Skip to content
Home » உள்ளொளிப் பார்வை – 3

உள்ளொளிப் பார்வை – 3

அத்தியாயம் – 3

மார்கழி ஒன்றாம் தேதி. அதிகாலை ஐந்து மணி. தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இருந்த சிறு கோவிலில் இனிமையான பெண் குரலில் “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்“ என்ற திருப்பாவை பாசுரம் பாடும் ஒலி கேட்டது.

Thank you for reading this post, don't forget to subscribe!

அது ஒரு சிறிய பெருமாள் கோவில். ஊருக்குள் திவ்ய தேசக் கோவிலில் சௌந்தரராஜப் பெருமாள் வீற்றிருக்க, சற்றுத் தள்ளி இந்த கோவில் அமைந்து இருந்தது. இந்தக் கோவிலில் நாராயணனாக பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி கொடுத்தார். சிலருக்கு மட்டுமேயான குலதெய்வம் என்பதால் அதிகக் கூட்டம் இருக்காது.

சிறிய கோவில் என்றாலும், மிகவும் பழமையான கோவில் தான். பெரிதாக எடுத்துக் கட்டவில்லையே தவிர, நாராயணனின் திருமேனி எந்த விதத்திலும் சிதைந்துப் போகாத அளவிற்கு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்து இருந்தார்கள் அந்த கோவிலின் உரிமையாளர்கள். குறைந்தது ஐந்து தலைமுறையாவது கோவிலைப் பராமரித்து இருப்பார்கள்.

வருடத்தில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று மட்டும் நாராயணனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் ஒன்று சேர்ந்து உற்சவம் நடத்திட, அப்போது மட்டுமே கூட்டம் இருக்கும்.

மற்றபடி ஊர் மக்கள் அவ்வப்போது வருவது தான். அது கூட சற்று வயதானவர்கள் பொழுதுபோக வருவார்கள். மற்றபடி கோவிலின் முன்புறம் இருக்கும் காலி இடம் அந்த வீதி சிறுவர்களின் விளையாட்டுத் திடல்.

நாராயணன் சன்னதி மட்டுமே கொண்ட அந்தக் கோவிலில் பதினைந்து வருடங்கள் முன் சிறு அளவில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது சுற்று மண்டபமும் அதில் ஒரு ஓரத்தில் மடப்பள்ளியும் சேர்த்துக் கட்டியிருந்தார்கள்.

உள்ளே பெருமாள் சன்னதியில் திரை சேர்த்து இருக்க, திருப்பாவை இருபத்தி எட்டுப்  பாடல்களும் பாடி முடியவும், பக்தர்கள் சிலர் வந்து சேர்ந்தனர். சிறுவர்கள் கூட வேகமாக வந்து நின்று இருந்தனர்.

இதற்கு பிறகு திரைவிலக்கி ஆரத்திக் காட்டி சாற்று முறை பாட்டுக்கள் பாடி முடியவும், சுடச் சுடப் பொங்கல் கிடைக்குமே.

சரியாக ஐந்தரை மணிக்குக் கற்பூர ஆரத்திக் காட்டி அர்ச்சகர் வெளியே வரவும், சிறுவர்கள் கோவில் வெளியில் இருந்த காலி இடத்தில் வரிசையாக நின்று இருந்தனர்.

எல்லோரும் வெளியே செல்லவும், அர்ச்சகர் பொங்கல் பாத்திரமும், சிறு தொன்னைகளும் எடுத்து வெளியே வந்து ஒரு மர ஸ்டூல் மீது வைத்துக் கொண்டு நிற்க, கோவிலில் இத்தனை நேரம் பாடிக் கொண்டிருந்த அவரின் பெண் மலர்மங்கை வெளியே வந்தாள்.

மலர் மங்கை இருபத்தி மூன்று வயதுப் பாவை. கோவில் அர்ச்சகர் பாரத்தசாரதியின் ஒரே மகள். அந்த ஊரில் உள்ளவர்கள் எல்லோருக்கும் அர்ச்சகர் பெண் என்பதோடு, தாயில்லாதப் பெண் என்று பரிவும், பிரியமும் அதிகம்.

ஒரு பெரியவர் “இந்தா மங்கைப் பொண்ணு, உன் குரல் அப்படியே தேனில் இழைச்சது மாதிரி இருக்கு கண்ணு. சுமாரான குரல் வாய்ச்சவங்க எல்லாம்  டிவிப் பெட்டியில் வாளு வாளுன்னுக் கத்துறதப் பார்க்கும் போது, எங்க மங்கைப் பொண்ணுப் பேசுறது கூட பாடற மாதிரி இருக்கும்டான்னு கத்தனும்னு தோணுது.“ எனக் கூற, அவருக்குச் சிறு சிரிப்புடன் தலையை மட்டும் அசைத்தாள் மலர் மங்கை.

பின் சிறுவர்கள் பக்கம் திரும்பி “பசங்களா வரிசையா நின்னு பிரசாதம் வாங்கிக்கோங்க.“ என்றவள்,  “எழுந்தது எழுந்துட்டேள். பத்து நிமிஷமா இங்கே நிக்கிற நாழிலே குளிச்சுட்டு வந்தா, உள்ளே நின்னு பெருமாள் சேவிக்கலாமோனோ?” என்று வினவ,

“அக்கா, பெருமாள் தான் தினம் கும்பிடறோம். பொங்கல் இந்த மாசம் மட்டும் தானே கிடைக்கும். அதுக்குப் பல்லு விளக்கினாப் போதும்.” என்று ஒரு வாண்டுப் பதில் கூறியது.

மற்றொரு வாண்டு “அக்கா, பெருமாளுக்கு வெளியிலர்ந்தே குட்மார்னிங் சொல்லிட்டோம். நீ தொன்னை குடு” என்றது.

“எல்லாரும் நன்னாப் பேசக் கத்துண்டு இருக்கேள்.“ என மங்கை கூற,

“கொழந்தேள  ஒண்ணும் சொல்லாதடா மங்கை. அவாளுக்குக் கொடுக்கிற பிராசாதம் சாட்சாத் அந்தக் கிருஷ்ணப் பரமாத்மாவே ஏத்துண்டதா அர்த்தம்“ என்றார் மங்கையின் தந்தை பார்த்தசாரதி.

மங்கையும் சிரித்தபடி தொன்னைகள் வழங்க, அர்ச்சகரிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு ஓடினர் குழந்தைகள். அவர்களின் கல்மிஷமில்லா செயல்களைப் பார்த்தபடி நின்று இருந்த மங்கை, தன் தந்தையிடம் திரும்பி

“அப்பா, நான் ஆத்துக்குப் போய் தளிகை பண்ணிடறேன். நீங்க சீக்கிரம் வந்துட்டேள்னா உங்களுக்குப் பரிமாறிட்டு ஸ்கூல் கிளம்பறேன்” என்றாள்.

“நேக்காகக் காத்துண்டு இருக்காத மங்கை. நீ தளிகை பண்ணி முடிச்சதும்  வழக்கம் போல் சாவியை மாடத்தில் வச்சுட்டுக் கிளம்பு. எட்டு மணி பஸ் விட்டுட்டா நோக்கு நாழியாயிடும்” என்றார் பார்த்தசாரதி.

“சரிப்பா.“ என்றவள் சென்று விட, அவளைச் சற்று நேரம் பார்த்து விட்டுக் கோவில் உள்ளே சென்றார். அங்கே அங்கே காலடி மண்ணாகக் கிடக்க, துடைப்பம் எடுத்து பெருக்க ஆரம்பித்தார்.

அந்தக் கோவிலைப் பொறுத்த வரை அர்ச்சகர், பரிசாரகர் (சமையல் செய்பவர்), துப்புரவுத் தொழிலாளி எல்லாம் அவர் ஒருவர் மட்டுமே. வேறு ஏதாவது மராமத்துப் பணிகள் இருந்தால் அதற்கு மட்டும் வெளி ஆள் ஏற்பாடு செய்து விடுவார்கள். கோவில் கணக்கு வழக்குகள் ஊரில் இருக்கும் பெரிய மனிதர் ஒருவரின் மேற்பார்வையில் இருக்கும்.

இது சில குடும்பங்களுக்கு மட்டுமேயான கோவில் என்பதால் அவர்களால் இயன்ற அளவு பணம் போட்டு டிரஸ்ட் மாதிரி வைத்து அதில் செலவுகளைச் செய்கின்றனர். அதனால் தனித்தனி ஆள் எல்லாம் கிடையாது.

கோவில் வெளிப்பிரகாரம் எல்லாம் தினமும் மங்கை சுத்தம் செய்து விடுவாள். மாலை வேளைகளில் தான் செய்வாள். அவளால் வர முடியாத நாட்களில் மட்டுமே அவள் தந்தை செய்வார். 

தினமும் அந்தக் கோவிலுக்கு ஒன்றிரண்டு பேர் என தான் வருவார்கள் என்பதால் அதிகம் அசுத்தம் ஆகாது. இன்றைக்கு காலையில் ஒரே நேரத்தில் முப்பது, நாற்பது பேர் வரை வந்து இருக்கவே கொஞ்சம் குப்பை சேர்ந்து விட்டது.

பெரியவர்கள் தொன்னைகளைக் குப்பைக் கூடையில் போட்டு இருந்தாலும், சிறு பிள்ளைகள் அதன் அருகில் மேலும், கீழுமாக இரைந்து விட்டு இருக்கவே அதை எல்லாம் சுத்தம் செய்தார் அர்ச்சகர்.

அங்கே வீட்டில் மங்கை வேலைகளை முடித்துத் தான் சாப்பிட்டு விட்டு, மதியத்திற்கும் எடுத்துக் கொண்டாள். தன் தந்தை வரும்போது சாப்பிட ஏதுவாக எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, சிறிய பாத்திரங்களை எல்லாம் கழுவினாள். இல்லாவிட்டால் அவள் தந்தை அந்த வேலைகளைச் செய்வார், பின் வெளியே செல்ல ஏதுவாகப் புடவை மாற்றிவிட்டுக் கிளம்பினாள்.

மலர்மங்கையின் இருப்பிடம் தஞ்சாவூர், கும்பகோணம் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது. குக்கிராமம் என்ற வகையறாவும் கிடையாது. பெரிய ஊர் என்றும் வராது. பேருந்து வசதி, சிறு சிறு கடைகள் எனத் தேவையான அடிப்படை வசதிகள் எல்லாம் நிறைந்த ஊர். அதே சமயம் தினமும் புழுதிப் பறக்க கார், லாரி எனப் பற பறக்கும் நெரிசல் இல்லாத ஊர். அவள் வீட்டில் இருந்து சற்றுத் தூரம் நடந்து சென்றால் பேருந்து நிறுத்தம் வரும்.

மங்கை அங்கேச் செல்ல, காலையில் கோவில் வந்த சிறுவர்களில் சிலர் யூனிஃபார்ம் அணிந்தபடிப் பேருந்திற்காகக் காத்து இருந்தனர்.

மங்கை கும்பகோணம் தனியார் பள்ளி ஒன்றில் சிறு குழந்தைகளுக்குப் பாடங்களும், பெரிய பிள்ளைகளுக்கு இசை வகுப்பும் எடுக்கும் ஆசிரியை. இசையின் மீதான ஆர்வத்தில் திருவையாறு இசைக் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்து இருக்கிறாள். அரசுப் பள்ளிகளுக்கு விண்ணப்பித்து இருந்தாலும், தற்சமயம் தனியார் பள்ளியில் தான் வேலை செய்கிறாள்.

கும்பகோணம் புறநகர் பகுதியிலேயே அவள் வேலை செய்யும் பள்ளி இருக்கிறது. ஒன்பது மணிக்குப் பள்ளியில் இருக்கவேண்டும் என்பதால், எட்டு மணி பேருந்து தான் அவர்களுக்குச் சரி வரும்.  மங்கையோடு நிற்கும் சிறுவர்களும் இவள் வேலைப் பார்க்கும் பள்ளியில் தான் படிக்கின்றனர்.

பேருந்து வரும் நேரம், அந்த ஊர் தபால்காரர் வந்தார். அவர் மங்கையைப் பார்த்து விட்டு, “மங்கைமா, உன் பேருக்கு லெட்டர் வந்துருக்குமா” என்றார்.

மங்கை தனக்கு யார் கடிதம் எழுதப் போகிறார்கள் என்று எண்ணியபடி அனுப்புநர் முகவரியைப் பார்த்தாள். அதில் இருந்த முகவரியைக் கண்டதும், சிறு திடுக்கிடலோடுப் பிரித்துப் படித்தவளுக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை.

அதற்குள் பேருந்து வரவே, கடிததத்தைத் தன் பைக்குள் வைத்து விட்டு அதில் ஏறினாள் மங்கை. அவள் ஊர்ப் பிள்ளைகள் அவளுக்கு இடம் பிடித்துக் கொடுக்கவே, அவர்களிடம் சிறு புன்னகையோடு நன்றி தெரிவித்து விட்டு அமர்ந்தாள். மங்கையின் சிந்தனை எல்லாம் அந்தக் கடிதம் பற்றியே இருந்தாலும், அருகில் அமர்ந்து இருந்தப் பிள்ளைகள் அவளோடு பேச ஆரம்பிக்கவே அதில் தன் கவனம் செலுத்தினாள்.

பின் பள்ளிக்குச் சென்று வழக்கமான ஆசிரியைப் பணிகளை மேற்கொண்டவள் சிந்தனையில் இருந்து அந்தக் கடிதம் சற்று நேரம் மறைந்து இருந்தது.

மதிய உணவு இடைவேளையில் தன் கைப்பை திறக்க, அப்போது அவள் கைகளில் கடிதம் தென்படவே அதை மீண்டும் படித்துப் பார்த்தாள்.

“ஏன் அவர் இப்படிச் செய்தார்?” என்றே அவளுக்குக் கோபம். இதை யாரிடம், எப்படிச் சொல்வது என தவித்தாள்.

சில நாட்கள் முன் மங்கையின் அத்தை மகன் தன்னைப் பள்ளியில் சந்தித்தப் போதே அவளுக்கு யோசனைதான்.

படிப்பு முடியும் வரை விடுமுறை நாட்களில் இங்கே வந்து போகும் அத்தை மகன், வேலையில் சேர்ந்த பிறகு அதிகம் வரமாட்டார். வந்தாலும் நேராக வீட்டிற்கு வந்து தந்தையோடு பேசி விட்டு, அவர் முன் தான் இவளிடம் பேசுவார். அவ்வப்போது அலைபேசியில் இருவரும் பேசுவது உண்டு.

அலைபேசியில் பேசும்போது பல நேரம் நன்றாகப் பேசினாலும் சில நேரங்களில் இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் வந்ததுண்டு. பின் இருவரும் அவர்களே சமாதானமும் ஆகிக் கொள்வார்கள்.

இப்போது இந்தக் கடிதம் பற்றித் தன் தந்தையிடம் சொல்லிவிடலாமா? அவரிடம் சொன்னால் உடனடியாக அத்தை வீட்டினரிடம் பேசிவிடுவாரா? என்ன செய்வது என்று புரியவில்லை.

அதே சிந்தனையோடு அன்றாட வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை. அந்த வாரம் முடிந்து இருக்க, அன்றைக்கு சனிக்கிழமை. இரவு கோவில் நடை சாற்றி விட்டு வரும்போது, மங்கை டிவி பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அவளின் தந்தை ஆச்சரியமாகப் பார்த்தார்.

அவர்கள் வீட்டில் டிவி இருந்தாலும் அதிகம் பார்ப்பதில்லை. மங்கை தான் வேலை செய்யும்போது பாட்டுக்கள் போட்டு விடுவாள். அவள் தந்தை வரும் நேரம் அதையும் போடுவதில்லை. என்றாவது செய்திகள், ஆன்மீக விழாக்கள் மட்டும் பார்ப்பார்.

மங்கை டிவியில் ஆழ்ந்து இருப்பதைக் கண்டு, “என்ன மங்கை? எதுவும் முக்கியமான விஷயமா?” எனக் கேட்டார்.

அவர் குரல் கொடுத்தப் பின்னே தான் சட்டென்று எழுந்தவள் ,

“ஒன்னுமில்லபா. சும்மா தான் பாத்துண்டு இருக்கேன்” என்றாள் மங்கை.

“அதுக்கு ஏன்மா பதட்டமாற? நீ பாரு.” என்றபடி வீட்டினுள் சென்று கை கால் அலம்பிக் கொண்டு வந்தார். அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்துப் பரிமாறினாலும், அவ்வப்போது டிவி பக்கமும் மங்கையின் பார்வைச் சென்று வந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்த எதுவும் நடக்காததால் நிம்மதி கொண்டாள். அதற்கு பின் மங்கையும் சாப்பிட்டுப் பின் இருவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் வழக்கம் போல் சென்றது. மங்கை மனதினுள் தன் அத்தை மகன்  எழுதிய கடிதம் ஒருவேளை தன்னை ஏமாற்றவோ என்று நினைத்துக் கொண்டாள். அவனின் போனிற்கு முயற்சி செய்யத் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வரவே, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள்.

சரி வருவது வரட்டும் என்று எண்ணியபடி இரவு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, பத்து மணி அளவில் அவளின் அலைபேசி அடித்தது. இந்த நேரத்தில் யார் என்று பார்க்க, அவள் அத்தை அழைத்து இருந்தார்.

சிறு கலக்கத்துடன் அழைப்பை ஏற்க, “மங்கை, நம்ம நாராயணா என்ன பண்ணிருக்கான் தெரியுமாடி?” என்றார்.

“என்ன ஆச்சு அத்தை?” எனக் கேட்டாள்.

“டிவி போட்டுப் பாரு” என்றவர், “இவனை யாரு இந்த டிவி புரோகிராம் எல்லாம் போகச் சொன்னா? நோக்கு ஏதும் தெரியுமா?” என அத்தை கேட்க, விமலன் அவளுக்கு எழுதியக் கடிதத்தைப் பற்றி எப்படி கூறுவது என்று திணறினாள் மலர் மங்கை.

-தொடரும்-

3 thoughts on “உள்ளொளிப் பார்வை – 3”

  1. Oh ,malarmangai ,vimal Narayanan jodi ya?
    Nice names.
    Small temples la Ella work um archagar e panrathu ellam nadanthutu than iruku. Avargal perumal ku Thane seigirom nu athaiyum easy a eduthukiraanga .
    But they don’t have recognition.
    Malarmangai athai sonnathai ketu enna seival?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *