Skip to content
Home » அன்பென்ற மழையிலே … 

அன்பென்ற மழையிலே … 

மழை-4 

எழிலரசிக்கு நாள் வைக்கும் வைபவம் , மாமா அத்தை வீட்டினர் கூடத்தில் கூடியிருந்தனர். முன்னதாக வீட்டின் முன் பந்தல்கால் ஊண்ட குழி தோண்டப்பட்டு, ஆண், பெண் என ஒத்தை படையில் கம்பை பிடிக்கச் சொல்லி, நவதானியங்களை குழியில் போட்டு, குலதெய்வத்தை வேண்டி முகூர்த்தக் கால் ஊண்டப்பட்டது. 

ப்ரீத்தி எல்லாவற்றுக்கும் விளக்கம் கேட்க, அன்பு ,”அந்த அருசிகிட்ட கேளு, என்னை விடு தாயே” என ஜகா வாங்க, எழில் ஆசிரியைக்குரிய பொறுமையோடு அழகான் ஆங்கிலத்தில் விவரித்தாள்.

ப்ரீத்தி தமிழில் பேசுகிறேன் என மும்மொழிகளையும் கலந்து கட்டி கொன்று கொண்டு இருக்க, எழில் ஆங்கிலத்தில் அவளுக்கு பதில் சொன்னாள்.

அழகர், இந்திராணி , எழிலின் உடன்பிறப்புகளுக்கு மட்டுமின்றி,அன்புவுக்குமே மாமன் மகளின் ஆங்கில புலமை பார்த்து பெருமை தான். 

அதை தொடர்ந்து பந்தல் போட்டு உள் அவங்காரம்  செய்து வாயிலில் வாழைமரமும் கட்டிக்கொண்டிருந்தனர். மைக் செட் அலற ஆரம்பிக்க அழகர் வீடு பூரணமாக கல்யாணகலை பெற்றிருந்தது. 

வீட்டின் கூடத்தில் சீர் தட்டுகளை பரப்பி பட்டு சீலை, ஐந்து வகை தாம்பூலம் தட்டு வைத்து தாய்  மாமன் மாலை போட, மருமகளுக்கான மங்கள விழா ஆர்ம்பித்தது. மாமன் மனைவிக்ள்  நலுங்கு வைத்து முறை செய்தனர். மூத்தவள் கலையரசியும் அதே வீடு என்பதால் தாய்மாமனுக்கு பிறகு அக்கா, அத்தான் என கேலி கிண்டலோடு எழிலரசிக்கு முறை செய்தனர்.

இந்திராணியம்மாள், தேங்காய், பழம், பூவென அவர்கள் வழக்கப்படி ஐந்து தட்டை தயார் செய்து வைத்திருந்தார். இன்றே மருமகளுக்கு ஒரு சங்கிலியும் போட்டு விட இருந்தார். தங்கள் வீட்டில் வைத்து காலையில் தேங்காய்க்கு மஞ்சள் தடவி தயார் செய்து கொண்டு இருந்த போது, “அம்மா, ப்ரீத்தியும் அரசிக்காக கிஃப்ட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கா. நானுமே ஒரு நெக்லஸ் எடுத்திட்டு வந்தேன்” என ஒரு நகை பெட்டியை திறந்து காட்ட, அழகிய வேலைப்பாடோடு கூடிய சின்ன நெக்லஸ் இருந்தது. 

“ அழகா தான் இருக்கு. எத்தனை பவுனு, இன்னும் கொஞ்சம் பவுனு கூட போட்டு பார்வையா எடுத்திருக்கலாம்.” எனவும், 

“இப்போதைக்கு இது தான்மா முடிஞ்சது. அடுத்தடுத்து விசேஷம் வரும்ல, அரசிக்கு சிறப்பா செஞ்சிடலாம்” என்றான். 

“ஆமா, உன்னை தான் காணோம்க்கிறாய்ங்கே. உன் மாமன் மகளா இருக்கவரைக்கும் தான் நமக்கு உரிமை. அதுக்கப்புறம் அவ புருஷன் வாங்கி கொடுக்கிறதை தான் போட்டுக்கும். நீ வாங்கி கொடுத்தாலும் தப்பா போகும்” என்றார். கோகிலாவும் இதையே தான் சொன்னாள். அடுத்த முறை வரும் போது எழில் இங்கே இருக்க மாட்டாள், என்ற நினைவே மனவருத்தத்தை தந்தது, ஆனாலும் பெண்கள் அடுத்த வீட்டுக்கு செல்பவர்கள் தானே. எழிலின் மாப்பிள்ளை கொஞ்சம் நல்ல மாதிரியாக இருந்தால்,  நல்ல நட்பாக பழகலாம் என நினைத்தான். 

அழகரின் மகன்களை விட, கலையரசி கணவன், தம்பி என பாசமாகவே பழகுவான். அது போலாவது உறவு கொண்டாடலாம், எழிலரசியுடன்  முழுதாக பேசாமல், பழகாமல் இருப்பதும் கடினம். எப்போதுமே அவள் நல்ல தோழியாக இருந்துள்ளாள்.

ப்ரீத்தி, டிசைனர் சேலைகள், குர்தி , வாட்ச், ஹேண்ட்பேக், அவர்கள் முறைப்படி சிவப்பு,ஐவரி தந்த வளையல்கள் ,மேக்கப் ஐட்டம் , பாம்பே ஸ்வீட் என  பாலிதீன் கவர் சுற்றப்பட்ட தட்டுகளால் அந்த கூட்டத்தையே நிறைத்திருந்தாள் . இந்திராணியின் ஐந்து தாம்பூல தட்டுகளோடு, அவள் கொண்டு வந்த பத்து தட்டுகளும் சேர்த்து கூடத்தை நிறைக்க, “இது என்னடி அதிசயமா இருக்கு” என ஊரே வேடிக்கை பார்க்க, இந்திராணிக்கு பெருமை தான். 

அழகர், “வேற மொழி பேசுற பொண்ணு, மருமகளா வந்தா, எனக்கு பிறகு என் தங்கச்சி நிலைமை என்ன ஆகுமோண்டு கவலை பட்டு கிடந்தேன். கல்யாணத்துக்கு முன்னாடியே தங்கச்சி முகத்தில சந்தோசத்தை வரவைச்சுட்ட. நல்லா இரு ஆத்தா” என ப்ரீத்தியை வாழ்த்தினார். 

“சரி மசமசண்டு நிற்காமல் முறையை செய்யிங்க” என மற்றொரு பெண்மணி குரல் கொடுக்க, இந்திராணி மகனை முன்னே அனுப்பினார். 

“ஏன் சின்னம்மா, பரிசம் போட்ட பொண்ணுக்கு, கல்யாணம் ஆகாத அன்பு எப்படி மாலை போடும். நீங்க போடுங்க, இல்லையிண்டா உங்க மருமகளை போட சொல்லுங்க” என கோகிலா சொல்ல, 

“இந்தா, உங்க சித்தப்பா ஸ்தானத்திலிருந்து என் மகன் போடுறான். அவ குத்த வச்ச அன்னைக்கே, விக்ரவாண்டிக்காரவுக ஊர்ல இல்லையிண்டு என் மகன் தான் எழிலுக்கு மாலை போட்டான்.” என இந்திராணி கோகிலாவுடன் சண்டை கட்ட, 

“அட, அன்பு தெரியாத ஆளா, போட்டுட்டு போறான் விடு” என அவள் கணவன் தாமுவும், “முறை செய்யும் போது , இதெல்லாம் பார்க்க கூடாது. வருமானம் தான் முக்கியம்” என எழிலின் தாயமாமன்களும் கமெண்ட் அடிக்க, தயங்கி நின்ற அன்புவை, அழகரே அழைத்து மாலை போட சொல்ல , கோகிலா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.  அதை பார்த்த ப்ரீத்தி, சூழலை சகஜமாக்க தானே முன் வந்து, “ஏஏ, ஆஜா , நம்ம சேர்ந்தே எழிலுக்கு மாலை போடுவோம்” என   ஒரு புறம் அன்புவும், மறு புறம் ப்ரீதியுமாக எழில் கழுத்தில் மாலை போட்டனர். 

ப்ரீத்தி, சந்தனத்தை எடுத்து அம்மாவுக்கும்,மகனுக்கும் சேர்த்து அவளே எழிலின் கன்னத்தில் அப்பி, கேலி கிண்டலோடு அவ்விடத்தின் சூழலை கலகலப்பாக்கினாள். 

அன்பு, தான் வாங்கி வந்த நெக்லெஸ்ஸை அம்மாவிடம் கொடுத்து, கொடுக்க சொல்ல, “நீயே குடு. நான் இந்த செயினை போடப்போறேன்” என தன் கழுத்தில் அதிகப்படியாக போட்டிருந்த செயினை கழட்ட, 

“அத்தை, எதுக்கு இதெல்லாம். அது தான் அத்தான் நெக்லஸ் கொடுத்துட்டார்ல போதும்” என்றாள். 

