னால் மட்டும் இவனை கவனிக்க முடியலை. ஆடி ஓட முடியலை. அவனுக்கு இன்னும் நினைவு திரும்பலை. குமாரை எவ்வளவு தான் சிரமப்படுத்துவது.?”

சந்தியா மறுநாளே வந்து சேர்ந்தாள். கூடவே அம்முவும் வந்தது. குமார் விடை பெற்றான். அவன் அலுவலகம் போக வேண்டுமே.

சந்தியா, ராஜகோபால் அம்மு மூவரும் ஆஸ்பத்திரியே கதியாக கிடந்தனர். நாலு நாள் கழித்து டாக்டர் சொன்னார்….

“ஹார்ட் அட்டாக் காரணமா, அவருக்கு டெம்பொரரி கிட்னி பங்க்ஷன் சரியில்லை. அதான் மயங்கி இருக்கார். கொஞ்ச நாள் அவருக்கு டையாலீஸிஸ் செய்ய வேண்டி இருக்கும்….”

“அய்யோ….என்ன டாக்டர் குண்டைத் தூக்கி போடறீங்க.”

“கவலை வேண்டாம் ராஜு சார். இது டெம்ரரி தான். மூன்று வாரத்தில் கிட்னி மீண்டும் பங்க்ஷன் ஆகிவிடும்.”

அது கேட்டு மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

சந்தியாவும் அம்முவும் மிகவும் உதவியாக இருந்தனர். ஆஸ்பத்திரி செலவை சந்தியா தன் காரட் மூலம் செலுத்தி விட்டாள்.

“அண்ணாவுக்கு கிட்னி பங்க்ஷன் சரியாயிடுமில்லே? பயமா இருக்குங்க.” கண் கலங்கினாள் சந்தியா.

“டாக்டர் அப்படித் தானே சொல்லியிருக்கார்.”

இரவு பகல் பாராமல் அருகே இருந்து கவனித்துக் கொண்டனர். மூன்று வாரம் கழித்து நல்ல செய்தி வந்தது.

“கிட்னி பங்க்ஷன் நார்மல் ஆகிவிட்டது. நீங்க வீட்டுக்கு கூட்டிப் போகலாம். அவர் நான் தரும் மெடிசன்சை தவறாமல் எடுத்துக் கொள்ள வேணும்.” என்ன என்ன உணவு சாப்பிடலாம் என்று லிஸ்ட் கொடுத்தார். எப்பவெல்லாம் மெடிசன் எடுத்துக் கொள்ளவேணும் என்றும் சொல்லி அனுப்பினார்.

வீட்டுக்கு வந்தாகிவிட்டது.

“பயமுறுத்திட்டியே நண்பா..”

விவேக் பலகீனமாக இருந்தார். ஆனால் உற்சாகமாக இருந்தார்.

“ராஜு..சந்தியா.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. என்னை காப்பாத்தியது நீ தான்டா ராஜு.”

“நன்றி சொல்லி என்னை அவமானப்படுத்தாதே விவேக். நீ இந்த மூன்று வாரமும் எவ்வளவு தைரியமாக உன் நோயை பேஸ் பண்ணினே. வியப்பா இருக்கு. உடம்பு சரியில்லாமல் போனதும் மையின்ட் வீக் ஆகி தப்பு தப்பா முடிவு எடுத்து சந்தியாவை பாடாய் படுத்தினேன். நீ கிரேட் டா.”

“அண்ணா….ரெஸ்ட் எடுங்க. அதிகம் பேச வேண்டாம். உங்க மகனுக்கு ஃபோன் பண்ணி சொல்ல வேண்டாமா.?

“வேண்டாம். வீணாக அவன் கவலைப்படுவான். ஐ ஆம் ஆல்ரைட்.” என்றார் சிரித்த முகத்துடன்.

எழுந்து நடமாட ஆரம்பித்தார்.

“ராஜு….உடம்பில் ஒரு குறை வந்துவிட்டால் மனுஷனுக்கு தான்  வாழவே தகுதி இல்லாதவன்னு ஒரு தாட் வந்திடுது. நம்மை பாரமா நினைப்பாங்கன்னு மனசு அஞ்சுது.”

“உண்மை தான் விவேக். அந்த ப்ரஸ்ட்ரெஷனில் தான் நான் ஹோமில் சேர விரும்பாவிட்டாலும், சந்தியாவுக்கு பாரமா இருக்கோமன்னு யோசிக்கமா ஏதேதோ செய்துவிட்டேன்….”

“ராஜு…. வாழ உடம்பு ஊனம் ஒரு தடை இல்லை. மன ஊனம் ஆகிவிட்டால் தான் மனிதன் தகுதி இழக்கிறான். பாரு நீ சந்தியாவை தற்கொலை வரை தள்ளி விட்டே. புரிந்து சேர்ந்து வாழ இப்பவும் முடியும் நண்பா. இப்ப தான் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும்ன்னு நெருங்கி வாழ அதிக வாய்ப்பு இருக்கு. லிவ் எ லிட்டில் ஃபார் யுவர் ஹாப்பினஸ்.  குட்டி குட்டி சந்தோஷங்கள் உங்களுக்கு காத்திருக்கு. சந்திரோதயத்தை ரசியுங்க. சூரியோதயத்தை ரசியுங்க. நல்ல பாட்டு கேளுங்க. புத்தகம் படியுங்க. சந்தியா கை பிடிச்சுக்கிட்டே இரவு நிலாவில் மெல்ல நடை போடு டா. சொர்கம் தெரியும். புரியுதா.? வாழ்க்கை வாழவற்கே….அழுவதற்கில்லே. சிக்ஸ்டி பிளஸ் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு நிமிஷமும் கடவுள் கொடுத்திருக்கும் போனஸ். சந்தியாவை நல்ல பார்த்துக்க. உன்னால் மட்டுமே அது முடியும். அம்மு உங்கள் வாழ்வில் வானவில். என்ஜாய் லைவ்.” என்றார்.

ஒரு நீண்ட போராட்டத்துக்கு விடை சொல்லிய அவரை பிரிவது கஷ்டமாகத் தான் இருந்தது. சேர்வதும் பிரிவதும் தானே உறவின் மொழி!. அவர் லண்டன் செல்ல, இவர்கள் தங்கள் ஊர் திரும்பினார்கள், அம்மு என்கிற தெய்வம் தந்த பூவுடன்….

சந்தியாவின் செக்கண்ட இன்னிங்சில் அவர்கள் அடிக்கடி சிக்சர் அடித்தார்கள். பவுண்டரி அடித்தார்கள். டக் அடிக்க மாட்டார்கள்.

விந்தி விந்தி நடக்கும் கணவனை பெருமையுடன் பார்த்தாள் சந்தியா. “நான் நடக்கிறேன் இல்லே….” ராஜு திருப்தி கொண்டார்.

“இன்னும் என்ன உடல் குறை வந்தாலும்….மனம் தளராத திருப்தி திருப்தி இருந்தா….அங்கேயும் சாரல் அடிக்கும்.” என்பது தான் வாழ்வின் இலக்கணம் என்று இருவரும் புரிந்து கொண்டார்கள்.

“நாங்க சந்தோஷமா இருக்கோம்க்கா.” என்று அக்காவிடம் சொன்னாள் சந்தியா. அது கேட்டு மனம் மகிழ்ந்தாள் பிரபா.

வாழ நினைத்தால் வாழலாம். மனமா இல்லை வாழ்வினில்? என்ற பாடல் அவர்களின் தாரக மந்திரம் ஆயிற்று. அந்த மனம் வேண்டும்..! இருளிலும் வெளிச்சம் வரும்.

நிறைவு.

சங்கரி அப்பன். 

வாசித்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூலில் அல்லது தளத்தில் விமர்சன பிரிவில் விமர்சனம் செய்யுங்கள். 

நன்றி. 

3 thoughts on “வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)”

  1. Kalidevi

    super epi alaga aazhamana kathai oru kanavan manaiviku nadula alagana purithal kadhal iruntha pothum eppadi nalum vazhalam udambu la oonam irukalam manasu oonama iruka kudathu .
    congrats

  2. Vayathana kaalathil utra thunai erunthal… Yenna prblm nalum face pannalam… Athu mana noi ah erunthalum sari.. Udal noi ah erunthalum sari🥳🥳nice story…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *