இருளில் ஒளியானவன் 25
வைஷ்ணவி, திருமண தினத்தன்று நடந்ததை சொல்லிக் கொண்டு இருந்தாள்.
“ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டினர் செய்த அலப்பறையில், என் தாய் தந்தையர் கலங்கி நிற்கும் போது, நானும் வருந்துவது அவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான், அவர்களிடம் மீதம் இருப்பது உயிர் மட்டும் தான். அதையும் விட்டு விடுவார்களோ? என்று பயந்து என்னுடைய கவலைகள் அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன்.
புன்னகைத்துக் கொண்டே, அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது போல் நடித்தேன். அவர்கள் வீட்டிற்குச் சென்ற முதல் நாளே, நான் முழுவதும் நொறுங்கி விட்டேன்” என்று கூறி அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் வைஷ்ணவி.
திருமணம் முடித்து அவளை வெங்கட்டின் வீட்டில் விட்டுவிட்டு கவலையாக அங்கிருந்து வெளியேறினர் லட்சுமியும் அன்பரசுவும். அவளது தாய் தந்தையர் சென்ற பிறகு, அவர்கள் வீட்டில் இருந்த, வெங்கட்டின் சொந்த பந்தங்களும் ஒவ்வொருவராக வெளியேறி, வீட்டு உறுப்பினர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.
வெங்கட்டின் தந்தை அவளிடம் ஏதோ பேச வர, உடனே அங்கு வந்த அவனது தாய், “இந்த பாருமா, மாடியில தான் வெங்கட் அறை இருக்குது, அங்க போ” என்று அவளை அங்கிருந்து அனுப்ப முயன்றார்.
“இல்ல அத்தை, மாமா ஏதோ..” என்று சொல்லி முடிப்பதற்குள்
“மாமா எங்கேயும் போயிட மாட்டார். இங்க தான் இருப்பாரு. போ, மேல போயிட்டு ரூமெல்லாம் பாத்துட்டு வா” என்று கராராக கூறினார்.
இதற்கு மேலும் அங்கு நிற்பது சரியில்லை என்று மெதுவாக படிக்கட்டு ஏறி மாடிக்கு வந்தாள். மாடியில் ஒரு பெரிய ஹால், மூன்று அறைகள் இருப்பது போல் தெரிந்தது. அதில் எந்த அறையில் வெங்கட் இருப்பான் என்று தெரியாமல், ஒவ்வொரு அறைகளாக திறந்து பார்த்தாள் வைஷ்ணவி.
கடைசி அறையில், லேப்டாப் வைத்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து அவளை பார்த்தவன், “வெல்கம்” என்று புன்னகைத்து வரவேற்றான் வெங்கட்.
‘இவருக்கு சிரிக்க கூட தெரியுமா?’ என்று நினைத்து கொண்டு, அவளும் லேசாக புன்னகைத்து, அறையை சுற்றி பார்த்தாள்.
அவள் பார்ப்பதை கண்டு, அவள் விழி போகும் பக்கம் எல்லாம், அவன் விவரிக்க ஆரம்பித்தான்.
அவள் முதலில் பார்த்த திசையில் இருந்த கதவை காண்பித்து, “அங்கு ஒரு ரூம் இருக்கிறது. அதை நீ உன்னுடைய பர்சனல் ரூமாக பயன்படுத்திக் கொள்” என்றான்.
‘என்னது? எனக்குன்னு பர்சனல் ரூமா?’ என்று நினைத்துக் கொண்டே, தன் பார்வையை மறுபுறம் திருப்ப, அங்கிருந்த கதவை காண்பித்து
“என்னுடைய அது குளியலறை” என்றான். என்னுடைய என்ற வார்த்தையில் இருந்த அழுத்தம், அதை அவள் பயன்படுத்தக் கூடாது என்பது போல் இருக்க, குழப்பமாக அவனை பார்த்தாள். அவனும் நெற்றியை தன் கட்டை விரலால் நீவிக் கொண்டு, “உன்னுடைய அறையிலேயே உனக்கு குளியலறை இருக்கும்” என்றான்.
ஏன்? இப்படி தனித் தனி அறை என்று தெரியாவிட்டாலும் சரி என்று தலையாட்டி அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.
“உனக்கு உறக்கம் வந்தால் நீ தூங்கு. எனக்கு கொஞ்சம் மெயில் செக் பண்ண வேண்டும்” என்று கூறி லேப்டாப்பை பார்த்தான்.
அவளுக்கும் உடலும், மனமும் அலுப்பாக இருக்க, சற்று உறங்கலாம் என்று தான் தோன்றியது. ஆனால் இவ்வளவு வெளிச்சத்தில் எப்படி உறங்குவது என்றும் அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கும் வெளிச்சத்தை விட இரண்டு மடங்கு வெளிச்சமாக இருந்தது. ‘இரவில் ஏன் இவ்வளவு வெளிச்சம்’ என்று யோசித்தபடியே தன்னுடைய உடைமைகள் எல்லாம் எங்கு இருக்கிறது என்று சுற்று மற்றும் பார்த்தாள்.
உறங்க சொல்லியும் அங்கேயே நிற்பவளை நிமிர்ந்துப் பார்த்த வெங்கட், அவள் எதையோ தேடுவது போல் இருக்க, “என்ன தேடுற?” என்றான்
“இல்ல, என்னுடைய டிரஸ்!” என்றதும்,
அவளது அறையின் பக்கம் கையை காண்பித்து “உன்னுடைய பொருட்கள் எல்லாம் அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்.
அவளும் அவன் காட்டிய அறைக்கு செல்ல, அவன் அறையை விட சற்று சின்ன அறை தான் ஆனாலும், அது அவளது வீட்டில் அவளின் அறையை விட பெரிது தான்.
குயின் சைஸ் கட்டில், சோபா, ஒரு பக்க சுவர் முழுவதும் கபோர்டு என்று எல்லாவற்றிலுமே பணத்தின் செழுமை தெரிந்தது. கட்டிலின் அருகில் இருந்த தன்னுடைய பெட்டியில் இருந்து, இலகுவான உடை ஒன்றை எடுத்துக்கொண்டு, நன்கு அலுப்பு தீர சுடுதண்ணீரில் குளித்து வந்தாள்.
‘உறக்கம் வந்தால் உறங்கத்தானே கூறினார், எங்கு படுப்பது’ என்று யோசித்து கதவை திறக்க, அவன் வேலை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அந்த அறையின் வெளிச்சத்தில் அவள் கண்கள் கூச,
‘இவ்வளவு வெளிச்சத்துல இப்போ தூங்க முடியாது. இங்கேயே படுத்து விடுவோம்’ என்று அந்த அறையிலேயே படுத்து உறங்கி விட்டாள்.
காலையில் எழுந்தது, திருமண அழைச்சல், வரவேற்பில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது, அது மட்டுமல்லாது தாய் தந்தையரின் வருத்தமான முகம், இது எல்லாம் அவளது நினைவுக்குள் வந்து வந்து செல்ல, இன்று தான் திருமணம் என்ற ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்லாமல், ஒரு விதமான அழுத்தமான நிலையில் இருந்தது அவள் மனம்.
அவளது தாய் தந்தையரின் கவலையான முகமே, அவள் கண்ணுக்குள் மீண்டும் மீண்டும் வந்து சென்றது. ‘காலையில் எழுந்ததும் அப்பா அம்மா கிட்ட முதலில் பேசணும்’ என்று நினைத்துக் கொண்டு அப்படியே கண் உறங்கினாள். அவள் கண் விழிக்கும் பொழுது, அங்கிருந்த ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் அறைக்குள் வியாபித்திருந்தது.
‘அச்சோ, வெளிச்சமா இருக்கே, ரொம்ப நேரம் ஆயிடுச்சோ’ என்று மணியை பார்க்க, மணி எட்டாகி இருந்தது.
‘நேற்றைய அலுப்பினால் அதிக நேரம் உறங்கி விட்டேன் போல’ என்று நினைத்துக் கொண்டு, வேகமாக எழுந்து குளித்து ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள்.
பின்னர் தாய் சொன்னது நினைவிற்கு வந்தது. திருமணமான புதிதில் வீட்டிற்கு பொண்ணு மாப்பிள்ளை பார்க்க, அடிக்கடி நிறைய பேர் வருவார்கள். ஆகையால் புடவை தான் கட்ட வேண்டும் என்று கூறி அனுப்பி இருந்தார். உடனே ஒரு புடவையை எடுத்து கட்டிக்கொண்டு வேகமாக வெளியே வந்தாள்.
வெங்கட்டும் அப்பொழுது தான் எழுந்து குளித்து இருப்பான் போல, அவனும் வெளியே செல்ல தயாராகி கதவை திறக்க, இவள் வருவதைக் கண்டு அவளை பார்த்தான்.
இவள் பதட்டமாக வருவதைக் கண்டு, “உறக்கம் வந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமே! ஏன் அவசரமாக வருகிறாய்?” என்றான்.
“இல்லை, ரொம்ப நேரம் ஆயிடுச்சு” என்று தயங்கியபடியே கூறினாள்.
“உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்க வேண்டியது தானே! இதில் என்ன இருக்கிறது” என்று கூறி “சரி வா, சாப்பிட்டு விட்டு வந்து வேண்டுமானால் தூங்கி ஓய்வெடு” என்று கூறி அவளையும் அழைத்துச் செல்ல, அறையின் விளக்குகளை அணைத்தாள் வைஷ்ணவி.
அணைத்த மறு நொடியே, “ஏய்..!” என்ற குரலுடன் அதை ஆன் பண்ணினான் வெங்கட்.
அவனின் குரலில் பயந்து ஒரு அடி பின்னே நகன்றாள் வைஷ்ணவி.
நெற்றியை நீவி தன்னை சமன்படுத்திக்கொண்ட வெங்கட், “மாடியில் எந்த சுட்சையுமே நீ ஆஃப் பண்ண கூடாது. எப்பொழுதுமே எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டு தான் இருக்க வேண்டும். புரியுதா?” என்றான் அழுத்தமாக.
அவளோ பயந்தபடியே சரி என்று தலையாட்ட,
“வா, சாப்பிட போகலாம்” என்று முன்னாள் வேகமாக சென்றுவிட்டான் வெங்கட்.
- தொடரும்..
🤔🤔🤔🤔
🤨🤨🤨🤨🤨
Entha venkat nallavana? Kettavana?
Day time la kooda light off panna koodathu ah
ethuku ippadi light potu vachi irukan ena prachanai nu ipo vaishu sonna tha therium kepom
Nice epi👍
Nice epi