Skip to content
Home » வெண்மேகமாய் கலைந்ததே-21

வெண்மேகமாய் கலைந்ததே-21

அத்தியாயம்-21

   ஏழாம் மாதம் பிருந்தாவிற்கு வளைகாப்பு என்று விஹான் வந்திருந்தான்.

       சர்வானந்தன் தான் வலுக்கட்டாயமாக தம்பியை அழைத்திருந்தான்.

   “டேய் கல்யாணம் தான் தனியா பண்ணிட்டோம். வளைகாப்பாவது விமர்சையா பண்ணுறாங்க. நீ வந்தே ஆகணும்” என்று கட்டாயப்படுத்த, வந்துவிட்டான் விஹான்.

    தாம்பூலம் பையில் வெற்றிலை பாக்கு வாழப்பழம் போட்டுக் கொண்டிருந்தாள்  மானஸ்வி. விஹான் வரவும் சலசலப்பும் நலம் விசாரிப்பும் கேட்க ஒவ்வொருத்தருக்கும் பதில் தந்தான். யோக லட்சுமி அவனுக்காக வாங்கி வைத்த உடையை அணிய கூறினார்.
  அவனுமே உடை மாற்றி வந்தான்.

     ஆளாளுக்கு சர்வா திருமணத்தை சொல்லாமல் நடத்தியது போல விஹான் திருமணத்தை முடித்திட போகின்றான். ஊர் கூட்டி விமர்சனையாக செய்ய கூறினார்கள்.

‌ பிருந்தா பிரசவம் முடிய அடுத்து இவன் திருமணம் என்று யோக லட்சுமி ஆசைக்கொண்டார்.

  எதற்கும் வளைகாப்பு முடியவும் யாரையாவது விரும்பறானா என்று கேட்டுவிட்டு பெண் பார்க்க நினைத்தார்.

  சுதாகரோ, “உன்‌ பையனிடம் நீயே கேளு.‌ நான் ஏதாவது கேட்டு கோபப்பட போறான்.” என்று எழுந்து சென்றுவிட்டார்.

  செல்ல மகன் விஹானை பிரிந்தது அவரை அவ்வாறு பேச வைத்துவிட்டது. 

    “வாளைகாப்பு முடிய பேசுவதாக யோக லட்சுமி கூறினார். முன்னரே கேட்டு வளைகாப்பு விழாவிலிருந்து சென்றுவிட்டால்?! செய்ய கூடிய பிடிவாதக்காரனே.

   ஆளாளுக்கு பரபரப்பாய் வேலை செய்ய, “எனக்கும் ஏதாவது வேலை கொடுங்க” என்று வந்தான்.

   மானஸ்வியோ சாக்லேட் தட்டை தந்தாள்‌. அவனோ புரியாமல் “எனக்கு சாக்லேட் பிடிக்காது” என்று தட்டை எட்டி நிறுத்தும் பொறுட்டு தடுத்தான்.
 
  “வேலை கேட்டிங்க… சாக்லேட் பையில் போடணும்” என்றதும் அவள் கொடுத்தது புரிய வாங்கி பையில் போட்டான்.
 
   யோக லட்சுமி மகனுக்காக சர்பத் எடுத்துவர, பங்கஜம் பிருந்தாவின் தலையலங்காரத்தை கவனித்தார்.

  சர்வானந்தன் கடமையிலிருந்து வீட்டிற்கு இன்னமும் வரவில்லை.

  தந்தையும் மாமாவும் மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.
   வந்திருந்த கொஞ்ச உறவில் அசதியாக இருக்க காபி போட கூறுவதற்கு கிச்சன் பக்கம் போனார்கள்.

   விஹான் மானஸ்வி மட்டும் தனித்திருந்தனர்.

  “நீங்க நல்லாயிருக்கிங்களா?” என்று பயந்து பயந்து கேட்டாள்‌.

   “சௌவுக்கியம்” என்று பேசியவன் எழுந்துவிட்டான்.

  ஒரு வார்த்தை பேசியதற்கு எழுந்துவிட்டாரே என்று மனதாங்கலோடு வேலையை பார்த்தாள்.

  விஹான் நினைத்தால் ஏதாவது பேசியிருக்கலாம். வினோத்தை பார்த்து பேசியதை கேட்டிருக்கலாம். ஆனால் சர்வா மூலமாக அறிந்ததால் இவளிடம் எதுவும் பேசவில்லை.

   இந்த அவமானம் தேவையா? என்று மனம் கேலி செய்தாலும், இவனிடம் இந்த முகத்திருப்புதல் குதர்க்கமான  பேச்சு பழகியவளாக கடந்தாள்.

    மணி பத்துக்கு மண்டபம் சென்றார்கள். மண்டபம் முழுக்க கூட்டம்‌ குமிந்திருந்தது.

    மானஸ்வியும் மண்டபத்திற்கு வந்திருந்தாள். ஆனால் ஒரு ஓரமாய் இருந்துக் கொண்டாள்‌‌.
   யோக லட்சுமி கூப்பிட்டு பார்த்து அலுத்துவிட்டார். பங்கஜமும் கூடவே இரும்மா என்றதற்கும் மானஸ்வி மறுத்துவிட்டாள்.

   “சொந்தக்காரங்க தான் கூடயிருக்கணும்‌. அதான் முக்கியம். நான் இங்க தான் இருக்கேனே” என்று விடாப்பிடியாக மறுத்தாள்.

    வளையல் போடும் போது மட்டும் நான் போடலாமா ஆன்ட்டி?’ என்று அதற்கும் தயங்கினாள். ஆனால் பிருந்தாவிற்கு சந்தனம் பூசி வளையல் போட ஆசைப்பட்டவளாய் செய்தாள்.

   அதன் பின் உணவருந்தி பிருந்தா அவர்கள் அம்மா வீட்டுக்கு அப்படியே செல்லும் வரை சர்வானந்தன் குடும்பத்தோடு இருந்தாள்.

பிருந்தாவை இன்னிக்கு பெத்தவங்க வீட்டுக்கு அனுப்பணும் அதான் சாஸ்திரம்னு சென்னதால் அனுப்பினான் சர்வா. அது கூட “நாளைக்கு வந்துடு” என்ற கோரிக்கையோட அனுப்பி வைத்தான்.
   எப்படியும் மறுபிறவியாக சர்வா வந்ததால், மகளை அவனோடு அனுப்ப தான் அவர்களும் விரும்பினர்கள்.

     வீட்டுக்கு வந்தப்பொழுது மாடிக்கு சென்றாள் மானஸ்வி.     

   ‘சரி அப்ப நான் கிளம்பறேன்” என்று காலையில் அறையில் வைத்த பையை தூக்கினான்.

   யோக லட்சுமி பையை பறித்து தூக்கி போட்டு, “அந்த மனுஷன் வரவர ஓடா தேய்ந்து போறார். உனக்கு ஏன்டா இவளோ ரோஷம்.
மன்னிப்பு கேட்டார்ல மன்னிச்சு இங்க இருந்தா என்ன? இனி எங்கயும் வெளியூர் போகாத. என் கூட தான் இருக்கணும். அப்படி போறதா இருந்தா என்னை பொணமா பாத்துட்டு போ” என்று அழுதார்.

  விஹானோ “இந்த சென்டிமெண்ட் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று பையை எடுத்தான்.

   சர்வாவோ, “டேய் நானும் பார்க்கறேன் ஓவரா பண்ணற. இப்ப வாசல் தாண்டின என் கூட இனி ஜென்மத்துக்கும் பேசாத” என்று கடுப்பாய் மொழிய, வாசல் தாண்டாமல் நின்றான்.

  “என்ன என்ன செய்ய சொல்றிங்க?” என்று கோபமாய் கேட்டான்.
    
  “நீ எங்களோட இருக்கணும். யாரையும் விரும்பலைன்னா அம்மா அப்பா பார்க்குற பொண்ணை கட்டிட்டு வாழ” என்று சர்வா கூறவும சோஃபாவில் வந்த விஹான் பத்து நிமிடம் யோசித்து “எவளையாவது பாருங்க. டவுரின்னு கேட்டு என் மானத்தை வாங்காதிங்க.
  ஆஹ்.‌‌.. ஆப்டர் மேரஜாவது தனிக்குடித்தனம் போகலாமா? என்று மிடுக்காய் கேட்டான்.

   “ஜாயின் பேமிலியா இருக்கணும் இது அப்பாவோட கனவு. சும்மா தனியா ஓட கனவுகானாத. நீ யார்கிட்டயும் பேசலைனாலும் கூடவே நடமாடு” என்று சர்வா கடமை தவறாத அதிகாரியின் டோனில் கட்டளையிட்டு முடித்தான்.‌

   “என்னவோ பண்ணி தொலைங்க. நான் யாரையும் விரும்பலை.” என்று அறைக்கே திரும்பினான்.

   “நாளைக்கு பிருந்தா வந்ததும் பொண்ணு பார்க்க போகலாம் அம்மா. அப்பா இப்ப சந்தோஷமா. அவன் நம்மளை விட்டு போக மாட்டான். கொஞ்சம் கொஞ்சமா பேசுவான்” என்று சர்வானந்தன் சுதாகரிடம் தெரிவிக்க, அவரும் சரிப்பா.” என்று வேலையை தொடங்கினார்.

  மகனுக்கு பெண் பார்க்கும் வேலையை தொடங்க, யோக லட்சுமி மானஸ்வி தங்கள் வீட்டில் இரவு சாப்பிட வரும் நேரம், விஹானுக்கு பெண் பார்க்க போவதாக கூறினார்.

  “வாவ் ஆன்ட்டி, இன்னொரு விழா, சிறப்பா செய்திடுவோம்‌. பொண்ணு போட்டா இருக்கா? அவர் பார்த்தாரா?” என்று ஆர்வமாய் கேட்டாள்.

   “இல்லைம்மா… நேர்ல கூட்டிட்டு போய் காட்டலாம்னு இருக்கோம்” என்று கூற ”அதுவும் சரி. உங்கப்பையன் போட்டோ பார்த்து குறை சொன்னாலும் சொல்வார்.” என்று சிரித்தாள்‌.

   சுதாகரோ அம்மாடி “நாளைக்கு உன் கையால அன்னைக்கு செய்த அண்ணாச்சி கேசரி செய்துடு. நல்ல விஷயமில்லையா” என்றதும் “சரிங்க அங்கிள்” என்று ஆனந்தமாய் கூறினாள்.

   விஹானோ ‘எவ வந்து சிக்கப்போறானு தெரியலை. சோ சேட். என் சுதந்திரம் பறிப்போக போகுது” என்று உறங்க சென்றான்.

   அவள் எப்படியிருப்பாளோ என்ற கனவுகளை அவன் துரத்திவிட்டான்‌. அதனால் கனவுகளும் அவனை கண்டு மிரண்டு ஓடியது.
  
   அடுத்த நாள் பத்து பத்தரைக்கு கிளம்ப வேண்டும் என்று சர்வா கூறியிருக்க, குளித்து முடித்து வாசனை திரவியம் தெளித்து, சாண்டல் பேண்ட் பிளாக் ஷர்ட் என்று வந்து நின்றான்.

  சுதாகருக்கு இதே மற்ற நேரமாகயிருந்தால் நல்ல காரியத்துக்கு போறோம் பாரு உன் பையன் கறுப்பு சட்டை போடறான்னு சண்டைக்கு வந்திருப்பார்.

  ஆனால் இன்று அதிருப்தி கலந்த பார்வையை வீசி சர்வாவிடம் முனங்கி சென்றார்.

  “ஏன்டா உன்கிட்ட எத்தனை ஷர்ட் இருக்கு. கறுப்பு தான் போடுவியா?” என்று சர்வா கடிய, “மை ஃபேவரிட் கலர் பிளாக். இப்படி தான் போடுவேன்.‌ பொண்ணை தானே மேன் பார்க்கணும். பொண்ணு ஏன் என் டிரஸை பார்க்ணும். என் மூஞ்சியை பார்த்தா போதும்” என்று வாயடைத்தான்.

   வாசலில் ஆட்டோ வந்து இறங்க, பிருந்தா இறங்கினாள். கூடவே அவள் அம்மா பங்கஜமும், அப்பா அப்புசாமியும் இறங்கினார்கள்.

   ஏதோ நீண்ட நாட்கள் பின் மனைவியை கண்டவனாக சர்வானந்த் அவளை தாங்கி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

     “எல்லாரும் வந்தாச்சு… பொண்ணு வீட்டுக்கு போகலாம்.” என்று சர்வா கூற, கார் சாவியை எடுத்தான் விஹான்.

  சர்வாவோ அந்த பொண்ணு வீட்டுக்கு கார்ல போக முடியாது.” என்று தம்பியிடமிருந்து சாவியை வாங்கி அதேயிடத்தில் மாட்டி மாடிக்கு போக கூறினான்.‌

  விஹானோ மாடிப்படியில் சர்வா கையை காட்டியதும், ‘நினைச்சேன்’ என்று சலித்துக் கொண்டு மாடிப்படி நடந்தான்.

சுதாகர் முதலில் பையன் மறுத்து கீழேயிருங்குவதாக நினைத்தார். ஆனால் மறுத்து ஆடும் ஜம்பத்தை கைவிட்டிருந்தான் விஹான்.‌

   ஏனெனில் அவரவர் முகத்தில் இருந்த ஆர்வம். ஏமாற்றத்தை தந்திடாதே என்று ஏக்கமாய் பார்த்தது.

     தன்னை பொண்ணு பார்க்க ஒரு குடும்பமே வருவதை அறியாத மானஸ்வி, டாப்ஸ் ஸ்கர்ட் என்று அணிந்து அதிலும் ஸ்கர்டை இடையில் தூக்கி சொருகி கேசரியை ருசி பார்த்தாள்.‌

  ”மானஸ்வி” என்ற பிருந்தா குரலில், “பிருந்தா அக்கா வந்துட்டிங்களா? இரண்டு நிமிஷம் அடுப்பை அணைச்சிட்டு வந்துடறேன்” என்று குரல் கொடுத்தபடி கேசரியை பாத்திரத்தில் மாற்றினாள். அவள் மாற்றும் போதே மொத்த குடும்பம் வந்திருப்பதை கண்டாள்.

    ஹால் ரூம் என்றிருக்கும்‌ இடம்.

ஹாலில் தான் இன்டெக்ஸ் ஸ்டவ் வைத்து சிறிது கிச்சனாக ஒதுக்கிருந்தாள். 

மொத்த குடும்பம் நிற்க, “பொண்ணு பார்க்க போகலையா?” என்று ஸ்கர்டை இறக்கி, நெற்றியில் பூத்த வேர்வையை கையால் துடைத்தாள்.‌

  “பொண்ணு பார்க்க தான் வந்தோம்‌. பொண்ணு கையால கேசரி சாப்பிட்டு பேசுவோம்” என்று சர்வா கூறவும், மானஸ்வி அதிர்ச்சியில் உறைந்தாள்.

   அதிவேகமாக பயம் கவ்வியது. யோக லட்சுமி அருகே வந்து, நான் கேசரி எடுத்து வைக்கிறேன். நீங்க போய் நிதானமா பையனை பிடிச்சிருக்கானு கேளுங்க” என்று கூற பிருந்தாவும் சர்வாவும் மானஸ்வியை அறைக்குள் அழைத்து  சென்றனர்.

   “சார்… என்ன சார் இது?” என்று விழித்தாள்.‌

  “அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். அவரை போலவே விஹான் செய்வதை பார்த்து அதட்டி நியாயம் பேசறியாம்.
   இந்த மாதிரி பொண்ணு விஹானுக்கு பார்ப்போம்னு சொன்னார். அம்மாவுக்கு இதே பொண்ணு பார்ப்போம்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கும் உன்னை பிடிச்சிருக்கும்மா.” என்று விவரித்தான்.‌

  “சார் அவருக்கு என்னை கண்டாலே பிடிக்காது. நீங்க அவரிடம் சொல்லாம கூட்டிட்டு வந்துட்டிங்க.” என்று தவிர்க்க, “அவன் பொண்ணு பார்க்க வந்துயிருக்கான்.” என்று கூற மானஸ்வி ஜன்னல் வழியாக எட்டி பார்க்க, கறுப்பு சட்டை சாண்டல் பேண்ட் அணிந்து கேசரியை திண்றுக்கொண்டிருந்தான்.

  “சார் அவருக்கு பிடிக்கலை. பாருங்க கறுப்பு சட்டை போட்டு சிம்பாலிக்கா சொல்றார். இது விபரீதம் சார்” என்று மறுத்திட, “அய்யோ அதெல்லாம் இல்லை. அவனுக்கு பிடிக்காம ஓரடி கூட முன்ன வைக்க மாட்டான்.‌

முப்பத்தி ஐந்து படி ஏறி மாடிக்கு வருவானா?” என்றதும் மானஸ்விக்கு அதுவும் சரி தான். பிடிக்கவில்லை யென்றால் போய்க்கொண்டே இருக்கும் ஆள்’ என்று புரிந்தது. ஆனால் இதுவரை முகம் திருப்பி செல்பவனிடம் வாழ்க்கையே வாழ்வதா? இதில் நேற்று நலம் விசாரித்ததும் எழுந்து சென்று விட்டானே. மீண்டும் மறுக்கும் முயற்சியாக, தலையாட்ட, “ஏன் நீ யாரையாவது விரும்பறியா?” என்று பிருந்தா கேட்டாள்.

  மானஸ்வி “இல்லைக்கா. காதல் மறிச்சிடுச்சு. நான் யாரையும் விரும்பலை‌. ஆனா இவரை பார்த்தா பயமாயிருக்கு. முதல்லயிருந்தே இவருக்கு என்னை பிடிக்காது” என்று கூற, விஹான் கேசரி தட்டுடன் வந்தான். ”பச்… சமைக்கும் போது  தலையை கட்டிட்டு சமைக்கணும்.” என்று அவளது முடியை தனித்து எடுத்துவிட்டு முறைத்தான்.‌

  “நான் வேற எடுத்துட்டு வந்து தர்றேன்” என்று பயந்தாள்.

    தலைக்கு குளித்ததால் ஃப்ரீ ஹேர் விட்டதாக கூறினால் அதற்கும் திட்டலாமென்று அவன் கடிந்ததிற்கு வார்த்தை உதிர்க்காமல் நின்றாள்.
 
“சாப்பிட்டாச்சு” என்று கேசரியை வழித்து முடித்து காலி கிண்ணத்தை தந்தான். “நான் இதுவரை யாரையும் விரும்பியதில்லை. எனக்கு எங்க வீட்ல பார்த்த பொண்ணு, பார்க்கவும் நல்லா தான் இருக்கு.” என்று அவளருகே யாரிடமோ பேசுவதாக கூறிவிட்டு, ”சர்வா அண்ணா அவளுக்கு ஓகேன்னா சொல்லுங்க. நான் கீழே போறேன். ஓகே இல்லைன்னாலும் சொல்லுங்க அப்படியே ஊருக்கு போறேன்.” என்று கூறவும், மானஸ்வி அவன்
பேச்சில் தவிப்பாய்  நின்றாள்.

    விஹான் கீழே செல்லவும் சர்வாவோ, “சம்மதம் சொல்லும்மா. இல்லைன்னா திரும்ப வெளியூர் வெளிநாடுனு இதான் சாக்குன்னு கிளப்பிடுவான். எங்க வீட்ல அவன் கல்யாத்துக்கு ரொம்ப ஆவலா இருக்கோம்.” என்று கேட்க, கலங்கிய விழிகளோடு, “நான் இங்க புது வாழ்வை வாழ்ந்துட்டு இருக்கேன். கல்யாணம் என்பது மூடுவிழாவா நினைச்சேன். இப்ப… இப்ப இந்த மாதிரி சூழலை சத்தியமா எதிர்பார்க்கலை.

  எனக்கு அவரை கண்டா பயம் சார்‌. மத்தபடி உங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்” என்றாள்.

  “அதெல்லாம் பழகிட்டா அவனை புரிந்துக்கறது ஈஸிம்மா” என்று கூற, மானஸ்வி தயக்கமாக நிற்க, பிருந்தாவோ “கல்யாணத்துக்கு உன்‌ சம்மதம் கேட்டு தான் அத்தை மாமா வெளியே வெயிட் பண்ணறாங்க. ஏன் கீழே போனவன் கூட உன் பதிலுக்கு காத்திருக்கலாம்.” என்று கூற, திக்கென்றது.‌

   கீழே போனவன் நாளைப்பின்னே ‘எனக்கா ஓகே சொல்ல அவ்ளோ நேரம் யோசிப்பியா?’ என்று பிற்காலத்தில் சண்டையிட்டாள். அந்த நொடி விஹானுக்கு சம்மதிக்க மனம் பதில் தந்ததை உணர்ந்தாள்.

  “சரிக்கா சம்மதிக்கறேன்” என்றாள்.

  அதன் பின் அந்த செய்தி கீழே புறப்பட தன் துணியை எடுத்து வைத்தவன் காதிற்கு தாய் தந்தை அண்ணன் அண்ணியின் மகிழ்ச்சி சத்தமாக விழவும், ‘தப்பிக்கலாம்னு பார்த்தேன். மாட்டிக்கிட்டேனா?’ என்று தாடை பற்றி சிந்தித்தான்.‌
 
     -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
  

5 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *