பொருட்பால் | அரசியல் | கேள்வி-42
குறள்:411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
குறள்:412
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
குறள்:413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.
குறள்:414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும்.
குறள்:415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.
குறள்:416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
குறள்:417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
குறள்:418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
குறள்:419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
குறள்:420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?