“இருக்கட்டும்  ஆத்தா, உன்னை மருமகளா ஆக்கிக்கிட்டு போட்டு பார்க்கனுமுண்டு நினைச்சேன்.” என கண்கலங்க, அன்புவுக்கு சங்கடமானது, அவன் நகர முற்பட ப்ரீத்தி, அவனை நகர விடாமல் பிடித்துக்கொண்டு, “ஓபன் தி ஜெவெல் பாக்ஸ். எழிலுக்கு போட்டு பாப்போம்” என இந்திராணி செயினை போடவும், எழில் கழுத்திலிருந்த பழைய காலத்து நெக்லஸை கழட்டி பத்திர படுத்தி விட்டு, அன்பு வாங்கிய கேஸ்டிங்க் நெக்லஸை  போட்டு விட்டாள். கனபான பட்டு சேலைக்கு அது கொஞ்சம் பொறுத்தமின்றி தான் இருந்தது. 

“ கல் டிசைனர் சேரி கூட இந்த டெக்லஸ் பஹனோ. அச்சா லகேகா ” என்றாள். 

எழிலுக்கு அத்தையும்,அத்தானும் முறை செய்கையில் பொங்கி கொண்டு தான் வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள் . ப்ரீத்தி, தான் வாங்கி வந்ததை அவள் கையில் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாள் . 

அண்ணிமார் இருவரும் அக்காளும் சேர்ந்து ஆழம் சுற்றி, எழிலை அறைக்கு அனுப்பி விட்டனர். ப்ரீத்தி எழிலோடனே  திரிய, இந்திராணி வீட்டுக்கு பொறுப்பாக அழகரின் மகள், மருமகள்களை வேலை ஏவிக்கொண்டிருந்தார். மரகதம் சென்ற பின் இந்திராணி தான் அழகர் குடும்ப விசேஷங்களை பொறுப்பாக கவனித்து கொண்டார்.

வெளியே பந்தி பரிமாற, சேர், டேபிள்களை விரித்துக் கொண்டு இருந்தனர். அழகரின் மச்சினன், எழிலின் தாயமாமான், “சீர் என்ன பேசியிருக்கு மச்சான் ன” என விசாரித்தார். 

“அன்னைக்கு சொன்னது தான் மச்சான், மாரியம்மன் கோவில்ல கல்யாணம், பக்கத்து மண்டபத்தில் ஒரே சாப்பாடு. நகை பெரிசா எதுவும் கேட்கலை. ரொக்கம் மட்டும் பத்துலட்சம் குடுக்கணும்” என்றார். 

“அடேயப்பா, தொகை பெரிசா இருக்கே. தங்கச்சி நகை இருவது பவுன் தேறும், உன் வீடு தோட்டம் தொரவுண்டு எல்லாம் கடைக்குட்டிக்கு தானே. எதுக்கு இம்புட்டு வரதட்சணை” என கேட்க, 

“பொண்ணு ஜாதகம் அப்படி. லேவா தேவி செய்யிற மாப்பிள்ளை, தொழில் விருத்திக்கு தானே கேக்குறாப்ல, குடுத்துட்டம்னா, அதை  பெருக்கி எழிலுக்கு தானே செய்ய போறாரு” என்றார். 

“அது சரி, பணத்துக்கு ஏற்பாடு பண்ணிடீரா” என கேட்க,

“சொல்லி வச்சுருக்கேன், நாளைக்கு வந்துரும்” என்றார். 

இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அன்பரசன், மாமாவை தனியாக அழைத்து சென்று, “நீங்க பெரியப்பாகிட்ட பேசினதை கேட்டேன் மாமா. பணம் அரேஞ்சு பண்ணிட்டிங்களா, முதவே சொல்லியிருந்தா, நகையா எடுக்காமல் பணமா கொடுத்துருப்பேனே” என  கேட்டான். 

“ நினைவு பரிசா கொடுக்குற, அதுக்கு விலை மதிப்பு இல்லை ஐயா. காலத்துக்கும், இது அத்தை போட்டது, அத்தான் போட்டதுன்னு எழிலு பத்திரமா வச்சுக்கும். காசு பணம் அந்த சுகத்தை தராதே, அதனால தான் சொல்லலை” என்றவர், 

“நீ கேட்டதே போதும் . நான் ஏற்பாடு பண்ணிட்டேன்” என்றார். 

“நானும் ட்ரை பண்றேன் மாமா. வட்டி இல்லாமல் கைமாத்தா வாங்கிக்கலாம்” என்றான். 

“நீ உன் தொழிலை பாரு அய்யா, நான் என் மகளுக்கு செஞ்சுக்குவேன்” என்றார் அழகர். 

மாலையில் மாப்பிள்ளை வீட்டுக்கு, எழிலரசியின் தாலிகட்டு  சீலை தைத்து வந்த பிளவுசை கொடுக்க சென்ற தாமுவோடு, எழிலுக்காக கந்தவேலுடன் உறவை வளர்க்கவென  அன்புவும் சென்றான். அப்போதும் கூட, வட்டி வசூல் செய்ய சென்றிருப்பதாக அவன் பெற்றவர்கள் பெருமையாகவே சொன்னார்கள்.

“அது சரி, தொழிலை பார்க்க வேண்டியது தான். கல்யாணத்து அன்னைக்காவது, வேற ஆளை ஏற்பாடு பண்ணிட்டு வர சொல்லுங்க” என பேசிக் கொண்டிருக்க, 

“வாங்க மச்சான்” என கைலியோடு வந்தவனை பார்த்து அன்புவுக்கு அதிர்ச்சி. ஆனாலும் சமாளித்துக் கொண்டு புன்னகைத்து வைத்தான். 

“வணக்கம், யாரு இவரு” என கேட்க, தாமு அறிமுகம் செய்து  வைத்தான். 

“ஓ  நீங்க தான், என் மாமனாரோட மருமகனா?” என கேட்க, அதில் வேறு ஏதோ மாமன், மச்சினனுக்குள் பேச்சு இருப்பதாக அன்புவுக்கு தோன்றியது. 

“ஆமாம், எழிலரசியோட வெல் விஷ்ஸரும் கூட” அன்பு சொல்ல , புருவம் உயர்த்தி பார்த்த கந்த வேல், 

“சரி தான். பிஸ்னஸ் மேன் பங்காளி. என் பொஞ்சாதியை காசு பணதுக்கு குறைச்சல் இல்லாமல் நல்லாவே பார்த்துக்க தெரியும்” என்றான். 

“காசு மட்டுமே வாழ்க்கை இல்லை ப்ரோ. எழிலை சந்தோசமா வச்சுக்குங்க” எனவும், 

“ நான் ஆம்பளை தான், உங்களுக்கு அந்த சந்தேகம் வேண்டாம்” என கோணல் சிரிப்போடு சொல்ல, 

அன்புவுக்கு எரிச்சல் ஆனது, தாமுவை முறைக்க, 

“ஏய் விடுங்கப்பா. ஏட்டிக்கு போட்டியா பேசிகிட்டு.” என்றவன், அவர்கள் வீடு பெரியவர்களிடம் மாப்பிள்ளை அழைப்பு பற்றி பேசி விட்டு வந்தான். 

தாமுவை தனியாக அழைத்த கந்தவேள், வரதட்சணையை பற்றி கேட்க, “அதெல்லாம் எங்கப்பன் , நாணயமான ஆளு. கரெக்ட்டா செட்டில் பண்ணிடுவாப்ல. இல்லையினாலும், இவன் எதுக்கு இருக்கான். படிக்க வச்ச கடனை அடைக்கட்டும். காலையில எழிலுக்கு நாள் வைக்கவே எங்க அத்தை அஞ்சு பவுன் செயினை கழட்டி போட்டுச்சு. இவன் ஒரு நெக்ல்ஸ் வாங்கிட்டு வந்தான்.” என விவரங்களை சொன்னவன், 

“இவன் சொல்லுக்கு கொஞ்சம் ஒத்து ஊது. இரும்பாடில இருக்க இவன் இடத்தையும் ஆட்டைய போடலாம். ஹிந்திக்கார புள்ளையை கூட்டியாந்திருக்கான். அதை தான் கட்ட போறான் அது இங்க வந்தா இருக்க போகுது. அவனை வெறுப்பு ஏத்தாம இருந்துக்க” என சொல்லி கொடுக்க, கந்தவேலும் தலையை ஆட்டினான். 

“பங்காளி தப்பா எடுத்துக்காதீங்க. உங்களாட்டம் பதிவிசா பேச தெரியாது அம்புட்டு தான். மத்தபடி எழிலை ராணியாட்டம் வச்சுக்குவேன்” என கந்தவேல் அன்புவிடம் சமாதானமாக சொல்ல, 

“ செயல்ல காமிச்சிங்கன்னா போதும்” என்றான். 

ப்ரீத்தி, எழிலரசிக்கு இரண்டு கைகளில் முழங்கை வரையிலும், இரண்டு கால்களிலும் மற்றொரு மெஹந்திவாலி துனையோடு சேர்ந்து மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தாள். 

அழகர் வீட்டில் ஆளும் பேரும் வந்து செல்வதால், இந்திராணி வீட்டுக்கு எழிலை கடத்தி வந்து அங்கு தான் மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தாள். மெஹந்தி வைக்க வசதியாக, ஸ்கர்ட், சட்டையை போட்டு விட்டிருந்தாள். 

எழிலரசி, கை கால்களை நீட்டிக் கொண்டு , முட்டி வரை போட்டிருந்த ஸ்கர்ட்டில், ப்ரீத்தியின் குட்டி கை டாப்ஸில் கண்ணை மூடியபடி அமர்ந்திருந்தாள். மூன்று மணி நேரமாக ஒரே போல் உட்கார்ந்து அவள் கால் சூகை ஏற்றி இருந்தது. சற்று முன் தான் முடித்து, மெஹந்திவாலியும் , ப்ரீத்தியும் வெளியே சென்றிருந்தனர். 

இந்த உடைக்கு பயந்தே எழில் அத்தை வீட்டுக்குள் அமர்ந்திருந்தாள். பொதுவாக தனிமை வேண்டுமானால், படிக்க, பேப்பர் திருத்த , அத்தை வீட்டை தான் உபயோகிப்பாள். அன்பு எப்போதோ வருவதால், இந்த வீடு அவளுக்கு அந்நியமாகவே தோன்றியது இல்லை. அதனால் இலகுவாக உட்கார்ந்து இருந்தாள் . 

 அவள் உள்ளே இருப்பது தெரியாமல் , அன்பு அறைக்குள் நுழைந்து விட்டு , ஒரு நொடி அதிர்ந்து போனான். எழில் வழக்கத்தை விட சின்ன பெண்ணாக பெண்மையின் எழிலாகவே தெரிந்தாள். 

“ப்ரீத்தி, எவ்வளவு நேரம் இப்படியே இருக்கனும்” என்ற அவள் குரலில் நடப்புக்கு திரும்பியவன், “ப்ரீத்தி இல்லை, நான் தான்” என்றான். 

சட்டென கண்ணை திறந்து, நிமிர்ந்து அமர்ந்து , “சாரி” என அவன் பார்வையையும் தவிர்த்து படாத பாடு பட்டு , தலையை குனிந்து கொண்டாள்  

“ஹேய் ஈஸி. எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என அருகில் செல்ல, எழிலின் இதயம் வேகமாக துடித்தது. 

“இல்லை” என அவன் பார்வையை தவிர்த்தாள் . 

“அரசி லுக், நான் ஒன்னும் பொம்பளைங்களையே பார்க்காதவன் இல்லை, பொம்பளை பொறுக்கியும் இல்லை. உன்னை கெட்ட பார்வை பார்க்கவும் மாட்டேன். இயல்பா இரு” என்றான், முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு. 

எழிலின் கண்ணில் கரித்துக் கொண்டு நீர் வந்தது, “நீங்க என்னை திரும்பி கூட பார்க்க மாட்டிங்கன்னு தெரியும் அத்தான். உங்க  லெவலுக்கு  ஏணி  வச்சாலும்  எட்ட மாட்டேன். என் அருகதை என்னனும் எனக்கு தெரியும். எனக்கு இப்படி டிரஸ் போட்டு பழக்கம் இல்லை. சங்கடமா இருக்கு” சொல்லும் முன் குரல் உடைய, அவளின் வார்த்தைகள் அவன் இதயத்தை துளைத்தது. அவன் பேச மறந்து நிற்க, வெண்கல கடைக்குள் யானை புகுந்தார் போல், ப்ரீத்தி இருவருக்கும் சேர்த்து பேசியபடி வந்தாள். 

“ஹே ஏஏ, லுக் அட் ஹேர். சின்ன பொண்ணு மாதிரி இருக்கா. அவ என்னை விட சின்ன பொண்ணு. “ என கதை அளக்க, 

“ப்ரீத்தி, ப்ளீஸ் ஒரு ஷால் எடுத்து போட்டு விடு. வெளியே யாரும் இல்லைனா, நான் என் ரூமுக்கு போயிக்கிறேன்” அவள் சங்கடமாக சொல்ல, 

“ஓஹ், மெரி மா. யு லூக் சோ ப்ரிடி. ஏஏ போல் யார். எதுக்கு இவ்வளவு இன்பீரியர் காம்ப்ளக்ஸ்” என படபடவென பேச, 

“அவ இங்கயே இருக்கட்டும், நான் போறேன்” என முகத்தை திருப்பிக் கொண்டு வெளியேறினான். 

“இஸ்கோ க்யா ஹோகயா” என ப்ரீத்தி புலம்பி நின்றாள். 

1 thought on “அன்பென்ற மழையிலே … ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *