விசும்பில் சிறகு விரித்து பறந்த பறவைகள் வீடு திரும்புகிறது…
ஏனாம்?
வற்றாத நீருடைய ஆழியில் யாரோ நீரை முகந்தெடுத்து சென்று விட்டனராம்!
யாரோ?
வேறு யார்? வெண் முகில் கூட்டங்கள் நீரையள்ளி மண்டிவிட்டு பெருத்து கருத்துவிட்டதாம்!
ஓகோ!
அகன்ற வெளியில் வீசுகின்ற காற்றில் கலந்தனவாம்!
கலந்து?
பின் என்ன? முகில்கள் அதிர்ந்தனவாம்!
அதிர்ந்து?
இடி இடித்ததாம்! மின்னல் முளைத்ததாம்!
எதற்காம்?
முருகன் வீட்ரிறிருக்கும் மலையை, முகில் தொகுதிகள் மழைத்துளிகளால் அபிஷேகம் செய்யத்தான்!
– குறிஞ்சிப்பாட்டு
குறிட்சிப்பாட்டில் குழைந்துபோன மலைமுகடுகள் அதிகம். பெரும் ஆரவாரத்துடன், முகில் கூட்டங்கள் முரசு கொட்டி அறிவித்துக் கொண்டே மலையில் மோதி நீர் திவளைகளாய் மாறும் காட்சி குறிஞ்சி மலைக்கொரு பெருந்திணை.
மண்ணில் பட்ட ஈரம், அவளின் மேலும் துளிர்த்திருந்தது. மூங்கில் தோட்டத்தின் வாசம் அவள் மேலும் இருந்தது. பத்தடி தூரத்தில் இருக்கிறேன். ஆனாலும் அவளை உணர்கிறேன். தொட்டணைக்கும் தூரத்தில் இருந்தாலும் இந்த தாபம் மட்டும் குறைவதாய் இல்லை. திருமணம் ஆகும்வரை இப்படித்தான் இருக்குமோ. இல்லை திருமணம் முடிந்தாலும் இப்படித்தான் இருக்குமா? தித்திக்கும் இரவுகள் மனச்சித்திரத்தில் மங்கலாய் வந்து வந்து போனாலும், அவளை நேரில் சந்தித்தபின், அதை என்னுடைய மனதால் செயல்படுத்த முடியுமா என்று தெரியாது.
இந்த மனம் இப்படித்தான் போல. பல ரகசியங்களை ரகசியமாகவே வைத்திருக்கும். இந்த மலையும் மழையும், தூர்ந்து போனதாய் நான் நினைத்துக் கொண்டிருக்கும் என் உணர்வுகளை தூர் வாரி எடுத்துவிட்டது. மனதில் தோன்றும் காதலை பகிர்ந்து கொள்ள வந்த தருணத்தில், காமத்தை பகிர்ந்து கொள்ள முடியாதே. அதனால் மறைந்திருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவள் காத்திருக்கும் அழகும்… நொடிக்கொருமுறை கடிகார முட்களைப் பின்தொடரும் அவளின் விழியும், ஏதோ திருட்டுத்தனம் செய்யப்போவதாய் தவிக்கும் அவள் மனமும், நேரில் சென்று நின்றால் தெரியாதே.
இதென்ன வேதனை… காதல் வந்ததும், அழையா விருந்தாளியாய் காமமும் வந்தொட்டிக்கொள்கிறது. அழையாமல் வந்தாலும் விருந்தோம்பல் நம் பண்பல்லவா? விரைவாய் விருந்தோம்பி, பதமாய் அனுப்பிவிட்டு அவளின் முன் சில அடிகளை எடுத்து வைத்தேன்.
என்னைப் பார்த்ததும் அழகாய் புன்னகைத்தாள்.
“வந்துட்டீங்களா?” என்று அருகில் வந்தாள்.
“ம்ம்ம்.. ரொம்ப நேரமாச்சா? என்று நான் கேட்க, “இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனா ரொம்ப நேரம் ஆன மாதிரி இருக்கு..” என்றாள் அவள்.
அவளும் படபடப்பில் இருக்கிறாள் என்று புரிந்தது. ரகசியமாக நான் சிரித்துக் கொள்ள, அது அவள் விழிகளிலிருந்து தப்பவில்லை.
“இல்லை.. தெரியாத இடம். அதான் பயமா இருந்துச்சு..” என்றாள் அவள்.
போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு பயமெல்லாம் இருக்கலாமா? என்று விளையாட்டாய் கேட்கத் தோன்றியது. ஆனால் இன்னும் பரிமாறப்படாத பதார்த்தமாக காதல் இருக்கையில், அதீத உரிமை எடுத்துக் கொள்வது எதார்த்தமில்லையே! அதனால் அமைதி காத்தேன்.
காதலை சொல்ல அவனும், கேட்க அவளும் வந்திருக்கின்றனர். அவளுக்கும் அவன் மேல் காதல் உண்டென்று தெரியும். இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் ஆண்கள் தான் பிள்ளையார் சுழி போட வேண்டும் போல.
அவள் எப்படியும் ஏற்றுக் கொள்வாள் என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும்… ஆனாலும்… மறுத்துவிட கூடாதே என்று மணிக்கொரு முறை மரித்துக் கொண்டே இருக்கும் மனதை ஆற்றுப்படுத்தி, நீ தைரியமாக சொல் என்று முன்னே தள்ளினால், ‘சொல்லு.. சொல்லித்தான் பாரேன்’ என்று வடிவேலு பாணியில் மூளை மனதை பத்தடி பின்னுக்கிழுக்கிறது.
குற்றவாளியை அடித்து துவைத்த கைகள் வலுவிழந்ததுபோல் இருக்கிறது.
‘அட.. நீ இவ்வளவு கோழையா என்று மனம் காரித் துப்புகிறது..”
‘அதெல்லாம் இல்லை.. காதலை சொல்வதில்தான் தயக்கம். அதுவும் அவள் மறுத்தால் தாங்க முடியாத இதயத்தை சுமந்திருப்பதால் பயம். மற்றபடி அவள் ஆம் என்று சொல்லட்டும். அப்புறம் பார் என் வீரத்தை’ என்று மனசாட்சிக்கு பதிலுரைத்துக் கொண்டான்.
ஏதோ சிந்தனையில் இருந்த என்னை அவளின் செருமல் கலைத்தது.
“அங்க உட்காரலாமா?” என்றாள்.
“ம்ம்ம்..”
ஒரு திட்டில் அமர்ந்தோம். மீண்டும் அமைதி. மரியானா அகழியின் ஆழத்தில் இருக்கும் அமைதி. என் முகம் பார்க்க நாணி அமர்ந்திருந்தாள் அவள். அவளின் முகம் மட்டுமே என் விழிகளுக்கு விருந்தாய்.. பருவத்தின் பருக்கள் கூட அழகுதான். அது பிடிக்காமல் பாதி கிள்ளி வைத்திருப்பாள் போல. கன்னல் பார்வையும், கார் கால குழைவும் தேங்கிய குரலில்,
“ஜஸ்ட் ப்ரேக் தி சைலன்ஸ் ப்ளீஸ்..” என்றாள். என் மனவோட்டங்களில், காதலை பகிர்ந்துவிட்டதாக மனப்பால் குடித்துக்கொண்டிருந்த என்னை நினைவுலகுக்கு கொணர்ந்தாள்.
“மௌனம் ரொம்ப அழகு நிலா..”
“ம்ம்ம்… இருக்கலாம்.. ஆனால் பல சமயங்களில் அதன் கணத்தை தாங்க முடியாது..”
‘சொல்லுக்குள் பொருளை ஒளித்து வைத்து உனக்கு மட்டும்தான் பேச வருமா?’ என்று அவள் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.
“வாழ்க்கை முழுக்க அப்போ சுவாரஸ்யமா போகும் போல..” என்று நான் மீண்டும் பொருளொளித்து வைக்க, அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.
மனம் கொஞ்சம் இறகைப் போல் லேசானது. அவள் நாணத்தில் அதிர்ந்து கோழையாய் திணறிய மொழிகள், அவளின் கண் சிமிட்டலில் வீரு கொண்டு எழுந்து நிற்கிறது.
“நிறைய பேசணும்னு வர சொன்னேன். ஆனா வார்த்தைகளை ஏனோ தேடி தேடி களைச்சு போயிட்டேன்..” என்று ஒருவாறு நீண்ட நெடிய வாக்கியத்தை உதடுகள் பிசிறில்லாமல் உமிழ்ந்துவிட்டது.
என் திணறலும் திண்டாட்டமும் அவளுக்கு பிடித்திருக்கும் போல.
“நான் வேணா இப்போ போயிட்டு நாளைக்கு வரவா?” என்றாள் கேலியாக.
ஆணின் நாணம் பெண்ணை உசுப்பிவிடும் போல.
“நானும் கூட வரேன்..” என்றேன். அட நம்மை கேலி செய்துவிட்டாளே என்ற பொய் கோபம்.
“எங்க?”
“நீ எங்கெல்லாம் போறியோ அங்கெல்லாம்..”
“ம்ம்ம்… போலாமே..” என்று சிரித்துக் கெண்டாள் அவள்.
ஊரில் உள்ள அனைவரும் அவனைக் கண்டு அஞ்ச, அவன் ஒருத்தியிடம் அஞ்சுவது அவளுக்கு பிடித்திருக்க வேண்டும்.
கோணல் மாணலாய் ஒரு காதல் பரிமாற்றம் நிகழ்ந்து முடிந்தது.
இனி வாழ்க்கை முழுக்க ஆயிரம் முறை, ‘ஐ லவ் யூ’ சொல்லப் போகிறான். ஆனால் இன்று சொல்ல தோன்றவில்லை.
“என்னவெல்லாம் பிடிக்கும் உனக்கு?” பேச்சை வளர்க்கும் முன்னுரைக் கேள்வியை தொடுத்துவிட்டேன். பிடித்தங்கள் தெரிந்து கொள்வது தொன்றுதொட்ட வழமையாயிற்றே.
“இப்போதைக்கு எதுவுமே பிடிக்கலை.. ஒன்னைத் தவிர..” என்றாள் அவள்.
“நேரடியாவே பேசமாட்டியா நீ?”
“நிறைய பேசுவேன்..”
“என்னை ஏன் பிடிச்சிருக்கு?” என்றேன்.
“காரணம் தெரியலை.”
“அது தெரியாம என்னை தனியா சந்திக்க வந்துட்ட?”
“இதுக்கும் பதில் இல்லை..”
“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?”
“கஷ்டம்தான்.. ஆனா ரொம்ப கஷ்டம் கிடையாது..”
அவளை என்ன செய்வது என்று பார்த்தேன் நான். எது கேட்டாலும் நம்மை குழப்பும் பதில்கள்.
அவள் எதிர்வீட்டுக்காரி. தோழிகளுடன் எதிர்வீட்டில் தங்கியிருக்கிறாள். முனைவர் பட்டம் பெற முனைந்து உழைத்துக் கொண்டிருக்கும் முதுகலைப் பட்டதாரி. அவள் இதுவரை இப்படியெல்லாம் பேசியதில்லை. அவன் காவல் அதிகாரி வேறு. மிகவும் சம்பிரதாய பேச்சுக்கள் மட்டுமே இருக்கும். என் பார்வைகள் பின்தொடர்வது அவளுக்கு தெரியும். அதில் கிளர்ந்து முளைத்தெழுந்த காதல்தான் இது.
இருட்டத் தொடங்கியது. பூச்சிகளின் ரீங்காரம் காதையடைத்தது. குறிஞ்சி மலையின் பச்சை கிளர்ச்சி மயங்கிக் கொண்டிருந்தது. வெளிச்சத்தில் மிளிர்ந்துருகா மீநிலம், சாய்ந்துருகி மதிப்பிழந்து கொண்டிருந்தது.
ஒன்றாக நடந்தனர் ஓங்கலின் ஒற்றையடிப்பாதையில். ஊதைக்காற்று உடலுக்குள் ஊடுருவ, அவளுடைய துப்பட்டாவை போர்வையாக்கினாள். உள்ளுக்குள் சென்று உரசிக்கொண்டு சூடேறவும் சூடேற்றவும் ஆசைதான் எனக்கு. ஆனால் அதற்கு சில சந்திப்புகள் காத்திருக்க வேண்டும். அதற்காக ஏங்கும் இத்தருணமும் தித்திக்கும் தருணம்தான். தொட்டால் சருங்கிப்போவாளோ அனிச்சம் மலர் போல் என்று தொடாமலே என் பயணம் தொடர்ந்தது.
முத்தமிடாமல், அள்ளியணைக்காமல், ஆரத்தழுவாமல் மேனி சிலிர்த்துவிட்டேன். உள்ளத்தில் கள்வெறி கொண்டுவிட்டேன். கற்பனையில் கட்டியணைத்து, என் மோகம் தீர்த்துக் கொண்டேன்.
“என்ன எதுவும் பேசாமையே வர்றீங்க?”
உள்ளத்தின் கள்ளத்தனம் தெரிந்தால், தண்டித்துவிடுவாளோ? என்று தொற்றிக் கொண்ட பயத்தை புறம் தள்ளிவிட்டு, “கொஞ்சம் மௌனம் தேவையாய் இருக்கு” என்றேன்.
நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பிற்கு வந்துவிட்டோம். எனக்கு பிரிந்து செல்ல மனமில்லை.
“வீட்டுக்கு வந்து ஒரு காஃபி குடிக்கலாமே?” என்றேன்.
சில நொடி யோசனைக்குப்பின் சரியென்றாள். அவளுடைய தோழிக்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டு என்னுடைய வீட்டிற்குள் வந்தாள்.
என் வீட்டில் புழங்காத அறைகளே அதிகம். படுக்கையறை தவிர, வேறு அறைகளில் எனக்கு வேலையே இருந்ததில்லை. அவளை அமரச் சொல்லிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தேன்.
மீண்டும் இரு கோப்பைகளுடன் நான் வரும்பொழுது, சாய்விருக்கையின் நுனியில் சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள் அவள். துப்பட்டா மறைத்திருந்தாலும், அவளின் இதயம் வேகமாய் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. விழிகள் எல்லை மீறுவதை என்னால் தடுத்தாள முடியவில்லை. தடுக்க முயலவில்லை என்றும் கூறலாம்.
“என்ன ஆச்சு? ஏன் டென்சனா இருக்க?”
“ஒண்ணுமில்லை..” என்று ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டாள். அறை மணி நேரம் அவளை தேங்க வைக்க, நான் போட்ட தேனீர் திட்டம் பெரிதாய் கைகொடுக்கவில்லை. ஐந்தே நிமிடத்தில் கிளம்புகிறேன் என்று நின்றாள்.
எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. அப்படி என்ன செய்துவிடப் போகிறோம். கிளம்ப துடியாய் துடிக்கிறாளே.. என்று உள்ளத்தில் கடிந்து கொண்டிருக்க, “கொஞ்சம் தனிமை தேவைப்படுது” என்றாள்.
எனக்கும் தனிமைதான் தேவைப்பட்டது. அவளுடனான தனிமை. அவள் கேட்ட தனிமையல்ல.
இரண்டு நாட்கள் ஊருக்கு போவதாக அறிவித்துவிட்டு, அவள் சென்றுவிட்டாள். நான் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். அவளில்லாத தனிமை வெறுமையாய் இருந்தது.
இந்த கணம் மனம் தனிமையை தாங்க முடியாமல் தவித்தது. கடந்து போகும் மணித்துளிகளைப் பிடித்து வைத்து, அவளுடன் கரம் கோர்த்து கடந்து சென்றால் பாரம் குறையும் போல தோன்றியது. அலைபேசி எண் கூட வாங்காது தவிக்கும் மடமையை என்னவென்று சொல்வது. காதல் மொத்தமாய் அவனை கோழையாக்கிய உணர்வு. அதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வில் இதுவரை கொன்று குவித்த நாட்களில் இல்லாத உணர்வுகள் வரிசைகட்டி, அவனை ஆட்கொண்டு, அலைக்கழித்தது.
அன்றிரவு எப்படி கடந்தது என்றுதான் தெரியவில்லை. கடிகார முட்களை கேட்டறியலாம். கணம் தப்பாமல் உடன் விழித்திருந்து கடிகார முட்கள்தான். வெளியில் காய்ந்து கொண்டிருந்த நிலா மகள், அவன் உள்ளத்தில் உறைந்து போயிருந்தாள்.
காதல் பகன்று சில மணி நேரங்களே கடந்த நிலையில், அவளில்லாமல் வாழ்வே இல்லை என்று தோன்ற காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தித்தேன். பதிலில்லை. தீண்டாமலே எரியும் தேகமும், முயங்கிவிட்ட மனமும் ஏன் என்று சிந்தித்தித்தேன். அதற்கும் பதிலில்லை.
மயங்கி மழுங்கிபோயிருக்கும் மனதை அவளுடனே சென்று தொலைத்திருக்கலாமே என்று வசைபாடிவிட்டு, குளியலறைக்குள் நுழைந்தேன். தவித்திருக்கும் தேகத்திற்கு தண்ணீர் பத்தாது. இருந்தாலும் முயன்று பார்க்கலாம் தகிப்பை தணிக்க முடியுமா என்று…
பசலை பழி தீர்த்துவிட்டதோ? கையில் இருந்த வெள்ளிக் காப்பு கழண்டு விழுந்தது. சத்தமாக சிரித்துக் கொண்டவன், காப்பை எடுத்து மீண்டும் கையில் அணிந்துகெண்டான்.
மழை தொடரும்…
Love flow ipadi over flow aaguthu aana enna aalu yaru nu mattum solla vae illayae
Neenga kandu pudingalen….
nice interesting