இருளில் ஒளியானவன் 13
விஷ்ணுவிடம் அவனை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அவனது கன்னத்தை பார்த்தாள் வைஷ்ணவி. தாடி அடர்ந்த முகத்தைக் கண்டு குழப்பமாக நின்றாள்.
சங்கீதா லக்ஷ்மிக்கு அனுப்பும் குடும்ப புகைப்படத்தை எல்லாம் பார்த்து இருக்கிறாள் அல்லவா? அதில் அழகாக ஷேவ் செய்து புன்னகையுடன் இருக்கும் விஷ்ணுவைத்தான் பார்த்திருக்கிறாள். ஆனால் இன்று கண்களில் ஏதோ சோகம் தாங்கி படி, தாடி வளர்த்து நிற்பவனை கண்டு குழப்பமாக அவன் முகத்தை பார்த்து நின்றாள்.
வைஷ்ணவியின் குழப்பமான பார்வையில் ஒரு நொடி அவனும் குழம்பினான். ஏன் இந்த குழப்பம் என்று அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
அவனது பார்வையில் தடுமாறிய வைஷ்ணவி, “அது.. நான்..” என்று தயங்கி, “தெரியாமல் அப்படி செய்து விட்டேன்” என்றாள்.
“எப்படி?” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்த வாரே.
அவன் குரலில் இருந்த நக்கலில் சட்டென்று அவன் முகத்தை பார்த்து, “அதான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்றேன்ல, சாரி” என்றாள் மீண்டும்.
“சரி, உன் சாரியை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனக்கு ஒரு விஷயம் செய்ய வேண்டும்” என்றான்.
அவளும் என்ன? என்று அவனை பார்க்க,
“முன்பு போல் அல்லாது, நீ என்னுடன் நன்றாக பேச வேண்டும். அப்படி பேசினால் உன்னுடைய இந்த சாரியை ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்றால் நீ அடித்தது அடித்ததாகவே இருக்கட்டும். அதற்கு நான் பழிக்கு பழி வாங்குகிறேன்” என்று நம்பியார் செயலில் இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொண்டு, தலையை சாய்த்து கூறுவதைக் கண்டு சட்டென்று சிரித்து விட்டாள் வைஷ்ணவி.
அவளின் சிரிப்பில் அவனுக்குள்ளும் புன்னகை தோன்ற, “ஓகே யா!” என்றான்.
அவளும் தலையாட்டிக் கொண்டு “ஓகே” என்று கூறி “கீழே போகலாம். நான் உங்களை அடித்ததில் எல்லோரும் டென்ஷன் ஆயிட்டாங்க. உண்மையில் சாரி” என்று மீண்டும் கூறி கீழே சென்றாள்.
அவள் தன்னிடம் பேசியதில் மகிழ்ந்து தன் பிடரி முடியை கோதி கொண்டு அவளின் பின்னாலேயே இறங்கினான்.
வைஷ்ணவி முன்னால் இறங்க, அவளின் பின்னால் ஒரு கையில் வேஷ்டியின் நுனியைப் பிடித்த படி, கம்பீரமாக இறங்கினான் விஷ்ணு. இருவரையும் பார்த்த பெரியவர்களுக்கு சரியான பொருத்தமாக தெரிய, அவர்களுக்குள் மகிழ்ச்சியும் வேதனையும் ஒன்று போல் தோன்றி மறைந்தது. லட்சுமியால் அந்த உணர்வில் இருந்து சட்டென்று வெளியே வர முடியவில்லை. தன்னை சமாளித்த அன்பரசு புன்னகையுடன் விஷ்ணுவை வரவேற்று தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.
அவருக்குள் தான் அவசரப்பட்டு வைஷ்ணவியின் திருமணத்தை முடித்து விட்டோமோ என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்க, அவனுடன் சகஜமாக பேச முடியவில்லை.
ஆனால் கேசவன் வேலை விஷயமாக அவனிடம் சில கேள்விகளை கேட்க அவனும் அதற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்.
மாலா தான் “இங்கு வந்தும் உங்களுக்கு மருத்துவமனை நினைப்பு தானா? அவனை கொஞ்ச நேரம் சும்மா விடுங்கள்” என்றார்.
“பரவாயில்லை ஆன்ட்டி” என்று புன்னகைத்த விஷ்ணு, மருத்துவர்களுக்கு எப்பொழுதும் மக்களின் நலன் தானே மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இதுவரை நான் அங்கே தங்கி இருந்தேன். ஆகையால் எமர்ஜென்சியில் வரும் நோயாளிகளை உடனே என்னால் கவனிக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது இங்கு வந்து விட வேண்டும் என்று அங்கிள் கண்டிப்பாக சொல்லிவிட்டார் அல்லவா! இப்போது அதற்குறிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அல்லவா” என்று கூறி அன்பரசுவை பார்த்தான்.
அவன் பேசுவதை எங்கே கவனித்தார் அன்பரசு. அவர்தான் தன் மகளுடன் ஜோடியாக இறங்கி வந்த விஷ்ணுவை தவற விட்டு விட்டோமே என்ற கவலையிலேயே, அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார் அல்லவா?
அவரின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்த விஷ்ணு அவரை குழப்பமாக “என்ன அங்கிள்?” என்று பார்த்தான்.
அவன் கேட்ட பிறகுதான் சுயநினைவுக்கு வந்த அன்பரசு, “ஒன்றுமில்லை மாப்..” மாப்பிள்ளை என்று சொல்ல வந்து “விஷ்ணு” என்றார்.
அவரது மனதிற்குள் அவன், மகளின் கணவனாகவே மாறிவிட்டதை போன்று ஓர் உணர்வு. அது ஏன் என்றும் தெரியவில்லை. ஆனால் விஷ்ணுவின் வாழ்க்கையை தன் ஆசைக்காக கேள்விக்குறியாக்க விரும்பாமல் அமைதியாக இருந்தார். அவருக்குள் ஏதோ சிந்தனையில் இருக்கிறார் என்பதை உணர்ந்த விஷ்ணுவும் அதைப்பற்றி தோண்டித் துறுவாமல் பொதுவாக பேச ஆரம்பித்தான்.
மதிய உணவு தயாராகி இருக்க, அனைவரையும் சாப்பிட கூப்பிட்டார் லட்சுமி. பெரிய உணவு மேஜையில் அனைவரும் சுற்றி அமர்ந்து ஒன்றாக பேசி உண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் லட்சுமியும் அன்பரசுவும்.
இத்தனை நாள் மகளை நினைத்து கவலையில் இருந்தவர்களுக்கு, மகள் இன்று புன்னகையாக அமர்ந்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பிறகு கேசவனும் மாலாவும் கிளம்பியுடன், சிறிது நேரம் கழித்து ஓய்வெடுக்க போவதாக வைஷ்ணவியும் அவளது வீட்டிற்கு சென்று விட்டாள்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் “சரி விஷ்ணு நீயும் கொஞ்சம் ஓய்வெடு. இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்து விட வேண்டும். சாப்பாடு நம்ம வீட்டில் தான். தங்குவதற்கு மட்டும் தான் நீ இங்கு வர வேண்டும், சரியா?” என்று செல்லமாக மிரட்டி விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு தங்களது வீட்டிற்கு சென்றார் அன்பரசு.
வீட்டிற்கு வந்ததும் மகளின் அறைக்குச் சென்று பார்த்தார் லட்சுமி. அவள் கட்டிலில் படுத்திருக்க, கதவை மூடிவிட்டு தங்களது அறைக்கு வந்த லட்சுமி, கணவனிடம்
“நாம தப்பு பண்ணிட்டோமோ!” என்றார் மொட்டையாக.
என்ன? என்று மனைவியின் முகம் பார்க்க, அவரோ “வைஷ்ணவி சொன்னதை கேட்காமல், விஷ்ணுவையும் வைஷ்ணவையும் நேராக பேச வைத்த பிறகு, முடிவு எடுத்திருக்க வேண்டுமோ?” என்றார் கேள்வியாக.
அவருக்கும் அதே என்னும் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அதைப் பற்றி பேசுவது தவறு என்று உணர்ந்த அன்பரசு, “வேண்டாம் லக்ஷ்மி, இதைப் பற்றி யோசிக்கவோ, பேசவோ செய்யாதே! நடந்தது எதையும் மாற்ற முடியாது. நம் மகளுக்கு ஒரு முறை திருமணம் முடிந்து விட்டது. அதை நினைவில் வைத்துக்கொள்” என்றார்.
அவரை கவலையாக பார்த்த லக்ஷ்மி, “அதற்காக அவளை அப்படியே விட்டுவிட முடியுமா?” என்று வருத்தமாக கணவனின் தோளில் சாய்ந்து கொண்டார்.
அவரை லேசாக அணைத்த அன்பரசு, “அவள் விருப்பப்பட்டு எப்பொழுது திருமணம் செய்து கொள்கிறேன் என்கின்றாளோ, அப்பொழுது முடித்து வைப்போம். அதற்கு முதலில் நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரைக்கும் நீ எதையும் போட்டு யோசித்து, உன்னை குழப்பிக் கொள்ளாதே! எப்படி நான் வைஷ்ணவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதுபோல்தான் விஷ்ணுவுக்கும். அவனுக்கு பிடித்த பெண்ணை தான் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். புரிகிறதா?” என்றார்.
அவரும் ஆமாம் என்று மௌனமாக தலையாட்டினார். இருவருக்கும் தங்கள் மகளின் வாழ்க்கை இனி என்ன ஆகும் என்ற கவலை இருந்தாலும், அவளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக இருந்தனர்.
- தொடரும்..
Nice epi
Vishnu ah vaishu vuku marriage panni vachi irukalam nu ippo nenaikiraga
💛💛💛💛💛💛
🥰
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
இனி விஷ்ணு பார்த்துப்பான்!!… சீக்கிரமே அவளும் சரியாகிடனும்!!..
Kandipa eni vishnu pathupan neenga manasula ninaikira mari nadaka pothu unga ponnoda kanavana irukanporan oru naal