Skip to content
Home » அன்பென்ற மழையிலே …மழை-1 

அன்பென்ற மழையிலே …மழை-1 

மழை-1 

சோழவந்தான், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அமைந்த அழகர் இல்லம், ஆளும் பேரும் வரப்போகப் பரபரப்பாக, கொண்டாட்டமாக இருந்தது. அழகரின் மகள் எழில் அரசியின் திருமணம் ஞாயிறு அன்று நடக்க இருக்க, இன்று வெள்ளிக்கிழமை பந்தற்கால் ஊன்றுகின்றனர். 

அழகர், மரகதம் தம்பதிக்கு இரண்டு மகன் இரண்டு மகள், மூத்தவர் மூவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்க, ஏழுவருட இடைவெளிக்குப் பின் பிறந்த இளைய மகள் எழிலரசிக்கு, சிலபல காரணங்களால்  அவளது இருபத்தி ஐந்தாவது வயதில் அந்த ஊர் பேச்சு வழக்கில் சற்று தாமதமாக மணமுடிக்கின்றனர்.

மணப்பெண் எழில் காலையிலே நீராடி , தலையில் துண்டை சுற்றிக்கொண்டு, மீதமிருந்த பேப்பர் கட்டை திருத்த அமர , சாம்பிராணி கரண்டியோடு வந்த அத்தை  இந்திராணி , அவளைப் பார்த்து அதிசயித்து , “இப்படியும் தான் பொண்ணு உண்டா. விட்டா  மணமேடை ஏறுற வரைக்கும்   பள்ளிக்கூடத்து வேலை பார்ப்ப போலவே. போதும் மூடி வையி ஆத்தா” எனக் கடிய, 

“இன்னும் பத்தே பேப்பர் தான் அத்தை, திருத்தி, சரளாகிட்ட கொடுத்துட்டேன்னா, அப்புறம் நிம்மதியா கல்யாணத்தில் கலந்துக்குவேன்” என்றாள்.

“ மூணாம் மனுசர மாதிரி கல்யாணத்தில் கலந்துக்குவேன்னு சொல்றவ. கல்யாணம் கட்டிக்குவேன்னு சொல்லு.” எனப் பேச்சைத் திருத்திய அத்தையம்மாள், அவள் தலையில் சுற்றியிருந்த ஈரத் துண்டை அவிழ்த்து , காய்ந்த துண்டால்  அவள் வேலைக்கு இடைஞ்சல் வராதபடி, தலையைத் துவட்டி , கையாலேயே சிக்கெடுத்தார். 

“ஏத்தா, இந்த பையனை பிடிச்சுதானே கட்டிக்க போற” நூறாவது முறையாகக் கேட்டுவிட்டார். எப்போது கேட்டாலும், ஏதாவது ஒரு பதில் சொல்லியே மழுப்புகிறாள், மனதில் தன் மகனை நினைத்திருப்பாளோ என்ற ஆசையும், கவலையும் ஒருங்கே இருந்தது. அவள் பிறந்ததும் முதலில் கையில் ஏந்தியவர் இந்திராணி. கைம்பெண்ணாக உள்ள தான் எப்படி எனத் தயங்கிய போது, “உன் மருமகளை வாங்கிக்க  இந்திரா” என்ற அண்ணனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கையில் ஏந்தியவர், முறைக்கு மருமகள் ஆகினும்,மகள் போலவே பாசத்தைக் கொட்டி வளர்த்தார். 

“அத்தை, இதையே எத்தனை தடவத் தான் கேட்பிங்க. அப்பா என்னைக் கேட்டுத் தான் முடிவு பண்ணுனார். நம்மளை மாதிரியே அவுங்களும் விவசாய குடும்பம், கமிஷன் வியாபாரம், அவரு லேவாதேவியும் செய்யிறாராம். நான் வேலைபார்க்கிற ஸ்கூலு அவங்க வீட்டிலிருந்து ரென்டு கிலோமீட்டர் தான். நான் வேலைக்கு போறதுலையும் ஆட்சேபனை இல்லைனு சொல்லிட்டாங்க. சின்ன அண்ணிக்குச் சொந்தம். இதை விட வேற என்ன வேணும். எனக்குச் சம்மதம் தான்” என்றவள், பேச்சை மாற்றும் விதமாக, 

“அதை விடுங்க, எங்க உங்க சீமந்த புத்திரன், ப்ரீத்தியை கூட்டிகிட்டு, கல்யாணத்துக்குப் பந்தல் கால்  ஊண்டும் முன்ன வந்துடுவேன்னு சவுடால் விட்டாரு. இன்னும் காணோம். விக்கிரவாண்டியிலிருந்து தாய்மாமன் முறை செய்ய, பெரியண்ணி வீடும், அக்கா வீடும்  வருவாங்க. அதுக்கு ஈடா இரும்பாடிலிருந்து அத்தை வீட்டுச் சீரும் சபையை நிறைக்கணும் பார்த்துக்குங்க.  அதுக்காவது  உங்க மகன் வந்துருவாருல்ல” அவள் கேட்க, 

“ அழகு பெத்த என் மருமகளைக் கட்ட அவனுக்கு வக்கு இல்லை. எல்லாருமா சேர்ந்து அவனுக்கு சப்போர்ட் பண்ணி, அந்த ஹிந்தி காரிக்கு அவனைத் தூக்கி கொடுத்துபுட்டிங்க. இனி அவன் வந்தா என்ன, வராட்டி என்ன. கொழுந்தன் மகனை நிறுத்தி முறையை செஞ்சுட்டு போறேன். படிக்கிறானோ, பட்டம் வாங்குறானோ, வேலைக்கு போறானோ இனி அவனுக்கும், எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை”  அவர் குரல் பிசிறடித்தது. 

திருத்தி முடித்த பேப்பர் கட்டி கட்டி வைத்தவள், அத்தை பக்கம் திரும்பி, “அப்படி சொல்லாதீங்க அத்தை. ஒத்த பொம்பளையா நின்னு வளர்த்த உங்க மேல , அத்தான் உசுரையே வச்சிருக்கார். நீங்க சம்மதிச்சா தான் ப்ரீத்தியை கட்டுவேன்னு சொல்லி இருக்காரா இல்லையா. அவளும் நல்ல பொண்ணு தான். நான் பேசி பழகி இருக்கேன். நீங்களும் பழகி பாருங்க.அவ குழந்தை முகம், உங்க மனசையும் கரைச்சுடும்” எழில் சொல்ல, 

“பாஷை தெரியாத புள்ளைகிட்ட என்னனு பேசி பழகுறது. அவனுக்கு பிடிச்சா சரி தான். உன் கல்யாணம் முடியனுமுன்னு கண்டிசன் போட்டேன். சரின்னுட்டான். அதுக்கப்புறம், எங்குட்டு வேணாலும் போயி கல்யாணம் கட்டிக்கிட்டும். என் அண்ணனுக்குப் பொங்கிப் போட்டுட்டு, சொச்ச காலத்தை ஓட்டிடுவேன்.” என்றார். 

“ இப்ப இப்படி தான் சொல்லுவீங்க. அன்பு அத்தானுக்குக் கல்யாணமாகி மருமகள் மாசமா இருக்குன்னு சேதி வரட்டும், இந்திராணியம்மா ப்ளேனை பிடிச்சு போயி இறங்குதா, இல்லையானு பார்க்கத் தானே போறேன் ?” அவள் கேலி பேச,

“ஆமாம், இந்த கோனை கொண்டை காரியத் தான் ப்ளையிட்டுல ஏத்துறானுங்க. அடப் போ ஆத்தா, எனக்கு இந்த வைகை கரையும், அண்ணனும் அத்தாச்சியும் தான் உலகம். இருபத்திநாலு வயசில் தாலி அறுத்து , மூணு வயசு பயலோட வந்தவளை, உன்னை பிள்ளையாண்டு இருந்த அத்தாச்சி மகள் கணக்கா தங்குனாங்க. அந்த பொல்லாத வியாதி அத்தாச்சிக்குப் பதிலா, என்னை கொண்டு போயிருக்கக் கூடாதா” எனும் முன் அவர் வாயைப் பொத்திய எழில், 

“ நீங்க இருக்கத் தைரியத்தில் தான், அம்மா கண்ணை மூடியிருப்பாங்க. அப்பாவுக்கும், எனக்கும் எப்பவுமே நீங்க வேணும். நல்ல நாள் அதுவுமா, ஏதாவது சொல்லி என்னை அழ வைக்காதிங்க” என்றாள். 

“இல்லை ஆத்தா, இல்லை, நான் நீண்ட ஆயுசுக்கு இருந்து உனக்குப் பேறுகாலம் பார்த்து, உன் பிள்ளைகளை வளர்த்து விட்டு, தொண்டு கிழவியா தான் போவேன், சரியா” எனவும், 

“இப்போ சரி” என அத்தையைக் கட்டிக் கொண்டு சிரித்தாள் எழிலரசி. 

“ஏத்தா, அத்தையும் மருமகளும் கொஞ்சிகிட்டு இருக்கீங்க. முகூர்த்த நேரத்தில் கம்பை ஊண்டி, நெல் அள்ளி போடணும், சீக்கிரம் வாங்க” என அழகர் குரல் கொடுக்க, 

“ஆத்தி, நான் ஒரு கிறுக்கி, அண்ணன் சொல்ற  அளவுக்கு வச்சுக்கிட்டேன் பாறேன்” என்றவர், “ அஞ்சல்ல மருமகளைத் தயார் பண்ணிடுறேன். நீங்க மத்த வேலையை பாருங்க அண்ணேன்” என மருமகள் சிகைக்கு மணக்க, மணக்கத்   தூபம் காட்டி, தலைவாரி இருபக்கமும் முடி எடுத்து, நடுவில் முடிந்து குளித்த ஜடை போட்டு, மீதி முடியைத் தளர பின்னி விட்டார்.

அழகரின் இளைய மருமகள் கோகிலா மல்லிகைப் பூவை கொண்டு வந்து தந்து, “ சின்னம்மா, எழிலுக்குத் தலை  நிறைக்க வச்சு விடுங்க. இந்த புள்ளையை தவறவிட்டமேண்டு அவுக, அவுக தவிச்சு போகனும்” என தன் ஒன்றுவிட்ட தம்பிக்கு எழிலைப் பேசி முடித்த பெருமையில் அவள் சொல்ல, 

“ தவிச்சுதாண்டி நிக்கிறேன். நீ வேற எண்ணெய்யை ஊத்தாதே” இந்திராணி புலம்ப, 

“ ஆத்தி, நான் உங்களைச் சொல்லலை. விக்கிவாண்டிகாரவுகளை தான் சொன்னேன். ஏற்கனவே இரண்டு சம்பந்தம் பண்ணிட்டமுன்னு சலிச்சாங்களே. இனி நானும்” என அவள் பேச்சை முடிக்கும் முன், 

“ நீ கம்பு சுத்த தான், என் மருமகளை கோர்த்து விட்டியா” எனக் கேட்க, 

“ என்ன சின்னம்மா இப்படி பேசுறீங்க. என் தம்பிக்கு என்ன குறை” என வம்பளக்க, எழில் அமைதியாக இருந்தாள். 

“ பரிசம் போட்டுட்டு போனவன், ஒரு தடவையாவது வந்து எழிலை பார்த்திட்டு போனானா” என்று கேட்க, 

“ அங்க தான ஸ்கூலுக்கு போகுது. அங்க வச்சு பார்த்துக்குவானா இருக்கும். இல்லை எழிலு” எனக் கேட்க, 

“ ஆமாம் அண்ணி, அங்க நிற்பார்” என்றாள். கந்தவேலு கந்துவட்டி பார்ட்டி. காலையில் பணம் கொடுக்கவும், மாலையில் தவணை வசூல் செய்யவும் வருவான். எழிலை ஆராய்ச்சி பார்வை பார்ப்பவனிடம் மருந்துக்கும் சிரிப்பு இருக்காது. மீசையை முறுக்கிக் கொண்டு, அது தான் கெத்து என நிற்பான்.

ஜாதகத்தில் கட்டம் சரியில்லை என எழில் திருமணம் தள்ளிப் போக, வரதட்சணையாக கணிசமான தொகை தருவதாக வாக்களித்தே அழகர் இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். 

 அழகருக்கும், தங்கை மகன் அன்பரசனுக்கு எழிலைக் கொடுக்க வேண்டும் என்று தான் ஆசை. மூன்று வயதில் தந்தையை இழந்து வந்து நின்றவனுக்கு, மாமனாகவும், தந்தை இல்லாத  குறை தெரியாமல் தகப்பன் ஸ்தானத்திலிருந்து வளர்த்தவர். 

எழிலுக்கு அத்தை எவ்வளவு பிரியமோ, அதே அளவு மாமன் மேல் அன்புக்கரசனுக்கு பாசமும், மரியாதையும் உண்டு. அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க எழிலரசியை மறுக்காமல் மணந்து இருப்பான். ஆனால் அழகர் அப்படி நிர்ப்பந்த படுத்துபவர் அல்ல. தன் பிள்ளைகளுக்கு தன் சொத்தை கொடுத்தது போல், அவன் அப்பா வழி சொத்தை பேணி பாதுகாத்து வைத்துள்ளார். 

 பெரிய பள்ளிக் கூடம் பெரிய படிப்பு என தன் பிள்ளைகளை விட மேலாக வளர்த்தார். தங்கையின் சொத்தை ஒத்திக்கு விட்டுப் பாதுகாத்தவர், அதை அவர் செலவுக்கே கொடுத்து, மிஞ்சுவதை அவர் பெயரிலே பேங்கிலும் போட்டு வைத்தார்.  தங்கை தன் வீட்டிலிருந்தால் அவருக்கு மரியாதை இருக்காது என்று தங்கள் வீடு ஒன்றிலேயே குடி வைத்துப் பார்த்துக் கொண்டார். 

மெட்ரிகுலேசன் பள்ளி, பீஈ, எம் பி ஏ என அவன் விரும்பிய படிப்பெல்லாம் காடு கழனியில் விளைந்ததைப் பொன்னாக்கி அனுப்பி வைத்தார். அதில் அவர் மகன்களுக்கு அதிருப்தி வர, அவர்களுக்குச் சொத்தை பிரித்துக் கொடுத்து விட்டார். 

மூத்தவளுக்கு, நகை பணம் என செட்டில் செய்தவர், இளைய மகளுக்கு மனைவி நகையைப் போட்டு விடலாம் எனக் கணக்கு செய்து, ரொக்கத்துக்கு மட்டும் அலைந்து கொண்டு இருக்கிறார். 

அவருடைய முதிய வயது, மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்த சொத்தை கணக்கு செய்து பணம் கொடுக்க யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். அது தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கிறார்.

மகளின் ஜாதகத்தில் கட்டம் சரியில்லை, மாங்கல்ய தோஷம் இருக்கிறது  என்ற ஒன்றே அவருக்குப் பெரிய பீதியைக் கிளப்ப,  தங்கை மகனை விடுத்து, மகளின் ஜாதகத்துக்குப்  பொருத்தமான மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தார். சுற்ற வட்டத்தில் கந்தவேலுவின் ஜாதகம் மட்டுமே பொருந்தி வர, கண்டிப்பான கந்துவட்டி ஆசாமி என்று தெரிந்தும், உறவினன், பொண்டாட்டியை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் மகளைச் சம்மதிக்க வைத்தார். 

அன்புவும் தயங்கியபடியே உடன் படித்த பெண்ணை விரும்புவதாகச் சொல்ல , இந்திராணியைத் தவிர மற்ற யாரும் எதிர்க்கவில்லை. எப்படியோ போறான், அவனால் ஒரு பயனும் இல்லை என்றே மற்றவர் கை கழுவ, எழில் மனதின் ஆசையை மௌனமாக அடக்கினாள்.  

ஆங்கில இலக்கியத்தைப் பட்ட மேற்படிப்பாகப் படித்த போதும், தமிழ் நாவல்களை விரும்பி வாசித்த போதும் அதில் வரும் நாயகர்களை அன்புக்கரசனாக தான் கற்பனை செய்து வைத்திருந்தாள். 

ஆனால், அவள் ஜாதகத்தைக் கையில் எடுத்த அப்பா, அவள் தோஷத்தைப் பற்றிச் சொல்லி, அன்புவின் ஜாதகத்தோடு பொருந்தவில்லை, முக்கியமான ரஜ்ஜு இல்லை என்று சொல்ல, “எங்கிருந்தாலும் வாழ்க” என அவன் நன்மைக்காக அவனையே தியாகம் செய்ய முடிவெடுத்தாள்.

இந்திராணியிடம் காரணத்தைச் சொன்ன போது , “எனக்குப் பத்து பொருத்தம் பார்த்துத் தானே அண்ணன் கல்யாணம் பண்ணி வச்சிங்க. என் வாழ்க்கை என்ன ஆச்சு, எனக்கு அதுலே எல்லாம் நம்பிக்கை இல்லை. சொந்தத்துக்குள்ள இதெல்லாம் பார்க்கவே வேண்டியது இல்லை” என வாதாடியவர், “உங்க மனசுக்கு ஒப்பலையினா வேண்டாம்” என்று விட்டார். 

இதோ, எழிலின் திருமணம் முடித்த கையோடு ப்ரீத்தியை மணக்க அம்மாவின் சம்மதம் வேண்டியே அவளை அழைத்து வருகிறான். ப்ரீத்தியை நேரில் பார்த்தால் இந்திராணி மனம் மாறிவிடுவார் என்பது அவனின் கணக்கு. 

“இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று “

“ யாருக்கு மாப்பிள்ளை யாரோ?” இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம் 

7 thoughts on “அன்பென்ற மழையிலே …மழை-1 ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *