Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-1

ராஜாளியின் ராட்சசி-1

அத்தியாயம்-1

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

   தென்றலை நேசிக்கும் புள்ளினங்கள், அந்த பெரிய அரசமரத்தில் ‘கீச்கீச்’ என்ற சத்தத்துடன், அரசமரத்தில் இருந்த பழத்தை தன் சிறுஅலகால் கொத்தி சுவைத்து, வயிறு நிரம்ப, பரபரப்பான காலை வேளையை, அழகான இன்னிசை சத்தம் எழுப்பி செவிக்கு விருந்து படைத்தது.
   அரசமரம் இருக்குமிடம் எல்லாம் விநாயகர் சிலை இருக்கும் என்பது எழுதப்படாத விதி. இங்கும் வினாயகர் தன் இருப்பை நிலைநாட்டியிருந்தார். ஏனென்றால் விநாயகரை சுற்ற பிள்ளை பிறக்குமென முன்னோர்கள் சொல்வாரக்ள். அரசமரம் அதிகளவு சுத்தமான காற்றை வெளியீட்டு கர்ப்பப்பையை சுத்தப்படும். அதனால் குழந்தை தரிப்பதற்கு சாத்தியம் அதிகம் என்பது நம்பிக்கையும் அறிவியல் உண்மையும் கூட.

இங்கு நம் நாயகி பாவனா வினாயகரை சுற்றுவது குழந்தைக்காக அல்ல. அவளுக்கு தான் இன்னமும் மணமாகவில்லையே! அவள் வேண்டுவது அவளது மனநிம்மதிக்காக. 
தன் வேலையில், பிளைட்டில் செல்லும் வாய்ப்பு அமைகின்றது. முதல் முறை பிளைட்டில் பறக்க அஞ்சி, அதற்கு முன் பயத்தை களைய, இறைவனின் ஆசியை பெற வந்தாள்‌. பாவனாவிற்கு பொருட்காட்சியில் ராட்டினம், அசுர தாலட்டு, சுற்ற வேண்டுமென்றாலே பயம். இதில் வானத்தில் பிளைட்டில் செல்வது என்றதிலிருந்து வயிற்றில் புளியைக்கரைக்கிறது.
  
வினாயகர் கோவிலில் மணியோசையை தாண்டி, மிதமெல்லிய சப்தத்தில், வினாயகர் துதி அங்கிருந்த பூசாரியின் அலைப்பேசியின் வாயிலாக ஒலிவடிவில் கேட்க, பாவனா அந்த வரிகளை உச்சரித்தவாறு கணபதிக்கு ஆரத்தி எடுக்கும் விளக்கொளியில் இறைவனை தரிசித்து, அவளது வேண்டுதலை தன் உதட்டுக்குள்ளே முனங்கினாள்‌.

  பூசாரி தீபாராதனை தட்டோடு நெருங்கும் நேரம் ‘இந்த பிளைட்ல பறக்கறது கொஞ்சம் பயமா இருக்கு. நீ எப்பவும் எனக்கு கூடயிரு வினாயகா.’ என்று செர்ரி பழஉதட்டை பிரிக்காமல்  வேண்டுதலை வைத்தவள், தீபாரதனை தட்டு முன்வர, மூன்று முறை அந்த தீபத்தை தொட்டு முகத்தில் படர நமஸ்கரித்தாள் பாவனா.

   தட்டில் பத்து ரூபாய் தாளை வைத்தவளிடம், “இன்னிக்கு அதிகாலையில் வந்திருக்க பாவனா. என்னம்மா விசேஷம்?” என்று தெரிந்தவரென்பதால் பூசாரி கேட்டார்.
 
   “ஒன்னுமில்லை அண்ணா. ஏஜீ பிரைவேட் கம்பெனில மேலதிகாரிக்கு பி.ஏ.வா வேலை பார்க்கறேன்ல, எதிர்பாராத தகுதி, சம்பளமும் கூடுதல், இதுல பிளைட்ல முதல்முறை போறேன். பிளைட்ல எல்லாம் போய் பழக்கமில்லை பாருங்க.  வினாயகரிடம் சொல்லிட்டு போனா நிம்மதியா இருப்பேன்” என்றாள். எதுவென்றாலும் இந்த அரசமரத்தடி வினாயகரிடம் புலம்புவது பாவனாவிற்கு ஒன்றும் புதிதல்ல.

