Skip to content
Home » இதயத்திருடா-4

இதயத்திருடா-4

இதயத்திருடா-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     நற்பவி ஸ்டேஷன் வந்து பைல்களை பார்த்து, மீண்டும் மூடி வைத்து, ஓடியவன் அகப்படவில்லையென்று கவலையாய் இருந்தாள்.

    தந்தை நித்திஷ்வாசுதேவ் போனில் அழைத்தார். எடுக்கவில்லையென்றால் அதற்கு வேறு கவலை படுவாரென போனை உயிர்பித்தாள்.

    “சொல்லுங்கப்பா.” என்று கேட்டதும், “வினோத் வீட்ல கால் பண்ணினாங்க மா.” என்று கூறவும் அப்பாடி சொல்லியாச்சா என்று சந்தோஷப்பட்டாள். 

     “என்னப்பா நிச்சயம் எப்பவாம். கல்யாண டேட் சொல்லிட்டாங்களா? லீவ் எப்ப எடுக்க?” என்று திருமணத்திற்கு ஆர்வம் கொண்டவளாய் கேட்டு வைத்தாள்.

      “விளையாடாதே நற்பவி பையன் லவ் பண்ணறானாமே. உன்னிடம் சொன்னதா கேள்விப்பட்டேன்.

    உனக்கு முன்னவே தெரியும் தானே.” என்று கலங்கி பேசினார்.

     “அப்பா… இப்ப எதுக்கு பீலிங். எனக்கு கொஞ்சம் கூட பீல் ஆகலை. இன்பேக்ட் நானும் நோ சொல்ல நினைச்சேன். அவனா நோ சொல்லிட்டு போனான். மறுபடியும் முதல்ல இருந்து கோடு போடுங்க.” என்று நகைச்சுவை கலந்து புத்திசாலியாய் பதில் அளிப்பதாக கூறினாள்.

     “கரெக்ட் டா. இந்த முறை பீல் பண்ண போறதில்லை. முதல்ல இருந்து கோடு போடலாம்னு இருக்கேன். உன் பாஷையில திரும்ப மாப்பிள்ளை தேட போறேன்.

    ஆனா ஒன்னு டா. இந்த முறை என்னை விட உங்க அக்காவும் தர்ஷனும் சேர்ந்து மாப்பிள்ளை செலக்ட் பண்ணலாம்னு இருக்காங்க” என்று வெடி குண்டை இறக்கினார்.

    ‘அய்யோ… இந்த நன்விழி மாப்பிள்ளை தேடினாலே விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பா. இதுல இரும்பு மனுஷன் வேறயா.

    அச்சோ…’ என்று கலக்கம் கொண்டாள்.

     “அப்பா…” என்று நற்பவி பேசவும் அதை தடை விதித்தது போல, “உங்கக்கா அவ பொறுப்பை எடுத்துக்கிட்டா. இனி எனக்கு கவலையில்லை. அதை சொல்ல தான் போன் பண்ணினேன் மா. நீ வேலையை பாரு” என்று சாதாரணமாக கூறி அணைத்தார்.

     நற்பவியோ ‘இதற்கு தான் ஆசைப்பட்டாய் பாலக்குமாரா’ என்று மதிமாறனின் டிபி பிக்சரை கண்டு கோபமானாள்.

      ரோந்து போக வண்டியில் அமர்ந்தவள் இதில் பயணம் செய்தால் மதிமாறனை நேரில் காண்பதென்றால் யூனிபார்ம் தடுக்குமே என்று சுதாரித்தாலும் நீ சைட் அடிக்க போறியா வேலைக்கு வந்தியா? என்ற குரலில் அப்படியே கிளம்பினாள்.

    பெரும்பாலும் பீக் ஹவர்ஸில் எந்த தகிடுதத்தும் வேலையும் செயல்படாது. மதிய வேளை உச்சி வெயிலிலும் நள்ளிரவிலும் பெரும்பாலும் நடைப்பெறுவதை நேரில் கண்டிருக்கின்றாள்.

     ரோந்து முடிந்து ஸ்டேஷன் வந்து சாப்பிடும் நேரம், காலையில் பார்த்த குருவி கூடு தலை இங்கு நின்றிருந்தான்.

   கூடவே அவன் வம்பளந்து மாட்டி விட்ட பெண்ணும்.

     “யார் இவங்க விசாரிச்சு அனுப்பலையா?” என்று வந்தாள்.

      “விசாரிச்சிட்டோம் மேடம் அந்த பொண்ணு உங்களிடம் பேசணுமாம்.” என்று சுட்டிக்காட்ட “வரச்சொல்லுங்க” என்று கூறினாள் நற்பவி.

