Skip to content
Home » தேவதையாக வந்தவளே 26

தேவதையாக வந்தவளே 26

  • Sws14 

தேவதை 26

“அம்மா, இந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவங்க எங்க அம்மா. உன்ன பார்க்கும்போது உனக்கு பையனா பொறந்திருக்க கூடாதோன்னு எனக்கு தோனி இருக்கு. இன்னொருத்தரோட குழந்தை மேல இவ்வளவு அன்பு உன்னால காட்ட முடியும்னும் போது. அவங்க பெத்த பசங்க கிட்ட அன்பு காட்டுறதுக்கு அவங்களுக்கு அப்படி என்ன தயக்கம்னு எனக்கு புரியல. எத்தனையோ நாட்கள் இல்லை வருடங்கள் அம்மாவோட அன்புக்காக நான் ஏங்கி இருக்கேன் என்ன விட அதிகமா என் தங்கச்சி ஏங்கி இருக்காள். கடைசி வரைக்கும் கிடைக்காமலே செத்துப்போயிட்டாள். ஆனா அவளோட பொண்ணுக்கு ஒரு நல்ல அம்மா கிடைச்சிருக்காள்”.

“பான் வித் கோல்டன் ஸ்பூன் எங்க அம்மா. அப்பா மிடில் கிளாஸ் சேர்ந்தவரு. அம்மா அளவுக்கு வசதி இல்ல. அப்பாவோட திறமையை பார்த்து தாத்தா அவருக்கு எங்க அம்மாவை கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு. ஏன் என்னோட அத்தை சித்தப்பா யாரையுமே எங்க அம்மா எங்க வீட்ல அல்லோ பண்ணது கிடையாது. எங்க அப்பா கூட தனிப்பட்ட முறையில் தான் நான் போய் அவங்கள எல்லாம் பாத்துட்டு வருவேன்”. “என்னையும் என் தங்கச்சியையுமே எங்க அப்பா தான் வளர்த்தாருன்னு சொல்லலாம். பிடிவாத குனம் எங்க அம்மாவுக்கு ரொம்ப அதிகம். அவங்க சொன்னது நடந்தே ஆகணும்னு நினைப்பாங்க. தங்கச்சிக்கு அம்மாவோட அன்பு கிடைக்காமல் போச்சு. நானே அந்த இடத்தை எடுக்க வேண்டியது ஆச்சு”, அதைக் கூறும்போது அவன் கண்களில் லேசான நீர் படலம். அவள் கரத்தை உயர்த்தி விட்டாள். அதை துடைப்பதற்காக பின்பு கட்டுப்படுத்திக் கொண்டாள். “என்னதான் அப்பா அம்மாவாக முயற்சி பண்ணினாலும். அம்மா என்ற அந்த ஸ்தானத்தை எங்களால ஈடு கொடுக்க முடியல. சாதனாவோட ஏக்கங்கள் அதிகமாச்சு. அவள் வயசுக்கு வந்த பிறகும், அவளுக்கு தண்ணி ஊத்தும் போது கூட, அவங்க லேடிஸ் கிளப் தான் முக்கியம்னு போனாங்க”.

“ரொம்ப அழுதா அவளுக்கு ஆறுதலா நானும் எங்க அப்பாவும் தான் இருந்தோம். காலேஜுக்கு போக ஆரம்பிச்சவ காதல்னு வந்து என்கிட்ட தான் முதல்ல சொன்னாள். விசாரிச்சு பார்த்தேன் அவன் நல்லவன் தான்னு தெரிஞ்சது. பேமிலியும் நல்லபடியா தான் தோணுச்சு. அப்படி நினைச்சு தான் அம்மாவை எதிர்த்து தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்தேன். எட்வர்ட் நல்லவன்தான் அதுல எனக்கு சந்தேகம் இல்லை. ஆனா அவனுடைய அப்பாவுக்கு ஹிந்துல கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமில்லை. அவர் கிட்ட பேசி சமரசம் பண்ணி தான் திருமணம் செஞ்சு கொடுத்தேன். என்னால முடிஞ்ச அளவுக்கு என்னோட சேவிங்ஸ் எல்லாம் போட்டு கல்யாணம் பண்ணேன். ஆனா அவள் இப்படி அல்பாய்ஸ்ல போவாள்னு நான் சுத்தமா எதிர்பார்க்கல. மேரேஜஸ் ஆர் மேட் இன் ஹெவன்னு சொல்லுவாங்க, சில நேரங்களில் அது ஹெல்லா முடிஞ்சிடுது. சில பேருக்கு அது வலியோட கூடிய சாபமாக மாறிடுது”, அதை அவன் கூறும் போது அவன் கண்கள் மட்டுமல்ல, அவள் கண்களும் கலக்கியது, கடந்து போன அவள் வாழ்க்கையை நினைத்து. எத்தனை விதமான மனிதர்கள் அதில் எத்தனை விதமான வாழ்க்கை.

