10
பாம்பு புற்றின் வாயில் மிகவும் குறுகலாக இருந்தது. பாம்பு இருந்து கொத்தி வைத்தால்
வாயில் நுரை கக்கி சாக வேண்டுமே என்று மனதின் அடியில் சிறு உதறல் இருந்தாலும் அதை
வெளிக்காட்டிக் கொள்ளாமல் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று இல்லாத
தைரியத்தை வரவழைத்து கொண்டவனாக மெல்ல காலை வைத்தான். உடம்பை சற்று
அதிக்கபடியாகவே குறுக்கிக் கொண்டவனாக உள்ளே நுழைய முயன்றான். கொஞ்சம் சிரமம்
தான். ஆனால் இதற்குள் எப்படி அந்த பசு மாடு போயிற்று என்று எண்ணியவனாக
குறுகலான பாம்பு புற்றுக்குள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக திணித்தவாறே
முன்னேறினான். மேலே இருந்து வந்த வெளிச்சமும் காற்றும் தான். உள்ளே போக போக
காற்றும் குறைந்து மூச்சு விடுவதற்கு அவஸ்தையாக இருந்தது. வெளிச்சம் வேறு போதாமல்
பாதை மிகவும் கூடாரமான இருட்டாக இருக்கவே தனக்குள் தன் இஷ்ட தெய்வத்தை
வணங்கிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உடலை அசைத்து அசைத்து பாம்பைப்
போன்றே ஊர்ந்து ஊர்ந்து சென்றான் ராசு.
இத்தனை அவஸ்தையும் கொஞ்ச தூரம் வரை தான். திடீரென்று முகத்தில் காற்றுப் படவே
மூச்சை நன்றாக இழுத்து விட்டான். பாதை முடிந்து விட்டதா? காற்று எங்கே இருந்து
வருகிறது? ம். பார்ப்போம். நகருவதை நிறுத்தியவனுக்கு அந்த இருட்டான பாதை முடிந்து
சட்டென்று கண்கள் கூச வெளிச்சம் வந்த போது, தான் ஒரு பொட்டலில் இருப்பது புரிந்தது
ராசுவிற்கு. கண்களை நன்றாக விரித்துப் பார்த்தான். அவன் முன்னே ஒரு சிறு ஓடை ஒன்று
இருந்தது. நீரை கண்டதும் தான் அவன் தாகத்தால் விடாயத்திருப்பது நினைவிற்கு வர ஒரு
அடி முன்னே சென்று தண்ணீர் குடிக்கும் நோக்கில் நீரில் கை வைக்கப் போனான்.
பதறியவனாக கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டான். அப்பா……! நல்லவேளை
தாகத்தில் உயிரை விடப் போனோம் என்று நினைத்தவனுக்கு உயிர் தப்பிய நிறைவு வந்தது.
நல்லவேளை தப்பினோமடா. சாமி……..!
தண்ணீர் நல்ல தெளிவாக இருந்ததினால் அதில் பாம்புகள் இல்லையில்லை ஒரு பாம்பு
கூட்டமே நெளிந்து கொண்டிருப்பது மிகத் துல்லியமாக தெரிந்தது. அந்த ஓடையின் மறுபுறம்
அதாவது இவன் இருக்கும் நேர் எதிர் திசையில் இவனுடைய பசுமாடு நின்று கொண்டிருந்தது.
அதைக் கண்டதும் அதன் அருகில் சென்று விட நினைத்து ஓடையில் பாம்பு இல்லாத சிறு
இடைவெளியில் காலை வைக்க முனைந்தான். ஆனால் அந்தோ பரிதாபம்……….! இவன்
அசைவு அறிந்து உடனே அவைகள் உஷாராகியது. இவனை நோக்கி வரப் பார்த்தது.
சட்டென்று கால்களை நீரில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டான். எப்படி பசுவின்
அருகில் செல்வது என்று நாலாபுறமும் கண்களால் துழாவினான் . மார்க்கம் ஒன்றும்
புரிப்படவில்லை. சும்மா இருக்குதுகளா இவைகள்! ச்சை. என்று மனதிற்குள் சலித்துக்
கொண்டான்.
இவனைக் கண்ட மாத்திரத்தில் அது இவனை எப்போதும் அழைப்பதைப் போல அண்ணே
என்று அழைத்தது.
“ஏன்மா நீ எப்படி இங்கே வந்து மாட்டிகிட்டே?” இறைந்து கேட்டான் ராசு.
“அண்ணே, உங்க வெள்ளையனால தான்”
“ஆமாம். உன்னை இங்கே மாட்டி விட்டுவிட்டு அவன் வெளியே இருக்கான்”
“ஆமாம் அண்ணே”
“அது சரி. நீயும் அவனைப் போல வெளியே புல்லு மேய்வது தானே.”
“இங்கே நல்ல புல்லு கிடைக்கும். ஒருமுறை சாப்பிட்டால் உடல் நல்ல புஷ்டியாக இருக்கும்.
தோல் எல்லாம் பளபளப்பாக மாறி விடும். நாட்டு மாடுங்களைப் போல இல்லாமல் நல்ல
வெளிநாட்டு வகையறா போல ஆகிவிடுவோம் என்று சொன்னது”
“அதை நம்பி நீயும் அது கூட கிளம்பி வந்துட்டே”
“ஆமாண்ணே”
“பொய்யான புகழ்ச்சி நம்மை ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விடும் என்று உனக்குத்
தெரியாதா?”
“தெரியலையே அண்ணே. வெள்ளையன் சொன்னதை நம்பி மோசம் போயிட்டேன்”
“பொம்பிள்ளைப் பிள்ளைங்களை வீட்டுக்குள்ளேயே வெச்சி வளர்ப்பது அவுங்க
பாதுகாப்புக்குத் தான். அதை புரிஞ்சிக்காமல் வீண் மோகத்தாலே பையனுங்களை நம்பி
ஆபத்துள்ள மாட்டிக்கிடறது. அப்புறம் அழுவறது.”
“அண்ணே நீ சொல்றதெல்லாம் உண்மை அண்ணே. இனிமே நான் வீட்டை விட்டு வெளியே
போகவே மாட்டேன். இந்த ஒருதடவை என்னை எப்படியாவது காப்பாத்து” கெஞ்சியது பசு.
“அதுக்குத் தான் நான் வந்தேன். அது சரி இதுக்குள்ளே எப்படி வந்தே?”
“இந்த பாம்பு புத்துக்கு மேலே புதர் மண்டிக்கிடந்திருந்தது. அதில் நல்ல பச்சைபசேல்னு
புல்லுங்க வேறு தழைச்சு கிடந்தது. அதை எம்பி எடுக்க முயன்றேன். கால் தவறி இதற்குள்
விழுந்து விட்டேன்”
“பாரு. எவ்வளவு ஒரு ஆபத்தான இடம்” சுற்றும் முற்றும் பார்த்தான் ராசு. தப்பிப்பதற்கு
வழியேயில்லை.
“அண்ணே என்னை எப்படியாவது காப்பாத்துன்னே. என் குட்டி என்னைக் காணாம
தேடும்னே” பசு கண்ணீர் விட்டு அழுதது.
“இப்போ அழுது என்ன பிரயோசனம்? உன் குட்டி உன்னைத் தேடத் தான் செய்கிறது. மா மா
ன்னு ஒரே ஓலம் தான்”
“அய்யோ. எப்படியாவது காப்பத்துன்னே”
“அதான் புரியலை” சொன்னவன் ஓடையின் தலைப்பகுதியில் ஏதேனும் நிலப்பரப்பு
தென்படுகிறதா என்று நடந்து போய் பார்த்தான். ஊஹூம். இவனுக்கும் அந்த பசு மாட்டிற்கும்
இடையில் அந்த ஓடை பறந்து விரிந்து இருந்தது. அதில் பாம்புகள் மினுக்கிக் கொண்டிருந்தது.
அப்படி இல்லாவிட்டால் நீந்தி போய் மாட்டை இழுத்துக் கொண்டு வந்து விடலாம். இப்போது
என்ன செய்வது என்று யோசனையாக இருந்தது.
“எப்படி பார்த்தாலும் இடையில் இருக்கும் இந்த ஓடையைக் கடந்து தான் உன்னை இங்கே
கொண்டு வர முடியும். ஆனால் இதற்குள் இறங்க முடியாதே. என்ன செய்வது?” தன்னை மீறி
கவலையுடன் சொன்னவனை இவனாலும் நம்மை காப்பாற்றிட இயலாது என்பது புரிந்து
அந்த பசு மாடு பயத்தோடும் பசியோடும் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் வயிற்றில்
இருக்கும் உணவுப்பைகளில் இருக்கும் உணவை இந்த இரண்டு நாட்களாக வாயில் கொண்டு
வந்து மென்று தின்று ஆகி விட்டது. இப்போது பசுவின் உணவுப்பை காலியாகி விட்டது.
பசிக்க வேறு செய்கிறது.
“நான் சொல்றேன்”
இப்போது குரல் வந்த திசையை பார்த்தார்கள் இருவரும் ஒரு சேர. அங்கே ஒரு மிகப் பெரிய
பாம்பு தரையில் படுத்து கிடந்தது. கண்கள் ரெண்டும் கோவைப் பழமாக சிவந்து பெரிதாக
விரிந்து அகோரமாக இருந்தது. பார்ப்பதற்கு படு பயங்கரமாக இருந்தது. பேசும் போது மெல்ல
அசைந்த அந்த பாம்பு பார்ப்போருக்கு அடி வயிற்றில் கிலியைக் கொடுத்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக அத்தனை ஒரு அருவெறுப்பு. அதை பார்த்த மாத்திரத்தில் அது தான்
இந்த பாம்பு கூட்டத்தின் தலைவனாக இருக்க முடியும் என்று தோன்றியது.
“சொல்லு”
“உன் பசு மாட்டை காப்பாத்தனுமா?” உறுதிபடுத்திக் கொண்டது.
“ஆமாம்” என்றான் அவனுமே உறுதியாக.
தலையை ஆட்டி கொஞ்ச நேரம் தனக்குள் தானே எதையோ யோசித்துக் கொண்டிருந்தது.
என்ன சொல்லப் போகிறதோ என்று இருவரும் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அது யோசனையின் முடிவில் சொன்னது.
“எனக்கு இன்று இந்த மாடு தான் உணவு. எங்கள் எல்லோருக்குமே இந்த மாடு ஒரு
வாரத்திற்கான உணவு என்று உனக்கு இந்நேரம் புரிந்திருக்கும்”
அந்த பாம்பு சொல்லும் போதே நீருக்குள் இருக்கும் மற்ற அனைத்து பாம்புகளும் தலையை
மட்டும் நீருக்கு வெளியே நீட்டி ஒரு பெருமூச்சை கக்கி நாக்கை நீட்டி கண்களை விழித்து
“ஆமாம்” என்றன கோரசாக.
“அண்ணா……!” பயத்தில் அலறியது பசுமாடு.
“இரு. கொஞ்சம் பொறு. தலைவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்”
“அது தான் சரி. நீ என்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்”
“ஆமாம் தலைவரே. பாவம் அந்த பசுமாடு. நீர் அதை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவீர்
என்று தெரிந்து தான் இருக்கிறேன். உம்முடைய பரந்த மனம் அப்படி”
“நீ சொல்வதைக் கேட்டால் அந்த மாட்டை விட்டு விடத் தான் தோன்றுகிறது”
“தலைவரே உமக்கு மிகுந்த கருணை குணம் தலைவரே”
“ஆமாம். அந்த மாட்டை விட்டு விடுகிறேன்”
“அய்யா…….” என்று அழுகையில் கேவியது பசுமாடு.
“ஆங்……!” என்று பதறின மற்றைய பாம்புகள்.
“பொறுங்கள்…..!” என்று எல்லோருக்கும் கையமர்த்துவதைப் போல தலையை ஆட்டியது அந்த
தலைவர்.
“நான் முழுவதும் சொல்லி முடிக்கும் வரை யாரும் குறுக்கே பேச வேண்டாம்” என்று
உறுதியாக சொல்லி விட்டு தன் பேச்சை நிறுத்தி எல்லோரையும் ஒருமுறை நன்றாகப்
பார்த்தது.
“அந்த பசுமாட்டை விட்டு விடுகிறேன். ஆனால்……..! ஆனால் அதற்குப் பதில் நீ எங்களுக்கு
இரையாக வேண்டும்”
“ஓ…….ஓ……! என்று ஆர்பரித்தன மற்ற பாம்புகள்.
“ஐயோ….!” என்று சோர்ந்தது பசுமாடு. நமக்காக இவன் பலியாவதா….? “அண்ணே
வேண்டாம்னே” என்று பதறியது.
“ரெண்டு பேரும் வெளியே போகணும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
“அது முடியாது”
“ஏன் முடியாது?”
“என்னை சண்டையிட்டு நீ ஜெயித்தால் தான் அது முடியும்”
“சரி. நீ இந்த மாட்டை வெளியே அனுப்பு”
“அனுப்பி விட்டு……….?”
“அனுப்பு சொல்கிறேன். நான் இங்கே இருக்கிறேன். நீ சொன்னதைப் போல நான் உன்னுடன்
சண்டை போட்டு உன்னை ஜெயிக்கப் பார்க்கிறேன். தோற்று விட்டால் உனக்கே உணவாகிப்
போகிறேன்”
“ம்… அது பேச்சு” சிலாகித்துக் கொண்டது.
“அண்ணே வேண்டாம்னே. எனக்காக நீ உன் உசிரைக் கொடுக்காதே”
“வேறு என்ன பண்ண சொல்றே?”
பசுமாட்டிற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.”அண்ணே” என்றது பரிதாபமாக.
“உன் கன்று உன்னைத் தேடும். நீ வீட்டுக்குப் போ”
“இப்படி ஒரு ஆபத்துல உன்னை மாட்டி விட்டுட்டேனே”
“நீ வீட்டை வெளியே வரும் போது இதைப் போன்ற ஆபத்துகளை எல்லாம் யோசித்திருக்க
வேண்டும். இப்போது பேசிப் பயனில்லை. நீ கிளம்பு”
ஓடையின் நடுவே ஒரு வழி பிளந்தது. அந்த வழியின் வழியே பசுமாடு கண்ணீரோடு சென்றது.
அது போய் மேலே சேரும் வரை அதையேப் பார்த்துக் கொண்டிருந்தான் ராசு. அந்த மாடு
புற்றின் வாயில் வழியே வெளியே போன அந்த ஒரு வினாடியில் ராசுவின் மேலே பாய்ந்தது
அந்த தலைவர்.
எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போனான் ராசு. ஒரு வினாடி தான். சட்டென்று
சுதாரித்துக் கொண்டான். பதிலுக்கு அந்த தலைவர் பாம்பின் மீது தாவி ஏறியவன் அதை இரு
கரங்களாலும் குத்து குத்தென்று குத்தினான். அதுவும் நெளிந்து புரண்டு உருண்டு அவனை
தன் பெருத்த உடலின் கீழே தள்ளி நசுக்கப் பார்த்தது. ராசுவா விடுபவன்…..! மிகுந்த பெரும்
போராட்டமாக இருந்தது. மீத பாம்புகள் தலைவர் ஜெயிக்கும் தருணங்களில் ஓ……ஓ என்று
ஆர்பரித்தும் ராசு ஜெயிக்கும் தருணங்களில் ச்சை என்று சோர்ந்தும் மாறி மாறி சண்டை
நடந்து கொண்டிருந்தது.
எப்போதுமே உணவிற்கும் உயிருக்குமான போராட்டம் இந்த உலகத்தில் இருந்து கொண்டே
தானே இருக்கிறது. உணவை விட உயிர் பெரியது அல்லவா! அதனால் பாம்பை விட ராசு
பலமாகவே போராடினான்.
இறுதியில் தலைவரின் கண் ஒன்றை ஓங்கி ஒரு குத்து விட்டதில் அந்த தலைவர்
நிலைகுலைந்து போனது. ஆங்காரம் அதிகமானது. இன்னும் வலுவடைந்தது அந்த
உயிருக்கும் உணவிற்குமான போராட்டம்.
ராசுவின் தலையில் தன்னுடைய பெருத்து நீண்ட வாலினால் ஒரே ஒரு அடி ஓங்கி அடித்தது.
ராசுவிற்கு கண்கள் இருட்டியது. உலகமே சுழன்றது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்கத்
தொடங்கினான் ராசு.
ஆங்காரமாகிப் போன தலைவர்”உன்னை என்ன செய்கிறேன் பார். போனால் போகட்டும்
அந்த மாட்டிற்குப் பதில் நீ எங்களுக்கு உணவாகி விடு என்று தன்மையாக சொன்னேன்.
கேட்டாயா? வீணில் வம்பை விலைக்கு வாங்கினாய். உன்னை சும்மா விடலாமா?” அவனை
தன் வாலினால் சுருட்டி ஓங்கி எறிந்தது அந்த தலைவர் பாம்பு.
தான் எங்கேயோ தூக்கி எறியப்படுகிறோம் என்பதை அந்த அரை மயக்க நிலையிலும் புரிந்து
கொண்ட ராசு எங்கே எறிகிறது இந்த பாம்பு நம்மை என்று யோசித்தவனை மயக்கம்
முற்றிலும் ஆட்க்கொண்டது.