    அங்கிருந்த சுண்டலை தொன்னையில் வழங்கிய பூசாரியோ, “அதெல்லாம் வினாயகரிடம் சொல்லிட்டியோனோ பத்திரமா பார்த்துப்பார்‌. அம்மாவை கேட்டதா சொல்லும்மா” என்று விபூதி தர, அதை பவ்யமாக பெற்று நெற்றியில் சிறு கீற்று போல வைத்துக் கொண்டவள், தன் கைப்பையில் மீதி விபூதியை மடித்து வைத்தாள்.
   சுண்டலையும் மடித்து வைத்து, “சரிங்க அண்ணா வர்றேன்” என்று முகமலர பாவனா நடந்தாள்.

   பாவனா அப்பர்-மிடில் கிளாஸ் வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவள். அதாவது மிடில்கிளாஸ் என்றும் கூறிவிட முடியாது. வசதி படைத்தவளென்றும் கூறயியலாது.
  
  தந்தை இருக்கும் வரை அப்பர்கிஹாஸ். சொந்த வீடு உண்டு.
   பாவனாவின் தந்தையை அவள் கல்லூரியில் அடியெடுத்த சமயத்தில் இதயநோய் வந்து இறந்துவிட்டார். அதன்பிறகு தாய் காவேரி மட்டும் கல்லூரி படிக்க வைத்து ஆளாக்கினார். பாவனாவிற்கு ஒரு தம்பி உண்டு. இப்பொழுது தான் அவன் பனிரெண்டாம் வகுப்பு பயில்கின்றான். சொந்த வீடு இருக்க வேலையும் கிடைத்ததால் பணத்திற்கு அந்தளவு கஷ்டப்பட்டதில்லை.
 
  ஏஜீ பிரைவேட் கம்பெனி முதலாளிக்கு பி.ஏ வாக வேலை செய்ய நல்ல சம்பளம் வழங்கப்படும் என்று தோழி சந்திரா கூற, விண்ணப்பித்து இருந்தாள். அதிர்ஷ்டவசமாக உடனடியாக வேலை கிடைத்தது, இரண்டு மாதம் பயிற்சியும் வழங்கப்பட்டது. அதெல்லாம் இலகுவாக கற்றுக்கொண்டாள். முதலாளிக்கு பிடிக்கவும், முன்பணமாக எண்பதாயிரம் தந்துள்ளார்.

    சிந்தனைகளை அடக்கி வீட்டுக்கு வரவும், காவேரியோ “கோவிலுக்கு போனா சொல்லிட்டு போக மாட்டியா? நான் பயந்துட்டேன்.” என்று தவித்தார்.

   விபூதியை அன்னை நெற்றிக்கு வைத்து விட்டு, “பிளைட்ல போறேனே, எனக்கு பிளைட் ட்ராவல் போய் பழக்கமா என்ன?
 வினாயகரிடம் என் பயத்தை விரட்ட சொல்லிட்டு வந்தேன். முதலாளி முன்ன அசிங்கமா போயிடக்கூடாது பாருங்க” என்றாள்.

  பாவனாவின் தம்பி வினோத் “அக்கா… பிளைட்ல ஏறுவதுக்கு முன்னயும் ஏறினப்பிறகும் செல்ஃபி எடுத்து வச்சிக்கோ. வாமிட் வர்ற மாதிரின்னா முதல்லயே ப்ரிஸ்கிரிப்ஸன் எடுத்துக்கோ. அசிங்கமா அங்க போய் வாந்தி எடுத்து வைக்காத. பயந்தேன்னு சொன்னா கூட தப்பில்லை வாந்தி எடுத்து அசிங்கம் பண்ணாத” என்று அவன் பங்கிற்கு அறிவுரையை அள்ளி தெளித்தான்.

  “போதும் டா… நானே பயந்துட்டு இருக்கேன். நீ வேற.” என்று கடிந்துவிட்டு, நேரத்தை பார்த்தாள்.

பத்து மணிக்கு ஜீவன் லொகேஷன் அனுப்பி அங்கு வந்திட கூறியிருந்தார். அதனால் அன்னையிடமும் தம்பி வினோத்திடமும் கூறிவிட்டு அன்னையை கட்டி பிடித்து, “மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுத்துக்கோம்மா. நான் இல்லைன்னு மாத்திரையை சாப்பிட மறந்துடாத. வினோத்.. டியூஷனுக்கு லீவு போட்டுட்டு அம்மாவை கவனி. ஒரு வாரத்துல நான் வந்துடுவேன்.” என்றாள்.

   மனமேயின்றி வீட்டிலிருந்து தனது உடைமைகளை எடுத்து கேப்-புக் செய்து ஏறினாள்.

   ஏஜீ அலுவலகத்திற்கென்று தனியாக கோல்ப் மைதானம் உண்டு.  அங்கு தான் வரச்சொல்லி ஜீவன் சொல்லியிருந்தார். ஜீவன் முப்பத்தி எட்டு வயது கொண்ட ஆடவன். ஏஜீ பிரைவேட் கம்பெனியின் உரிமையாளான் ஜீவன்.
   இதுவரை திருமணம் செய்யாமல் காலம் தள்ளுகின்றான். திருமணத்தில் நாட்டமில்லை. பணம்… பணம்… பணம்… இது மட்டுமே குறிக்கோள். அதை அடைந்துவிட்டப்பின் அதை செலவழிக்க தனி தீவை நாடுபவன். இது தான் அவன் சுழற்சியான வாழ்க்கை சரித்திரம்.

பாவனாவிற்கு இந்த இடத்துல ஏன் வரச்சொன்னார்? என்று பயத்துடன் வந்தாள்.

அந்த மைதானத்தில் செக்யூரிட்டியிடம் தனது அடையாள அட்டையை காட்டி உள்ளே வந்தாள். அங்கே கோல்ப் மைதானத்தை தாண்டி, தனித்து நின்ற தனிவிமானத்தை பார்த்ததும் வியப்பு. அவள் விமான பயணம் என்றதும் மீனாம்பாக்கம் செல்ல வேண்டியது, இங்கே எதற்கு லொகேஷன் அனுப்பியுள்ளாரென குழம்பினாள். அதன்பின் தனிவிமானம் என்றதும் ஆச்சரியமே.

  பெரும்பாலும் தனிவிமானம் உபயோகப்படுத்துவது பிரபலங்கள் தானே? பாவனாவிற்கு கண்களில் ஆச்சரியம் பிரம்மிப்பும் போட்டி போட்டுக்கொண்டு பிரதிபலித்தது.

   “ஹாய் பாவனா… சொன்ன நேரத்துக்கு சரியா வந்துட்டிங்க?” என்று மின்னும் கைகடிகாரத்தை பார்வையிட்டாபடி ஜீவன் வந்தார்.

  “உங்களுக்காக நான் ஒரு எம்பிளாயியா காத்திருக்கலாம். எனக்காக நீங்க காத்திருக்க முடியாது. காத்திருக்கவும் வைக்கவும் கூடாது இல்லையா சார். அதனால் குயிக்கா வந்துட்டேன்.” என்று காற்றில் பறந்த சிகையை செவிமடலுக்கு பின் தள்ளினாள். ஜீவனோ ஒரு புன்னகையை வீசினான்.

  “வெல்… இரண்டு மாதம் என் கூட பி.ஏ.வா இருந்த. வேலையை தவிர இந்த கண்ணில் இந்த ஆச்சரியம் பிரம்மிப்பு பார்த்ததில்லையே. முதல்முறை உன் கண்ணில் இந்த ஆவலை பார்க்கறேன்.” என்று கூற, லேசாய் புன்னகைத்தாள்.

  “வெல்.. நாம பிளைட்டில் போகலாமா?” என்று அபிப்ராயம் கேட்க தலையை தலையை ஆட்டினாள்.

  ஜீவன் தன் பணியாட்களிடம் லக்கேஜை ஏற்ற கூறிவிட்டு மெதுவாக நடக்க, பாவனா கையில் போனை இறுக பிடித்து, ‘போட்டோ எடுக்கலாமா வேண்டாமா? போட்டோ எடுக்க பர்மிஷன் கேட்போமா?’ என்றெல்லாம் தயங்கினாள்.

   வாய்ப்புகள் கேட்டால் மட்டுமே கிடைக்கும். இப்படி முழித்தால் காலம் கடந்து இந்த வாய்ப்பு கிடைக்காது என்று தோன்ற, “சார்.. ஒரு செல்ஃபி எடுத்துக்கட்டுமா? வீட்ல இருந்து கிளம்பறப்ப, வினோத் பிளைட் ஏற போனதும் செல்ஃபி எடுக்க சொன்னான்.” என்றாள்.

ஜீவனோ ‘யார் வினோத்?” என்று கேட்க, “தம்பி சார்… பிளஸ் டூ படிக்கறான்.” என்றாள்.

“ஓ… தாரளமா செல்ஃபி எடுப்போம்.” என்று பாவனா பக்கத்தில் நெருக்கமாய் நின்றான் ஜீவன்.

பாவனாவுக்கு உள்ளமெல்லாம் ஆனந்தம் பிறக்க, ஆசைஆசையாக ஜீவனுடன் செல்ஃபி எடுத்தாள். அதனால் ஜீவனின் நெருக்கம் அவள் உணரவில்லை.

  முழு விமானமும் தங்களுக்கு பின்னால் தெரியும் விதமாக இருவரும் ஜோடியாக எடுத்தாள்.

   “தேங்க்யூ சோ மச் சார். இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.” என்றாள்.

ஜீவனோ தனிவிமானத்தில் ஏற, பாவனாவும் அதில் ஏறினாள்.

  “பிளைட் டேக்ஆஃப் பண்ணுங்க” என்று பைலட்டிடம் கட்டாளையாக கூறினான் ஜீவன்.

“சார்… நான் கோ-பைலட். விமானத்தை ஓட்டற மெயின் பைலட் இன்னும் வரலை.” என்றான்.

  “வாட்… நானே வந்துட்டேன். பைலட் வரலையா?” என்று ஜீவன் அதிருப்தியாக கேட்க, வாக்கி டாக்கியில் “ஃபைவ் மினிட்ஸ் சந்தோஷ். ஐ வில் பீ தேர்” என்ற ஆண்மை ததும்பும் கணீர் குரல் அவ்விடத்தில் கேட்டது.

  “சார்… பைவ் மினிட்ஸ்ல அர்னவ் வந்துடுவான் சார்” என்று சந்தோஷ் என்னும் கோ-பைலட் கூறினான்.
 
   ஜீவனோ தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வெளியே பார்வையிட, வெள்ளைநிற பைலட் உடையில், கையில் வாக்கி டாக்கியுடன் மிடுக்கு கலந்த ராஜதோரணையில் அர்னவ் நடந்து வந்துக்கொண்டிருந்தான்.

   ஆறடியை தொட்டவன், உயரத்திற்கு ஏற்ற உடலும், அலைபாயும் கேசமும், அவன் கூலர் கண்ணாடி அணிந்து நடந்துவந்தான்.
  தனி விமானத்தில் ஏறும் நேரம் கையில் வைத்திருந்த பைலட் கேப்பை தலைக்கு அணிந்து, விமான கதவை சாற்றினான்.

    “சந்தோஷ்…‌ நார்மலா சொல்லற ஸ்பீச் அண்ட் ரூல்ஸ் சொல்லிட்டியா?” என்று கேட்டான் அர்னவ்.

  “சாரிடா… சொல்லலை.” என்று சந்தோஷ் கூற, அவனை முறைத்துவிட்டு, “போ.. சொல்லிட்டு வந்து உட்காரு” என்று கடிந்தான்.

   சந்தோஷ் ஜீவன் மற்றும் பாவனா முன் வந்து, விமானத்தில் பயணிக்கும் போது வாந்தி வரும் உணர்வு வந்தால் எந்த இடத்தில் அதற்கான பை உள்ளதென சுட்டிக்காட்டி அதை உபயோகப்படுத்தும் முறையை விளக்கினான்.

பாவனாவிற்கோ, ‘இந்த வினோத் வர்றப்ப வாயை விட்டான். முதல் விதிமுறையே எனக்கு தான் சொல்லறார்.’ என்று முனங்கி கவனித்தாள்.
  உங்க போன் எல்லாம் ஏரோபிளைன் மோட்ல போட்டுடுங்க. அப்பறம் ஏதேனும் பழுது காரணமாகவோ அல்லது வேறு காரணம் இருப்பின் அந்த நேரம் பாரசூட் இருக்குமிடம் தெரியாது. உங்களுக்கான பேரசூட் இங்க இருக்கு. எவ்வாறு பேஸன்ஜர் பாரசூட்டை அணிய வேண்டுமென்று சந்தோஷ் சொல்லிதர, “பச் இதுக்கு முன்னாடி நான் நிறைய முறை பறந்தவன்” என்று ஜீவன் சலித்தான்.

   “இதற்கெல்லாம் அவசியம் நேராது. ஆனாலும் சொல்வது எங்க கடமை சார்.” என்று சந்தோஷ் கூற, ஜீவனின் முகசுழிப்பை அர்னவ் கேமிரா மூலமாக உட்கார்ந்த இடத்திலேயே கவனித்து “சந்தோஷ் போதும் டேக்-ஆஃப் செய்யலாம். அவர் தான் அடிக்கடி பிரைவேட் பிளைட்ல டிராவல் செய்வதா சொல்லறாரே” என்று ஆணையிட்டான். 

  அங்கிருந்த இசை கேட்கும் கருவியில் ஆங்கில இசையை கசிய விட்டு, அர்னவ் மற்றும் சந்தோஷ் விமானத்தை டேக்ஆஃப் செய்ய துவங்கினார்கள்.

  பாவனா வினாயகரை வேண்டி, இமை மூடி பயத்தை களைய, காலையில் உச்சரித்தது போல வினாயகர் துதியை உச்சரித்தாள்.  ஜீவனோ பாவனாவின் செர்ரி உதட்டை கவனித்து, அவளை மேலிருந்து கீழ்வரை கவனித்தான்.

   பாவனா எப்பொழுதும் சல்வாரில் அலுவலகம் வந்து அவளுண்டு அவள் வேலையுண்டு என்று பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பாள். இன்று முட்டிகால் வரை அளவுள்ள கவுன் என்றதில் அவள் கூடுதலாக அழகாய் தெரிந்தாள்.
 
  ஜீவன் பாவனாவை தீண்டும் சமயம், “பிளைட் டேக்ஃஆப் ஆகிடுச்சு. வெளியே ப்யூட்டிஃபுல் வியூவை ரசிக்கலாம்” என்று சந்தோஷ் கூற பாவனா சடுதியில் இமை திறந்து ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினாள்.

  மேகத்தோட கலந்த விமானம், ஜன்னலில் கீழே கோல்ப் மைதானம் வெறிச்சிட்டு இருக்க, மேலிருந்து காணும் வியூ அவள் மனதை ரசிக்க கூறியது. ஆனால் உள்ளுக்குள் உதறலெடுத்தது.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள். பிரெண்ட் இந்த பந்தம் ரொம்ப முக்கியமானது. ஆனா இந்த முக்கியமான பந்தம் நம்பிக்கையின் அடிப்படையிலும், தூய்மையான தன்னலமற்ற நேசத்திலும் கலந்திருக்கணும்.

குறிப்பு: கதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவிடப்படும்.

2 thoughts on “ராஜாளியின் ராட்சசி-1”

  1. Jeeva mela starting yae nalla opinion vara matathu yae ivan ipadi private jet la bavana ah va kootitu pora thu onnum seri ah padala avaluku ethachum aabathu varama irundha seri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *