யாரோ-2
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
கண்களில் கூலரை கழட்டி தனது குர்தியில் மாட்டி விட்டு, காபி பைட் சாக்லேட்டை எடுத்து சுவைத்தாள் நற்பவி.
சின்னதாய் அதே சமயம் கச்சிதமாய் எதிரே இருந்த ‘மதிமாறன் சைவ அசைவ உணவகம்’ என்று பார்த்து விட்டு வயிற்றை தொட்டு பார்த்து விட்டு வந்தாள்.
அங்கே இருந்த சிலரும் அவளை தான் கூர்ந்து நோக்கி கொண்டிருந்தார்கள்.
சாதாரணமாக ஒரு பெண் இப்படி வந்து நின்றாலே பார்த்து தொலைப்பார்கள். இதில் ஜீனும் குர்தியும் அணிந்து வந்து தனியாக அமர்ந்தவளை விழுங்கும் நோக்கில் அளவிட்டனர்.
அவளிருந்த டேபிளை துடைத்தவன் “என்ன வேண்டும் மேம்” என்றான்.
“ஒரு காபி, பூரி ஒரு செட்” என்று கூறிவிட்டு போனை எடுத்தவள் மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள்.
“சசி ஒரு செட் பூரி அண்ட் காபி இந்த டேபிளுக்கு” என்று தண்ணீரை ஜக்கில் ஊற்றினான்.
நற்பவிக்கு அவனின் நடை உடை படித்தவனாக பாவிக்கவும், ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தன் போனில் யாருக்கோ அழைத்து விட்டு அதிலேயே நோண்டிக் கொண்டிருந்தாள்.
பூரி வந்ததும் போனை டேபிளில் வைத்துவிட்டு சுவைத்தாள். இரண்டு வாய் விழுங்கவும் “டேஸ்ட்டி” என்றாள்.
பில் வரவும் தன் ஜீனிலிருந்து பர்ஸை எடுத்து “எவ்ளோ?” என்று கேட்டு முன்னே பார்க்க டேபிளை துடைத்தவனே கல்லாப்பெட்டி இருக்குமிடத்தில் சேரில் அமர்ந்திருந்தான்.
“பூரி முப்பது காபி பிப்டீன் டோட்டலி 45 ருபீஸ் மேம்.” என்றதும் ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து வைத்தாள்.
சரியாய் அதே நேரம் போலீஸ் வண்டி, அக்கடை முன் வந்து நின்றது.
அதிலிருந்து வேகமாக வந்த டிரைவரோ சல்யூட் அடித்து நின்றார். “மன்னிச்சிடுங்க மேடம். நான் வாசு. உங்களை ரிசீவ் பண்ண தான் நான் வந்தது. ஆனா காலையிலேயே இந்த ஊர்கட்சி தலைவர் ஷண்முகசுந்தரம் ஐயா இறந்ததும் அங்க போய் தலைக்காட்டிட்டு வர லேட்டாகிடுச்சு. நீங்க போன் பண்ணிட்டு இருந்தப்ப அங்க தான் இருந்தேன்” என்று வலது காதருகே கேசத்தை சொறிந்து கொண்டு பதில் தந்தார்.
“இட்ஸ் ஓகே. வந்ததும் ரிலாக்ஸா இருப்பேன்னு பார்த்தேன். ஆனா சுடசுட ஒரு கொலையை இன்வஸ்டிகேஷன் பண்ணுவேன் எதிர்பார்க்கலை. இறந்தவர் எம்.எல்.ஏ என்று கேள்விப்பட்டேன்.” என்று கேட்டாள்.
“மேம் மீதி ஐந்து ரூபாய்” என்று கடையோனர் நீட்டவும் வாங்கினாள்.
“என்ன சார் தெரிஞ்சவங்களா?” என்று கடையோனர் ஏட்டு வாசுவிடம் கேட்டு முடித்தான்.
“தம்பி… மேடம் தான் புதுசா வந்த இன்ஸ்பெக்டர்.” என்று கூறவும், “ஓ.. அப்படியா வணக்கம் மேம்” என்றான் அவன்.
“மேடம் இது மதிமாறன் இந்த கடைக்கு ஓனர் இவர்.” என்று அறிமுகப்படுத்தினார்.
“நைஸ் மீட்டிங் யூ. வாசுண்ணா இப்ப நேரா கொலை நடந்த இடத்துக்கு போயிடலாம். அதுக்கு பிறகு நான் தங்கிற இடத்தை பார்த்துக்கறேன். என்னோட லக்கேஜ் இது” என்று இரண்டு பெட்டியும் ஒரு பேக்பேக் தோளில் இருந்ததையும் சுட்டி காட்டினாள்.
“லக்கேஜை வண்டியிலேயே வச்சிக்கலாமா மேம்?” என்றதும் நற்பவி சிறிது யோசனை அடைந்தாள்.
“வாசு அண்ணா இன்வஸ்டிகேஷன் போறவங்க பெட்டி படுக்கை எல்லாம் கூடவே எதுக்கு. அதை நம்ம ஹோட்டல்ல இங்க வச்சிட்டு எல்லா வேலையும் முடிச்சிட்டு கூட எடுத்துட்டு போங்க” என்று மதிமாறன் பதில் தந்தான்.
“நல்ல ஐடியா தான். மேடம் உங்களுக்கு ஒன்றும்?” என்று வாசு கேட்டு பதிலுக்காய் காத்திருந்தார்.
“ஓகே… நோ பிராப்ளம்.” என்று நற்பவி புன்னகைத்து பதில் தரவும் மதிமாறனோ “வாசுண்ணா எப்பவும் தங்கற இடத்துலயா மேடம் தங்கறாங்க. இல்லை வேற இடம் பார்த்திருக்கிங்களா?” என்று மதிமாறன் கேட்டதும் “அதே இடம் போதும்னு மேடம் நேத்தே சொல்லிட்டாங்க பா. நம்ம பெருமாள் வீட்ல தான் தங்க போறாங்க” என்று வாசு கூறினான்.
“அப்பறம் என்ன மேம். நான் அந்த பக்கம் வர்றப்ப திங்க்ஸ் அங்க கொண்டு போய் வச்சிடுவேன்.” என்று மதிமாறன் கூறவும் “தேங்க்ஸ். வாசு அண்ணா போகலாம்” என்று மதிமாறனிடம் புன்னகையோடு விடைப்பெற்றாள்.
“கொலையா தற்கொலையா அண்ணா?” என்று முன்னிருக்கையில் அமர்ந்தவள் வேடிக்கை பார்த்தவாறு கேட்டாள்.
“பக்கா கொலை தான் மேடம். தற்கொலை எல்லாம் பண்ணிக்கறவர் இல்லை. ஆளு கெத்தா வாழ்ந்தவர். கொலை தான்… அது கூட எதிர்கட்சி ஆளு தான் கொலை செய்தாருனு வட்டாரத்துல பேசிக்கறாங்க மேடம்” என்றார்.
“ஏன்…? சந்தேகப்படுற மாதிரி பகை ஏதாவது இருக்கா?” என்று கேட்டாள்.
“பகைனு என்ன மேடம் சொல்ல பதவிக்காக யார் எப்ப எப்படி மாறுவாங்கனு சொல்ல முடியாதே. அதுவுமில்லாம நேத்து பிறந்த நாள் பார்ட்டி நடந்தப்ப சந்தானகிருஷ்ணன் போதையில யாரையோ போட்டு தள்ளறதா பேசியிருக்கார். அது ஷண்முகசுந்தரத்தை தான் என்று பேசிக்கறாங்க.” என்று வண்டியை ஓட்டியபடி கூறினார்.
“இதை யார் சொன்னது?” என்று கேட்டாள்.
“இதுவரை யாரும் சொல்லலை மேடம். ஆனா நேத்து நடந்த பார்ட்டில நம்ம சிதம்பரத்தோட பையன் செழியன் முகநூல்ல லைவ்வா போட்டிருக்கான். அதுல பேக்ரவுண்ட்ல சந்தானகிருஷ்ணன் பேசியதா வந்திருக்கு மேடம்.” என்றார் வாசு.
“இறந்து போனவரோட பெயரை சொல்லியா?” என்று கேட்டு புருவம் உயர்த்தினாள்.
“இல்லைங்க மேடம். பெயர் பதிவாகலை. ஆனா… அப்படி தான் யூகிக்க முடியுது.” என்று வண்டியை கொலை நடந்த வீட்டின் முன் நிறுத்தினார்.
“இது தான் மேடம் ஷண்முகசுந்தரத்தோட வீடு.” என்று சுட்டிக் காட்டினார்.
இதற்கு மேல் வண்டி டிரைவர் கூடுதலாக ஒட்டுண்ணியாக வரயியலாத காரணத்தால் அங்கே நின்று விட்டார். கையில் கிளவுஸ் அணிந்து கொலை நடந்த இடத்திற்கு சென்றாள்.
“சார் அந்த பொண்ணு தான்.” என்று ஏட்டு திவாகர் சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேலின் காதை கடித்தார்.
“எவளா இருந்தா எனக்கென்னயா. எங்கிருந்தோ இங்க போஸ்டிங் வந்து இம்சை பண்ணறாங்க.” என்றவன் நற்பவி வந்ததை கருத்தில் கொள்ளாமல் பாரன்சிங் ஆட்களிடம் பேச செல்வதாக பாவலா காட்டினான்.
“கைரேகை கிடைச்சுதாப்ப?” என்று அதட்டினான்.
“பார்த்துட்டு இருக்கோம் சார்” என்றவன் நற்பவி வந்து தோரணையாக நிற்கவும் திவாகர் சல்யூட் அடித்தார்.
சப்இன்ஸ்பெக்டர் வேண்டுமென்றால் அவாய்ட் செய்வது சரியாகலாம். ஏட்டு அப்படியிருக்க இயலுமா?! திவாகர் அவரின் பணியை செவ்வெனவே செய்தார்.
சின்ன புன்னகை பட்டும் படாமலும் உதிர்த்து, நேராக பாரன்சிக் ஆட்கள் முன் வந்து “கத்தி குத்து எந்தயெந்த இடத்துல குத்தியிருக்கு?” என்று கேட்டாள்.
ஞானவேலோ சிரித்தவன் “என்ன மேடம் கத்தி வயித்துல தான் குத்தியிருப்பாங்க” என்று கிண்டலடித்தான்.
“மிஸ்டர் ஞானவேல் பகை எந்தளவோ அந்தளவு கத்தி குத்தும் கண்டபடி இருக்கும். நீங்க நினைக்கிற மாதிரி வயித்துல தான் குத்திருப்பாங்கனு சொல்ல முடியாதே.” என்று பாரன்சிக் ஆட்களிடம் பார்வை திருப்பினாள்.
“ஆமா மேடம் நெஞ்சுல வயித்துலனு கண்டபடி குத்தியிருக்கு. எங்க இரண்டு குத்துல பிழைச்சிடுவாரோனு கோபத்துல ஏழுயிடத்துல குத்தியிருக்காங்க” என்று கூறவும் ஞானவேலோ இவ்வளவு நேரமிருந்து இதை கூட அறியவில்லையே என்று நாணினார்.
“வீட்ல வேறயாரு இருக்கா?” என்று கேட்டாள்.
இம்முறை ஏட்டு முன் வந்து “வீட்ல அவரோட பிளட் ரிலேட்டிவ் என்றால் பையன் ஷ்யாம் சுந்தர் மட்டும் தான் மேடம். மற்றபடி எல்லாரும் வேலைக்காரங்க, சமையல்காரங்க, வாட்ச்மேன், வீடு க்ளீன் பண்ணறவங்க இப்படி தான் மேடம்.” என்றதும் இதுவரை ஷ்யாம் சுந்தரம் ஒரமாக அழுதுக் கொண்டிருந்தான்.
“அங்க என்ன கூட்டம்?” என்று கேட்டாள்.
“இதே ஊர்க்காரங்கல மேம். அதனால எட்டி பார்க்கறாங்க. கொஞ்சம் தள்ளு முள்ளா இருக்கு.” என்று கூறவும் அங்கும் இங்கும் பார்வை சுழற்றினாள்.
பெண்கள் இல்லாத வீடு என்பதால் அழுகை சத்தம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் அதற்கு பதில் தொண்டர்கள் கூட்டமென்று வெளியே காட்டு கத்தல்கள் கேட்டது.
ஒவ்வொரு இடமாக நற்பவி கண்கள் நோட்டமிட்டது.
எல்லா அறையும் தூய்மையாக அதுவும் பழகாத இடமாக, வைத்தது வைத்தபடி காட்சியளித்தது.
ஷண்முகசுந்தரத்தின் அறை தான் ஆங்காங்கே கலைந்திருந்தது. அதுவும் கொலையாளியோடு போராடியிருப்பாரென கூறிடலாம்.
கிச்சனில் துடைத்தெடுத்தபடி இருந்தது.
ஷ்யாமின் அறையை காண வந்தப்போது ஷண்முகத்தின் அறையை விட அதிக சேதாரத்தோடு களைந்து இருந்தது.
ஷ்யாம் சுந்தர் அப்பொழுதும் அதேயிடத்தில் அமர்ந்தானே தவிர எழவில்லை.
“உங்க தந்தையோட மரணத்தில் யார் மேலயாவது டவுட் இருக்கா?” என்று கேட்டாள்.
“ஊருக்கே தெரியுது அந்த எதிர்கட்சி ஆள் சந்தானகிருஷ்ணன் தான் கொலை செய்திருப்பார்னு. நீங்க என்ன ஒரு விஷயமும் தெரியாம வந்து பேசறிங்க.” என்று எரிந்து விழுந்தான்.
“மிஸ்டர் ஷ்யாம்சுநதர் சந்தேகத்தின் பேர்ல யாரையும் அரஸ்ட் பண்ணி குற்றவாளியா கூண்டுல நிறுத்த முடியாது.” என்று கூறினாள்.
“ஓ… அந்த அரசியல் கட்சியோட எடுபிடியா நீ. அதனால தான் அவங்களுக்கு சாதகமா பேசற. சரியா தான் பிளான் போட்டு உன்னை இங்க போஸ்டிங்ல வரவழைச்சு சாதகமா கொலைப் பண்ணிருக்காங்க. என் வீட்ல வந்து எடக்கா வேற பேசற கெட் லாஸ்ட்.” என்று கத்தினான்.
“எதுக்கு கத்தறிங்க ஷ்யாம். உங்க மேல சந்தேகம் விழுந்துடும்னு பயந்து எதிர்கட்சி சந்தானகிருஷ்ணன் மேலேயே ஸ்ட்ராங்கா குற்றவாளியா மாத்தறிங்களே. காரணம் ஏதாவது இருக்கா?” என்றாள்.
அங்கிருந்த அடிமட்ட தொண்டர்கள், தள்ளி நின்றிருந்த வேலையாட்கள் முதல் போலிஸ் ஆட்கள் எல்லாம் நற்பவியை கோபத்தோடு பார்ததார்கள்.
ஷ்யாம் சுந்தரோ “என் மேல எதுக்கு சந்தேகம்? ஏய் இறந்து போனவர் எங்க அப்பா?” என்றான் பல்லை கடித்தபடி.
“சோ வாட். அவர் உங்க காதலுக்கு சம்மதிக்கலையே. அதனால பெர்சனலா அவருக்கும் உங்களுக்கும் பிரச்சனை எழுந்து கொலை செய்ய நீங்களே ஸ்கெட்ச் போட்டிக்கலாம். அதனால நீங்களே வீட்ல இருக்காம சினிமாவுக்கு போயிருக்கலாம்.” என்றதும் ஷ்யாம் எழுந்தான்.
ஞானவேலோ நற்பவியை பேசுவதை கண்டு குழம்பினான். அவன் இங்கு ஒரு பெண் வருவதே பிடிக்காது நின்றான். இதில் அவளுக்கு தன்னை போல யாரை பற்றியும் தெரியாது என்றிருக்க ஷ்யாம் சுந்தர் காதலித்தது இதே ஊரில் இருக்கும் தனக்கே தெரியாதே என்று வியந்து நற்பவியை பார்த்தான்.
அங்கிருந்த நீரை எடுத்து பருகியவள் கையில் கிளவுஸ் அணிந்து இருந்தாள்.
“வெல்… உங்க தந்தையோட பாடி போஸ்ட்மார்ட்டம் போகுது. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. அகைன் விசாரணைக்கு வருவேன். இங்க நான் யாரோட பேச்சை கேட்டும் போஸ்டிங்ல வரலை. அதோட யூனிபார்ம் போட்டுட்டு வரலையென்றதால சின்ன பெண் என்று நினைச்சிட வேண்டாம். ஒரு டெத் கேள்விப்பட்டு உடனே வரணும்னு தான் வந்தேன். கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்” என்று கிளம்பினாள்.
சில காவலரை மட்டும் இருத்தி விட்டு ஏட்டு திவாகரும், ஞானவேலும் அவளை அவர்கள் பைக்கில் பின் தொடர்ந்தனர்.
ஷ்யாம்சுந்தரோ திருதிருவென தேள்கொட்டிய உணர்வோடு அங்கிருந்த சோபாவில் சாய்வதற்கு இருந்த தலையணையை குத்தி விட அது இரண்டடி தள்ளி விழுந்தது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Super sema intresting
Super interesting 👌👌👌