“ஆனா எனக்கு அப்படி இல்ல. நல்ல மனைவி அழகான குழந்தை. நான் எதுக்கு விவாகரத்து பண்ணனும்? “, பொறுமையாக ஆனால் அழுத்தமாக கேட்டான். உதட்டை மடித்து கடித்தபடி அவள் தலை தாழ்த்திக் கொண்டாள். அவளை நோக்கி நடந்து வந்தான். அருகில், மூச்சுக்காற்றப்படும் நிலையில் வந்து நின்றவன்.

“என்னோட உணர்வுகளுக்கு நீ மதிப்பு கொடுக்கிற மாதிரி, உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க நான் எப்பவுமே காத்துகிட்டு இருக்கேன். அது எந்த மாதிரி உணர்வுகளா இருந்தாலும் சரி”, என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஐந்து நிமிடம் அசையாமல் அவள் அப்படியே நின்று இருந்தாள். குழந்தை வந்து அவளை உலுக்கமும் தான் சுய உணர்விற்கு வந்தாள். அரை மணி நேரம் கடந்திருக்கும்.

அவனுடைய அறையை திறந்து கொண்டு மகள் வந்தாள். கையில் தட்டு இருந்தது. அதில் உணவுகள். அதை பார்த்ததும் அவன் இதழ்கள் தாராளமாக விரிந்தன. தண்ணீரை கையில் பிடித்த படி பின்னோடு அவன் மனையாள். மகள் உயரத்திற்கு மண்டியிட்டவன்.

“ஐயோடா, என் செல்லம் கஷ்டப்பட்டு வெயிட்ட தூக்கிட்டு வரீங்களே? “, என்று கொஞ்சினான். குழந்தை பேசவில்லை, செய்கையால் உண்ணும் படி ஜாடை காட்டியது.

“ஆமா ரொம்ப பசிக்குது. பாப்பா சாப்பிட்டீங்களா?“.

இல்லையென்று தலையாட்ட அவன் சோற்றை எடுத்து குழந்தைக்கு ஊட்டி விட்டான். அவள், ஹுன் ஹுன் தலையை இரு பக்கமும் ஆட்டினாள்.

“பாப்பா சாப்பிடாம அப்பா எப்படி சாப்பிடுவது? “, என்று அரவிந்த் கேட்க. மகள் தாயை திரும்பி பார்த்தாள்.

கண்களால் வாங்கிக் கொள் என்று மாலினி ஜாடை காட்ட. அவள் மெல்ல வாயை திறந்து அவன் ஊட்டிய சோற்று பறுக்கையை வாங்கிக் கொண்டாள். அவன் விழி உயர்த்தி தன் மனையாளை பார்த்து உதட்டை அசைத்து நன்றி கூறினான்.

“வெளிய வாங்க சாப்பிடலாம்”, என்று கூறிவிட்டு அவள் நடக்க ஆரம்பிக்க. அவனும் வந்தான். மூன்று பேருமாக அமர்ந்து சாப்பிட்டார்கள். குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டே மாலினி சாப்பிட . அவனும் இரண்டு வாய் மகளுக்கு ஊட்டி விட்டான். அதற்கு மேல் ஷாலினி அவனிடமிருந்து உணவை வாங்கவில்லை. இரவு பாத்திரங்களை கழுவும் போதும் அவன் வந்து நின்றான். மீண்டும் மன்னிப்பு கேட்டான்.“விடுங்க அதை பத்தி பேச வேண்டாம். நான் மறந்துட்டேன்”, என்றபடி அவள் வேலையில் மும்முறமாக இருக்க. சற்று நேரம் ஹாலிலேயே அமர்ந்திருந்தான். அவள் உறங்குவதற்காக செல்லும் போது மீண்டும் அவளிடம் மன்னிப்பு யாசித்தான்.

“இத்தனை மன்னிப்பும் எனக்கே எனக்கா? “, என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.

“உனக்கே உனக்கு தான்”, என்று அவன் செயல்களால் காட்டிக் கொண்டிருந்தான். மறுநாள் விடியலிலும் அதுவே தொடர.