    “மேடம் நீங்க சாப்பிடுங்க. அது எதுவும் வேலைக்காகாத புள்ளிங்கோ.” என்று ஏட்டு சங்கர் கூறவும், “அனுப்புங்க அண்ணா” என்று கட்டளையிட்டாள்.

     “வாயை மூடு. திண்ணுட்டு திண்ணுட்டு கொழுப்பேறி கடக்க” என்று வந்தான் அவன்.

     “வணக்கும் மேடம். நான் மஹா இது குருவி கூடு. சீ… என் புருஷன் குரு.

    இங்க தான் படகு எடுத்து மீன்புட்சி பட்டினப்பாக்கத்துல கூறு கட்டி விக்கறோம்.

     காலையில இத்த மாட்டி விட்டு போனேன். இத்த புட்சி யாரு என்னனு கேட்டு நீ திருடனை கோட்ட விட்டதா சொல்லி ஒரே அழும்பலு.

    உன்னால தான்மே அக்கியூஸ்ட் தப்பிச்சிட்டான்னு என்ன சோத்துல கைய வைக்க கூட வுடாம திட்டிட்டே இருந்துச்சு.

    அப்பறம் யாரு என்னனு கேட்டதும் தான் பக்கத்துல இருந்த பையன் ஓடினதா சொல்லுச்சு.” என்று மஹா எட்டுக் கட்டையில கணீர் கணீர் என்று கத்தி பேச நற்பவிக்கு தொண்டை வற்றியது.

   மேஜையிலிருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.

     “சோறு துண்ண வுடாம உட்கார வச்சிட்டேன். நீ வோனுமின்னா சோறு துண்ணுட்டு பேசேன்.” என்றதும் “நோ பிராப்ளம் என்னனு சொல்லுங்க.” என்று தலையில் கை வைத்தாள்.

    “அதான்மா… அந்த பையன் ஓடினானே. அவனை என்கு தெரியும்.  எப்ப பாரு இந்த பீட்சுல தான் தலை வாறாம பரதேசி மாதிரி திரியும்.” என்றதும் நற்பவி பார்வை குரு தலையில் மொய்த்தது.

  “அய்யோ இது எண்ணெய் வைக்காம மீன் பிடிக்க போகுமே அதனால இப்டி இருக்கு. அந்த பையன் தினம் ஒரு சிலைக்கு பக்கத்துல முன்ன தூங்கும். இப்ப தான் கொஞ்ச நாளா டீக்கா டிரஸ் பண்ணிட்டு அதே சிலை பக்கத்துல முன்ன மாதிரி தான் கடக்கும். ஆனா ஆளும் பார்வையும் திருட்டு கலை தாண்டவமாடும்” என்றதும் நற்பவி ஆர்வமானாள்.

     “உனக்கு அந்த பையன் தான் இவன்னு எப்படி சொல்லற. நீ சரியா பார்த்தியா?” என்று வினாத் தொடுத்தாள்.

   “நான் இங்க தான் மாங்காய் சுண்டலு விற்ப்பேன் மா. தினிக்கும் விற்பேன் அந்தா எம்ஜிஆரு சிலையாண்ட இருந்து இங்க பட்டினப்பாக்கம் வரை விற்பேன். எல்லா சிலையும் எல்லா மனுஷங்களும் பார்த்து வச்சிருக்கேன். எவன் எவன் சில்மிஷம் பண்ண வருவானுங்க. எவன் எவன் சும்மாவே குந்திட்டு போவாங்கனு என்கு தெரியாதா.

   நான் அவனை இதுக்கு முன்ன பார்த்திருக்கேன். அவனே தான்” என்று சூடம் அணைக்காத குறையாக கூறினாள்.

    “ஓகே… ஓகே… இனி எப்பவாது பார்த்தனா இந்த நம்பருக்கு போன் பண்ணு. இது என் நம்பர்” என்றாள் நற்பவி.
 
      “சரிதாம்மே” என்று எழுந்தாள். மேஜையில் இடித்து கொள்ள, “எய் பிள்ளதாச்சி பொம்ள பார்த்து எந்துக்க மாட்ட. லூசே.. பேசறது மட்டும் கடலுக்கு அந்த பக்கம் வரை வாய் இருக்கும்மே உன்கு” என்று குரு அக்கறையாய் வழிநடத்த அந்த நம்பரை போனில் ஏற்றி கொண்டு மஹா என்ற பெண்மணி சென்றாள்.

      தாடையில் கை வைத்து ‘இதே இடத்துல சுத்திட்டு இருந்தவனை தான் வேலைக்கு எடுத்திருப்பாங்களோ. அந்த பொண்ணு சொன்னது மாதிரி யார் அயோக்கியன் யார் கெட்டவன்னு அங்கயே தினமும் சந்திக்கிறவங்களுக்கு பார்த்ததும் கண்டுபிடிக்கறது அத்துபடி. அப்படி பார்த்தா அவனுக்கு இந்த கை மாத்தி விடறது சுலபம் தான்.’ என்று யோசித்தவளுக்கு நேரமாக சாப்பாட்டை எடுத்து சுவைத்தாள்.

     புலாவ் ரைஸ் சாப்பிட்டு முடித்தவள், மற்ற கேஸ் பைல்களை ஒழுங்குப்படுத்தி எழுதி வைத்து குற்றம் சம்மந்தமான தகவலை திரட்டி முடிக்க வேண்டியவையை ஒரம் கட்டினாள்.

    மாலை பீச் பக்கம் ரோந்து செல்ல மப்டி உடையை எடுத்தாள்.

       என்னயிருந்தும் அவளின் கால்சட்டையும் ஷூவும் காட்டி கொடுத்தது.

   அவளும் மறைந்து சென்று யாரையும் எதிர்க்கொள்ள போவதில்லை.

     காரிலிருந்தே தூரத்தில் நோட்டமிட்டவள் மெட்ராஸ் ஹைகோர்ட் முதல் சந்து பொந்தில் காரை விடுத்தாள்.

   கடைசியாய் பூக்கடை பாரிஸ் கார்னர் பக்கமும் வந்தாள்.

       கண்கள் தானாக மதிமாறனின் ஹோட்டலை தழுவியது. “மேடம் டீ?” என்று கேட்ட ஓட்டுனர் சகாதேவனிடம் நானே குடிச்சிக்கறேன்னா. நீங்களும் வாங்களேன்” என்று ஹோட்டலை காட்டி கேட்டாள்.

    “நீங்க போங்க மேடம் நான் அப்படிக்கா?” என்று நெளிந்தார்.

     “பொது இடத்துல ஸ்மோக் பண்ணாதிங்கண்ணா” என்று மதிமாறனின் ஓட்டலில் நுழைந்தாள்.

      இவள் வந்ததும் வடிவேலு முதலாளியை பார்க்க மதிமாறனோ பணத்தை வாங்கி போட்டு பில்லை அதன் கூர்முனையில் குத்தி முடித்தான்.

      ”தம்பி அந்த மேடம் வந்திருக்காங்க” என்று வடிவேல் கூறினார்.

     “அவங்களுக்கு என்ன வேண்டுமோ கேட்டு கொடுத்து அனுப்புங்க அண்ணா. அவங்களும் கஸ்டமர் தானே தவிர ஸ்பெஷல் கெஸ்ட் இல்லை.” என்று அவள் காதில் விழும்படியாக கூறினான்.

     நற்பவியோ காதில் கேட்டதை கேட்காதது போல பாவித்து “சூடா சுக்கு டீ” என்று கூறிவிட்டு நாளிதழை புரட்டினாள்.
  
     “புதிதாய் வந்த நாவலில் முதல் அத்தியாயம் வாசித்து கொண்டிருந்தாள். டீ வந்ததும் அதை உறிந்து குடித்து விட்டு மூடி வைத்தாள்.

    ” வடிவேல் அண்ணா… முதல் அத்தியாயமான முன்னுரை தான் வாசித்து முடிச்சிருக்கேன். முடிவு அத்தியாயம் தெரிஞ்சிட்டு தான் இனி இங்க வருவதை நிறுத்துவேன்.” என்று கூறினாள்.

     “வடிவேல் அண்ணா… அந்த புக்கை அவங்களை எடுத்துட்டு போக சொல்லுங்க. இங்கயெல்லாம் வரவேண்டாம்னும் சொல்லிடுங்க” என்றான்.

    டீக்கு பணத்தை நீட்டியவள் “ஏன் வரக்கூடாது?” என்று கேட்டாள்.

     “கவனம் கடமையில இருக்கணும். கண்டதுலயும் மேயவிட்டு திருடனை கோட்டை விடக்கூடாது.” என்று மதியத்திற்கு மேல் அவன் அறிந்ததை வைத்து பேசினான்.

     “நான் கோட்டை விட்ட திருடன் எப்படியும் எண்ணி ஆறு மாசத்துல பிடிச்சிடுவேன். இதயத்திருடனை தான் கோட்டை விடக்கூடாதுனு சபதம் இயற்றியிருக்கேன்.” என்று பேசினாள்.

     இம்முறை மதிமாறன் முறைக்க, அவளோ “பொண்ணு பார்த்தது என்னாச்சு கேட்க மாட்டிங்களா?” என்றாள்.

     “அதான் முகத்துல எழுதி ஒட்டியிருக்கே. அவனிடம் பேசி பேசியே நைஸா கழட்டி விட்டுயிருக்க, உன் மனசுல என்னை நினைச்சிட்டு இருக்க.” என்று கடிந்தான்.

     “நானா கழட்டி விடலை. அவனா ஒரு பெண்ணை விரும்பினான். பேரண்ட்ஸிடம் சொல்லியும் பொண்ணு பார்த்து கமுக்கமா முடிக்க பார்க்க, அவன் என்னிடம் சொல்லி டிராப் பண்ணி ஹெல்ப் கேட்டான்.

     தைரியம் கொடுக்கவும் மேரேஜ் பண்ண அடுத்த வாரம் ரெடியாகிட்டான்.

    நான் சமத்தா என் இதயத்திருடனுக்காக வெயிட் பண்ணறேன்.” என்று கூறினாள்.

      வடிவேலை கல்லாப் பெட்டியில் அமர வைத்து பேச வந்தவன் கடைக்கு சற்று கூட்டம் அதிகமானால் காத்திருக்கும் பகுதியில் நின்று இத்தனையும் பேசிக்கொண்டிருக்க, நற்பவி பேசிய ‘இதயதிருடனுக்காக வெயிட் பண்ணறேன்’ என்றதில் மதிமாறன் மனம் உவகை கொண்டது.

     ஆனால் மதுவந்தியை மணந்தது, அவள் நினைவில்லையா? என்ற உறுத்தல் வரவும் “போலீஸுக்கு எந்த திருடனும் வேண்டாம் கொலைக்காரனும் வேண்டாம்.

     என்னை கேட்டா ஐஏஎஸ் ஐபிஎஸ் மாப்பிள்ளை தான் சரிவருவான். அப்படி ட்ரை பண்ணு” என்று பார்வையை விழுங்கிக்கொண்டே கூறினான்.

     “ஐஏஎஸ்.. ஐபிஎஸ்… ம்ம்ம்… நோட் பண்ணிக்கறேன்.

   நான் தான் டென்ஷன்ல சுத்தணும். கட்டிக்க போறவனாவது வீட்டுக்கு வந்ததும் டைனிங் டேபிளில் முழுக்க அலங்கரிச்சு அசத்தலா சமைச்சி ஊட்டிவிடுவான்னு பார்க்கறேன்.

   பார்ப்போம்… பேஸிக்கா.. நானா எந்த வம்புக்கும் போக மாட்டேன். வந்த வம்பையும் விடமாட்டேன்.

      அப்படி தான் இப்பவும் இதயத்திருடனை விட்டு விலகணுமானு தீவிரமா யோசிக்கறேன்.” என்று பேச பேச, மதிமாறனுக்கு கோபம் கொப்பளித்தது.

    “முட்டாள் தனமா இருக்கு உன்னோட யோசனை.” என்றவன் அங்கிருக்க பிடிக்காமல் வெளியே வந்தான்.

     “பாரு… மக்கள் அவசர அவசரமா பறவை மாதிரி வீட்டுக்கு போகணும்னு இந்த மாலை நேரத்துல, பஸ் பிடிச்சி ஆட்டோ பிடிச்சி ஓடறாங்க. இப்படி வீட்டுக்கு போய் துணையோட நிழல்ல மடிசாயற சுகம் தனி.

     அதுவும் ஒரே துறையில் திருமணம் செய்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியோட பகிர்ந்து பேச ஆயிரம் இருக்கும்.” என்றவனின் பேச்சில் மதுவந்தி வந்து சென்றாள்.

கண்கள் கலங்க தொடர்ந்தான், “அதை விட்டு மடுவுக்கும் மலைக்கும் வித்தியாசத்தை வச்சிட்டு முடிச்சி போட்டு பேசற” என்றான்.
 
    “மிளகு காரம் தான் அதுக்காக கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனும் சொல்வாங்களே.” என்று பேண்ட்டில் கையை விட்டுக் கொண்டு அவனை ரசிக்கவே செய்தாள்.

    மதிமாறனுக்கு எங்கேனும் முட்டிக் கொள்ள தோன்றியது.

   விளையாட்டாய் கண்சிமிட்டி வந்தது இத்தகைய வினையை இழுத்து வைக்குமென்று சத்தியமாய் கனவு கூட கண்டதில்லை.

    அதற்குள் போலீஸ் வண்டி வரவும் நற்பவி அவனை தாண்டி வண்டியில் ஏறி சென்றாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

உயிர் உருவியது யாரோ கதையின் தொடர்ச்சி…

கமெண்ட்ஸ் பத்தலை 🫩

2 thoughts on “இதயத்திருடா-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!