யாரோ-10
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
நற்பவி சாப்பிட மதிமாறன் கடைக்கு வரவும் கிசுகிசு குரல்கள் கேட்டது.
“பழனி மதிமாறன் இல்லையா” என்று கேட்டு வாழையிலையை வைத்து சாப்பிட அமர்ந்தாள்.
“இல்லை மேடம்” என்றவன் கேட்டதை பரிமாறி விட்டு சென்றான்.
ஸ்டேஷன் வந்து சேர்ந்த நேரம் வாசு சல்யூட் அடித்துவிட்டு தலை சொறிந்தபடி தயங்கி நின்றார். திவாகரோ சல்யூட் அடித்து பைல் எடுத்து வைத்தவர் ஓரக்கண்ணில் நற்பவியை காண, ஞானவேலோ அருகே வந்து நின்றார்.
“உங்களிடம் பேசணும் ஷ்யாம் நேத்தே சொன்னான். நீங்க அவரை சந்தேகப்பட்டதற்கான காரணத்தை. இப்ப உங்களுக்கு சந்தேகம் போய் சந்தானகிருஷ்ணன் மேல ஸ்ட்ராங்கா மாறியிருக்கலாம்.
எப்படியோ முடிவில தப்பு செய்தவனுக்கு தண்டை கொடுத்தா போதும். நான் உங்களை தப்பா பேசினதுக்கு சாரி.” என்றான்.
“ஓ… இட்ஸ் ஓகே” என்று வேலையை பார்க்க, “மேடம் நீங்க அந்த மதிமாறனிடம் பழகுவது சிலர் தப்பா பேசறாங்க. மேபீ நீங்க சிட்டில வளர்ந்தவங்க. உதவிக்கு கூட மதிமாறனிடம் கேட்டிருக்கலாம். ஆனா பார்க்கறவங்க ஒரு மாதிரி பேசறாங்க.” என்று காதில் போட்டான்.
“ஏன் சார் தலையில கட்டு போட்டிருக்கேன். அது ஏன் என்னனு யாரும் கேட்கலை. ஆனா மதிமாறனிடம் பேசியது பழகறது காட்டு தீ மாதிரி பரவுதா?
நேத்து என்னை அட்டாக் பண்ண இரண்டு பேர் வந்தாங்க. அவங்களிடம் காப்பாத்திக்கிட்டப்ப கிடைச்ச அடி. நீங்க சொல்லறிங்களே மதிமாறன் அவர் தான் மீனாவுக்கு அவர் கடையில வடை செய்து கொடுத்ததுக்கு பணத்தை தர வந்தார். என் நேரம் அந்த நைட்ல காப்பாற்ற உதவினார். இல்லை இன்னிக்கு கொலையை கண்டுபிடிக்க வந்த நான் கொலையாகி இருப்பேன்.” என்றதும் ஞானவேல் பதறினார்.
“என்ன மேடம் சொல்லறிங்க. இந்த ஊர்ல பொறுக்கித்தனம் மொள்ளைமாறிதனம் செய்யறவங்களை முன்னாடி நிறுத்தறேன். யாருனு அடையாளம் சொல்லுங்க மேடம் தோளை உறிஞ்சிடுறோம்” என்றார்.
முன்பு பேசிய இடக்கு மடக்கு அனைத்தும் மாறி நல்விதமாக.
“தேங்க்ஸ் பட் இந்த ஊர் ஆட்களா இருக்க மாட்டாங்க அவங்க நிச்சயம் வெளியாட்கள்.” என்று பணியை கவனிக்க, ஞானவேலோ யாராக இருப்பார்களென யோசனை வயப்பட்டார்.
நற்பவியோ எதை பற்றியும் கவலைப்படாமல் அவளுக்கு கிடைத்த தகவலை அறிந்து கொண்டு ஒரு லாட்ஜின் பெயரை கூறி அங்கே போக ஜீப் எடுக்க கூறினாள்.
கூடவே திவாகர் ஞானவேலையும் வந்தனர்.
அரைமணி நேர பயணத்திற்கு மேலாக சென்றவள் அந்த லாட்ஜின் பார்க்கிங்கில் வண்டி நின்றதும் அந்த லாட்ஜின் உரிமையாளரிடம் வந்து நின்றாள்.
சார் இங்க அன்மருதை கிராமத்துல ரீசண்டா ஒரு கட்சி தலைவர் இறப்பை கேள்விப்பட்டிருப்பிங்க. அது சம்மந்தமா ஒருத்தர் இங்கே தங்கி இருப்பதா தகவல் கிடைச்சது.
அவர் பெயர் தரண். உங்க லாட்ஜில் தரண் இருப்பதாக அவரோட ஏடிஎம் கார்டு பிராசஸ் காட்டுது.” என்று கூறவும் லாட்ஜ் உரிமையாளரோ பதறி போய் அப்படி யாராவது இருந்தா எங்களுக்கு தெரியாதே மேடம். நீங்களே செக் பண்ணிடுங்க” என்று தரண் என்ற பெயர் கொண்டவரின் அறை எண்ணை பதிவேட்டில் தேடினார்.
“ரூம் நம்பர் 19 ல இருக்காரு மேடம்” என்றார்.
“இங்க தான் இருக்கானா? இல்லை வெளியே போயிருக்காரா?” என்று கேட்டாள்.
“இங்க தான் இருக்கார் மேடம். முதல்ல இரண்டு நாள் வெளியே போயிட்டு வந்துட்டு இருந்தார் மேடம். அப்பறம் என்னனு தெரியலை அறைக்குள்ளயே இருக்கார். சாப்பாடு கூட ரூம் பையனே கொண்டு போய் தர்றான் மேடம்.” என்று அவருக்கு தெரிந்தவையை கூறினார்.
அதேநேரம் இருவர் படியிலிருந்து நடந்து வர நற்பவியையும் போலிஸ் உடைகளையும் கண்டு ‘அய்யோ போலீஸ்’ என்று ஓட, உடனே நற்பவி “திவாகர் அவங்களை பிடிங்க” என்று கட்டளையிட ஒடி சென்றார்.
இருவரையும் பிடித்து இழுத்து வர, அவர்களின் தோற்றம் உயரம் கண்டு நேற்று தன் வீட்டுக்கு வந்தவர்களை போன்று இருக்க, கண்டாள்.
“எதுக்கு டா ஓடினிங்க. யார் நீங்க? உங்க பெயரென்ன?” என்று அதட்டினாள்.
“என் பேரு நல்லசிவம் இவன் பேரு சாமுவேல் மேடம். நாங்க சென்னையில இருந்து வந்திருக்கோம். இங்க மச்சான் வூட்டுக்கு வந்துட்டு திரும்ப போறப்ப சரக்கடிக்க தான் இங்க வந்தோம்.” என்று கூறினான்.
“என்ன பார்த்து எதுக்கு ஓடினிங்க?” என்று லத்தியால் தோளில் வைக்க, நேற்று இவன்களால் தலையில் அடிபட்டு ரத்த கட்டுடன் வந்தவள், தங்களை போல சோர்வாய் இல்லாமல் சுறுசுறுப்பாய் இருக்க கண்டு சாமுவேல் நின்றான்.
“அது எப்பவும் வர்ற பயம் தானே மேடம். காக்கி உடை கண்டதும் மரியாதை கூட வச்சிக்கலாம்” என்றான் நல்லதம்பி.
இருவரை கண்டு சந்தேகத்தின் பெயரில் கை விலங்கு போட்டு திவாகர் மேற்பார்வையில் அமர வைத்தாள்.
ஞானவேலை அழைத்து கொண்டு 19 வது அறைக்கு சென்று கதவை தட்டினாள்.
லென்ஸில் ரூம் பாயை நிற்க வைத்து மறைந்திருந்தவளை காணாது தரண் கதவை திறக்க, அதன் பின்னரே போலீஸ் உடைகளை கண்டு கதவை சாற்ற முயன்றான். ஆனால் அதற்குள் நற்பவி அவனை தள்ளி கை விலங்கை மாட்டினாள்.
“என்னை எதுக்கு விலங்கிடறிங்க” என்று அலறினான்.
“ஏன்டா ஷண்முகத்தை கொலை செய்த?” என்று அறைவிட, கைவிலங்கோடு துள்ளியவன், “நான் கொலை பண்ணலை. நான் கொலை பண்ணலை” என்று கத்தினான்.
“அது விசாரிக்கறப்ப நானே தெரிந்துக்கறேன்” என்று இழுத்து சென்றாள்.
மொத்தத்தில் மூவரும் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
நல்லதம்பியும் சாமுவேலும் ஒருவரை ஒருவர் பார்க்க, “அடப்பாவமே இவனை பிடிக்க வந்து நாமளா ஓடி போய் மாட்டிக்கிட்டோமே என்று பாவமாய் இருந்தனர்.
ஸ்டேஷன் வரவும் தரணிடம், “இந்த பைக் உன்னோடதா?” என்று காட்டினாள்.
”இல்லை” என்று பொய் கூறினான்.
“பொய் சொன்ன… அப்பறம் சோறு தண்ணி கொடுக்காம அப்படியே ஜெயில்ல லாக் பண்ணிடுவேன். இந்த பைக் யாருடையதுனு தெரியாமலா உன்னை அங்க வரை வந்து பிடிச்சேன். எனக்கு உன் வாயால தகவல் வரணும்” என்ற குரலில் ஆடிப்போயிருந்தான்.
உண்மையை கூறினால் சந்தானம் போட்டு தள்ளிடுவாரோ என்று பயந்து எச்சிலை கூட்டி விழுங்கி “எனக்கு தெரியாது மேடம்” என்று அதே பொய்யை கூற, நெடுமூச்சை இழுத்து விட்டு, “இந்த பைக் வச்சி அட்ரஸ் தேடினப்ப யார் யார் பெயரையோ காட்டுச்சு. கடைசியா வாங்கினவன் பெயரில் இன்னமும் வண்டி ரிஜிஸ்டர் பதிவாகலை. ஆனா உன்னோட தரண் என்ற அக்கவுண்ட்ல இருந்து தான் பைக் விற்றவருக்கு பணம் கை மாறியிருக்கு.
உன் பேங்க் நம்பரை வச்சி தான் உன்னை கண்டுபிடிச்சது. போதாதுக்கு செத்துப் போன ஷண்முகத்தோட வீட்டில தான் சிசிடிவி ஜமர் ஆகியிருக்கு. ஆனா சந்தானத்தோட பெர்த்டே பார்ட்டில தோட்டத்துல வச்ச சிசிடிவில கம்பவுண்ட்ல பின் பக்கம் நீங்க வந்து வண்டியை ஸ்டார்ட் ஆனது ஸ்டோர் ஆகியிருக்கே.” என்றதும் தரண் முழித்தான்.
இங்க பாரு தரண் நீயா உண்மை சொன்னா நீ குற்றவாளி இல்லை என்று ஒரளவாது என்னால உதவ முடியும். இல்லைனா உன்னை காப்பாற்ற முடியாது. சந்தானகிருஷ்ணன் ஈஸியா நீ காரை திருடிட்டு போனனு சொல்லிடுவார். திருட போன இடத்துல நீ கொலை பண்ணினனு சொல்லலாம். உன்னை அனுப்பினவங்க சாமர்த்தியமா கழண்டுப்பாங்க. நீ மாட்டிப்ப.” என்று கூறினாள்.
தரண் தரையை பார்த்து தலை தொங்கி மௌனமாய் அழுதான்.
நற்பவியோ தரணை விட்டுவிட்டு நல்லசிவம் மற்றும் சாமுவேலிடம் வந்தாள்.
“என்ன ராயபுரம் காத்து இங்க வரை வீசுது. சென்னையில காசிமேடு குப்பத்துல இருக்கற உன் மச்சான் வீடு இங்க எங்கப்பா வந்துச்சு.” என்று டேபிள் மேல் அமர்ந்தவள் காலாட்டி கூற சாமுவேலுக்கு வேர்த்தது. நல்லதம்பிக்கோ தன் இடம் வரை அறிந்து வைத்திருக்கின்றாளே என்ற எண்ணம் நெஞ்சை அடைத்தது.
“உங்க இருவரை பார்த்த உடனே நேத்து என்னை கொல்ல வந்த எருமைங்கனு தெரிந்துடுச்சு. போதாதுக்கு உன் சட்டை காலரில் டைய்லர் தைய்து வைத்த சென்னை பின்கோடு இருந்துச்சு.
சரி அந்த ஏரியா போலீஸை போன்ல பிடிச்சி உங்க முகறகட்டையை வாட்ஸப்ல அனுப்பினேன். நீங்க பக்கா சென்னைவாசி ஆட்டக்காரங்கனு (கொலைக்காரங்கனு) தெரிய வந்துடுச்சு. சொல்லுங்க யார் அனுப்பினா…?” என்று கேட்டாள்.
தங்கள் மாட்டினாலும் இதுவரை அறிய இயலாது என்று மமதையில் இருந்தவர்களுக்கு புட்டு புட்டு வைக்கும் நற்பவியை கண்டு மெலிதாக பயபந்து உருவானது.
“சொல்லிட்டா ஊரை பார்த்து அனுப்புவேன். எனக்கு நீங்க என்னை அடிச்சதோ என்னை கொல்ல வந்ததோ பெரிய விஷயமே இல்லை. யார் அனுப்பினா இது தான் வேண்டும்” என்று கூறினாள்.
நல்லதம்பியும் சாமுவேலும் ஒரு சேர, பார்த்து “எங்களை அனுப்பியது மாணிக்க விநாயகம் என்பவர் மேம். உங்களை கொன்றா பணத்தை ஏதோ ஏரிக்கரை பிள்ளையார் கோவில்ல மொத்த பணத்தையும் தந்துவிடுவதா சொன்னார். முதல்ல யாருனு தெரியலைனு கண்டுக்க வேண்டாம்னு பார்த்தோம். பாதி பணம் எங்க வீட்டு வாசல்ல யாரோ வந்து வச்சிட்டு போனாங்க. முழுத்தொகையும் போட்டு தள்ளின அடுத்த நிமிடம் அனுப்பிடுவோம்னு சொன்னாங்க. கையை காலை மீனை வெட்டி போடுற மாதிரி வெட்டி போடுற ஆளு நாங்க. அதுக்கு எல்லாம் பணம் கொஞ்சம் கொஞ்சமா வரும். இப்படி மொத்த பணமும் ஒரு சேர பார்க்கவும் புறப்பட்டு வந்து இங்க தங்கி உங்களை கொல்ல முயன்றோம்” என்றான் சாமுவேல். நல்லதம்பி ஆமோதிப்பாக தலையசைத்து உறுதி படுத்தினான்.
“மேடம் மாணிக்க விநாயகம் இப்படி ஆளை கூட்டிட்டு வந்து உங்களை சாகடிக்க மாட்டார். சாகடிக்கிற அவசியமும் இல்லை. இவனுங்க பொய் பேசறாங்க.” என்று ஞானவேல் கத்தினார்.
நற்பவியோ “நீங்க சொல்லலைனா ஷ்யாம் என்னை கொல்ல ஆள் ஏற்பாடு பண்ணிருக்க மாட்டாரா…. அது மாதிரி இருக்கலாம். யார் கண்டா. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இவங்க பேச்சுல பொய் தெரியலை. தரண் இப்ப நீங்க வாயை திறக்கறிங்களா இல்லையா?” என்று கர்ஜினையாக உலுக்க, தரண் அழுதவன் திடுக்கென நிமிர்ந்தான்.
-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super super super super interesting 👌👌👌🔥🔥🔥
Wow sema Sema super super. Natpavi excellent.