“ப்ளீஸ்ங்க போதும். நானா அந்த பேச்சுக்களை மறக்கணும்னு நினைச்சாலும். நீங்களா மன்னிப்பு கேட்டு எனக்கு அத ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கீங்க”, என்றாள். அதற்கு மேலான அமைதி ஆகிவிட்டது அவன் தான் அவர்கள் இருவரையும் கிரஸுக்கு அழைத்து சென்றான். ஏனோ அன்று முழுவதும் அவனுடைய எண்ணங்கள் தான் மாலினியை சூழ்ந்து இருந்தது. ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் பழைய கசடுகளை யோசிக்க கூடாது என்று நினைத்தாலும். இருவரின் ஞாபகங்களும் இருவரின் ஒப்பீடுகளும் அவள் சிந்தையில் வந்து செல்வதை, அவளால் தவிர்க்க முடியவில்லை. காலம் வாழ்க்கையும் அவளுக்கு கொடுத்த வடுக்கள் அதிகம் என்பதால் அவளால் அதை லேசில் மறக்க முடியவில்லை. பழைய கசடுகள் ஒன்றும் சுகமானது அல்லவே அதை நினைத்து ரசிப்பதற்கு அதில் லயித்து இருப்பதற்கும். வேதனையான புரட்ட முடியாத பக்கங்கள் தான். இத்தனை நாள் அதை புரட்டிப் பார்க்க அவள் எத்தனித்ததில்லை. ஆனால் இப்பொழுது இந்த அரவிந்த் அவனுடைய குணங்களால் அவளையும் அறியாமல் புரட்ட வைத்துக் கொண்டிருந்தான். ஒப்பிடாதே, பழையவற்றை நினைக்காதே, அவளைப் பற்றி சிந்திக்காதே என்றைக்கும் எவ்வளவு கட்டுப்பாடு விதித்தாலும். அவள் மூளை அந்தக் கயவனோடு அரவிந்தை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது. அவன் குணங்களால் அவள் மனதிற்கும் சிறிது சிறிதாக அவன் நுழைந்து கொண்டிருந்தான். மேலும் இரண்டு நாள் அப்படியே சென்றது. வார கடைசி நாள். பிற அலுவலர்களுக்கு மட்டுமே வேலை இருக்க சில மாணவர்கள் மட்டுமே கிரஷ்சில் இருந்தார்கள்.

எத்தனை பேர் இருந்தாலும் வேலைக்கு வருபவர்கள் வந்து தானே ஆகவேண்டும். ஆனால் பரபரப்பு இல்லாமல் சற்று ரிலாக்ஸாக இருந்தார்கள். அந்த மூணு நாட்களிலும் அரவிந்த் அவள் மனதை ஆக்கிரமிப்பு இருந்தான் என்பதில் ஐயமில்லை. அவன் சிந்தனையோடே தண்ணிர் பாட்டிலை எடுத்து தூக்கி பிடித்து தன் தொண்டையில் கவிழ்க்கும் போது, அது அவள் கண்களுக்கு புலப்பட்டது.பாட்டிலை தூக்கிப் பிடித்தபடி குடித்தவளின் பார்வை. எதிலோ சென்று விட்டு மீண்டாலும், அவள் எண்ண சுழற்சியில் இருந்ததனால் அதை முதலில் கவனித்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது ஏதோ தோன்ற விழி உயர்த்தி சந்தேகம் படும்படியான அந்த இடத்தை பார்த்தாள்.

சரியாக அந்த நொடி அரவிந்தன் முகம் குப் என்று வேர்த்து விட்டது. அவள் பார்வை இடுங்க கூர்மையாக எதையோ உண்ணித்து கவனிப்பது அவனையே கவனிப்பது போல இருந்தது.“புத்திசாலிய பொண்டாட்டியாகிக் கிட்டா கஷ்டம் டா அரவிந்தா. இப்ப கண்டுபிடிச்சிட்டா என்ன பண்றது??’, என்று மனதிற்குள் அவன் கேள்விகளை அடுக்கி கொண்டிருக்க. உள்ளிருப்பவர்களுக்கு குரல் கொடுத்து ஏணியை எடுத்து வர சொன்னவள். ஏணியை வாசல்புறம் போட்டு, மிக ஜாக்கிரதையாக கதவை சாத்திவிட்டு ஏணியில் ஏர ஆரம்பித்தாள். “கண்டுபிடிச்சிட்டா கிராதகி, மாட்டுன டா மயில்சாமி. ஜென்டில்மேன் படமாக கூடாதுன்னு ஜாக்கிரதையா கதவை வேற சாத்துறா. சாயங்காலம் வீட்டுக்கு வந்த உனக்கு பூஜை தாண்டா அரவிந்தா?”, மாலை அவளிடம் திட்டுக்கள் வாங்க காத்துக் கொண்டிருந்தான். அழைத்து வரும் நேரம் நெருங்கியும், தயக்கத்தோடே அமர்ந்திருந்தான். எப்படியும் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்று நேரம் சென்று அவன் கிளம்பி இருக்க. பாதி வழியில் அவன் செல்லும்போதே அவளிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் பேசுவதற்கு முன்பாகவே அவள் படபடுத்தாள். “ எங்க இருக்கீங்க கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா? “, என்று கேட்டாள் மாலினி.

“என்ன திட்டுரதுக்கு உனக்கு அவ்வளவு ஆசையாமா??”, என்று மனதில் சிந்தித்தவன். “இதோ வந்துட்டே இருக்கேன்மா. பைவ் மினிட்ஸ்ல இருப்பேன்மா “, என்று கூறி அலைபேசியை அனைத்து இருந்தான்.

கிரஷிற்கு முன்பாக வாகனத்தை நிறுத்திய பிறகு கூட, சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு. பிறகு ஸ்டீரிங்கை அழுத்தி பிடித்து கதவை திறந்து கொண்டு இறங்கினான்.

அவனுடைய வாகன சத்தம் இப்பொழுது அவளுக்கு பழக்கம் ஆகிவிட்டது. வாகனம் வந்ததாக உணர்ந்தவள் இன்னும் அவன் உள்ளே வராததை உணர்ந்து அவளே வாசலுக்கு சென்று நின்றாள். தலையை இடக்கையால் கோதிய படியே அவளை பார்த்தவன். கஷ்டப்பட்டு உதட்டில் புன்னகையை தேக்கி நிறுத்தினான். அவள் முகம் பதில் புன்னகையை சிந்தவில்லை. அதற்கு மாறாக பதட்டமாக இருப்பதை உணர்ந்தான். அவன் அவளை நெருங்கும் போது அவன் கையைப் பிடித்து ஓரமாக அழைத்துச் சென்றவள். சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தி விட்டு அவன் புறம் திரும்ப. அதற்குள் அவனோ,

“ பரவால்ல மறைவா கூட்டிட்டு வந்து திட்டுறாள். கொஞ்சமே கொஞ்சம் நம்ம மேல மதிப்பு இருக்கு போல மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிறாள் போல “, என்று தன் மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான் அரவிந்த்.

“ என்னங்க ஒரு முக்கியமான விஷயம். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல போலீஸ்க்கு போகிறதா இல்ல நாமளே கண்டுபிடிக்கிறதா??, யா, யார் பண்ணி இருப்பாங்க?, என்ன இதுன்னு எனக்கு தடுமாற்றமா இருக்கு”, என்று கூறியவளின் குரலில் வெகுவான கலக்கம். அந்த பதட்டம் அவனுக்கும் தொற்றிக் கொண்டது.

“என்ன என்ன ஆச்சுமா? “, அவள் புஜங்களில் கையை வைத்து கேட்டான்.

‘கிரஷ்ல யாரோ தெரியாம கேமரா வச்சிருக்காங்க?. வேலை செய்யறவங்க கிட்ட எல்லாம் கேட்டு பாத்துட்டேன் யாரும் தெரியாதுன்னு சொல்றாங்க. நான் எப்பவும் ரொம்ப ஜாக்கிரதையா தான் இருப்பேன். அப்படி இருந்தும் எப்படி இதை கவனிக்காமல் விட்டாய் என்று தெரியவில்லை. அடுத்து என்ன பண்றது யார் வச்சிருப்பாங்கன்னு ஒரே பதட்டமா இருக்கு குழந்தைங்க விஷயம் ரிஸ்க் எடுக்க முடியாது. போலீஸ்க்கு போகலாம்னு தோணுச்சு ஆனா அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு நினைச்சேன். என்ன பண்ணலாம்??, போலீஸ்க்கு போகலாமா இல்ல நாமளே உள்ள இருக்கவங்கள கொஞ்சம் போர்ஸ் பண்ணி விசாரிக்கலாமா??. நீங்க என் கூட கொஞ்சம் வரிங்களா நீங்க இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுச்சு “, என்று அவள் பேசிக் கொண்டே இருக்க.

“ இவளுக்கு தன் மீது சந்தேகம் வரவில்லையா??, இக்கட்டான பதட்டமான சூழ்நிலையில் தன்னை எதிர்பார்த்திருக்கிறாள். ஆனால் தவறு செய்தது தான் என்று தெரியும் போது??, தன்னை மன்னிப்பாளா??. ஒருவரை அவருக்கு தெரியாமல் கண்காணிப்பது என்பது மிகப்பெரிய குற்றம்தான். அது அவர்களுடைய தனி உரிமையை பாதிக்கும் விஷயமாகவும் உள்ளது அல்லவா??. குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்று பதறி இருப்பவளிடம் உண்மையை சொல்வதா, அல்லது இன்னும் மறைப்பதா? “, அவன் மூளை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது அவள் அவனை உலுக்க ஆரம்பித்தாள்.

“ கேட்கும் போது உங்களுக்கும் பதட்டமா இருக்கு இல்ல??, எனக்கும். இங்க பாருங்க உள்ள கையெல்லாம் வேந்துடுச்சு”, என்று தன் கைகளை காட்டியவள்.

“ இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லுங்க? “, என்று குற்றவாளியிடமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் தான் இந்த தவறை செய்தது என்று தெரியும் போது அவளுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்??? அடுத்த பதிவில் பார்க்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *