Skip to content
Home » இருளில் ஒளியானவன்-7

இருளில் ஒளியானவன்-7

ஒளியானவன் 7

தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்கு வந்த விஷ்ணு அவர்களது சிறுவயது காலத்தை நினைத்துப் பார்த்தான்.

சாரங்களின் குடும்பம் வசதியான குடும்பம் என்பதால் அவன் படிப்பு முடித்ததும் வியாபாரத்திற்காக அவனது தந்தை அவனுக்கு பண உதவி செய்ய, தனது தொழிலைத் தொடங்கிய சாரங்கன், அதில் நல்ல முன்னேற்றமும் அடைந்தார்.

அன்பரசுவும் விஷ்ணுவின் தந்தை சாரங்கனும் நண்பர்களானதால், அன்பரசுவின் அருகிலேயே இருக்க விரும்பிய சாரங்கன், அவரின் வீட்டிற்கு அருகிலிருந்த வெறுமையான இடத்தை வாங்கி வீடு கட்டி, சங்கீதாவை திருமணம் முடிந்ததும் குடியேறினான். அடுத்த வருடத்திலேயே அவர்களுக்கு விஷ்ணுவும் பிறந்து விட்டான்.

மருத்துவ படிப்பு முடிந்ததுமே கேசவனுக்கு, அவனது முறைப்பெண் மாலாவை திருமணம் செய்து வைத்தனர் அவர்கள் வீட்டில். அவர்களுக்கும் ஒரு மகன் இருக்க, வருடங்கள் கழிந்த பிறகு தான், அன்பரசுக்கு லட்சுமியை திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, அவனது தாய் அவருக்கு இருந்த நோயின் தாக்கத்தினால் வைஷ்ணவி, லட்சுமியின் வயிற்றில் குழந்தை உருவாகி இருக்கும் பொழுது இறந்துவிட்டார்.

ஏற்கனவே தாய் இல்லாமல் வளர்ந்த லட்சுமிக்கு, அன்பரசுவின் தாயும் இறந்ததும், மிகவும் கலங்கினார். அவளுக்கு உதவியாக மாலாவும் சங்கீதாவுமே இருந்து கவனித்துக் கொண்டனர்.
நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை வைத்து வீட்டிலேயே வளைகாப்பையும் நடத்தினார்கள் கேசவம் சாரங்கனும்.

சொந்தங்கள் இல்லாமல் வளர்ந்த லட்சுமிக்கு. அன்றிலிருந்து இருவரின் மீதும் ஒருவித சகோதர பாசம் உருவாகி, அண்ணா அண்ணா என்று எப்பொழுதும் அவர்களிடம் பேசி, புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொண்டார்.

அன்பரசு வேலைக்குச் சென்றிருக்கும் பொழுது, அவளுக்கு பிரசவ வலி எடுக்க அன்று ஓய்வாக வீட்டில் இருந்த சாரங்கனே அவளை அழைத்துக்கொண்டு கேசவன் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். தகவல் அறிந்து அன்பரசும் விரைவாக வர, சற்று நேரத்திலேயே பெண் குழந்தையை ஈன்றெடுத்தார் லட்சுமி.

அன்பரசுக்கு, தன் தாயே தனக்கு மகளாக பிறந்து விட்டார் என்று மகிழ்ந்து, சோர்வாக இருந்த தன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து, “நமக்கு அம்மா கிடைச்சுட்டாங்க” என்றார்.

அந்த நெகிழ்வான தருணம் இருவரும் மனதிலும் பசுமரத்தாணி போல் பதிந்தது. குழந்தை பிறந்தது கேள்விப்பட்டு மாலா தன் மகன் மகேஸ்சையும் சங்கீதா தனது மகன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர்.

இரு தாய்மார்களும் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு மருமகள் வந்துவிட்டாள் என்று மகிழ, நண்பர்கள் இருவருமே தம் தமது மனைவியை கண்டித்தனர்.
“உங்கள் இஷ்டத்திற்கு மனதில் ஆசையை வைத்துக்கொண்டு அதை இளையவர்கள் மனதில் தினிக்காதீர்கள். அவரவர்கள் வளர்ந்து என்ன முடிவு செய்கிறார்களோ அதன்படி தான் நடக்க வேண்டும். சும்மா பேச்சுக்காக எதையாவது பேசிக்கொண்டு இருக்காதீர்கள்” என்ற திட்டவட்டமாக கூறியதால், அதன் பிறகு இருவருமே சாதாரணமாக பேச ஆரம்பித்தனர்.

பிள்ளைகள் வளர இரு தாய்மார்களுக்கும் வைஷ்ணவியை தங்கள் மருமகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது வேறு கதை.

தங்களது குழந்தைக்கு வைஷ்ணவி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். வைஷ்ணவி பிறந்த நேரம் தனது தொழிலில் முன்னேற்றம் அடைந்தார் அன்பரசு. செல்ல மகளாகவும், தன் தாயே தனக்கு மகளாகவும் பிறந்ததாக நினைத்த அன்பரசு “குட்டிமா, குட்டிமா” என்று மகளிடம் அதிக பாசமும் நேசமும் வைத்து மகிழ்ந்தார்.

சிறு குழந்தைக்கே உரிய மழலைப் பேச்சு வைஷ்ணவியின் மீது மேலும் அனைவருக்கும் ஈர்ப்பு உண்டாக்கியது. பார்த்ததும் கிள்ளி கொஞ்சத் தூண்டும் குண்டு கன்னங்கள். அபிநயம் பிடித்து கதை பேசும் கண்கள், என்று அவளை விட்டு நம் கண்கள் அகலாது.

வருடங்கள் ஓட மகேஷும் விஷ்ணுவும் படிக்கும் பள்ளியிலேயே தன் ஆரம்ப கல்வியை தொடர்ந்தாள். இரண்டாவது படிக்கும் மகேஷ் அவளை தங்கை போல் பத்திரமாக பார்த்துக் கொள்ள, விஷ்ணுவோ அவளிடத்தில் வம்பு வளர்த்துக் கொண்டே இருப்பான்.

விஷ்ணு பக்கத்து வீடாகவும் போய்விட்டான் அல்லவா? அவளிடம் எப்பொழுதும் வம்பு வளர்த்துக் கொண்டே இருந்தான். முதலில் அவன் சொல்வதற்கெல்லாம் அழுது கொண்டே இருந்த வைஷ்ணவி, வளர வளர அவனை எதிர்த்து பேச ஆரம்பித்தாள்.

முன்பு கிண்டல் செய்யும் பொழுது அமைதியாக இருந்த வைஷ்ணவி, இப்பொழுது தன்னிடம் பதிலுக்கு பதில் பேசுவது மிகுந்த கோபமடைந்தான் விஷ்ணு. அதில், “ஏய் குண்டம்மா, என்னிடம் எதிர்த்து பேசாதே. நான் சொல்றத கேட்கவில்லை என்றால் அவ்வளவு தான்” என்று ஒரு விரல் நீட்டி எச்சரிப்பது போல் ஒரு முறை அவன் சொல்லிவிட,

உடனே அழுது கொண்டே வீட்டிற்கு வந்த வைஷ்ணவி, தன் தந்தையிடம் விஷ்ணு சொல்லி திட்டியதை கூறினாள்.

புன்னகைத்துக் கொண்டே “அண்ணன்தானே குட்டிமா. விளையாட்டாக கூறியிருப்பான். இதற்கெல்லாம் அழலாமா?” என்று மகளின் கண்ணீரை துடைத்து விட்டார் அன்பரசு.

அப்பொழுது அங்கு வந்த விஷ்ணு “என்ன அங்கிள், சின்ன பிள்ளை போல அழுதுகிட்டு இருக்காளா?” என்று அவளை நக்களாக பார்த்துக் கொண்டு அன்பரசு மடியில் அமர்ந்திருந்த வைஷ்ணவியை இழுத்து கீழே விட்டுவிட்டு அவரது மடியில் அமர்ந்தான்.

உடனே வைஷ்ணவி கோவமாக, “இது என்னோட அப்பா, தள்ளுடா!” என்று அவனை இழுத்து தள்ளிவிட்டு, அவள் மீண்டும் அவரது மடியில் அமர, அவனும் அவரின் மடியில் உட்கார சண்டை போட்டான்.

இருவரது சிறுபிள்ளை விளையாட்டைக் கண்டு புன்னகைத்த படி, இருவரையும் சமாதானப்படுத்தினார் அன்பரசு.
விஷ்ணுவின் கைகளை பிடித்துக் கொண்டு “உன் தங்கச்சி தானே, இப்படி பண்ணலாமா?” என்று கேட்க,
“இவள் எனக்கு தங்கச்சி இல்லை அங்கிள்” என்று கோபமாக கூறி அவனது வீட்டிற்கு சென்றுவிட்டான்.

வைஷ்ணவியும் “அப்பா, அவன் ஒன்னும் எனக்கு அண்ணன் இல்லை. இனிமேல் நான் அவனிடம் பேசமாட்டேன்” என்றாள்.

“பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? குட்டிமா!” என்று மகளை செல்லமாக மிரட்டி, அவர்களது சிறுபிள்ளை விளையாட்டு போகப்போக சரியாகிவிடும் என்று நினைத்தார்.

ஆனால் விஷ்ணு பள்ளியில் வைத்தும் அவளை குண்டம்மா என்று அழைக்க, அதை பார்த்து சில பிள்ளைகளும் அவளை அப்படியே கிண்டல் செய்தனர்.

அதில் அழுத வைஷ்ணவியை மகேஷ் தான் வந்து சமாதானம் செய்தான். பின்னர் விஷ்ணுவையும் கூப்பிட்டு, “இப்படி நீ எல்லோரும் முன்னாடியும் நம்ம தங்கச்சியை இப்படி கிண்டல் பண்ணலாமா?” என்று கேட்க,

“அண்ணா, அவ உனக்கு வேணா தங்கச்சியா இருக்கலாம். எனக்கு தங்கச்சி இல்ல” என்று மகேஷிடம் சொல்லிவிட்டு,
“குண்டச்சி, என் அண்ணன் கிட்ட மாட்டி விடுறியா? இரு வீட்டுக்கு வருவ இல்ல. அப்போ இருக்கு உனக்கு” என்று அவள் காதில் மெதுவாக சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

மீண்டும் அவள் “அண்ணா, இப்பொழுதும் என்னை குண்டச்சி என்று சொல்கிறான்” என்று அழ ஆரம்பிக்க, அவனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

அந்த வர விடுமுறை அன்று, மூன்று குடும்பங்களும் சந்திக்கும் பொழுது, மகேஷ் விஷ்ணு பள்ளியில் வைத்து வைஷ்ணவியிடம் நடந்து கொள்வதை பொதுவாக கூறிவிட, சாரங்களும் சங்கீதாவும் விஷ்ணுவை பிடி பிடி என்று பிடித்துக் கொண்டார்கள்.

எல்லோரும் வைஷ்ணவிக்கு சப்போர்ட் செய்வது, விஷ்ணுவிற்கு மேலும் கோபத்தை தான் தோன்றுவித்தது. எல்லோர் முன்னிலையிலும் நல்லவன் போல் பேசி, யாரும் இல்லாத சமயத்தில் அவளை பூசணி என்று கூப்பிட ஆரம்பித்தான்.

நாட்கள் கடக்க நண்பர்களின் நட்பு மேலும் பெருக, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். எட்டாவது படிக்கும் வைஷ்ணவியை பத்தாவது படிக்கும் விஷ்ணு இன்னும் பூசணி பூசணி என்றுதான் அழைத்துக் கொண்டு இருக்கிறான். அவளும் எவ்வளவோ அவனிடம் போராடி பார்த்து அட போடா என்று விட்டுவிட்டாள்.

பத்தாவது என்றதும் அவனது தந்தை அவனை படிப்பில் கவனத்தை செலுத்தக் கூற, அவனும் கேசவன் அங்கிள் போல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் பொறுப்பாக படித்தான்.

அனைத்து பரிட்சைகளும் முடிந்த உடன், நேராக அன்பரசுவின் வீட்டிற்குத்தான் சென்றான். “அங்கிள் நான் பரீட்சை முடித்து விட்டேன்” என்று சந்தோஷமாக கூறி மகிழ்ந்தான் விஷ்ணு.

  • தொடரும்..

5 thoughts on “இருளில் ஒளியானவன்-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *