Skip to content
Home » இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன் 26

வெங்கட் கோவமாக பேசிவிட்டு, சாப்பிட வரும்படி சொல்லி கீழே சென்று விட்டான். அவளுக்கோ பயத்தில் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தது. ‘ஏன் இப்படி கோபப்படுகிறார். விளக்கை தானே அணைத்தேன். பகலில் எதற்கு இவ்வளவு வெளிச்சம்’ என்று எண்ணம் தோன்ற, ரொம்ப நேரம் இங்கே நின்றால், அதற்கும் திட்டினால் என்ன செய்வது என்று மெதுவாக கீழே வந்தாள் வைஷ்ணவி.

அங்கு உணவு மேஜையில் அனைவரும் அமர்ந்திருக்க, “மகாராணிக்கு இப்பதான் விடிஞ்சுதா?” என்றார் அவனின் தாய்.

அவளோ வெங்கட்டை பார்க்க, அவனோ எந்த பதிலும் கூறாமல், சாப்பிட ஆரம்பித்தான்.

அவனது தந்தையோ “நேத்துதான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு. வீட்டிற்கு வந்த முதல் நாளே  ஏன் அவளை மிரட்டுற?” என்று மனைவியை கண்டித்து, “நீ உட்காருந்து சாப்பிடுமா” என்றார்.

வெங்கட் மனைவியிம் பக்கம் திரும்பி கூட பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டே, தம்பியிடம் அலுவலக விஷயமாக சில கேள்விகளை கேட்டான். இப்படியாக அலுவலக பேச்சு மட்டுமே அந்த உணவு மேஜையில் நிறைந்திருக்க, சாப்பிட்டு முடித்ததும் “சீக்கிரம் வா” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

“நேற்றுதானே திருமணம் முடிந்திருக்கு, இன்று அலுவலகம் செல்ல வேண்டுமா?” என்ற அவனின் தந்தையின் பேச்சு அவன் காதில் விழுந்தது போல் தெரியவில்லை.

அவனது தம்பியும் வேகமாக சாப்பிட்டு முடித்து, “சரிப்பா, நான் அண்ணா கூட ஆபீஸ் போறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடிவிட்டான்.

“சாரிமா, ஏதோ முக்கியமான வேலை போல! அதான் உடனே கிளம்பி விட்டான்” என்று மகனுக்காக மன்னிப்பு கேட்டார், மாமனார்.

“பரவாயில்லை மாமா” என்று சாப்பிட்ட தட்டுகளை எல்லாம் கழுவுவதற்கு எடுத்துச் சென்றாள் வைஷ்ணவி.

மருமகள் சமையலறைக்குள் சென்றதும், மனைவியிடம் “சும்மா அந்த பிள்ளையை மிரட்டிக்கொண்டு இருக்காதே! உன் மகனின் நிலைமையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள். அவளுக்கு அவனைப் பற்றி முழுவதையும் சொல்லிவிடு!” என்றார்.

“நீங்க உங்க வேலைய பார்த்துக்கிட்டு போங்க. எனக்கு தெரியும், எதை சொல்லணும், எதை சொல்ல கூடாதுன்னு ” என்று அவரை பேசவிடாமல் தடுத்து விட்டார் வெங்கட்டின் தாய்.

பாத்திரங்களை கழுவும் இடத்தில் போட்டு திரும்பிய வைஷ்ணவியின் எதிரில் வந்து நின்றார் அவளது மாமியார்.

“மகாராணி பாத்திரத்தை போட்டுட்டு எங்கே போறீங்க? இதையெல்லாம் யார் கழுவுவா? உங்க அம்மாவா வந்து கழுவி வைப்பாங்க!” என்று கூறியதும்,

விசுக்கென்று கண்ணீர் வந்தது. “என்னை எது வேண்டுமானாலும் சொல்லுங்க அத்தை. இப்ப எதுக்கு எங்க அம்மாவை பற்றி பேசுகிறீர்கள்?” என்று உடனே சொல்லிவிட்டாள்.

“ஏய்! இந்த மாதிரி எதிர்த்து என்கிட்ட பேசிக்கொண்டு இருந்தாய் என்றால் அவ்வளவுதான், ஒழுங்கா பாத்திரத்தை எல்லாம் கழுவி வச்சிட்டு, மத்தியான சமையல பாரு” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். 

என்னது சமையல் செய்யணுமா? என்று அதிர்ந்து, வெளியேறிய மாமியாரின் முதுகை வெறித்துப் பார்த்தாள் வைஷ்ணவி. சமையலை நினைத்து அதிர்ந்து அப்படியே ஒரு நொடி நின்றுவிட்டாள்.
இதுவரை லட்சுமி அவளை முழு சமையல் செய்ய அனுமதித்தது இல்லை. தோசை சுடுவது, முட்டை ஆம்லெட் போடுவது, மீன் வறுப்பது என்று சின்ன சின்ன வேலைகளை மட்டும், அவரின் மேற்பார்வையில் செய்ய விடுவாரே தவிர, தனியாக சமையல் அறையில் இதுவரை வைஷ்ணவி என்று சமைத்தது இல்லை.

இன்று மாமியார் சமைக்க சொல்லி சென்றதும் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு நொடி நின்ற வைஷ்ணவி, ‘கல்யாணம் முடித்து விட்டால், எல்லா பெண்களும் வீட்டில் சமையல் செய்து தானே ஆகவேண்டும்’ என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

காலையில் அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்தது ஞாபகம் வர, தனது ஃபோனை தேடி, மேலே வந்தாள். தனது பையில் இருந்த ஃபோனை எடுத்து, லட்சுமிக்கு அழைக்க, உடனே எடுத்த லட்சுமி மகளிடம் நலம் விசாரித்தார்.

தாயின் பதட்டத்தை கண்டு உள்ளுக்குள் வருந்திய வைஷ்ணவி, “எதுக்கு மா இவ்வளவு பயப்படுறீங்க? நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்! என்றாள் வரவழைக்கபட்ட புன்னகையுடன்.

“நீ சந்தோஷமாக இருந்தாலே எங்களுக்கு மகிழ்ச்சி தான் டா” என்ற  லட்சுமி “சாப்பிட்டாயா?” என்று கேட்டார்.

“இப்போதுதான் அம்மா. எழுந்ததும் சாப்பிட்டும் முடித்து விட்டேன்” என்றாள்.

அவளின் குரலில் புன்னகைத்த லட்சுமி, “இவ்வளவு லேட்டா எழுந்ததற்கு உங்க வீட்ல எதுவும் சொல்லலையா?” என்றார், மகளை புகுந்த வீட்டில் திட்டி இருப்பார்களோ என்று பயந்தபடி.

“அவர், இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க தான் சொன்னாருமா” என்றாள் வைஷ்ணவி.
அதில் உண்மையில் மகிழ்ந்து விட்டார் லட்சுமி. “உண்மையாகவா! மாப்பிள்ளை அப்படியே சொன்னார்?” என்றார்.

“ஆமாம்மா” என்ற வைஷ்ணவியின் பதிலில் மகிழ்ந்த லட்சுமி,
“சரி மா, அதுக்காக ரொம்ப நேரம் எல்லாம் தூங்காதே. காலையில் எழுந்திருச்சு கீழே போயிடனும், சரியா?” என்றார்.

“சரி மா” என்ற வைஷ்ணவி, “அம்மா இன்னைக்கு நான் சமைக்கலாம் என்று இருக்கிறேன். ஏதாவது இலகுவாக செய்ய சொல்லித்தாங்க” என்றாள்.

“என்னது? நீ சமைக்க போறியா? ஏன் அங்கு சமையலுக்கு ஆள் இல்லையா? இரண்டு மூன்று வேலைக்காரர்கள் இருந்ததை பார்த்தேனே!” என்றார் படபடப்பாக

“எல்லோரும் இருக்காங்க அம்மா. இன்று நான் சமையல் செய்யலாம் என்று நினைக்கிறேன், அதுதான்” என்றாள், தாயின் பதட்டத்தை கண்டு மென்மையாக.

‘தன் கணவனுக்கு தன் கையால் ஏதாவது செய்ய வேண்டும் என்று, மகள் நினைக்கிறா போல’ என்று நினைத்து, என்ன சமைக்க வேண்டும், எப்படி சமைக்க வேண்டும் என்று ஃபோனிலேயே அவர் அவளுக்கு வகுப்பு எடுக்க, அனைத்தையும் கவனமாக குறித்துக் கொண்டு கீழே வர, அரை மணி நேரம் ஆகிவிட்டது.

ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவர், “உன்னை வேலை செய்ய சொன்னா, மேலே போய் சொகுசா உக்காந்துட்டு வரியா?” என்று மிரட்டலாக கேட்டார்.

“இல்லை அத்தை, அம்மாக்கு ஃபோன் பண்ணி, எப்படி இருக்காங்கன்னு கேட்டேன்”

“ஒரு நாளில் உங்க அம்மாக்கு என்ன ஆயிடப்போகுது?” என்றார் அவர் நக்கலாக.

தன் தாயை பற்றி அவர் கூறியதும், ‘இவரிடம் பேசினால் நமக்குத்தான் வீணா டென்ஷன் ஆகும்’ என்று நினைத்து சமையலறைக்கு சென்று விட்டாள்.

அங்கு இரண்டு பெண்மணிகள் வேலை செய்து கொண்டிருக்க, அவர்களை புன்னகையாக பார்த்த வைஷ்ணவி, “இன்று நான் சமைக்க போகிறேன்” என்று சொல்லி, அவளுக்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் கூறினாள்.

சமையலறையில் இருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி, “நீ இவங்க கூட இருந்து ஹெல்ப் பண்ணு, நான் போய் மற்ற வேலைகளை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று வீட்டை சுத்தம் செய்ய சென்று விட்டாள்.

தன்னுடன் இருந்த பெண்ணின் உதவியுடன், அனைத்து சமையலையுமே முடித்து விட்டாள் வைஷ்ணவி. ஒரு மணிக்கு எல்லாம் மதிய சமையல் தயாராக,  மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து விட்டான் வெங்கட்.

வந்ததும் குளித்து முடித்து சாப்பிட வர, மாமனார் மாமியார் மற்றும் கணவருக்கு தான் சமைத்ததை பரிமாறினாள் வைஷ்ணவி.

அவளின் மாமனார் அவளது உணவு ஒவ்வொன்றையும் பாராட்டி உண்டார். மாமியாரோ ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறை சொல்லி உண்டார். ஆனால் வெங்கட், எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து மேலே சென்று விட்டான்.

மூவரும் மூன்று விதம் என்று நினைத்துக் கொண்டு, தனது மதிய உணவையும் முடித்து விட்டு, மேலே சென்றாள் வைஷ்ணவி.
அவள் வருகைக்காக காத்திருந்த வெங்கட், அவள் வந்ததும்,
“உனக்கு வெளிச்சம் வேண்டாம் என்றால், உனது அறையிலேயே இருந்து கொள்ள வேண்டும். என் அறையிலோ, ஹாலிலோ எரியும் வெளிச்சத்தை நீ அணைக்க கூடாது, சரியா?” என்றான் அழுத்தமாக.

அவள் சரி என்று தலையாட்டி, “ஏன்?” என்றாள் தயக்கமாக

“சொன்னா, சொன்னதை கேட்டு நடக்கணும். ஏன்? எதற்கு? என்று கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. எல்லா நேரமும், எல்லா விளக்குகளும், எரிந்து கொண்டு தான் இருக்க வேண்டும், புரியுதா?” என்றான் சற்று கோபமாக.

வெங்கட்டின் கோபத்தைக் கண்டு, சரி என்று தானாக தலையாடியது வைஷ்ணவிக்கு.

  • தொடரும்..

5 thoughts on “இருளில் ஒளியானவன்-26”

  1. Kalidevi

    vantha muthal naale marumagala miratuthu intha amma. vela karangala vachitu ethuku ivala vela seiya sollanum ethuku ippadi nadanthuranga avanga magan mela korai vachitu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *