Skip to content
Home » வெண்மேகமாய் கலைந்ததே-22

வெண்மேகமாய் கலைந்ததே-22

அத்தியாயம்-22

  திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தப் பின்னும் வேலை விஷயமாக ஊருக்கு தான் கிளம்பினான்.

   சர்வா கூட “ஏன்டா வெளியூர் போற? இங்க இருக்கலாமே” என்று கேட்டதுக்கு”நம்ம தாத்தா வேலை போட்டு தர்றார்ல உடனடியாக மாறி இங்க வர்ற. ஏற்கனவே பார்த்த ஐடி ஜாப் தூக்கி போட்டு தான் அங்க சேர்ந்தது. இப்ப உடனடியா இங்க வேலைக்கு மாற்றல் கேட்கணும். மெயில் பண்ணி சொல்லிருக்கேன்.

    கல்யாணத்துக்குள்ள இங்க வந்துடுவேன்.” என்று பொத்தம் பொதுவாய் கூறினான். அதில் தந்தை சுதாகருக்கும் சேர்த்து அச்சப்பட வேண்டாமென்று உரைத்தான்.

  பிருந்தாவோ அப்படியே பையை தூக்கி புறப்படும் எண்ணத்தில் இருந்தவனிடம், “விஹான் ஒரு வார்த்தை மானஸ்வியிடம் சொல்லிட்டு போ.” என்று எடுத்துரைக்க, சர்வாவும் “ஆமாடா. தனியா பேசிட்டு வா” என்றான்.‌

  “இல்லை அதெல்லாம் வேண்டாம் அக்கா. அவருக்கு நேரமாகும்” என்று அவனை அப்படியே விரட்டும் எண்ணத்தில் இருந்தாள் மானஸ்வி‌.

   “சொல்லிட்டு போகட்டும்மா… விஹான் மாடில கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துடு.” என்று யோக லட்சுமி கூற, கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்து முதுகு பையை கழட்டி வைத்து மாடிப்படியில் நடந்தான்.‌

   இதற்கு மேல் மறுத்தால் சரிவராதென்று பின் தொடர்ந்தாள்.

   அன்ன நடையிட்டு வந்தவளுக்கு முன் வந்தவன் அங்கிருந்த பூச்செடியில் இருந்த பூக்களை உற்றுநோக்கியிருந்தான்.

  அவள் வந்ததை அறிந்தவனாக, “எங்கண்ணா சர்வாவுக்கு மட்டும் இது மறுஜென்மம் இல்லை. உனக்குமே இது மறுஜென்மம் தான். இதுவரை உன் ஹர்ட் பண்ணிருந்தா சாரி. சர்வாண்ணா உன்‌ நம்பர் தந்தான். சேவ் பண்ணிருக்கேன். டைம் கிடைக்கும் போது மெஸேஜ் பண்ணுவேன்.‌ உனக்கு ஏதாவது என்கிட்ட பேசணும்னு இருந்தா சொல்லு கேட்டுட்டு கிளம்பிடுவேன்” என மொழிய, கையை பிசைந்து, “எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை. ஆனா உங்களுக்கு உண்மையா இருப்பேன். வேற சொல்ல ஒன்னுமில்லை‌.” என்றதும், இருவரும் கீழியிறங்கி வந்தார்கள்.
 
   “ஓகே.. நான் வர்றேன்” என்று “அம்மா… கேரட்டா வாங்கி சுதாகருக்கு ஜூஸ் போட்டு கொடுங்க. கண்ணு நல்லா தெரியட்டும்.” என்று கடுப்படித்து சென்றான்.‌ என்ன இந்தமுறை சிரித்த முகமாக சென்றான்.

   சுதாகருக்கு அதுவே மகிழ்ச்சியை தந்தது.

    தினசரி விஹான் மானஸ்வியிடம் பேசுவதற்கு நினைப்பான். ஆனால் ஏதோவொன்று தடுக்க, டைப்பிங் செய்தவை எல்லாம் மளமளவென அழித்து விடுவான்.

   இவனே இப்படி என்றால் மானஸ்வி அதற்குமேல்.‌

  அவளாக பேச ஆசைப்பட்டு அவன் குதறிவிட்டால்?

   ஏற்கனவே அனுபவம் உண்டு என்பதால் அவனாக பேசட்டுமென காத்திருந்தாள்.

   யோக லட்சுமி சுதாகர் இருவரும் விஹானை பற்றி கதை கதையாக அவிழ்த்து விடுவார்கள்.

  சுதாகர் பேசுவது எல்லாம்‌ கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். சந்தடி சாக்கில் விஹானை திட்டவும் செய்வார். பாராட்டவும் செய்வார்.

  யோக லட்சுமி பிருந்தாவை கண்ணும் கருத்துமாய் கவனிப்பார் என்றால், சுதாகர் விஹானை பற்றி பேசி பேசியே மானஸ்வியிடம் நல்ல நட்பை உருவாக்கியிருந்தார்.
 
   சர்வாவிற்கு தந்தை மீண்டும் கலகலப்பான பேர் வழியாக மாறினார் என்பதே சந்தோஷம் கொண்டான்.

  இடையிடையே “அவன் பேசினானாம்மா” என்று கேட்க, கொஞ்ச நேரம் மௌனம் உரைத்திட, “எத்தனை தடவை பேசுடான்னு சொல்லிட்டேன். அநியாயத்துக்கு அமைதியா இருக்கான்.” என்று பிருந்தாவிடம் புலம்புவான்.

   தம்பி தன்னிடம் பேசும் போது அன்று பிருந்தா மானஸ்வியை வைத்துக்கொண்டே போனில் கேட்டுவிட, விஹானோ “என்னனு பேச? அந்த பொண்ணை முதல் தடவை பார்த்ததிலருந்து கடைசியா வீட்லயிருந்து புறப்பட்ட வரை திட்டியிருக்கேன்‌. இப்ப சட்டுனு மாத்தி பேச முடியலை சர்வா. அந்த பொண்ணை பிடிக்காம எல்லாம் இல்லை. நல்ல பொண்ணு, நல்லா படிப்பு வேலை, அவ விரும்பின பையன் வினோத் அவன் கூட வழக்குக்கு போறதுக்கு முன்ன அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

ரோட்ல அனாதையா சுத்தற குழந்தையை கடத்தி விற்கற வேலையில் , கூட்டுல ஒருத்தனா வேலை செய்தவன்‌. இவளை லவ் பண்ணி உண்மையா இருந்தான். அதனால் தான் மன்னிப்பு கேட்டு இவளுக்காக அப்ரூவரா மாறிட்டான். உனக்கே தெரியும் அப்ரூவராகி கோர்ட்ல பேசிட்டு வந்தவனை கொண்ணுட்டாங்க‌.‌ ஆனாலும் அப்படிப்பட்டவனையே திருத்தி நல்லபடியா வாழணும்னு யோசிக்க வச்ச பொண்ணு.

  நிச்சயம் அவங்க கல்யாணமாகியிருந்தா அந்த பையன் நார்மலா வாழ்ந்திருப்பான்.  இவ வாழ வச்சியிருப்பா‌‌. அப்படி ஒரு கேரக்டர்.
  இப்ப என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சிட்டா. பழைய லைப் மறந்துட்டா… ஆனாலும் நான் என்ன சொல்வேன் பேசுவேன்னு பயந்து போறா. அவளிடம் என்னனு ஆரம்பிக்க” என்று பேசியவனுக்கு லேசான அழுகை சத்தம் கேட்டது.

  “சர்வா… சர்வாண்ணா… இடியட் அந்த பொண்ணு இருக்காளா?” என்று கோபமானான்.

  “அந்த பொண்ணு இல்லைடா. மானஸ்வி. மானஸ்வி லைன்ல இருக்கா பேசு. பிருந்தா நாம வெளியே போவோம். பேசிட்டு வரட்டும்‌” என்று கூப்பிட, “இல்லை இருங்க ப்ளிஸ். அக்கா.” என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.

  கதவை தாழிட்டு சென்றுவிட்டார்கள் உள்ளே “பிருந்தாஅக்கா… சர்வாமச்சான்” என்று தட்டுவது கேட்டதும், “மானஸ்வி” என்ற குரல். விஹானிடமிருந்து போனிலிருந்து வந்தது.

    “ஹலோ… அழுதோ, இல்லை கதவை தட்டியோ பிரயோஜனம் இல்லை. அவன் வேண்டுமின்னே லாக் பண்ணிருப்பான்.” என்று விஹான் பேசினான்.

  “எனக்கு இந்த ஆரம்பம் எடுத்துவைக்க தான் முடியலை. பச்.. எனக்கு உன்னை பிடிக்கும். நிஜமா நீ நல்ல பொண்ணு. வினோத்துக்கு லக் இல்லை.” என்று கூறினான்.‌

“இங்க பாருங்க..‌. என்னை பத்தி மட்டும் பேசுங்க. எவனையும் இழுக்காம பேசுங்க. நான் நல்லவ கெட்டவ எந்த சர்டிபிகேடும் வேண்டாம்.” என்று படபடப்பாய் பொரிந்தாள்.

  “ஓகே.. ஐ அம் சாரி” என்று கேட்டான்.‌
 
  “அதிசயமா இருக்கு சாரி கேட்கறிங்க? மாமா சொன்னார்‌ நீங்க யாரிடமும் சாரி கேட்க மாட்டிங்கன்னு.” என்றதும், லேசாய் சிரித்து, “ஆமா.. என் ஈகோ உடைச்சிட்டு நான் கீழிறங்கி வரமாட்டேன்” என்றான்.‌

  “உண்மை சொன்னதுக்கு கோவில் கட்டலாம்‌” என்றதும் “ம்ம் கட்டு கட்டு உன் இதயத்துல..‌ கல்யாணமாகி புருஷனே தெய்வம்னு வணங்க உபயோகமா இருக்கும்” என்றான் விஹான்.‌

   மானஸ்வி சிரித்திடும் சப்தம் ஸ்வரமாய் கேட்க, “உன்னை முதல் முறை அழுத முகமா பார்த்தேன். இப்ப தான் நீயே சிரிக்கற. என் பேச்சு உனக்கு சந்தோஷத்தை தரும்னா தினமும் கால் பண்ணறேன்” என்றதும் மானஸ்வியோ “ம்ம்” என்றுரைத்தாள்.

  இந்த போன் சர்வாவுடையது. நான் கட் பண்ணிட்டு லேண்ட் லைன்ல அவனை கதவை திறக்க சொல்லறேன்.‌ அப்பறம் பிரேக் டைம்ல உன் போனுக்கே கால் பண்ணுவேன். அட்டன் பண்ணு.” என்று கூற மானஸ்வி “ம்ம்ம்ம் ஓகே.” என்று துண்டித்தாள்.

   சற்று நேரத்தில் லேண்ட்லைன் அலறல் அதை தொடர்ந்து கதவு திறந்தனர்.‌

   மானஸ்வி சிரித்த முகமாக போனை சர்வாவிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.

அடுத்தடுத்த நாட்கள் மாதங்கள் அலைப்பேசியில், பேச ஆரம்பித்தார்கள்.
  
  மானஸ்வி விஹான் பெண் பார்த்தப்பின் போனில் உரையாடி திருமணத்திற்குள் ஓரளவு மனம் ஒன்றியவர்களாக மாறிட முயன்றனர்.

  இதற்கு நடுவில் சர்வாவிற்கு ஆண் வாரிசு பிறந்தது. அக்குழந்தையை பார்க்க சித்தப்பன் என்ற முறையில் விஹான் பறந்து வந்தான்.‌
  
‌ சர்வாவை உறித்து வைத்து, கையை காலை ஆட்டிய குழந்தையை கொஞ்சி முடித்தான்.

  குழந்தையை பார்த்துமுடித்து மானஸ்வி அருகே அமர்ந்தான்.‌ அவளுக்கு நடுக்கம் கூடியது.

    “செம க்யூட்டா இருக்கான்.‌ அத்தையும் அம்மாவும் அடிச்சிக்கறாங்க. பங்கஜம் அத்தை பிருந்தா மாதிரி இருக்கான்னு சொல்லறாங்க. எங்கம்மா சர்வா மாதிரி இருக்கான்னு சொல்லறாங்க.” என்று இயல்பாய்‌ உரையாடி, “சர்வா எங்க?” என்று கேட்டான்.‌

   “மச்சான் டேப்ளட் வாங்க போயிருக்காங்க” என்றாள்.

   அவளருகே அமர்ந்தவன் இயல்பாய் போனை எடுத்து, சர்வா எண்ணிற்கு அழைத்தான்.
   மானஸ்விக்கு தான் விஹான் கைகள் அவளது கைகளோடு உரசுவதில் சிலிர்க்க ஆரம்பித்தது.

  இதற்கு முன்‌ நிரஞ்சன் வீட்டுக்கு செல்லும் போது ஆட்டோவில் இதே போல அமர்ந்த நினைவு.

  சற்று தள்ளி அமர கூறலாம். ஆனால் சொல்வதற்கு பயம் உண்டானது. ஆனால் உடல் கூச்சத்தில் நெளிந்தாள்‌

  அவனுக்கு பயமோ கூச்சமும் இல்லை. “சர்வாவுக்கு லைன் போகலை.
இதான் மேரேஜ் இன்விடேஷன் கார்ட்‌. உனக்கு ஓகேவா பாரு” என்று திரும்ப, “என்னாச்சு.. ஸ்வெட்டா இருக்கு? ஹாஸ்பிடல் புல் ஏசியாச்சே?” என்று கைக்குட்டையால் துடைத்தான்.

   அவன் அக்கறையில் மிரண்டவளிடம், “ஹலோ இன்னும் நாற்பது நாள் இருக்கு. இதுக்கே இப்படி வேர்த்தா எப்படி? ம்ம்” என்று கேட்டான்.‌

   அவன் திருமண நாளை கணக்கிட்டு கூற, வெட்கமும் அச்சமும் போட்டிக்கொண்டு முகத்தில் ததும்பியது.

  “பேச்செல்லாம் போன்ல மட்டும் தான்.‌ நெருங்கி வந்தா வேர்க்குது.

  ஹலோ மேடம்… பத்து நாள்ல வீட்டுக்கு மொத்தமா வந்துடுவேன். என்னை எப்படி பேஸ் பண்ணுவிங்க” என்று கேட்டான்.‌

   சந்தோஷம், சேட்டை, பயம், வெட்கம், யாரேனும் பார்த்தால் கேலி செய்வார்களோ என்ற பதபதப்பு, ஏதேனும் பேசி கூடுதலாக பதட்டத்தை கொடுப்பாரா என்ற திகில், இதே போல நெருக்கமாய் திருமணத்தன்று இவனோடு நிற்க வேண்டுமென்ற ஆசைக்கனவுகள், என்று ஒவ்வொன்றாய் உணர்வுகளுக்கு மொட்டு வெடிக்க, அவள் முகத்தில் தன் உதடு குவித்து ஊதி கவனத்தை கலைத்து ‘இன்விடேஷன் கார்ட் பார்த்து சொல்லு” என்று சுட்டிக்காட்டினான்.‌

   “ரொம்ப அழகாயிருக்கு. நீங்களா டிசைன் பண்ணியதா மாமா சொன்னார்.” என்று பெருமை பேச, “அவர் என்ன சொல்லிருப்பார்னு எனக்கு தெரியாதா? அந்த திமிர் பிடிச்சவன் அவனா தான் இன்விடேஷன் கார்டை டிசைன் பண்ணுவானாம். நம்ம ஒன்னை செலக்ட் பண்ணினா வேண்டாம்னு சொல்லிட்டான்.’ இந்த டயலாக் எங்கம்மாவிடம் சொன்னார் தானே?” என்று கேட்டான்.‌

  இல்லையென்று தலையாட்டி, “என் பையனுக்கு டிசைனிங் பீல்ட் அவனா செய்வான். நம்ம சொந்தக்காரங்க அடுத்து அவனோட பத்திரிக்கை பார்த்து மிரளப்போறாங்கன்னு சொன்னார்‌” என்று பேசவும் விஹான் மௌனமானான்.

  “எங்க அவரு?” என்று கேட்டான்.

   “நீங்க பத்திரிக்கை வாட்ஸப்ல அனுப்பியதும் அதை கொண்டுட்டு போயிட்டார். கையோட வந்துட்டா நீங்க ரிட்டர்ன் போறப்ப உங்க ஆபிஸ்ல பத்திரிக்கை வச்சிட்டு வந்துடுவிங்க. உங்களுக்கு வேலை ஈஸின்னு மாமா போயிருக்கார். அப்புசாமி பெரிப்பாவும் கூடயிருக்கார். இங்கயிருந்தாலும் வேலையில்லை” என்றவள் இயல்பாய் உரையாடுவதை நுணுக்கமாய் கவனித்தான்.‌

  “நீ இதுக்கு முன்ன என்னிடம் இப்படி பேசியதில்லை. ஒன்னு என்னை பார்க்கவே மாட்ட. திமிரா போவ. நீயா பேசவும் மாட்ட. ஏதாவது நான் கேட்டாலும் மௌனமா கடந்துடுவ.” என்று போனில் பேசுவது போல நேரில் கேட்டான்.‌
  இந்த சந்திப்பும் பேச்சும் தான் முதல் நேரிடை உரையாடல். மீதியெல்லாம் போனில் தான்.

  மிக ஆர்வமாக பேறுகால மருத்துவமனை என்றதை தாண்டி வராண்டாவிலிருந்த பேசினார்கள்.‌

    “பேசக்கூடாதுனு இல்லை… நீங்க பேசி ஏதாவது நான் சொல்ல நீங்க சண்டைப்போடற மாதிரி பதில் சொல்விங்க‌. அதனால் பதில் பேச பயம். அதோட நானா பேசினா எங்க இழிவா நினைப்பிங்களோன்னு ஒதுங்கினேன்.‌ காட் பிராமிஸா திமிர் எல்லாம் இல்லை. உங்களை பார்க்க முன்ன பயமிருந்தது. நீங்க என் டிரஸை கிழித்தப்ப அழுதுட்டேன்” என்று கூறவும், அவள் மனநிலை அறிந்தவனாக, “புத்திசாலி பொண்ணு முட்டாளா காதலிச்சதா கோபம். நம்ம பேசினா கம்முனு போகுதேனு திமிர் என்ற பட்டம் வச்சிட்டேன்.‌ பைனலி… நான் உன்‌ டிரஸை கிழிக்கலை. சும்மா டச் பண்ணினேன். அது இத்துப்போன டிரஸ் கிழிஞ்சுடுச்சு.

ஆஹ்… பட்டு எடுக்கும் போது கூட வருவேன். நானே டிரஸ் செலக்ட் பண்ணுவேன். வீட்ல குழந்தை இருப்பதால் யாரும் வெளியே போய் எடுக்கலை. கடையில் இருப்பதை தான் வீட்டுக்கு கொண்டு வர சொல்லிருக்கு. ஒரு நாள் லீவு போட வேண்டியதா இருக்கும்.” என்று தங்கள் திருமணத்தின் வேலைகளை மனம் திறந்து பேசி பழகி இதயம் ஒன்றாக இணைந்த ஜோடி, மணநாளுக்கு காத்திருக்கின்றான் விஹான்.

  அவனோடு மானஸ்வி தன் பெரிய பெரிய கஷ்டங்கள் கருமை சூழ்ந்திருக்க, கொஞ்சம் கொஞ்சம் இருந்த சுவடு நீங்கி வெண்மேகமாய் கலைந்து சென்றது.

ஆசைகள் நிறைவேற அவனின் காதல் கைப்பிடியில் சிக்கி தவிக்கும் நன்னாளை அவளுமே ஆவலுடன் வரவேற்க மனதளவில் தயாராகினாள்‌.

  விரைவில் சர்வானந்தன்-பிருந்தா பையனுக்கு பெயர் சூட்டு விழா முடித்து இவர்கள் திருமணம் சுபமங்கள நாளில் நடந்தேறும். மறக்காமல் அன்று உங்கள் வாழ்த்தை தெரிவியுங்கள்.‌

சுபம்

  • பிரவீணா தங்கராஜ்

  அப்படியே கதையை முடிச்ச எனக்கும் வாழ்த்து சொல்லுங்கப்பா. எத்தனையோ டென்ஷன்ல இந்த கதையும் நல்லபடியா கொடுத்து முடிச்சிட்டேன்.

  எனக்கு எப்பவும் ஆதரவு தந்து என் எழுத்தை மெருக்கேற்றும் அன்பு வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எப்பவும் போல உங்க கமெண்ட்ஸா பார்த்து சந்தோஷப்படறேன். பதிலுக்கு நன்றி என்ற கமெண்ட்ஸ் போடலைன்னு நீங்க கமெண்ட்ஸ் போடாம நிறுத்திடாதிங்க. எனக்கு உங்க கருத்துகள் மட்டுமே எதிர்பார்ப்பேன்.

நன்றி 😊

நெஞ்சை கொய்த வதுகை எழுதிட்டு  இருக்கேன். அலப்பறை கல்யாணம் இரண்டு நாள் ஆகும்.

8 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-22”

  1. Kalidevi

    romba naal ethirpathu kathai varama irunthathuku serthu kathai titile mari vanthalum latest ah vantu superb poi superb ending ah mudinji iruku . vihan manasvi seranum niancha mari avaluku nalla supportive ah irunthu mrg panikiranga .
    SUPERB SUPERB SUPERB SISY. CONGRATULATIONS

    TITLE ku etha mariye kathai irunthathu

  2. Avatar

    Super ending 🫰🫰🫰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🎈🎈🎈

  3. Avatar

    அழகான கதை 💐 வாழ்த்துக்கள் 💐
    Go with the flow solluvangale antha mathiri good feel story 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *