அத்தியாயம் 5
மகிழுந்துவின் மேல் சாய்ந்து நின்றபடி, கைப்பேசித் திரையில் மணியைப் பார்த்தான் மகிழ்.
அது நள்ளிரவு ஒன்று எனக் காட்ட, “இந்த அம்மா.. ச்ச.. மேடம், எப்ப முழிச்சு வழி சொல்லி, நான் வண்டி ஓட்டி..? டிரைவர் வேலைனு கூப்பிட்டாங்க. இப்ப இலவச இணைப்பா, வாட்ச்மேன் வேலையையும் சேர்த்துப் பார்த்துட்டு இருக்கேன்! நேரம், ரொம்ப நல்லாயிருக்குப் போல.?” என்று புலம்பியபடி நேரத்தை நகர்த்தினான்.
எந்த வழியில் செல்ல வேண்டும் என லவனிகாவிடம் வினவிய பொழுது, அமைதி மட்டுமே பதிலாய் வந்தது. பின்னர்த் தான் புரிந்தது, அவள் தூங்கி விட்டாள் என்று.
உட்சென்றிருந்த மது, தனது வேலையைக் காட்டி ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது. அருந்திய எலுமிச்சை சாறின் வீரியம், அவ்வளவு தான் தாங்கியது போலும்.
இரண்டுமுறை எழுப்பிப் பார்த்தான் மகிழ்ந்தன். அவள் விழிப்பதாய்த் தெரியவில்லை. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருந்தவனிற்கும் கண்கள் சொருக, சூழலையும் இடத்தையும் கருத்தில் கொண்டு வெளியே இறங்கிக் கொண்டான்.
காரிற்குள் ஏசி இயங்கியதால், கதவுகளை முழுவதுமாய் அடைத்துவிட்டு, தூக்கத்தை விரட்டுவதற்காக அந்த நெடுஞ்சாலையில் நடக்கத் துவங்கினான்.
அடர்ந்திருந்த இருளை, மக்களின் உதவிக்காகப் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் துரத்தியிருக்க, நல்ல வெளிச்சத்துடனே இருந்தது. எனினும், ஆடவனின் உடலும் மனமும் தான் அதனோடு ஒன்ற மறுத்தது.
பகல் என்றால் வெளிச்சம், இரவு என்றால் கருமை பூசிய இருட்டு என்பது தானே, இயற்கையின் நியதி. அது அறிவியல் வளர்ச்சியினால் மாற்றம் கொண்ட பொழுதும் கூட, பல யுகங்களாய் மரபணு வாயிலாய் பயணித்து வரும் மனிதனை இயக்கும் உடல்அணுக்கள், அதனை அப்படியே ஏற்பதில்லை. இரவானால், தூங்காது இருந்தாலும் அறிவிப்பு ஏதுமின்றிக் கட்டாயம் வந்து செல்லும் சில கொட்டாவிகளே, அதற்குச் சாட்சி.
அரவமற்ற சாலையில் நடப்பது ஒருவித அயர்ச்சியைத் தர, மீண்டும் வாகனத்தின் அருகிலேயே வந்து, அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டான். அப்பொழுது வந்த புலம்பல்கள் தான், மேற் சொன்னவை.
ஒன்று இரண்டு என நீண்டு பத்து பன்னிரண்டு கொட்டாவிகள் வரை வந்து, அவனின் தூக்கத்திற்கு வரவேற்புரை வாசித்துவிட்டுக் காத்திருந்தன.
இரு கைகளின் விரல்களையும் கோர்த்து தலைக்கு மேலே தூக்கி, உடலை முறுக்கிக் கொண்டான். சற்றே உறக்கம் மட்டுப்பட்டது போல் தோன்றியது.
அவ்வப்போது கண்கள், கைப்பேசிக்குச் சென்று மணியைப் பார்த்துக் கொண்டன.
மூன்றரை ஆனப் பொழுது பொறுமை இழந்தவன், உள்ளே சென்று அவளை எழுப்ப, கடினப்பட்டு இமைகளைப் பிரித்தாள்.
கண்களைக் கட்டும் தூக்கமும், உடலை நிதானமிழக்க வைத்த போதையும், நடந்த நிகழ்வுகளை அவளின் நினைவுகளிற்கு உடனடியாய் சேர்ப்பிக்க மறுத்திட, தனக்கு மிக அருகில் மகிழ்ந்தனைக் கண்ட லவனிகா திடுக்கிட்டாள்.
முகத்திலும் உடலிலும் பதற்றம் தொற்றிக் கொள்ள, “ஏய், யார் நீ.?” என வினவியவளைப் பார்த்து, அவனுமே அதிர்ந்தான்.
“என்ன மேடம், இப்படிக் கேட்டுட்டீங்க?”
‘மது போதையில் இருக்கும் பொழுது, அறிமுகம் ஆனானோ.? அடடா, எங்கே இருக்கிறோம் என்று வேறு தெரியவில்லையே?’ எனத் தனக்குள்ளே பதறியவள், “நீ.. நீ.. எப்படி என்கூட? என்னை, எதுவும் பண்ணல இல்ல.?” என்று அச்சமும் தயக்கமுமாய் வினா எழுப்பினாள்.
புரியாமல் பார்த்த மகிழ், “நான், உங்களை என்ன செஞ்சிடப் போறேன் மேடம்.?”
தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டவள், “இல்ல. போதையில நான் எதுவும் உன்கிட்ட.? நீ, யாரு முதல்ல? இந்தக் கார் யாருது.?”
“அடடா! எல்லாம் மறந்து போச்சா.? அப்ப, இந்நேரம் வரைக்குமே போதையில தான் இருந்தீங்களா.?”
“ஏய்! கடுப்பேத்தாத மேன். என்ன நடந்துச்சுனு சொல்லு!”
“எல்லாம், என் நேரம்!” எனத் தன்னை நினைத்தே நொந்து கொண்டவன், நடந்தவற்றை உரைத்தான்.
மெதுவாய் ஒவ்வொரு நிகழ்வும் நினைவிற்கு வர, “ஹோ.. ஸாரி ஸாரி! டிரிங்க்ஸ் எடுத்து இருந்ததால, சட்டுனு ஞாபகம் வரல.”
“நல்லா, மறந்தீங்க போங்க. இரண்டரை மணி நேரமா பைத்தியக்காரன் மாதிரி, ரோட்டுல அங்கேயும் இங்கேயும் நடந்துக்கிட்டு இருக்கேன் மேடம். அதான் இப்ப தெளிஞ்சிட்டீங்களே, நீங்களே வண்டியை ஓட்டிட்டுப் போங்க. நான், என்னோட இடத்துக்குப் போறேன். போயி, முதல்ல ஒரு தூக்கத்தைப் போடணும். அந்தக் குடிகாரனுங்களோட சண்டைப் போட்டது வேற, உடம்பு எல்லாம் வலிக்குது! அம்மா..” என்றபடி தேகத்தை அப்பக்கமும் இப்பக்கமும் அசைத்தபடி நடக்கத் துவங்க,
அவன் பேசுவதை ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த லவனிகா, அதன் பொருளை உணர்ந்ததும் சட்டென்று கீழே இறங்கினாள்.
“ஹேய் ஹேய் மேன்.”
சற்றே நிதானித்துத் திரும்பிப் பார்த்த மகிழ்ந்தன், “என்ன மேடம்?”
“இப்படி நடுரோட்டுல விட்டுட்டுப் போற.?”
“வேற என்ன செய்ய? உங்களை வீட்டுக்கு அழைச்சு, விருந்தா வைக்க முடியும்?”
“என்ன நக்கலா?”
“நக்கல் எல்லாம் இல்ல. எதார்த்தமா தான் சொன்னேன்.”
“ஏது? இது எதார்த்தமா?” என்றவள் வேகமாய் நடந்து அவனருகே வர, “எங்க ஊருல, இதை எதார்த்தம்னு தான் சொல்லுவாங்க. ஒருத்தர் புதுசா அறிமுகம் ஆகும் பொழுது பேசிப் பார்த்துட்டு, வீட்டுக்கு வாங்க சாப்பிடுங்கனு மரியாதைக்கு அழைக்கிறது இல்லையா? அது போலத்தான் சொன்னேன். ஆனா, என்னால உங்களைக் கூப்பிட்டு வச்சு விருந்து எல்லாம் பரிமாற முடியாது. கையில அதுக்கு டப்பு லேது மேடம்!”
அவனை வினோதமாய்ப் பார்த்தவள், “என்ன, தெலுங்கு எல்லாம் எட்டிப் பார்க்குது. ஆளு, தெலுங்கானாவா ஏபியா?”
“ஆ’வும் இல்ல, பி’யும் இல்ல. சின்ன வயசுல ஜெமினி சேனல்ல தெலுங்கு படம் பார்த்த எஃபெக்ட்!”
“உன்கிட்ட பேச ஆரம்பிச்சா, மைண்டயே டைவர்ட் பண்ணி விட்டுடுற மேன் நீ! அச்சோ!” என வலது கரத்தின் விரல்களை இறுகி மூடி, அதன் அழுத்தத்தை முகத்தில் வெளிக் காட்டினாள் அவள்.
“எனக்கு வேலைக் கிடக்கு மேடம், அதுனால நீங்க.?”
“கொடுத்த வேலையவே, பாதியிலயே விட்டுட்டுப் போற ஆளு, வேற எந்த வேலையைப் பார்க்கப் போற?”
“நான் எங்க பாதியில விட்டுட்டு வந்தேன், உங்கக்கிட்ட சொல்லிட்டுத் தான வந்தேன்?”
“இப்படி இருந்தா, லைஃபை எப்படி லீட் பண்ணுவ.?”
“அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். எனக்கு வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.”
“திமிர் பிடிச்சவன் போல!” என அவள் கைகளைக் கட்டி நின்று கொண்டு மெலிதாய் முணுமுணுக்க, “என்னோட காது ரொம்பச் சார்ப் மேடம்!” என்று கண்கள் சுருங்க அவளைப் பார்த்து, வலுக்கட்டாயமாய்ப் புன்னகைத்தான் மகிழ்ந்தன்.
தனது அனைத்துப் பற்களையும் ‘ஈஈ’ என்பது போல வெளிக்காட்டியவள், “குடிச்சிட்டு வண்டி ஓட்டுறது தப்பு மேன். நான், ரிஸ்க் எடுக்க விரும்பல.”
விழிகளில் வியப்பு குடியேற, “ரிஸ்க்னு தெரிஞ்சே, அப்புறம் ஏன் மேடம் பாருக்கு வந்தீங்க.?”
“அதையே திரும்பத் திரும்பக் கேட்காத. ஏதோ வந்துட்டேன், நான் இருந்த மனநிலைக்கு!” என உரைத்தவளின் குரலில் ஆதங்கம் எட்டிப் பார்த்தது.
அதை உணர்ந்த மகிழ்ந்தன், மெலிதான ஒரு பெருமூச்சை வெளிவிட்டான். அதன் பிரதிபலிப்பாய் அவளிடம் இருந்தும் சுவாசம் வந்து போனது, ஏமாற்றம் கலந்த வலியின் அடையாளமாய்.
மது, அவளின் மனவலியைச் சற்றே குறைத்திருந்ததால், இயல்பாய் மற்றவருடன் உரையாட முடிந்தது. உறவு மற்றும் நட்புகளின் ஆதரவான பேச்சுகளும், தனிமையும் உள்ளத்தின் வேதனையை அதிகரித்து விடும் என்பதாலேயே, இவை இரண்டையுமே தவிர்த்து மது அருந்த வந்திருந்தாள் லவனி.
இருந்தும் சூழ்நிலை ‘ஆபத்தை இழுத்து வந்து விடுமோ?’ என்ற எச்சரிக்கை உணர்வை கொடுக்க, அதில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளத்தான் விடுதியில் இருந்து வெளியேறினாள்.
இன்றைய சமூகம் தனித்து இருக்கும் ஒருவருக்கு அத்தனை பாதுகாப்பை நல்காது என்பதால், சற்றே அதிகப்படியான நல்குணம் கொண்ட ஒருவரின் துணை என்பது அவசியமாகிப் போகிறது. அது, ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். அத்துணை.. நட்போ, காதலோ, உறவோ, நலம் விரும்பியோ என ஏதோ ஒன்றின் உருவில் இங்கு உலா வரும்.
லவனியின் தனிமைக்கு, அப்படியான துணை தேவையாய் இருந்தது. ஆனால், அந்த உணர்வை உறவுகளிடமோ நட்பிடமோ அவள் பெற விரும்பவில்லை. ஆறுதல் என்ற பெயரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, பெண்மனதை அலைக்கழித்து விடுவர் அவர்கள்.
அத்தோடு தொழில் முறை முன்னேற்றத்திற்காக, மகளைத் திருமணம் செய்து கொடுக்க நினைத்த பெற்றவர்களின் மீதும் ஒருவித வெறுப்பு உண்டாகி இருந்தது. ஆகையால் தான், திருமண அரங்கில் இருந்து உடனடியாய் வெளியே வந்தாள்.
முன்பின் அறியாத ஒருவன், எவர் என்றே தெரியாத ஒரு பெண்ணிற்குச் செய்த உதவியே லவனிக்குப் போதுமானதாய் இருந்தது, மகிழ்ந்தன் எப்படியானவன் என உணர்ந்து கொள்வதற்கு.
அந்த உணர்தல் தான், தானாய் அவனிடம் சென்று பேச வைத்தது. அந்தப் பேச்சு தந்த நம்பிக்கையில், அவனைப் பற்றிச் சிந்திக்க அவசியமின்றி வண்டியில் உறங்க வைத்தது. அந்த உறக்கமும் அது தந்த தெளிவும், தற்போது மீண்டும் அவனெதிரே நிற்கவும் வைத்து விட்டது.
“இப்ப, என்னை என்னதான் மேடம் செய்யச் சொல்லுறீங்க?” என மகிழ் பொறுமை இழந்து வினவ, “வேலையை, முழுசா செஞ்சு முடிச்சிட்டுப் போ மேன்.”
அவள் இன்னுமே போதையில் இருந்து முழுமையாய் விடுபடவில்லை என உணர்ந்து கொண்டவன், “சரி வாங்க!” என்று லவனியுடன் இணைந்து நடந்தான் வாகனத்தை நோக்கி.
இருவரும் ஏறி அமர, “வீட்டு அட்ரஸ் மேடம்.?”
“நான், இப்ப வீட்டுக்குப் போக முடியாது. உனக்குத் தெரிஞ்ச நல்ல ஹோட்டல் எதுக்காவது போ!”
“ஏது, ஹோட்டலா? நான், அந்த அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்ல மேடம்.”
“என்ன மேன் உளறுற.?”
“காசு இருக்கிறவன் தான், அங்க போக முடியும். நான் பிளாட்பாரம் கேஸு. என்கிட்டப் போயி ஹோட்டலைப் பத்திக் கேட்கிறீங்களே.?”
அவளிற்கு அனிச்சையாய் சிரிப்பு வர, “எங்கேயாவது போ! எனக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கணும்!”
“சுத்தம்! நிம்மதியை எல்லாம் எங்கேயும் போயி தேட முடியாது. அதை, நீங்களே தான் ஏற்படுத்திக்கணும்!” என்றவன் வாகனத்தைத் தார்சாலையில் மிதமான வேகத்தில் இயக்கத் துவங்கினான்.
“மேடம்.. பாட்டுப் போட்டுக்கவா.?”
“ம்ம்..” என உரைத்தவள் கண்களை மூடிக் கொள்ள, இசைத்தட்டில் இருந்து இளையராஜா கசிந்து வெளியேறினார்.
“வானில் தோன்றும் கோலம்…
அதை யார் போட்டதோ…
பனி வாடை வீசும் காற்றில்…
சுகம் யார் சேர்த்ததோ…”
“புத்தம் புதுக் காலை… பொன்நிற வேளை…”
தனது கட்டைக் குரலை மென்மையாக்க முயன்றபடி மகிழ்ந்தனும் உடன் இணைந்து மெலிதான ஒலியில் பாட, லவனிகாவின் இதழ்களில் புன்முறுவல் மலர்ந்தது.
Interesting
😍😍😍😍
இனி இவங்களோட பயணம் சேர்ந்து தானா???