யாரோ-3
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
வண்டி ஸ்டேஷன் நோக்கி சென்றது. ஊரில் இருந்து வந்ததும் முதல் வேலையாக இங்கு வர வேண்டுமென்று எண்ணியது தான். ஆனால் இறப்பை கேள்விப்பட்டு முதலில் அங்கு செல்வதே உசிதம் என்று சென்று விட்டாள்.
காக்கி உடையை அணியாமல் போனது எத்தகைய மடத்ததனம். பார்க்கும் மனிதர்களுக்கு எள்ளலாய் போயிற்றே.?!
நற்பவி சைடு கண்ணாடியில் தன்னை திவாகர், ஞானவேல் இருவரும் பின் தொடர கண்டவள் “வாசு அண்ணா வண்டியை நிறுத்துங்க” என்று ஆணையிட்டாள்.
“என்ன பின்னாடியே வந்தாச்சு. நீங்க ஸ்டேஷன் போய் கேஸ் டீடெய்ல் எழுதி வையுங்க. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.” என்று கத்திவிட்டு சென்றாள்.
“திமிர பார்த்தியா இந்த பொண்ணுக்கு.” என்று ஞானவேல் பேசிவிட்டு கடந்தார்.
“வாசு அண்ணா என்னோட திங்க்ஸ் வேண்டும். முதல்ல அந்த… அந்த ஹோட்டல் பெயரென்ன? அங்க போய் என்னோட லக்கேஜ் எடுத்துட்டு தங்க போற பிளேஸ் போகலாம்” என்றாள்.
“மதிமாறன் தம்பி சொன்னா சொன்ன மாதிரி வச்சிடுமே மா. இருங்க அந்த தம்பிக்கு கால் பண்ணி பார்க்கறேன்.” என்று போனில் அழைப்பை தொடுத்து கேட்டார்.
“மாறன் தம்பி கடை பையன் யாரிடமாவது மேடத்தோட திங்க்ஸை கொடுத்து விடமுடியுமா?” என்றதும் “அண்ணா நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன். திங்க்ஸ் எடுத்துட்டு” என்று கூறினான் மதிமாறன்.
உடனே வாசு வண்டியை புழுதி பறக்க கிளம்பி “தம்பி தங்க போற வீட்டுக்கு தான் வருதாம் மேடம்” என்று ஓட்டினாள்.
“ஞானவேலுக்கு என்ன பிரச்சனை என்மேல சிடுசிடுனு இருக்கார்?” என்று நற்பவி கேட்டதும் “மேடம் நீங்க ஒரு பொண்ணு உங்களுக்கு கீழே வேலை செய்தா அவருக்கு பிடிக்கலை. மற்றபடி போன வாரம் வரை மாற்றலாகி புது இன்ஸ்பெக்டர் வர்றாங்கனு ரொம்ப ஆர்ப்பாட்டமா ஸ்டேஷன் இருந்தது.” என்று பதில் தந்தார்.
“பொண்ணு ஆண்ணு இன்னும் இந்த உலகம் பிரிச்சி பேசுது. அடிமுட்டாள்… என்னைக்கு வேலைக்கு போய் பொண்ணும் ஆணோட சமமா தாய் தந்தையை பார்த்துக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே மாறிடுச்சு. இன்னும் எனக்கு ஆம்பள பிள்ள வாரிசு, ஆண் தான் கெத்து இப்படி லூசு தனமா பேசறவங்களை ஒன்னும் பண்ண முடியாது. இக்னோர் நெகட்டிவிட்டி.” என்று பேச அவ்விடம் வந்து சேர்ந்தனர்.
நற்பவி வண்டியிலிருந்து இறங்க மதிமாறன் ரோஜா செடியை பிடித்து இரசித்திருந்தவன் சட்டென திரும்ப கையோடு ரோஜா செடியிலிருந்து ரோஜா கையில் வந்தது. நற்பவியோ அவனின் செய்கையில் புருவம் உயர்த்த, “அச்சோ சாரி மேம் செடியை பிச்சிட்டேன்” என்று பதறினான்.
“பரவாயில்லை நீங்களாவது பூங்கொத்துக்கு பதில் பூ கொடுத்து வெல்கம் பண்ணறிங்கனு பார்த்தேன். இங்க யாருக்கும் ஒரு பெண் அதிகாரியை பிடிக்கறதில்லைனு தெளிவா புரியுது.” என்றவள் திங்க்ஸை எடுத்து நன்றி நவலிந்தாள்.
“அய்யோ மேம் அதெல்லாம் இல்லை. இங்க பெண்கள் நிறைய பேர் நிறைய துறையில சாதிக்கறாங்க. அதுக்காக எல்லாம் டிஸ்அப்பாயிண்ட் ஆகறவன் நான் இல்லை. ரோஜா செடியை பார்த்துட்டு இருந்தேன். அவசரத்துல கையோட வரவும், அதுவும் நீங்க பார்க்க கையில வச்சிட்டு தப்பர்த்தம் ஆகிடகூடாதென நினைச்சேன். எங்க ஊர்ல ஒரு பெண் அதிகாரினா ப்ரவுடா இருக்கு. ஹார்ட்டி கங்கிராட்ஸ் மேம்” என்றான்.
“தேங்க்ஸ். உங்க கடை நல்லா பிரைட்டா தெரியுது. ஊருக்கு வந்ததும் அட்ராக்ஸனா இருக்கு. சாப்பாடும் நல்லா ருசியாவும் தரமாவும் இருந்தது. உங்க பேச்சும் அட்ராக்ஸனா, உங்க செய்கை தரமாகவும் இருக்கு. எனக்கு மூன்று வேளையும் உங்க ஹோட்டலில் இருந்து சாப்பாட்டை அனுப்பிடுங்க. அட்வான்ஸா நைட்டு பே பண்ணிடறேன்.” என்று கூறவும் மதிமாறன் தலையாட்டி சென்றான்.
“வாசுண்ணா ரெண்டு நிமிடம் வந்துடறேன்” என்று அறைக்கு சென்றாள்.
காக்கி உடையணிந்து தலையில் கேப் அணிந்து மிடுக்காக வந்தவளை வாசு கண்ணுற்று சற்றே அதிர்ந்தார்.
வந்ததிலிருந்து ஏதோ கல்லூரி பெண் போல என்று உடையும் முகமும் இருக்க, தற்போது காக்கி உடையில் சிரிப்பும், கனிவும் துணிக் கொண்டு துடைத்தாற் போன்று இருந்தாள்.
இது தான் ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பார்கள் போல. சில இடத்தில் சில உடை கண்டிப்பாய் தனித்துவமாக காட்டுவது அந்த பணியின் முக்கியத்துவத்தை காட்டுவது மட்டுமில்லை. தனி மரியாதையும் அது அணிந்தவருக்கு எடுத்து இயம்பும்.
“நேரா ஸ்டேஷனுக்கு வண்டியை விடுங்க” என்று பேச்சு நறுக்கு தெரித்து விழுந்தது.
வாசு கவனமாக பேசுவதை விட அமைதியாகிவிடுவது சிறந்தது என்று மௌனமானார்.
ஸ்டேஷன் முன் வந்து வண்டி நின்றதும் புயலென உள்ளே நுழைந்தாள்.
ஞானவேலும் திவாகரும் தன்னிச்சையாக எழுந்து கொண்டனர்.
“கேஸ் டீடெயில் எங்க?” என்று கேட்டு கையை நீட்டவும் திவாகர் வேகமாய் பாய்ந்து எடுத்து தந்தார்.
கேஸ் பைலை திருப்பியவள் இரண்டு மூன்று தாள்களே இருக்க புருவம் சுருக்கி “வாட் இஸ் திஸ்.? கொலை செய்யப்பட்டவர் சண்முகசுந்தரம். அவரை எதிர்கட்சி தலைவர் சந்தானகிருஷ்ணன் கொலை செய்ய சொன்னதா போட்டு கேஸை முடிச்சிருக்கிங்க.” என்று கேட்டார்.
“மேடம் சந்தேக வட்டத்துல அவர் தான் இருக்கார். வேற ரீசன் இல்லை.” என்று ஞானவேல் கூறினார்.
“ஷ்யாம்சுந்தர் கேஸ் கொடுக்க அதை அப்படியே உங்க விசாரணையா மாற்றி எழுதிட்டிங்க. அப்படி தானே.? அப்ப இங்க நமக்கு என்ன வேலை. யார் கொலையானவங்களோ அவங்களோட ப்ளட் ரிலேட்டிவிடம் கேட்டு சந்தேகப்படறவங்க தான் கொலைக்காரங்கனு முடிவு கட்டி நாமளா உள்ள தள்ளிடலாம் அப்படி தானே மிஸ்டர் ஞானவேல்.” என்று காட்டமாக கேட்டாள்.
இம்முறை ஞானவேலுக்கு சற்று வேர்த்து. குரல் உசத்தி ஒரு பெண் பேச, அது தன் தவறாக தோன்ற ஏட்டு திவாகரும் இன்னபிற கான்ஸ்டேபிளும் இருக்க அவமானமாக உணர்ந்தார்.
“வேற மோட்டிவ் இல்லையே மேடம். அதுவுமில்லாம ஆதாரமா அந்த லைவ் வீடியோ இருக்கே. நாங்களும் ஆதாரம் இல்லாம பேச மாட்டோம்” என்றார் சற்று தைரியத்தோடு.
“ஒருத்தன் தண்ணிய போட்டு பேசி நான் கொலைப் பண்ணினேனு சொன்னாலுமே அது போதையில கூறிய வார்த்தை. அடுத்த நாள் காலையில சரக்கடிச்சுட்டு பேசினேன் அதை சீரியஸா எடுப்பிங்களானு எள்ளி நகையாடுவாங்க.
நீங்க வேண்டுமின்னா அரஸ்ட் வாரண்டோட போய் நில்லுங்க. இதை தான் சொல்லுவார். அதுமில்லாம அடுத்த பத்து நிமிஷத்துல நான் தான் காந்தியை கொன்னேன்னு சொல்லி லைவ் போடுவார். அப்ப அதையும் நம்புவீங்களா?” என்றதும் ஞானவேலுக்கு என்ன பதில் கூற என்று விழித்தார்.
“அக்யூஸ்டே வந்து நான் தான் குற்றவாளினு சொன்னாலும் நிருபிக்கிற ஆதாரமா வேண்டும்.
இப்ப சந்தானகிருஷ்ணன் எங்க இருக்கார்?” என்று கேட்டு விழியை நிமிர்த்தினாள்.
“அவரோட வீட்ல தான் மேடம் இருக்கறதா கேள்விப்பட்டோம். தொண்டர்கள் மத்தியில பாதுகாப்பா இருக்கறதா, அதுவுமில்லாம முன் ஜாமீனை அவசர அவசரமா வாங்கறதா தெரிந்தவங்க சொன்னாங்க.” என்றதும், நற்பவி கையை மேஜையில் தாளமிட்டபடி “ஓகே முதல்ல அவரை சந்தேகத்தின் பேர்ல ஒரு சின்ன விசாரணையை பண்ணிட்டு வருவோம்.” என்று புறப்பட்டனர்.
அவளின் அசுர வேகம் மற்றவர்களை திகைக்க வைத்தது.
சந்தானகிருஷ்ணனோ இங்கே யாருயா அது லைவ்ல போட்டு என் உசுரை வாங்கியது.” என்று கத்தினார்.
“நம்ம அடித்தொண்டன் செழியன் தான் சார். அவன் உங்களை கவர் பண்ணறப்ப நீங்க அப்படி பேசுவிங்கனு நினைக்கலையாம் சார். அதுவுமில்லாம இரண்டு நிமிடம் லவ்வா போயிடும்னு இருந்திருக்கான். ஆனா அதை திரும்ப ஒரு ரிப்போர்டர் வீடியோவா எடுத்து சேவ் பண்ணுவானு தெரியலை. அதுவுமில்லாம சண்முகசுந்தரம் திடீரென சாவாருனு ஜோசியமா தெரியும்” என்றான் துணை பதவியில் வகிப்பவன்.
“சார் இந்த ஊருக்கு வந்திருக்கிற இன்ஸ்பெக்டர் நேரா இங்க தான் விசாரணை பண்ண வர்றாங்களாம். நீங்க முன் ஜாமீன் வர்ற வரை பேசி மழுப்ப சொல்லறாங்க.” என்று சையத் கூறவும் சந்தானகிருஷ்ணனும் தயாராய் இருந்தார்.
போலீஸ் வண்டி காம்பவுண்டில் வரவும் தொண்டர்கள் தீயாய் எழுந்து வாசலில் முற்றுகையிட்டனர்.
“செய்யாதே செய்யாதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யாதே.” என்ற தொடர் குரல்கள் கோரஸாக வந்தது.
நற்பவி வண்டியிலிருந்து காக்கியுடையில் இறங்கவும் கத்திய ஆட்களில் சிலர் கூக்குரலை நிறுத்தி ஆச்சரியமா அலட்சியமா ஏதோவொன்ற உணர்வை பிரதிபலித்தனர்.
“திவாகர் சின்ன விசாரணை பண்ண தான் வந்தது. சட்டத்தை தடுக்கறவங்க யாராயிருந்தாலும் அடுத்து உள்ள போவாங்க. அதனால வழிவிட்டு விலகி போக சொல்லுங்க.” என்றாள்.
கூட்டம் கலையவும் இல்லை வழியும் விடவில்லை என்றதும் திவாகரோ பெயருக்கு சொல்லி கலைய முனைந்தான்.
இது வேலைக்கு ஆகலை என்றதும், அவள் கொண்டு வந்த ஸ்பீக்கர் மற்றும் மைக்கை கையிலெடுத்தாள்.
“இங்க பாருங்க. இங்க ஒரு கொலையும் அதுக்கு சந்தேகத்தின் பெயர்ல உங்க அபிமான சந்தானகிருஷ்ணர் அவர்களையும் விசாரிக்க சொல்லி என்ன நியமிச்சிருக்காங்க. மீறி தடுக்கறவங்களையும் சந்தேகத்தின் பெயர்ல ஜெயில்ல போட சொல்லி எனக்கு பர்மிஷன் தந்திருக்காங்க. நீங்களா வழி விட்டா நான் சந்தானகிருஷ்ணனரை பார்த்துட்டு விசாரணை பண்ணிட்டு கிளம்புவேன். விசாரணையில அவர் மேல சந்தேகம் அழுத்தமா விழுந்தா தான் மற்றதை கூற முடியும். ஆனா நீங்களா தடுத்தா அவர் தான் குற்றவாளினு முடிவு செய்து கைது பண்ணிடுவேன்.
இதுக்கு மீறி இவ பொண்ணு தானே என்ன பண்ணுவானு யாரும் அலட்சியப்படுத்தினா எனக்கு எங்க டிரையினர் கூறிய முறையை தான் கையாளணும்.” என்று பேசினாள்.
“என்னம்மா திமிரா.. நாங்க எல்லாம் இங்கயே பிறந்து இங்கயே வளர்ந்த ஆளுங்க. எங்கய்யா கொலை பண்ணலைனு சொல்லியாச்சு. இன்னமும் என்ன விசாரணை. போ.. போ.. போயி ஸ்டேஷன்ல உட்காரு. ஏதாவது திருட்டு கேஸு, காணாம போன கேஸு, கள்ளக்காதல் கேஸுனு வரும் அதை பாரு” என்று முன்னே பேசியபடி வேட்டியை மடித்து ஜம்பம் பேச வந்தவனை இரண்டு நொடிக்கும் குறைவாக அதிரடியாய் அடித்து சில்லு மூக்கை உடைத்து முட்டி போட வைத்திருந்தாள். போதாத குறைக்கு அவன் தோள் துண்டை எடுத்து கையை கட்டி முடித்தாள்.
“திவாகர் இவனை பாருங்க.” என்றவள் துப்பாக்கியில் கன்னை லோட் செய்து முன்னே வர தானாக வழி விட்டனர்.
அத்தனை கூட்டத்தில் ஒற்ற பெண்ணாக வந்தவள் ஹாலிலேயே சந்தானகிருஷ்ணன் அமர்ந்திருக்க கண்டு, “ஏன் சார் இந்த பயம். கொலை செய்தவன் தான் முன் ஜாமீன் எடுப்பான். கூட்டத்தை சேர்த்து பாதுகாப்பா இருப்பான். நீங்க என்ன?” என்று சோபாவில் அமர கால் மேல் கால் போட்டிருந்தவர் இறக்கி விட்டு, “எனக்கும் சண்முகசுந்தரம் இறந்ததுக்கும் சம்மந்தமில்லை. எதுவாயிருந்தாலும் என் லாயர் வந்ததும் பேசுங்க. ஏதோ போதையில உளறியதும் இங்க என் எதிர்கட்சி நண்பர் இறந்ததும் தொடர்ப்புப்படுத்தி என்னை குற்றவாளியா சித்தரிக்காதிங்க.” என்றார் சந்தானகிருஷ்ணன்.
“எதிர்கட்சி நண்பர்… ம்ம்… பைன். கரெக்ட் தான் எதிரெதிர் கட்சியா இருந்தா விரோதியா? நண்பர் தான். ஏதோ சரக்கு பாட்டில் கணக்கு வைக்காம தொண்டையில போய் நாலு வார்த்தை ஏடாகூடமா வந்து விழத்தான் செய்யும். ஆனா பாருங்க விசாரணை என்று வர்றப்ப எதையும் கணக்குல வைக்க முடியாது.
இப்ப சந்தேகத்தின் பெயர்ல முதல் பெயர் உங்களோடது தான். அதனால வேற ஆப்ஷன் இல்லை. ஆனா விசாரணை என்பது என் வேலையில்லையா?” என்று கேட்டாள்.
சந்தானகிருஷ்ணரோ என்ன கேட்கனுமோ கேளுமா” என்று விட்டுவிட்டார். அவருக்கு தான் சையத் போனிலிருந்து தரணிடம் பேசியதால் எந்த வில்லங்கமும் வராதென நம்பினார்.
இங்கே தரணின் முதுகில் கைப்படவும் பயந்து விழுந்தடித்து பஸ்ஸிலிருந்து விழித்தான்.
“தம்பி நீங்க டிக்கேட் வாங்கின ஊரு வந்துடுச்சு இறங்குங்க” என்று கூறவும் முகத்தை தன்னிரு கையால் துடைத்து இறங்கினான்.
இறங்கியதும் சந்தானகிருஷ்ணருக்கு அழைக்கலாமா வேண்டாமா என்று தவித்தான். அவராகவே அழைக்கின்றேன் என்றது தான் பேச்சுவார்த்தையில் பேசியது.
ஆனால் நடந்தவையை கூறாமல் தவித்தவனாக சையத்திற்கு அழைத்தான்.
அப்பொழுது தான் அங்கு பணியாட்கள் முதல் அனைவரிடமும் சின்ன சின்ன கேள்விகளை துளைத்து கொண்டிருந்தாள் நற்பவி. சையத் போன் அலறவும் அந்தபக்கம் காணாதவாறு இருந்தாள்.
சையத்தோ “டேய் சாரே போன் போடுவார். இங்க போலீஸ் இருக்காங்க. வை டா மடையா.” என்று பேச விடாமல் அணைத்து விட்டார்.
-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super super. Intresting
Interesting 🔥😍🔥