Skip to content
Home »   விநோத கணக்கு

  விநோத கணக்கு

  விநோத கணக்கு


       எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று.

     துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு கவலையை தந்தது.
  
     இன்னும் பத்து நிமிடம் காத்திருக்க மனம் உந்தியது. அப்பொழுது ராம் போன் வரவும் எடுத்தாள்.

    “ஹாய் பொண்டாட்டி… என்ன உங்க வீட்டு ராஜ கவனிப்பில் புருஷனுக்கு கால் பண்ணணும் என்றதே மறந்திட்டியா?” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான் ராம்.

   ஜெனிபரோ தாய் தந்தை வீட்டுக்குள் அழைக்காத கோபத்தை தன் காதல் கணவனிடம் காட்டினாள்.

    “என்ன நக்கலா ராம். எங்க வீட்ல சேர்த்துக்கலை அதனால குத்தி காட்டறியா. இதெல்லாம் உன்னால ராம்” என்று எகிறினாள்.

    “ஏ… எங்க வீட்லயும் தான் சேர்த்துக்கலை. அப்பறம் எப்படி குத்தி காட்டறதா கணக்கு வரும்.

     நீ எப்பவும் ரோட்ல இருக்கறப்ப போன் பண்ணுவியே இன்னிக்கு காணோமேனு கேட்டேன். ஒரு வேளை உங்க வீட்ல உன்னை அழைச்சி விருந்து உபசரிப்பு பண்ணறாங்களோனு. அதென்ன எல்லாம் என்னால? நீ ஒன்னும் பண்ணலை.?” என்று தங்கள் காதல் களவாணியில் அவளுக்கும் பங்குண்டு என்று இடைவெட்டி கூறினான்.
  
   “உன்னை நான் விரும்பியிருக்க கூடாது ராம்” என்றாள்.

    ஜெனிபரின் தாய் தந்தை கோபத்தை கண்டு இது போல நூறாவது முறை கூறுகின்றாள்.

   “சரி விடு.. லவ் பண்ணாதே. இப்பவெளியே தான் இருக்கியா? வரட்டுமா?” என்று கேட்டான் அக்கறையாக.

   மதியம் மணி மூன்றை தொடப்போகின்றது. இன்னமும் ஜெனிபர் சாப்பிடாமல் அங்கே வெயில் நின்றால் ராமுக்கு கவலையில்லாமலா? இரண்டு வருடம் காதலித்து மணந்தவன் வேறு.

   இந்த காதல் எப்படி தான் யார் என்று அறியாமல் எவரென்று தெரியாமல் உள்ளுக்குள் புகுந்து இரத்தவோட்டத்தில் அவன் வேண்டுமென்று அடம் பிடித்து காதலிக்க வைக்கின்றதோ.

   அறிவியல் விதிப்படி ஹார்மோன் மீது பழி சுமத்தி இந்த வினைக்கு பெயர் வைத்தாலும் தினசரி சந்திக்கும் ஆயிரம் மனிதரிடம் தோன்றாத உணர்வை ஒருவனிடம் கடத்தும் இந்த வினை விசித்திரம் தான்.

    அதுவும் ஜாதி மதம் இனம் தாண்டி முளைக்கும் இந்த உணர்வு விநோத கணக்கு.

    இருபது வருடம் நீ தான் எல்லாம் என்று தூக்கி வளர்த்த பெற்றவரை உடனே தவிர்த்து இரண்டு நிமிட பார்வையில் கலந்தவனை(ளை) கைப்பற்ற துடிக்கின்றதே.
  
     “ராம்… கொஞ்சம் குயிக்கா வர்றியா.. மயக்கமா.. வரு….து” என்று போனை சிதறு தேங்காய் போல விழ, மயங்கி சரிந்தாள் ஜெனிபர்.

    ஜெனிபர் வீட்டுக்குள் இருந்த அவளது பெற்றோர் மகள் விழவும் நாடகமென்று எண்ணி வரவில்லை. அக்கம் பக்கத்து அண்ணாச்சி வந்து சோட தெளித்திட, ராம் பதறி வந்தான்.

     அவனின் வருகையும் பதட்டமும் பார்க்கும் மக்களை ‘உச்சு’ கொட்ட வைத்திடும். அந்தளவு நேசம் வைத்தவனாய் பித்தனாய் இருந்தான்.

     சாப்பிடாமல் மயங்கியிருப்பாள் வெயில் வேறு வாட்டி வதைப்பதை கண்டு ஆட்டோ பிடித்து அவளை ஏற்றினான்.

   ஆட்டோவிலே அமரவழியின்றி தனது ஸ்கூட்டரை தொடருமாறு பணித்து வண்டியை ஓட்டினான்.

   தன்னந்தனியாக ஆட்டோவில் மயங்கிய நிலையில் மகள் செல்வது கண்ட ஸ்டீபன் கவலையானார். ஜெனிபர் தாய் ஸ்டெல்லாவா “கர்த்தரே.. என் குழந்தைக்கு என்னாச்சு” என்று சிலுவையில் இருந்த மேரி மாதாவின் முன் மண்டியிட்டு கண்ணீர் வடித்தார்.

      ஸ்டீபனுக்கே மகளின் நிலை கவலையை தந்தது.

  இதுவரை பத்து பன்னிரெண்டு முறைவந்துவிட்டாள். ஆனால் வாசலில் வைத்தே விரட்டி விட்டார். 
  
இன்று மகள் மயங்கி சரியவும் பெற்றோருக்கு அந்த சந்தேகம் துளிர்த்தது.

    ஸ்டீபன் மனைவி ஸ்டெல்லாவிடம் “ஜெனிபர் உண்டாயிருப்பாளோ? அதை சொல்ல வந்து மயங்கியிருந்தா?” என்றதும் ஸ்டெல்லாவோ “கார்த்தருக்கு நன்றி சொல்வோம். இப்ப போய் பார்க்கலாமாங்க.” என்று கண்ணீரை துடைத்து எழுந்தார்.

     மகளின் திருமணம் பிடிக்கவில்லை. மருமகன் ராமை பிடிக்கவில்லை. ஆனால் தங்கள் பேரன் பேத்தி என்று எண்ணும் போதே மற்ற அனைத்தும் தூரமானது.

      “நம்ம தெரு ஸ்டாண்ட் ஆட்டோல ஓட்டின மஸ்தான் தான் கூட்டிட்டு போனார். ஒரெட்டு அவரிடம் போய் எந்த ஹாஸ்பிடல்னு விசாரிச்சு போய் கேட்போம்” என்று ஸ்டெல்ல கூற, மஸ்தான் எண்ணை ஆட்டோ ஸ்டாண்டில் கேட்டு போன் போட்டார்.

   மஸ்தான் திரும்பி வரும் வழியில் வேறொரு சவாரி ஏற்றியதால் ஸ்டாண்டிற்கு வரவில்லை. ஆனால் சேர்த்து விட்ட மருத்துவமனை பெயரை கூறினான்.

     ஸ்டீபன் சட்டை பொத்தானை போட்டு கிளம்ப, ஜெனிபரும் கிளம்பி நின்றார்.

   இருவரும் மருத்துவமனை வந்து ரிசப்ஷனில் கேட்க, அறை எண்ணை கூறினார்கள்.

    “என்னங்க இது ரூம்ல இருக்காங்க.” என்று ஸ்டெல்லா கேட்க ஸ்டீபனும் அதானே என்று கதவை திறந்து நுழைந்தார்.

    ஜெனிபர் அழுதுக் கொண்டிருக்க, ராமோ அவள் கையை பற்றி, “ஏ சீ அழாதே. ஹார்ட் ஆப்ரேஷன் தானே. நான் பணத்தை ரெடி பண்ணறேன். ஆப்ரேஷன் பண்ணினா எல்லாம் சரியாகிடும் மா.” என்று அவனுமே அழது கையை பிடித்து ஆறுதல் உரைத்தான்.

    என்மகளுக்கு என்னாச்சு?” என்று ஸ்டெல்லா கேட்டு முன்வர, ராம் ஜெனிபர் வாசலை பார்த்தனர்.

    “என்னாச்சு… மயக்கம் என்றதும் நாங்க கர்ப்பம்னு இல்லை நினைச்சு ஆசையா ஓடிவந்தோம். ஹார்ட் ஆப்ரேஷனா? எதுக்கு என்னாச்சு?” என்று ஸ்டீபன் மருமகனிடம் கேட்டு முடிக்க ஸ்டெல்லா மகளின் முகத்தை கையில் தாங்கி குலுங்கினார்.

  “அதுவொன்னுமில்லைங்க. ஏதோ இதயத்துல சின்னதா ஓட்டை இருக்காம். அதனால உடனடியா ஆப்ரேஷன் பண்ண சொல்லிருக்காங்க.” என்று விவரித்தான். சாதாரணமாக ஒன்றுமில்லையென்றாலும் ராமின் கண்கள் கலங்கியதில் ஸ்டீபன் அறிந்தது மகள் மீது அவன் கொண்ட காதலை.
 
       ஸ்டெல்லாவும் ஜெனிபரும் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பழகிட, மாமா என்று ராமோ, மாப்பிள்ளை என்று ஸ்டீபனோ உறவை விளிக்கவில்லை என்றாலும் ஏதோவொன்று அவர்களை பிணைத்தது.
  
       ஸ்டெல்லா ஜெனிபர் இருவருமே இந்த விநோத கணக்கிற்கு தலை வணங்கி ஏற்றுக்கொண்டார்கள்.

     ராமின் குடும்பமும் விரைவில் ஜெனிபரை ஏற்கும்.

-சுபம்.
பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “  விநோத கணக்கு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *